தப்பு 47
“என்னங்க யுகேன் . .யுகேன் சொல்றது எல்லாம் உண்மையா? நீங்க எனக்கு துரோகம் பண்ணிட்டிங்களா? எனக்கு தெரியாம எப்படி உங்களால இப்படி ஒரு காரியத்தை செய்ய முடிஞ்சுது ” என்று கார்த்திகேயனின் சட்டையைப் பற்றி உலுக்கினார் பர்வதம்.
“டாடி! நீங்க இப்படி பண்ணுவீங்கன்னு நான் எதிர்பார்க்கவே இல்ல. இவ்ளோ நாள் பூவிழி நம்ம கூட இருந்த அப்போ கூட நீங்க அவளை உங்க பொண்ணுன்னு நினைச்சு கூட பேசினது இல்லையே.. எப்படி உங்களால இவ்ளோ பெரிய விஷயத்தை மறைச்சிட்டு அம்மாவுக்கும் , எனக்கும் துரோகம் பண்ண முடிஞ்சுது ” என்று அழுத்த படி கேட்டாள்.
இவர்கள் இருவருக்கும் பதில் சொல்ல முடியாமல் திணறிப்போய் நின்று இருந்தார் கார்த்திகேயன். அவருக்கு பூவிழி தன் மகள் என்று மட்டுமே தெறியும். ஆனால் அவள் பிறந்தது வளர்ந்தது என எதுவுமே அவருக்குத் தெரியாது .
“என்னங்க என்ன இது நான் கேட்டுட்டே இருக்கேன் நீங்க எதுவும் பேசாம அமைதியா இருந்தா என்னங்க அர்த்தம் ” என்று அவர் கோபத்தோடு பேச.,.
“பர்வதம் அவனை எதுவும் சொல்லாத, கார்த்திக்கு எதுவுமே தெரியாது, சொல்லப்போனா அவனுக்கு இப்படி ஒரு பொண்ணு இருக்காங்குற விஷயமே யுவன் சொன்னபோது தான் தெரிஞ்சிருக்கு ” என்றவர் தன் பேரனைக் கொண்டு வந்து பரவத்தின் கையில் கொடுத்தவர் “இனிமேல் எதையும் மறைச்சு ஒன்னும் ஆகப்போறது இல்ல. நடந்த எல்லாமே விலாவாரியா சொல்றேன் ” என்றவர் யுகேனிடம் வந்தார்,
“நான் எல்லா உண்மையும் சொல்லிறேன் டா.. ஆனா அதுக்கு முன்ன இந்த உண்மையை எல்லாம் பூவிழியும் தெரிஞ்சுக்கணும் , என்ன அவ தான் இதுல அதிகம் பாதிக்கப்பட்டிருக்கா . நான் சொல்லப்போற உரிமையை தெரிஜுக்குற உரிமையும் அவளுக்கு இருக்கு, நீ போய் அவளை தேடிப்பிடிச்சு கூட்டிட்டு வா.. ” என்றார்.
அவனோ பதில் பேசாமல் அப்படியே இருக்க..
“என்ன டா பாத்துட்டு இருக்க.. போ போய் என் மருமகளை கூட்டிட்டு வா.. அவகிட்டே நான் பண்ணின எல்லாத்துக்கும் மன்னிப்பு கேக்கணும் . “என்று மனம் திருந்தியவராகப் பேச..
யுகேனின் உதட்டோரம் ஒரு சிறு புன்னகை அரும்பியது , அவன் எதிர்பார்த்த வார்த்தை ராஜேந்திரனின் வாயில் இருந்து வந்துவிட்டதே..
“யுகேன் இன்னும் ஏன்ப்பா இப்படியே நின்னுட்டு இருக்க.. போய் அவளை கூட்டிட்டு வா.. ” என்று காவேரி வந்து யுகேனின் கையைப் பற்றிக்கொள்ள..
அவனோ திரும்பி பர்வதத்தையும் , ஆராவையும் பார்த்தான்.
பர்வதமோ எதுவும் பேசாமல் அமைதி காக்க..
அவனோ அவரிடம் வந்தவன் “அவ இங்க வருவா.. என் அப்பா சொல்லப்போற காரணத்தை கேட்டுட்டு அதுக்கு அப்பறோம் அவ கூடப் பேசணுமா ? வேணாமான்னு நீங்களே முடிவு பண்ணிக்கோங்க.. ‘ என்றவன் தன் மொபைலை எடுத்து கால் செய்தவன் “அவளை கூட்டிட்டி வா.. ‘ என்றான்.
அவர்களோ ஒன்றும் புரியாமல் பார்க்க.
வீட்டை விட்டு செல்ல இருந்த பூவிழியை வாசலிலேயே தடுத்து நிறுத்தி இருந்த பாஸ்கர் அவளை இப்பொது உள்ளே அழைத்து வந்தான்.
அவளோ யுகேனைப் பார்க்க.. அவனோ அவளிடம் வந்து முறைத்தவன் “நீ என்ன எல்லாம் யோசிப்பேன்னு எனக்கு நல்லாவே தெரியும் டி,.. என்னோட பெர்மிஸ்ஸின் இல்லாம உன் மூச்சுக் காத்து கூட இந்த வீட்டை தாண்டி வெளியே போக முடியாது ” என்று அதட்டலாக சொன்னவன் திரும்பி ராஜேந்திரனைப் பார்த்தான்.
அவரோ பூவிழியின் அருகே வர..
அவள் அவரைக் கண்டதும் பயந்து பின்வாங்கினாள் .
அதிலேயே அவருக்கு தான் எவ்வளவு கொடுமைக்காரனாக இருந்திருக்கிறோம் என்று புரிந்தது.
“பூவிழி என்னைப் பார்த்து நீ பயந்து ஒதுங்குற அளவுக்கு நான் மோசமானவனா இருந்திருக்கேன். என்னை நினைச்சா எனக்கே அசிங்கமா இருக்கு ” என்றவர் அவள் முன் கையெடுத்துக் கும்பிட்டு “என்னை மன்னிச்சிரும்மா” என்றார்.
அவர் அப்படி செய்ததும் பதறிய பூவிழி “ஹையோ! சார் என்ன இது ” என்று அவசரமாக வேண்டாம் என்று தலையை ஆட்டினாள்.
“இல்லம்மா நான் உனக்கு செய்த காரியத்துக்கு உன் கால்ல விழுந்து தான் மன்னிப்புக் கேட்டிருக்கும் ” என்று அவர் அவள் காலில் விழப்போக .
“ஐயோ! சார் “என்று அவள் வேகமாக அங்கிருந்து நகர்ந்து வந்து யுகேனின் கையைப் பற்றிக்கொண்டாள்.
அவனோ அவள் கையை உதறியவன் “என்னை வேணாம்னு போன இல்ல டி.. என்கிட்டே வராத போ.. ” என்று அவளை விட்டு விலகி நின்றான்.
இதை எல்லாம் பார்த்த பாஸ்கர். “என்ன டா நடக்குது இங்க எனக்கு ஒன்னுமே புரியலையே ” என்று யுவனிடம் கேட்டான்.
“கொஞ்ச நேரம் இரு எல்லாம் புரியும் உனக்கு ” என்ற யுவன் அங்கு நடப்பதை வேடிக்கை பார்க்கத் துவங்கினான்.
“நம்ம ஆரா பிறந்து 8 மாசம் இருக்கும். அப்போ ஒரு பிசினஸ் ட்ரிப்க்காக கார்த்தி வெளிநாடு போனானே உனக்கு நியாபகம் இருக்கா பர்வதம்” என்றார் ராஜேந்திரன்.
அவர் சொன்னதை யோசித்துப் பார்த்த பர்வதத்திற்கு லேசாக நினைவுகள் வர.. ஆம் என்று அழுத்தமாக தலையை ஆடினார்.
அப்போ நம்ம ஆபீஸ்ல எனக்கும், கார்த்திக்கும் ஆசிஸ்டெண்டா இருந்தது தான் கற்பகம். அவ நம்ம ஆஃபீஸ்ல் வேலைக்கு சேர்ந்ததுல இருந்து ரொம்ப சின்சியரா வேலை பாக்குறவ.. ரொம்ப நல்லவன்னு நாங்க எல்லாம் நினைச்சிருந்தோம். ஆனா அவ எங்க நம்பிக்கையை சம்பாரிக்க அப்படி நடந்து இருக்கா. அது பின்னாளில் தான் தெரிய வந்துச்சு ” என்றவர் கார்த்திகேயனைப் பார்த்தவர் .
“கற்பகம் நல்ல பொண்ணு, பொறுப்பானவன்னு நம்பி நான் அவளை கார்த்தி கூட அனுப்பி நானே என் தங்கச்சி வாழ்க்கையில் பிரச்னையை வரவழைச்சுட்டேன். அங்க போன கற்பகம் கார்த்திக்கு வேளையில் எல்லா உதவியும் செய்திருக்கா. கார்த்தி மேல அவளுக்கு ஒரு கண்ணு இருந்திருக்கு. அது யாருக்குமே தெரியல. அந்த வெளிநாட்டுப் பயணத்தை அவளுக்கு சாதகமாகிகிட்டு அவளே பிளான் பண்ணி கார்த்திகேயன் சாப்பிடற உணவுல போதை பொருள் கலந்து அவனோட ஒண்ணா ,.. ” என்று அதற்கு மேல் பேச முடியாமல் தடுமாறினார் அவர்.
“ஏன் மச்சான் நிறுத்திட்ட .. அந்த சம்பவத்துக்கு பிறகு என் பர்வதத்துக்கு துரோகம் பண்ணிட்டேன்னு நான் எவ்ளோ கஷ்டப்பட்டேன். எவ்ளோ வேதனைப்பட்டேன். அவ கால்ல விழுந்து எங்களுக்குள்ள நடந்த சம்பவத்தை மறந்து மன்னிச்சிரு . இனிமேல் என் வாழ்க்கையில் அவளை பார்க்கவே கூடாதுனு ஊர்ல எனக்குன்னு இருந்த ஒரே சொத்தை வித்து அவளுக்கு கொடுத்து இந்த ஊரை விட்டே போக சொல்லிட்டேன். அவளும் அந்த பணத்தை வாங்கிட்டுப் போய்ட்டா.. நானும் அந்த பிரச்னையை அத்தோட முடிச்சுட்டேன்னு இவ்ளோ நாளும் நினைச்சுட்டு இருந்தேன்.
என்றவர் பர்வதத்தை மணிக்கும் பார்வை பார்த்தார்.
அவரோ இங்கு நடப்பதை எதுவும் நம்பமுடியாமல் நின்றிருக்க..
கார்த்திகேயன் தொடர்ந்தார் “நான் செஞ்ச துரோகம், தப்பு அந்த ஒரே காரணத்துக்காக நான் இப்போவரை என் பர்வதத்தை என்கிட்டே வர விடாம அவளையும் தள்ளி வெச்சு நானும் அவகிட்டே இருந்து ஒதுங்கி வாழ்ந்துட்டு இருக்கேன். அவளும் என்னோட மனசை புரிஞ்சுகிட்டு இன்னிவரை என்கிட்டே என்ன ஆச்சுன்னு ஒரு வார்த்தை கூட கேட்டது இல்ல. எல்லார் முன்னாடியும் நாங்க அந்நியோன்யமா வாழறோம் மனசளவுல.. ” என்று முடித்தவர் “என்னை மன்னிச்சிரு பர்வதம்” என்றவர் சற்றும் தாமதிக்காமல் அவர் காலில் விழுந்துவிட..
“என்னங்க.. ” என்று நெஞ்சைப் பிடித்துக்கொண்டு பின்னால் நகர்ந்தார் பர்வதம்.
அவர் சொன்னதைக் கேட்டு யுகேன் , பூவிழி, யுவன், ஆரா, ராஜேந்திரன், காவேரி என அனைவரும் அதிர்ந்து பார்க்க..
“என்ன டா மச்சான், உங்கப்பா யாருக்கும் தெரியாம காவேரி அம்மாகூட குடும்பம் நடத்தி உன்னை பெத்திருக்காரு.. உன் மாமா என்னடான்னா தான் பண்ணின தப்புக்கு வாழ்க்கை முழுக்க தனக்கு தானே தண்டனையும் கொடுத்திருக்கார். எப்படி டா.. ” என்றான் பாஸ்கி.
அவனை பார்த்த யுவன் “ஆம்பளைங்கள்ல சில நல்லவங்களும் இருக்காங்க டா.. ” என்றான்.
பூவிழிக்கோ தன்னை பெற்றெடுத்த கற்பகத்தின் செயலை நினைத்து கூனிக் குருகிப் போனாள் . ஒருவரை ஏமாற்றி அவர் மனசாட்சியை கொண்டு அவர் வாழ்க்கையை சீரழித்த தன்னுடைய பிறப்பு நிகழ்திருக்கிறது என்று நினைக்கையில் தன்னை தானே அருவருப்பாக உணர்ந்தாள்.
அவள் முகத்தில் தெரிந்த குழப்பத்தை உணர்ந்த யுகேன் அவளை தன் தோளோடு அணைத்துப் பிடித்தவன் “உன் அம்மா உன்னைப் பெத்தெடுத்த வழி வேணா தப்பா இருக்கலாம். ஆனா கண்டிப்பா அதுக்காக அவங்க வருத்தப்பட்டிருக்கணும் , உன் பிறப்பை பத்தி நீ தப்ப நினைச்சு உன்னை நீயே தாழ்த்திக்க வேண்டியே அவசியம் இல்லை ” என்று அவளை ஆறுதல் படுத்தியன் “”உங்ககிட்டே பணம் வாங்கிட்டு போனவங்க எப்படி பூவிழியை பெத்துக்கிட்டாங்க ” என்று கேட்டான் கார்திகேயனிடம் யுகேன் புரியாமல்.
“கற்பகத்தை நான் இந்தியா வந்த பிறகு பார்த்ததே இல்ல. அவ என்ன ஆனா? எங்க போனா? உயிரோட இருக்காளா? இல்லையான்னு கூட எனக்குத் தெரியாது ” என்றார் கார்த்திகேயன்.
“எனக்குத் தெரியும் கார்த்தி ” என்ற ராஜேந்திரன்.
கற்பகம் வேலையை விட்டுப் போய் சரியா ஒரு வருஷம் கழிச்சு நம்ம ஆபீஸ்க்கு உன்னை கேட்டு வந்திருந்தா. அப்போ நான் தான் அவளை மீட் பண்ணினேன் ” என்றவர் பர்வத்தை ஒரு பார்வை பார்த்துவிட்டு “கற்பகம் ஹாஸ்பிடல் வரும்போதே அவள் சாகுற நிலையில தான் இருந்தா. அவளுக்கு குணப்படுத்த முடியாத நோய் வந்து ஆள் பாக்கவே ஆளே மாறி இருந்தா. எனக்கே முதல்ல அவ யாருனு சரியா அடையாளம் கண்டுபிடிக்க முடியல ” என்றார்.
அதைக் கேட்டதும் தன் சாகும் தருவாயில் தன் தாய்யின் நிலை என்னவாக இருந்திருக்குமோ என்று நினைத்துப் பதறியது பூவிழிக்கு.
“கற்பகம் என்கிட்டே வந்து நடந்த எல்லாத்தையும் சொல்லி மன்னிப்பு கேட்டு பூவிழியைக் கொண்டு வந்து என் கையில கொடுத்தா. அவளோட பர்த் சர்டிபிகேட் அதுவும் கொடுத்துட்டு. இன்னும் கொஞ்ச நாள்ல அவ சாகப்போறதாவும். நான் போனதுக்கு அப்பறோம் என் மகளை பாத்துக்க யாரும் இல்லென்னும் அவளை கார்திகேயன்கிட்டே கொடுத்து வளர்க்க சொல்லவும் வந்ததா சொன்னா. எனக்கு அந்த சூழ்நிலையில் என்ன செய்றதுன்னே தெரியல.. என்னால கற்பகம் இருந்த நிலையைப் பார்த்துட்டு அவளை கஷ்டப்படுத்தவும் முடியல ” என்று பெருமூச்சுவிட்டவர்,
“அவளோட வைத்திய செலவு முழுக்க நானே பாத்துக்கிறேன். கற்பகத்தையும், பூவிழியையும் பத்திரமா பாத்துக்க வேண்டியது என் பொறுப்பு . என் தங்கச்சி வாழ்க்கையில் இந்த குழந்தையால் எந்த பிரச்னையும் வந்திரக்கூடாதுனு கற்பகத்துக்கிட்டே கெஞ்சினேன். அவளும் சரினு சொன்னா. உடனே அவங்க தங்குறதுக்கு முதல்ல ஒரு இடத்தை ஏற்பாடு பண்ணனும்னு சொல்லிட்டு கற்பகத்தை ஆஃபீஸ்ளையே இருக்க சொல்லிட்டு நான் வெளியே போயிருந்தேன். ஒரு வீட்டை பார்த்துட்டு ஆபீஸ் வர அப்போ அங்க பூவிழி மட்டும் தான் இருந்தா, கற்பகம் இல்ல. ஆபீஸ்ல இருக்கவங்களை விசாரிச்சா. எங்கேன்னு தெரியாலையினு சொல்லிட்டாங்க” என்றார்.
“அப்போ.. அப்போ என் அம்மா எங்க இருக்காங்கன்னு உங்களுக்கு தெரியாதா சார். அவங்க உயிரோட இருக்காங்களா? இல்லையா?” என்றாள் பூவிழி.
அவள் குரலில் இருந்த பதற்றமும், கண்களில் தெரிந்த தவிப்பையும் பார்த்து பூவிழியை நினைத்து காவேரிக்கு அழுகை தான் வந்தது.
“உன்னை காவேரிகையில் கொடுத்து இங்க கூட்டி வந்து நான் தான் வளர்க்க சொன்னேன். இந்த விஷயம் இப்போவரை என்னைத் தவிர வேற யாருக்கும் தெரியாது” என்றவர் “உன் அம்மா இறந்துட்டாங்க. அவங்க இருக்குற தருவாயில் உன்னை ஒருதரம் பாக்கணும்னு கேட்டுக்கிட்டதால யாருக்கும் தெரியாம உன்னை கூட்டிட்டு போய் அவங்களை பார்த்தேன். தான் பண்ணின பாவத்துக்கு நீ அம்மா, அப்பா யாரும் இல்லாம கஷ்டப்படுறேன்னு சொல்லி அழுதாங்க ” என்று முடித்தார்.
அவ்வளவு தான் அதற்கு மேலும் இழுத்துப் பிடிக்க முடியாமல் “அம்மாஆ!.. “என்று அப்படியே தரையில் அமர்ந்து கத்தி கதறி அழுத பூவிழி .
தாயும் இல்லாமல் தகப்பன் இருந்தும் அவனிடம் உரிமை கொள்ள முடியாமல் தனக்கு இப்படி ஒரு நிலை வர வேண்டுமா என்று எண்ணி கதறி அழ..
அவள் அழுகுரல் கேட்டு தாயின் அழுகையைத் தாங்க மாட்டாமல் அவள் மகனும் அழைத்துவங்கினான்.
யாராலும் அவளை சமாதானம் செய்ய முடியாத ஒரு நிலை அது.. யாருக்கும் வரவும் கூடாத ஒரு நிலை அது. யுகேன் அவள் அருகே முட்டி போட்டு அமர்ந்தவன் அவள் முகத்தை தன் கைகளில் தாங்கி அவள் விழிகளை பார்க்க..
“மாமா ! நான் என்ன பாவம் பண்ணினேன் , என் வாழ்க்கை மட்டும் ஏன் இப்படி இருக்கு.. என்னால முடியல மாமா,. எனக்கு இங்க.. இங்க ரொம்ப வலிக்குது. ” என்று அவன் சட்டையைப் பற்றிக்கொண்டு கதறியவள் அவன் மார்பில் முகம் புதைத்து அழ ..
அந்த மொத்த வீடும் அவள் அழுகையில் உடைந்து போனது.
