EPISODE – 19
அவன் நோட்டின் முன்பக்கங்களை செக் பண்ண… பத்து நாட்களில் நான்கு ஐந்து முறை அவர்கள் பவித்ரன் ஹாஸ்பிடலுக்கு வந்து போனது தெரிந்தது.
இப்போது சுமதி என்ற பெயரை உதயாவின் ஹாஸ்பிடல் லிஸ்டிலும், சுரேந்திரன் ஹாஸ்பிடல் லிஸ்டிலும் தேடிப் பார்க்க… ஆறு மாதங்களுக்கு முன்னால் அவர்கள் இந்த ஹாஸ்பிடலுக்கு வந்து போனது உறுதியானது.
“உதயா இந்த சுமதி யாருன்னு தெரியுமா? ஒரு தொழிலதிபரோட வைஃப்புக்கு கிட்னி பெயிலியர் ஆகி… அவங்களுக்கு வச்சதுதான் இந்த சுமதியோட கிட்னி… நம்ம கூட அதுக்கு பெரிய அமௌன்ட் வாங்குணோமே”
“கரெக்ட்… என்றா உதயா”
“அப்ப இந்த சுமதி தான் பவித்திரனுக்கு கிடைச்சிருக்கிற எவிடன்ஸ்…” என்று சொன்ன சுரேந்தர் அவனது அசிஸ்டன்ட்டை அழைத்து…
“இன்னைக்கு சாயங்காலத்துக்குள்ள அவங்க எங்க இருக்காங்க… என்னன்னு விசாரிச்சு நம்ம இடத்துக்கு தூக்கிட்டு வந்துரு” என்று சொன்னான்…
அமைச்சர் மருதமலை வீட்டில்,
இன்ஸ்பெக்டரும், கான்ஸ்டபிள் கந்தசாமியும் மினிஸ்டர் பார்க்க வந்திருப்பதாக செக்யூரிட்டியிடம் சொல்ல,
சார் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க…
“உள்ள ஏதோ பிரச்சனை போல இருக்கு… ரொம்ப நேரமா பேசிட்டு இருக்காங்க… ஒன்னு பண்ணுங்க நீங்க உள்ள போயி… மினிஸ்டர் ரூமுக்கு வெளியில வெயிட்டிங்ஹால் இருக்கு அங்க உக்காருங்க…”
கந்தசாமி தொப்பைக்கு கீழ் இறங்கும் பேண்ட்டை இழுத்து விட்டு கொண்டு இன்ஸ்பெக்டரின் பின்னால் வந்தார்.
“ஐயா எனக்கு கண்டிப்பா ப்ரோமோஷன் கிடைச்சிடும் இல்ல…”
“கந்தசாமி… கரெக்டா இந்த விஷயம் மூவ் ஆச்சுன்னா… உனக்கு பிரமோஷன் கிடைக்கும்… எனக்கும் நல்ல பேர் கிடைக்கும்… எங்காவது மிஸ் ஆச்சுன்னு வச்சுக்கோ… அந்த மினிஸ்டர் ரவி, அப்புறம் இந்த டாக்டர் சுரேந்திரன் இவங்க எல்லாம் சேர்ந்து நம்ம உடம்புல கிட்னி மட்டும் இல்ல எல்லாத்தையும் உருவிடுவானுங்க ஞாபகம் வச்சுக்கோ…”
“என்னய்யா சொல்றீங்க… இவரு நல்ல மினிஸ்டர்ன்னு தானே நம்ம இங்க வந்தோம்” என்றார் கந்தசாமி.
“கரெக்டு தான் கந்தசாமி… மினிஸ்டர் நல்லவர் தான்… ஆனா இங்கேயும் கருப்பு ஆடுகள் இருக்கும்ல்ல… அப்படி ஏதாவது நம்ம விஷயம் லீக் ஆச்சின்னா உனக்கும் எனக்கும் சங்கு தான்…”
“ஐயா… நீங்க சொல்றத பாத்தா எனக்கு வயித்த கலக்குது… உள்ள போய் உட்காருங்க… நான் இந்தா…தான் போயிட்டு வந்துடறேன்…”
“யோவ் என்னய்யா நீ… அளவா தின்னா தான ஆகும்… கண்டபடி தின்னா… இப்படித்தான் கண்ட இடத்துல போக வேண்டியதுதான்…சரி போ…போயிட்டு சீக்கிரம் வா…” என்று கந்தசாமியிடம் சொல்லிவிட்டு இவர் சென்று அமைச்சரின் ரூமுக்கு முன்னால் அமர்ந்தார்.
இன்ஸ்பெக்டரை பார்த்ததும்… மினிஸ்டர் மருதமலையின் முகம் மாறியது…
உள்ளே சிலர் ரொம்ப சீரியஸாக ஏதோ பேசிக் கொண்டிருந்தனர்.
கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்த மினிஸ்டர்… ஏதோ சொல்லி அவர்களை அனுப்பி வைத்தார்.
அதற்குள் கந்தசாமி வந்து சேர…
உள்ளே இருந்து மினிஸ்டர் கூப்பிடுவதாக ஒருவன் வந்து சொன்னான் இன்ஸ்பெக்டரிடம்.
உள்ளே போன இன்ஸ்பெக்டர்… சல்யூட் வைக்க…
கந்தசாமி கையை தூக்கி சல்யூட் வைக்க முயல… அந்த அமைதியை கிழித்துக்கொண்டு அவரின் வயிற்றில் இருந்த காற்று… கந்தசாமியின் பின் வழியாக சத்தமாக வெளியே வந்தது…
கந்தசாமி “ஹி… ஹி” என்றவரே சாரி சார் என்றார்.
“ஏய்யா எப்படி அசிங்கப்படுத்துற…” என்று இன்ஸ்பெக்டர் முணுமுணுக்க..
அதற்குள் அமைச்சர்… மூக்கை தேய்த்துக் கொண்டு…
“ உக்காருங்க இன்ஸ்பெக்டர் என்ன விஷயம்” என்றார்…
“சார்… ரொம்ப முக்கியமான விஷயம் பேசிட்டு இருப்பீங்க போல இருக்கு… இந்த நேரத்துல வந்து தொந்தரவு பண்றதுக்கு மன்னிக்கணும்…”
அது ஒன்னும் இல்ல இன்ஸ்பெக்டர்… வெளியே உட்கார்ந்து இருந்த ஒருவரை காட்டி….
இந்தா… ஒக்காந்து இருக்கார் இல்ல… இவரோட பொண்ணு முதல்ல ஒருத்தனுடைய பழகிட்டு இருந்துச்சாம்… இவரும் சரின்னு ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வைக்க ஒத்துக்கிட்டாரு… ஒரு ஆறு மாசம் போகட்டும்னு சொல்லி இருக்காரு… சரி அந்த ஆறு மாசம் ஏதாவது படிக்கட்டுமேன்னு ஒரு டிப்ளமோ கோர்ஸ்சுக்கு அந்த பொண்ண அனுப்பி வெச்சிருக்காரு… அங்க எவனோ ஒருத்தன்… இந்த பொண்ணுகிட்ட நீ அழகா இருக்க… அது இதுன்னு சொல்லி அவனும் லவ் பண்றேன்னு சொல்லி இருக்கான்… ”
“அச்சச்சோ அப்புறம் என்ன சார் ஆச்சு”
“அதை ஏன் கேக்குறீங்க… அந்த பொண்ணு புதுசா ஒருத்தன் வரவும்… அவன் நல்ல அழகா டீசன்ட்டா இங்கிலீஷ் எல்லாம் பேசவும்… இவ முதல்ல லவ் பண்ணால்ல… அவனை வேண்டாம் என்று சொல்லி இருக்கா…”
“என்ன சார்… இது. இப்படி எல்லாமா நடக்கும்… பொண்ணுங்க இந்த மாதிரி எல்லாம் இருப்பாங்களா…” என்றார்.
இன்ஸ்பெக்டர் காலம் ரொம்ப மாறிக்கிட்டு இருக்கு… ஒருவனுக்கு ஒருத்தி அப்படிங்கறதெல்லாம் நம்ம காலத்தோட மலையேறி போயிருச்சு.
“அதுல இந்த செல்போன் இருக்குல்ல இப்போ…. நம்ம பண்பாடு சீரழியறதுல அதோட பங்கு ரொம்ப…”
“சார் என்ன இருந்தாலும்… பொண்ணுங்களுக்கு தெரிய வேணாம்மா சார்”
இன்ஸ்பெக்டர் பொண்ணுங்களா இருந்தாலும்… பசங்களா இருந்தாலும்… ஒழுக்கம் அப்படிங்கறது முக்கியம்… ஃபாரின்ல நம்ம கலாச்சாரத்தை புரிஞ்சுகிட்டு… அவங்க நம்மள மாதிரி மாறிக்கிட்டு இருக்காங்க…
இங்க என்னடான்னா… இதுக நாகரிகம்னு எதையோ நினைச்சுகிட்டு… வாழ்க்கைய நாசம் பண்ணிக்குதுக… பெத்தவங்க பேச்சையும் கேக்குறது இல்ல… எதையும் சட்டை பண்ணிக்கிறது இல்ல… கடைசியில எல்லாம் முடிஞ்சப்புறம்… இந்த மாதிரி பிரச்சனையை தூக்கிட்டு வந்துற வேண்டியது…. நமக்கு ஏற்கனவே ஏகப்பட்ட பிரச்சனை இருக்கு… இதுல இவனுங்க வேற… என்ன பண்றது கட்சி காரணங்களா போயிட்டாங்க… ஏதாவது செஞ்சு தான ஆகணும்”
“சரி விடுங்க… நீங்க இப்ப எதுக்கு வந்தீங்க…”
சார் நான் வந்ததும் ரொம்ப முக்கியமான விஷயம் தான்….
என்று தான் கொண்டு வந்த அந்த ரெண்டு லேப்டாப்பையும் அவருக்கு முன்னால் வைத்தார்.
அப்போது கந்தசாமி அவரிடம்… “சார் இந்த ரெண்டு லேப்டாப்பையும் இங்கேயே குடுத்துட்டு வந்துருவீங்களா…” என்றார்
“ஏய்யா அப்படி கேக்குற…”
“இல்ல… எனக்கு ஒன்னு கொடுத்தீங்கன்னா நான் வீட்டுக்கு போயி இதுல படம் பார்ப்பேன்… என் பொண்டாட்டிக்கு ரொம்ப நாளா இதுல படம் பாக்கணும்னு ஆசை…”
என்றார்.
“யோவ்… வாய மூடிட்டு இருக்கியா இல்லையா…. ஏதாவது சொல்லிட போறேன்” என்று அதட்டினார் இன்ஸ்பெக்டர்.
“என்ன இன்ஸ்பெக்டர் உங்களுக்குள்ளே பேசிட்டு இருக்கீங்க” என்றார் அமைச்சர்.
“ஒன்னும் இல்லைங்க சார்… இது முக்கியமான எவிடன்ஸ்ன்னு கந்தசாமி சொல்லிட்டு இருந்தார்”
“முக்கியமான எவிடன்ஸ்னு சொல்றீங்க… ஆனா என்ன ஏதுன்னு டீடைல் சொல்ல மாட்டேங்கறீங்களே” என்றார் அமைச்சர் கொஞ்சம் கடுப்பாக.
“சாரி சார்” என்றவர் அந்த லேப்டாப்பை ஓப்பன் பண்ணினார்..
அதிலிருந்து பைல்களை அமைச்சரிடம் காட்ட… என்னய்யா இது… இவ்வளவு பணம் ட்ரான்ஸ்பர் ஆயிருக்கு… இது யாரோட அக்கவுண்ட்… என்ன விவரம்” என்று கேட்க,
இன்ஸ்பெக்டர் நடந்தவை அனைத்தையும் ஒன்று விடாமல் சொன்னார்.
அதை எல்லாம் கேட்ட மினிஸ்டர் மருதமலை அதிர்ச்சியின் உச்சிக்கே சென்று விட்டார்.
இது மிகப்பெரிய பிரச்சினையா தெரியுதே… இந்த பிரச்சனையை எப்படி மூவ் பண்ணுவது… இத நான் முடிவு பண்ண முடியாது… நீங்க சொல்றத பார்த்தா இதுல மினிஸ்டர் ரவியும் இன்வால்வ் ஆகி இருக்கார்…” என்று மினிஸ்டர் மருதமலை சொல்ல…
“சார்… அதனால தான் உங்க மூலமா இதை சி.எம் க்கு கொண்டு போயிரலாம்னு தான் இங்க வந்தோம்”. என்றார் இன்ஸ்பெக்டர்.
“கரெக்டு தான்… இத நானா பேசி முடிவெடுக்க முடியாது… நான் எதுக்கும் முதல்வர் கிட்ட முதல்ல பேசுறேன்… அப்புறமா என்ன பண்ணலாம்னு நான் உனக்கு கூப்பிடுறேன்” என்று சொன்னார்.
“சார்… இப்போ அவனுங்க சாட்சியங்களை அழிக்கறதுக்காக ஆட்களை கடத்திட்டு போற அளவுக்கு வந்துட்டாங்க… கொஞ்சம் வேகமா மூவ் பண்ணா தான்… அவங்ககிட்ட சிக்கி இருக்கிறவங்களை காப்பாத்த முடியும்…”
மினிஸ்டர் ஒரு நிமிடம் யோசித்து விட்டு… “கரெக்டு தான் இன்ஸ்பெக்டர், இது மெதுவா சரி பண்ண வேண்டிய விஷயம் இல்லை நான் உடனே போய் முதல்வரை பார்க்கிறேன்” என்று கிளம்பி விட்டார்.
“சார்… என்னோட பிரமோஷன்…”
என்று கந்தசாமி ஆரம்பிக்க…
“யோவ்… கேஸ்ல என்ன நடக்குமோ என்னமோ அவனவன் பயந்துகிட்டு கிடக்க, நீ என்னடான்னா எப்ப பார்த்தாலும் ப்ரமோஷன்… ப்ரோமோஷன் சொல்லிட்டே இருக்கியேய்யா” என்றார் இன்ஸ்பெக்டர்.
“சார் ப்ரொமோஷன் வரும்போது வரட்டும் சார்… இப்போ பசிக்குது சார் எனக்கு” என்று கந்தசாமி சொல்ல…
கந்தசாமிக்கு செலவு செய்வதை நினைத்து இன்ஸ்பெக்டருக்கு இப்போது வயிற்றை கலக்கியது.
நேரம் மாலை 5 நெருங்கிக் கொண்டிருந்தது.
அங்கே வினோவின் வீட்டில்… வினோவுக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லாததால்…. ஆபீஸ் போகாமல் படுத்திருந்தாள்.
ஸ்னாக்ஸ் எதையோ கொறித்துக் கொண்டே அவளது செல்ல நாய் ஜாக்கியை கொஞ்சிக் கொண்டிருந்தாள்.
அப்போது அவளது அம்மா… வினோ “வாடி இந்த பிளவுஸை தைக்க கொடுத்துட்டு வரலாம்…” என்று கூப்பிட…
“அம்மா எனக்கே உடம்பு சரியில்லை… என்னை ரெஸ்ட் எடுக்க விட மாட்டியா…. நீயே போயிட்டு வந்துரு…”
“ஏய்… அந்த டெய்லர் கடை ரொம்ப தூரத்தில் இருக்குடி… நீ உன்னோட வண்டியில கூட்டிட்டு போ… இல்லன்னா நான் பஸ்ல தானே போகணும்” என்றார்.
“போயிட்டு வாம்மா… மெதுவா பஸ்ல போயிட்டு வா… இப்ப இங்க இருந்து என்ன பண்ண போற…” என்று வினோ சொல்ல…
“நல்லா தாண்டி உக்காந்து இருக்க… நான் கூப்பிட்டா மட்டும் உனக்கு முடியாம போயிடும்… சரி வீட்டை பார்த்துக்க… பத்திரமா இரு… நான் போயிட்டு வர ஒரு மணி நேரம் … ஒன்றரை மணி நேரம் ஆயிரும்” என்று கிளம்ப…
“அம்மா… வரும்போது எனக்கு தகி பூரியும், காளான் ஃப்ரையும் வாங்கிட்டு வா”
“உடம்பு சரியில்ல… இது மட்டும் சாப்பிடலாம் உணத்ததியா… ஏண்டி”
என்று அவளை முறைத்து விட்டு வினோவின் அம்மா மெதுவாக கிளம்பினார்.
அவர் கிளம்பின பத்து நிமிடத்தில்…
“அப்பா… ஒருவழியா அம்மாவ கிளப்பி விட்டாச்சு…” என்று பெருமூச்சு விட்டவள்…
“இதுதான் சமயம் கொஞ்ச நேரம் கடலை போடலாம்… என்று போனை எடுத்து விமலுக்கு கால் பண்ணினாள்.
ஒரு ரிங் முடிவதற்குள்ளேயே விமல் போனை எடுத்து விட்டான்…
“ஹாய் செல்லகுட்டி… என்னடி பண்ற… ஏன் காலையில இருந்து கூப்பிடவே இல்ல” என்றான் விமல்.
“டேய் நான் இன்னைக்கு ஆபீஸ் போகலடா… கொஞ்சம் உடம்பு சரியில்ல அதனால வீட்லதான் இருக்கேன்… அம்மா கூடவே இருந்ததினால உன்கிட்ட சொல்ல முடியல” என்றாள்.
“அச்சச்சோ செல்லத்துக்கு என்ன ஆச்சு…. ரொம்ப முடியலையாடி…” என்றான்.
“ஒன்னும் இல்ல… காலைல கொஞ்சம் தலைவலியா இருந்துச்சு… சரி அப்படியே ரெஸ்ட் எடுக்கலாம்னு லீவ போட்டுட்டேன்” என்றாள் வினோ.
“அப்படியா சரி சரி… இப்போ அம்மா வீட்ல இல்லையா… எனக்கு கூப்பிட்டிருக்க” என்றான் விமல்.
“ஆமா… அம்மா வெளிய போய் இருக்காங்க… எப்படி வர ஒன்னரை மணி நேரம் ஆயிடும்…” என்றாள் ஜாக்கியை தடவிக் கொண்டே.
“ஏய்… அப்ப வீட்ல தனியாவாடி இருக்க…”என்றான் ஆர்வமாக.
“தனியா இல்லை… நானும் ஜாக்கியும் இருக்கிறோம்” என்றாள்.
“ஏய்… எனக்கு உன்ன பாக்கணும் போல இருக்குடி…. நானும் பக்கத்துல தான் இருக்கேன் உங்க வீட்டுக்கு வரவா…” என்றான் விமல்.
