EPISODE 12
காலையில் எழுந்ததும் ராகவ்வின் நினைவில் வந்தது ஓவியா இரவு அவனிடம் சொன்ன விஷயம் தான்.
“இப்போ வெளிய போனா எல்லாரும் கேக்குற கேள்விக்கு என்ன பதில் சொல்வேன்? நான் ஒரு போலீஸ் ஆபீசர். நான் எனக்கே இப்போ டஃப் கொடுக்கிறாளே என் பொண்டாட்டி,” என்று யோசித்தபடி அமர்ந்து இருந்தான்.
அப்போது அறைக்கதவைத் திறந்து கொண்டு கையில் காபி கப் உடன் உள்ளே வந்தாள் ஓவியா. சொக்கத் தங்கம் போல புது மஞ்சள் தாலியும் புடவையுமாக ஜொலித்து நின்றாள். இப்போது தாய்மையின் பூரிப்பும் சேர்ந்து இருக்க தங்க விக்ரகமாய் அவன் முன் வந்து காபி என்று நீட்டினாள்.
அவளிடம் இருந்து கப்பை வாங்கி மேஜையில் வைத்தவன், “திருட்டுக் கழுதை! இன்னிக்கு நீ ரொம்ப அழகா இருக்க டி,” என்று அவள் கையைப் பற்றி தன் பக்கம் இழுத்தான்.
“ஏய் என்ன டா பண்ற?” என்று அவனிடம் திமிர நினைத்தவள், ராகவ்வின் இந்த திடீர் அணைப்பு அவள் கோபத்தைக் காணாமல் போகச் செய்தது.
அவன் அணைப்புக்குள் அமைதியாக இருந்தவளைக் கண்டவன், “என் மேல இருந்த கோபம் போயிடுச்சா டி?” என்றான்.
“இல்ல,” என்று தலையை இடவலமாக ஆட்டினாள்.
“பரவாயில்லை, கொஞ்சம் கொஞ்சமா உன் கோபத்தைக் குறைச்சுக்கலாம்,” என்றான்.
“அது நீ என்கிட்டே நடந்துக்கிறதைப் பொறுத்து,” என்றாள்.
“உன் கோபத்தை எப்படி குறைக்கிறதுன்னு எனக்குத் தெரியும் டி,” என்றான்.
“எப்படி?” என்று ஓவியா கேட்டு முடிக்கும் முன், அவளைத் தன் பக்கம் திருப்பி இதழில் முத்தம் பதித்து இருந்தான்.
ஓவியா இதைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவள் விழிகள் படபடக்க ராகவ்வைப் பார்த்தாள். அவனோ கண்மூடி தீவிரமாக ஓவியாவுக்கு முத்தமிட்டுக் கொண்டு இருந்தான்.
அதற்கு மேல் அவளால் முடியவில்லை. ராகவ்வின் முத்தம் தீவிரமடைந்து இருக்க அதில் தன்னைத் தொலைத்தாள். நீண்ட நாள் கழித்து இருவரின் தீண்டல் இப்போது தான் முத்தத்தில் ஆரம்பித்து இருக்கிறது. அதை விட்டுக் கொடுக்க இருவருக்கும் மனம் வரவில்லை.
மெல்ல அவள் முகத்தைப் பிடித்து இருந்த ராகவ்வின் கைகள் மெல்லக் கீழே இறங்கி ஓவியாவின் கழுத்தை வருடிக்கொடுத்தது. அதில் அவள் உடல் கூச ஆரம்பித்தது. அடுத்து ராகவ்வின் கைகள் கழுத்தில் இருந்து கீழ் இறங்கி அவள் புடவைக்குள் சென்றது.
ராகவ்வின் கைகளைப் பிடித்துத் தடுக்க அவளுக்குத் தோன்றவில்லை. அவன் கைகள் அத்துமீறுவதை ஓவியாவின் உடலும் உள்ளமும் விரும்பி ஏற்றது.
அவன் கைகள் ஜாலங்கள் செய்து அவளைக் கிறங்கடித்தது. சிறு முனகல் ஒலி ராகவ் கொடுத்த முத்தத்தையும் மீறி ஒலிக்க, அவனை மேலும் கிறங்கடித்தது. மெல்ல ஓவியாவின் இதழை விடுத்தவன், “இதுக்கு மேல என்னால முடியாது டி,” என்றவன், “அன்னிக்கு என்ன நடந்துச்சுன்னு எனக்கு கொஞ்சமாவது ஞாபகம் இருந்தா கொஞ்ச நாளைக்கு அதை நினைச்சு சந்தோசப்பட்டிருப்பேன். எனக்குத் தான் எதுவுமே ஞாபகம் இல்லையே,” என்றான் சோகமாக.
“அது உன் தப்பு. நமக்குள்ள நடந்த விஷயம் ஒவ்வொரு நிமிஷமும் பொக்கிஷம் மாதிரி ஞாபகம் வெச்சிருக்க வேண்டியது. ஆனா உனக்கு அதுல கொடுப்பினை இல்லையே,” என்று நக்கலடித்தாள் ஓவியா.
“உனக்குக் கொழுப்பு டி. நக்கல் பண்ற நீ,” என்று மீண்டும் அவளை இழுத்து முத்தமிட்டவன், “முதல்ல ஹாஸ்பிடல் போகலாம். டாக்டர்கிட்டே நமக்குள்ள அதெல்லாம் எப்போன்னு கேட்டுட்டு அவர் மட்டும் சொல்லட்டும். அப்பறோம் இருக்கு டி உனக்கு,” என்று அழுத்தம் கூட்ட,
“ஷ்! டேய் காக்கி! மெதுவா டா,” என்றாள்.
“ஹப்பா! உன் வாயில் இருந்து இந்த வார்த்தையைக் கேட்டு எவ்வளவு நாள் ஆச்சு தெரியுமா?” என்றவன், “ரொம்ப அழுத்திட்டேனா?” என்று அழுத்திய இடத்தை மெல்லத் தடவினான்.
அவன் கையைத் தட்டி விட்டவள், “இது தான் சாக்குன்னு உன் வேலையை மறுபடி ஸ்டார்ட் பண்ணாத!” என்றவள், “சீக்கிரம் காபி குடிச்சிட்டு ரெடியாகி வா. இன்னிக்கு ஐயா வீட்டுக்கு காலையிலேயே டிபனுக்கு எல்லாரையும் வர சொல்லி இருக்கார். எல்லாரும் ரெடி. நீ மட்டும் தான் பாக்கி,” என்றாள்.
“CM சார் வீட்டுக்கா?” என்றான்.
“ம்ம் ஆமா,” என்றவள் தலையில் கட்டி இருந்த டவலைக் கழட்டி முடியை உலர்த்தினாள்.
அவளை ரசித்துக் கொண்டே காபியைக் குடித்து முடித்தவன், இறங்கி வந்து ஓவியாவைப் பின்னிருந்து அணைத்துக் கொண்டான்.
“ஹேய்! மெதுவா டா காக்கி. உன் புள்ளை என் வயித்துக்குள்ள இருக்கறதை மறந்துராத,” என்று தன் வயிற்றைத் தடவினாள்.
“ஹே ஹே சாரி டி சாரி! இதை யோசிக்கலை,” என்று அவளை விட்டு விலகி நின்று ஓவியாவை ஏக்கமாகப் பார்த்தான்.
ராகவ்வை அப்படி பார்க்கப் பாவமாக இருந்தது ஓவியாவுக்கு. ராகவ்வின் டி-ஷர்ட்டைப் பிடித்து இழுத்து அணைத்தவள், “மெதுவா கட்டிப்பிடிக்கலாம். இவ்ளோ வேகம் வேண்டாம்னு தான் சொன்னேன். கட்டிப் பிடிக்கவே கூடாதுன்னு சொல்லலையே,” என்று ராகவ் கன்னத்தில் முத்தம் கொடுத்தாள்.
“சரி டி. இனி கவனமா இருக்கேன்,” என்றான்.
“சரி குளிச்சிட்டு வா. நேரம் ஆகுது,” என்று அவனை விட்டுப் பிரிந்தவள், காபி கப்பை எடுத்துக் கொண்டு வெளியே சென்றாள்.
ஓவியாவையே பார்த்துக் கொண்டு நின்று இருந்தவன், “நல்ல வேலை வீட்ல யார்கிட்டேயும் இவ கர்ப்பமா இருக்கிறதைச் சொல்லலை போல. இந்த நேரம் வரை அதைப் பத்தி இவ பேசவே இல்லையே,” என்று யோசித்தவன், டவலை எடுத்துக் கொண்டு குளிக்கச் சென்றான்.
இங்கு இப்படி இருக்க அங்கே CM வீட்ல என்ன நடக்குதுன்னு பார்த்துடலாம் வாங்க.
இரவு முதல் இரவு அறைக்குள் வந்ததும் நேராக ட்ரெஸ்ஸிங் ரூம் சென்று உடைகளை மாற்றிவிட்டு கை இல்லாத பனியனும் ட்ராயரும் அணிந்து வந்தவள், கட்டிலில் அவனுக்கு முதுகு காட்டிப் படுத்துக் கொண்டாள்.
அவளைப் பெருமூச்சோடு பார்த்தவன், போர்வையை எடுத்துக் கொண்டு சோபாவில் போய்ப் படுத்துக் கொண்டான்.
விடிந்ததும் வேலு நேரமே எழுந்து ஜோக்கிங் செல்லத் தயாராகி இருந்தான். கட்டிலில் முழுவதும் போர்த்திக் கொண்டு படுத்திருந்தவளைப் பார்த்தான். “CM பொண்ணு இல்ல. சூரியனை நேரத்துல பார்த்துப் பழக்கம் இல்ல போல,” என்று நினைத்தவன், கிளம்பி இருந்தான் ஜாக்கிங் செல்ல.
இவர்களுக்குள் நடக்கும் வாக்குவாதம், சண்டை மட்டும் இல்லாமல் அளவுகடந்த ரொமான்ஸும் இருக்கிறது. அதை இன்னொரு கதையாக எழுதப் போகிறேன். என்ன செய்யட்டும்? இராக்கதன் PART-2-ல ராக்கி-ரதி ரொமான்ஸ் பார்ப்போம். ராகவ்-ஓவியா ரொமான்ஸும் இதுல இருக்கு. அதோட இவங்க ரெண்டு பேரோட கதையை எழுத ஏனோ எனக்குத் தோன்றலை.
இவங்க கதையைச் சேர்த்து எழுதவா? இல்லை வேலு-திகழினி சூப்பர் ரொமான்ஸ் ஸ்டோரியைத் தனியா எழுதவா? நீங்க பண்ற கமெண்ட்டில் தான் முடிவு பண்ணனும்.
அனைவரும் CM வீட்டில் சரியாக மார்னிங் டிபன் நேரத்துக்கு ஆஜர் ஆகி இருந்தனர்.
எல்லோரையும் பார்த்ததில் சிவராஜனுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. தன் இரு மகள்களுக்கும் ஒரு நல்ல வாழ்க்கை அமைந்ததை நினைத்து சந்தோசப்பட்டார்.
தன் வாரிசுகள் மூன்று பேரும் குடும்பமாக இருப்பதைப் பார்த்தவர், “செல்வி, எனக்கு இப்போ தான் நிம்மதியா இருக்கு. இத்தனை நாளா இவங்களை எல்லாம் எப்படி ஒன்னு சேர்க்கப் போறேன்? இவங்க மூணு பேரையும் என் வாரிசுன்னு எப்போ ஊர் அறிய சொல்லப் போறேன்னு தவிச்சிட்டு இருந்தேன். ஆனா இன்னிக்கு எல்லாம் சரி ஆகி இவங்க என் முன்னாடி ஒண்ணா நிக்குறது எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு,” என்றார்.
“அந்த சந்தோஷத்தோட சேர்த்து இன்னோரு சந்தோசமான விஷயமும் சொல்றேன். அதைக் கேட்டு இன்னும் சந்தோசப்படுங்க ஐயா,” என்றாள் ஓவியா.
“நீ இன்னும் என்ன டி அவரை ஐயான்னு கூப்பிட்டுட்டு இருக்க? ஒழுங்கா அப்பான்னு கூப்பிடு,” என்று செல்வி அதட்ட, “சரிம்மா இனி கூப்பிடல,” என்றவள் அவள் அருகில் நின்று இருந்த ராகவ் கையைப் பிடித்து அவனைப் பார்த்தாள்.
“அடிப்பாவி! காலையில் என் வீட்ல யார்கிட்டேயும் நீ கர்ப்பமா இருக்குற விஷயத்தைச் சொல்லாம இருந்ததும் என் மேல இருக்க அக்கறையில, எனக்கு யார்கிட்டேயும் திட்டு விழக் கூடாது, என்னை யாரும் தப்பு நினைக்க கூடாதுன்னு நினைச்சு மறைச்சிட்டேன்னு நினைச்சேன். ஆனா இப்படி ஒட்டு மொத்த குடும்பம் முன்னாடியும் என்னைப் போட்டுக் கொடுத்து மொத்த பேரும் என்னை தூக்கிப் போட்டு மிதிக்குறதைப் பார்க்க வேலை பண்ணிட்டியே டி,” என்றான் அவளுக்கு மட்டும் கேட்கும் படி.
“என்ன ஓவியா? என்ன சந்தோசமான விஷயம்? சீக்கிரம் சொல்லு. அப்பா நீ சொல்றதைக் கேக்க ஆர்வமா இருக்காரு,” என்றான் ராக்கி.
“சொல்றேன் அண்ணா,” என்றவள், “நானும் ராகவ்வும் அப்பா-அம்மா ஆகப் போறோம். நீ மாமா ஆகிட்ட அண்ணா,” என்றாள் சந்தோசமாக.
அவள் சொல்வதைக் கேட்டதும், “அக்கா! நேத்து தான் இவங்களுக்கு முதல் ராத்திரி நடந்துச்சு. அதுக்குள்ள எப்படி ஓவியா முழுகாம இருக்கா? எனக்குப் புரியலையே,” என்றார் மெதுவாக.
“எனக்கும் அது தான் டி தெரியலை. குழப்பமா இருக்கு,” என்றார் சோபனா. அவர் மட்டும் இல்லை, அங்கிருந்த மற்றவர்களும் அதே நிலையில் தான் இருந்தனர்.
