Home Uncategorizedஉன் ரகசிய ரசிகை நான் 103

உன் ரகசிய ரசிகை நான் 103

by Layas Tamil Novel
281 views

சந்தோஷ் வீட்டில் டியூஷன் முடித்துவிட்டு கீர்த்திகாவும், ராதாவும் கிளம்பி ராதாவின் அப்பாவிற்காகக் காத்துக் கொண்டிருக்க… ஆனால் ராதாவை அழைக்க வந்தது கதிர் என்று தெரிந்ததும் சந்தோஷ் முதற்கொண்டு மற்ற இரு பெண்களுக்குமே சற்று அதிர்ச்சியாகத் தான் இருந்தது.

அவனைப் பார்த்ததும் மூவருக்குமே முகம் வாடிப் போய்விட்டது. சந்தோஷுக்கு ராதாவை அவன் திருமணம் செய்து கொள்ளப் போகிறான் என்று கதிரின் மீது கோபமாக இருக்க, ராதாவிற்கோ சந்தோஷ் முன் கதிர் தன்னை அழைக்க வந்தது சற்றுச் சங்கடமாக இருக்கவும், கதிரை ஏன் வந்தாய் என்று கேட்கவும் முடியாது, சந்தோஷிடம் காரணம் சொல்லவும் முடியாமல் ராதா இருவருக்கும் இடையில் மாட்டிக் கொண்டு இருந்தால். கீர்த்திகாவிற்கோ தன் எதிரிலேயே ராதாவைத் திருமணம் செய்து கொள்ளச் சம்மதம் சொல்லிவிட்டான் என்று கதிரின் மேல் பயங்கர கோபம் இருந்ததால், இந்த ஒரு வார காலமாக அவன் எவ்வளவோ இவளைச் சந்திக்க முயற்சித்தும், போனில் அழைத்தும், மெசேஜ் செய்தும் எதற்குமே பதில் அளிக்காமல் அவனைத் தவிர்ப்பதிலேயே குறியாக இருந்தால் கீர்த்திகா. தன்னால் ராதாவின் வாழ்க்கை சிரமம் ஆகிவிடக்கூடாது என்று யோசித்து இந்தக் முடிவை எடுத்திருந்தால் கீர்த்திகா.

இவர்கள் மூவரின் முகத்தைப் பார்த்த கதிருக்கு ஏன் எல்லோரும் இப்படி இருக்கிறார்கள் என்று யோசித்தவரே ராதாவின் அருகில் வந்தவன். நேராக ராதாவிடம் வந்த கதிர், “போலாமா…” என்று பொதுவாகக் கேட்டான்.

“சரி மாமா… அப்படியே கீர்த்திகாவையும் அவங்க வீட்டில் விட்டுடலாமா?” என்றாள் கதிரிடம்.

“ம்ம்ம்…” என்று கீர்த்திகாவை ஒரு பார்வை பார்த்துவிட்டு ராதாவை அழைத்துக் கொண்டு போய்க் காரின் பின் சீட்டின் கதவைத் திறந்து, உள்ளே ஏறி அமர ராதாவிற்கு உதவி செய்து, அவள் சேரை மடித்துக் காரின் பின்புறம் வைத்துவிட்டுக் கதிர் காரில் ஏறிக்கொள்ள… கீர்த்திகா வேறு வழியே இல்லாமல் முன்னால் அமர்ந்து கொண்டாள். காருக்குள் இருந்து ராதா சந்தோஷுக்கு யாருக்கும் தெரியாமல் டாடா…. காட்டினாள்.

மூவரும் கிளம்பிச் செல்ல…. சந்தோஷ் ராதா சொன்னது போல எப்படி இந்தக் கல்யாணத்தை நிறுத்துவது என்று யோசித்துக் கொண்டே உள்ளே சென்றான். எப்போதும் ராதா தான் கலகலவென்று பேசிக்கொண்டு வருவாள். இன்று அவளும் எதுவும் பேசாமல் வர காருக்குள் மிகவும் அமைதியாக இருந்தது.

கதிரின் வீடு வந்ததும் வேலையாட்களை வரச் சொல்லி ராதாவிற்கு உதவ செய்து அவளை உள்ளே அனுப்பிவிட்டு கீர்த்திகாவை அவள் வீட்டில் விடக் காரை எடுத்துக் கொண்டு சென்றான். செல்லும் வழியில் இருவரும் எதுவுமே பேசிக்கொள்ளவே இல்லை. கதிரும் கீர்த்திகாவே ஏதாவது கேட்பாள் என்று எதிர்பார்த்தவன் அவளும் எதுவும் பேசாமல் வெளியில் வேடிக்கை பார்த்துக் கொண்டு வருவதைப் பார்த்துக் கதிருக்கு ஆத்திரமாக வந்தது. சட்டென்று காரை ஓரம் கட்டி சடன் பிரேக் போட்டு நிறுத்தியவன். திரும்பி நான் கீர்த்திகாவைப் பார்க்க அவள் கார் திடீரென்று நிற்கவும் திரும்பி கதிரைப் பார்த்தாள்.

“இப்ப எதுக்கு இங்க கார் நிறுத்தினீங்க?” என்று கேட்டாள் கீர்த்திகா. “உன் கிட்டப் பேசத் தான் நிறுத்தினேன்,” என்றான் கதிர். “என்கிட்ட உங்களுக்குப் பேச என்ன இருக்கு… அதான் எல்லாம் முடிஞ்சு போயிடுச்ச்சே…. இனிமேல் என்கிட்ட இப்படித் தனியாக் கூட்டிட்டு வந்து பேசுற வேலை எல்லாம் வேண்டாம்,” என்றால் கீர்த்திகா காராராக.

“என்ன? நமக்குள்ள எல்லாமே முடிஞ்சு போயிடுச்சுன்னு சொல்றியா நீ…. எதுக்கு அப்படிச் சொன்ன?” என்று கேட்டான் கதிர். “நான் ஏன் அப்படிச் சொன்னேன்னு உங்களுக்குத் தெரியாதா மிஸ்டர் கதிர்…,” என்றால் கீர்த்திகா. “மேடம் மரியாதை எல்லாம் ரொம்பப் பலமா குடுக்குறீங்க,” என்று சொன்னான் கதிர். “உங்ககிட்ட மரியாதை இல்லாமல் பேச எனக்கு என்ன உரிமை இருக்கு…. நான் என்ன உங்க காதலியா? இல்ல உங்க பொண்டாட்டியா?” என்று கேட்டாள் கீர்த்திகா கோபமாக.

அவன் முகத்தைப் பார்க்காமல் வேறு எங்கோ பார்த்து அவன் கேட்டதற்கெல்லாம் திமிராகப் பதில் சொன்ன கீர்த்திகாவைக் கண்டு கதிருக்குக் கோபம் வர அவள் கையைப் பிடித்துத் தன்னைப் பார்க்குமாறு திருப்பியவன். “ஏய் உன் மனசுல என்ன தாண்டி நெனச்சிட்டு இருக்க…. நானும் பாத்துட்டு இருக்கேன். ஒரு வாரமா உனக்கு எவ்வளவு தடவை கால் பண்ணி இருப்பேன். உன்னை நேரா வந்து மீட் பண்ணனும்னு எத்தனை முறை நான் உன் வீட்டுக்கும் காலேஜுக்கும் வந்து இருப்பேன். ஆனா நான் உன்னைப் பார்க்க எங்க வந்தாலும் நீ என்ன அவாய்ட் பண்றதுலயே குறியா இருக்க… அப்படி நான் என்னடி தப்பு செஞ்சிட்டேன்? இப்படி என்கிட்டப் பேசாம என்னை இவ்ளோ கஷ்டப்படுத்துற,” என்று கேட்டான் கதிர்.

“நான் உங்களை எதுவுமே கஷ்டப்படுத்தவில்லை மிஸ்டர் கதிர்! உங்களுக்கு வேற ஒரு பொண்ணோட கல்யாணம் உறுதி ஆயிடுச்சு. இதுக்கு அப்புறமும் நீங்க வந்து என்னைப் பார்த்தா அது நல்லா இருக்காது. அதுவும் இல்லாம என் பிரண்டுக்கு நான் துரோகம் பண்ண விரும்பல. அவளுக்கு நீங்களும் நானும் இப்படிப் பேசிட்டு இருக்கிறது தெரிஞ்சுதுன்னா அவ ரொம்ப வருத்தப்படுவா,” என்று சொன்னால் கீர்த்திகா.

“ஓ அப்போ நான் ராதாவைக் கல்யாணம் பண்ணிக்கப் போறேன்னு சொல்லி நீ நான் வேண்டான்னு ஒதுங்கி போற அப்படித்தானே!!!” என்று கேட்டான் கதிர். “ஆமாம் மிஸ்டர் கதிர். நான் எதற்கு தேவையில்லாம உங்க ரெண்டு பேரு வாழ்க்கைக்கு உள்ள வரணும்…. இது நல்லா இருக்காது… ஆரம்பத்திலேயே நான் விலகிக்கிறது தானே நல்லது,” என்றால் கீர்த்திகா.

“ஏய்… என்னடி விட்டா ரொம்ப ஓவராப் பேசிட்டு இருக்க… அடிச்சேன்னு வை….” என்று கீர்த்திகாவின் முகத்தை நிமிர்த்தி தன் கையை ஓங்கியவன் அவள் கண்களில் கண்ணீரோடு இருப்பதைப் பார்த்ததும் அப்படியே தன் ஓங்கி கையை நிறுத்தி விட்டான் கதிர். அவள் அழுததும் கதிரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ஓங்கிய கையை இறக்கிவிட்டு அவள் கன்னங்கள் இரண்டையும் பிடித்து அவள் முகத்தைத் தன் கைகளில் ஏந்தியவன்.

“ப்ளீஸ் டி… அழாத. கொஞ்சம் நான் சொல்றதக் கேளு. இப்படியெல்லாம் நீ பேசாத… நீ நினைக்கிற மாதிரி எதுவுமே நடக்காது சரியா… நான் எப்படியாவது இந்தக் கல்யாணத்தை நிறுத்தப் பாக்குறேன்,” என்று சொன்னான் கதிர்.

“உன்னால் இந்தக் கல்யாணத்தை நிறுத்த முடியும்னு நினைக்கிறியா… கதிர்? அத்தனை பேரும் முன்னாடி நீதானே எனக்கு இந்தக் கல்யாணத்துல சம்மதம்னு சொன்ன… அப்போ சம்மதம் சொன்னவன் இப்ப போய்த் திடீர்னு கல்யாணம் வேண்டாம்னு சொன்னா…. அவங்க காரணம் எதுவும் கேட்க மாட்டாங்களா? அதை எல்லாத்தையும் விட ராதா உன்னைக் கல்யாணம் பண்ணப் போறேன்னு எவ்வளோ கனவுல இருப்பா… அவ கனவைக் கலைக்கிறதுல எனக்குச் சுத்தமா விருப்பம் இல்லை,” என்று சொன்னால் கீர்த்திகா.

“எப்பவும் அடுத்தவங்களப் பத்தி யோசிச்சிட்டு இருக்கியே. உனக்காக நான் எங்க ஒருத்தன் இருக்கேன்னு நீ கொஞ்சமாவது யோசிச்சுப் பாத்தியா கீர்த்திகா. அன்னைக்கு நான் எல்லாரும் முன்னாடியும் கல்யாணம் பண்ணிக்கிறேன் சம்மதம் சொன்னது ராதாவை இல்லை உன்னைத் தான். எல்லாரும் முன்னாடியும் வைத்து அன்னைக்கு உங்க அம்மா என் பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்க சம்மதமான்னு? கேட்ட அப்போ…. நான் அவங்க பொண்ணுன்னு உன்னைத் தான் சொன்னதா நினைச்சேன். ஆனா அவங்க ராதாவை மனசுல நினைச்சுட்டு சொல்லுவாங்கன்னு எனக்கு எப்படித் தெரியும். அதனால தான் நான் அன்னைக்கு அவ்வளவு சந்தோஷமா நம்ம கல்யாணத்துக்கு எல்லாருமே ஒத்துக்கிட்டாங்கன்னு சொல்லி நானும் கல்யாணத்துக்குச் சம்மதம்னு சொல்லிட்டு வந்தேன்,” என்றான்.

“அன்றே ராதாவை தான் எனக்குத் திருமணம் செய்து கொள்ளச் சம்மதம் கேட்கிறார்கள் என்று தெரிந்திருந்தால் அப்போதே அனைவரும் முன்னிலையிலும் எனக்கு ராதாவைத் திருமணம் செய்து கொள்ள விருப்பமில்லை என்று நான் சொல்லி இருப்பேன்,” என்று கூறினான் கதிர்.

அவன் அப்படிச் சொன்னதும், “அப்ப நிஜமாகவே நீ என்னை மனசுல நினைச்சுட்டுத் தான் அந்தக் கல்யாணத்துக்குச் சம்மதம்னு சொன்னியா? அப்போ உனக்கு ராதாவைக் கல்யாணம் பண்ணிக்கச் சுத்தமா விருப்பம் இல்லையா?” என்று கேட்டால் கீர்த்திகா.

“இந்தக் கேள்வியை நீ எத்தனை முறை கேட்டாலும்…. யார் முன்னாடி வச்சு கேட்டாலும்… என்னோட ஒரே பதில் எனக்கு ராதாவைத் திருமணம் செய்து கொள்ள விருப்பமில்லை. உன்னைத்தான் நான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன் போதுமா….” என்று அவள் தோள்களைப் பிடித்து உலுக்கிச் சொன்னான் கதிர்.

கதிர் தன்னைத் தான் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் என்று சொன்னதும் கீர்த்திகா கதிரை அணைத்துக் கொண்டு, “சாரி கதிர்.. எனக்கு நீ உண்மையாவே ராதாவைத் திருமணம் செய்யச் சம்மதம் சொல்லிட்டேன்னு கோபத்தில் தான் நான் உன்கூட இவ்வளவு நாள் பேசாம இருந்தேன். அதுவும் இல்லாம ராதாவைக் கஷ்டப்படுத்த எனக்கு விருப்பமில்லை. அவளைக் கஷ்டப்படுத்திட்டு நம்ம ஒன்னா இருக்குறதுல எனக்கு விருப்பம் இல்லை. அதனால் தான் நான் ஒதுங்கிப் போயிடலாம்னு முடிவு பண்ணிட்டேன்,” என்று சொன்னால் கீர்த்திகா.

