Episode 2
கேரளாவில் உள்ள பைத்தமாலா காட்டுப் பகுதிக்குள் தனது நண்பர்கள் குழுவுடன் ட்ரெக்கிங் சென்றிருந்தான் வீரா. ட்ரெக்கிங் செய்வதற்கு மிகவும் சவாலான காட்டுப்பகுதி அது.
சுமார் 5 மணி நேரப் பயணத்திற்குப் பிறகு, ஓர் இடத்தில் ஓய்வெடுப்பதற்காக நண்பர்களுடன் அங்கே இருந்த பெரிய மரத்தில் சாய்ந்து மூச்சு வாங்க அமர்ந்திருந்தான் வீரா.
“டேய் வீரா! உண்மையாவே நீ அயன் மேன் தான்டா! உனக்கு ஈடு கொடுத்து எங்களால் இவ்வளவு தூரம் வர முடியலை. எப்படிடா உனக்கு இந்த மாதிரி ஒரு ஆர்வம் வந்துச்சு? எங்களுக்கெல்லாம் அந்தக் காட்டுக்குள்ள வர்றதுக்கு ரொம்பப் பயமாயிடுச்சு. ஏதோ நீ எங்களை வற்புறுத்தி கூடக் கூப்பிட்டதுனாலதான் வந்தோம்.”
“ஆனா, நீ என்னவோ ராத்திரியில சிட்டியில் ஊர் சுத்திட்டு வர்றது மாதிரி காட்டுக்குள்ள சர்வ சாதாரணமாகப் போற,” என்றான் அவன் நண்பன் கவின்.
அவன் சொன்னதைக் கேட்டு மெல்ல சிரித்தபடியே தான் அணிந்திருந்த டி-ஷர்ட்டைக் கழட்டினான் வீரா.
கோயில் படிகட்டுகள் போல அடுக்கடுக்காக அவன் உடலில் இருந்த படிக்கட்டுகளைப் பார்த்த கவின், “டேய் மச்சான்! இத்தனை வருஷமா உன்கூட வேலை பண்றேன்.
ஆனா, நீ இப்படி உடம்பை மெயின்டெய்ன் பண்ணிட்டு இருக்கிறது எனக்குத் தெரியாதே? என்னடா இது, உடம்பை இப்படி வச்சிருக்க?” என்றான்.
“ஆமாம் வீரா! எங்களுக்கும் உன்னை மாதிரி உடம்பு வேணும். அதுக்கு நாங்க என்ன செய்றது?” என்றான் அவனுடன் வந்த மற்றொரு நண்பன் ராகவ்.
நண்பர்கள் சொன்னதைக் கேட்டுக்கொண்டே, உடலில் இருந்த வியர்வையை ஒரு டவலால துடைத்து எடுத்தவன், “தினமும் என்னை மாதிரி எக்சர்சைஸ் செய்து அளவான உணவுகளோடு உடம்பைப் பராமரித்தாலே என்ன மாதிரியே நீங்களும் ஆகலாம். தவிர, அடிக்கடி இந்த மாதிரி வெளிய வரணும். உங்களுக்குப் பிடிச்ச விஷயத்தைச் செய்யணும். அது எந்த மாதிரி விஷயமாக இருந்தாலும் சரி,” என்றான் வீரா.
“ஏய் மச்சான்! எங்க ரெண்டு பேருக்கும் ரொம்பப் பிடிச்ச விஷயம்னா, லேட் நைட் பார்ட்டி பண்றதுதான். அதைத் தினமும் செஞ்சா உடம்பு இந்த மாதிரி ஆயிடுமா?” என்றான் எதுவும் தெரியாதவன் போல.
“ஓ, தாராளமா பார்ட்டி பண்ணலாமே! அப்படி தினமும் நீயும் இவனும் பார்ட்டி பண்ணி ட்ரிங்க்ஸ் அது இதுன்னு நிறையச் சாப்பிடுங்க. சீக்கிரமா என்னை மாதிரி ஆக முடியாது, ஆனா பரலோகம் வேணா போகலாம்,” என்றான் நக்கலாக வீரா.
அவனை முறைத்த கவின், “உனக்குக் கொழுப்புடா! நீ மட்டும் இப்படி உடம்பு வச்சுக்கணும். நாங்க எல்லாம் இப்படி ஃபிட் இல்லாம இருக்கணும்னு வேணும்னு நீ எங்களுக்கு எதுவும் சொல்ல மாட்டேங்குற,” என்றான்.
அவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போது ராகவ், கவின் தோளைச் சுரண்டினான்.
“இருடா… இருடா மச்சான்! நமக்காகத்தானே இவன்கிட்ட பேசிட்டு இருக்கேன். ஏதாவது கேட்டா சரியா பதில் சொல்றானா பாரேன்!” கவின் புலம்பினான்.
“நீங்க டெய்லி பார்ட்டி, பொண்ணுங்கன்னு சுத்திட்டு இருந்தா எப்படிடா என்னை மாதிரி ஆக முடியும்? எந்த வேலையும் செய்யாம, கஷ்டப்படாம நினைச்சது நடக்கணும்னா அது கடவுளாலகூட முடியாது,” என்றான் வீரா.
மீண்டும் ராகவ், கவினின் தோளைச் சுரண்ட, “ம்ம்…ம்ம்ம்ச்… சொல்லு மச்சான்,” என்றான்.
“எனக்கு பாத்ரூம் வருதுடா,” என்று அடிவயிற்றைப் பிடித்துக்கொண்டு ராகவ் நின்றான்..
“வந்தா போக வேண்டியதுதானே? அதுக்கு ஏன் என் தோளைச் சுரண்டுற?” என்றான் கவின்.
“இல்லடா மச்சான்! தனியாப் போக எனக்குக் கொஞ்சம் பயமா இருக்கு. இந்தக் காட்டுப் பகுதியே அப்படித்தான் இருக்கு. நீ கொஞ்சம் துணைக்கு வாயேன்,” என்றான்.
“மச்சான்! அடுத்த தடவை வரும்போது இவனைக் கழட்டிவிட்டுட்டு நம்ம ரெண்டு பேரும் மட்டும் வந்திடுவோம். புதுசா கல்யாணம் ஆன பொண்டாட்டி மாதிரி என் முதுகுல ஒட்டிட்டு என் உயிரை எடுக்கிறான்,” என்று புலம்பிய கவின், “வந்து தொலை! போகலாம்,” என ராகவ்வை அழைத்துக்கொண்டு அவர்கள் இருந்த இடத்தை விட்டுச் சற்றுத் தள்ளிச் சென்றான்
..
சிக்னலே கிடைக்காத காட்டுப்பகுதியில் கூடாரம் அமைத்து, அன்றைய பொழுது முழுவதும் தன் நண்பர்களோடு காட்டில் கழித்தான் வீரா.
மதியம் இரண்டு மணியைக் கடந்திருக்க, “சரி, நம்ம இப்போ கிளம்புனாத்தான் ஒன்பது மணிக்குள்ள காட்ட விட்டு வெளியே போக முடியும். சீக்கிரம் ரெண்டு பேரும் கிளம்புங்க,” என்றவன், வேக வேகமாகத் தன் பொருட்களை எடுத்துப் பையில் வைத்துக்கொண்டு, அவர்கள் அமைத்திருந்த கூடாரத்தைப் பிரித்து எடுத்துக்கொண்டிருந்தான்.
“என்னடா மச்சான்! இப்பதான் வந்த மாதிரி இருக்கு, அதுக்குள்ள திரும்பவும் கிளம்பணுமா?” என்று சலித்துக்கொண்டான் ராகவ்.
“இந்தக் காட்டுக்குள்ள மதியம் வரைக்கும்தான்டா அழகான இயற்கை எழிலோட மேகங்கள் எல்லாம் நம்மளத் தழுவிவிட்டுப் போற… ஒரு ஏகாந்தம் கிடைக்கும். அதுக்கு மேலே இந்தக் காட்டுக்குள்ள சுத்திப் பார்க்கவோ, அனுபவிக்கவோ எதுவும் கிடையாது. அதனாலதான் போகலாம்னு சொல்றேன்.
ஏற்கனவே லேட் ஆயிடுச்சு. சீக்கிரம் கிளம்புங்க,” என்று நண்பர்களை அவசரப்படுத்தி, காட்டிலிருந்து வெளியேற மூவரும் கிளம்பினர்.
சரியாக மாலை 7 மணியைக் கடந்திருக்கும் அவர்கள் காட்டிலிருந்து வெளியே வருவதற்கு.
மூச்சு வாங்க தங்கள் இடத்திற்கு ஒரு வழியாக மூவரும் வந்திருக்க, “மச்சான்! நல்ல வேலை! நீ சொன்னது சரிதான்டா! இதுக்கு மேல இந்தக் காட்டுக்குள்ள இருந்தா எந்த மிருகம் வந்து நம்மள வேட்டையாடும்னு தெரியாது. அதுங்க சத்தம் எல்லாம் ரொம்ப பயங்கரமா இருக்கு. இனிமேல் நான் இந்த மாதிரி இடத்துக்கெல்லாம் வரமாட்டேன். எனக்கு உசுரு முக்கியம். அதைப்புரிஞ்சுக்கோ,” என்றான் கவின்.
“ஏன்டா! என்னை மாதிரி உடம்பு வேணும்னா நான் செய்யறது எல்லாம் செய்கிறேன்னு சொன்ன? ட்ரெக்கிங்கும் செய்தாதானே உடம்பு வலுவாய் இருக்கும்?” என்றான் வீரா.
“இல்ல மச்சான்! ஆபிஸ்ல உன்கூட ஒரு நாள் முழுக்க இருக்கேன். அதுவே எனக்கு தினமும் வொர்க் அவுட் பண்ற மாதிரிதான்.
எனக்குக் கொஞ்சம் கூட ஓய்வு கொடுக்காமல் வேலை வாங்கிக்கிட்டே இருப்ப நீ… இதுல நீ கூப்பிட்டேன்னு இத்தனை வருஷம் கழிச்சு ட்ரெக்கிங் வந்தேன். அந்த ஒரு நாள் அனுபவம் எனக்குப் போதும். தயவு செய்து இனிமேல் என்ன இங்கக் கூப்பிடாதே,” என்றான் கவின்.
அவன் பேசியதைக் கேட்டுச் சிரித்துக்கொண்டிருக்கும்போது வீராவின் போன் வரிசையாக நோட்டிஃபிகேஷன் சத்தத்தால் நிறைந்துகொண்டு இருந்தது.
அதை எடுத்துப் பார்க்க, நிறைய பிசினஸ் விஷயமான நோட்டிஃபிகேஷன்கள் வாட்ஸ்அப்பில் மெசேஜ் மூலமாக வந்து குவிந்திருக்க, அதில் வந்திருந்த ஒரே ஒரு மெசேஜ் மட்டும் வீராவின் கவனத்தை ஈர்த்தது.
நோட்டிஃபிகேஷனைத் திறந்து பார்க்க, தன் கல்லூரி நண்பர்கள் மட்டும் இணைந்திருக்கும் வாட்ஸ்அப் குழுவில் இருந்து அனைவரும் சேர்ந்து ஏதோ திருமணத்தில் இருந்து மணமக்களுடன் சேர்ந்து செல்ஃபி எடுத்த புகைப்படத்தை அனுப்பி இருந்தனர்.
போட்டோவை ஜூம் செய்து தன் நண்பர்கள் ஒவ்வொருவராகப் பார்த்துக்கொண்டே தன்னுடைய வாகனத்தை நோக்கி நடந்துக்கொண்டிருந்தான் வீரா.
சிரித்த முகமாக நண்பர்கள் ஒவ்வொருவரையும் பார்த்து வந்தவனின் முகம் திடீரெனச் சுருங்கி கருத்துவிட்டது. அந்தப் போட்டோவை மீண்டும் மீண்டும் ஜூம் செய்து பார்த்தவன், உடனே கால் ஹிஸ்டரியை ஓப்பன் செய்து தன்னுடைய நண்பனுக்குக் கால் செய்தான்.
“டேய் மித்ரா! இப்ப நீ எங்க இருக்க?” என்று கேட்டான்.
“ஏண்டா! வாட்ஸ்அப் குரூப்ல நான் அனுப்பின போட்டோவைப் பார்க்கலையா? நாங்க எல்லாரும் ஃபங்ஷன்ல தான் இருக்கோம். ஸ்ரீ கூட இங்கதான் இருக்கான். அவன்கிட்ட பேசுறியா?” என்றான் மித்ரன்.
“ஏன் இந்த கல்யாணத்தைப் பற்றி என்கிட்ட எதுவுமே சொல்லல நீங்க?” என்றான் சற்று கோபமாக.
“என்னடா மச்சான்! உனக்கும் இன்விடேஷன் வந்திருக்கும்னு நினைச்சுதான் நாங்க எல்லாம் இங்கக் கிளம்பி வந்துட்டோம்,” என்றான் மித்ரன்.
“முகூர்த்தம் எத்தனை மணிக்கு?” என்றான் வீரா.
“காலையில பிரம்ம முகூர்த்தம்னு சொன்னாங்க. நாலு டு ஆறு மணிக்குள்ள முகூர்த்தம்,” என்றான் மித்ரன்.
மித்ரன் விஷயத்தைச் சொன்னதும், அவனிடம் திருமணம் நடக்கப்போகும் இடம் எங்கே என்று கேட்டுக்கொண்டு தன் போனை கட் செய்தவன், வேகமாகத் தான் பார்க் செய்திருந்த இடத்திற்கு வந்த வீரா, தன்னுடைய மகேந்திரா தார் வண்டியில் ஏறி ஸ்டார்ட் செய்தவன், தூரத்தில் சிரித்து பேசி, கிண்டல் அடித்துக்கொண்டு மெதுவாக வந்து கொண்டிருந்த கவின், ராகவ் இருவரையும் பார்த்தான். ஏற்கனவே பரபரப்பில் இருந்த வீரா ஜீப் ஹாரனை அழுத்திப் பிடிக்க…
இருவரும் அதில் அதிர்ந்தவர்கள். ஜீப்புக்குள் அமர்ந்திருந்த வீராவின் முகத்தைப் பார்த்தனர்.
அவன் முகம் சரியில்லை என்பதை உணர்ந்ததும், அவசரமாக வந்து ஜீப்பில் ஏறியமர்ந்த அடுத்த நொடி, கேரளாவை விட்டுத் தமிழ்நாட்டை நோக்கிப் புயல் வேகத்தில் ஜீப்பைச் செலுத்தினான்.
கவின், ராகவ் இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் திரும்பிப் பார்த்துக்கொண்டு எங்கே, என்ன நடக்கிறது என்று புரியாமல் அமைதியாக அவனோடு சென்றனர்.
வீரா இருந்த கோபத்தைப் பார்த்து அவனிடம் பேசுவதற்கே இருவரும் நடுங்கினர். அவன் கோபம் இவர்கள் இருவரும் அறிந்ததே. இருவரும் அவனிடம் எதுவும் கேட்டுக்கொள்ளவும் இல்லை. தங்களுக்குள் பேசிக்கொள்ளவும் இல்லை.
கிட்டத்தட்ட பதினோரு மணி நேரப் பயணத்தை ஏழு மணி நேரத்திற்குள் கடந்து, இரவு இரண்டரை போல தன் நண்பர்களை அவர்கள் தங்கியிருந்த அபார்ட்மெண்டில் இறக்கிவிட்டு, தன்னுடைய வீட்டை நோக்கிப் புறப்பட்டான் வீரா.
வீட்டிற்கு வந்ததும் சிறிதுகூட ஓய்வெடுக்காமல் நேராக பாத்ரூம் சென்று குளித்துவிட்டு, ஃபிரெஷ் ஆகி வெளியே வந்தவன், கண்ணாடி முன்பு நின்று தன்னைப் பார்த்துப் பெருமை கொண்டவன், மிடுக்கான ஒரு ஆடையை மாட்டிக்கொண்டு மித்ரன் இருந்த மண்டபத்திற்கு கிளம்பினான்.
