EPI 270
விசாலாட்சியும் வெங்கடாச்சலமும் மணவரையில் அமர்ந்திருக்க… விசாலாட்சியின் அருகில் கனகாவும் சிவகாமியும் துணைப் பெண்களாக நின்றிருந்தனர்.
வெங்கடாச்சலத்தின் அருகில் துரையும் வேதாச்சலமும் நின்று பேசிக் கொண்டிருந்தனர்.
“என்ன வெங்கடாச்சலம்! 60 வயதாகியும் இன்னும் அதே இளமையோடு இருக்கியே? அது எப்படி உன்னால மட்டும் எப்பவும் இப்படி இருக்க முடியுது? எங்களுக்கும் ஏதாவது டிப்ஸ் கொடுத்தா, நாங்களும் உன்னை மாதிரி வயசான பிறகும் இப்படி கட்டு மஸ்தான உடலோடு இருப்போமே?” என்று வேதாச்சலம் வெங்கடாச்சலத்தை கிண்டல் அடித்தார்.
“அண்ணா, நீங்க என்ன நினைச்சாலும் என் மாமா அளவுக்கு உங்களால ரொம்ப ஃபிட்டாக வைத்துக்கொள்ள முடியாது. அவர் என் அக்காவைக் கல்யாணம் பண்ணினதிலிருந்து அப்படித்தான் இருக்காரு” என்று துரை வெங்கடாச்சலத்திற்கு சப்போர்ட் செய்து பேசினார்.
“நீ இருக்கும் போது இதையெல்லாம் நான் பேச வேண்டாம் பாரு. நீ எப்படியும் உன் அக்கா புருஷனுக்குத் தானே சப்போர்ட் பண்ணிப் பேசுவ? உன்னை வச்சுட்டு எதுவுமே பேசக் கூடாதுடா” என்றால் வேதாச்சலம்.
“அட, இரண்டு பேரும் கொஞ்ச நேரம் அமைதியா இருங்க. இந்த ஐயர் ஏதேதோ மந்திரம் எல்லாம் சொல்றாரு. நீங்க ரெண்டு பேரும் பேசுறதில்ல அவர் சொல்றது எனக்குச் சரியாக காதில் விழ மாட்டேங்குது” என்றார் விசாலாட்சி.
அவர் அதைவிடவும் இருவரும் அமைதியாகிவிட, இவர்கள் எல்லாம் மேடையில் நின்று ஒருவரை ஒருவர் கிண்டல் செய்து பேசிக் கொண்டிருப்பதை கீழே இருந்து வந்திருந்த சொந்தங்களும் அவர்களுடைய குடும்பங்களும் பார்த்துச் சந்தோஷப்பட்டுக் கொண்டிருந்தது.
ஆனால் இங்கே ஒருத்தி மட்டும் இவர்கள் அனைவரும் சந்தோஷமாக இருப்பதைப் பார்த்து வயிறு எரிந்து கொண்டு இருந்தால், அது வேறு யாருங்க, சங்கவி தான். அவளுக்குத்தான் யாராவது சந்தோஷமா இருந்தாலே பிடிக்காதே.
‘எல்லாரும் ரொம்ப சந்தோஷமா இருக்காங்க, இருக்கட்டும். இன்னும் கொஞ்ச நேரம் தான். இனி சந்தோஷத்தை எல்லாம் அவங்களே நினைச்சாலும் அவங்க வாழ்க்கையில கொண்டு வரவே முடியாது. இவங்க எல்லாரையும் இன்னைக்கு நான் ஒரு வழி பண்ணிட்டுத் தான் அடுத்த வேலை பார்க்கப் போறேன்’ என்று மனதிற்குள் கருவிக்கொண்டு இருந்தால் சங்கவி.
இப்போது எல்லோரும் மணவரையில் கூடியிருக்க, சங்கவி மட்டும் யாருக்கும் தெரியாமல் தன் மொபைலை எடுத்துக்கொண்டு மண்டபத்தில் இருந்து வெளியே வந்தாள்.
வெளியே வந்தவள் இந்தக் திருமணத்திற்குள் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக ஏற்பாடு செய்திருந்த நபருக்குக் கால் செய்தால்.
“என்னையா! நான் சொன்னதை எல்லாம் சரியா செஞ்சியா இல்லையா? இன்னும் எவனையுமே மண்டபத்துக்குள்ள காணோமே! இவனுக்கு எல்லாம் வந்த பிறகு தானே நான் நினைச்சதை நடத்த முடியும்? இந்தக் ஆதிக்கும் கதிரும் அவன சுத்தி இருக்கிறவங்களையும் லேசுல ஏமாத்திட முடியாது. அவங்க கண்ணுல மண்ணைத் தூவிட்டு நான் சொன்ன ஆளுங்களையெல்லாம் மண்டபத்துக்குள்ள இருக்கிறியா இல்லையா?” என்று கோபமாகப் பேசிக் கொண்டிருந்தால் சங்கவி.
“நீங்க சொன்ன மாதிரியே அவங்கள மண்டபத்துக்குள்ள இறக்கியாச்சு. நீங்க சொன்ன ஆட்களையும் கூட்டிட்டு வந்து நாங்க மண்டபத்துக்குள்ள இருக்கிற ஒரு ரூம்ல தான் அடிச்சு வச்சிருக்கோம். இன்னும் கொஞ்ச நேரத்துல நம்ம பசங்க உங்ககிட்ட வந்து விஷயத்தை சொல்லுவாங்க” என்று போனில் மறுமுனையில் பேசிக் கொண்டிருந்தவன் சங்கவியிடம் கூற.
“பரவாயில்லையே! நான் நினைச்சதை விட வேகமாத் தான் வேலை செய்றீங்க. உண்மையாவே நான் சொன்ன விஷயத்தைச் செய்து முடித்து விட்டீர்களா? நான் போய் என்னோட வேலையை ஆரம்பிச்சிடலாமா?” என ஆர்வமாகக் கேட்டாள் சங்கவி.
“மேடம், இவ்வளவு நேரம் பொறுமையா இருந்துட்டீங்க. இன்னும் கொஞ்ச நேரம் தானே? நம்ம பசங்க வந்து உங்ககிட்ட சிக்னல் கொடுத்ததும் நீங்க உங்க வேலையை ஆரம்பிச்சுடுங்க. அதுக்கப்புறம் எந்தப் பிரச்சனையும் வராது. கொஞ்சம் பொறுமையா இருங்க” என்றார்.
“சரி சரி, நான் மண்டபத்துக்குள்ள வெயிட் பண்றேன். நீ நம்ம ஆளுங்ககிட்ட சொல்லி, நான் சொன்ன வேலையெல்லாம் முடிச்ச பிறகு எனக்கு ஒரு சிக்னல் மட்டும் கொடுக்கச் சொல்லு. மற்றத நான் பார்த்துக்கிறேன்” என்றாள்
போன் பேசிவிட்டு மண்டபத்திற்குள் சிரித்த முகமாகச் சங்கவி வர, இவ்வளவு நேரம் அவளைத் தேடிக் கொண்டிருந்த செண்பகம் சங்கவி உள்ளே வருவதைப் பார்த்ததும், “ஏன் சங்கவி, அதுக்குள்ள எங்க போயிட்ட? இங்க வா! நமக்கு நிறைய வேலை இருக்கு. நீ வந்ததுல இருந்து எதுவும் செய்யாமல் இப்படி ஓரமா போய் உட்கார்ந்து இருந்தால் என்ன நினைப்பாங்க?” என அவளைக் கடிந்து கொண்டு மண்டபத்திற்குள் அழைத்துச் சென்றார் செண்பகம்.
சங்கவி செண்பகம் பேசுவதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், ‘இன்னும் சற்று நேரத்தில் நடக்கப் போகிறது’ என்ற சந்தோசத்தில் செண்பகத்துடன் மண்டபத்திற்குள் சென்றாள்.
அவள் அங்கு வரவும், மாலையுடன் மண்டபத்திற்கு வந்த போதியை அழைத்துக் கொண்டு துர்கா ஆதி இருந்த இடத்திற்குச் சென்றனர்.
போதியைப் பார்த்ததும் துர்கா, “இதுதான் வர நேரமா? உன்னை நான் இந்நேரத்திலே வரச் சொன்னேன் இல்லையா? இப்படித்தான் லேட்டா வருவியா?” என்று அவனிடம் கோபமாகத் துர்கா பேச.
“நல்லா கேளுங்க அக்கா, லேட் ஆயிடுச்சு சீக்கிரம் போலாம்னு இவரை எவ்வளவு அவசரப்படுத்தினேன். ஆனா இவர்தான் ரொம்ப அசால்ட்டா கிளம்பி வந்தாரு” என மாதவி போதியைப் போட்டுக் கொடுத்தாள்.
அவளைத் திரும்பி முறைத்த போதி, ‘உனக்கு இருக்கு’ என கண்களாலேயே அவளை மிரட்டியவன், “அதெல்லாம் எதுவும் இல்ல துர்கா. கொஞ்சம் டிராபிக், அதான் லேட்டாயிடுச்சு” என்று சொல்லிச் சமாளித்தான்.
“சரி சரி, நீயும் ஆதிக்கும் பேசிட்டு இருங்க” என்ற துர்கா மாதவியின் கையைப் பிடித்து, “நீ வா” என அவளைத் தன்னோடு அழைத்துச் சென்றாள்.
செண்பகம் சங்கவியை அழைத்துக் கொண்டு உள்ளே வரவும், துர்கா மாதவி உடன் கைகோர்த்த படி பேசிக்கொண்டே உள்ளே செல்லவும் சரியாக இருந்தது.
துர்காவும் மாதவியும் ஒன்றாகக் கைகோர்த்துச் சிரித்தபடி பார்த்த சங்கவிக்கு வயிற்றுக்குள் புகைச்சல் எடுக்க ஆரம்பித்தது.
அவர்கள் சிரித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தவளுக்கு எரிச்சலாக இருந்தது. ‘ம்ஹும்… இந்த ரெண்டு வேலைக்காரிகளும் ஆட்டம் போடுறது பார்க்கவே சகிக்கல’ என நினைத்துக் கொண்டவள், ‘எடுங்கடி உங்க ரெண்டு பேரோட ஆட்டத்தையும். இன்னும் கொஞ்ச நேரத்துல மொத்தமா நிறுத்தி வைக்கப் போறேன்’ என்றால்.
மாதவி சங்கவியைப் பார்த்ததும் துர்கா உடன் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தவள் முகம் அப்படியே பயத்தில் கருத்து விட்டது. அவளை அவ்வளவு தூரம் மிரட்டி வைத்து இருந்தாள். இதைக் கவனித்த துர்கா மாதவியின் கையை ஆதரவாகப் பற்றிக்கொண்டு, “இன்னமும் நீ இவளுக்காகப் பயந்துட்டு இருக்கியா? உனக்கு ஒரு குடும்பம், உன்னைப் பார்த்திருக்கேன்னு ஒருத்தர் இருக்கும்போது நீ யாரைக் கண்டு பயப்படனும்னு அவசியம் இல்லை. நீ வா” என்று சங்கவி பார்க்காத படி பேசியவள் மாதவியை இழுத்துக் கொண்டு நடக்கச் சென்றாள்.
ஆனால் சங்கவி இவள் பேசுவதைக் கேட்டு ஆத்திரமடைந்தவள், மாதவியைக் கண்களைக் காட்டி உருட்டி மிரட்டினாள்.
துர்கா முன்னே சென்று கொண்டிருக்க, அவள் பின்னால் சென்ற மாதவி சங்கவியின் மிரட்டலைப் பார்த்துப் பயந்தவள் வேகமாகத் துர்காவின் பின்னால் ஓடி அவள் கையைப் பிடித்துக் கொண்டாள்.
கீர்த்திகாவை போலத் தன்னைச் சார்ந்து தன்னோடு ஒட்டிக் கொள்ளும் மாதவியைப் பார்த்து துர்காவுக்குச் சந்தோசமாக இருந்தது.
ஐயர் மந்திரங்கள் எல்லாம் ஓதி வெங்கடாச்சலம் விசாலாட்சிக்குச் செய்ய வேண்டிய திருமணம் சம்பந்தமான சடங்குகளை எல்லாம் செய்தவர், அவர்கள் இருவருக்கும் வேறு உடை கொடுத்து அதை மாற்றிக் கொண்டு வரச் சொன்னார்.
இருவரும் சென்று உடை மாற்றிவிட்டு, பட்டுச் சட்டையில் வெங்கடாச்சலமும் பட்டுச்சேலையும் அழகாகத் தலை சீவிப் பின்னலிட்டுப் புதுப் பெண் போல அலங்கரிக்கப்பட்ட விசாலாட்சியும் மேடைக்கு வந்தனர்.
அவர்கள் இருவரையும் அப்படிப் பார்த்த ஆதி, கதிர் ஒருவரை ஒருவர் பார்த்துச் சந்தோசமாகச் சிரித்துக் கொள்ள, துர்கா, கீர்த்திகா வேகமாக விசாலாட்சிடம் வந்து, “அத்தை! நீங்க இன்னைக்கு உண்மையாவே புதுப் பொண்ணு போல அழகா இருக்கீங்க. உங்களுக்கு வயசான மாதிரியே தெரியல” என்றார்கள்.
அங்கே வந்த ராதாவும், “ஆமா துர்கா அக்கா! அத்தை நம்ம எல்லாருக்குமே டஃப் கொடுப்பாங்க போல இருக்கு. பாருங்க, லைட்டா பட்டி டிங்கரிங் பார்த்து நகை எல்லாம் போட்டதும் அத்தை 40 வயசு குறைஞ்ச மாதிரி இருக்காங்க” என்று ராதா கிண்டல் செய்ய….
அவளைத் தோளில் அடித்த விசாலாட்சி, “நீ வாழு! வாயை வச்சுக்கிட்டு சும்மா இருக்க மாட்டியா? இப்படித்தான் ஏதாவது பேசிட்டே இருப்பியா?” என அவளை அடக்கினார்.
“போ… அத்தை! உன்னை நான் கிண்டல் செய்யாம வேற யாரு கிண்டல் செய்வா? இன்னைக்கு விட்ட அப்புறம் உன்னை எப்படி கிண்டல் செய்ய எனக்கு வாய்ப்பே கிடைக்காது? அதனால நீ என்ன எப்படித் திட்டினாலும், அடிச்சாலும் பரவாயில்லை. நான் உன்னை விடுறதா இல்லை” என்று மேலும் விசாலாட்சியைப் பேசி கிண்டல் செய்து அவரை வெட்கப்பட வைத்தாள் ராதா.
‘ஐயோ! இந்தக் கிழவி வெட்கப்படறதை எல்லாம் நான் பார்க்க வேண்டி இருக்கு’ என்று புலம்பிய சங்கவி, ‘இவனுங்க என்ன இன்னும் ஆளைய காணோம்?’ என்று தன் மொபைலை எடுத்து அழைக்கப் போக… அவள் அருகில் நின்றிருந்த செண்பகம் சங்கவியின் கையில் இருந்த மொபைலைப் பிடுங்கி வைத்துக்கொண்டு, “சும்மா நானும் வந்ததுல இருந்து பார்த்துட்டே இருக்கேன். அப்படி யார் கூட நீ போன் பேசிக்கிட்டே இருக்க? முதல்ல விசேஷம் முடியறவரைக்கும் கொஞ்சம் பொறுமையாக இரு. அதுக்கப்புறம் ஏதாவது இருந்தாலும் நீ பேசிக்கோ” என்று அதை அவளிடம் தர மறுத்து அதைத் தன்னிடத்தில் சொருகிக்கொண்டார்.
‘இந்த அம்மாவுக்கு மேல நேரம் காலமே தெரியாது. எப்ப பார்த்து என் போனை புடுங்கி வெச்சிடுச்சு. இப்ப நான் எப்படி அவங்ககிட்ட பேசுவேன்?’ என்று மண்டபத்திற்குள் அவள் ஏற்பாடு செய்திருந்த ஆட்கள் யாரேனும் வருகிறார்களா என நோட்டம் விட்டாள் சங்கவி.
மண்டபத்தில் அமர்ந்திருந்தவர்களுக்கு இடையே தன்னுடைய ஆட்கள் யாரேனும் இருக்கிறார்களா எனப் பார்த்துக்கொண்டே வந்தவள், அப்போதுதான் மண்டபத்திற்குள் நுழைந்த மரகதத்தையும் அபியையும் பார்த்தாள்.
அவர்கள் இருவரையும் பார்த்த சங்கவி, ‘வெரி குட்! நான் சொன்னது போலவே ரெண்டு பேரும் சரியான டைமுக்கு வந்துட்டாங்களே. இனி கொஞ்சம் கொஞ்சமா நான் நினைக்கிறது எல்லாம் நடத்திக்கலாம்’ என மனதிற்குள் கருவிக்கொண்டாள்.
திருமண மண்டபத்திற்குள் வந்த மரகதமும் அபியும் நின்ற இடத்தில் இருந்து தங்கள் பார்வையை மேடையில் பதிய விட்டு இருந்தனர். சந்தோசமாக வெங்கடாச்சலம் விசாலாட்சியைப் பார்த்து ஏதோ கிண்டல் பேசிச் சிரித்துக் கொண்டு இருக்க, அதை பார்த்து மரகதத்திற்கு ஆத்திரமாக வந்தது. தான் இருக்க வேண்டிய இடத்தில் விசாலாட்சி இருப்பதைக் கண்டு அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
மரகதம் சற்று போகும் வேகத்துடன் வந்தவராக மேடையை நோக்கிச் செல்லப் போக… அவர் கையைப் பிடித்துத் தடுத்து நிறுத்திய அபி, “அம்மா! கொஞ்ச நேரம் அமைதியா இருங்க. அவசரப்படாதீங்க… இன்னும் கொஞ்ச நேரத்துல நம்ம நினைச்சதெல்லாம் நடக்கப் போகுது. நீங்க கவலைப்படாதீங்க” என்றால்.
“நீ சொன்னதுக்காகத் தான் அது நான் பொறுமையா இருக்கேன். இல்லன்னா இந்தக் கன்றாவியா எல்லாம் நான் ஏன் பார்த்துட்டு இருக்கப் போறேன்?” என்றார் மரகதம்.
“சரி விடுமா. இன்னும் கொஞ்ச நேரம் தானே? அப்புறம் எல்லாம் சரியாயிடும்” எனச் சமாதானம் செய்து மரகதத்தை ஒரு சேரில் அமர வைத்து அவர் அருகில் அபியும் அமர்ந்து கொண்டாள்.
