Home Uncategorizedஉன் ரகசிய ரசிகை நான் 62

உன் ரகசிய ரசிகை நான் 62

by Layas Tamil Novel
527 views

ஆதி பேசிவிட்டுச் சென்றதை எல்லாம் கேட்டவள் அவனிடம் எதுவும் பேசாமல் அப்படியே உறைந்து போய் நின்றிருந்தாள்.

“உன்னை எனக்காக ஏங்க வைத்து… உன்னை எடுத்துக்கொள்வேன்” என்று அவன் சொன்னது தொடர்ந்து அவள் காதில் கேட்டுக்கொண்டே இருக்க…

இப்போது கூட தன்னையும், தன் காதலைப் புரிந்து கொள்ளாமல் பேசும் ஆதியை நினைத்து நொந்து போனாள் துர்கா…

எப்போதும் தனக்கான காதல் ஆதியிடம் இருந்து தனக்குக் கிடைக்கவே கிடைக்காதா….

ஆதி என்னிடம் காட்டும் அன்பும், பரிவும் என் மீது இருக்கும் காதலில் வந்தது இல்லையா…

என்னை என்னவென்று நினைத்து இந்தச் சில நாட்களாக அவன் என்னிடம் மிகவும் அக்கறை இருப்பவன் போல நடந்து கொண்டான்…

நானும் அவன் செயலை நம்பி அவன் சொல்வதற்கெல்லாம் இணங்கிப் போய்க் கொண்டு இருந்திருக்கிறேனே!

எவ்வளவு மடத்தனம் செய்து கொண்டு இருக்கிறேன். அவன் என் கணவனாகவே இருந்தாலும் என் மீது துளியும் காதல் இல்லாமல்… வெறும் காமத்திற்காக மட்டும் என்னை நாடும் ஒருவனிடம் தன்னை இழந்து விடக்கூடாது என்று நினைத்தவள்.

இனியும் அவன் என்ன செய்தாலும் அமைதியாக இருந்து விடக்கூடாது… என் மீது காதல் இல்லாத ஒருவனுடம் நான் என் பெண்மையை இழக்க விரும்பவில்லை…. இனி அவனிடம் இருந்து ஒதுங்கியே இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள்.


பாத்ரூம் சென்று குளித்துவிட்டு வந்த ஆதி துர்கா இன்னும் அதே இடத்தில் சிலை போல நின்று இருப்பதைப் பார்த்தவன் அவள் அருகில் வந்து துர்காவின் முகத்திற்கு எதிரே தன் கைகளை ஆட்டி… “துர்கா….” என்று அழைத்தான்.

அவள் ஏதோ யோசனையில் நின்றிருந்தாள். அவளைப் புரியாமல் பார்த்த ஆதி ஈரத்தில் தொப்பலாக நனைந்து ஏசி அறையின் குளிரும் சேர்ந்து அவள் உடல் நடுங்கிக் கொண்டு இருக்க… தான் போர்த்திவிட்டுப் போன சேலையைக்கூட சரி செய்து கொள்ளாமல் அப்படியே நின்றிருந்தவளை அப்போது தான் நன்றாகப் பார்த்தான்.

அவள் கண்களில் இருந்து கண்ணீர் மட்டும் வழிந்து கொண்டே இருக்க… எதையோ தீவிரமாக யோசித்துக்கொண்டு நின்றிருந்தாள்.

அதைப் பார்த்ததும் ஆதிக்கு ஏனோ மனம் கனத்துப் போனது… இருந்தும், தன்னைப் புரியாமல் வெறும். உடல் இச்சைக்காகத் தான் நான் அவளிடம் அப்படி நடந்து கொண்டேன் என்று தவறாக நினைத்து விட்டாளே என்று மிகவும் வருத்தப்பட்டான்.

“இந்த எண்ணத்தை நான் அவள் மனதில் இருந்து முதலில் தூக்கி எறிய வேண்டும். தன்னைப் புரிந்துகொள்ள அவளுக்குச் சிறிது காலம் தேவைப்படும்.”

“இந்த நிலையில் நான் அவளுடனே இருந்தாள் அவளுக்கு என் மேல் மேலும் வெறுப்புத் தான் உண்டாகும். சிறிது நாள் நான் அவளை விட்டு விலகி இருந்தால்தான் அவளை நானும், என்னை அவளும் புரிந்து கொள்ள ஒரு வாய்ப்பு உருவாகும்.”

“அந்தப் பிரிவுதான் என் மனதில் என்ன இருக்கிறது என்று என்னை நானே புரிந்து கொள்ள ஒரு வாய்ப்பாக அமையும்” என்று நினைத்தவன்.

துர்காவின் தோளைத் தொட்டு உலுக்கி “துர்கா…” என்று அழைத்தான். அவன் உலுக்கியத்தில் நினைவுக்கு வந்தவள் தன் தோள்களைப் பிடித்துக்கொண்டு தனக்கு எதிரே நின்று இருக்கும் ஆதியைப் பார்த்தவள். அவன் கைகளை உடனே தட்டி விட்டு “என்ன” என்பது போல அவனைப் பார்க்க…

“நீ என் மீது இவ்வளவு வெறுப்பைக் காட்டுவதற்குக் காரணம் என்ன என்பதை நான் புரிந்து கொண்டேன். இனியும் நான் உனக்குத் தொந்தரவு கொடுக்க விரும்பவில்லை…”

“உன்னை வலுக்கட்டாயமாக எனக்குத் திருமணம் செய்து வைத்து விட்ட என் பெற்றோருக்காக நான் உன்னிடம் மன்னிப்புக் கேட்கிறேன்.”

“நம்முடைய இத்தனை வருட நட்பில் நான் உன் மீது வைத்திருந்த அதே அன்பு இன்னமும் என் மனதில் அப்படியே இருக்கிறது துர்கா…”

“அதை நான் இந்தக் கல்யாணம் என்ற பந்தத்தால் உடைக்க விரும்பவில்லை. உன்மீது இருக்கும் உரிமையில் தான் நான் உன்னிடம் இப்படி நடந்து கொண்டேனே ஒழிய உன் உடலுக்காக நான் உன்னை நெருங்கவில்லை.”

“இதை நீ புரிந்து கொள்… என் நட்பு எவ்வளவு உண்மையோ… அதே போல நான் இப்போது உன்னிடம் காட்டும் அன்பும் உண்மையே… இதை நீ புரிந்துகொள்ள நான் உனக்கு நேரம் கொடுக்காமல் என் இஷ்டத்திற்கு நான் உன்னிடம் நடந்துகொண்டேன்.”

“உனக்குப் புரிந்து இருக்கும் என்று நான் நினைத்து உன்னிடம் உரிமை எடுத்துக் கொண்டது தான் நான் செய்த மிகப்பெரிய தவறு…”

“அதற்காகத் தண்டனையாக நீ என்னைக் கேட்ட கேள்விகளை நான் நினைத்துக் கொள்கிறேன்.”

“நான் உன்னை பலாத்காரம் செய்ததாக நீ சொன்னது என்னைக் கோபப்படுத்திவிட்டது… அதனால் தான் நான் உன்னிடம் சற்று கடுமையாக நடந்து கொண்டேன். அதற்காக நான் உன்னிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து ட்ரெஸ்ஸிங் ரூமிற்குச் சென்றுவிட்டான்.

இவ்வளவு நேரம் ஆதி பேசியதை எல்லாம் கேட்டுக்கொண்டு நின்றிருந்த துர்காவுக்கு அவன் கடைசியில் தான் நடந்து கொண்ட செயலுக்காகத் தன்னிடம் மன்னிப்பு கேட்டுவிட்டுச் செல்பவனை கண்களில் வலி நிறைந்து பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள்.

அப்படியே பாத்ரூம் சென்றவள் ஷவரைத் திருகி விட்டு அதன் கீழே நின்றவள்… “ஆதி…” என்று சத்தமாகக் கத்தி அப்படியே தரையில் அமர்ந்து அழ ஆரம்பித்தாள்.

“நீ என்னிடம் காட்டிய அன்பு உண்மை தான் ஆதி. நான் தான் எதையும் புரிந்து கொள்ளாமல் உன்னைத் தவறாகப் பேசி விட்டேன்..”

“என்னிடம் நீ உரிமையைக் காட்டிய போதெல்லாம் எனக்கு எது உண்மை எது பொய் என்று தெரியாமல் உன்னை என்னிடம் இருந்து தெரிந்தே விலக்கி வைத்துவிட்டேன் ஆதி…”

“உனக்கு என் மீது காமம் மட்டுமே இருக்கிறது என்று உன்னை.. இல்லை இல்லை… என் ஆதியை நானே தவறாக நினைத்துவிட்டேனே…” என்று தலையில் அடித்துக்கொண்டு அழுதாள்.


ட்ரெஸ்ஸிங் ரூமில் இருந்து உடை மாற்றிக்கொண்டு வெளியே வந்த ஆதி துர்காவைத் தேட, பாத்ரூமில் தண்ணீர் விழும் சத்தம் கேட்டது… அதை விட அவள் கதறி அழும் சத்தம் வெளியே கேட்க..

வேகமாக பாத்ரூம் கதவு அருகே சென்றவன் கதவைத் தட்ட நினைத்து உயர்த்திய தன் கைகளைக் கடினப்பட்டு தடுத்து நிறுத்தியவன்.

துர்கா தன்னைப் வெறுத்துத் தான் அழுகிறாளோ… தான் அவளிடம் நடந்து கொண்டதை நினைத்து அழுகிறாளோ.. என்று நினைத்தவன் தன்னைத் தானே நொந்து கொண்டு “ஒரு பெண்ணை இவ்வளவு நொந்து அழும் அளவுக்கு அவளிடம் நடந்து கொண்டு இருக்கிறாயே நீ எல்லாம் ஒரு ஆண்மகனா?” என்று அவனையே அவன் கேட்டுக்கொண்டவன்.

துர்காவை மேலும் தொந்தரவு செய்ய மனம் இல்லாமல் அங்கிருந்து வெளியேறினான்.


சங்கவியின் வீட்டில் காலை உணவு சாப்பிட்டுக்கொண்டு இருந்த வேதாச்சலம் சிவகாமியிடம் “ஏய்… சங்கவி சாப்பிட வரலையா.. ஏன் இன்னும் சாப்பிடாமல் இருக்கிறாள்” என்று கேட்டார்.

“நான் போய் அவளைச் சாப்பிட கூப்பிட்டேன்.. ‘எனக்கு இப்போ எதுவும் வேண்டாம் நீ போய்ப் உன் வேலையைப் பாரு’ என்று உங்க பொண்ணு உங்களை மாதிரியே எரிஞ்சு விழுந்து… என்னைத் துரத்தி விட்டுட்டா…” என்றார் சிவகாமி.

அவரை முறைத்தவர் “நீ கொஞ்சமாவது அவளிடம் நல்லா நடந்துகிட்டா தானே அவளும் உன்கிட்ட சந்தோஷமா பேசுவா.. அதை விட்டுட்டு அட்வைஸ் பண்றேன் அதை பன்றேன்னு சொல்லிட்டு அவகிட்ட போனா… அவளுக்கு எப்படி உன்கிட்ட நல்லா நடந்துக்க தோணும்” என்றார்.

அவர் அப்படிச் சொன்னதும் “எந்த அம்மாவும் தன் பிள்ளை நல்லா இருக்கனும்… நல்லா வாழணும்னு தான் நினைப்பாங்க… அவளுக்கு நல்லது சொல்லிக் கொடுத்து மத்தவங்களுக்குக் கெடுதல் செய்யாம இருக்க சொல்லி கொடுக்கிறது ஒன்னும் தப்பில்லை.”

“இதை எல்லாம் கேட்டா… உங்க பொண்ணுக்கு உங்களை மாதிரியே அலர்ஜி போல… அதனால தான் உங்க பொண்ணும் உங்களைப் போலவே நல்லது… அப்படின்னு வார்த்தையைக் கேட்டாலே கடுப்பாகுறா… போல” என்று அவர் நேரடியாக வேதாசலத்தையும் வார…

“ஏய்… என்னடீ.. சொன்ன…” என்று சாப்பிட்டுக் கொண்டு இருந்தவர் சேரில் இருந்து எழுந்து செல்லப் போக…

அப்போது.. “தங்கச்சி…” என்று அழைத்துக்கொண்டு ஒரு குரல் அவர்கள் அருகில் கேட்க… இந்தக் குரல் பழக்கப்பட்ட குரலாக இருக்கிறதே… என்று வேதாசலம் திரும்பிப் பார்க்க…

“அண்ணே…” என்று சிவகாமி ஓடிச் சென்று உள்ளே வந்து கொண்டு இருந்த அவர் கூடப் பிறந்த தன் அண்ணனை “வாருங்கள் உள்ளே வாருங்கள் அண்ணா” என்று அழைத்துக் கொண்டே… “ஏங்க… இங்க பாருங்க எங்க அண்ணா… வந்திருக்காரு” என்று கூறிக்கொண்டே வேதாசலத்தை அழைக்க…

அவரும் சிவகாமியின் அண்ணனைப் பார்த்ததும் சந்தோசமாக … “வா.. முத்து.. நல்லா இருக்கியா… ஊர்ல எல்லாரும் சௌக்கியமா…” என்று கனிவாகப் பேசினார்.

சிவகாமியைத் திருமணம் செய்து கொண்ட பிறகு ஏற்பட்ட உறவு என்றாலும். முத்துவிற்கும் வேதாசலத்திற்கும் இடையே சுமுகமான உறவு போய்க்கொண்டு இருக்கிறது.

ஒருவர் மீது ஒருவர் மதிப்பும் மரியாதையும் வைத்து இருக்கின்றனர். தனது கோபம், குரோதம் எல்லாம் முத்துவிடம் என்றும் காட்டிக்கொள்ள மாட்டார் வேதாச்சலம்.

உண்மையைச் சொல்லப் போனால் சிவகாமியை விட உண்மையாக முத்துவிடம் நடந்து கொள்வார் வேதாச்சலம். முத்துவை விட இரண்டு வயது சிறியவர் என்பதாலும் அவரின் வயதிற்கும் மதிப்பு கொடுத்துப் பழகுவார்.

முத்துவை வரவேற்றவர் “கைகழுவி விட்டு வா.. முத்து சாப்பிடலாம்” என்று சொல்லி அவரைச் சாப்பிட அழைத்துச் சென்றார் வேதாச்சலம்.

இருவரும் அமர்ந்து சாப்பிட… சிவகாமி இருவருக்கும் உணவு பரிமாறினார். முத்து சாப்பிட்டுக்கொண்டே…. “என் தங்கச்சி கைப்பக்குவமே கைப்பக்குவம் தான்… எவ்வளவு நாள் ஆச்சு உன் கையால் சாப்பிட்டு…டேய் வேதா… நீ கொடுத்து வெச்சவன் டா… என் தங்கச்சியைக் கல்யாணம் பண்ணிட்டு மூணு வேளையும் நல்லா ருசியா.. சாப்பிடுற…” என்றார் முத்து.

அதைக் கேட்டுச் சிரித்த வேதாச்சலம் “பொண்ணு பாக்க வர்றப்ப உன் தங்கச்சி செஞ்ச பலகாரத்தை எல்லாம் சாப்பிட்டுத் தான் உன் தங்கச்சியைக் கல்யாணம் பண்ணிக்கணும்னு நான் முடிவு பண்ணுனேன். அப்ப நான் கொடுத்து வச்சிருக்கேன் தானே” என்று வேதாச்சலம் சொல்ல….

“அது என்னவோ சரிதான்…. பொண்ணு பாக்க வந்துட்டுப் பொண்ணப் பாக்காம செஞ்சு வச்ச பலகாரம் மொத்தமும் சாப்பிட்டுட்டு…. ‘பொண்ணு புடிச்சிருக்குன்னு’ சொல்லிட்டு போனவன் தானே நீ” என்று முத்து வேதாச்சலத்தை வார…

“டேய் ரொம்ப வராதடா…. அப்புறம் ஊர்ல இருக்குற என் தங்கச்சிக்குப் போன் போட்டு ‘நீ என் பொண்டாட்டி சமையல் நல்லாவே இல்ல…. என் தங்கச்சியோட சமையல் தான் நல்லா இருக்குன்னு இங்க சொல்லிட்டு இருக்கேன்னு’ சொல்லிடுவேன்” என்று வேதாச்சலம் முத்துவிடம் சொல்ல.

“ஐயோ….. அது மட்டும் பண்ணிடாதடா அப்பறம் நான் ஊருக்குப் போனா எனக்குக் கிடைக்கிற அந்த மூணு வேலை கஞ்சியும் கிடைக்காமல் போய்விடும்…” என்று முத்து பயப்படுவது போல நடிக்க.

இவர்கள் இருவரும் இப்படிச் சகஜமாகப் பேசிக் கொள்வதைப் பார்த்த சிவகாமி ஊரில் உள்ள அனைவரிடமும் பகைத்துக்கொள்ளும் தன் கணவன், அனைவருக்கும் கெடுதல் நினைக்கும் தன் கணவன், தன் அண்ணனிடம் மட்டும் அந்த முகத்தைக் காட்டாமல் நல்லவனாக இருப்பதை நினைத்து சந்தோஷப்பட்டுக் கொண்டார்.

இருவரும் பேசிக் கொண்டு சாப்பிட்டு முடித்துவிட்டு வந்து ஹாலில் அமர்ந்தவர்கள் சிறிது நேரம் பேசிக் கொண்டிருக்க….. வேதாச்சலம் “அப்புறம் சொல்லுடா முத்து…. என்ன திடீர்னு இந்த பக்கம் வந்திருக்கிற….. உன்னை ஊருக்கு வாடான்னு கூப்பிட்டா கூட நீ….. இந்த பக்கம் வரவே மாட்டியே…”

“உன் தங்கச்சி எவ்வளவு தடவ உன்ன இங்க வரச் சொல்லி கூப்பிட்டு இருக்கா…. அதுவும் இப்போ நீ மட்டும் தனியா வந்திருக்க. தங்கச்சி, பையன் எல்லாம் கூப்பிடாமல்” என்று கேட்டார் வேதாச்சலம்.

“பொண்ணைக் கட்டி கொடுத்துட்டு இந்த வீட்டுக்குச் சும்மா சும்மா வர்றது என்னடா பழக்கம் அது…. எனக்கு அதெல்லாம் சுட்டுப் போட்டாலும் வராது…. சும்மா சும்மா…. இங்க வந்து கடைசில நமக்குள்ள இருக்க உறவு கசந்து போய்விடும் எப்பவுமே எட்ட இருந்துப் பழகிக்கிறது தான் எந்த உறவுக்குமே நல்லது ரொம்ப நெருங்கிப் போகக்கூடாது” என்று முத்து சொல்ல.

“ஏண்டா இந்த காலத்திலும் நீ இன்னும் மாறாமல் இப்படியேவா இருக்க…. இங்க வந்துப் பாரு ஒவ்வொருத்தரோட பழக்க வழக்கமெல்லாம் எப்படின்னு சொல்லிட்டு…. இன்னும் அந்தக் காலத்து ஆள் மாதிரியே பேசிட்டு இருக்கியே முத்து…”

“அந்தக் கிராமத்துல இருந்து எப்பத்தான் இந்த சிட்டிக்கு நீ வரப்போற. நானும் உன்னை எத்தனை தடவை இங்கேயே வந்துடுடானு சொல்லி கூப்பிட்டேன் நீ வரவே மாட்டேங்குறியே” என்று கேட்டார் வேதாச்சலம்.

“அது என்னவோ தெரியல டா என் பொறந்த மண்ணை விட்டுட்டு வரதுக்கு எனக்கு மனசு வரமாட்டேங்குது…. இந்த ஊர் பழக்க வழக்கம் இந்த ஊரு காத்து எனக்குப் பிடிக்கலடா…. எனக்கு எங்க ஊர்ல இருக்குற அமைதி தான் ரொம்ப பிடிச்சிருக்கு” என்று சொன்னார் முத்து.

“சரி நான் என்ன சொன்னாலும் நீ கேக்க போறதில்ல உன்கிட்ட சொல்லியும் பிரயோஜனமும் இல்ல…. சரி சொல்லு உன் பையன் சந்தோஷ் எப்படி இருக்கான்? நல்லா இருக்கானா?”

“அவன் படிப்பு எல்லாம் முடிச்சுட்டு டில்லியில் ஒரு நல்ல கம்பெனியில் வேலை பார்த்துட்டு இருக்கிறதா ஒரு தடவை போன் பண்ணி சொன்னான்…. அவ்வளவுதான் அதுக்கப்புறம் உன் பையனைக் கண்ணிலேயே காட்டல அப்படி என்னடா எங்க கிட்ட கூடக் காட்டாம வளர்த்து வச்சிட்டு இருக்க உன் பையன” என்று வேதாச்சலம் கிண்டல் செய்ய….

“டேய் அப்படி எல்லாம் ஒன்னும் இல்லடா அவனுக்குப் படிப்பு படிப்பு படிப்பு…. மட்டுமமேன்னு இருந்துட்டான். படிச்ச கையோட அவனுக்கு வேலை கிடைச்சுச்சு … உடனே டெல்லி கிளம்பிட்டான்.”

“அங்க வேலைக்குப் போனவன் தான் இன்னும் எங்களைப் பாக்கவே வரல. அவன் போய்ப் ஒரு வருஷம் ஆகப்போகுது. நாளைக்குத் தான் வரப்போறான் அவனை கூப்பிடுறதுக்காகத் தான் நான் இங்க வந்து இருக்கேன். இங்கிருந்து அவனை கூட்டிட்டு ஊருக்குப் போறதா இருக்கேன்” என்று முத்து சொல்ல….

“அதானே பார்த்தேன் நீ சும்மா எல்லாம் இங்க வருவியா உன் பையனுக்குப் பையன கூப்பிடுறதுக்காகத் தான் நீ சென்னை வந்திருக்க… எங்கள் பார்க்குறதுக்காகவும் உன் தங்கச்சியைப் பார்க்கிறதுக்காகவோ…. நீ இங்கே வரல அப்படித்தானே…” என்று வேதாச்சலம் கோபித்துக் கொள்ள.

“டேய் வேதா இப்ப எதுக்குடா கோவிச்சுக்கற. என் பையனப் பாக்கறதுக்கு மட்டும் வருவதாக இருந்தால் நான் நாளைக்கு வந்து அவனை கூட்டிட்டு அப்படியே போயிருக்க மாட்டேனா. எதுக்கு ஒரு நாள் முன்னமே இங்கு வந்தேன்.”

“உங்கள எல்லாம் பார்த்துப் பேசிட்டுப் போலாம்னு தானடா வந்தேன்” என்று கூற…. “சரி சரி…. ஏதோ சொல்லிச் சமாளிக்காத. நீ போய்ப் ரெஸ்ட் எடு எனக்கு ஆஃபீஸ்க்கு டைம் ஆச்சு நான் போயிட்டு வந்துட்டு அதுக்கப்புறம் உன்னைப் பேசிக்கிறேன்” என்று சொல்லிவிட்டுச் சிவகாமியிடம் கூறிவிட்டு கிளம்பிச் சென்றார் வேதாச்சலம்.


அழுது அழுது ஓய்ந்த துர்கா ஆதியைத் தான் தவறாக நினைத்துவிட்டதை எண்ணித் தன்னையே நொந்து கொண்டாள்.

அவனிடம் எப்படியாவது மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று நினைத்தவள் ஆதி தன்னை எவ்வளவு அவமானப் படுத்தினாலும் பரவாயில்லை அவனிடம் மனது விட்டுப் பேசித் தன் காதலை அவனிடம் சொல்லிவிட வேண்டும் என்று நினைத்தாள்.

துர்கா குளித்துவிட்டு வெளியே வந்தவள் ஆதி அங்கு இல்லாதது கண்டு வருத்தம் அடைந்தாள். ட்ரெஸ்ஸிங் ரூம் சென்று உடை மாற்றிவிட்டு ஆதியுடன் ஆஃபீஸ் போகலாம் என்று அவசர அவசரமாகக் கீழே இறங்கி வர..

டைனிங் டேபிளில் அனைவருடனும் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டு இருந்தான். துர்கா வருவதைப் பார்த்த செண்பகம் “வாம்மா… நீயும் வந்து சாப்பிடு” என்று கூறியவர். “எங்கேயும் வெளியே போறியாமா..” என்று அவள் அணிந்திருந்த உடையைப் பார்த்துக் கேட்க…

அப்போது தான் துர்காவை நிமிர்ந்து பார்த்த ஆதி அவள் பிளாக் ஜீன்ஸையும், ப்ளூ டீ ஷர்ட்டையும் போட்டுக்கொண்டு லேசாக ஒப்பனையுடன் முடியை ஒன்று சேர்த்து கொண்டை போட்டிருந்தாள்.

பார்ப்பதற்குக் காலேஜ் பெண் போல் இருந்தவளைப் பார்த்தவன் விழி இமைக்காமல் அவளையே பார்க்க… துர்கா செண்பகத்திடம் பேசிக்கொண்டே இறங்கியவள் ஆதியை ஒரக் கண்ணால் பார்த்துக்கொண்டே வந்தவள். “நான் ஆதியுடன் ஆஃபீஸ் போறேன் அம்மா” என்றால்.

“என்னமா சொல்றே” என்று செண்பகம் ஆச்சர்யமாகக் கேட்க…. “ஆமா செண்பகம் என் மருமகள் என் பயனுக்கு பர்சனல் அசிஸ்டன்டா.. அவன் ஆஃபீஸ்ல கிட்டத் தட்ட ஆறு வருஷமா வேலை செஞ்சுட்டு இருக்கா…” என்று சொல்லிக்கொண்டே வந்த விசாலாட்சி…

துர்காவைப் பார்த்து “நீ கொஞ்ச நாளைக்கு ஆஃபீஸ் போக வேண்டாம்மா…” என்றார். “ஏன் அத்தை” என்று துர்கா அவரைப் புரியாமல் பார்க்க..

“உனக்கு விஷயம் தெரியாதாமா… ஆதி டென்மார்க் போறான்மா.. அங்கே இருக்க நம்மோட ஆஃபீஸ்ல நேற்று இரவு தீ பிடித்து விட்டது…”

“நேற்றே… அவரும் ஆதியும் செல்வதாக இருந்தது… நான்தான் ஊரில் இருந்து வந்ததும் வராததுமாய் உடனே கிளம்பினால் நன்றாக இருக்காது காலை போய்க் கொள்ளலாம் என்று சொல்லி அவர்கள் இருவரையும் இருக்க வைத்துவிட்டேன்” என்றார்.

இதைக் கேட்ட அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சியாக வெங்கடாச்சலத்தையும், ஆதியையும் பார்க்க அனைவர் முகத்தையும் பார்த்த வெங்கடாச்சலம் “எதுக்கு எல்லாரும் இவ்ளோ அதிர்ச்சியா இருக்கீங்க… அப்படி ஒன்னும் பெரிய விஷயம் நடந்துடலை.”

“எல்லாமே இன்சூர் பண்ணி இருக்கோம் நமக்கு எந்த லாசும் கிடையாது… நம்ம ஃபேக்டரில ஒரு பகுதி தான் எரிஞ்சு போய் இருக்கு… தீ எரிய ஆரம்பித்து கொஞ்ச நேரத்திற்குள்ளேயே அனைத்த விட்டார்கள்.”

“அது நம்ம மெயின் ஸ்டோரேஜ் பகுதி என்பதால் தான் நாங்கள் இருவரும் செல்ல வேண்டி இருக்கிறது மற்றபடி ஒன்றும் இல்லை…

ஆதி மட்டுமே போய்டு வருகிறேன் என்னை வேண்டாம் என்று தான் சொன்னான். நான் தான் வலுக்கட்டாயமாக அவனுடன் செல்கிறேன். அவன் தனியாக அங்கே போய் எவ்வளவு நாட்கள் இருக்க வேண்டும் என்று சரியாகத் தெரியாது… அவன் மட்டும் தனியாகச் சிரமப்பட வேண்டாம் என்று தான் நான் கூடச் செல்கிறேன்” என்றார்.

ஆதி டென்மார்க் செல்கிறான் என்றதும் துர்காவுக்கு முகம் சிறுத்துவிட்டது. அவனிடம் பேசி மன்னிப்புக் கேட்கலாம் என்று நினைத்து இருந்தவள். இப்போது அவன் தன்னை விட்டு நீண்ட தூரம் செல்கிறான் என்றதும் அவள் மனம் படும் வேதனையைச் சொல்லி மாளாது…

இனி எப்போது ஆதி இந்தியா வருவது தான் எப்படி அவனிடம் பேசி என்னுடைய காதலைப் புரியவைப்பது என்று அவளுக்குப் புரியவில்லை…

அவன் செல்கிறான் என்றதுமே கண்களில் கண்ணீர் இப்பவோ அப்பவோ… என்று இருக்க யாருக்கும் தெரியாமல் துடைத்தவள் அனைவர்க்கும் உணவு மாற்றிக் கொண்டு இருக்க….

டைனிங் டேபிளைச் சுற்றி சுற்றி… அனைவர்க்கும் வேண்டியதை எடுத்துக் வைத்துக் கொண்டு இருந்த துர்காவை யாருக்கும் தெரியாமல் பார்த்துக் கொண்டு சாப்பிட்டான் ஆதி.

ஒரு முறையாவது தன்னைப் பார்க்க மாட்டாளா என்று அவள் பார்வைக்காக ஏங்கினான் ஆதி. ஆனால் அவன் அருகில் வந்து அவனுக்கு உணவு பரிமாறிவிட்டு கடந்து சென்றாலே ஒழிய மறந்தும் அவனைப் பார்க்கவே இல்லை.

இது ஆதிக்குச் சற்று ஏமாற்றமாகத் தான் இருந்தது அனைவரும் சாப்பிட்டு முடிக்கவும் ஆதிக்கும், வெங்கடாச்சலமும் கிளம்பத் தயாராக…

துர்காவை அழைத்து விசாலாட்சி “துர்கா நீ ஆதி வரும் வரைக்கும் இங்கயே இருந்திடும்மா… அங்கே போனால் நீ தனியா தான் இருக்கணும்… இங்கே ராதா.. ஷிவு… நாங்க எல்லாம் இருக்கோம் இல்லையா..” என்று சொல்ல.

அவளும் மறுப்பு ஏதும் சொல்லாமல் “சரி” என்று தலையை ஆட்டினாள்.

அனைவரும் சேர்ந்து ஆதியையும், வெங்கடாச்சலத்தையும் வழி அனுப்ப… அனைவரும் வாசல் வரை வர… இப்போதும் துர்கா ஆதியைப் பார்க்காமல் தலை குனிந்த படி நின்று இருக்க… ஆதிக்குத் தான் இதயம் மிகவும் கனத்துப் போனது… தன்னைப் பிரிகிறோம் என்றால் வருத்தம் துளியும் துர்காவுக்கு இல்லையோ… என்று நினைத்துக் கொண்டான்.

வெங்கடாச்சலம் முதலில் காரில் ஏற அவருக்குக் கதவு சாற்றி விட்டு மறுபுறம் ஆதி வர துர்காவின் இதயம் மிகவும் படபடப்பாக இருந்தது… தன்னை விட்டுத் தன் உயிர்.. போவது போன்ற ஒரு உணர்வு…

அவள் இதயம் வேகமாகத் துடிக்க… ஆதி தன்னை விட்டுச் செல்கிறான் என்று பதட்டம் அவளுக்கு அதிகமாக கார் ஸ்டார்ட் செய்யும் சத்தம் கேட்டதும் “ஆதி… என்னிடம் சொல்லாமலேயே கிளம்பி விட்டாயா?” என்று அவசரமாகத் தலையை உயர்த்த… காரின் அருகில் நின்று கொண்டு துர்காவையே பார்த்துக்கொண்டு நின்று இருந்தான் ஆதி.

துர்கா தன்னை நிமிர்ந்து பார்த்ததும் அவளுக்காகவே காத்திருந்தவன் போல… துர்காவைப் பார்த்து “போய் வருகிறேன்” என்று தலை அசைத்துவிட்டு காரில் ஏறிச் சென்றான்.

அவன் வாசல் தாண்டிச் செல்லும் வரை அங்கேயே நின்ற துர்கா கண்ணீரை இதற்கு மேல் அடக்க முடியாமல் அழுது கொண்டே… தன் அறைக்கு ஓடினாள்.

இந்தப் பிரிவு நிரந்தரம் என்பது போன்ற நினைப்பு துர்காவின் மனதில் இருக்க… ஆனால் இந்தப் பிரிவு தான் இருவருக்கும் ஒருவரைப் புரிந்து கொள்ள….. ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் காதலை உணரக் கிடைத்திருக்கும் ஒரு சந்தர்ப்பம் என்று இருவருக்கும் போகப் போகப் புரியப் போகிறது…. என்று இருவருக்குமே தெரியவில்லை.

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured