Home Uncategorizedமோகம் முத்தாடுதே 8

மோகம் முத்தாடுதே 8

by Layas Tamil Novel
486 views

EPISODE 8

வீராவுக்குப் பூவிழியுடன் வம்பு செய்து உறங்குவதற்கே வெகு நேரமாகிவிட்டது. தூக்கம் இன்னும் தெளியாமல் புரண்டு படுத்திருந்த அவனை, அவனது செல்போன் சத்தம் சிணுங்கித் தூங்கவிடாமல் எழுப்பிவிட்டது.

கண்களைத் திறக்காமலேயே கைகளை வெளியே நீட்டி, அருகில் இருந்த மேஜையில் துழாவித் தன் மொபைலைத் தேடி எடுத்து காதில் வைத்தான்.

“டேய் வீரா, என்னடா பண்ணி வெச்சிருக்க… உனக்குக் கொஞ்சமாவது அறிவு இருக்கா இல்லையா?” என்று மித்ரன் மறுமுனையில் பதற்றமாகக் கத்தினான்.

சட்டென எழுந்து அமர்ந்து கண்களைத் துடைத்தவன், தூக்கம் கலைந்தவனாய் காதில் இருந்த போனை எடுத்து யார் பேசுவது என்று ஒருமுறை பார்த்துவிட்டு மீண்டும் தன் காதில் வைத்தான். “மித்ரா, என்ன ஆச்சு? ஏன் இவ்வளவு டென்ஷனா பேசுற?” என்றான் வீரா.

“நீ செய்த காரியத்துக்கு உன்கிட்ட இப்படிப் பேசாமல் வேற எப்படிப் பேசுறது?” என்று கோபமாகப் பேசிய மித்ரன், “இப்போ நீ எங்க இருக்க?” என்றான்.

“என் வீட்டில” என்றான் வீரா.

“சரி, நீ உடனே கிளம்பி நாம எப்பவும் மீட் பண்ற காபி ஷாப்புக்கு உடனே கிளம்பி வா” என்று போனை வைத்தான்.

வீரா என்ன என்று கேட்பதற்குள் போனை வைத்துவிட, மித்ரனைத் திட்டிக்கொண்டே எழுந்தவன் பூவிழியைத் தேடினான். அவள் அவன் அறையில் இல்லாதது கண்டு, “கீழே போய் இருப்பாள். அவள் அம்மாவைப் பார்க்க. இவளுக்குக் காலையில் புருஷன் எழுந்திருக்கும்போது காபியோடு வரணும்னு தெரியாதா?” என்று பூவிழியை அடுத்து என்ன இம்சை செய்யலாம் என்று யோசித்துக்கொண்டே குளித்து உடை மாற்றிவிட்டுக் கீழே வந்தான்.

வந்தவன் பார்வை அந்த இடத்தையே சல்லடை போட்டது, பூவிழியைத் தேடி. அவள் எங்கும் இல்லாதது கண்டு கடுப்பானவன், அவள் அம்மா இருக்கும் அறைக்கு பூவிழியைத் தேடிச் செல்லப் போக… மீண்டும் மித்ரன் வீராவிற்கு அழைத்தான்.

“இவன் வேற…” என்று புலம்பியபடியே, “முதல்ல இவன் பிரச்சனையை முடிச்சிட்டு வந்துட்டு நம்ம வேலையைப் பார்ப்போம்” என்று போன் பேசிக்கொண்டே மித்ரன் சொன்ன காபி ஷாப்பிற்குப் புறப்பட்டான்.

10 நிமிடத்தில் மித்ரன் சொன்ன காபி ஷாப்பிற்கு வந்து சேர்ந்தவன், காரைப் பார்க் செய்துவிட்டு உள்ளே வர… அந்த நேரத்தில் அந்த ஷாப்பில் யாரும் இருந்திருக்கவில்லை. அங்கே கவின், மித்ரன், ராகவ், ஸ்ரீ நால்வரும் அமர்ந்து யாருடனோ தீவிரமாகப் பேசிக்கொண்டிருந்தனர்.

என்னவென்று புரியாமல் வேகமாக மித்ரனை நோக்கி வந்த வீரா, அங்கே பூவிழி கண்களைக் கசக்கிக்கொண்டு, தன் புடவைத் தலைப்பில் கண்ணீரைத் துடைத்துக்கொண்டிருந்தாள்.

அவளைப் பார்த்ததுமே புரிந்துவிட்டது வீராவுக்கு, வழக்கம் போலத் தன்னைப் பற்றிக் குறை கூற தங்கள் நண்பர்கள் வட்டத்தை கூட்டிவிட்டாள் என்று.

அவளை முறைத்துக்கொண்டே பூவிழியிடம் வந்தவன், “நீ எதுக்கு இங்கே வந்தே? உன்னை யாரு இங்கே வரச் சொன்னது? முதல்ல எழுந்திரு, கிளம்பலாம். வா, வீட்டுக்குப் போகலாம்” என்று அவளைக் கை பிடித்து மேலே தூக்கினான் வீரா.

“ம்ஹும்.. என்னை விடுடா… நான் எங்கயும் வரலை” என்று அவன் கையை உதறிவிட்டு மீண்டும் போய் சேரில் அமர்ந்துகொண்டு, முகத்தைத் தூக்கிவைத்துக்கொண்டு அமர்ந்திருந்தாள் பூவிழி.

மீண்டும் பூவிழியிடம் செல்லப் போனவனைப் பிடித்துத் தடுத்து, அவள் அருகில் இருந்த சேரில் அமர வைத்த மித்ரன், “டேய், இங்கே என்னடா நடக்குது? பூவிழி சொல்றது எல்லாம் உண்மையா?” என்றான்.

வீரா எதுவும் பேசாமல் உடனே, “ஆமாம்” என்று தலையை ஆட்டி, பூவிழி சொன்னது உண்மைதான் என்றான்.

“டேய் வீரா, நான் பூவிழி எங்ககிட்ட என்ன சொன்னான்னு உன்கிட்ட சொல்லவே இல்லை. ஆனா, நீ என்னடா எதையுமே கேட்காம ஆமான்னு சொல்லுறே?” என்றான் மித்ரன்.

அவசரப்பட்டு உளறிவிட்டோமோ என்று நினைத்த வீரா, அவனுக்கு அருகில் அமர்ந்திருந்த பூவிழியைப் பார்த்தவன், அவளிடம் வந்து, “என்னைப்பத்தி அவனுங்ககிட்ட வழக்கம் போலக் கம்ப்ளைன்ட் பண்ணி வெச்சிருக்க… நான் வேற ஆமான்னு சொல்லித் தொலைச்சிட்டேன். என்ன சொன்னே? சொல்லுடி..” என்று அவள் காதில் அவளுக்கு மட்டும் கேட்கும்படிப் பேசினான் வீரா.

“டேய், நாங்க பேசிக்கிட்டு இருக்கோம். நீ என்ன காதைக் கடிக்குற… ஒழுங்கா இங்கே பாரு, எங்ககிட்ட பேசு” என்று ஸ்ரீ, வீராவின் முகத்தைப் பிடித்துத் தங்களைப் பார்க்கும்படித் திருப்பினான்.

“சரி, சொல்லுங்கடா. அப்படி என்னதான் இவ வந்து உங்ககிட்ட என்னைப் பத்தி வத்தி வெச்சா? எதுவா இருந்தாலும் சொல்லுங்க” என்று தான் எதற்கும் தயார் என்பதுபோல அவர்களைப் பார்த்தான்.

“நீ பூவிழிக்கு என்ன செய்தேன்னு உனக்குத் தெரியாதா? எங்ககிட்ட கேக்குறே?” என்றான் கவின்.

வீரா திரும்பி கவினை முறைக்க…

“அவனை ஏண்டா முறைக்குற? பூவிழியுடைய அம்மாவையும் ரசிகாவையும் உன் வீட்டுக்கு எப்படி கூட்டிட்டு வந்தே? அதைச் சொல்லு” என்றான் ராகவ்.

“ஓ… நீங்க இவ்வளவு நேரம் இதைப்பத்தித்தான் கேட்டுட்டு இருந்தீங்களா?” என்றவன்…

“ஆமாடா… இவளைக் கல்யாணம் பண்ணி என் வீட்டுக்குக் கூட்டிட்டு வந்ததுல இருந்து முகத்தைச் சோகமா வெச்சிட்டு இருந்தா. என்னன்னு நான் கேட்டதுக்கு எதுவுமே சொல்லலை. கடைசியில அவ அம்மாவையும், ரசிகாவையும் நினைச்சுத்தான் இவ சோகமா இருக்கான்னு எனக்குத் தெரிஞ்சது. சரி, விஷயம் இதுதான்னு தெரிஞ்ச பிறகு நான் எப்படி சும்மா இருக்கிறது? அதான் என் ஆட்களை அனுப்பி, அங்கே இருக்கிறவங்களை எல்லாம் அடிச்சுப் போட்டுட்டு, செண்பகம் அத்தையையும், ரசிகாவையும் இங்கே கூட்டிட்டு வந்துட்டேன். இதுல என்னடா பிரச்சனை வந்துச்சு உங்களுக்கு?” என்றான் வீரா.

“பிரச்சனை எங்களுக்கு இல்லைடா. பூவிழிக்குதான்” என்றான் மித்ரன்.

“என்னடா அவளுக்கு என்ன பிரச்சனை?” என்று திரும்பிப் பூவிழியைப் பார்த்தான் வீரா.

“என்ன பிரச்சனையா? நீ அவங்களை எல்லாம் அடிச்சுப் போட்டுட்டு இவ அம்மாவை கூட்டிட்டு வந்துட்ட. ஆனா, அவங்க பூவிழி மேல போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுத்திருக்காங்க. பூவிழி சொல்லி செண்பகம் ஆண்டியும், ரசிகாவும் அந்த வீட்டில் இருக்கிற சில விலை உயர்ந்த பொருட்களை எல்லாம் திருடிட்டு வீட்டை விட்டே ஓடிட்டதாவும். இத்தனை வருஷமா இருந்த வீட்டுக்குத் துரோகம் செய்திட்டு, கடைசி நிமிசத்துல அவங்க குடும்பத்தை அவமானப்படுத்திட்டு எவனையோ…” என்று சொல்ல வந்த மித்ரன், வீராவின் பார்வையை கண்டு “உன்னை கூட்டிட்டு மண்டபத்தை விட்டு ஓடிப் போய்ட்டான்னும், அதனால அவங்க குடும்பத்துக்கு ஏற்பட்டிருக்க அவமானத்துக்குப் பூவிழி மேல மானநஷ்ட வழக்கும்… அதேபோல திருடின பொருளுக்கும் காசு கேட்டு அவ மேல கேஸ் கொடுத்து இருக்காங்க” என்றான் மித்ரன்.

“ப்பூ… இவ்ளோதானா? இதை போன்லயே என்கிட்ட சொல்லி இருக்கலாம். இல்லையா, இவ என் கூடத்தானே வீட்டில் இருக்கா? அங்கேயே சொல்லி இருக்க வேண்டியதுதானே? இங்கே வந்து உங்களை எல்லாம் கூப்பிட்டு ஒப்பாரி வெச்சிட்டு இருந்தாளா இவ?” என்று தன் அருகில் இருந்த பூவிழியின் தொடையில் கைவைத்து அழுத்த…

“வீட்டில் விஷயம் தெரிஞ்சா எல்லாரும் பதட்டப்படுவாங்கன்னுதான் இங்கே வந்து சொன்னா. தவிர, அவளுக்கு போலீஸ் ஸ்டேஷன்ல இருந்து போன் பண்ணி விபரம் சொல்லி, கொஞ்ச நேரத்துல பூவிழியை ஸ்டேஷனுக்கு வர சொல்லி இருக்காங்க. இதை எப்படி வீட்டுல சொல்றதுன்னு தெரியாம எனக்கு கால் பண்ணினா. அதனால்தான் அவளைக் கிளம்பி இங்கே வரச் சொன்னேன்” என்றான் மித்ரன்.

“இதுதான் சாக்குன்னு என்னை தடவுறான் பொருக்கி” என்று பூவிழி முணுமுணுக்க…

அதை கேட்டுக்கொண்டு மெல்லச் சிரித்தவன், “பொறுக்கி என்ன செய்வான்னு வீட்டுக்குப் போனதும் காட்டுறேன்” என்று அவளைப் பார்த்து சிரித்துவிட்டு திரும்பி கவினிடம், “கவின், பூவிழி எங்கயும் போக மாட்டா. போலீஸ் ஸ்டேஷன்ல செய்ய வேண்டிய விஷயங்களை எல்லாம் செய்து நீ அதைப் பார்த்துக்கோ… பூவிழியோட மாமாவையும், அவங்க வீட்டில் இருக்கிற ஆளுகளையும் என்ன செய்யணும்னு நான் பிறகு சொல்றேன்” என்றான்.

“என்ன செய்வியோ, எது செய்வியோ எனக்குத் தெரியாது. பூவிழி மேல யார் கம்ப்ளைன்ட் கொடுத்தாங்களோ, அவங்களை அரெஸ்ட் பண்ணது ஈவினிங் நியூஸ்ல வரணும்” என்றவன், “பூவிழி, வீட்டுக்குக் கிளம்பலாம்” என்று எழுந்தான் வீரா.

“டேய், இருடா… அதுக்குள்ள என்ன அவசரம்? கொஞ்ச நேரம் இரு. பேசிட்டுப் போகலாம். இன்னும் பஞ்சாயத்து முடியலை மாப்பு…” என்று அவனை மீண்டும் அமர வைத்தான் மித்ரன்.

“இன்னும் என்னடா இருக்கு? எங்களுக்கு நிறைய வேலை இருக்கு. அம்மா எங்களைத் தேடுவாங்க. நாங்க கிளம்பணும்” என்று வீரா கூற…

“அம்மாத்தானே? அவங்களைச் சமாளிச்சுக்கலாம். அதுவும் இல்லாம நீங்க ஒன்னும் ஸ்கூல் பிள்ளைங்க இல்ல. காணோம்னு தேடுறதுக்கு” என்றவன், வீரா அருகில் சேரை இழுத்துப் போட்டு அமர்ந்தவன், “சரி, நீ பூவிழியை என்ன பிளான் பண்ணி கல்யாணம் செய்துக்க சம்மதம் சொன்னே?” என்றான்.

“என்ன…” என்று புருவம் சுருங்க மித்ரனைப் பார்த்த வீரா, “என்னடா சொல்ற? நான் என்ன பிளான் பண்ணினேன்? எனக்கு ஏதும் புரியலை” என்றான்.

“ஏன் புரியாது? பூவிழி கழுத்துல நீ ஏன் தாலி கட்டினேன்னு எங்ககிட்ட உனக்கும் அவளுக்கும் கல்யாணம் ஆன அன்னைக்கே சொல்லிட்டா. அவ சொன்னதை வெச்சுப் பார்த்தா, அப்போ பூவிழியை அந்த இக்கட்டான சூழ்நிலையிலிருந்து காப்பாத்ததான் நீ கல்யாணம் பண்ணிகிட்டேன்னு புரியுது. ஒரு ஃப்ரெண்டா அவளை நீ காப்பாத்தணும்னு நினைச்சிருந்தா, அவ கழுத்துல தாலி கட்டித்தான் செய்யணும்னு அவசியம் இல்லையே?” என்றான் மித்ரன்.

ஸ்ரீக்கு வீரா, பூவிழியை காதலித்த விஷயம் தெரியாது. ஆனால், கவினுக்கும், ராகவிற்கும் வீரா பூவிழியை இத்தனை ஆண்டுகளாக ஒருதலையாகக் காதலித்த விஷயம் தெரியும். மித்ரன் கேட்ட கேள்விக்கு வீரா என்ன பதில் சொல்லப் போகிறான் என்று அவனை அனைவரும் பார்த்துக்கொண்டிருக்க…

“ஆமாம்டா. நீ சொன்னதும் சரிதான். நான் நினைச்சிருந்தா, பூவிழிக்கு நடக்க இருந்த கல்யாணத்தை எப்படியாவது நிறுத்தி இருக்கலாம். ஆனா, அப்படி செய்ய எனக்கு மனசு வரலை” என்றான்.

“ஏன்? என்ன ஆச்சு? ஏன் மனசு வரலை?” என்றான் மித்ரன். அவன் கேட்டது போலவே ஸ்ரீயும் வீரா சொல்வதைக் கேட்க ஆர்வமாகக் காத்திருக்க… அடுத்து அவன் என்ன சொல்லப் போகிறான் என்று கவின், ராகவ், பூவிழிக்குத் தெரிந்ததால் அவர்கள் எதையும் காட்டிக்கொள்ளாமல் அமைதியாக அவனையே பார்த்துக்கொண்டிருந்தனர்.

“ஏன்னா… நான் இத்தனை வருஷமா பூவிழியை ஒருதலையாகக் காதலிச்சிட்டு இருந்தேன். அவளைக் கல்யாணம் செய்துக்க ஆசைப்பட்டேன். ஆனா, அதுக்கான நேரமும், சூழ்நிலையும் எனக்கு அமையல. சரியா அவ கல்யாணம்னு கேள்விப்பட்டுதான் அங்கே வந்தேன். நான் நினைச்சதுபோல அவளைக் கல்யாணமும் பண்ணிக்கிட்டேன்” என்றான் மிகவும் சாதாரணமாக.

அதைக் கேட்டதும், “அடப்பாவி! அப்போ, என்னை கல்யாணம் பண்ணிக்கிறியான்னு என் வாயாலயே கேட்க வெச்சு, நீ என்னவோ எனக்கு வாழ்க்கை பிச்சை போட்ட மாதிரி நடிச்சியாடா?” என்று கோபம் கொண்டு பூவிழி எழுந்து தன் அருகில் அமர்ந்திருந்தவனை அடிக்கப் போனாள்.

“ஏய்… ஏய்… ரோஸ் மில்க், அடிக்காதடி… உன் மச்சி பாவம்” என்று அவள் கைகள் இரண்டையும் பிடித்துக்கொண்டு சேரில் இருந்து எழுந்தான்.

“நீயா பாவம்? நேத்து நைட் என்னை என்ன எல்லாம் செய்த…” என்று அவள் சொல்ல, அங்கே இருந்தவர்கள் அனைவருக்கும் அதிர்ச்சி

அதே அதிர்ச்சியோடு இருவரையும் பார்த்தனர்.

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured