Home Uncategorizedஉன் ரகசிய ரசிகை நான் 44

உன் ரகசிய ரசிகை நான் 44

by Layas Tamil Novel
470 views

EPISODE 44

ஆதியும் துர்காவும் சாப்பிட்டு முடித்துவிட, ஆதி முத்து தாத்தாவைப் பார்த்து, “தாத்தா, எனக்கு ஒரு டம்ளர் பால் மட்டும் மேல ரூமுக்குக் கொடுத்து விடுங்க,” என்று சொல்லிவிட்டு, துர்காவைப் ஒரு பார்வை பார்த்துவிட்டு மேலே சென்றுவிட்டான்.

அவன் சென்றதும் கீர்த்திகாவும் கதிரும் சாப்பிடச் சொல்லிவிட்டு, துர்கா கிச்சனுக்குள் சென்று, கிச்சனில் மற்றவர்களோடு சேர்ந்து பேசிக்கொண்டிருந்தாள்.

இப்போது டைனிங் டேபிளில் கதிரும் கீர்த்திகாவும் மட்டும் அமர்ந்திருக்க… கீர்த்திகா சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு, யாராவது இருக்கிறார்களா என்று பார்த்துவிட்டு, கதிரைப் பார்க்க… கதிர் அவளைக் கண்டுகொள்ளாதவன் போலத் தீவிரமாகக் குனிந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தான்.

அவன் தன்னைப் பார்க்காமல் சாப்பாட்டிலேயே குறியாகச் சாப்பிட்டுக்கொண்டிருப்பதைப் பார்த்த கீர்த்திகா, அவனைப் பார்த்து முட்டாள்! முட்டாள்! முதலிலாவது யாராவது இருந்தாங்க, சரி என்னைப் பார்க்க முடியலைன்னு சொல்லலாம். இப்போதான் டைனிங் டேபிளில் யாருமே இல்லையே, நம்மளைச் சுற்றி யாருமே இல்லையே. என்னைத் திரும்பி ஒரு பார்வை பார்த்தா என்ன? என்று அவனைத் திட்டிக்கொண்டு கீர்த்திகா சாப்பிட… அவள் திட்டுவது கதிருக்குக் கேட்கத்தான் செய்தது. ஆனாலும், கேட்காதவன் போலக் குனிந்து சிரித்துக்கொண்டே சாப்பிட்டான்.

தன் அருகில் இருந்த சாம்பார் பாத்திரத்தை எடுத்துப் பக்கத்தில் வைத்தவள், வேண்டுமென்று கரண்டியில் சாம்பாரைக் கலக்குவதுபோல பாத்திரத்தில் தட்டிச் சத்தம் எழுப்பினாள். அப்போதும் கதிர் திரும்பவே இல்லை.

அவனை முறைத்துக்கொண்டு சாம்பார் எடுத்து அவன் தட்டில் ஊற்றும் பொழுதும், கரண்டியைத் தட்டில் படும்படி வேகமாகச் சத்தம் எழுப்பிச் சாம்பாரை ஊற்ற… கிச்சனில் இருந்து துர்கா, “ஏய்…. கீர்த்து… இப்ப எதுக்கு பாத்திரத்தை உருட்டிட்டு இருக்க? சத்தமில்லாமல் சாப்பிட முடியாதா உன்னால?” என்று கிச்சனில் இருந்து கீர்த்திகாவை துர்கா சத்தம் போட… “இல்லை, தெரியாம கை தவறித் தட்டில் கரண்டி விழுந்துருச்சு,” என்றாள் கீர்த்திகா.

பிறகு எதுவும் சத்தமில்லாமல் அமைதியாக கீர்த்திகா சாப்பிட்டுக்கொண்டிருக்க… திடீரென்று அவள் காலில் ஏதோ ஊர்வதுபோல் இருக்க… குனிந்து தன் காலைப் பார்க்க… கதிர் தான் டைனிங் டேபிள் அடியில் தன் காலை விட்டு அவள் காலைத் தன் காலால் உரசிக்கொண்டு அமர்ந்திருந்தான்.

அவன் காலைப் பார்த்ததும் வேகமாக நிமிர்ந்து கீர்த்திகா அவனை முறைக்க… அப்போது கதிர் அவளைப் பார்த்துச் சிரித்துக்கொண்டு அமர்ந்திருந்தான்.

அவனை முறைத்துக்கொண்டு, “இப்போ எதுக்குடா என் காலை நோண்டுற? இவ்ளோ நேரம் என்னைப் பார்க்காமல் தான் உட்கார்ந்து சாப்பிட்டு இருந்தேன். அந்த வேலையைப் பாரு. என் காலை உரசுற வேலை எல்லாம் வெச்சுக்காத,” என்று சொல்லிவிட்டு, தன் காலால் அவன் காலை ஓங்கி ஒரு மிதி மிதிக்க… அவன் வலியில் “ஷ்…. ஆ…. அம்மா….” என்று கத்த…

கதிர் கத்திய சத்தம் கேட்டு, கிச்சனில் இருந்து துர்கா வேகமாக டைனிங் டேபிளுக்கு வந்தவள், “கதிர்! ஏன்டா கத்துற? என்ன ஆச்சு? ஏதாவது கையில சூடா கொட்டிக்கிட்டியா?” என்று அவசரமாகக் கேட்டுக்கொண்டே டைனிங் டேபிளுக்கு வர…

துர்கா டைனிங் டேபிளுக்கு வந்ததும் கதிர் என்ன சொல்வது என்று தெரியாமல் விழித்தவன், சுதாரித்துக்கொண்டு, “அது ஒண்ணும் இல்லை துர்கா… ஹாட் பாக்ஸில் இட்லி சூடா இருக்குறது தெரியாமல் அப்படியே கையை உள்ள விட்டுட்டேன் துர்கா… அதான் சூடு பட்ட உடனே சத்தம் போட்டுட்டேன். வேற எல்லாம் ஒண்ணும் இல்லை,” என்று கூற…

“இட்லி வேணும்னா என்னைக் கூப்பிட வேண்டியதுதானே? நான் வந்து எடுத்து வைப்பேன்ல? கீர்த்திகா பக்கத்துலதான் உட்கார்ந்திருக்கா. அவகிட்ட சொன்னா அவ எடுத்து வைக்கப் போறா… நீ எதுக்கு இப்படி கை எல்லாம் சுட்டுக்கிட்ட? இந்த வேலை எல்லாம் பண்ணிட்டு இருக்க?” என்று அவனை கடிந்துகொண்டவள், “சரி இரு… நானே உனக்கு இட்லி வைக்கிறேன்,” என்று ஹாட் பாக்ஸில் இருந்து மேலும் இரண்டு இட்லியை அவன் தட்டில் வைக்க… “இல்லை துர்கா… நான் வெச்சிட்டேன். எனக்கு போதும்,” என்று கதிர் சொல்லவும் கேட்காமல் அவள் இரண்டு இட்லி சேர்த்து வைத்தாள்.

கதிருக்கு இட்லி வைத்துக்கொண்டே, அருகில் இருந்து கீர்த்திகாவைப் பார்த்து, “ஏண்டி, நீ இங்க சும்மாதானே உட்கார்ந்து, சாப்பிடாமத் தட்டையே பார்த்துட்டு இருக்க. கதிருக்கு எடுத்துச் சாப்பாடு வச்சா என்ன? நீ குறைஞ்சு போயிருவியா? நீ அவன்கிட்ட ‘நான் எடுத்து வைக்கிறேன்’னு சொல்லி வைக்க மாட்டியா?” என்று கேட்க… கதிர் உடனே துர்காவைப் பார்த்து, “விடு துர்கா… அவ சின்னப் பொண்ணு. அவளுக்கு என்ன தெரியும்? அவளுக்கே ஒழுங்காச் சாப்பிடத் தெரியாது. இதுல எனக்குச் சாப்பாடு பரிமாறப்போறாளா?” என்று கீர்த்திகாவின் காலை வார… அவனை முறைத்தவள் வேண்டுமென்று அவன் காலை ஓங்கி மிதிக்க… பல்லைக் கடித்துக்கொண்டு எதுவும் பேசாமல் அமைதியாக அவளை முறைத்துக்கொண்டு சாப்பிட்டுக்கொண்டிருந்தான் கதிர்.

“ஏண்டி, உனக்கு மெதுவா கதிர் தான் பேசிட்டு இருக்கேன். நீ வாயைத் திறந்து ஒரு வார்த்தை கூடப் பேச மாட்டியா? உன்கிட்ட தான கேட்டுட்டு இருக்கேன் கீர்த்து,” என்று துர்கா கீர்த்திகாவின் தோளைப் பிடித்து உலுக்க…

“அக்கா, நான் ஒன்னும் வேலை செய்ய மாட்டேன்னு சொல்லல அக்கா. கதிர் மாமா…. கிட்ட,” என்று அழுத்திச் சொன்னவள், “நான் இட்லி வைக்கிறேன்னு தான் சொன்னேன். அதுக்கு அவர் என்ன தெரியுமா சொன்னாரு? ‘உன் கை பட்ட இட்லி எல்லாம் நான் சாப்பிட மாட்டேன். நீ எல்லாம் எனக்கு ஒன்னும் வேலை செய்ய வேண்டாம். நானே எடுத்துச் சாப்பிடுகிறேன்,’ என்று சொல்லி அவரே எடுத்து இட்லி வெச்சிட்டாரு அக்கா. அவருக்குத்தான் என்னைக் கண்டால் பிடிக்கவே மாட்டேங்குது. என்னை எப்ப பார்த்தாலும் திட்டிட்டே இருக்காரு,” என்று திடீரென்று அழுவது போல முகம் வைத்துக்கொள்ள… இப்போது துர்காவுக்குத் தர்மசங்கடமாகப் போய்விட்டது. கதிருக்குப் பேசுவதா, கீர்த்திக்குப் பேசுவதா என்று தெரியாமல் இடையில் மாட்டிக்கொண்டு இருவரையும் பார்க்க…

“ஏய் கீர்த்திகா! நான் உன்கிட்ட எப்போ அப்படிச் சொன்னேன்? இப்ப ஏன் நீ பொய் பேசிட்டு இருக்க? பாரு துர்காவுக்கு என்ன பண்றதுன்னு தெரியாம முழிச்சிட்டு இருக்கா. நான் அப்படியெல்லாம் சொல்லல,” என்று கதிர் அவளைப் பார்த்துப் பேசிக்கொண்டிருக்க… அப்போது அங்கே வந்த முத்து தாத்தா, கையில் கொண்டு வந்த பால் டம்ளரை துர்காவிடம் கொடுத்துவிட்டு, “பாப்பா, நீ போய் ஆதி தம்பி குடிக்கப் பால் கேட்டுச்சு. நீ இந்தப் பாலைக் கொண்டுபோய் தம்பிக்குக் கொடுத்துடு மா…” என்றவர் அவள் கையில் பால் டம்ளரைத் திணிக்க…

அதை கையில் வாங்கியவள், ஐயோ… இப்போ பாலைக் கொண்டுபோய் அவன் கையில் கொடுத்தா ஏதாவது வம்பிலுப்பானே, என்று நினைத்தவள், “தாத்தா, நீங்களே கொண்டுபோய்க் கொடுத்துட்டு வரிங்களா? நான் கிச்சனில் கொஞ்சம் வேலை இருக்கு, முடிச்சுட்டு வந்துறேன்,” என்று கூற…

“அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம் பாப்பா…. நான் எல்லா வேலையும் நம்ம ஆளுங்களை எல்லாம் வெச்சு நான் வேலை வாங்கிக்கிறேன். அதுவும் இல்லாம, இந்த நேரத்துல இத்தனை ஆளுங்க இருந்தும் நீ வேலை பார்த்தா, அப்பறம் ஆதித் தம்பி எங்க எல்லாரையும் திட்டும்,” என்று சொல்லிவிட்டு, “நீ போ மா…” என்று அவளை வலுக்கட்டாயமாக அனுப்ப…

“அது வந்து…. நான் கீர்த்திகா தனியா இருப்பா. நான் அவகூட படுத்துக்கிறேன்,” என்று கூற… உடனே கீர்த்திகா, “அக்கா, நான் என்ன சின்ன குழந்தையா? நான் தூங்கிக்குவேன். நீ போய்த் தூங்கு அக்கா,” என்று சொல்லிவிட… வேறு வழி இல்லாமல் பாலை எடுத்துக்கொண்டு மேலே சென்றாள்.

அவள் மாடி ஏறி அவள் அறை செல்லும் வரை துர்காவையே பார்த்துக்கொண்டிருந்த மூவரும், துர்கா உள்ளே சென்றதும் முத்து தாத்தா சமையல் அறை சென்றுவிட… கதிர் கீர்த்திகாவைப் பார்த்து, “நான் வேணும்னா நைட் உனக்குத் துணையாக வந்து இருக்கட்டுமா?” என்றான் கதிர்.

“ஆஹா… பாலுக்குப் பூனை காவலா! உன்னை என் துணைக்கு வர சொன்னா அப்பறம் அடுத்த மாசமே நான் அம்மா ஆக வேண்டியதுதான். போடா…. எனக்குப் பத்திரமாப் படுத்துத் தூங்கத் தெரியும். நீ வந்து என்னைப் பார்த்துக்காக்குற அளவுக்கு இங்க யாரு வந்து என்ன என்ன செய்யப் போறாங்க?” என்றவள், எழுந்து கை கழுவி விட்டு, கதிர் அருகில் வந்து, “குட் நைட் டார்லிங்…..” என்று அவனிடம் வந்து அவன் தலை முடியைக் கலைத்துவிட்டு, அவள் அறைக்கு ஓடிவிட்டாள்.

“ஏய்…. ” என்று எட்டி அவளைப் பிடிக்கக் கதிர் போவதற்குள், சிட்டாகப் பறந்து அவள் அறைக்குள் ஓடி கதவைச் சாற்றிக்கொண்டாள்.

அவளையும் அவள் துடுக்குத்தனத்தையும் நினைத்துச் சிரித்தவன், கை கழுவிவிட்டு அவன் அறைக்குச் செல்லப் போக… “தம்பி, இந்தாங்க பால். துர்கா உங்க மூணு பேருக்கும் கொடுக்கச் சொல்லிட்டுத்தான் மேலே போச்சு. இங்கேயே எடுத்துக்கிறீங்களா? இல்லை ரூமில் கொண்டு வந்து கொடுக்கட்டுமா?” என்று கேட்டார்.

அவர் கையில் மூன்று கிளாஸ்கள் இருந்த ட்ரேயைப் பார்த்தவன், ஏதோ யோசித்தவனாக, “தாத்தா, என்கிட்ட கொடுங்க. நானே கொண்டு போய்க்கிறேன். நீங்க போய்த் தூங்குங்க. நேரம் ஆகுதில்லையா?” என்றவன், அவர் ‘வேண்டாம்’ என்று சொல்ல வருவதற்குள், அவர் கையில் இருந்த ட்ரேயை வாங்கிவிட்டான்.

“உங்களுக்கு எதுக்குத் தம்பி சிரமம்? நான் சின்னப் பாப்பாவுக்கு வேணும்னா கொடுத்துறேன். கொடுங்க,” என்று அவன் கையில் இருந்து ட்ரேயை வாங்க வர… “அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம். நீங்க போங்க. நானே கொண்டு போறேன்,” என்று அவரின் பதிலுக்குக் காத்திராமல் திரும்பி நடந்தான்.

பால் ட்ரேயுடன் கீர்த்திகாவின் அறைக்கு வந்தவன், கதவைத் தட்ட… கதவைத் திறந்த கீர்த்திகா, அறைக்கு வெளியே கதிர் பால் ட்ரேயுடன் நின்றிருப்பதைக் பார்க்க… “என்ன?” என்று புருவத்தை உயர்த்தி அவனிடம் கேட்க…

“பார்த்தா தெரியல? கையில பால் ட்ரேயோட வந்து நிற்கிறேன். என்ன என்று கேட்கிறாய்?” என்று கதிர். “இல்ல. வழக்கமா ஃபர்ஸ்ட் நைட்டுக்குக் கையில் ஒரு சொம்பு தான் கொண்டு வருவாங்க. ஆனா, நீ எதுக்கு மூணு கிளாஸ் பால் எடுத்துட்டு வந்து இருக்க?” என்று கேட்டாள் கீர்த்திகா.

அவள் ‘ஃபர்ஸ்ட் நைட்டுக்கு பால் சொம்பு’ என்று சொன்னதும், “பால் சொம்புல தான் கொண்டு வரணும்னு அவசியம் இல்லையே? அப்போ ஃபர்ஸ்ட் நைட்டுக்கு நீ ரெடியா…..” என்று கேட்டுக்கொண்டே அவள் அறைக்குள் நுழைய…

“ஏய்! ஏய்! டேய் கதிர்! இப்ப எதுக்குடா உள்ள வந்த? பால் கொடுக்கத்தானே வந்த? அங்க வெளியில் நின்னு கொடுத்துட்டுப் போக முடியாதா? உள்ள வந்து தான் கொடுக்கணுமா?” என்று கீர்த்திகா கேட்க…

“நான் வெறுமனே கதவ தட்டி, பால் கொடுத்துட்டு உன்கிட்ட இரண்டு வார்த்தை பேசிட்டுப் போலாம்னு தான் வந்தேன். ஆனா நீதான் ‘ஃபர்ஸ்ட் நைட் அது இல்லை’ன்னு சொல்லி என்ன ஏத்தி விட்டுட்ட. அப்புறம் நீயே இந்த மாதிரி பேசுறப்போ நான் எப்படிச் சும்மா போக முடியும்? அதனால ஒரு ட்ரையல் பார்த்திடலாம்,” என்றவன், பாலுடன் இருந்த ட்ரேயை அருகில் இருந்த மேசை மீது வைத்துவிட்டு வந்து கீர்த்திகாவின் அறை கதவைச் சாற்றி, கதவின் மேல் சாய்ந்து நின்று, “என்ன டார்லிங்? ஒரு ரிகர்சல் பார்த்திடலாமா?” என்று கதிர் கேட்க…

ஆஹா! இவன்கிட்ட தெரியாம கிண்டல் பண்றோம்னு சொல்லி நானே வாயை விட்டு மாட்டிக்கிட்டேனே… “உன்னை எப்படிச் சமாளிப்பது?” என்று தெரியாமல் கீர்த்திகா விழிக்க… “என்னடி முழிக்கிற…. ரிகர்சல் பார்த்திடலாமா? சொல்லு,” என்று கொண்டே தன் சட்டையின் மேல் பட்டனைக் கழட்டிக்கொண்டு அவள் அருகில் வந்தான்.

“டேய் கதிர்! நான் சும்மா உன்னைக் கிண்டல் பண்றதுக்கு தான் அப்படிப் பேசினேன். நீ அதையே சாக்க வெச்சுட்டு இப்படி எல்லாம் வரக்கூடாது. இப்படிப் பண்ணினா நான் என் அக்காவைக் கூப்பிடுவேன்,” என்று கூற…

“கிண்டல் பண்றதுக்கு ஃபர்ஸ்ட் நைட் பற்றி எல்லாம் பேசுவீங்களா நீங்க? அதுவும் ஒரு ஆம்பளை கிட்ட. எப்படிப் பேசணும் உனக்குத் தெரியாது. வந்தது வந்துட்டேன். ஒரு சின்ன ட்ரைலர் பார்த்துட்டு நான் போவேன். உங்க அக்காவைக் கூப்பிடுறேன்னு சொன்னா நான் என்ன பயந்துறப் போறேனா?” என்றவன் அவள் அருகில் நெருங்க…

கதிர் சுவரொட்டியாக எடுத்து வைத்து முன்னே வர, கீர்த்திகா நிஜமாகவே அவன் தன்னை ஏதோ செய்வதற்காகத்தான் வந்திருக்கிறான் என்று நினைத்தவள், மெதுமெதுவாகப் பின்னால் சென்றாள். அவளைப் பார்த்து மனதிற்குள் சிரித்தவன், இவள் நிஜமாவே நம்பிட்டா போலயே. சரி, இன்னும் கொஞ்ச நேரம் அப்படியே மெயின்டெயின் பண்ணுவோம், என்று நினைத்தவன், “என்ன பின்னாடி போய்ட்டு இருக்கு டார்லிங்? மாமா கிட்ட பக்கத்துல வா,” என்று கூற… அவள் “நான் வரமாட்டேன்,” என்று சொன்னவள், “டேய் கதிர்! வேண்டாண்டா. நான் சும்மா விளையாட்டுக்குத்தான் சொன்னேன். இதெல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம்தான் நடக்கணும். கல்யாணத்துக்கு முன்னாடி இப்படி எல்லாம் நடந்துக்கக் கூடாது. ப்ளீஸ்டா. சாரி. நான் சும்மாதான் சொன்னேன்,” என்று கூறிக்கொண்டே பின்னால் நகர… “எங்கடி போற?” என்று ஒரே வீச்சில் வேகமாக வந்து அவளைப் பிடித்து இழுத்துத் தன் அருகில் நிறுத்திக்கொண்டவன்,

“போலாமா?” என்று வெட்டி காட்டிக் கேட்க… அவள் அதிர்ச்சியாகி, கண்களில் நீர் வழிய, “முடியாது. நான் சும்மாதான் சொன்னேன். நீ முதல்ல இங்கிருந்து வெளியே போ,” என்று அவன் மார்பில் கைவைத்து அவனைத் தன்னிடம் இருந்து விலக்கப் பார்க்க… அவளை இருக்கிக் பிடித்து நிறுத்தி வைத்தவன்,

“நான் தான் சொன்னேனே, சின்ன ட்ரெய்லாவது பார்த்துட்டுப் போலாம்னு சொல்லிட்டு. அதனால நீ பயப்படாதே, ஓகேவா? நான் உன்னை ரொம்ப எல்லாம் கஷ்டப்படுத்த மாட்டேன்,” என்று சொன்னவன் மெதுவாகக் கீழே குனிய… கீர்த்திகா பயந்து, “என்னடா பண்ற…. என்ன விடுடா,” என்று அவன் மார்பில் அடிக்க… அவளை ஒரு கையால் கட்டிக்கொண்டு, மறுகையால் அவள் கையைப் பிடித்தவன், அவள் முகத்தைப் பார்த்துக்கொண்டே முன்னே குனிய… அவன் தன்னிடம் நெருங்குவதைப் பார்த்துக் கீர்த்திகா பயந்துகொண்டே பின்னால் சரிய… அவளை வெடுக்கென்று இழுத்து அவள் உதட்டில் முத்தமிட்டான்.

இதைச் சற்றும் எதிர்பார்க்காத கீர்த்திகா, விழிகள் இரண்டும் பெரிதாக விரிய, அவனைப் பார்க்க… அவனும் கீர்த்திகாவிற்கு முத்தம் கொடுத்துக்கொண்டே அவளைத்தான் பார்த்துக்கொண்டு இருந்தவன்… கீர்த்திகா தன்னை பார்க்கவும், “என்ன?” என்பது போல அவள் கண்களைப் பார்த்து தன் புருவத்தை உயர்த்தி முத்தம் கொடுத்துக்கொண்டே கேட்க… அவள் இதழ் தேனைப் பருகிக்கொண்டே, அவளை மெத்தைக்குத் தூக்கிச் சென்றவன், மெத்தையில் அவனும் அமர்ந்து, அவளைத் தன் மடிமீது அமர்த்தி முத்தத்தைத் தீவிரமாக்க… கீர்த்திகாவும் அவன் முத்தத்தில் கரைந்து, அவன் முத்தத்தைக் கண்கள் மூடி ஏற்றாள்.

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured