Home Uncategorizedமோகம் முத்தாடுதே 14

மோகம் முத்தாடுதே 14

by Layas Tamil Novel
417 views

EPISODE 14

அர்ஜுன் மனதில் ஒரு புயலே அடித்துக் கொண்டிருந்தது. இரவு முழுவதும் ரசிகா தன்னை புறக்கணிப்பதை எண்ணி அவன் தூங்கவே இல்லை. காலை வழக்கம் போல நான்கு மணிக்கு எழுந்து, உடற்பயிற்சி செய்வதற்காக வீராவுக்கும் அர்ஜுனுக்கும் அவர்கள் வீட்டிலேயே கட்டமைக்கப்பட்டிருந்த நவீன உபகரணங்களுடன் கூடிய உடற்பயிற்சிக் கூடத்திற்குள் நுழைந்தான் அர்ஜுன்.

ரசிகாவின் மேல் அவனுக்குச் சொல்ல முடியாத கோபம் உண்டானது. தன்னைச் சாதாரணமாகக்கூட அவள் பார்க்காமல் இப்படிப் புறக்கணிப்பதை எண்ணி அவன் மனம் புழுங்கிக்கொண்டு இருந்தது.

அந்த நினைப்போடே தீவிரமாக உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தான். ஒரு மணி நேரத்துக்கும் மேலாக உடற்பயிற்சி செய்ததின் விளைவாக அவன் அணிந்திருந்த கை இல்லாத பனியனும், ஷார்ட்ஸும் ஈரமாகி இருக்க… பனியனைக் கழட்டி அருகில் இருந்த சேரில் வைத்துவிட்டு, டவலை எடுத்து உடலைத் துடைத்துக்கொண்டே, உடற்பயிற்சிக் கூடத்தில் இருந்த பால்கனிக்கு, இயற்கை காற்றில் சிறிது நேரம் நிற்கலாம் என்று அங்கு வந்து நின்றான்.

அப்போது அவன் வீட்டு வாசலில் இருந்து அந்த நேரத்தில் ஒரு பெண் பேசும் சத்தம் வந்தது. ‘அட, குரலைக் கேட்டது போல இருக்க…’ என்று அந்த மங்கலான இளம் காலை வெளிச்சத்தில், வாசலில் தன் வீட்டு வேலை ஆளுடன் சண்டை போட்டுக்கொண்டு இருப்பதைப் பார்த்தான் அர்ஜுன்.

“அண்ணா, சொன்னா கேளுங்க… நான் வாசல் பெருக்கி கோலம் போடுறேனே. என்னை ஏன் விட மாட்டேங்குறீங்க? நான் நல்ல கோலம் போடுவேன். என்னை நம்புங்க” என்று அவர் கையில் இருந்த துடைப்பத்தை வாங்க முயற்சித்துக்கொண்டிருந்தாள் ரசிகா.

“அம்மா, சொன்னா கேளுங்க. நீங்க இந்த வேலை எல்லாம் செய்யுறதைப் பார்த்துட்டா அப்புறம் என் வேலை காலி ஆகிரும். சொன்னா கேளுங்கம்மா” என்று தன் கையில் இருக்கும் துடைப்பத்தைக் கொடுக்க மறுத்தார் அந்த வேலை ஆள்.

“இப்போ என்ன? நான் இந்த வேலை செய்றது யாருக்கும் தெரியக் கூடாது, அப்படித்தானே?” என்றவள் தன் கன்னத்தில் கை வைத்து யோசித்தவள், “ஆஹ்… ஐடியா! தினமும் நான் நேரமே எழுந்து வந்து வாசல் கூட்டி, தெளிச்சு, கோலம் போட்டுடறேன். யாரும் பார்க்குறதுக்கு முன்னாடி வேலையை முடிச்சிட்டுப் போயிடுறேன்” என்றாள் ரசிகா.

“இல்லைம்மா… வேணாம். இது சரி வராது. யாராவது பார்த்துட்டா அவ்ளோதான்” என்றார் அந்த வேலை ஆள் பயந்துகொண்டு.

“அண்ணா… அண்ணா… ப்ளீஸ்” என்று அவர் கையில் இருந்த துடைப்பத்தை விடாமல் பிடித்துக்கொண்டு சிறு பிள்ளை போல அடம் பிடித்தாள்.

அதை மேலே நின்று பார்த்துக்கொண்டு இருந்த அர்ஜுன் தன்னை அறியாமல் சிரித்துக்கொண்டு நின்று இருந்தான்.

“அம்மா, இப்படிப் பண்ணலாம். உங்களுக்கு இவ்ளோ பெரிய வாசல்ல தினமும் கோலம் போடணும் அவ்ளோதானே?” என்றார்.

“ஆமாம்” என்று தலையை வேகமாக ஆட்டினாள் ரசிகா.

“அப்போ நான் தினமும் வந்து வாசல் கூட்டிப் பெருக்கிடுறேன். அதுக்கு பிறகு நீங்க வந்து கோலம் மட்டும் போட்டுக்கோங்க. யாராவது கேட்டா கோலம் போட மட்டும் வேற ஆளை வேலைக்கு வெச்சிருக்கேன்னு சொல்லிடறேன்மா… என்னால அதை மட்டும் தான் பண்ண முடியும்” என்றார் அந்த வேலை ஆள்.

அவர் இதற்கு ஒத்துக்கொண்டதே போதும் என்று நினைத்தவள், “சரி, அப்போ நாளைல இருந்து நீங்க சொன்ன மாதிரி செஞ்சிருவோம். இன்னிக்கு மட்டும் நானே வாசல் கூட்டி, பெருக்கி, கோலம் போட்டுடறேன்” என்றாள் ரசிகா அழகாகச் சிரித்துக்கொண்டே.

“சரிங்கம்மா, அப்போ நான் மார்க்கெட் போய்ட்டு வந்தறேன். யாராவது வர்றதுக்குள்ள வேலையை முடிச்சிட்டுப் போயிருங்கம்மா… என் வேலைக்கு உலை வெச்சிடாதீங்க” என்று சொல்லிவிட்டு அவர் கிளம்ப…

என்னவோ பெரிய அலுவலகத்தில் தனக்கு வேலை கிடைத்தது போல சந்தோஷமாக அவர் கையில் இருந்த துடைப்பத்தை வாங்கியவள், தான் கட்டியிருந்த சேலையைக் கெண்டைக்கால் தெரியும் அளவிற்குத் தூக்கி சொருகிக்கொண்டு, குளித்து ஈரத்தலையோடு முடிந்திருந்த துண்டை ஒருமுறை சரி செய்துவிட்டு, குனிந்து அவ்வளவு பெரிய வாசலை கூட்டி, பெருக்கி, நீர் தெளித்து முடித்தாள்.

“அப்பாடா, ஒரு வழியா கூட்டிப் பெருக்கியாச்சு… இனி அடுத்து கோலம் போட வேண்டியதுதான் பாக்கி” என்று கோலப் பொடியை எடுத்து குனிந்து கோலம் போட ஆரம்பித்தாள்.

ரசிகா குனிந்து நிமிர்ந்து கோலம் போடுவதை மேலே இருந்து தன்னையும் அறியாமல் ரசித்துக்கொண்டிருந்தவனுக்கு, அவள் முகம் நன்றாகத் தெரியாததால், வேகமாக உடற்பயிற்சிக் கூடத்தில் இருந்து வெளியே, கீழே செல்வதற்காக வந்தான். அவன் வெளியே வரவும், அப்போது உள்ளே வீரா நுழையவும் சரியாக இருந்தது.

அர்ஜுனைப் பார்த்ததும், “என்ன இவ்ளோ அவசரமாக வெளியே போற? அதுக்குள்ள ஒர்க் அவுட் முடிச்சுட்டியா?” என்றான் வீரா.

“ஆமாம் அண்ணா, முடிச்சுட்டேன். அப்படியே கொஞ்சம் ஜாகிங் போயிட்டு வரலாம்னு வெளியே வந்தேன்” என்றான்.

“சரி” என்று தலையாட்டிவிட்டு வீரா உள்ளே செல்ல… அங்கிருந்து மெதுவாக அந்த அறையை விட்டுத் தள்ளி வந்தவன், வீரா உள்ளே சென்றுவிட்டானா என்று பார்த்துவிட்டு, வேகமாக மாடியில் இருந்து இறங்கி கீழே ரசிகாவைப் பார்க்க ஓடினான்.

கீழே அவன் வரவும், வாசலில் கோலம் போட்டுவிட்டுத் தன் தலையில் இருந்த ஈரத்துண்டைப் பிரித்துவிட்டுக்கொண்டே உள்ளே வந்தால் ரசிகா.

அவளைப் பார்த்ததும் வேகமாக அவள் கண்ணில் படாமல் படிகளில் இருந்து வேகமாக இறங்கிய அர்ஜுன், படிகளுக்குப் பின்னால் போய் ஒளிந்துகொண்டான்.

ரசிகாவும் தலையைத் துவட்டியபடியே தன் அறைக்குள் செல்லாமல் செண்பகம் அறைக்குள் நுழைந்தாள்.

அவள் சென்றதை உறுதி செய்து கொண்ட அர்ஜுன், வாசலுக்கு வந்து பார்க்க… மிக அழகாக ஒரு தாமரைப்பூ போட்டு, அதைச் சுற்றிலும் ரங்கோலியால் டிசைன் வரைந்து, வெறும் வெள்ளை கோலப்பொடியில் இவளவு அழகாகக் கோலம் போட முடியுமா என்னும் அளவிற்கு அழகாகக் கோலம் போட்டிருந்தாள்.

அதை பார்த்தவனின் புருவம் உயர்ந்தது. ‘நான் மேலே இருந்து கீழே வர்றதுக்குள்ள இவ்வளவு பெரிய கோலத்தையா, அதுவும் இவ்வளவு சீக்கிரத்தில் போட்டுட்டாளே’ என்று ஆச்சர்யப்பட்டான்.

உடனே தன் ஷார்ட்ஸில் இருந்த ஃபோனை எடுத்து, அந்தக் கோலத்தை வளைத்து வளைத்துப் ஃபோட்டோ எடுத்தவன், அதைப் பார்த்துச் சிரித்துக்கொண்டே வீட்டிற்குள் நுழைய… செண்பகத்தின் அறையிலிருந்து வெளியே வந்த ரசிகா, செண்பகம் காபி கேட்டதால் அவருக்குக் காபி போட, நேராகச் சமையலறைக்குச் சென்றாள்.

செல்லும்போது வாசலில் நிழல் ஆடுவதைக் கண்டதும், ‘யார்’ என்று ரசிகா திரும்பிப் பார்க்க, அங்கே அர்ஜுன் கையில் மொபைலை வைத்துக்கொண்டு, அழகு சிலையாய் நின்று கொண்டிருந்த ரசிகனை, வாயைப் பிளந்தபடி நின்றிருந்தாள்.

அவனை அங்கு எதிர்பார்க்காத ரசிகா, ‘இவன் இந்த நேரத்தில் இங்கே என்ன செய்றான்? இவனைப் பார்த்தாலே அவன் மீசையைப் பார்த்தாலே எனக்கு உடம்பெல்லாம் நடுக்கம் எடுக்க ஆரம்பிச்சிருது. இவனைப் பார்த்துட்டு இங்கேயே நின்னுட்டு இருந்தா, என்னை பார்த்தது நான் இப்படி நடுங்குறேன்னு நினைச்சிருவான். அப்புறம் எதுவும் கேள்வி கேட்டா அவ்ளோதான்’ என்று சட்டெனத் தன் முகத்தைத் திருப்பிக்கொண்டு சமையலறைக்குள் ஓடிவிட…

அதைப் பார்த்த அர்ஜுனுக்கு அவள் செயல் முகத்தில் அடித்தார் போல ஆகிவிட்டது. ‘ச்சே… என்னைப் பார்த்தால் இவளுக்கு எப்படித் தெரியுது? இப்படி என்னை பார்க்கும்போது எல்லாம் முகத்தைத் திருப்பிட்டுப் போனா என்ன அர்த்தம்? இதை இப்பவே இவள் கிட்டே கேட்டு ஆகணும்’ என்று சமையலறைக்குச் செல்லப் போக…

அப்போதுதான் குளித்து முடித்து எல்லோருக்கும் காபி போடலாம் என்று வந்த தேவகி, வீட்டிற்குள் வந்துகொண்டிருந்த அர்ஜுனைப் பார்த்தார்.

“அர்ஜுன்… ஜாகிங் முடிச்சுட்டு வந்துட்டியாப்பா?” என்று அவனிடம் வந்தார்.

“ஆமாம்மா… இப்போதான் வந்தேன்” என்று சொல்லி சமாளித்தான்.

“சரி வாப்பா… நான் காபி போட்டுத் தரேன்” என்றார்.

“இல்லைம்மா, எனக்கு ரூமுக்கு காபி கொடுத்து விட்டுடுங்க. நான் போய் ஃப்ரெஷ் அப் ஆகுறேன்” என்றவன், இவர்கள் பேசுவதைக் கேட்டுக்கொண்டே, அவனுக்கு முதுகு காட்டி நின்று இருந்த ரசிகனை ஓரக்கண்ணால் பார்த்துவிட்டு, மேலே தன் அறைக்கு போய்விட்டான்.

‘அப்பாடா, நல்ல வேலை. இங்கே வராம மேலே போய்ட்டான். அவன் எங்கே இங்கே வந்து உட்கார்ந்திருவானோன்னு பயந்துட்டேன். தூரத்தில் அவனைப் பார்த்தாலே எனக்கு உடம்பெல்லாம் பதறுது. இதுல அவனைப் பக்கத்துல வெச்சு மட்டும் பார்த்தோம் அவ்ளோதான்’ என்று நினைத்துக்கொண்டு இருக்க…

“ரசிகா என்னடா… இவ்வளவு சீக்கிரத்துல எழுந்துட்டா போல இருக்கு? என்ன பண்றம்மா இந்த நேரத்துல சமையலறையில்?” என்று கேட்டபடி அவளிடம் வந்தார் தேவகி.

“நான் எப்பவும் நேரமே எழுந்து குளிச்சிட்டு சமையலறைக்குச் சமைக்க வந்திருவேன் அத்தை. இங்கே புதுசா இருக்கிறதால எனக்கு வர கொஞ்சம் தயக்கமா இருக்கு” என்றாள்.

“இதில் என்னம்மா இருக்கு… இங்கே பூவிழிக்கு என்ன உரிமை இருக்கோ… அதே உரிமை உனக்கும் இருக்கு. நீ எப்போ வேணா என்ன வேணாலும் செய்யலாம் இந்த வீட்டில்” என்றார் தேவகி.

“அப்போ நான் ஒன்னு கேட்பேன், நீங்க மறுக்காமல் ‘ஓகே’ சொல்லணும் எனக்கு” என்றாள் ரசிகா ஆர்வமாக.

“ம்ம்… சொல்லும்மா… என்ன?” என்றார் தேவகி.

“அப்போ தினமும் காலையில் எல்லாரும் சாப்பிட நானே சமைக்கிறேனே. எனக்கு வீட்டில் சும்மா இருக்க போர் அடிக்குது” என்றாள்.

“அதெல்லாம் எதுக்குமா? இங்கேதான் அதை எல்லாம் செய்ய ஆட்கள் இருக்காங்களே?” என்று ரசிகா சொன்னதற்கு மறுப்பு தெரிவித்தார்.

“அத்தை, ப்ளீஸ். நான் காலையில் மட்டும் தான் சமையல் செய்றேன்னு சொன்னேன். மத்த நேரத்தில் அவங்க செஞ்சுக்கட்டுமே” என்றாள் கெஞ்சிக்கொண்டே.

“என்ன பொண்ணும்மா நீ? சரி, உனக்கு என்ன தோணுதோ செய். ஆனா காலையில் மட்டும்தான் சரியா?” என்றார் தேவகி.

“சரிம்மா” என்றவள், “நீங்க உட்காருங்க. நான் செண்பகம் அம்மாவுக்கு காபி போடுறேன். அப்படியே உங்களுக்கும் சேர்த்துப் போட்டுடறேன்” என்றாள்.

“சரிம்மா” என்றவர் அங்கிருந்த சேரில் அமர… சிறிது நேரத்தில் காபி போட்டு முடித்து, சூடாக எடுத்து வந்து தேவகியின் முன் வந்து வைத்தவள், “நீங்க குடிங்க. நான் போய் அம்மாவுக்கு கொடுத்துட்டு வரேன்” என்றாள்.

“செண்பகத்துக்குத்தானேமா? நான் கொண்டு போய்க் கொடுத்துறேன். அம்மா, முத்து எங்கே? அவனை ஆளையே காணோமே?” என்ற தேவகி…

“அவர் மார்க்கெட் வரைக்கும் போயிட்டு வர்றேன்னு சொன்னாரு அத்தை” என்றாள் ரசிகா.

“அர்ஜுனுக்குக் காபி கொடுக்கணும். என்னால் படி ஏற முடியாது. மூட்டு வேற ரொம்ப வலிக்குது. நீ கொஞ்சம் இந்தக் காபியை அவனுக்குக் கொடுத்துறியா? அப்படியே வீராவும் எழுந்து உடற்பயிற்சிக் கூடத்தில் தான் இருப்பான். அவன் வர நேரம் தான். அப்படியே அவனுக்கும், பூவிழிக்கும் கொடுத்துடுறியா?” என்று ரசிகாவைப் பார்க்க…

‘ஐயோ… இது வேறையா?’ என்று சலித்துக்கொண்ட ரசிகா நிற்க…

அவள் எதுவும் பேசாமல் நிற்பதைப் பார்த்த தேவகி, “என்னமா? உனக்குப் போக பிடிக்கலைன்னா பரவாயில்லை. நானே மெல்லப் படி ஏறிப் போய் அவனுக்குக் கொடுத்துட்டு வரேன்” என்றார்.

“அத்தை, அதெல்லாம் ஒன்னும் இல்லை. இந்தக் காபியை நீங்க குடிங்க. நான் அவருக்குச் சூடா போட்டு எடுத்துட்டுப் போறேன்” என்று காபி போடச் செல்ல…

தேவகியும் சிரித்துவிட்டு செண்பகத்திற்கு காபியை எடுத்துக்கொண்டு சென்றார்.

ரசிகாவும் காபி போட்டு எடுத்துக்கொண்டு மேலே சென்றவள், முதலில் உடற்பயிற்சிக் கூடத்தில் இருந்த வீராவுக்குக் கொண்டு சென்றாள். அவளைப் பார்த்ததும் உடற்பயிற்சி செய்வதை நிறுத்திவிட்டு, “முத்து இல்லையா? ரசிகா, நீங்க எடுத்துட்டு வந்திருக்கீங்க?” என்று ட்ரேயில் இருந்த இரண்டு காபியை எடுத்துக்கொண்டே கேட்டான்.

“இல்லை. நீங்க ட்ரேயில் வெச்சே எடுத்துக்கோங்க. நான் இதை கையில் எடுத்துக்கிறேன்” என்று அர்ஜுனுக்குக் கொடுக்க வேண்டிய காபியை கையில் எடுத்துக்கொண்டு ட்ரேயை அவனிடம் நீட்டினாள்.

வீரா ட்ரேயை வாங்கிக்கொள்ள… “முத்து அண்ணா மார்க்கெட் போய்ட்டாரு. அத்தை படி ஏற சிரமமா இருக்குன்னு சொன்னாங்க. அதான் நான் எடுத்து வந்தேன்” என்றவள் வீராவைப் பார்க்க…

“ம்ஹும்… நீங்க நேரமே எழுந்து குளிச்சு முடிச்சு எவ்வளவு லட்சணமா இருக்கீங்க… ஆனா என் பொண்டாட்டி இந்தக் காபி ஆறி ஐஸ் காபி ஆனாலும் எழுந்திருக்க நேரம் ஆகும் அவளுக்கு. இவ்ளோ சீக்கிரத்தில் காபியா?” என்று சிரித்தவன், “சரி, இன்னைக்கு சீக்கிரமே எழுப்ப ட்ரை பண்றேன்” என்று ட்ரேயுடன் தன் ரூமிற்குச் சென்றான்.

அவன் சொன்னதைக் கேட்டுச் சிரித்தபடி அர்ஜுன் அறைக்கு முன் வந்து நின்ற ரசிகா, உள்ளே செல்லலாமா வேண்டாமா என்று யோசனையில் நின்று இருக்க…

“ஏன்? வாசல் வரை வந்துட்டு என் ரூமுக்குள்ள வர அப்படி என்ன தயக்கம்? நான் ஒண்ணும் உங்களைக் கடிச்சுத் தின்னுட மாட்டேன்” என்று உள்ளிருந்து அர்ஜுன் குரல் கொடுத்தான்.

அவன் குரல் கேட்டதும் சற்றுத் திடுக்கிட்ட ரசிகா… ‘நான் இங்கே வந்தது இவனுக்கு எப்படித் தெரிஞ்சுது?’ என்று யோசித்தவள், ‘அது சரி, போலீஸ் இல்ல இவன்? இவனுக்கா தெரியாது?’ என்று தயங்கியபடி, அவன் அறையின் பாதி மூடி இருந்த கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்றாள். அவனிடம் வசமாக மாட்டிக்கொள்ளப் போகிறோம் என்று தெரியாமலேயே…

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured