மூர்க்கன் 36
அன்று காலை முதலே ஈஸ்வருக்கு நிம்மதியே இல்லை. வீட்டில் மித்ராவைத் தனியாக விட்டுவிட்டு வர அவனுக்கு மனசு வரவில்லை.
அவளை பார்த்துக்கொள்ள வந்தவரும் லீவில் இருக்க.. அவளோடு அதிக நேரம் செலவிட வேண்டி இருந்தது அவனுக்கு.
அவளுக்கு பழைய நினைவுகள் இல்லாததால் அவள் எப்போது என்ன செய்வாள், எதைப் பார்த்துப் பயப்படுவாள் என்று அவனுக்குள் ஒரு பதற்றம் இருந்துகொண்டே இருந்தது.
அவள் இப்பொது குழந்தை போல தான். அவளை பத்திரமாக பார்த்துக்கொள்ளவும் வேண்டும் அவனுக்கு. அதனால், யோசித்தவன் அவளையும் தன் காரிலேயே ஆபீஸிற்கு அழைத்து வந்துவிட்டான்.
ஆபீஸ் கேபினுக்குள் நுழைந்ததும் மித்ரா அங்கும் இங்கும் வேடிக்கை பார்த்தாள். அவளுக்கு எல்லாமே புதிதாக இருந்தது.
“மித்ரா, இங்க பாரு…” என்று அவளது தோள்களைப் பற்றித் தன் பக்கம் திருப்பினான் ஈஸ்வர்.
“எனக்கு இப்போ ஒரு ரொம்ப முக்கியமான மீட்டிங் இருக்குடி. அதான் வீட்ல உன்னைத் தனியா விட முடியாம இங்க கூட்டிட்டு வந்தேன். நீ சமத்தா இந்த ரூம்குள்ளேயே இருக்கணும், சரியா? வெளிய எங்கும் போகக் கூடாது.” என்றான் அவ்வளவு பொறுமையாக.
மித்ரா அவனது சட்டையைப் பிடித்துக் கொண்டு, “நீயும் இங்கேயே இரு ஈஸ்வர். எனக்குப் பயமா இருக்கு. எல்லாரும் புதுசா இருக்காங்க,” என்றாள் கெஞ்சலாக.
“நானும் இங்கேயே இருக்கணும்னு தான் ஆசைப்படுறேன். ஆனா இந்த மீட்டிங் ரொம்ப முக்கியம். இதோ பாரேன், இந்த லேப்டாப்ல உனக்குப் பிடிச்ச கார்ட்டூன், பாட்டு எல்லாம் வச்சுத் தர்றேன். ஜூஸ், ஸ்நாக்ஸ் எல்லாம் இங்கேயே இருக்கு. நான் சீக்கிரம் வந்துடுவேன்,” என்று அவளது நெற்றியில் முத்தமிட்டு சமாதானம் செய்தான்.
“சரி… சீக்கிரம் வந்துடு,” என்று அரை மனதோடு ஒத்துக் கொண்டாள் மித்ரா.
அவளைத் தன் கேபினுக்குள் அமர வைத்துவிட்டு, ஈஸ்வர் கான்ஃபரன்ஸ் ஹாலுக்குள் நுழைந்தான். அங்கே அவனது ஆனந்த் மற்றும் வெளிநாட்டு க்ளையண்டுகள் அனைவரும் அவனுக்காக காத்துக்கொண்டிருந்தனர்.
“ஹை கைஸ்” என்றவன் தன் இருக்கையில் வந்து அமர.. மீட்டிங் தொடங்கி விறுவிறுப்பாகப் போய்க்கொண்டிருந்தது.
ஈஸ்வர் ப்ராஜெக்ட் பிரசன்டேஷனை விளக்கிக் கொண்டிருந்தாலும், அவன் மனதின் ஒரு ஓரத்தில் மித்ராவைப் பற்றிய சிந்தனையே ஓடிகொண்டிருந்தது. ‘அவள் ஒழுங்காக இருக்கிறாளா? பயப்படாமல் இருக்கிறாளா?’ என்று அவனது மனம் அடித்துக்கொண்டது.
மீட்டிங் பாதியைத் தாண்டியபோது, திடீரென்று ஈஸ்வரின் பர்சனல் ஸ்டாஃப் ஒருவன் கதவைத் திறந்து கொண்டு பதற்றமாக உள்ளே வந்தான்.
பொதுவாக மீட்டிங் நடக்கும்போது யாரும் இப்படி உள்ளே வரமாட்டார்கள் என்பதால் ஈஸ்வர் புருவத்தைச் சுருக்கி அவரை ஏறிட்டான்.
அந்த ஸ்டாஃப் வேகமாகக் குனிந்து ஈஸ்வரின் காதருகே ரகசியமாகக் கூறினான், “சார்… மன்னிச்சிடுங்க, மீட்டிங்ல வந்து தொந்தரவு பண்றதுக்கு. ஆனா உங்க கேபின்ல இருந்து மேடம்… மித்ரா மேடம்…” என்று இழுத்தான்.
“மித்ராவுக்கு என்ன? என்னாச்சு?” என்று ஈஸ்வரின் குரல் அந்த அமைதியான ஹாலில் பதற்றத்தில் சற்றே உரக்க ஒலித்தது.
“மேடம் கேபினுக்குள்ள பயங்கரமா அழுதுட்டு இருக்காங்க சார். கதவை உள்ள பூட்டிட்டாங்க. நாங்க தட்டியும் திறக்கல. ஏதோ விசித்திரமா கத்தி அழற சத்தம் மட்டும் கேக்குது. அதான் ஓடி வந்தேன்,” என்றான்.
அவ்வளவுதான்! ஈஸ்வரின் முகம் அப்படியே வெளுத்துப் போனது. இதயத் துடிப்பு நின்றுவிட்டது போன்ற ஒரு உணர்வு. லேப்டாப்பை அப்படியே மூடியவன், பக்கத்தில் இருந்த ஆனந்தைப் பார்த்தான்.
“ஆனந்த்! நீ மீட்டிங்க டேக் ஓவர் பண்ணிக்கோ. எனக்கு ஒரு அவசர வேலை. ஐ ஆம் ஸாரி,” என்று க்ளையண்டுகளிடம் அவசரமாக ஒரு வார்த்தை சொல்லிவிட்டு, பதிலே எதிர்பார்க்காமல் மீட்டிங் ஹாலை விட்டு வேகமாகக் கிளம்பினான்.
ஆனந்த் நிலைமையைப் புரிந்து கொண்டு, “ஓகே ஈஸ்வர், நான் பார்த்துக்கிறேன், நீ போ!” என்று கத்தினான்.
ஈஸ்வர் காரிடாரில் புயலாகப் பறந்தான். அவன் கேபின் வாசலில் சில ஊழியர்கள் கூடி நின்று கதவைத் தட்டிக் கொண்டிருந்தனர்.
“எல்லாரும் தள்ளிப் போங்க! இங்க என்ன வேடிக்கையா காட்டுறாங்க போங்க உங்க வேலைக்கு!” என்று ஈஸ்வர் கத்திய கத்தில் எல்லாரும் பயந்து நகர்ந்தனர்.
கதவருகே சென்று காதைத் தீட்டிப் பார்த்தான். உள்ளே மித்ரா விம்மி விம்மி அழும் சத்தமும், மூச்சு வாங்கும் சத்தமும் கேட்டது.
“ஈஸ்வர்… எனக்குப் பயமா இருக்கு… என்னை விட்டுட்டுப் போகாத… யாராவது கதவைத் திறங்க…” என்று அவள் கதறுவது கேட்டது.
ஈஸ்வருக்குப் பைத்தியம் பிடிப்பது போலிருந்தது. “மித்ரா! கதவைத் திறடி. நான் வந்துட்டேன்… உன் ஈஸ்வர் வந்துட்டேன் மித்ரா… பயப்படாதே!” என்று கதவை வேகமாகத் தட்டினான்.
“ஈஸ்வர்…? கதவு… கதவு திறக்க மாட்டேங்குது ஈஸ்வர்… இங்க இருட்டா இருக்கு… எனக்கு பயமா இருக்கு!” என்று உள்ளே இருந்து அழுதுகொண்டே கத்தினாள்.
“இருடி… நான் கதவை உடைக்கிறேன், தள்ளி நில்லு!” என்றவன், தன் முழு பலத்தையும் திரட்டி கதவைத் தன் தோளால் முட்டி உதைத்தான். இரண்டு மூன்று முட்டுகளில் லாக்கர் உடைந்து கதவு டொம்மென்று திறந்து கொண்டது.
உள்ளே பார்த்த ஈஸ்வர் அப்படியே அதிர்ச்சியில் உறைந்து போனான்.
அறைக்குள் இருந்த சோபா குஷன்கள் எல்லாம் கீழே சிதறிக்கிடந்தன. மித்ரா ஒரு மூலையில், டேபிளுக்கு அடியில் தன் இரண்டு கால்களையும் மார்போடு சேர்த்து அணைத்தபடி, உடம்பெல்லாம் நடுங்க அமர்ந்திருந்தாள்.
அவளது தலைமுடி கலைந்து, முகம் முழுவதும் கண்ணீரால் நனைந்திருந்தது. பயத்தில் அவளது உடம்பு ஒரு இலை போல நடுங்கிக் கொண்டிருந்தது.
ஈஸ்வர் பதறிப்போய் அவளருகே ஓடினான். டேபிளுக்கு அடியில் குனிந்து, “மித்ரா… என்னாச்சுடி? ஏன் இப்படி இருக்க?” என்று அவளைத் தொடப் போனான்.
ஆனால் மித்ரா பயத்தில் கத்தினாள், “என்னைத் தொடாதீங்க! யாரும் வராதீங்க! ஈஸ்வர் எங்கே… ஈஸ்வர் வேணும் எனக்கு…” என்று கண்களை மூடிக்கொண்டு கத்தினாள்.
அவள் பயத்தின் உச்சத்தில்
தன் முன்னால் நிற்பவன் ஈஸ்வர் என்பதைக்கூட சட்டென்று அடையாளம் காண முடியாமல் இருந்தாள்.
அவள் உடம்பு மட்டுமே அவனது குரலுக்காகவும் அணைப்புக்காகவும் ஏங்கியது, ஆனால் மூளை பயத்தில் உறைந்திருந்தது.
ஈஸ்வர் அவளது கைகளை வலுக்கட்டாயமாகப் பற்றினான். “மித்ரா! என் கண்ணைப் பாருடி. நான்தான் உன் ஈஸ்வர். கண்ணை திறந்து பாரு டி… நான் வந்துட்டேன்… இனி உனக்கு எந்த பயமும் வேணாம்” என்று அவளை அப்படியே இழுத்துத் தன் மார்போடு இறுக்கமாக அணைத்துக் கொண்டான்.
அவனது மார்பின் கதகதப்பும், அவனது உடலின் வாசனையும் பட்ட அடுத்த நொடி… மித்ராவின் நடுக்கம் சற்றே குறைந்தது. அவளது உடம்பு அந்தத் தொடுதலை உடனடியாக அடையாளம் கண்டுகொண்டது.
அவளது கைகள் தானாக ஈஸ்வரின் கழுத்தைக் கட்டிக்கொண்டன. அவனது நெஞ்சில் முகத்தைப் புதைத்துக்கொண்டு இன்னும் சத்தமாக அழுதாள்.
“ஏன் ஈஸ்வர் என்னைத் தனியா விட்டுட்டுப் போன? நீ போன உடனே இந்த ரூம்ல இருக்குற லைட் எல்லாம் அணைஞ்சு போன மாதிரி இருந்துச்சு. சுவறெல்லாம் என்னை நசுக்க வர்ற மாதிரி பயமா இருந்தது. எனக்கு மூளைக்குள்ள ஏதோ ஒன்னு வந்துட்டுப் போற மாதிரி உடம்பெல்லாம் ஒரு மாதிரி வலிச்சது ஈஸ்வர்… எனக்கு ரொம்ப பயமா இருக்கு, யாரோ என்னை கட்டி வெச்சு.. என்னை என்னை… என்னவோ செய்றாங்க…” என்று அழுதுகொண்டே தன் வேதனையைக் கொட்டினாள்.
அவள் சொன்னதைக் கேட்டு ஈஸ்வரின் இதயம் ரத்தக் கண்ணீர் வடித்தது. அவளுக்குள் பழைய நினைவுகள் ஏதோ லேசாக வந்து மோதியிருக்கிறது, அதைத் தாங்க முடியாமலும், புரிந்து கொள்ள முடியாமலும் அவளது உடம்பும் மனசும் கஷ்டப்பட்டிருக்கிறது என்பதை அவன் உணர்ந்தான்.
“ஸாரிடி… ரொம்ப ஸாரி. உன்னைத் தனியா விட்டது என் தப்புதான். இனிமே உன்னை விட்டு ஒரு நொடி கூட போக மாட்டேன்,” என்றவன் அவளை அப்படியே அள்ளித் தூக்கிக் கொண்டு வந்து சோபாவில் அமர வைத்தான்.
அவள் அருகே அமர்ந்தவன் , அவளைத் தன் நெஞ்சோடு அணைத்தபடி மெதுவாக அவளது முதுகை வருடிக்கொடுத்தான்.
“இப்போ பாரு… நான் பக்கத்துல இருக்கேன்ல. உனக்கு ஒன்னும் ஆகாது. பயத்தை விடு,” என்று சமாதானப்படுத்தினான்.
அவளது கைகள் இன்னும் அவனது சட்டையை விடாமல் இறுக்கமாகப் பிடித்திருந்தன. “எனக்கு உள்ளுக்குள்ள ஏதோ பண்ணுது ஈஸ்வர். என் உடம்பெல்லாம் ஏன் இப்படி நடுங்குதுன்னு தெரியல.
எனக்கு என்னாச்சு ஈஸ்வர்? யாரோ என்னை வந்து இங்க எல்லாம் தொடுறது போல இருக்கு ” என்று தன் நெஞ்சைத் தொட்டுக் காட்டி அப்பாவியாகக் கேட்டாள்.
ஈஸ்வர் அவளது கலங்கிய கண்களைத் தன் விரல்களால் துடைத்துவிட்டான். “உன் உடம்புக்கு ஒன்னும் ஆகல மித்ரா. உன் மூளைக்கு நான் யாருன்னு மறந்துருக்கலாம். ஆனா உன் உடம்புக்குத் தெரியும், இந்த ஈஸ்வர் மட்டும்தான் உன்னோட பாதுகாப்பு, உன்னோட உலகம்னு. அதான் நான் தொட்ட உடனே உன் பயம் எல்லாம் ஓடிடுச்சு,” என்றான் அவளது காதோரம் முத்தமிட்டு.
“நிஜமாவா?” என்று விம்மல் எடுத்தபடியே கேட்டாள்.
“நிஜமாத்தான்டி என் செல்லம்,” என்றவன் அருகில் இருந்த வாட்டர் பாட்டிலை எடுத்து அவளுக்குக் குடிக்கக் கொடுத்தான்.
அதை வாங்கியவலுக்கு குடிக்க முடியாத அளவுக்குக் கைகள் நடுங்கியதால், அவனே பாட்டிலைத் தன் கைகளில் பிடித்து அவளது இதழ்களில் வைத்து மெல்லத் தண்ணீரைப் புகட்டினான்.
தண்ணீர் குடித்தபின் மித்ரா சற்றே அமைதியானாள். ஆனாலும் அவனது மார்பை விட்டு விலக மறுத்தாள்.
“ஈஸ்வர்… நாம வீட்டுக்குப் போயிடலாமா? எனக்கு இந்த இடம் பிடிக்கல,” என்றாள் மெதுவான குரலில்.
“போயிடலாம்டி. இப்போவே கிளம்பலாம்,” என்றவன், அவளது கலைந்த தலைமுடியை ஒழுங்குபடுத்தி, அவளது நெற்றியிலும் கன்னத்திலும் மாறி மாறி முத்தமிட்டு அவளது பயத்தை முழுமையாகப் போக்கினான்.
அவளை அப்படியே பத்திரமாகத் தன் கைகளுக்குள் அரவணைத்தபடி, ஆபீஸ் வேலைகளை அப்படியே போட்டுவிட்டு காரை நோக்கி கூட்டிச் சென்றான்.
மித்ராவின் பழைய நினைவுகள் மறந்தாலும், இப்பொது அவள் உடலும், உயிரும் அவனுக்காக மட்டுமே ஏங்கும் என்பதை அந்த நிமிடம் ஈஸ்வர் இன்னும் ஆழமாகப் புரிந்து கொண்டான்.