“நீ அப்படி ஒதுங்கிப் போயிட்டா நான் சரின்னு சம்மதித்து ராதாவைக் கல்யாணம் பண்ணிப்பேன்னு நினைச்சியா கீர்த்தி,” என்றான் கதிர். அழுத விழி விழிகளோடு கதிரைப் பார்த்தவள். “வேணாம் கதிர். நீ போய்ப் வீட்ல இப்போ கல்யாணம் வேண்டாம்னு சொன்னின்னா அது பெரியப் பிரச்சனையாகிடும். நம்மால் யாருக்கும் கஷ்டம் வர வேண்டாம். நீ பேசாம உங்க வீட்ல சொன்ன மாதிரியே ராதாவைக் கல்யாணம் பண்ணிக்கோ,” என்று சொன்னால் கீர்த்திகா.

“ஏய் லூசாடி நீ…. என் அண்ணன் இன்னும் ஒரு வாரத்துல இந்தியா வந்துருவான். அவன் வந்த பிறகு அவன் கிட்ட நான் நேரடியா சொல்லி இந்தக் கல்யாணத்தை நிறுத்தச் சொல்றேன். அவன் சொன்னா என் வீட்ல எல்லாரும் கேட்பாங்க. அது வரைக்கும் நீ கொஞ்சம் பொறுமையா இரு. என் அண்ணன் சொன்னா கண்டிப்பா எங்க வீட்ல இந்தக் கல்யாணத்தை நிறுத்திடுவாங்க,” என்று சொன்னான் கதிர்.

“ஒருவேளை உனக்கு இந்தக் கல்யாணத்துல விருப்பம் இல்லைன்னு உன் அண்ணன் கிட்ட நீ சொன்னேன் சொல்லியும் உன் அண்ணா அதெல்லாம் முடியாது. நீ ராதாவைத் தான் கல்யாணம் பண்ணி ஆகணும்னு சொன்னா… நீ என்ன பண்ணுவ? கதிர்,” என்று கேட்டால் கீர்த்திகா.

“நான் இதுவரைக்கும் என் அண்ணனோட பேச்சை மீறியதே கிடையாது. அப்படி அவர் ராதாவைத் தான் கல்யாணம் பண்ணிக்கணும்னு சொன்னா.. எனக்கு வேற வழியே இல்ல. நான் ராதாவைத் தான் கல்யாணம் பண்ணிப்பேன்,” என்று சொல்லி நிறுத்தியவன் கீர்த்திகாவைப் பார்க்க. கதிர் என்ன சொல்வான் என்று ஆவலோடு அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தவள் அவனின் பதிலில் முகம் சுருங்கிப் போக….

அவள் முகத்தைப் பிடித்துத் தன்னைப் பார்க்குமாறு உயர்த்தியவன், “என் அண்ணன் அப்படிச் சொல்ல மாட்டார் என்று நான் நம்புறேன். என்னோட விருப்பம் தான் என் அண்ணனுக்கு எப்பவுமே முக்கியம். நான் ஒரு விஷயத்துல விருப்பப்படவில்லை என்று சொன்னால் என் அண்ணா அதுக்கு எப்பவுமே எதிர்ப்பு சொல்ல மாட்டாரு. அந்தக் நம்பிக்கை எனக்கு ரொம்ப இருக்கு… அதனால நீ தைரியமா இரு. இன்னும் ஒரு வாரம் கொஞ்சம் பொறுமையா இரு. அண்ணன் வந்ததும் நான் இந்த விஷயத்தைச் சொல்றேன்,” என்று சொன்னான் கதிர்.

“நிச்சயமா உன் அண்ணன் உன் விருப்பத்துக்கு எதிராக எதுவும் செய்ய மாட்டார் தானே? உனக்கு அந்தக் நம்பிக்கை இருக்கு தானே?” என்று கீர்த்திகா கேட்டாள்.

“கண்டிப்பா என் விருப்பத்திற்கு என் அண்ணன் சம்மதிப்பார் என்று எனக்கு நம்பிக்கை இருக்கு கீர்த்து. நீ கவலைப்படாத… எல்லாம் சரியாகும்..” என்று சொல்லி அவளைத் தன் தோளோடு சாய்த்து அணைத்துக் கொண்டான்.

ஒரு வழியாகக் கீர்த்திகாவை சமாதானம் செய்து அவளை வீட்டில் விட்டுவிட்டுத் தன் வீட்டிற்குள் கதிர் வர…. “அடடே வாங்க மாப்பிள்ளை. உங்களுக்காகத் தான் எல்லாரும் காத்துக்கிட்டு இருந்தோம்,” என்று துரை கதிரை வரவேற்க.

ஹாலில் ராதா முதற்கொண்டு அனைவரும் அமர்ந்து இருக்க, “என்ன அங்கிள்? எனக்காக ஏன் வெயிட் பண்ணிட்டு இருக்கீங்க?” என்று கேட்டுக் கொண்டே வந்து அவர் அருகில் அமர்ந்தான் கதிர். “அது ஒன்னும் இல்ல மாப்ள. நானும் மாமாவும் உங்களுக்கும் ராதாவுக்கும் கல்யாணத்துக்கு நாள் குறிச்சுட்டு வந்திருக்கோம். அதை நீங்க வந்ததுக்கு அப்புறம் எல்லாரிடமும் சொல்லலாம் என்று தான் வெயிட் பண்ணிட்டு இருக்கோம்,” என்று சொன்னார் துரை.

அவர் அப்படிச் சொன்னதும் கதிர் எதுவும் பேசாமல் அமர்ந்திருக்க ராதாவிற்கோ உள்ளுக்குள் ஒரு பிரளயமே வந்துவிடும் போல இருந்தது. எதற்கு அப்பா இப்படி என் கல்யாணத்திற்கு அவசரப்படுகிறார் என்று அவரைத் தன் மனதிற்குள் திட்டித் தீர்த்தாள் ராதா. கதிர் எதுவும் பேசாமல் அமர்ந்திருக்க.. “என்ன மாப்ள நான் எவ்வளவு சந்தோஷமா சொல்றேன். நீங்க எதுவுமே பேச மாட்டேங்கறீங்க,” என்று கேட்க….. கதிர், “நான் என்ன மாமா சொல்றது? பெரியவங்க எல்லாரும் முடிவு பண்ணிட்டீங்க. இதுல என்கிட்டக் கேட்க என்ன இருக்கு,” என்று சொன்னான் கதிர்.

“அப்படி இல்ல மாப்ள. கல்யாணம் பண்ணிக்கப் போற நீங்க ரெண்டு பேரும் தானே முதல்ல இந்த நல்ல விஷயத்தைத் தெரிஞ்சுக்கணும். அதனால தான் நீங்க வந்த பிறகு சொல்லலாம்னு இருந்தோம்,” என்று சொன்னவர், “உங்க கல்யாணம் இன்னும் பத்து நாளில் நடத்தலாம்னு முடிவு பண்ணி இருக்கோம் மாப்பிள்ளை,” என்று சொன்னார் துரை. அவர் அப்படிச் சொன்னதும் சட்டென்று அதிர்ச்சியில் அவரைப் பார்த்த கதிர், “என்ன மாமா இன்னும் பத்து நாள்ல என்னோட கல்யாணமா? எதுக்கு இவ்வளவு அவசரப்படுறீங்க,” என்று கேட்டான் கதிர்.

“அப்படி எல்லாம் எதுவும் இல்ல மாப்ள. ஒரு நல்ல விஷயத்தைத் தள்ளிப் போடக்கூடாதுன்னு சொல்லுவாங்க. அதனால தான் மாமாவும் நானும் முடிவு பண்ணி எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் இந்தக் கல்யாணத்தை நடத்தணும்னு தேதி குறிச்சிட்டு வந்தோம். மாமா ரொம்பச் சிம்பிளா கல்யாணத்தை வெச்சுக்கலாம்னு சொல்லிட்டார். ஏன்னா… ராதாவும் காலேஜ் போயிட்டு இருக்கா இல்லையா… அதனால இப்போ சிம்பிளா கல்யாணத்தை வச்சுட்டு கொஞ்ச நாள் கழிச்சு கிராண்டா ரிசப்ஷன் வச்சுக்கலாம்னு சொல்லிட்டாரு. நானும் அதுக்குச் சரின்னு சொல்லிட்டேன். உங்களுக்குச் சம்மதம் தானே மாப்பிள்ளை,” என்று கேட்க…. கதிர் இதற்கு மேல் இவர்களிடம் பேசிப் பிரயோஜனம் இல்லை என்று புரிந்து கொண்டவன். ஆதி வந்த பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்தவன். “சரி எல்லாம் உங்க விருப்பம் தான்,” என்றவன் எழுந்து தன் அறைக்குச் சென்று விட்டான் கதிர்.

கதிர் இப்படிச் சொல்லிவிட்டுச் செல்லவும், “மாப்பிள்ளைக்கு வெட்கம் வந்துருச்சு போல….” என்று துரை அனைவரையும் பார்த்துச் சிரிக்க…. மற்றவர்களும் கதிர் போவதைப் பார்த்துவிட்டுப் பெண்கள் எல்லாம் திரும்பி ராதாவைப் பார்த்து…. “என்ன ராதா சந்தோஷ் தானே… இன்னும் பத்து நாள்ல நீ என் வீட்டு மருமகளா ஆகப் போற,” என்று விசாலாட்சி கேட்க. அவரைப் பார்த்து லேசாகப் புன்னகை செய்தவள், “அம்மா நான் என் ரூமிற்கு போறேன்,” என்று மற்றவர்களிடம் எதுவும் பேசாமல் வீல் சேரி தள்ளிக் கொண்டு லிப்டுக்குச் சென்றால்.

“இவளுக்கும் வெட்கம் வந்துருச்சு போல…” என்று கனகா சொல்லிச் சிரிக்க… லிப்ட் வருவதற்காகக் காத்திருந்த ராதா, ‘ஆமா வெட்கப்பட்டுத் தான் போறாங்க…. இந்த அம்மாவுக்கு வேற வேலையே இல்லை,’ என்று தன் அம்மாவைக் கடிந்து கொண்டவள் லிப்ட் வந்ததும் உள்ளே சென்று லிப்ட் கதவை மூடினால்.


மதிய உணவின் போது அலுவலக இடைவேளை அறையில் மது, ரியா பேசிச் சிரித்துச் சாப்பிட்டுக் கொண்டிருக்க அவர்களைப் பார்த்தவரே அப்போதுதான் உள்ளே வந்தான் பவன். நேராக வந்து ரியாவின் அருகில் சென்று அமர்ந்தவன். “என்ன இன்னைக்கு என்ன விட்டுட்டு உன் ஃபிரெண்ட்டை கூட்டிட்டு முதல்லயே வந்துட்ட…” என்று ரியாவிடம் கேட்டான் பவன்.

“நீ தான் பாஸ்… பாஸ்ன்னு… பாஸ் பின்னாடியே சுத்திட்டு இருக்க.. நீங்க வர வரைக்கும் வெயிட் பண்ணா அப்புறம் நாங்க ரெண்டு பேரும் பட்டினியா தான் இருக்கணும். அதனாலதான் நாங்க ரெண்டு பேரும் முன்னாடியே சாப்பிட வந்துட்டோம். என்ன வேலை எல்லாம் முடிஞ்சுதா? பாஸ் ஒருவழியா உன்னைச் சாப்பிடப் போகச் சொல்லி விட்டுட்டாரா?” என்று கேட்டால் ரியா.

“ஆமா அவருக்கு ஏதோ போன் வரவும் சரி நீ போய்ச் சாப்பிட்டு வந்துடு… என்று எனக்கு அரை மணி நேரம் தான் டைம் கொடுத்து இருக்காரு. உங்க கிட்டப் பேசி என் நேரத்தை வீன் பண்ண விரும்பல… சரி சரி நான் சாப்பிடுறேன். நீங்க கதை பேசுங்க வழக்கம் போல…. நான் அதைக் கேட்டுட்டுச் சாப்பிடுகிறேன்,” என்று சொல்லிவிட்டுத் தன் டிபன் பாக்ஸைத் திறந்து சாப்பிடப் போக….

பவன் தன் டிபன் பாக்ஸைத் திறந்ததுமே உணவு கெட்டுப் போன வாடை வரவும். ரியாவும் மதுவும் தங்கள் மூக்கைப் பொத்திக் கொள்ள…. சட்டென்று டிபன் பாக்ஸை மூடிவிட்டு நிமிர்ந்து அவர்கள் இருவரையும் தயக்கத்தோடு பார்த்தவன், “சாரி. ரொம்ப நேரத்திலேயே சாப்பாடு செஞ்சதுனால கெட்டுடுச்சு போல நான் கவனிக்காமல் இங்க வந்து ஓபன் பண்ணிட்டேன்,” என்றான் சங்கடத்துடன்.

“அது பரவாயில்ல. இப்ப நீ சாப்பிடுவதற்கு என்ன பண்ணப் போற? பாஸ் வேற உனக்கு ஆப் அன் ஹவர் தான் டைம் கொடுத்து இருக்காரு. இப்போ சாப்பாடு ஆர்டர் போட்டாலும் எப்படியும் வரதுக்கு ஆப் ஆன் அவர் ஆயிடுமே,” என்றால் ரியா.

“என்ன பண்ண? வாரத்துல இப்படியே ரெண்டு மூணு நாள் ஆயிடுது. இன்னைக்கும் பட்டினியா இருக்க வேண்டியது தான்,” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து எழுந்து செல்லப்போன பவனை, “ஒரு நிமிஷம் நில்லுங்க,” என்றால் மது.

எப்போதுமே மது பவனுடன் சரியாகப் பேசவே மாட்டாள். ஏதாவது ஆபீஸ் விஷயம் என்றால் மட்டுமே அவனிடம் அது குறித்து மட்டுமே பேசிவிட்டுச் சென்று விடுவாள். ரியாவுடன் சகஜமாகப் பேசுவது போல அவனுடன் எப்போதுமே மது பேச மாட்டாள். ஆனால் இன்று அவன் சாப்பிடாமல் எழுந்து செல்வதைப் பார்த்த மதுவிற்கு ஏதோ போல இருக்க…. அவனை அழைத்துத் தன்னிடம் இருந்து இரண்டு டிபன் பாக்ஸில் ஒன்றை அவனிடம் கொடுத்து, “இதை நீங்க சாப்பிடுங்க…. எனக்கு இது போதும். நான் நிறைய சாப்பிட மாட்டேன்,” என்று சொல்லி அவனிடம் நகர்த்தி வைக்க..

“இல்ல வேண்டாம். நீங்களே உங்களுக்கு அளவாக் கொண்டு வந்து இருப்பீங்க… அதையும் எனக்கு ஷேர் பண்ணிட்டா அப்புறம் கொஞ்ச நேரத்துல உங்களுக்குப் பசி எடுத்துடும். பரவால்ல நீங்களே சாப்பிடுங்க…” என்று பவன் அவள் கொடுத்த டிபன் பாக்ஸை மதுவிடம் நகர்த்த…

“ஒரு நாள் கம்மியாக் சாப்பிட்டா எனக்கு ஒன்னும் ஆகிடாது. நீங்க பட்டினியாப் போறதுக்கு பதிலா கொஞ்சமாவது சாப்பிட்டுப் போனா தெம்பா இருக்கும் இல்லையா…. இந்தா சாப்பிடுங்க பரவாயில்ல,” என்று மது பவனிடம் டிபன் பாக்ஸை மறுபடியும் நகர்த்தி வைக்க..

இவர்கள் இருவரும் பேசிக் கொள்வதைப் பார்த்து ரியா, “இப்படி ரெண்டு பேரும் மாத்தி மாத்தி டிபன் பாக்ஸ நகர்த்துக்கிட்டே இருந்தீங்கன்னா லஞ்ச் டைம் முடிஞ்சிடும். அந்த டிபன் பாக்ஸ் எனக்குக் குடுங்க. நான் சாப்பிடுறேன்,” என்று மதுவிடம் இருந்து டிபன் பாக்ஸையும் சேர்த்துத் தன்னோடு எடுத்துக் கொண்டால் ரியா. அவள் செயலைப் பார்த்துச் சிரித்த மதுவும் பவனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள… பவனின் பார்வையும் மதுவின் பார்வையும் நேருக்கு நேராகச் சந்தித்துக் கொள்ள…. பவனும் மதுவும் ஒருவருக்கொருவர் பார்த்துவிட்டுச் சட்டென்று திரும்பி கொண்டனர்.

ரியா தன்னிடம் இருந்த டிபன் பாக்ஸை மதுவிடம் கொடுத்துவிட்டு மது கொண்டு வந்த இரண்டு டிபன் பாக்ஸில் ஒன்றை ரியாவும் இன்னொன்றைப் பவனிடமும் கொடுத்து…. “இந்தா இப்ப சாப்பிடு. நான் எப்பவுமே கம்மியாத்தான சாப்பிடுவேன். மது என் டிபன் பாக்ஸ் ஃபுல்லாவே சாப்பிடட்டும் ஓகேவா…. இப்போ திருப்தியா உனக்கு,” என்று கேட்டால் பவனிடம். அவனும் சிரித்துக் கொண்டே சரி என்று தலையாட்டியவன் மது கொண்டு வந்திருந்த சாப்பாட்டைச் சாப்பிட ஆரம்பித்தான். பிறகு மூவரும் பேசிக்கொண்டு சாப்பிட அவ்வப்போது மதுவும் பவனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு சாப்பிட்டு கொண்டு இருந்தனர்.

சாப்பிட்டு முடித்து எழுந்து டிபன் பாக்ஸைக் கழுவ மூவரும் செல்ல… பவனிடம் இருந்து டிபன் பாக்ஸை வாங்கிக் கொண்ட மது. “இல்ல பரவால்ல நானே கழுவி வைக்கிறேன். உங்களுக்கு டைம் ஆயிடும். பாஸ் லேட்டா போனா கோச்சுக்குவாரு. நீங்க கிளம்புங்க,” என்று மது பவனைப் போகச் சொன்னாள். பவனும் தன் வாட்சில் மணியைப் பார்க்க அரை மணி நேரம் கடந்து விட்டதை உணர்ந்தவன், “ஓகே தேங்க்ஸ் மது,” என்று சொல்லிவிட்டு வேகமாகச் சென்று கை கழுவியவன் வெளியே வந்து மதுவைப் பார்த்து, “சாப்பாடு நல்லா இருந்தது. ரொம்ப தேங்க்ஸ் மது,” என்று சொல்லி மதுவைப் பார்த்துச் சிநேகமாகச் சிரித்தவன் அங்கிருந்து சென்று விட்டான்.

அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் பார்வையைப் பரிமாறிக் கொண்டதும்….. சாப்பிடும்போது அடிக்கடி ஒருவரை மாற்றி ஒருவர் பார்த்துக் கொள்வதும்…. இப்போது மது அவனிடம் கரிசனமாக நடந்து கொள்வதையும் பார்த்த ரியா. மதுவின் அருகில் வந்து, “என்ன மது? உனக்கும் பவனுக்கும் நடுவுல என்ன நடக்குது…. நானும் கவனிச்சிட்டே தான் இருக்கேன். ரெண்டு பேரும் முதல்ல எப்பவுமே சண்டை போட்டுக்கிட்டு இருப்பிங்க. ஆனா இப்போ நீ என்னமோ அவனுக்காக இறக்கப்பட்டுக் சாப்பாடு கொடுக்கிற. அவன் சாப்பாடு நல்லா இருக்குதுன்னு சொல்லிட்டு உன்னைப் பார்த்து ஒரு மாதிரி சிரிச்சுட்டுப் போறான்,” என்று கேட்டால் ரியா.

“ஏய் ரியா அதெல்லாம் ஒன்னும் இல்ல.. சும்மா நீயா எதுவும் கற்பனை பண்ணிட்டு இருக்காத. பாவம் அவர் வீட்டில் அவங்க அம்மாவுக்கு உடம்பு முடியல. அவரே கொஞ்சம் சிரமப்பட்டுத் தான் எல்லா வேலையும் செஞ்சுட்டு வராரு. என் வீட்டு எதிர்லதான இருக்காரு. அப்படி இருந்து அவர் சாப்பிடாமல் போறப்ப நான் பார்த்துட்டுச் சாப்பாடு கொடுக்காம இருந்தா நல்லா இருக்காது இல்லையா. அதனால தான் பவனுக்குச் சாப்பாடு கொடுத்தேன்,” என்று சொன்னால் மது.

“சரி சரி… ஏதோ நீ சொல்ற. நானும் நம்புறேன்,” என்று சொல்லிவிட்டு ரியா மதுவின் கையோடு தன் கையை கோர்த்து அழைத்துக் கொண்டு ஆஃபீஸிற்குள் சென்றாள்.


ஆதியுடன் போதி சுவிட்சர்லாந்து வந்துவிட…. சங்கவி அவர்களோடு சேர்ந்து புதிதாகத் துவங்கி உள்ள பிசினஸ் பற்றி நிறையக் கற்றுக் கொண்டாள். போதிக்கும் இதுதான் முதன்முறை ஆடை சம்மந்தப்பட்ட பிசினஸ் செய்வது என்பதால், ஒவ்வொன்றையும் மிகவும் கவனமாகக் கற்றுக் கொண்டு வந்தான். ஆதிக்கும், போதியும் நிறைய நேரம் செலவிடுவதால் சங்கவியை இருவரும் அவ்வளவாகக் கண்டுகொள்வது இல்லை.

கிட்டத்தட்ட…. இங்கே வந்த வேலை தொண்ணூறு சதவிகிதத்திற்கும் மேலே முடிந்து விட… ஆதி போதியிடமும், சங்கவியிடமும் மற்ற வேலைகளை கவனிக்கச் சொல்லிவிட்டு ஆதி வேறு ஒரு பிசினஸ் விஷயமாக ஜெர்மன் சென்றான். போதி சங்கவியுடன் நட்புப் பாராட்டி இருக்க… இருவரும் அவ்வப்பொழுது சேர்ந்து வெளியே செல்வது, டின்னெர் சாப்பிடுவது என்று வேலைகளுக்கு இடையே வெளியேவும் சென்று வந்து கொண்டு இருந்தனர்.

போதிக்கு ஆதி துர்காவைத் திருமணம் செய்து கொண்ட விஷயம் தெரியாது என்று சங்கவிக்குத் தெரியாது. அவன் இங்கு வந்த நாளில் இருந்து தினமும் இரண்டு முறையாவது துர்காவுடன் போனில் பேசிவிடுவான். அது ஆதிக்குத் தெரிந்தும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. சங்கவி இதை எல்லாம் பார்த்துவிட்டு ஆதி இந்த பிசினஸிற்காக போதி துர்காவுடன் பேசுவதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்று நினைத்துக் கொண்டு இருந்தாள் சங்கவி.

ஆனால் துர்காவிடம் போதி மிகவும் நெருகிய நண்பன் போல அடிக்கடி போனில் பேசிக்கொண்டு இருப்பதை கவனித்த சங்கவிக்கு இவனுக்கும் துர்காவிற்கும் எப்படி இவ்வளவு நெருங்கிப் பழகும் அளவிற்கு அப்படி என்ன இவர்கள் இருவருக்குள்ளும் இருக்கிறது என்று யோசிக்க ஆரம்பித்து விட்டாள்.

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured