EPISODE 1
காலை வேளையில் வாசல் தெளித்து கோலம் போடுவதற்காக வீராவின் வீட்டு வேலைக்காரர் கேட்டைத் திறந்து வெளியே வர, அப்போது வீராவின் கார் வீட்டு வாசலில் வந்து நின்றது.
வீராவின் கார் உள்ளே வர, கேட்டை அகலத் திறந்துவிட்டார் அந்த வேலைக்காரர். வீரா தன் காரை உள்ளே நுழைக்கும்போதே, அதன் பின்னால் கவின், மித்ரன் இருவருடைய காரும் வந்து சேர்ந்தது.
இவ்வளவு அதிகாலையிலேயே டிரெக்கிங் சென்றிருந்த இவர்கள், தங்களது வேலைகள் அனைத்தையும் முடித்துவிட்டு வந்துவிட்டார்களா என யோசித்தபடி வேலைக்காரர் முத்து நின்று பார்த்தார்.
அவர் அருகே வந்து காரை நிறுத்திய கவின், காரின் கண்ணாடியை இறக்கி, “என்ன அப்படிப் பார்த்துட்டு இருக்கீங்க, சீக்கிரம் உள்ளே போய் அங்கிள் ஆன்ட்டியை எழுப்பி விடுங்க. கூடவே ஆரத்தி தட்டையும் ரெடி பண்ணிட்டு வாங்க” என்றான்.
“ஆரத்தி தட்டா?” என்று தலையைச் சொறிந்த முத்துவைப் பார்த்து, “எதுக்கு ஆரத்தி எடுத்துட்டு வர சொன்னேன்னு இன்னும் கொஞ்ச நேரத்துல உங்களுக்கே புரியும் முத்து அண்ணா. போங்க, சீக்கிரம் அங்கிள் ஆன்ட்டியை எழுப்பி விடுங்க” என்று கவின் அவசரப்படுத்தினான்.
“சரிங்க தம்பி!” என்று வேகமாக அவர்கள் வீட்டிற்குள் ஓடிய முத்து, அப்போதுதான் ஜாகிங் செல்வதற்காக வந்த வீராவின் அப்பா பாலசுப்ரமணியனைப் பார்த்து, “ஐயா… தம்பிங்க எல்லாம் டிரெக்கிங் போயிட்டு வந்துட்டாங்க. உங்களையும் அம்மாவையும் எழுப்பி விடச் சொன்னாங்க. கூடவே ஆரத்தி தட்டு வேற கரைச்சிட்டு வரணும்னு சொல்றாங்க. எனக்கு ஒண்ணும் புரியல” என்றார்.
“ஆரத்தி தட்டா? எதுக்கு? இவங்க என்ன போருக்கா போயிட்டு வந்திருக்காங்க, ஆரத்தி கரைச்சி இவனுங்கள வரவேற்கிறதுக்கு? டிரெக்கிங்தானே போயிட்டு வராங்க? அதுவும் மாசம் மாசம் போயிட்டு வர்றதுதானே?” என்று யோசித்தபடி வாசலைப் பார்த்தார் பாலசுப்ரமணியன்.
அங்கே வீரா, வாசலில் ஒரு பெண்ணின் கையைப் பிடித்து நின்றிருந்தான். அவள் கழுத்தில் மஞ்சள் கயிற்றில் கட்டிய தாலி தொங்கிக்கொண்டிருந்தது.
அதைப் பார்த்ததுமே அவருக்குக் காரணம் புரிந்தது. “முத்து, நீ போய் ஆரத்தி கரைச்சி எடுத்துட்டு வா. நான் போய் தேவகியை எழுப்பிட்டு வரேன்” என்றுவிட்டு வேகமாகத் தன் அறைக்கு ஓடியவர், நன்கு படுத்து உறங்கிக்கொண்டிருந்த தேவகியின் தோளைத் தட்டி, அவசரமாக எழுப்பினார்.
“என்னங்க…” என சலித்துக்கொண்டே கண்களைத் தேய்த்தபடி கட்டிலில் எழுந்து அமர்ந்தவரைப் பார்த்து, “ஏய், சீக்கிரம் போய் முகத்தை கழுவிட்டு வாடி. உன் மூத்த மகன் கல்யாணம் பண்ணிட்டு வந்திருக்கான். அவனுக்கு ஆரத்தி எடுக்கணும்” என்றார் பாலசுப்ரமணியன்.
“என்னங்க சொல்றீங்க….” என்று தூக்கம் முழுவதும் கலைந்தவராக தேவகி அவரைப் பார்க்க, “எனக்கும் இப்பதான்டி விஷயம் தெரியும். சீக்கிரம் வா, அவன் வாசல்ல காத்துட்டு இருக்கான்” என்று தன் மனைவியை அவசரப்படுத்தினார்.
“இரண்டு நிமிஷங்க…” என்று விட்டு வேகமாக குளியலறைக்குச் சென்று முகம் கழுவிவிட்டு கீழே வர, பாலசுப்ரமணியன் சொன்னது போலவே கழுத்தில் புதிதாகக் கட்டிய தாலியுடன், பயத்தோடு வீராவுக்குப் பக்கத்தில் ஒரு சின்னப் பெண் நின்றிருந்தாள். அவளுடைய கையைப் பிடித்துக்கொண்டு கம்பீரமாக வீரா நின்றதைப் பார்த்த தேவகிக்கு, இந்தக் காட்சியைக் கண்டு சந்தோஷப்படுவதா, இல்லை ஆனந்தக் கண்ணீர் வடிப்பதா என்று தெரியவில்லை. அவசரமாக அவர் வாசலுக்கு வரவும், முத்து ஆரத்தி கரைத்து எடுத்து வரவும் சரியாக இருந்தது.
அவர் எதுவும் பேசாமல் அந்த ஆரத்தி தட்டை வாங்கி வாசலை விட்டு வெளியே வந்தவர், படிகளில் இறங்கி வந்து தன் மகனுக்கு ஆரத்தி எடுக்க வர, “ஆன்ட்டி, இருங்க… என்னோட ஃபிரெண்டுக்கு நாங்களும் சேர்ந்து ஆரத்தி எடுக்கிறோம்” என்று சொல்லி கவின், மித்ரன், ராகவ், ஸ்ரீ நால்வரும் சேர்ந்து தேவகியுடன் வீரா, பூவிழிக்கு ஆரத்தி சுற்றி, அவர்கள் இருவரையும் உள்ளே அழைத்து வந்தனர்.
அவர்களைத் தாண்டி வந்த வீரா, தன் அப்பாவைப் பார்த்து, “அப்பா, இது பூவிழி” என்று அவளைத் தன் அப்பாவிடம் அறிமுகம் செய்து வைத்தான்.
பூவிழி வீராவின் அப்பாவைப் பார்த்ததும், அவர் என்ன சொல்லப் போகிறாரோ என யோசித்தபடி பார்க்க, அவரோ சிரித்த முகமாக, “உள்ளே வாம்மா” என்று தன் மருமகளை அழைத்தார்.
அவள் தயங்கியபடி வாசலில் நிற்க, வீரா அவள் கைகளைப் பிடித்து அழைத்துக் கொண்டு உள்ளே வந்தான்.
அவர்கள் பின்னால் ஓடி வந்த தேவகி, இருவரும் உள்ளே வந்ததும் “ரெண்டு பேரும் முதல்ல சாமி கும்பிட்டுக்கோங்க” என்று அவசரமாக பூஜை அறைக்குச் சென்றவர், “முத்து, பூஜைக்கு எல்லா ஏற்பாடும் செய்திருக்க தானே?” என்றார்.
“அம்மா… எல்லாம் செஞ்சுட்டேன். நீங்க விளக்கை பத்த வச்சா மட்டும் போதும்” என்றார் முத்து.
“அதுதான் விளக்கேற்ற என் மருமகள் வந்துட்டாளே, இனிமேல் நான் எதுக்குப்பா?” என்று சொல்லி பூவிழியைப் பார்த்து, “உன் பேரு என்னம்மா?” என்றார் தேவகி.
“பூவிழி” என்று குனிந்த தலை நிமிராமல் அவள் பெயரைச் சொன்னாள்.
அவள் இப்படி அடக்க ஒடுக்கமாக நின்று பதில் பேசுவதைப் பார்த்து வீரா உட்பட மற்றவர்களுக்கும் சிரிப்பு வந்தது. அவளோ அதைக் காட்டிக்கொள்ளாமல் அங்கே நின்றிருந்தாள்.
“போம்மா… நீயும் வீராவும் உள்ளே போய் விளக்கு பத்த வச்சு சாமி கும்பிடுங்க” என்றார்.
பூவிழி தயக்கமாக தேவகியைப் பார்க்க, “என்னம்மா அப்படியே நிக்கிற? போ, போய் விளக்கு பத்த வை” என்றார் தேவகி.
“அதை எப்படி பத்த வைக்கிறது?” என்று கேட்டாள் பூவிழி.
“எதாம்மா?” என்று தேவகி புரியாமல் கேட்க, “அதான்… அந்த விளக்க… பத்த வைக்க சொன்னீங்களே, அதை எப்படி பத்த வைக்கிறதுன்னு எனக்குத் தெரியாதே” என்றாள் பூவிழி.
அவள் விளக்கு பத்த வைக்கத் தெரியாது என்று சொன்னதும் அதிர்ச்சியாக பூவிழியைப் பார்த்த தேவகி, அதே அதிர்ச்சியோடு தன் மகனைப் பார்த்தார்.
அவன் எதுவும் பேசாமல் பூவிழியை பூஜை அறைக்குள் அழைத்துச் சென்றவன், பூஜை அறையில் இருந்த தீப்பெட்டியை எடுத்துப் பற்ற வைத்து, அங்கே இருந்த ஒரு குத்து விளக்கிலிருந்த திரிகளை ஏற்றி அவளிடம் காண்பித்தான்.
தன் கையில் இருந்த தீப்பெட்டியை பூவிழியிடம் நீட்டி, அவளுக்குப் பக்கத்திலிருந்த விளக்கை பார்வையாலேயே காட்டி, பத்த வை என்றான்.
அவளும் சரி என்று தலையாட்டிவிட்டு தீப்பெட்டியை வாங்கி பற்ற வைத்தாள். எரிந்து கொண்டிருந்த தீக்குச்சியை விரல் நடுங்க குத்து விளக்கின் அருகில் கொண்டு செல்ல, அதற்குள் அந்த தீக்குச்சி முழுவதும் எரிந்து அவள் கையைச் சுட்டு விட்டது.
“ஷ்… அம்மா…” என்று அவள் தீக்குச்சியைத் தரையில் போட, அவள் சேலை மேல் வந்து விழுந்தது. அவள் சேலையில் பட்டுவிடக் கூடாது என்று வீரா குறுக்கே புகுந்து எரிந்து கொண்டிருந்த அந்த தீக்குச்சியைத் தன் கையில் பிடித்துக்கொண்டான்.
அதைப் பார்த்த பூவிழி, “டேய் லூசாடா நீ? எரிஞ்சிட்டு இருக்கிற தீக்குச்சியை இப்படி கையில பிடிக்கிற பாரு. உன் கையை இந்நேரம் சுட்டிருக்கும்” என்று அவன் கையைப் பார்க்க, “இதை நான் பிடிக்கலைன்னா இந்த தீக்குச்சி உன்னோட சேலையில பட்டிருக்கும், பரவாயில்லையா?” என்றான்.
“சேலைதானேடா? போனா போயிட்டுப் போகுது. அதுக்காக இப்படி உன் கையில காயம் பண்ணிக்கிறியா?” என்று அவன் கையைப் பிடித்து, லேசாக தீக்காயம் பட்டிருந்த இடத்தை தன் உதடுகள் குவித்து ஊதி விட்டாள் பூவிழி.
இங்கே பூஜை அறைக்கு வெளியே நின்றிருந்த பாலசுப்ரமணியத்திற்கும், தேவகிக்கும் பூவிழி தங்கள் மகனிடம் பேசிய விதத்தைக் கண்டு ஆச்சரியமாக இருந்தது.
தாங்கள் இருவருமே வீராவை ஒருமுறை கூட வாடா, போடா என்று கூப்பிட்டு பேசியது கிடையாது.
ஆனால் பூவிழி, வார்த்தைக்கு வார்த்தை பேசியதைப் பார்த்து இவர்கள் இருவருக்குமே அதிர்ச்சிதான்.
ஆனால் அவர்கள் இதைப் பற்றி எதுவும் கேட்டுக்கொள்ளவில்லை. அமைதியாக நின்று, பூஜை அறைக்குள் இருவரும் என்ன செய்கிறார்கள் என்று பார்த்துக் கொண்டு நின்றிருந்தனர்.
அவர்கள் பின்னால் நின்றிருந்த கவின், மித்ரனிடம், “ஏன்டா இவளுக்கு விளக்கு பத்த வைக்கவே கை இப்படி நடுங்குது? இவளை வேற கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வந்துட்டான். எப்படிடா இவ குடும்பம் நடத்தப் போறா? அட்லீஸ்ட் அடுப்பு பத்த வச்சு சுடுதண்ணி வைக்கவாவது தெரியுமா இல்லையா அவளுக்கு?” என்றான்.
“தீக்குச்சி கூட பிடிக்கிறதுக்கு அவ கை நடுங்குதுன்னா, அவ எப்படிடா அடுப்பு பத்த வைக்கப் போறா?” என்றான் இவர்கள் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்த ராகவ்.
“பூவிழி அப்போ இருந்து இப்ப வரைக்கும் இன்னும் கொஞ்சம் கூட மாறவே இல்லையா?” என்றான் ஸ்ரீ.
“அதை பார்த்தாலே தெரியுது. இது என்னடா கேள்வி?” என்ற கவின், “பேசாம அங்க பாரு” என்றான்.
இங்கே வீரா பூவிழியின் கையில் இருந்த தீப்பெட்டியை வாங்கி, தீக்குச்சியை எடுத்து அவள் கையில் கொடுத்துப் பிடிக்கச் செய்தவன், அவள் கையைப் பிடித்து தீக்குச்சியைப் பற்ற வைத்து, அங்கே இருந்த விளக்கை அவளோடு சேர்ந்து ஏற்றினான்.
விளக்கு ஏற்றி முடித்ததும் வீரா அங்கே இருந்த தட்டை எடுத்து சூடம் பற்ற வைத்து கடவுளுக்குக் காட்டியவன், பூவிழியிடம் நீட்ட, அவள் சூடத்தைத் தொட்டு கண்களில் ஒற்றி, திருநீரை எடுத்து நெற்றியில் இட்டுக்கொண்டாள்.
“இதெல்லாம் நல்லா பண்ணுடி” என மனதில் நினைத்துக்கொண்டவன், தேவகிக்கும் பாலுவுக்கும் கொடுத்துவிட்டு, மற்றவர்களையும் எடுத்துக்க சொல்லி நீட்டினான். பின்பு தட்டை பூஜை அறையில் வைத்துவிட்டு, “அம்மா, நீங்க பூவிழி கூட பேசிக்கிட்டு இருங்க. நான் ரூமுக்கு போறேன்” என்று வேகமாகத் தன் அறைக்குச் சென்று விட்டான்.
அவன் மேலே தன் அறைக்குச் செல்லும்வரை அமைதியாக அனைவரும் அவனையே பார்த்திருந்தவர்கள், வீரா தன்னறைக்குச் சென்று கதவைச் சாற்றிய அடுத்த நொடி பூவிழியிடம் திரும்பிய கவின், அவள் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு வந்து சோஃபாவில் அமர வைத்தவன், அவள் அருகில் அவனும் அமர்ந்து கொள்ள, அவர்களைச் சுற்றி மற்றவர்களும் அமர்ந்து அவர்களையே பார்த்தனர்.
அவர்களை எல்லாம் புரியாமல் பூவிழி பார்க்க, “சொல்லு… எப்படி வீரா உன் கழுத்துல தாலி கட்டறப்போ நீ தடுக்காம அமைதியா இருந்த? உங்களுக்குள்ள என்ன நடக்குது?” என்று கேள்வி ஆரம்பித்தான் கவின்.
“ஏண்டா இப்படி கேக்குறீங்க? நான்தான் அவனை என் கழுத்துல தாலி கட்ட சொன்னேன்” என்றாள்.
“என்னடி சொல்ற? அவன் எங்ககூட இருந்த வரைக்கும் உன்னை கல்யாணம் பண்ணிக்கப் போறேன்னு ஒரு முறை கூட சொல்லவே இல்லையே” என்றான் கவின் அதிர்ச்சி மாறாமல்.
“எனக்கு லாஸ்ட் மினிட்லதான் கன்ஃபார்ம் ஆச்சு. அப்புறம் எப்படிடா உங்களுக்குத் தெரியும்?” என்றாள்.
“கவின், என்னடா ரெண்டு பேரும் பேசிட்டு இருக்கீங்க? எனக்கு எதுவும் புரியல. இங்க என்னதான் நடக்குது? முதல்ல வீரா எங்க இருந்தான்? எப்படி கரெக்டா பூவிழிக்கு நடக்க இருந்த கல்யாணத்துக்கு வந்தான்?” என்றான் மித்ரன் புரியாமல்.
“உனக்குத் தெரியாது, அவன் எப்படி வந்தான்னு?” என்று அவனை குறும்பாகப் பார்த்த கவின், “அவன் அங்க வந்ததுக்குக் காரணமே நீங்கதான்டா” என்று மித்ரன், ஸ்ரீ இருவரையும் பார்த்து கூறினான்.
“என்னடா சொல்ற?” என்று இருவரும் அதிர்ந்து பார்க்க, கவின் நடந்ததை விவரிக்கத் துவங்கினான்.
