Home Uncategorizedஉன் ரகசிய ரசிகை நான் 109

உன் ரகசிய ரசிகை நான் 109

by Layas Tamil Novel
262 views

EPISODE 109

பனிரெண்டு மணி நேரம் கடந்து இரண்டு மணி நேரத்திற்கும் மேல் ஆகிவிட… துர்கா இன்னும் கண் விழிக்காமல் இருக்கவே… ஆதிக்குச் சற்றுப் பயம் தொற்றிக் கொண்டது. டாக்டரிடம் துர்கா இன்னும் கண் திறக்கவில்லையே என்று அவளை மறுபடியும் பரிசோதனை எதுவும் செய்து பார்க்க வேண்டுமா என்று கேட்டுக் கொண்டு இருந்தான் ஆதி. அவளுடைய தலையில் பலமாக அடிபட்டு இருப்பதால் அவளுடைய தலையை ஸ்கேன் செய்து பார்க்கலாம் என்று ஆதியிடம் டாக்டர் சொல்லிக் கொண்டு இருக்க…

அப்போது துர்காவின் அறையில் இருந்த நர்ஸ் வேகமாக அவர்களிடம் வந்தவர், “சார்! அந்தப் பேஷன்ட் கண் முழிச்சுட்டாங்க,” என்றார். அவர் துர்கா கண் விழித்து விட்டாள் என்று சொன்ன அடுத்த நொடி ஆதி துர்காவைப் பார்க்க அவள் அறையை நோக்கி ஓடினான்.

வேகமாக துர்கா இருந்த அறைக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தவன் துர்காவைப் பார்க்க…. அவள் கண்களைத் திறந்து கொண்டு படுத்திருந்தாள். அவள் கண் விழித்து விட்டதைப் பார்த்ததும் ஆதிக்குச் சந்தோஷமாகிவிட வேகமாக அவள் அருகில் வந்தவன் அவள் தோள்கள் இரண்டையும் பிடித்து, “துர்கா…. துர்கா என்னைப் பார் துர்கா,” என்று அழைத்தான் ஆதி.

திடீரென்று தன் தோள்களைப் பிடித்து யாரோ அவளை உலுக்கவும், தன் தலையைத் திருப்பி தனக்கு எதிரே இருந்த ஆதியைப் பார்த்தாள் துர்கா. தன்னைப் பார்க்கும் ஆவலாக அவள் எதுவும் சொல்வாள் என்று அவள் முகத்தைப் பார்த்துக் கொண்டு நின்றிருந்த ஆதி. அவனப் பார்த்ததும் அவள் முகம் திடீரெனப் பயந்தவள் போல மாறிவிட… மாஸ்க் அணிந்த முகத்தோடு ஆதியை அவ்வளவு அருகில் பார்த்ததும் துர்கா பயத்தில் “ஆ…” என அலறினாள்.

ஆதி துர்காவைக் காண டென்மார்க் வந்ததிலிருந்து அவன் முகத்தில் இருந்து மாஸ்க்கைக் கழட்டவே இல்லை. அவன் எப்போதுமே இப்படி இருப்பதால் யாருக்கும் அது பெரிதாகத் தோன்றவில்லை. துர்காவிற்கு ஆக்சிடென்ட் ஆகிவிட்டது என்று விக்கி ஆதிக்கு அழைக்கும் பொழுது அவன் தன்னுடைய தோல் நோய்க்கான ட்ரீட்மென்ட் எடுத்துக் கொண்டிருந்தான்.

போதியிடமும் சங்கவியிடமும் தனக்கு முக்கியமான வேலை இருக்கிறது என்று சொல்லிவிட்டு அவர்களை சுவிட்சர்லாந்தில் விட்டுவிட்டு ஆதி மட்டும் ஜெர்மனிக்குச் சென்றதற்கு காரணம் இதுதான். அவன் சென்று கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் ட்ரீட்மென்ட் முடிந்திருந்த நிலையில்தான் துர்காவிற்கு ஆக்சிடென்ட் ஆன விஷயம் விக்கியின் மூலம் ஆதிக்குத் தெரியவந்தது. ஆதியின் நோய் இன்னும் முழுமையாகக் குணமாகவில்லை என்றாலும் அவனுக்கான பூர்ண சிகிச்சையை அவன் எடுத்துக் கொண்டு விட்டான். இன்னும் சில நாட்கள் அவர்கள் கொடுத்த மருந்தைத் தொடர்ச்சியாக ஆதி எடுத்துக் கொண்டாலே அவனுடைய நோய் பரிபூரணமாகக் குணமாகிவிடும்.

இரண்டு வார காலத்தில் அவனுக்கு எடுக்கப்பட்ட சிகிச்சையில் அவன் உடல் முழுவதும் இருந்த கொப்புளங்களின் தீவிர நிலை சற்று மட்டுப்பட்டு இருக்க முன்பை விட அவன் முகமும் உடலும் சற்றுப் பொலிவாகக் காணப்பட்டது. அந்தச் சிகிச்சைக்குப் பின் அவனுக்குத் திரும்பக் கொப்புளங்கள் எல்லாம் வருவதில்லை ஆனால் உடல் முழுவதும் ஏற்கனவே இருந்த தழும்புகள் எல்லாம் இன்னும் அப்படியேதான் இருக்கிறது. அது கொஞ்சம் கொஞ்சமாகத்தான் சரியாகும் என்று ஆதிக்குச் சிகிச்சை அளித்த டாக்டர்கள் சொல்லி இருந்தனர்.

அதனால் முழுவதும் குணமான பின்பே தான் ட்ரீட்மென்ட் எடுத்து இருந்த விஷயம் அனைவருக்கும் தெரிய வேண்டும் என்று நினைத்திருந்தான் ஆதி. அது எல்லாவற்றிற்கும் விட முதலில் துர்காதான் தன் முகத்தை முதலில் பார்க்க வேண்டும் என்று இங்கு வந்ததிலிருந்து ஒருவருக்கும் தன் முகத்தைக் காட்டாமல் மாஸ்க்கை அணிந்திருந்தான் ஆதி.

துர்காவின் முன் திடீரென்று மாஸ்க்கில் ஆதி நிற்கவும் மயக்கத்தில் இருந்து தெளிந்த துர்கா அவன் முகத்தை அவ்வளவு நெருக்கத்தில் மாஸ்க்கோடு பார்த்ததும் தான் பதறிப் போய்விட்டாள் என்று நினைத்த ஆதி.. தன் மாஸ்க்கை வேகமாக் கழட்டி,துர்கா! பயப்படாதே. இங்கப் பாரு நான் தான் வந்து இருக்கேன். நான்தான் உன் ஆதி வந்து இருக்கேன்,” என்று சொல்லி ஆதி தன் மாஸ்க்கைக் கழட்ட…

பயந்து நடுங்கிய வாரே தன் உடலைக் குறுக்கிக் கொண்டுப் படுத்திருந்த துர்கா ஆதி சொன்னதும் திரும்பி அவன் முகத்தைப் பார்க்க…. ஆதியின் முகத்தைப் பார்த்ததும் முதலில் புருவம் சுருக்கி அவனைப் பார்த்தவள், பின் “யார் நீ?” என்று கேட்டால்.

துர்கா என்ன இப்படி கேட்குற… யாருன்னு உனக்குத் தெரியலையா?” என்றான் ஆதி பதறிய வாரே….

ஆதி துர்காவிடம் பேசிக் கொண்டிருக்கும் போது துர்காவையும் ஆதியையும் பார்த்துவிட்டுக் கிளம்பலாம் என்று அப்போதுதான் விக்கி துர்காவை அட்மிட் செய்திருந்த அறைக்குள் வந்தான். துர்கா கண் விழித்திருப்பதைப் பார்த்ததும் சந்தோஷமாக அவள் முன் வந்து, “துர்கா கண் முழிச்சுட்டியா… உனக்கு இப்போ எப்படி இருக்கு..,” என்று கேட்டான் விக்கி.

திடீரென்று இன்னொருவன் தன் முன்னால் வந்து பேசவும் துர்கா இருவரையும் மாற்றி மாற்றி பார்த்துவிட்டு எதுவும் புரியாமல் தன் தலையில் கை வைத்துக் குழப்பத்தோடு தலையைக் குனிந்து கொண்டுத் தன் மடியில் முகத்தைப் புதைத்துக் கொள்ள….

துர்கா என்ன ஆச்சு? ஏன் எதுவுமே பேச மாட்டேங்கற? ஏன் ஏதோ மாதிரி இருக்க?” என்று கேட்டான் விக்கி. அவள் அப்போதும் எதுவும் பேசாமல் இருக்க விக்கி ஆதியிடம்,ஆதி என்ன ஆச்சு? துர்கா எதுவுமே பேசாமல் இருக்கா…” என்று விக்கி கேட்க… “நானும் அதைத் தான்டா யோசிச்சிட்டு இருக்கேன். என்னைப் பார்த்தும் ‘யார் நீ?’ என்று கேட்டாடா… இது சரி இல்லன்னு எனக்குத் தோணுது…. எனக்குப் பயமா இருக்கு,” என்றான் ஆதி.

ஆதியின் தோளில் கை வைத்து அவனை ஆதரவாகத் தட்டிக் கொடுத்த விக்கி,அதெல்லாம் எதுவும் இருக்காது நீ ரொம்பப் பயப்படாதே,” என்று சொன்னான்.

இவர்கள் இருவரும் துர்காவிடம் பேச முயற்சிக்க அப்போது இதையெல்லாம் பார்த்துக் கொண்டு அவர்கள் அருகில் நின்றிருந்த டாக்டர்.நீங்க ரெண்டு பேரும் கொஞ்ச நேரம் வெளியே இருங்க. நான் இவங்களை செக் பண்ணிட்டு அவங்க ஏன் இப்படி நடந்துகிறாங்கன்னு சொல்றேன். ப்ளீஸ் வெயிட் பண்ணுங்க,” என்று சொல்லி ஆதியையும் விக்கியையும் அறையை விட்டு வெளியே அனுப்பினார் டாக்டர்.

அவர்கள் சென்றதும் துர்காவைப் பரிசோதித்த டாக்டர் சிறிது நேரத்தில் அறையை விட்டு வெளியே வர…. ஆதி பதட்டமாக அவரிடம் சென்று, “என்னாச்சு சார்? துர்காவிற்கு ஏன் எதுவுமே தெரியாத மாதிரி நடந்துகிறா.. என்னைப் ‘யாருன்னு’ கேட்கிறா இவன்கிட்டேயும் எதுவுமே பேசல,” என்று ஆதி கேட்க.

சாரி டூ சே திஸ் மிஸ்டர் ஆதி… பழைய நினைவுகள் எல்லாம் மறந்து போயிடுச்சுன்னு நினைக்கிறேன். அவங்க தலையில ரொம்பப் பலமா அடிபட்டு காயம் ரொம்ப ஆழமாக இருந்ததுதான் அதுக்குக் காரணமா இருக்கும். அவங்களுக்கு இன்னும் சில டெஸ்டுகள் எல்லாம் நான் எடுக்க வேண்டி இருக்கு. அதை எடுத்த பிறகு உங்களுக்கு முழுமையாக விளக்கம் சொல்றேன்,” என்று கூறிவிட்டு நர்ஸிடம் சொல்லி துர்காவை ஸ்கேன் செய்து பார்க்க அழைத்துச் செல்லச் சொன்னார்.

துர்காவிற்கு எடுத்த டெஸ்ட் ரிப்போர்ட்கள் எல்லாம் டாக்டருக்கு வர அதை எல்லாம் பார்த்தவர் ஆதிக்கு அழைக்க அவனோடு சேர்ந்து விக்கியும் டாக்டரைப் பார்க்க வந்தான். உள்ளே வந்த ஆதி டாக்டரைப் பார்க்க, “உட்காருங்க ஆதி,” என்று சொன்னவர் துர்காவின் ஸ்கேன் ரிப்போர்ட்டைக் காட்டி, “அவங்களுக்கு இந்த இடத்துல தலையில பலமாக அடிபட்டு இருக்கிறதுனால அவங்களுக்குப் பழைய நினைவுகள் எல்லாம் மறந்துடுச்சு. சொல்லப்போனால் அவங்க எந்த அளவுக்கு மறந்திருக்காங்க என்பதை அவங்க கிட்டப் பேசிப் பார்த்தால் தான் தெரியும்.

இதையெல்லாம் விட இப்போ அடிபட்டிருந்த இடத்துல அவங்களுக்கு ஏற்கனவே தலையில அடிபட்டு இருக்கு… ஆனா அவங்களோட சின்ன வயசுல இந்த இடத்துல அடிபட்டு இருக்கணும். அவங்க அதுக்குச் சரியாக ட்ரீட்மென்ட் பார்க்காமல் இருக்கலாம். அதே இடத்துல மறுபடியும் அடிபட்டதனால் அவங்களுக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்கலாம்,” என்று சொன்னவர், “நீங்க துர்கா கிட்டப் பேச்சு கொடுத்துப் பாருங்க. அவங்க எவ்வளவு தூரம் ஞாபகம் வச்சுருக்காங்க. எதையெல்லாம் மறந்திருக்காங்க என்பதை அவங்க வாய் திறந்து பேசினால் தான் தெரியும். நாங்களும் அவங்ககிட்ட எங்களுக்குத் தெரிஞ்ச மாதிரி பேசிப் பார்த்துவிட்டோம். ஆனால் அவங்க பேசவே மாட்டேங்கிறாங்க,” என்று டாக்டர் சொல்ல அவர் சொன்னதைக் கேட்டு ஆதியின் தலையில் இடியே விழுந்தது போல இருந்தது.

