Episode 3
சரியாக நான்கு மணிக்கு வீரா மண்டபத்திற்குள் நுழைந்துவிட்டான். மண்டபத்திற்குள் நுழையும்போது, வீராவின் பின்னால் இருவர் பேசிக்கொண்டு வரும் குரல் கேட்டுத் திரும்பிப் பார்த்தான். அங்கே கவின், ராகவ் இருவரும் அவன் பின்னால் நடந்து வந்தனர்.
அவர்களைப் புருவம் சுருக்கி வீரா பார்க்க, “என்ன மச்சான் அப்படிப் பார்க்கிற? எங்ககிட்ட சொல்லாம கொள்ளாம நீ எதையுமே செய்ய மாட்டியே. அப்படியே நீ சொல்லலைனாலும், அதைத் தெரிஞ்சுகிட்டு வருவதுதானே எங்க வேலை?” என்று இருவரும் சிரித்தனர். இறுக்கமான முகத்தோடு அவர்களைப் பார்த்தவன், திரும்பி வேகமாக மண்டபத்திற்குள் நுழைந்தான்.
வந்தவன் முதல் வரிசையில் அமர்ந்திருந்த தன் நண்பர்கள் குழுவைக் கண்டதும், அவர்களுடன் சேர்ந்து அமர்ந்தான். அவன் பின்னால் வந்த கவின், ராகவ் இருவரும் மித்திரனோடு அமர்ந்து பேசிக் கொண்டிருந்த ஸ்ரீயிடம் வந்தனர்.
“ஏண்டா, இந்தக் கல்யாணத்துக்கு வந்துட்டு எதுக்காக செல்ஃபி எடுத்து குரூப்ல போட்டீங்க?” என்றான் கவின்.
“ஏண்டா கவின், வழக்கமா நம்ம ஃப்ரெண்ட்ஸோட ஃபங்ஷனுக்கோ, மேரேஜ்க்கோ எங்க போனாலும், யாரெல்லாம் வந்திருக்கோமோ எல்லாரும் சேர்ந்து குரூப்பா போட்டோ எடுத்து போஸ்ட் பண்றதுதானே வழக்கம்? அதேதானே இன்னைக்குச் செய்தோம்?” என்றான் ஸ்ரீ புரியாமல்.
“நீங்க குரூப்ல இத்தனை நாள் போட்ட போஸ்ட் எல்லாம் பார்த்துட்டு, வீரா எங்கேயாவது வந்திருக்கானா?” என்றான் கவின்.
“இல்லைடா, அதுதான் எங்களுக்கும் ஆச்சரியமா இருக்கு. இதுவரைக்கும் எங்கேயுமே வராத வீரா, இந்தக் கல்யாணத்துக்கு மட்டும் எப்படி வந்தான்?” என்றான் யோசித்தபடி.
“எதுக்கு வந்தான்னு என்கிட்ட கேக்குறியா? இன்னும் கொஞ்ச நேரத்துல அவன் ஏன் இந்தக் கல்யாணத்துக்கு வந்தான்னு உங்க எல்லாருக்கும் தெரியும். வெயிட் அண்ட் வாட்ச்!” என்றான் ராகவ்.
ஸ்ரீ குழப்பமாக அவர்களைப் பார்க்க, “எங்களைப் பார்க்காதே, மேடையைப் பாரு. இன்னும் கொஞ்ச நேரத்துல என்ன வேணாலும் நடக்கலாம். நீ கண் இமைக்கும் நேரத்துல எதையும் மிஸ் பண்ணிடாதே, ஓகேவா?” என்று கவின் அவன் முகத்தைப் பிடித்து மேடையை நோக்கித் திருப்பி வைத்தான்.
இங்கே மித்ரன் வீராவிடம், “டேய், என்னடா, வந்ததுல இருந்து முகத்தை இறுக்கமா வச்சிருக்க?” என்றான்.
வீரா எந்தப் பதிலும் பேசாமல், மணமேடையில் அமர்ந்திருந்த மணமக்களையே பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான்.
“என்னடா, எதுவுமே பேச மாட்டேங்குற?” என அவனை கடிந்து கொண்ட மித்ரன், “சரிடா, சாரி. உன்கிட்ட சொல்லாம இந்த ஃபங்ஷனுக்கு வந்தது என்னோட தப்புதான். உனக்கும் பூவிழிக்கும் இடையில் பேச்சுவார்த்தையே இல்லைன்னு எனக்கு நல்லா தெரியும். நீங்க ரெண்டு பேரும் சண்டை போட்டுக்கிட்டுப் பிறகு, அவளைப் பத்தி இதுவரைக்கும் நீ ஒரு வார்த்தை கூட என்கிட்ட கேட்டதே இல்லை. அப்படி இருக்கும்போது, அவ கல்யாணத்துக்கு நாங்க வந்ததை எப்படி உன்கிட்ட சொல்ல முடியும்?” என்றான்.
“பரவாயில்லை, அதான் எனக்குத் தெரிஞ்சிருச்சே. எங்க ஃப்ரெண்ட்ஷிப் கட் ஆகி எத்தனையோ வருஷம் ஆயிடுச்சு. அதுக்காக அவ கல்யாணத்துக்குக் கூடவா என்னை இன்வைட் பண்ண அவளுக்குத் தோணல? அந்த அளவுக்கு இன்னமும் என் மேல் அவ கோவமா இருக்காளா? அதைக் கேட்டுட்டுப் போகதான் இங்கே வந்தேன்,” என்றான் வீரா.
“டேய்… டேய்… எதுவும் அவ கிட்ட பேசிப் பிரச்சனை வளர்த்து விட்டுடாதே, வீரா. அவளுக்கு இன்னைக்குக் கல்யாணம். ஆனால் பாரு, கல்யாணப் பொண்ணுக்கான எந்த ஒரு சந்தோஷமும் இல்லாம அவ முகம் எப்படி இருக்குன்னு!” என்று மித்ரன் சொல்ல,
“நானும் கவனித்தேன்,” என்பது போல வீரா தலையை ஆட்டினான்.
“ஏன், அவளுக்கு இந்தக் கல்யாணத்துல எதுவும் பிரச்சனையா?” என்றான் வீரா.
“ரொம்ப பெரிய பிரச்சனை எல்லாம் இல்லைடா. அவளுக்கு இப்போதைக்குக் கல்யாணம் வேண்டாம்னு சொல்லிட்டு இருந்தா. ஆனால் அவளோட அம்மாவுக்கு உடம்பு கொஞ்சம் மோசமா இருக்கு. அதனால அவங்க சொத்துக்கள் எல்லாம் வெளியே யாருக்கும் போயிடக் கூடாதுன்னு சொந்தத்திலேயே ஒரு பையனைப் பார்த்து அவளுக்குத் திடீர்னு கல்யாணம் முடிவு பண்ணிட்டாங்க. அதுதான் அவளுக்கு டென்ஷன்னு நினைக்கிறேன்,” என்றான் மித்ரன்.
அவனை அதிசயமாக வீரா திரும்பிப் பார்க்க, அவன் பார்வையில் இருந்த அர்த்தத்தைப் புரிந்து கொண்ட மித்ரன், “சாரிடா மாப்பிள்ளை. உனக்கும் அவளுக்கும் தானே பிரச்சனை? அதுக்காக நான் அவ கூட பேசாம இருக்க முடியுமா? அவளும் என்னோட ஃப்ரெண்ட்தானே? நாங்க ரெண்டு பேரும் மீட் பண்ணிப் பேசிப்போம். இந்த மேரேஜைப் பத்தி இன்ஃபார்ம் பண்ண எனக்குக் கால் பண்ணியிருந்தா. அப்போதான் பூவிழி என்கிட்ட விஷயத்தைச் சொன்னா,” என்றான்.
“சரி,” என்று தலையாட்டிய வீரா, பார்வையை மீண்டும் மேடையில் பதட்டமான முகத்தோடு அமர்ந்திருந்த பூவிழியின் மேல் பதியவிட்டான்.
பூஜைகள் எல்லாம் செய்து ஐயர் பூவிழியின் கையில் முகூர்த்தப் பட்டை கொடுத்து, “சீக்கிரம் மாத்திட்டு வாங்கோ. நாழி ஆயிட்டு இருக்கு,” என்றார்.
பூவிழியின் கைப்பிடித்து ஒரு பக்கம் லட்சுமியும், மறுபக்கம் ரசிகாவும் அவளை உடை மாற்ற மணமகள் அறைக்கு அழைத்துச் சென்றனர். பூவிழி சென்ற பிறகு, தன் பார்வையை மொபைலில் பதியவிட்டான் வீரா.
இவ்வளவு நேரம் கலகலவெனப் பேசிக்கொண்டு, திருமணத்திற்கு வந்திருந்தவர்களை கிண்டல் செய்து கொண்டிருந்த நண்பர்கள் வட்டம், வீரா வந்ததும் அப்படியே அமைதியாக இருந்தது. என்றுமே வராதவன் இன்று எதற்காக வந்திருக்கிறான் என அனைவரும் குழப்பத்தில், கவினையும் ராகவையும் பிடித்து கேள்விகளால் அவர்களை நச்சரித்துக் கொண்டிருந்தனர்.
சிறிது நேரத்தில் பட்டுப்புடவையை மாற்றிவிட்டு, மணமகள் அறையில் இருந்து வெளியே வந்த பூவிழியை மேடை ஏறியதும், மாப்பிள்ளை அருகில் வந்து அமர வைத்தனர் லட்சுமியும் ரசிகாவும். மாப்பிள்ளை அருகில் அமர்ந்து தலை குனிந்து இருக்க வேண்டிய மணமகள், மேடைக்குக் கீழே அமர்ந்திருந்தவர்களைத் தன் பார்வையால் மேயவிட்டபடி பதட்டமாக அமர்ந்திருந்தாள் பூவிழி.
