அத்தியாயம் 1: விதியின் சதுரங்கம்
மருத்துவமனையின் அந்தத் தனி அறை முழுவதும் ஒருவிதமான அமைதியும், கசப்பான மருந்து வாசமும் கலந்திருந்தது. ஜன்னல் வழியே உள்ளே நுழைந்த மாலை நேரத்துச் அந்திச் சூரிய வெளிச்சம், அங்கே படுக்கையில் சலனமற்றுத் தவித்துக்கொண்டிருந்த ரதிமல்லிகாவின் வெளிறிய முகத்தில் விழுந்தது.
தலையில் சுற்றப்பட்டிருந்த வெள்ளை நிறக் கட்டு, அவளது மென்மையான தோற்றத்திற்கு இன்னும் கொஞ்சம் சோகத்தைக் கூட்டியிருந்தது. அவளது கைகளில் ஏறிக்கொண்டிருந்த குளுக்கோஸ் , கடந்து போகும் ஒவ்வொரு நொடியின் பாரத்தையும் அவளுக்கு உணர்த்திக் கொண்டிருந்தன.
ரதி மெல்லக் கண்களைத் திறந்தாள். விபத்தின் கொடூரமான அதிர்ச்சியில் இருந்து அவளது உடல் இன்னும் முழுமையாக மீளவில்லை என்றாலும், அவளது இதயம் ஒரு இனம்புரியாத எதிர்பார்ப்பிலும், காதலிலும் துடித்துக் கொண்டிருந்தது.
அறையின் கதவு திறக்கும் மெல்லிய சத்தம் கேட்டு வாசலைப் பார்த்தாள். நால்வர் உள்ளே நுழைந்தனர். முதலாவதாக உள்ளே நுழைந்த அதர்வாவைப் பார்த்ததும், ரதியின் விழிகளில் மின்னல்கள் தோன்றியது. அவள் இதயம் ‘என்னங்க…’ என்று ஆசையோடு, ஏக்கத்தோடு கூப்பிட்டது.
ஆடம்பரமான பிராண்டட் பிளேசர், கையில் பல லட்சங்கள் மதிப்புள்ள சர்வதேச கைக்கடிகாரம், கச்சிதமாக வாரப்பட்ட தலைமுடி என எப்போதும் போல ஒரு கார்ப்பரேட் ராஜகுமாரனைப் போல மிடுக்காக நின்றிருந்தான் அதர்வா. அவனது தோற்றத்தில் துளி கூட கவலையோ, தன் மனைவி விபத்தில் சிக்கிவிட்டாளே என்ற பதற்றமோ இல்லை.
திருமணமாகி ஓராண்டு முடிந்த நிலையிலும், அதர்வா அவளை ஒரு பெண்ணாகவோ, தன் வீட்டில் ஒருதியாகவோ அவளை மதிக்கவே இல்லை. அவளது பாரம்பரியமான தமிழ் நளினமும், கிராமத்து எதார்த்தமும் அவனது மாடர்ன் உலகிற்குப் பிடிக்கவில்லை. அவளைத் தீண்டக் கூட இல்லை. இன்னும் ஒரு கன்னிப் பெண்ணாகவேதான் அவனது வீட்டில், அவனது நிழலாக வாழ்ந்து வருகிறாள்.
ஆனாலும், பேதை நெஞ்சம் கொண்ட ரதிக்கு அவன் மேல் அத்தனை காதல்! ‘தனக்கு விபத்து என்று தெரிந்ததும் தன் வேலைகளை எல்லாம் அப்படியே போட்டுவிட்டு ஓடி வந்துவிட்டானே’ என்ற எண்ணமே அவளுக்குள் ஒரு பெரும் பூரிப்பைத் தந்தது.
இருந்தும் அவன் முகத்தில் அந்த அக்கறையோ காதலையே அவள் இப்போதும் பார்க்க முடியவில்லை. அதை தானே அவள் எதிர்பார்ப்பது.
அவனை ஆசையாக எதிர்பார்த்தவளுக்கு அவனின் அலட்சியப்பார்வை என்னவோ செய்தது. உள்ளுக்குள் ஒரு ஏக்கம், தவிப்பி , காதல் அவனிடம் எதிர்பார்த்தது அவள் நெஞ்சம். அவனோடு வந்தவர்களைக் கூட அவள் கவனிக்கவில்லை. அவள் கவனம் முழுவதும் அவனிடம் மட்டும் தான் இருந்தது.
இந்த விபத்தைப் பயன்படுத்தி, தனக்குக் கடந்த காலம் மறந்துவிட்டது போல நடித்தால், அப்போதாவது தன் மேல் கொஞ்சம் அக்கறையும், கூடவே கொஞ்சம் காதலுமாக உரிமையாக தன்னிடம் “நான்தான்டி உன் புருஷன்” என்ற உரிமையை காட்டுவானா என்று பார்க்க ஆசைப்பட்டாள்.
“ச்சே! என்ன என் புத்தி இப்படி எல்லாம் யோசிக்குது. அவர்கிட்டே நான் ஏன் நடிக்கணும். என்னை பார்க்க தானே இவ்வளவு அவசரமா வந்திருக்கார்” என்று அவள் மனம் அவளுக்கு எடுத்துரைத்தது.
“ஓகோ.. நீ சொன்ன மாதிரி உன்னோட அவர்… என்ன மனநிலையில் இருக்காருன்னு இப்போ தெரிஞ்சுக்கலாமா?” என்றது அவள் இன்னொரு மனம் அவளுக்கு பரீட்சை வைத்தது.
“சரி என்ன பண்ணலாம் ” என்று யோசித்தவள் சட்டேன்று ஜெய்யை பார்த்து
முகத்தில் அப்பாவியான குழந்தைத் தனமான குழப்பத்தை வரவழைத்துக் கொண்டு, “நீ… நீங்க எல்லாம் யாரு? நான் எங்கே இருக்கேன்? எனக்கு என்ன ஆச்சு?” என்று மெதுவான, நடுங்கும் குரலில் கேட்டாள்.
அவள் எதேச்சையாகக் கேட்ட அந்த ஒரு கேள்வி, அந்த அறையில் இருந்த மற்ற மூவரையும் அதிர வைத்தது. இந்த கேள்வியே ரதிமல்லிகாவின் வாழ்க்கையை முற்றிலும் புரட்டிபோடப் போகிறது என்று அவளுக்கு தெரியவில்லை.
அதர்வாவின் பின்னால் நின்றிருந்த அவன் தம்பி மன்மதமாறன் பதற்றத்தோடு முன்னோக்கி வந்தான். மாறன் எப்போதுமே நியாயத்தின் பக்கம் நிற்பவன். கொஞ்சம் ரதியின் மீதும் அக்கறை கொண்டவன். அதற்கு காரணமும் இருக்கிறது.
கேஷுவல் ஷர்ட்டும் ஜீன்ஸும் அணிந்து, கரடுமுரடான தோற்றத்தில் இருந்தாலும், ரதியின் மேல் அவனுக்கு எப்போதும் ஒரு அண்ணியாக மதிப்பும், அவளது நிலையை நினைத்து பரிதாபமும் உண்டு. தன் அண்ணனான அதர்வா அவளை நடத்தும் விதம் கண்டு பலமுறை அவனிடம் சண்டையிட்டிருக்கிறான் மாறன்.
அதர்வாவின் அருகிலேயே அவனது கையைப் பிடித்துக் கொண்டு நின்றிருந்தாள் மாயா. நவீன நாகரிகத்தின் உச்சமாய், ஜீன்ஸும் ஸ்லீவ்லெஸ் டாப்சும் அணிந்து, கத்தரித்த தலைமுடியை அசைத்து, மேக்கப்போடு திமிராக நின்றிருந்தாள் அதர்வாவின் நீண்ட நாள் காதலி.
ரதியின் கேள்வியைக் கேட்டதும், அதர்வாவின் முகத்தில் முதலில் ஒரு நடுக்கம் வந்தாலும், அடுத்த கணமே அவனது நரி மூளையில் ஒரு குரூரமான, சுயநலமான நிம்மதி பிறந்தது. *’அப்பாடா! இவளுக்குப் பழசெல்லாம் மறந்துடுச்சா? இவளை என் வாழ்க்கையில இருந்து நிரந்தரமா இறக்கி வைக்க இதவிட வாய்ப்பு கிடைக்காது!’* என்று அவனது வஞ்சக மனம் கணக்குப் போட்டது.
பதட்டத்தை வெளியில் காட்டாமல், மாயாவை இன்னும் நெருக்கமாக தன் இடுப்போடு இழுத்துக் கொண்ட அதர்வா, “ரதி… உனக்கு என்னை யாருன்னு தெரியலையா? நான் அதர்வா. இவ மாயா, என்னோட லவ்வர். நாங்க ரெண்டு பேரும் ரொம்ப நாளா லவ் பண்றோம். இப்போ ஒண்ணா லிவ்-இன் ரிலேஷன்ஷிப்ல வாழ்ந்துட்டு இருக்கோம்” என்றான் உதட்டில் ஒரு வஞ்சகச் சிரிப்போடு.
அந்த வார்த்தைகள், ரதியின் இதயத்தைக் குத்திக் கிழித்தது போல, நெஞ்சில் ஈட்டியால் பாய்ச்சியது போல இருந்தது. தான் ஆசையோடு, தன் கணவனின் அன்பை சோதிக்க ஆரம்பித்த விளையாட்டு, இப்படித் தன் நெஞ்சிலேயே மரண அடியாகப் பாயும் என்று அவள் நினைக்கவில்லை.
தன் கணவன், தன் கண் முன்னாலேயே இன்னொரு பெண்ணைத் தன் காதலி என்றும், அவளோடுதான் குடும்பம் நடத்துகிறேன் என்றும் சொல்வதைக் கேட்க ரதியால் முடியவில்லை. நெஞ்சு அடைக்க, கண்கள் கலங்க, அதிர்ச்சியில் உறைந்து போனாள்.
இருந்தாலும் தன் அழுகையை அந்த வஞ்சகனிடம் காட்டிக் கொள்ளக் கூடாது என்ற வைராக்கியத்தோடு, தட்டுத்தடுமாறித் தன் கழுத்தில் இருந்த மெல்லிய தங்கச் சங்கிலியைத் தொட்டாள். அதன் நுனியில் மஞ்சள் கயிற்றோடு கோர்க்கப்பட்டிருந்த தாலிக்கொடி இருந்தது. அதைத் தன் நடுங்கும் விரல்களால் எடுத்து அதர்வாவின் முகத்திற்கு நேராகக் காட்டினாள்.
“நீங்க அவளை லவ் பறீங்க… சரி… அப்போ என் கழுத்துல இருக்கே, இந்தத் தாலிக்கொடி… இது என்ன? எனக்குக் கல்யாணம் ஆயிடுச்சா? அப்போ என் புருஷன் யாருன்னு சொல்லுங்க?” என்று குரலில் நடுக்கத்தையும் நெஞ்சில் பாரத்தையும் சுமந்து கேட்டாள்.
“பழசு மறந்தாலும் இதை சரியா கேக்குறாளே..” என்று நினைத்த அதர்வாவின் தொண்டை வறண்டது. என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் திக்கித் திணறினான். ஆனால், அவனது சாடிஸ்ட் புத்தி சும்மா இருக்கவில்லை. சட்டென்று அருகில் நின்ற தன் தம்பி மாறனைப் பார்த்தான்.
“உனக்குக் கல்யாணம் ஆகிடுச்சு ரதி! இதோ இவன் தான் உன் புருஷன்! என் தம்பி… மாறன்!” என்று நெஞ்சில் ஈரமே இல்லாமல் அழுத்தமாகக் கூறினான்.
அந்த அறையே ஒரு நிமிடம் மயான அமைதிக்கு உள்ளானது. மாறன் அதிர்ச்சியின் உச்சத்துக்கே சென்றான். அவன் கண்கள் கோபத்தில் அப்படியே சிவந்தன. அதர்வாவின் இந்த அசிங்கமான, கேவலமான புத்தியைக் கண்டு மாறனுக்கு ரத்தம் கொதித்தது.
பாய்ந்து சென்று அதர்வாவின் சட்டைக் காலரைப் பிடித்து சுவற்றுடன் சேர்த்து அமுக்கிய மாறன், “அதர்வா!!! என்ன வார்த்தை சொல்ற நீ? அறிவு இருக்கா உனக்கு? நீ பண்ணின தப்புக்கு, , உன் சுயநலத்துக்கு என்னை பகடைக்காயாக்குறியா? இவ உன்னோட பொண்டாட்டிடா…” என்று ஆக்ரோஷமாகக் கத்தினான்.
அதர்வாவாவோ சற்றும் அசராமல் மாறனின் கையைத் தட்டிவிட்டு, ரதிக்குக் கேட்காதவாறு அவன் காதருகே சென்று ரகசியமாக பேசினான். “டேய் மாறா! கொஞ்சம் அமைதியா இருடா… அவளுக்குப் பழசு மறந்துடுச்சு. இப்போ போய் நான் தான் புருஷன்னு சொன்னா, அவ என் கூடத்தான் வீட்டுக்கு வருவா. அப்புறம் மாயா என்னை விட்டுட்டுப் போயிடுவாடா. என் கார்ப்பரேட் லைஃப், என் நிம்மதி எல்லாம் பாழாயிடும். ப்ளீஸ்டா, உன் அண்ணன் வாழ்க்கைக்காக இந்த ஒரு பொய்யை மட்டும் ஒத்துக்கோடா…” என்று கெஞ்சுவது போல மிரட்டினான்.
மாறன் ஒரு அருவருப்பான ஜென்மத்தைப் பார்ப்பது போலப் பார்த்தான். *’எவ்வளவு பெரிய சுயநலவாதி! ஒரு வருஷமா அந்தப் பெண்ணை மனைவியா ஏத்துக்காம, அவ கூட சேர்ந்து வாழ்க்கையை நடத்தாம. இப்போ அவளுக்கு விபத்துன்னு தெரிஞ்சும், இப்படி ஒரு பழியை என் மேல போட்டுத் தப்பிக்கப் பாக்குறானே!’* என்று மாறனின் நியாயமான மனம் தவித்தது.
“இல்ல டா… இதுக்கு நான் ஒத்துக்க மாட்டேன்” என்று சொன்னவன் சட்டையை பற்றி “கொஞ்ச நேரம் வாயை மூடு டா.. ” என்று அதட்டிய அதர்வா. “அவளுக்கு இப்போதான் ஆபரேஷன் முடிஞ்சிருக்கு. டாக்டர் அவளை கவனமா பாத்துக்க சொல்லிருக்கார் நினைவு இருக்கா? இல்லையா?” என்றவன்
ரதியின் பக்கம் திரும்பி”ரதி, மாறன் தான் உன் புருஷன். நீங்க ரெண்டு பேரும் தான் கணவன்-மனைவி. அவன் சும்மா விளையாடுறான். நீ அவன் பேசினதை எல்லாம் பெருசா எடுத்துக்க வேணாம்” என்றான்.
அருகில் நின்ற மாயா தன் பிராண்டட் ஹேண்ட்பேகை தோளில் மாட்டிக் கொண்டு, ரதியை ஏளனமாகப் பார்த்து, “ஹாப்பி மேரிட் லைஃப் ரதி! ஜெய்… கம் ஆன், லெட்ஸ் கோ. இன்னைக்கு என் பர்த்டே… நமக்கு வெளியில நிறைய பார்ட்டி வேலை இருக்கு!” என்று திமிராகக் கூறினாள்.
“ஆமா டார்லிங், கிளம்பலாம். மாறா… நான் வீட்டுக்குக் கிளம்புறேன். அவளை டிஸ்சார்ஜ் பண்ணி நீயே கூட்டிட்டு வந்துடு!” என்று குற்ற உணர்ச்சியே இல்லாமல் கூறிவிட்டு, மாயாவின் இடுப்பில் கை போட்டுக் கொண்டு அந்த அறையை விட்டு வேகமாக வெளியேறினான் அதர்வா.
அதர்வாவும் , மாயாவும் அந்த அறையை விட்டு வெளியேறிய அந்த நொடி, அங்கிருந்த காற்றே ஸ்தம்பித்தது போல இருந்தது. அவர்கள் சென்றதும் அறைக்கதவு தானாக மூடிக்கொள்ள.. அந்த சத்தம் கூட அவளை ஏனோ செய்தது.
ரதி அப்படியே படுக்கையில் சிலையாக அமர்ந்து இருந்தாள். அவள் கண்கள் இன்னும் அந்த மூடிய கதவையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தன. *’நான் என்ன நினைச்சு அவர்கிட்டே எனக்கு ஏதும் நியாபகம் இல்லாதது போல நடிச்சேன்… ஆனா இங்கே என்ன நடக்குறதே வேறையா இருக்கே.. அவர் மனசுல அப்போ எனக்கான இடம்னு எதுவுமே இல்லையா? என்று நடந்ததை நினைத்து அவள்’* உள்ளம் கதறியது.
ரதியின் நிலை என்னவாகும்? அதர்வா அவளை ஏமாற்றிவிட்டு மொத்தமாக சென்றுவிடுவானா? இல்லை ரதி அவனிடம் சென்று உண்மையை சொல்லப் போகிறாளா?
இதற்கும் தனக்கும் சம்மதமே இல்லாமல் ஒரு ஜீவன் அந்த அறையில் தன் கோபத்தக் கட்டுப்படுத்திக் கொண்டிருக்கிறானே மன்மத மாறன். அவன் நிலை என்னவாகும்…
அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்
