தப்பு 20
ஒரு வாரம் கடந்திருக்கும் யுகேந்திரனின் வழக்கமான செல்ல சீண்டல்களுக்கு இடையில் ராஜேந்திரனையும் , பர்வதத்தையும் பகைத்துக்கொள்ளாமல் சமாளித்து வந்தாள் பூவிழி.
வழக்கம் போல காலையில் நேரமே எழுந்து கீழே வந்தவள் கஸ்தூரிக்குத் துணையாக வேலை செய்து கொண்டிருந்தாள்.
அவரும் சொல்லி சொல்லி பார்த்தாகிவிட்டது. இதை எல்லாம் தான் பார்த்துக்கொள்கிறேன் என்று ஆனால் பூவிழி தான் பிடிவாதமாக வேலைகளை செய்து கொண்டிருக்கிறாள்.
காலையில் அனைவரும் சாப்பிட டைனிங் டேபிளுக்கு வர..
அவர்கள் வரும்போது அனைத்தையும் தயாராக வைத்திருந்த பூவிழி , யுகேன் வந்ததும் அவனுடன் அமர்ந்து சாப்பிடத் தயார் ஆனால்.
ராஜேந்திரன் இப்பொது எல்லாம் எதுவும் சொல்லவில்லை காரணம் , பூவிலியை தனியே அழைத்து அவளிடம் பேசியது தான் , இந்த வீட்டை விட்டு செல்லும்வரை யுகேந்திரன் என்ன சொன்னாலும் என்னுடைய பதிலுக்காக காத்திராமல் செய்துவிட சொல்லி கட்டளையிட்டிருந்தார்.
அவன் முன்பு ரொம்பவும் அவள் மீது அதிகாரம் செலுத்துவது யுகேந்திரனுக்கு சந்தேகத்தை வரவழைத்துவிடும் என்றதே அதற்குக் காரணம்.
அவளும் அதற்கு சம்மதித்தாள், அவன் வருவதற்கு முன்பாகவே கஸ்தூரியுடன் சேர்ந்து தான் அணைத்து வேலைகளையும் முடித்துவிடுவதாக சொன்ன பிறகு தான் அவருக்கும் திருப்தியாக இருந்தது, எந்த காரணத்தைக் கொண்டும் ஒரு சிறு கருணையைக் கூட அவளிடம் காட்டிவிடக்கூடாது என்பதில் ராஜேந்திரன் தெளிவாக இருந்தார்.
“அப்பா நான் இன்னிக்கு ஆபீஸ் போலாம்னு இருக்கேன் ” என்றான்.
அவனை ஆச்சர்யமாகப் பார்த்த ராஜேந்திரன் “உனக்கு ஓகேனா வா யுகேன் ” என்றார்.
“அப்போ ஆராதனாவையும் இன்னிக்கு இருந்து ஆபீஸ் வர சொல்லிடலாமா யுகேன் ” என்று கார்த்திகேயன் கேட்க..
“ஐயோ இப்போ என் தலை உருளுதா இன்னிக்கு.. ” என்று சலித்துக்கொண்ட ஆரா.
“அப்பா! மாமாவே ஒன்னும் சொல்லாம சும்மா இருக்கார், நீங்க ஏன் அவருக்கு நியாபகப் படுத்துறீங்க” என்று புலம்பினாள்.
“என்ன ஆரா இப்படி சொல்லிட்ட.. அப்பறோம் எப்போ தான் இந்த வேலையெல்லாம் நீ பழகுறது ..” என்றார் கார்த்திகேயன்.
“என்னங்க அவ தான் கொஞ்ச நாளைக்கு வீட்லையே இருக்கேன்னு சொல்றாளே.. இருந்துட்டு போகட்டும் . பாவம் ஆரா வெளிநாட்டுல இருந்துட்டு நம்ம ஊருக்கு வந்து இந்த கிளைமேட் அவளுக்கு ஒதுக்க மாட்டேங்குது. எப்போ பாரு வேர்க்குது .. வெக்கையா இருக்குன்னு ரூமுக்குள்ளையே இருக்கா… அவ கொஞ்ச நாள் ரெஸ்ட் எடுக்கட்டுமே ” என்று மகளுக்கு பரிந்து பேசினார் பர்வதம்.
“ஆமா டி.. அவ ஊர்ல இருந்து வந்து ஒரு மாசம் ஆகப்போகுது. இன்னும் இந்த ஊரு ஒத்துக்கலையா . அதெல்லாம் எதுவும் வேணாம்.. ” என்று பர்வதத்தை அடக்கியவர் “ஆரா நீ சீக்கிரம் சாப்டுட்டு ஆபீஸ் கிளம்பு நான் போகும்போதே உன்னையும் கூட்டிப்போறேன் ” என்று ஸ்ட்ரிக்ட்டாக சொல்லிவிட..
“மாமா, ஏன் அவளை போர்ஸ் பண்றீங்க.. அவளுக்கான எப்போ ஆபீஸ் வரணும்னு தோணுதோ அப்போவே வரட்டுமே.. ” என்ற யுகேன் “அடுத்தவாரம் பூவிழிக்கு வளைகாப்பு நடத்தலாம்னு இருக்கேன். அதுக்கு அவளுக்கு சேலை, ஜெவெல்ஸ் னு நிறைய வாங்க வேண்டி இருக்கு. ஆரா தான் அதை எல்லாம் பாத்துக்கணும். வளைகாப்பு முடிஞ்சதும் ஆபீஸ்க்கு வரட்டுமே.. ” என்றான்.
“ஐ! பூவிழிக்கு வளைக்காப்பா.. சூப்பர் சூப்பர்… சூப்பர் மாமா ” என்றவள் “என்கிட்டே பொறுப்பை கொடுத்துட்டீங்க இல்ல , விடுங்க நான் ஜமாய்ச்சிடறேன்” என்றாள் ஆரா.
இவர்கள் பேசியத்தைக் கேட்டு ராஜேந்திரன், பர்வதம் இவர்களையும் சேர்த்து இப்பொது அதிர்ந்தது என்னவோ பூவிழி தான் . யுகேன் சொன்ன அடுத்த நொடி ராஜேந்திரனை தான் மிரட்சியாகப் பார்த்தாள்.
அவரும் அவளைத் தான் பார்த்துக்கொண்டிருந்தார். ம்ஹும்.. இல்லை முறைத்துக்கொண்டிருந்தார் என்று தான் சொல்ல வேண்டும்.
அவளிடம் என்ன இது என்று பார்வையாலேயே கேட்க..
தனக்கும் இதற்கு எந்த சம்மந்தமும் இல்லை என்ற ரீதியில் அவள் இல்லை என்று வேகமாகத் தலையை ஆட்ட..
அதை சாப்பிட்டபடி ஓரக்கண்ணால் கவனித்துக்கொண்டிருந்தான் யுகேந்திரன்.
“என்ன யுகேன் சொல்ற.. எங்ககிட்ட சொல்லவே இல்ல ” என்றார் பர்வதம்.
“நானே இப்போதான் டிசைட் பண்ணினேன் அத்தை. கார்த்தி மாமா ஆரா இங்க வந்து ஒரு மாசம் பக்கம் ஆகப்போகுதுன்னு சொன்னார் இல்ல.. அப்போ தான் கணக்குப் போட்டுப் பார்த்தேன் . இப்போ பூவிழிக்கு ஏழாவது மாசம் தானே.. அவ அம்மா இருந்திருந்தா இதை செய்திருப்பாங்க. அவங்களும் எங்கேன்னு தெரியல. அதான் நானே இதை நடத்திடலாம்னு நினைக்கிறேன் ” என்றவன் “அப்பா உங்களுக்கு ஓகேவா?” என்றான்.
“நீ டிசைட் பண்ணிட்டே இல்ல யுகேன் , பாத்துக்கலாம் ” என்றார் அவரும் சம்மதமாக.
“அத்தை ” என்று பர்வதத்தை அழைத்தான் யுகேன்.
பூவிழிக்கு வளைகாப்பு என்றதும் பர்வதம் கொஞ்சம் பொறாமையில் தான் இருந்தார், இந்த வீட்டு வேலைக்காரியாக இருந்தவளின் மகள் இந்த வீட்டிற்கு எஜமானி ஆகிவிட்டாளே என்ற எண்ணம் அவருக்கு. இப்பொது அவளுக்கு வளைகாப்பு என்றதுமே அந்த பொறாமை இன்னும் கொஞ்சம் அதிகமானது. அதையே யோசித்துக்கொண்டு இருந்தவர் யுஜெனின் குரலில் அவனை நிமிர்ந்து பார்க்க..
“இந்த வீட்ல என் அப்பாவுக்கு அடுத்து எனக்கு நல்லது நினைக்குறது நீங்களும், கார்த்தி மாமாவும் தான். அதனால எனக்காக.. என் மனைவி பூவிழிக்காக இந்த வளைகாப்பை நீங்க தான் முன்ன நின்னு நடத்திக் கொடுக்கணும். அவ அம்மா இருந்திருந்தா எப்படி அவங்க மகளுக்கு பார்த்து செய்வாங்களோ அதே போல நீங்களும் செய்யணும். ” என்றான்.
அவருக்கே அவனின் வேண்டுதல் அதிர்ச்சியையும், ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தி இருந்தது. “நானா யுகேன்” என்று அவர் நம்பமுடியாமல் கேட்க..
“ஏன் அத்தை இப்படி கேக்குறீங்க.. நம்ம ஆராவுக்கு இப்படி ஒரு விசேஷம் நடந்தா அப்பாவும் , நானும் தானே எடுத்து நடத்தணும். அதே போல எனக்கு நடக்குற எல்லா நல்லதும் நீங்க தானே முன்ன நின்னு நடத்துறீங்க.. அது போல தான் இதுவும். ஆரா எப்படி உங்களுக்கு பொண்ணோ. அதே போல தான் பூவிழியும் உங்களுக்கு பொண்ணு முறை ஆகுறா.. அவளுக்குன்னு யாரும் இல்லாத அப்போ நான் உங்களை தானே கேக்கனும் ” என்று அவன் யதார்த்தமாக சொல்ல..
பூவிழியோ “ஐயோ இவர் என்ன சொல்லப்போறாங்களோ.. இவர் என்கிட்டே இதை பத்தி ஒரு வார்த்தை பேசி இருந்தா நான் அப்போவே வேணாம்னு தடுத்திருப்பேன். இப்படி வந்து என்னை பெரிய சிக்கல்ல மாட்டிவிட்டுட்டாரே.. “என்று மனதில் யுகேந்திரனை திட்டியபடியே ஒருவித பதற்றத்தோடு பர்வதம் என்ன சொல்லப்போகிறார் என்று அவரையே பார்த்தாள்.
“ஆமா யுகேன் கண்ணு, உன் அம்மா போனதுல இருந்து உனக்கு எல்லாமே நான் தானே பார்த்து பார்த்து செய்றேன். எனக்கு எந்த பிரச்னையும் இல்ல. நீ கவலையை விடு நான் வளைகாப்புக்கு என்ன செய்யணும், ஏது செய்யணும்னு எல்லா ஏற்ப்பாட்டையும் சிறப்ப செய்துடறேன்” என்றதும் பூவிழி முதற்கொண்டு அனைவர்க்கும் ஆச்சர்யமாக இருந்தது .
எப்போதும் பூவிழி என்றாளே எரிந்து விழும் பர்வதம் இன்று சம்மந்தம் சொன்னது அவர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது.
யுகேந்திரனின் இந்த பேச்சும் , தன் மேல் தன் அண்ணன் மகன் வைத்திருக்கும் அபிப்ராயத்தையும் கேட்டு பூரித்துவிட்டார் பர்வதம் . அதுவரை பூவிழியை எதிரியாக பாவித்து வந்தவர் அவள் தனக்கும் மகள் முறை தான் என்றதைக்க கேட்டதும் அவரையும் அறியாமல் ஒரு புரியாத உணர்வு பூவிழியின் மீது அப்போதே தோன்ற ஆரம்பித்தது.
“பர்வதம் நீயா பேசுற.. என்னால நம்பவே முடியல..” என்று அவரை ஆகிய மாறாமல் கேட்டார் கார்த்திகேயன்.
“ஏன் நான் தான் பேசுறேன் . என் அண்ணா மகனுக்காக இது கூட நான் செய்ய மாட்டேனா?”என்று பர்வதம் கூற..
“இல்லம்மா நீ யுகேன் மாமாவுக்கு எப்பவும் எல்லாமும் கேட்காமையே செய்வேன்னு எங்க எல்லாருக்கும் தெறியும். ஆனா உனக்கு தான் பூவிழியை கண்டாலே ஆகாதே.. எப்போ பாரு அவளை திட்டிகிட்டே இருப்ப இல்ல.. ” என்றாள் ஆராதனா.
“ஏய் அது.. அது.. வந்து அவ வேலை சரியா செய்யலையின்னா தான் திட்டுவேன் , சும்மா திட்ட நான் என்ன லூசா?” என்று அவர் சொல்ல.
அவர் பேச்சில் இப்பொது யுகேந்திரனே அதிர்ந்து விட்டான், “அத்தை சத்தியமா நான் உங்ககிட்டே இருந்து இதை எதிர்பார்க்கல” என்றான்.
“சும்மா இரு டா.. நீயும் எல்லார் கூடவும் சேர்த்து என்னை கிண்டல் பண்றியே ” என்றவர் “நீ ஆபீஸ் கிளம்பனும்னு சொன்ன இல்ல.. கிளம்பி முதல்ல .வளைகாப்புக்கு நாள் கம்மியா தானே இருக்கு நான் எப்பவும் சேலை எடுக்குற கடையில சொல்லி பூவிழிக்கு பட்டு சேலை , அப்பறோம் போட்டுக்க நகை எல்லாம் இங்கையே எடுத்து வர சொல்றேன். அவ இந்த நேரத்துல அலைஞ்சுட்டு இருக்கணுமே.. “என்று முதல் முறையாக பூவிழியின் மீது உண்மையான அக்கறையைக் காட்ட..
அதை கேட்டு நெகிழ்ந்துவிட்டாள் பூவிழி. விழிகளில் கண்ணீர் தேங்கிவிட அவரைப் பார்த்தாள் அவள்.
அவள் மனநிலையை உணர்ந்த யுகேந்திரன் டேபிளுக்கு அடியே கையை நுழைத்து பூவிழியின் கையை ஆதரவாகப் பற்றினான்.
அவனை திரும்பி பார்த்த பூவிழி பேச முடியாமல் வார்த்தைகள் வராமல் தவிக்க..
“பீல் பண்ணாத.. ” என்றான்.
அவளும் சரி என்ற ரீதியில் தலையை ஆட்ட..
எல்லோரும் அந்த வீட்டில் நீண்ட நாட்கள் கழித்து நடக்கப்போகும் விசேஷத்திற்கு தயாராக அதை பற்றி சாப்பிட்டபடி பேசிக்கொண்டிருக்க..
அங்கு நடப்பதை எல்லாம் எதுவும் பேசாமல் சாப்பிட்டபடி கவனித்துக்கொண்டிருந்த ராஜேந்திரன். தன் மொத்த குடும்பமும் சேர்ந்து இப்பொது பூவிழியின் பக்கம் சாய்ந்து இருப்பதைக் கண்டு உள்ளுக்குள் குமைந்து கொண்டிருந்தார், அவரால் இதை தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. இப்படியே விட்டாள் பூவிழி இந்த வீட்டில் நிரந்தரமாக தங்கி விடுவாள். பிறகு அவரால் கூட அவளை இந்த வீட்டை விட்டு விரட்ட முடியாது என்று நினைத்தவர். பூவிழியை எப்படி இந்த வீட்டை வெளியே அனுப்பலாம், அவளை என்ன செய்யலாம் என்று யோசிக்க ஆரம்பித்து இருந்தார்.