சரியாக வீரா இருந்த இடத்திற்கு வந்ததும், அவன் மேல் அவள் பார்வை நிலை குத்தி நின்றது. அவனைப் பார்த்ததும் பூவிழிக்கு மேலும் பதட்டம் அதிகரித்தது. வீராவும் அவள் மேல் பதித்திருந்த தன் பார்வையை அகற்றாமல் பூவிழியையே பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான்.
அதைக் கவனித்த மித்ரன், “டேய், என்னடா நடக்குது? பூவிழி அங்க இருந்து உன்னையே பார்த்துட்டு இருக்கா. எதுவும் பிரச்சனை பண்ணிடாதேடா மாப்பிள்ளை, ப்ளீஸ்,” என்றான் வீரா கையைப் பிடித்துக் கொண்டு.
“நான் எந்தப் பிரச்சனையும் பண்ண இங்கே வரல மித்ரன்,” என்றான் பார்வையை பூவிழி மீது இருந்து அகற்றாமல்.
வீரா தாண்டி அமர்ந்திருந்த கவின், ராகவ் இருவரையும் எட்டிப் பார்த்து, தன் மொபைலை ஆட்டி, தான் அனுப்பிய மெசேஜைப் பார்க்கும்படி ஜாடை செய்தான். கவின் மொபைலை ஓபன் செய்து பார்க்க, அதில் மித்ரன் அவனுக்கு மெசேஜ் அனுப்பியிருந்தான்: “டேய், இவனை எதுக்குடா இங்கே கூட்டிட்டு வந்தீங்க? இங்கே எதுவும் பிரச்சனை நடந்துச்சுன்னா, யாருடா பூவிழிக்கு பதில் சொல்றது?”
அதற்கு கவின், “குரூப்ல நீங்க எல்லாரும் சேர்ந்து செல்ஃபி எடுத்துப் போடும்போதே யோசிக்கணும். இப்ப யோசிச்சு எந்தப் பிரயோஜனமும் இல்லை,” என்று ரிப்ளை செய்திருந்தான்.
அதைப் பார்த்த மித்ரன், “எனக்கு என்னடா தெரியும்? இந்த ஸ்ரீ இப்படி ஒரு வேலையைப் பண்ணி வைப்பான்னு!” என்று பதில் அனுப்பியிருந்தான்.
இவர்கள் இருவரும் மொபைலில் மாறி மாறி மெசேஜ் அனுப்பிக் கொண்டிருக்க, திடீரென மண்டபமே அமைதியானது போல மூவரும் உணர்ந்து, தங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்று பார்த்தனர். திருமணத்திற்கு வந்திருந்தவர்கள் எல்லாம் அதிர்ந்து மேடையைப் பார்த்துக் கொண்டிருக்க, அங்கே பூவிழியின் கழுத்தில் வீரா தாலி கட்டிக் கொண்டிருந்தான்.
அதைப் பார்த்த மூவரும் அதிர்ச்சியில் எழுந்து நிற்க, ஸ்ரீ வேகமாக மித்ரனிடம் வந்து, “டேய், இவன் இங்க தாண்டா உட்கார்ந்து இருந்தான். எப்படா மேடை ஏறினான்? அதுவும் இல்லாம, பூவிழி கழுத்துல இவன் தாலி கட்டிட்டு இருக்கான். என்னடா நடக்குது இங்கே?” என்றான் அதிர்ச்சியாக.
அதைவிடப் பேரதிர்ச்சி, தன் கழுத்தில் வீரா தாலி கட்டிக் கொண்டிருக்க, அதற்கு எந்த மறுப்பும் தெரிவிக்காமல் பூவிழி அமைதியாக நின்றதுதான்.
தாலி கட்டி முடித்ததும், பூவிழியின் கையைப் பிடித்து மணமேடையில் இருந்து வீரா இறங்கி வர, அவளும் எந்த மறுப்பும் தெரிவிக்காமல் இறங்கி வந்தாள். மேடையை விட்டு நேராக மித்ரன், ஸ்ரீ நண்பர்கள் இருந்த இடத்திற்கு வந்தவன், அவர்களைப் பார்த்து ஒரு புன்னகை மட்டும் உதிர்த்துவிட்டு, மண்டபத்தை விட்டு பூவிழியை அழைத்துக் கொண்டு வேகமாகக் கிளம்பினான்.
அவனைத் தடுக்கவோ, எதிர்த்து நிற்கவோ அங்கே யாருமே வரவில்லை என்பதுதான் ஆச்சரியத்திலும் ஆச்சரியமான விஷயம். மாப்பிள்ளையோ, மாப்பிள்ளை வீட்டாரோ, பூவிழி குடும்பத்தைச் சேர்ந்தவர்களோ என யாருமே வீரா பூவிழி கழுத்தில் தாலி கட்டி அவளை மண்டபத்தில் இருந்து அழைத்துச் சென்றதைத் தடுக்கவே இல்லை.