உடைந்து போய் சேரில் அமர்ந்திருக்க அவன் நிலையை உணர்ந்த விக்கி டாக்டரிடம்,சரி டாக்டர். நாங்க முதல்ல துர்கா கிட்டப் பேசுறோம். அவ எவ்வளவு தூரம் எங்களை ஞாபகம் வச்சு இருக்கா, எதையெல்லாம் மறந்திருக்கான்னு நீங்க சொன்னது போல அவளிடம் பேசினால் தான் எங்களுக்குத் தெரியும். இது குணப்படுத்த முடியுமா டாக்டர்?” என்று கேட்டான் விக்கி.

முடியும் மிஸ்டர் விக்கி. அவங்களுக்குப் பழைய நினைவுகளைக் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் அவங்களுக்கு நினைவு கொண்டு வர நாம முயற்சி செய்யணும். இப்போதைக்கு அவங்களை எதுவும் டிஸ்டர்ப் பண்ண நினைக்க வேண்டாம். முதல்ல அவங்க உடல்நிலை குணமாகி வரட்டும். அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அவங்களுக்குப் பழைய நினைவுகளைக் கொண்டு வர நீங்க முயற்சி செய்யுங்கள்.

அவங்களை ரொம்ப யோசிக்க வைக்காதீங்க. இந்தச் சூழ்நிலையில அவங்க ஓவர் திங்கிங் பண்ணக் கூடாது. அப்படிப் பண்ணுறப்போ அவங்களுக்குத் தலையில் ரொம்ப பெயின் ஆகும். திடீர்னு மயக்கம் போட்டுக் விழுந்திடலாம் அல்லது வேறு ஏதாவது சைடு எபக்ட்ஸ் வரலாம். அதனால அவங்களை ரொம்ப டிஸ்டர்ப் பண்ணாம அவங்களோட நினைவுகளுக்குத் தகுந்த மாதிரி ஒவ்வொரு விஷயத்தையும் நீங்க கொண்டு போகணும்,” என்று சொன்னார் டாக்டர்.

டாக்டர் இடம் பேசிவிட்டு துர்கா அறைக்கு வர… அவள் அங்கு இருப்பவர்களை எல்லாம் பார்த்துப் பயந்து நடுங்கிக் கொண்டு கட்டிலில் ஒரு ஓரத்தில் கால்களைக் குறுக்கிக்கொண்டு அமர்ந்து இருந்தால். அவளை இந்த நிலையில் பார்க்க ஆதிக்கு மிகவும் வலித்தது. எதுவாக அவள் அருகில் வர, அவனைக் கண்டு மிகவும் பயந்த துர்கா,யாரு நீ? என் பக்கத்துல வராதே,” என்று சொன்னாள். “எனக்குப் பயமா இருக்கு. நீங்க எல்லாம் யாரு? என்ன எதுவும் செஞ்சுறாதீங்க ப்ளீஸ்,” என்று கெஞ்சினாள்.

நான் உன்னை எதுவும் பண்ண மாட்டேன் துர்கா. நான் சொல்றதை கொஞ்சம் பொறுமையாகக் கேளு…. நீ எதைப் பற்றியும் கவலைப்படாமல் கொஞ்சம் ரெஸ்ட் எடு,” என்று ஆதி அவளைச் சமாதானப்படுத்த முயல… “நீ என்னை எதுவும் பண்ண மாட்ட தானே?” என்று துர்கா அவனிடம் குழந்தை போலக் கேட்டாள்.

இல்ல துர்கா. உன்னை நான் எதுவும் பண்ண மாட்டேன். உன்னை பத்திரமாகப் பார்த்துக்கிறேன்,” என்று அவளுக்குத் தகுந்தார் போலவே ஆதி பேசினான். “சரி,” என்று சொல்லி கட்டிலில் படுத்தவள் பின்பு ஆதியைப் பார்த்து, “ஆமா யார் அந்தத் துர்கா? நீ துர்கா துர்கா சொல்லிட்டு இருக்க…. அந்த அண்ணாவும் என்ன அப்போ உள்ள வந்து கூப்பிட்டப்போ என்னை துர்கா என்று தானே கூப்பிட்டாரு?விக்கியைக் காட்டிச் சொன்னவள், “யார் அந்த துர்கா?” என்று கேட்டால்.

துர்கா தலையில் அடிபட்டதும் தங்கள் அனைவரையும் தான் மறந்திருப்பாள் என்று நினைத்திருந்த ஆதிக்கும் விக்கிக்கும் அவள் தன் பெயரையே மறந்து விட்டாள் என்பது பேரிடியாக இருந்தது. இப்போது அவளிடம் என்ன சொல்லிப் பேசுவது என்று புரியாமல் நின்று இருந்தான் ஆதி.

உண்மையாவே துர்கா யாருன்னு தெரியலையா?” என்று கேட்டான் ஆதி. என்று தலையை இட பலமாக ஆட்டினாள் துர்கா. “அப்போ உன் பேரு என்னன்னு உனக்கு மறந்து போயிடுச்சா?” என்று கேட்டான் ஆதி. “என் பேரு… என் பேரு….” என்று பெயர் என்ன என்று யோசிக்க நினைக்க துர்காவிற்குத் தலைவலி எடுக்க ஆரம்பித்தது.

சரி நான் உன்னைக் கேட்கல. நீ ரொம்ப யோசிக்க வேண்டாம். முதல்ல படு,” என்று ஆதி அவளைக் கட்டிலில் படுக்க வைக்க. அவன் கையை இறுக்கமாகப் பிடித்துக் கொண்ட துர்கா,என்னைப் பத்திரமாகப் பார்த்துப்ப தானே…” என்று கேட்டாள்.

இனிமேல் நான் உன்னை விட்டு எங்கேயும் போக மாட்டேன். உன் கூடவே தான் இருப்பேன். உன்னை நான் பத்திரமாகப் பார்த்துக் கொள்கிறேன்,” என்று சொன்னான் ஆதி.

அப்போ என்னை துரத்திட்டு வந்த அந்தத் தடியன்கள்கிட்ட இருந்து நீ என்னைக் காப்பாற்றுவியா?” என்று கேட்டால் துர்கா. அவள் அப்படிச் சொன்னதும் புருவம் சுருக்கி துர்காவைப் பார்த்த ஆதி,உன்னை யார் துரத்திட்டு வறாங்க சொல்லு துர்கா? யாரா இருந்தாலும் அவங்களை நான் உன் பக்கத்துல நெருங்க விட மாட்டேன். உன்னை நான் பத்திரமாகப் பார்த்துக் கொள்கிறேன்,” என்று ஆதி கேட்டான் துர்கா இடம்.

இது யாருன்னு எனக்குத் தெரியாது. ஆனா அவங்க எல்லாரும் என்ன எதுக்காகத் துரத்தி வராங்கன்னு தெரியாது. அவங்க கிட்ட இருந்து நான் தப்பிச்சு வரப்ப தான் தலையில அடிபட்டுருச்சு,” என்று சொன்னால் துர்கா.

துர்கா இப்படிப் பேசவும் அவளைப் புரியாமல் பார்த்த ஆதி. “அவங்க யாருன்னு உனக்குத் தெரியுமா? கொஞ்சம் ஞாபகப்படுத்திப் பாரு,” என்று கேட்டான் ஆதி. “எனக்கு அவங்க யாருன்னு தெரியாது. ஆனா அவங்களைப் பார்த்தா நான் கண்டிப்பா யாருன்னு சொல்லுவேன்,” என்று சொன்னால் துர்கா.

சரி துர்கா. நீ ரொம்ப யோசிக்காத. அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன். இப்ப நீ படுத்துக் கொஞ்சம் ரெஸ்ட் எடு,” என்று சொன்னான் ஆதி. “ம்ம்ம் சரி…” என்று சொல்லி கண்கள் மூடி கட்டிலில் படுத்துக் கொண்டாள்.

துர்காவின் அருகில் அமர்ந்து அவள் தலையை வருடிக் கொடுத்துத் தூங்க வைத்தவன். துர்கா நன்றாக உறங்கி விட்டால் என்று அவள் சீரான மூச்சில் இருந்து தெரிந்து கொண்ட ஆதி விக்கியிடம் திரும்பி, “நீ துர்காவைப் பக்கத்துல இருந்து எங்கேயும் போகாமல் பார்த்துக்க. ஒரு முக்கியமான வேலை இருக்கு,” என்று சொல்லி கோபமாக அவள் அறையை விட்டு வெளியே செல்லப் போக விக்கி ஆதியைப் பிடித்துத் தடுத்தவன்.

இப்போ நீ எங்க போற ஆதி?” என்று விக்கி கேட்டான். “துர்காவை இந்த நிலைக்கு ஆளாக்குனவங்களை நான் யாருன்னு தெரிஞ்சும் இன்னும் சும்மா விட்டு வைக்கக் கூடாது. அதுக்காகத் தான் நான் போறேன்,**” என்று சொன்னான் ஆதி.

நான் சொல்றதை கொஞ்சம் பொறுமையாகக் கேளு ஆதி. இப்போ நீ அவசரப்பட்டு அவங்களை எதுவும் செய்யப் போனேன்னா அவங்க உஷார் ஆயிடுவாங்க. முதல்ல துர்காவை நாம பத்திரமாக் இந்தியா கூட்டிட்டுப் போகணும். இங்க இருக்கிறது அவளுக்கு ஆபத்துதான். நம்ம ஊரா இருந்துச்சுன்னா நம்ம கண் பார்வைக்குள்ளேயே அவளை இன்னும் பத்திரமாகப் பார்த்துக் கொள்ள முடியும்.

முதல்ல அவளைப் பத்திரமாக் இந்தியா அழிச்சிட்டுப் போகலாம். அதுக்கப்புறம் இதுக்குக் காரணமானவர்களே நீ என்ன வேணாலும் செய். அதுவரைக்கும் கொஞ்சம் பொறுமையாக இரு…,” என்ற விக்கி. “நான் போய் டாக்டர் கிட்ட துர்காவை இங்கிருந்து டிஸ்சார்ஜ் பண்ணி இந்தியா அழைச்சிட்டுப் போய் அவளுக்கு ட்ரீட்மென்ட் கொடுக்கணும்னு சொல்லி அவளைப் பாதுகாப்பாக அழைத்துட்டுப் போறதுக்கான ஏற்பாடுகள் என்னன்னு கேட்டு அதையெல்லாம் பண்ணிட்டு வரேன். நம்ம இங்கிருந்து எவ்வளவு சீக்கிரம் கிளம்புகிறோமோ அவ்வளவு சீக்கிரம் துர்காவிற்கு நல்லதுன்னு எனக்குத் தோணுது. ஏன்னா இங்க யாரையும் நமக்குத் தெரியாது. யார் நல்லவங்க யார் கெட்டவங்கன்னு நம்ம ஒவ்வொருவரையும் பார்த்துச் சந்தேகப்பட்டு இருக்க முடியாது. சொல்றது உனக்குப் புரியுதா ஆதி?” என்று அவன் தோளைப் பிடித்துக் கேட்டான் விக்கி.

நீ சொல்றதும் சரிதான் விக்கி. நம்ம முதல்ல இந்தியா போவோம். அதுக்கப்புறம் எல்லா விஷயத்தையும் பார்த்துக்கலாம்,” என்று சொன்ன ஆதி. “துர்காவிற்கு அவள் வாழ்க்கையில் நடந்த விஷயங்கள் மறந்திருச்சுங்கற விஷயத்தை நம்ம யார்கிட்டயும் இப்போதைக்குச் சொல்ல வேண்டாம். அதெல்லாம் இந்தியா போனதுக்கப்புறம் பார்த்துக்கலாம். அதுவரைக்கும் இதை நாமச் சமாளிச்சுத் தான் ஆகணும்,**” என்று சொன்னான் ஆதி.

சரி ஆதி. எனக்கு நீ சொல்றது புரியுது. நான் போய் டாக்டரைப் பார்த்துட்டு வந்துடறேன். நீ துர்காவைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்… அவளை விட்டுட்டு நீ எங்கேயும் தனியாப் போயிடாத,” என்று சொல்லிவிட்டு விக்கி டாக்டர் பார்க்கச் சென்று விட்டான்.

விக்கி சென்றதும் துர்காவின் அருகில் வந்து அமர்ந்த ஆதி. குழந்தை போலக் கண்கள் மூடி நிம்மதியாகத் தூங்கிக் கொண்டிருக்கும் துர்காவைப் பார்த்தவன். “உன்னை இந்த நிலைமைக்கு ஆளாக்குனவங்க யாருன்னு எனக்குத் தெரியும் துர்கா. அவங்களை நான் சும்மா விடப் போறது இல்லை. எல்லாமே சீக்கிரமா நல்லபடியா மாறும்ன்னு நான் நம்புறேன் துர்கா. கொஞ்ச நாள் இப்படியே இருக்கிறது நல்லதுதான்,” என்று நினைத்துக் கொண்டான் ஆதி.


துர்காவிற்கு நினைவு திரும்பி விட்டது என்று மட்டும் ஆதி கதிரிடம் சொல்லி இருக்க…. அதை வீட்டில் உள்ளவர்கள் அனைவரிடமும் சொல்லவும் அனைவருக்கும் நிம்மதியாக இருந்தது. துர்காவிற்கு நினைவு வந்துவிட்டது என்பது தெரிந்து கொண்ட விசாலாட்சிக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது.

கனகாவிடமும் செண்பகமிடமும்,சரி நீங்க ரெண்டு பேரும் என் கூட வாங்க. நான் கோயில்ல பூஜைக்குச் சொல்லி இருக்கேன். அதுக்குத் தேவையானப் பொருட்களை எல்லாம் எடுத்து வச்சிட்டு நம்ம கோயிலுக்குப் போய் துர்கா பேர்ல அர்ச்சனை பண்ணி அபிஷேகம் பண்ணிட்டு வந்துடலாம்,” என்ற விசாலாட்சி,வடிவு நீயும் எங்க கூட வா,” என்று அழைக்க, “வரேன் அண்ணி. என் பொண்ணுக்காகச் செய்யுறீங்க நான் வராமலா,” என்று சொல்லி அவரும் அவர்களோடு கிளம்பிச் சென்றார்.

துர்காவிற்கு ஆக்சிடென்ட் ஆகிவிட்டது என்று ராதாவின் மூலம் தெரிந்து கொண்ட ஷிவு நேராக வீட்டிற்கு வர… துர்கா இப்போது குணமாகிவிட்டுக் கண் விழித்து விட்டால் என்ற செய்தி கேட்டதும் ஷிவுவிற்கு உடனே இதைச் சங்கவியிடம் தெரிவிக்க வேண்டும் என்று ஏனோ தோன்றியது.

வெங்கடாசலமும் துரையும் அவர்களுடைய அறைக்குச் சென்றுவிட…. ஷிவு தன் போனை எடுத்துக் கொண்டு வெளியே வந்தவள். சுற்றிலும் யாரும் இருக்கிறார்களா என்று பார்த்துவிட்டுச் சங்கவிக்கு கால் செய்தால். இரண்டு மூன்று ரிங் சென்ற பிறகுதான் சங்கவி ஃபோனை எடுத்தாள்.

சொல்லு ஷிவு. என்ன ரொம்ப நாள் கழிச்சு எனக்குக் கால் பண்ணி இருக்க?” என்று கேட்டால் சங்கவி. “சங்கவி அக்கா. நீங்க என்ன பண்ணி வச்சிருக்கீங்க. அந்தத் துர்காவை ஆதி மாமா வாழ்க்கையில் இருந்து துரத்தி விடுவதாகத் தானே சொன்னீங்க. ஆனா நீங்க பண்ணி இருக்க வேலையப் பார்த்தா அவளை இந்த உலகத்தை விட்டு அனுப்பி இருப்பீங்க போலவே,” என்று கேட்டால் ஷிவு.

நான் தான் இந்த விஷயத்தைப் பண்ணினேன். நீ எப்படி சொல்ற?” என்று கேட்டால் சங்கவி. “உங்களைத் தவிர துர்காவிற்கு இப்படி உயிர் போகிற அளவுக்கு ஆபத்து கொடுப்பதற்கு வேறு எதிரிகள் யாருமே இல்லைன்னு எனக்கு நல்லாத் தெரியும்,” என்று சொன்னால் ஷிவு.

பரவாயில்லையே. என்ன விடச் சின்னப் பொண்ணா இருந்தாலும் என்னை நல்லாத் தான் புரிஞ்சு வச்சிருக்க,” என்று சொன்ன சங்கவி. “ஆமா. அவளை இந்த உலகத்தை விட்டு மொத்தமா அனுப்பி வச்சா தான் ஆதி கூட நான் ஒண்ணா வாழ முடியும்,” என்று சங்கவி சொல்ல….

அவள் சொன்ன விஷயத்தைக் கேட்டதும் ஷிவுவிற்குத் தூக்கி வாரிப் போட்டது. “அக்கா என்ன சொல்றீங்க நீங்க? என்னையும் ஆதி மாமாவையும் சேர்த்து வைக்கிறதா தானே ப்ராமிஸ் பண்ணீங்க. ஆனா இப்ப என்னடான்னா நீங்க ஆதி மாமாவைக் கூட ஒண்ணா வாழனும்னு மாதிரி சொல்லிட்டு இருக்கீங்க,” என்று புரியாமல் கேட்டால் ஷிவு.

ஷிவு பேசியதைக் கேட்ட சங்கவி…. சத்தமாகச் சிரித்தவள்.என்னை என்ன முட்டாள்ன்னு நினைச்சிட்டியா? நீயும் ஆதியும் ஒன்னா சேருவதில்லை எனக்கு என்ன லாபம் இருக்கு?” என்று சொன்னால் சங்கவி. “அக்கா என்ன அக்கா இப்படி இல்லைன்னு சொல்றீங்க. நான் ஆதி மாமாவைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா அவரோட சொத்து எல்லாம் எனக்குத் தானே? உங்களுக்கு என்ன வேணுமோ கேளுங்க நான் செய்கிறேன்,” என்று ஷிவு சொல்ல.

முன்பை விடவும் ஷிவு சொன்னதைக் கேட்டு இப்போது பலமாகச் சிரித்த சங்கவி. “நீ போடுற பிச்சை காசை வாங்குறதுக்காகத் தான் நான் உனக்கு இவ்வளவு ஹெல்ப் பண்ணேன்னு நினைக்கிறாயா? என்னிடம் இல்லாத பணமா… ஆதியை அப்படியே தூக்கிக் முழுசா உனக்குக் குடுத்துட்டா… அப்புறம் நான் இத்தனை நாளாப் போட்டு வைத்திருந்த பிளான் எல்லாம் எப்படி நான் செயலுக்குக் கொண்டு வருது.

ஆதியும் எனக்குத்தான். அவனோட மொத்தச் சொத்தும் எனக்குத் தான். ஆனா என்கிட்ட இருந்து யாராலும் பிரிக்க முடியாது. சீக்கிரம் ஆதியை நான் அடைந்தே தீருவேன்,” தன் நயவஞ்சக முகத்தை ஷிவுவிடம் இப்போதுதான் காட்டினாள் சங்கவி. “நீ என்னைப் பத்தி என்ன நினைச்சுட்டு இருக்க ஷிவு? நான் ஆதியைக் லவ் பண்றேன்னு நினைச்சிட்டியா? அது தான் இல்ல. அவனோட சொத்து முழுவதும் எனக்கு வேணும். அதுக்காகத் தான் அந்த ஆதியை நான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன். இல்லன்னா நான் ஏன் உடல் முழுவதும் நோயை வச்சிட்டு இருக்குறவனைக் கல்யாணம் பண்ணுவேன்?” என்று சொன்னால் சங்கவி.

சங்கவி பேசியதெல்லாம் கேட்ட ஷிவுவிற்கு. இத்தனை நாள் எவ்வளவு பெரிய முட்டாள்தனம் செய்து கொண்டு இருந்தோம் என்று இப்போதுதான் உரைத்தது. “சங்கவி அக்கா. இத்தனை நாள் உங்கள நம்பி நான் எவ்வளவு பெரிய தப்பு எல்லாம் பண்ணிட்டேன். நான் இந்தத் தப்புக்கு எல்லாம் பிராயச்சித்தம் செய்யப் போறேன். நான் இப்பவே ஆதி மாமாவுக்குப் போன் பண்ணி நீங்க பண்ணின எல்லா விஷயத்தையும் சொல்லப் போறேன்,” என்று சங்கவியிடம் ஷிவு கூற…

என்னைப் பத்தி நீ ஆதி கிட்ட என்ன வேணா சொல்லிக்கோ…. ஆனா அதுக்கு முன்னாடி நீ ஆதிக்கும் துர்காவிற்கும் எதிரா என்னென்ன விஷயம் பண்ணியோ அந்த விஷயம் எல்லாம் ஆதிக்குக் நீ என்னைப் பற்றி போன் பண்ணி சொல்றதுக்கு முன்னாடி அவனுக்குப் போயிடும். பரவாயில்லையா?” என்று சங்கவி ஷிவுவை கேட்டாள்.

தான் செய்த விஷயங்கள் எல்லாம் ஆதியிடம் சொல்லிவிடுவேன் என்று சங்கவி தன்னைப் பிளாக்மெயில் செய்யவும் ஷிவு எதுவுமே பேச முடியாமல் அப்படியே அதிர்ச்சியாகி விட்டாள்.

என்ன ஷிவு வா பேச்சையே காணோம். உனக்குப் புரியுதா இந்தச் சங்கவி யாருன்னு…. சொல்றதெல்லாம் கேட்டுட்டு அமைதியாக இருந்தா…. ஆதியை நான் கல்யாணம் பண்ணின பிறகு உனக்கு எதிர்பார்க்காத விடவும் நான் செஞ்சு தரேன். நான் நினைக்கிற விஷயம் நடக்கும் வரை நீ வாயவே திறக்கக் கூடாது. அப்படி மீறி நீ வாய் திறந்த என்னை விட முதல்ல நீ தான் பாதிக்கப்படுவ. அத நல்லா நினைவில் வைத்துக்கொள்,” என்று சொல்லிவிட்டுப் போனை வைத்து விட்டாள் சங்கவி.

சங்கவியின் இந்த முகத்தை எதிர்பார்க்காத ஷிவுவினால் இந்த அதிர்ச்சியை விட்டு மீளவே முடியவில்லை. இத்தனை நாள் தான் ஆதிக்கும் துர்காவிற்கும் எதிராகச் செய்த சதி வேலைகளுக்கு எல்லாம் தனக்கு இது தேவைதான் என்று நினைத்துக் கொண்டால் ஷிவு. ஆதியிடம் நடந்த விஷயங்கள் எதையும் சொல்ல முடியாமலும் சங்கவியிடமிருந்து தப்பிக்க வழி தெரியாமலும் இருதலைக் கொள்ளியாக இடையில் மாட்டிக் கொண்டு ஷிவு மிகவும் கஷ்டப்பட்டாள்.

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured