EPISODE 13
“என் வீட்ல மட்டும் சொல்லி என்னை மாட்டிவிடுவேன்னு நினைச்சேன் டி. ஆனா நீ மொத்த குடும்பத்துக்கும் விஷயத்தை சொல்லி இப்படி என்னை குற்றவாளி மாதிரி நிக்க வெச்சுட்டியே! இது உனக்கே நியாயமா?” என்று ஓவியாவை முறைத்தான் ராகவ்.
“நம்ம கல்யாணம் முடிஞ்சதும் சொன்னேன்னு சந்தோஷப்படு. இதுவே நீ என் கழுத்துல தாலி கட்டுறதுக்கு முன்னாடி விஷயம் தெரிஞ்சிருந்தா, இவங்க எல்லாரும் இப்படியா உன்னை பார்த்துட்டு இருந்திருப்பாங்க? இந்நேரம் உன் கையையும் காலையும் ஒடைச்சிருக்க மாட்டாங்க!” என்றாள் நக்கலாக.
அவளை மீண்டும் முறைத்தவன், “நீ சொல்றதும் சரி தான். உன் அண்ணன் இப்பவே இப்படி முறைக்கிறானே… இந்த விஷயம் முன்னாடி தெரிஞ்சிருந்தா, இந்த IPS ஐ புதைச்ச இடத்துல இந்த நேரம் புல்லு முளைச்சிருக்கும்!” என்று எச்சில் விழுங்கியவன், தன்னையே முறைத்துக்கொண்டு நின்ற ராக்கியைப் பார்த்து அசடு வழிய சிரித்தான்.
ஓவியா திருமணத்திற்கு முன்னமே கர்ப்பமாக இருந்ததை கேள்விப்பட்டு மொத்த குடும்பமும் ராகவ்வை அதிர்ச்சியாக பார்த்துக் கொண்டு இருந்தது. அவர்களை எல்லாம் எதிர்கொள்ள முடியாமல் தவித்தான் ராகவ்.
அவனிடம் வந்த ராக்கி, “நீ இப்படி எல்லாம் பண்ணியிருப்பேன்னு நான் நினைக்கவே இல்லை…” என்றவன், “என் தங்கச்சியை இந்த நிலைமைக்கு ஆளாக்கிட்டு உன்னால எப்படி திகழைக் கல்யாணம் பண்ணிக்க சம்மதிக்க முடிஞ்சுது?” என்றான்.
“அது வந்து மச்சான்…” என்று ராகவ் பேச வர,
“இனி பேச என்ன இருக்கு? அதான் ரெண்டு கல்யாணம் பண்ணிக்கிட்டாங்களே, அப்புறம் என்ன?” என்றார் ராஜம்.
“ஆமா மாப்பிள்ளை, என் புள்ளை பண்ணினது தப்பு தான். அதுவும் அவன் குடிச்சிருக்க அப்போ இப்படி ஒரு விஷயத்தை பண்ணிட்டான். அவனுக்காக நான் உங்ககிட்டே மன்னிப்பு கேட்டுக்கிறேன்,” என்றார் மூர்த்தி.
“ஐயோ மாமா! நீங்க எதுக்கு என்கிட்டே மன்னிப்பு கேட்குறீங்க? கேட்க வேண்டியவங்க அப்படியே நிக்குறாங்களே!” என்றான் ராகவ்வை பார்த்து.
அதை கேட்ட உடனே நிமிர்ந்து ராக்கியைப் பார்த்தவன், “உங்க தங்கச்சியை ஏமாத்தி கல்யாணம் செய்திருந்தா, நான் மன்னிப்பு கேட்டிருப்பேன். ஆனா நடந்தது எனக்கே ஞாபகம் இல்லாத அப்போ, நான் என்ன கேட்கிறது?” என்றவன், திரும்பி ஓவியாவை பார்த்து, “நான் என் பொண்டாட்டிகிட்டே தான் மன்னிப்பு கேட்கணும்,” என்று அவள் கையைப் பிடித்து, “சாரி டி ஓவி,” என்றான்.
“அச்சோ! எவ்வளவு நேரம் தான் இந்த ரீலையே ஓட்டிட்டு இருப்பீங்க? எனக்குப் பசிக்குது. வந்து சாப்பாடு போடுங்க!” என்றாள் டைனிங் டேபிளில் அமர்ந்து இருந்த திகழினி.
அவளை முறைத்த வேலு, “இங்க எவ்வளவு பெரிய விஷயம் போயிட்டு இருக்கு. உனக்கு சாப்பாடு ரொம்ப முக்கியமோ?” என்றான்.
“ஆமா, முக்கியம் தான்!” என்றாள் திமிராக.
“ராங்கி… ராங்கி…” என்று அவளைத் திட்டிவிட்டு திரும்பிக் கொண்டான்.
ஒருவாறாகப் பேசி அனைவரையும் சமாளித்து இருந்தான் ராகவ்.
ரதியையும், ஓவியாவையும் அழைத்து, “நீங்க ரெண்டு பேருமே நம்ம குடும்பத்துக்கு வாரிசை கொடுக்கப் போறீங்க. எங்க எல்லாருக்கும் இந்த விஷயம் எவ்வளவு சந்தோஷமா இருக்கும் தெரியுமா?” என்றார் செல்வி.
தன் மகள், மருமகள் இருவரையும் தோளோடு அணைத்து நெற்றியில் முத்தம் வைத்தார்.
அனைவரும் சாப்பிட்டு முடித்ததும் ஹாலுக்கு வர, சிவராஜன், “இன்னும் ஒரு வாரம் கழிச்சு நான் மறுபடியும் என் பிரச்சாரத்தை தொடரலாம்னு இருக்கேன்,” என்றார்.
“அப்பா, என்ன இது? எதுக்காக இப்போவே பிரச்சாரத்துக்கு போகணும்னு சொல்றீங்க? அதெல்லாம் எதுவும் வேணாம். முதல்ல உங்க உடம்பை பாருங்க,” என்றான் ராக்கி.
“டேய், எனக்கு ஒன்னும் இல்லை டா. நான் நல்லா தானே இருக்கேன். எவ்வளவு நாள் தான் வீட்லையே இருக்குறது? எப்படியும் பிரச்சாரம் போய் தானே ஆகணும்?” என்றார்.
“சார், அதுக்கு இல்ல… உங்க ஹெல்த் கண்டிஷன்…” என்று தயங்கினான்.
“இங்க பாருங்க மாப்பிள்ளை. இன்னமும் என்னை சார்ன்னு கூப்பிடறது சரி இல்லை. இப்படி கூப்பிட்டா எனக்கு அந்நியமா இருக்க மாதிரி தோணுது. நீங்க இன்னும் என் பொண்ணையும் எங்க குடும்பத்தையும் ஏத்துக்கலேன்னு நல்லாவே தெரியுது,” என்று சிவராஜன் வருத்தப்பட,
“ஐயோ! அப்படி எல்லாம் எதுவும் இல்ல சார்… செ ச்சே… மாமா!” என்று பேசத் தடுமாறியவன், “இனிமேல் உங்களை மாமான்னே கூப்பிடுறேன்,” என்றான்.
அதைப் பார்த்த திகழ், “ஒழுங்கா பேசக் கூட முடியல. என் அப்பாகிட்டே இவன் என் அப்பாவுக்கு மருமகன்,” என்று நினைத்து நக்கலாக வேலுவைப் பார்த்தாள்.
“இங்க பாருங்க, இன்னும் 15, 20 நாள் தான் பிரச்சாரம் பண்ண முடியும். ஏற்கனவே என் உடம்பு பிரச்சனை, அப்புறம் என் பொண்ணுங்க கல்யாணம்னு நான் நிறைய நாள் பிரச்சாரம் செய்ய முடியாம போயிடுச்சு. இனி அதெல்லாம் சரியா பண்ணிடணும்,” என்றார்.
அவர் பேச்சுக்கு மறுப்பு பேச முடியாமல், வேலுவும், ராக்கியும், சிவராஜன் பிரச்சாரம் செல்ல எல்லா ஏற்பாடுகளையும் செய்வதாக கூறினார்கள்.
“ஆஹ்… அப்புறம் என் பிள்ளைக மூணு பேருக்கும் நான் ஹனிமூன் ஏற்பாடு பண்ணியிருக்கேன். நாளைக்கே எல்லாரும் கிளம்பனும். ஓவியா கர்ப்பமா இருக்குறது தெரியாம நான் வேற எல்லா ஏற்பாடும் பண்ணிட்டேன்,” என்றார்.
“அப்பா, அதெல்லாம் பிரச்சனை இல்லை. டாக்டரைப் போய் பார்த்துட்டு வந்து அவர் என்ன சொல்றாரோ அதுபடி செய்துகலாம்,” என்றாள் திகழ்.
எல்லோரும் ஓவியாவைப் பார்க்க, ராகவ்வோ, “திகழ் சொல்றதும் சரி தான். இன்னிக்கு எப்படியும் ஓவியாவுக்கு செக்கப் இருக்குன்னு சொன்னா. நாங்க போய் டாக்டர்கிட்டே இந்த டைம்ல ட்ராவல் பண்ணலாமான்னு கேக்குறோம். அவர் ஓகே சொன்னா, நாங்களும் ஹனிமூன் கிளம்புறோம். இல்லைன்னா இவங்க மட்டும் போயிட்டு வரட்டும்,” என்றான் ராகி, ரதி, திகழ், வேலுவைப் பார்த்து.
“எங்களுக்கு என்ன அவசரம்? நாங்க அங்க போய் என்ன ஹனிமூன் கொண்டாடவா போறோம்?” என்று நினைத்த திகழ், வேலுவைப் பார்த்தாள்.
அவனும் சரியாக அவளைப் பார்க்க, “இவனுக்கு என்னை பார்க்குறதே வேலை தான்,” என்று முணுமுணுத்தவள் திரும்பிக்கொள்ள,
“இவ என்ன லூசா?” என்று அவளைப் பார்த்தான் வேலு.
அங்கிருந்து ஓவியாவை அழைத்துக்கொண்டு, நேராக அவள் சொன்ன மருத்துவமனைக்குத் தான் வந்திருந்தான் ராகவ். அவனை எல்லோருக்கும் தெரியும் என்பதால் வரவேற்பு சற்று பலமாகவே இருந்தது.
அவர்களை முதலில் பார்க்க அனுப்பி வைத்தார்கள். உள்ளே வந்ததும் ஓவியாவிடம் கேட்டறிந்த டாக்டர் மணிமேகலை, “ஒரு ஸ்கேன் பார்த்திடலாம். பேபி குரோத் எப்படி இருக்குன்னு பார்த்துட்டு, நீங்க ட்ராவல் பண்ணலாமா வேணாமான்னு சொல்லிடறேன்,” என்றார்.
அவர் காலிங் பெல் அழுத்தியதும் ஒரு நர்ஸ் வந்து ஓவியாவை ஸ்கேன் செய்ய அழைத்துச் செல்ல,
ஓவியா ஸ்கேன் செய்யச் சென்றதும், டாக்டரிடம் ஓவியா சாப்பிட என்னவெல்லாம் சாப்பிட வேண்டும், எந்த உணவைத் தவிர்க்க வேண்டும், அவளை எப்படி பார்த்துக் கொள்ள வேண்டும் என்று டாக்டரிடம் கேட்டு தெரிந்து கொண்டான் ராகவ்.
சிறிது நேரத்தில் ஓவியாவும் ஸ்கேனிங் முடித்துவிட்டு வர, ஸ்கேன் ரிசல்ட் வந்ததும் அதை பார்த்த டாக்டர், “ஸ்கேன்ல எந்த பிராப்ளமும் இல்லை. பேபி ஆரோக்கியமா தான் இருக்கு. தாராளமா நீங்க டிராவல் பண்ணிட்டு வரலாம். கொஞ்சம் ஜாக்கிரதை மட்டும் இருந்துக்கோங்க,” என்றார்.
அவர் கொடுத்த ரிசல்ட்டை வாங்கிக் கொண்டு, “ஓகே டாக்டர். அப்ப நாளைக்கு கிளம்புறேன்,” என்று ராகவ், ஓவியாவை அழைத்துக் கொண்டு கிளம்பப் போக, “சார், நீங்க ஒரு ரெண்டு நிமிஷம் வெளியிலே வெயிட் பண்ணுங்க. நான் இவங்க கிட்ட கொஞ்சம் பேசணும்,” என்றார் டாக்டர்.
“என்ன டாக்டர்? எதுவும் பிரச்சனையா? என்னை அனுப்பிட்டு தனியா என்ன பேசப் போறீங்க? எதுவா இருந்தாலும் என்னை வச்சுட்டு சொல்லுங்க. என்கிட்ட மறைக்க என்ன இருக்கு? அவ வயித்துல வளர்வது என்னோட குழந்தையும் தானே?” என்றான் ராகவ் சற்று பதட்டமாக.
“ஐயோ சார்! இப்ப எதுக்கு இவ்ளோ டென்ஷன் வாங்கறீங்க? நீங்க டென்ஷன் ஆகிற அளவுக்கு எல்லாம் ஒன்னும் இல்ல,” என்றவர், “இங்க பாருங்க, உன் வீட்டுக்காரர் உன் கூட ஒண்ணா சேர ரொம்ப ஆர்வமா இருக்காரு. இந்த நேரத்துல நீங்க ரெண்டு பேரும் பிசிகல் ரிலேஷன்ஷிப் வெச்சுக்கலாமான்னு என்கிட்ட கேட்டார். அதுக்காக தான் உன்கிட்ட தனியா பேசணும்னு சொன்னேன். ரெண்டு பேரும் சேஃபா பிசிகல் ரிலேஷன்ஷிப் வெச்சுகுறதுல தப்பு இல்ல. நீ கொஞ்சம் கவனமா இருன்னு சொல்லத்தான் நான் உன்கிட்ட தனியா பேசணும்னு சொன்னேன். மத்தபடிக்கு பேபிக்கு, உனக்கோ எந்த பிரச்சினையும் இல்ல. ரெண்டு பேரும் ஆரோக்கியமா தான் இருக்கீங்க,” என்று அவசரமாகக் கூறி முடித்தவர், “சார், இதை சொல்லத்தான் உங்க வைஃபை உங்க வைஃப் கிட்ட தனியா பேசணும்னு சொன்னேன்,” என்றார்.
அவர் சொன்னதைக் கேட்டு சிரிப்பு வந்தாலும், அதைக் காட்டிக் கொள்ளாமல் திரும்பி ராகவ்வை முறைத்தவள், “இங்கேயும் வந்து என் மானத்தை வாங்கிட்டு அல்ல,” என்று பல்லை கடித்துக் கொண்டு அவனைத் திட்டிய ஓவியா, “தேங்க்ஸ் டாக்டர். நாங்க வரோம்,” என்று விறுவிறுவென முன்னே செல்ல,
“ஏய்! வயித்துல குழந்தை வச்சிட்டு இவ்வளவு வேகமா நடக்கக் கூடாதுடி! மெதுவா போ!” என்று ராகவ் அவள் பின்னே ஓடினான்.
