Home Uncategorizedஉன் ரகசிய ரசிகை நான் 39

உன் ரகசிய ரசிகை நான் 39

by Layas Tamil Novel
621 views

“நீ எவ்வளவு சீக்கிரமா எனக்கு டைவர்ஸ் கொடுக்க முடியுமோ அவ்ளோ சீக்கிரம் எனக்கு டைவர்ஸ் கொடுத்திரு ஆதி . என்னால இங்க யாருக்கும் பிரச்சனை வேண்டாம். நான் யார் வாழ்க்கையிலும் இடைஞ்சலாக இருக்க விரும்பவில்லை,” என்று துர்கா சொல்ல.

இதையெல்லாம் இவ்வளவு நேரம் கோபத்தோடு அவளைப் பார்த்துக் கொண்டிருந்த ஆதி, துர்கா தன்னை ‘வேண்டாம்’ என்று இன்னமும் ஒதுக்கி வைக்கிறாள் என்று நினைத்ததும் தான் தாமதம், ஆதி அவள் கன்னத்தில் ஓங்கி அறைந்திருந்தான்.

தன்னை அறைவான் என்று எதிர்பார்க்காத துர்கா, தன் கன்னத்தில் கையை வைத்துக் கொண்டு, கண்களில் கண்ணீரோடு நிமிர்ந்து ஆதியைப் பார்க்க, கோபமே உருவாக ஆதி அவள் எதிரில் கண்கள் சிவக்க நின்றிருந்தான்.

அழுது கொண்டே துர்கா ஆதியைப் பார்த்து, “இப்போது எதுக்கு நீ என்ன அடிச்ச ஆதி? நான் ஒன்னும் தப்பா சொல்லலையே? உன் வாழ்க்கையில் நான் இடைஞ்சலா இருக்கறதுனால தானே உன்னால அந்த சங்கவி கூட சேர முடியலை. நான் ஒருத்தி உன் அம்மா பேச்சைக் கேட்டு உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டேன். ஆனா உன் மனசுல என்ன இருக்குன்னு எனக்குத் தெரியாம போயிருச்சு ஆதி. என்னை மன்னிச்சிடு. உன் மனசுல அந்த சங்கவி தவிர வேற யாருக்குமே இடம் இல்லைன்னு எனக்கு இன்னைக்குத்தான் புரிந்தது. நான் உனக்கும் சங்கவிக்கும் இடையிலான வாழ்க்கைக்குள்ள இடைஞ்சலா இருக்க விரும்பல ஆதி. அதனாலதான் சொல்றேன், சீக்கிரமா எனக்கு டைவர்ஸ் கொடுத்துடு. எனக்கு டைவர்ஸ் கொடுத்து அப்புறம் நீயும் சங்கவியும் கல்யாணம் பண்ணிக்கிட்டு நிம்மதியா சந்தோசமா இருங்க. நான் உங்க வாழ்க்கையில குறுக்கிடவே மாட்டேன்,” என்று அழுதுகொண்டே கூறினாள்.

துர்காவைப் பார்த்துக் கொண்டிருந்த ஆதி, ‘இவ்வளவு நாளும் துர்கா இதையெல்லாம் நினைத்துக் கொண்டுதான் என்னை விட்டுத் தள்ளி இருந்தாளா?’ என்று நினைத்தவன், துர்காவின் தோள்களைப் பிடித்து அவளைத் தன்னைப் பார்க்குமாறு நிமிர்த்தியவன், “இப்போ சங்கவியையும் என்னையும் சேர்த்து வைக்கிறதுல நீ ஏன் இவ்ளோ ஆர்வமா இருக்க? நான் வந்து உன்கிட்ட சொன்னேனா சங்கவிக்கும் எனக்கும் கல்யாணம் பண்ணி வை… என்னை விட்டு சீக்கிரமா போயிரு, எனக்கு டைவர்ஸ் கொடுத்துடுன்னு நான் உன்கிட்ட கேட்டேனா? நீ ஏன் இப்படிப் பேசுற துர்கா?” என்று கேட்க.

தன்னைப் பிடித்திருந்த அவன் கைகளை கடினப்பட்டு விலக்கிய துர்கா, “ஆதி, நீயும் சங்கவியும் கார்டன்ல கட்டிப் பிடிச்சு முத்தம் கொடுத்துட்டு இருந்ததை நான் பார்த்தேன் ஆதி. உனக்கு அவ மேல இருந்த காதலையும் நான் கவனிச்சேன். அந்த சங்கவியே வந்து ‘நீயும் அவளும் எவ்வளவு உண்மையா காதலிக்கிறிங்க’ன்னு என்கிட்ட சொல்லி ‘எங்க வாழ்க்கையில் இருந்து போயிடு’ன்னு என்கிட்ட கேக்குறப்போ, நான் என்ன பண்ண முடியும்? என்னால் யாருக்கும் கஷ்டம் வேண்டாம் ஆதி. அதனாலதான் நான் உன்கிட்ட டைவர்ஸ் கேட்கிறேன். ப்ளீஸ் ஆதி, புரிஞ்சுக்கோ,” என்று துர்கா கூற.

‘அப்போ நான் வரதுக்கு முன்னாடியே கார்டன்ல துர்கா ரூமுக்கு வராம அங்கதான் இருந்திருக்கா. இந்த சங்கவி இதையெல்லாம் தெரிஞ்சுக்கிட்டு தான் என்கிட்ட இந்த மாதிரி நடந்திருக்காளா?’ என்று அவள் மேல் ஆத்திரம் வர, ‘இவளைப் பிறகு கவனித்துக் கொள்ளலாம்’ என்று நினைத்த ஆதி, துர்காவிடம் வந்தவன், “நான் அவளை விருப்பப்பட்டு கட்டிப்பிடிச்சு முத்தம் கொடுத்ததை நீ பார்த்தியா?” என்று ஆதி கேட்க.

“ஆமாம் ஆதி,” என்று துர்கா சொல்ல, “நான் உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டேன் அப்படிங்கற காரணத்துக்காக வேண்டாம். இவ்வளவு வருஷமா நீயும் நானும் நல்ல நண்பர்களா இருந்திருக்கோமே? அப்படி இருக்கிறப்போ என்னோட குணத்தைப் பற்றி கொஞ்சமாவது உனக்குத் தெரிந்திருக்க வேண்டாமா துர்கா? நம்ம கல்யாணத்துக்கு முன்னாடி நான் சங்கவியைக் காதலித்தது உண்மைதான். ஆனா காதல் அப்படிங்கறது ரெண்டு பக்கமும் இருந்து வரணும் துர்கா. நான் மட்டுமே அவளைக் காதலிச்சு இருக்கேன்னு எனக்கு நம்ம கல்யாணத்தை அப்போதான் தெரியும். இப்படி இருக்கிறப்போ, ‘நாங்க ரெண்டு பேரும் காதலிக்கிறோம், எங்க வாழ்க்கையை விட்டுப் போயிடு’ன்னு சொல்லி சங்கவி வந்து கேக்குறப்போ, நீ எப்படி அதுக்குச் ‘சரின்னு’ சொல்லிட்டு வரலாம்? என்னோட விருப்பத்தைப் பற்றி நீ யோசிக்கவே இல்ல அப்படித்தானே? நான் என்ன நினைத்திருப்பேன்? நான் எப்படிப்பட்டவன் உனக்குத் தெரியாமப் போயிடுச்சா…. துர்கா இத்தனை வருஷத்துலயும்?” என்று ஆதங்கமாக துர்காவைப் பார்த்துக் கார்த்தி கேட்க, துர்காவுக்கு என்ன சொல்வது என்று புரியாமல் ஆதியைப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள்.

“இப்போ சொல்றேன் நல்லாக் கேட்டுக்கோ துர்கா. நம்ம கல்யாணத்துக்கு முன்னாடி வரைக்கும் நான் சங்கவியைக் காதலிச்சது உண்மைதான். ஆனா, எப்போ நான் உன் கழுத்துல தாலி கட்டினேனோ, அப்பவே அந்தச் சங்கவியை என் மனசுல இருந்து மொத்தமா அவளோட நினைவையும், அவள் மேல நான் வச்சிருந்த காதலையும் அழிச்சிட்டேன். அது காதலே கிடையாது. உன் கழுத்துல தாலி கட்டின பிறகு வேற எந்தப் பொண்ணையும் மனசால நான் நினைக்கக் கூடாது என்கிறதுல உறுதியா இருந்தேன். உனக்கு என் மேல காதல் இருக்கா இல்லையான்னு எனக்குத் தெரியல. கொஞ்ச நாள் வரைக்கும் எனக்கும் அப்படித்தான் இருந்துச்சு. ஆனா, எனக்கு உன்னைக் கொஞ்சம் கொஞ்சமாப் பிடிக்க ஆரம்பிச்சிருக்கு துர்கா. இதை நான் கொஞ்சம் கொஞ்சமா உணர ஆரம்பிச்சிருக்கேன். இப்பவும் நான் உன்னைக் காதலிக்கிறேன் என்று எனக்குத் தெரியாது துர்கா. ஆனா உன்னத் தோழியா இருந்து பிடிச்சதை விட, இப்போ ரொம்பப் பிடிக்குது. ஏன்னு எனக்குச் சொல்லவும் தெரியல.”

“நான் உன்னைப் புரிஞ்சுக்கணும்னு நினைக்கிறேன். அதுவும் முழுசாப் புரிஞ்சுக்கணும்னு நினைக்கிறேன் துர்கா. நீ முழுசா என் மனசுக்குள்ள வரணும். அது போல, உன் மனசுக்குள்ள நான் இருக்கேனான்னு நானும் தெரிஞ்சுக்கணும் துர்கா. நான் உன்னையும் என்னையும் நம்மையும் பற்றி இவ்வளவு யோசிச்சிட்டு இருக்கேன். ஆனா நீ என்னடான்னா அந்தச் சங்கவி பேச்சக் கேட்டுட்டு, காதல், மண்ணாங்கட்டி, அது இதுன்னு சொல்லிட்டு எனக்கு டைவர்ஸ் கொடு என்று சொல்லி என்கிட்ட வந்து கேக்குற அப்படித்தானே? ஒன்னு சொல்றேன் நல்லாக் கேட்டுக்கோ துர்கா. இனியும் ‘எனக்கு டைவர்ஸ் கொடு’ அப்படி இப்படின்னு சொல்லிட்டு என் முன்னாடி வந்து நிற்காதே. நமக்குள்ள பிரிவு என்பதே இந்த ஜென்மத்துல கிடையவே கிடையாது. இந்த ஜென்மத்தில் நீயும் நானும் ஒன்னா வாழத்தான் போறோம் துர்கா. இந்த ஜென்மத்தில் நீதான் எனக்கு மனைவி…. இதை அந்த ஆண்டவனே நினைச்சாலும் மாற்ற முடியாது.”

“நான் சொல்வதை நீ புரிஞ்சிருப்பேன்னு நினைக்கிறேன். எனக்குள்ள எப்போ உன் காதல் முழுமையா நுழையுதோ, அதை நான் உணர்ந்த அடுத்த நிமிஷமே உன் முன்னாடி வந்து என் காதலை கண்டிப்பா நான் சொல்வேன் துர்கா. நான் உன்கிட்ட என் காதலை சொல்லும்போது, நீயும் என்னைப் புரிஞ்சுக்கிட்டு என் காதலை ஏத்துக்கிட்டு நீயும் உன் காதலை சொல்லுவேன்னு நான் எதிர்பார்த்துக் காத்துட்டு இருக்கேன். அதுவரைக்கும் இந்த மாதிரி எல்லாம் நான்சென்ஸ் மாதிரி பேசிட்டு என் முன்னாடி வந்து நிற்காதே. போ, போய் முகத்தைக் கழுவிட்டு வந்து படுத்துத் தூங்கு,” என்று சொன்னவன், திரும்பியும் பார்க்காமல் ட்ரெஸ்ஸிங் ரூமுக்குச் சென்று விட்டான்.

இவ்வளவு நேரம் ஆதி கூறியதை எல்லாம் கண்ணிமைக்காமல் கேட்டுக் கொண்டிருந்த துர்கா, ‘தன் ஆதியா இப்படிப் பேசுவது? தன் ஆதியா தன்னிடம் வந்து ‘என்னைப் பிடிக்கும்’ என்று சொல்லிவிட்டுச் செல்கிறான்?’ ஆதி கூறிய அனைத்து விஷயங்களும் துர்காவின் காதில் திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டிருக்க, தன்னையே தன்னால் நம்ப முடியாமல் நின்றிருந்த துர்கா, ‘இவ்வளவு நாளும் நான் நினைத்தது எல்லாமே தப்பாகப் போய்விட்டதே! ஆதிக்கும் என்னைப் பிடிக்கத்தான் செய்கிறது,’ என்று நினைக்கும் போதே, அழுது கொண்டிருந்த துர்கா முகம் வெட்கத்தில் சிவந்து விட, ஆதி தன்னைப் பிடிக்கும் என்று சொன்னதை நினைத்தவளின் முகம் மெல்ல மலர ஆரம்பித்தது. ஆதி சொன்ன வார்த்தைகளை நினைத்துக் கொண்டே பாத்ரூம் நோக்கிச் சென்றாள் துர்கா.

இது எல்லாம் ட்ரெஸ்ஸிங் ரூமில் கதவு ஓரத்தில் நின்று, அவளுக்குத் தெரியாமல் பார்த்துக் கொண்டிருந்த ஆதி, துர்கா முகம் தாமரைப்பூ போலச் சிவந்து இருப்பதைப் பார்த்தவன், அவளையே ரசித்த வண்ணம் அவள் செல்வதைப் பார்த்துக் கொண்டே நின்றிருந்தான்.

ஆதி இரவு உடை அணிந்து கொண்டு வந்து கட்டிலின் ஒரு புறம் படுத்திருக்க, துர்காவும் முகம் கழுவி விட்டு வந்து அவன் அருகில் சிறிது இடைவேளை விட்டு, அவனுக்கு முதுகு காட்டிப் படுத்திருந்தாள். இருவரும் தங்கள் மனதில் சொல்ல முடியாத உணர்வுகளோடு போராடிக் கொண்டு, இருவரும் முதுகு காட்டிப் படுத்து எப்போது தூங்கினோம் என்று தெரியாமல், இருவரும் நன்றாகத் தூங்கி விட்டனர். நாளை விடியும் பொழுது இவர்கள் வாழ்க்கையிலும் ஒரு நல்ல விடிவு பிறக்க வேண்டும்.

❤️

அதிகாலை மூன்று மணி போல கீர்த்திகாவின் அறைக் கதவு தட்டப்பட, கீர்த்திகாவின் அப்பா எழுந்து கதவைத் திறந்தார்.

கதவைத் திறந்தவருக்கு அங்கே, கையில் சோப்பு, சீப்பு, டவல், டூத் பேஸ்ட், ஷாம்பு சகிதம் நின்றிருந்த விக்கியைப் பார்த்து அதிர்ச்சியாகி, “என்ன தம்பி, இவ்வளவு காலையில் வந்திருக்கீங்க? இதெல்லாம் என்னது தம்பி?” என்று அவன் கையில் இருக்கும் பொருட்களை எல்லாம் பார்த்துக் கேட்டார்.

“அங்கிள்! ஆதி அம்மா, ‘உங்க அறையில் எல்லாம் சௌகரியமா இருக்கா? பாத்ரூமில் சுடு தண்ணீர் வருதா? காலையில் அலாரம் வைத்து எழுந்திருக்க லேட்டா ஆகிட்டா, மேரேஜுக்குப் போறதுக்கு லேட் ஆகிடும்’னு சொல்லி, உங்க எல்லாரையும் எழுப்பி விடச் சொல்லி, இதெல்லாம் உங்களுக்குக் கொடுக்கச் சொல்லி என்னை அனுப்பி வைத்தார்கள்,” என்று விக்கி கூற.

“அது சரி தம்பி. இதுக்குத்தான் வேலை ஆட்கள் இருப்பங்களே…. சம்மந்தி அம்மா எப்பவும் அவங்க கிட்ட தானே கொடுத்து விடறாங்க. நீங்க ஏன் இதெல்லாம் செஞ்சுட்டு இருக்கீங்க?” என்று கேட்டார்.

“அதுவா அங்கிள்! அவங்க எல்லாரையும் துர்கா அறைக்கு அனுப்பி வெச்சுட்டாங்க. அதான் என்னை இங்க அனுப்பினாங்க,” என்றவன், “சரி அங்கிள்! எல்லாரும் எழுந்துட்டீங்களா?” என்று அறைக்குள் எதிர்பார்த்துக் கொண்டே கேட்டான்.

“நானும் வடிவும் (கீர்த்திகாவின் அம்மா) எழுந்துட்டோம் தம்பி. கீர்த்திகா தான் நைட் துர்காவைப் பார்த்துட்டு வந்து லேட்டா வந்ததுல, அழுப்புல தூங்குறா பா…. சரி நாங்க எல்லாரும் ரெடி ஆகிட்டு அவளை எழுப்பலாம் என்று தூங்கட்டும்னு விட்டுட்டோம்,” என்று சொன்னார்.

அவர் கூறியதைக் கேட்டவன், “என்னது! கீர்த்திகா இன்னும் எழுதிருக்கலையா….? இன்னும் ஒரு மணி நேரம்தான் இருக்கு ஃபங்ஷனுக்கு. அங்கே நேரமே எல்லாரும் எழுந்து ரெடி ஆகி போய்ட்டு இருக்காங்க. கீர்த்திகா இன்னும் தூங்குறாளா? நகருங்க அங்கிள்! நான் போய் அவளை எழுப்புறேன்,” என்றவன் அவரைத் தள்ளிக்கொண்டு தாண்டி அறைக்குள் சென்றான்.

உள்ளே சென்றவன், முகம் வரை போர்த்திக்கொண்டு நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்த கீர்த்திகாவைப் பார்த்ததும், ‘கொஞ்சமாவது பொறுப்பு இருக்கா பார் இவளுக்கு. காலைல என் தேவதையோட நம்பர் தரேன்னு சொல்லிட்டு, இங்க வந்து எப்படித் தூங்குகிறா பாரு,’ என்று நினைத்தவன், கீர்த்திகாவின் பக்கத்தில் சென்று, “தங்கச்சி….. தங்கச்சி மா….. எழுந்திருடா தங்கம்….. கீர்த்திகா…. கீர்த்திகா…. எழுந்திரு கீர்த்திகா…. எழுந்திரு…..” அஞ்சலி படத்தில் வரும் வசனம் போல விடாமல் கீர்த்திகாவின் காதின் அருகில் சென்று அவள் பெயரைச் சொல்லி அழைத்து அவளை எழுப்பிக் கொண்டே இருக்க.

“யாருடா அது இந்த நேரத்துல வந்து காதுக்குள்ள என் பேரு சும்மா சொல்லிட்டு…..” என்று தூக்கத்தில் திரும்பப் படுக்கப் போனவளின் கை படாரென்று விக்கியின் கன்னத்தில் வேகமாக அடிக்க.

“ஷ்…. ஆஹ்…..” என்று தன் கன்னத்தில் கையை வைத்தவன், ‘அடிப்பாவி! தூக்கத்துல கூட யாரு பக்கத்துல இருக்குறானு பார்க்காம என்ன அடிக்கிறாளே! இது எல்லாம் என் நேரம். எனக்கு என் வேலை ஆகணுமே! நீ என்ன செஞ்சாலும் பொறுத்துத் தானே போகணும்,’ என்று முடித்தவன், மறுபடியும் சென்று அவள் தோலைத் தொட்டுச் சுரண்ட.

“ப்ச்……” என்று சினுங்கியவள் தன் தோளில் இருந்த கையைத் தட்டி விட்டாள். மறுபடியும் விக்கி அவள் தோலைச் சுரண்ட, கண்களைத் தேய்த்துக் கொண்டே அரை தூக்கத்தில் கண்ணை லேசாகத் திறந்து பார்க்க, அவள் முகத்திற்கு நேர் எதிராக விக்கி ஈ……என்று பல்லைக் காட்டிக் கொண்டு நின்றிருந்தான்.

அரை தூக்கத்தில் இருந்து கீர்த்திகா கண்விழித்ததும் விக்கி முகத்தை இவ்வளவு நெருக்கத்தில் பார்த்ததும், அவன் முகம் மிகவும் பெரியதாக வித்தியாசமாகத் தெரியவும், பதறிப் போய், “ஐயோ….. அம்மா…… பேய்…..” என்று அலறி அடித்துக் கொண்டு பெட்டில் இருந்து அடித்துப் பிடித்து எழுந்து நின்றாள்.

அவள் இப்படி அலறி எடுத்துக்கொண்டு கத்தவும், குளித்துவிட்டு வெளியே வந்த வடிவும் (அம்மா) கீர்த்திகாவின் அப்பாவும், “என்னம்மா ஆச்சு? ஏன் இப்படி கத்துற?” என்று பதறி அடித்துக் கொண்டு கீர்த்திகாவின் அருகில் வர.

அப்போது தான் தன் தூக்கம் மொத்தமும் கலைந்து விட, தன்னைச் சுற்றி யார் யார் நிற்கிறார்கள் என்று நன்றாகப் பார்த்த கீர்த்திகா. பெட்டிற்கு இந்த பக்கம் கீர்த்திகா நிற்கவும், இவர்கள் மூவரும் பெட்டிற்கு அந்தப் பக்கம் நின்று இருந்தார்கள்.

“என்னம்மா ஆச்சு? ஏன் இப்படி கத்துற?” என்று வடிவு கேட்க, கீர்த்திகா தன் இதிலிருந்து விக்கியைப் பார்க்க, விக்கி அவர்கள் இருவருக்கும் தெரியாமல் கையெடுத்துக் கும்பிட்டு “சாரி” என்று யாருக்கும் தெரியாமல் கீர்த்திகாவிடம் கெஞ்சவும், அவனை முறைத்தவள், “அம்மா அது ஒன்னும் இல்ல. ஒரு கெட்ட கனவுல ஒரு பேய் என் பக்கத்துல வர மாதிரி கனவு கண்டேன்மா…. அதனாலதான் தூக்கத்துல பயந்து கத்திட்டேன்,” என்ற கீர்த்திகா விக்கியைப் பார்த்து முறைத்துக் கொண்டே கூறினாள்.

“என்ன பொண்ணுமா நீ! இவ்வளவு பெருசா இன்னமும் பேய், பூதம் என்று அதுவும் கனவில் கண்டதாகச் சொல்லி பயந்து இப்படி அலறி அடிச்சு எழுந்து, எங்க எல்லாரையும் ஒரு நிமிஷம் பயந்துட்டோம்,” என்றார் அப்பா.

“சரி, எழுந்தாச்சுல்ல. சீக்கிரம் குளித்து ரெடியாயிடு. நம்ம கல்யாணத்துக்கு போகணும் இல்லையா?” என்று கூட, “சரிமா, நீயும் அப்பாவும் போய் ரெடியாகுங்க. நான் விக்கி அண்ணா கூடப் பேசிட்டுப் போய் ரெடியாகிடுறேன்,” என்று கூறிவிட்டு, விக்கியைக் கண்களால் வெளியே வரும்படி ஜாடை செய்ய, விக்கி அவள் பின்னால் பம்மிக்கொண்டு வெளியே சென்றான்.

விக்கி வெளியே வந்ததும், அவர்கள் அறை கதவை அடைத்தவள், விக்கியைப் பார்த்து முறைத்தவள், “என்ன அண்ணா! இவ்வளவு காலையில் வந்து இருக்கீங்க? முகத்தைக் கொண்டு வந்து இப்படியா மூஞ்சிக்குப் பக்கத்துல வச்சு என்ன பயமுறுத்துவீங்க?” என்று அவனிடம் சிடுசிடுக்க.

“அச்சோ! அண்ணா மூஞ்சியைப் பார்த்து பயந்துட்டியா தங்கச்சிமா? சாரிடா….. நான் நீ நல்லாத் தூங்கிட்டு இருந்தியா. உன்னைச் சத்தம் போட்டு எழுப்ப வேண்டாம்னு சொல்லிட்டு தான் பக்கத்துல வந்து மெதுவா கூப்பிட்டேன். ஆனா நீ அதுக்குமே பயந்துட்ட. நீ ரொம்பச் சின்ன புள்ளை மாதிரி இருக்க. இப்படியெல்லாம் பயந்துக்க கூடாது. சரியா?” என்று விக்கி அவளிடம் மிகவும் பாசமாக இருப்பது போல காட்டிக் கொள்ள.

“சரி சரி! இப்ப எதுக்கு இவ்வளவு காலையில் எங்க ரூமுக்கு வந்தீங்க? என்னையேன் இவ்வளவு சீக்கிரம் எழுப்பி விட்டீங்க? முதல்ல அதை சொல்லுங்க. நான் போய் ரெடி ஆகணும். கல்யாணத்துக்கு நேரம் ஆயிடுச்சு. அப்புறம் அம்மா அப்பாவும் என்னைத்தான் திட்டுவாங்க,” என்று கீர்த்திகா கூற.

“அது ஒன்னும் இல்லடா தங்கச்சிமா. நீ காலையில் நிலானியின் ஃபோன் நம்பர் எனக்குத் தரேன்னு சொன்னியா? அதுதான் பொழுது விடிஞ்சிடுச்சு. உன்னை எழுப்பி ஃபோன் நம்பர் கேக்கலாம்னு வந்தேன்,” என்று விக்கி கூற.

அவன் கூறியதைக் கேட்டுக் கீர்த்திகா, “அண்ணா! இது எல்லாம் உங்களுக்கே கொஞ்சம் ஓவரா இல்ல? மணி 3:30 தானே ஆகுது. காலைலேங்குறது அஞ்சு மணி ஆறு மணிக்கு மேல தானே? இப்படியா வந்து ஃபோன் நம்பர் கேட்பிங்க?” என்று அவனிடம் கோபிக்க.

“சரிடா சரிடா தங்கச்சிமா…. அண்ணா பாவம்ல. இப்படி கோச்சுக்காதடா. ப்ளீஸ்……. நீ என் ஆள் நம்பர் மட்டும் கொடுத்துடு. அதுக்கப்புறம் நான் நீ….. இருக்கிற பக்கமே வரமாட்டேன். உன்னை டிஸ்டர்ப் பண்ண மாட்டேன். அண்ணா பாவம் தானே? எவ்வளவு நேரம் தான் நான் காத்துட்டு இருக்கேன் தெரியுமா? நேத்து நைட்ல இருந்து நான் காத்துட்டு இருக்கேன்,” என்றான். ஏதோ வருடக் கணக்கில் காத்திருப்பது போலக் குரலை ஏற்றி இறக்கிக் கூறினான்.

விக்கி கெஞ்சுவதெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த கீர்த்திகாவின் கோபம் காணாமல் போய்விட்டது. “சரி சரி அண்ணா! ரொம்பக் கெஞ்சாதிங்க. எனக்கு ரொம்பச் சங்கடமா இருக்கு உங்களை இப்படிப் பார்க்க. உங்களுக்கு என்ன இப்ப அவ நம்பர் வேணும். அதானே? நான் இப்பவே தரேன். ஆனா ஒரே ஒரு கண்டிஷன்,” என்றால்.

“என்னடா கண்டிஷன்? சொல்லு கீர்த்து. நீ என்ன சொன்னாலும் இந்த அண்ணா செய்வேன். சொல்லுடா,” என்றான் விக்கி.

“அதுவா! நான் இப்போ ரூம்குள்ள போனதும் என் ஃபோனை எடுத்து வாட்ஸ் அப்ல உங்களுக்கு நான் நிலானியின் நம்பர் அனுப்பிவிடுவேன். அதே மாதிரி அவளுக்கும் நான் உங்க நம்பர் சொல்லி அனுப்பி, ‘இவர் கூப்பிடுவார்’ என்று மட்டும்தான் சொல்லுவேன். உங்களப் பத்தி எந்த விஷயமும் நான் சொல்ல மாட்டேன். சரியா?”

“நீ அண்ணன் நம்பர் கூட சொல்ல வேண்டாம்டா. உன் பிரண்டு நம்பர் மட்டும் கொடு போதும். மிச்சத்தை நான் பார்த்துக்கிறேன்,” என்று விக்கி கூற.

“ம்ஹும்….. அது தப்பு அண்ணா. நான் அவகிட்ட உங்க நம்பர் கொடுத்து, ‘இவர் கூப்பிடுவார். நீ பேசிக்கோ’ன்னு மட்டும் சொல்லுவேன். மற்றதெல்லாம் நீங்க நிலானி கிட்ட ஃபோன் பண்ணிப் பேசிக்கோங்க. அண்ட், நான் இப்போ உங்க ரெண்டு பேருக்குமே நம்பர் அனுப்பிடுவேன். ஆனா நீங்க அவளுக்கு இப்ப கூப்பிடக்கூடாது. காலைல ஒரு ஒன்பது மணிக்கு மேல தான் கூப்பிடனும். சரியா?” என்றவள் அதற்கான காரணத்தையும் சொன்னாள்.

“ஏன்னா அவ ஹாஸ்டல்ல தான் தங்கி இருக்கா. இப்போ நீங்க கால் பண்ணா, அது அவளுக்குப் பிரச்சனையாகிடும். என்னால் அவளுக்கு எந்தப் பிரச்சினையும் வரக்கூடாது. ஏற்கனவே அவ வாழ்க்கையில நிறைய கஷ்டம் இருக்கு. அதனால இதுவும் அவளுக்குக் கஷ்டமாப் போய்டக் கூடாது. அதனால ரொம்ப ஜாக்கிரதையா அவ கிட்ட பேசுங்க. அவளைக் கஷ்டப்படுத்திர மாதிரி எதுவும் பண்ணிராதீங்க அண்ணா. ப்ளீஸ்,” என்றவள்.

“அவ ரொம்ப எமோஷனல் டைப் அண்ணா. அவளுக்கு அம்மா அப்பா ரெண்டு பேரும் இல்லை. கொஞ்ச நாள் முன்னதான் ஒரு ஆக்சிடெண்டில் இறந்துட்டாங்க. ஒரே ஒரு அக்கா மட்டும் தான் இருகாங்க. அவங்களை கல்யாணம் பண்ணி கொடுத்துட்டாதுனால, அவளால் அவங்க வீட்டில் இருந்து காலேஜ் வந்து போக முடியாது. அதுவுமில்லாமல், இவளுக்கும் அவங்க அக்காவை கல்யாணம் பண்ணி கொடுத்த குடும்பத்திற்கும் ஏதோ பிரச்சனைன்னு நினைக்கிறேன். முதல் வருஷம் அவங்க அக்கா வீட்டில் இருந்து தான் வந்தா. அப்புறம் என்ன ஆச்சுன்னு தெரியலை. ஹாஸ்டல்ல தங்கிப் படிக்கிறா. லீவு விடக் கூட அவ ஹாஸ்டலை விட்டு எங்கேயும் போக மாட்டா அண்ணா. ரொம்பப் பயந்த சுபாவம் அவளுக்கு. அவளை எதுவும் கஷ்ட படுத்துனீங்கனு மட்டும் எனக்குத் தெரிய வந்துச்சு, அப்புறம் ‘அண்ணன்’னு கூட பார்க்க மாட்டேன். உங்க தோளை உரிச்சு உப்புக் கண்டம் போட்டுருவேன்,” என்று சொன்னவள், “சரின்னா நீங்க உங்க ரூமுக்கு போங்க. நான் இப்போ உள்ள போயிட்டு நம்பர் அனுப்பிடுறேன்,” என்றவள் தன் அறைக்குச் செல்ல.

கீர்த்திகா கூறியதை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்த விக்கி, நிலானியைப் பற்றி ஓர் அளவு தெரிந்து வைத்திருந்தாலும், அவள் கஷ்டப்படுகிறாள் என்று சொன்னதும், ஏனோ விக்கிக்கு நிலானியை இப்போதே பார்க்க வேண்டும், பேச வேண்டும் என்று தோன்றிய நினைப்பை சிரமப்பட்டு கட்டுப்படுத்திக் கொண்டவன், அவன் ரூமிற்குச் செல்லவும், அவன் மொபைல் நோட்டிஃபிகேஷன் சவுண்ட் கேட்டது. அதை எடுத்துப் பார்க்க, கீர்த்திகா நிலானியின் நம்பரை அனுப்பியிருந்தாள்.

நிலானியின் நம்பரைப் பார்த்ததும், ஃபோன் திரையில் தெரிந்த அவள் நம்பரை தன் விரல்களால் வருடியவன். பின் அந்த நம்பரைத் தன் மொபைலில் ‘என் தேவதை’ என்று சேவ் செய்தான்.

❤️

ஆதியும் துர்காவும் நேரமே எழுந்து பூமிகாவுடைய திருமணத்திற்குச் செல்வதற்காகத் தயாராகி கொண்டிருக்க.

ஆதி சீக்கிரமே கிளம்பி சோபாவில் அமர்ந்திருந்தவன், துர்கா கிளம்பி வருவதற்காகக் காத்துக் கொண்டிருந்தான். சிறிது நேரம் கூட ஆதியைக் காக்க வைக்காமல் துர்கா தயாராகி வெளியே வர, ட்ரெஸ்ஸிங் ரூம் கதவு திறக்கும் சத்தம் கேட்டதும் தன் ஃபோனை நோண்டிக் கொண்டிருந்த ஆதி நிமிர்ந்து பார்க்க.

திருமணத்திற்குச் செல்வதற்காக ஆதியே நேரில் சென்று பார்த்துப் பார்த்து துர்காவுக்கு அழகாக ஒரு மயில் வண்ண நிறத்தில் பட்டு சேலை என்று செலக்ட் செய்து அவளுக்குக் கொடுத்திருந்தார். சேலைக்கு எடுப்பாகச் சிறிய வைர நெக்லஸும் அதுக்கு மேட்ச்சாக கம்மல், வளையல் என துர்காவுக்கு வைரத்தாலேயே எடுத்திருந்தார். அவர் வாங்கிக் கொடுத்த நகைகளையும் பட்டுப் புடவையையும் தான் இப்போது துர்கா அணிந்து வெளியே வந்தாள்.

துர்காவை அந்தப் பட்டுச்சேலையில் பார்த்த ஆதி, அவள் அழகில் மயங்கி அப்படியே ஸ்தம்பித்து அமர்ந்திருந்தான். தன் சேலையைச் சரி செய்து கொண்டு வெளியே வந்த துர்கா, ஆதி சோபாவில் அமர்ந்திருப்பதைப் பார்த்ததும் அவனிடம் தயக்கத்துடன் சென்றவள், “ஆதி, நான் ரெடி ஆயிட்டேன். நாம போலாமா?” என்று துர்கா கேட்க, அவள் பேசும் சத்தம் கேட்டதும் தான் நினைவுக்கு வந்தவன், தலையை ஒருமுறை உலுக்கிவிட்டு எழுந்தவன், “சரி வா, போலாம்,” என்று முன்னே நடக்க, துர்கா அவன் பின்னே சென்றாள்.

அனைவரும் ரெடியாகி பூமிகாவின் திருமணத்திற்கு கிளம்பினர். அவர்கள் அனைவரையும் வரவேற்று உபசரித்து அருணாச்சலம் தன் மகளின் திருமணத்திற்காக மேடை ஏறி நின்று அவளை ஆசீர்வதிக்கச் சென்றார். மற்ற அனைத்து ஜோடிகளும் பூமிகா, விஷால் அருகில் இருக்க, ஆதியையும் துர்காவையும் அழைத்து அவர்களுடன் சேர்த்து நிற்க வைத்துக் கொண்டனர்.

விக்கி தன் மொபைலைக் கையில் வைத்துக் கொண்டு, மணி எப்பொழுது ஒன்பதாகும் என்று காத்துக் கொண்டு இருந்தான். அவன் அருகில் அமர்ந்திருந்த கதிர், அவனுக்கு இரண்டு சேர் தள்ளி அமர்ந்திருந்த கீர்த்திகாவையே சைட் அடித்தவாறு, கீர்த்திகாவைப் பார்த்துக் கொண்டே இடையிடையே திருமணத்தையும் பார்த்துக் கொண்டிருந்தான்.

வாத்தியங்கள் முழங்க ஐயர் கெட்டிமேளம்….கெட்டிமேளம்….. என்று சொல்லிவிட்டு “மாங்கல்யம் தந்துனானே……” என்று மந்திரம் ஓத, பூமிகாவின் கழுத்தில் விஷால் தாலி கட்டினான்.

திருமணம் இனிதே முடிந்ததும் மேடை விட்டு இறங்கிய ஆதியும் துர்காவும் கீழே வர, அவர்களையே இலக்கு வைத்துக் கடன் வாங்காமல் இவ்வளவு நேரம் பார்த்துக் கொண்டிருந்த சங்கவி நேராக எழுந்து ஆதியின் அருகில் வர, அவளைப் பார்க்கப் பிடிக்காமல் தான் அணிந்திருந்த மாஸ்க்கைச் சரி செய்து கொண்டே, “இப்போ எதுக்கு இங்க வந்து நிற்கிற? கொஞ்சம் வழியை விடு,” என்று அவளை அதட்ட.

“ஒரு நிமிஷம் இரு ஆதி. உனக்குச் சொந்தமானது ஒன்று என்னிடம் இருக்கு,” என்று சங்கவி குதர்க்கமாக கூற, அவளைப் புரியாமல் பார்த்த ஆதி, “என்ன?” என்று அவளைக் கேட்டான்.

துர்காவை ஓரக் கண்ணால் பார்த்துக் கொண்டே தன் கைப்பையில் இருந்து ஆதியின் பர்ஸை எடுத்தவள், “நேற்று நீ எனக்கு உன்னோட கோட் போட்டு விட்டாய். அந்த கோர்ட்டுக்குள்ள தான் உன்னோட பர்ஸ் இருந்தது. அதைக் கொடுத்துட்டுப் போலாம்னு தான் வந்தேன். இப்படி என்ன ஏதுன்னு தெரியாம எப்பப் பார்த்தாலும் என்னிடம் சிடுசிடுன்னு பேசாத ஆதி,” என்று கூறி அவள் பர்ஸை நீட்ட, அதை விடுபட்டுப் பிடுங்கிய ஆதி, “உன்கிட்ட பேசணும்னு எனக்கு எந்த அவசியமும் இல்லை. இனிமேல் இந்த மாதிரி என் முன்னாடி வந்து நின்னு பேசுற வேலை வெச்சுக்காத,” என்று சொல்லிவிட்டு, “வா துர்கா,” என்று கூறி அவளை அழைத்துக்கொண்டு அங்கிருந்து சென்றான். ❤️

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured