Home Uncategorizedஅயோக்கியனின் அரியாசனம் இராக்கதன் 2-2

அயோக்கியனின் அரியாசனம் இராக்கதன் 2-2

by Layas Tamil Novel
598 views

EPISODE 2

ஓவியா, திகழ் இருவரும் ஆள்மாறாட்டம் செய்த பஞ்சாயத்து இன்னும் ஓடிக்கொண்டிருக்க, இங்கே வெளியே கூடியிருந்த பத்திரிகையாளர்கள் அனைவரும் முதலமைச்சரைப் பார்க்க வேண்டும். அவரை ஐந்து நிமிடமாவது பேட்டி எடுக்க வேண்டும் என்று பிடிவாதமாக அங்கிருந்து கிளம்பிச் செல்லாமல், சிவராஜனின் பதிலுக்காக காத்திருந்தனர்.

“ஐயா, அதற்கான காரணங்கள் உங்களை நேரில் சந்தித்தே தீர வேண்டும் என்று பிடிவாதமாகக் காத்துட்டு இருக்காங்க. நான் உங்களுக்கு என்ன பதில் சொல்லட்டும்?” என்று, அவர் கட்சி முக்கியப் பிரமுகர் ஒருவர் வந்து கேட்டார்.

“அவங்கள்கிட்ட, ஐயா பேசுறதுக்கு விருப்பப்படலைன்னு சொல்லி அனுப்பி வச்சிடுங்க. அவங்களுக்கு ஏதாவது ஒரு நியூஸ் ஹெட்லைன்ஸ் போடுறதுக்கு தேவைப்படும். இன்னைக்கு நம்ம ஐயாவ பத்தி எப்படியும் எழுதத்தான் போறாங்க!” என்றான் ராக்கி.

“டேய் ராக்கி, கொஞ்சம் பேசாம இரு. எப்படியும் நான் ஓவியாவுக்கும் திகழுக்கும் ஒரே மேடையில கல்யாணம்னு முடிவு பண்ணும்போதே, கண்டிப்பா அவங்க ரெண்டு பேரையும் பார்க்குற யாருக்கும் இந்தக் கேள்வி வரும். அப்போ, எல்லா உண்மையும் சொல்லலாம்னு நான் ஏற்கனவே முடிவு பண்ணி வச்சிட்டேன். எப்படியும் சொல்லப் போறது தானே, அது இன்னைக்கு சொன்னா என்ன? நாளைக்கு சொன்னா என்ன? எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை” என்றவர், ஓவியா, திகழ் இருவரையும் பார்த்தார்.

“அவங்கள ஒரு பத்து நிமிஷம் மீட்டிங் ஹால்ல வெயிட் பண்ணச் சொல்லு. நம்ம இங்க சம்பிரதாயத்தை எல்லாம் முடிச்சுட்டு, அதுக்கப்புறம் நான் அவங்கள மீட் பண்றேன்” என்று சொல்லி அனுப்பினார்.

“ஐயா, இப்ப அதுக்கு என்ன அவசியம்? வெறும் வாயில் அவல் சாப்பிடுற மாதிரி அவங்களுக்கு நம்ம கொடுக்கிற நியூஸ் அதெல்லாம் ஒன்னும் தேவையில்லை. அப்புறம் பார்த்துக்கலாமே!” என்றான் ராக்கி.

“டேய், நீ கொஞ்ச நேரம் சும்மா இருக்க மாட்டியா?” என்று அவனை விலக்கியவர், “செல்வி, இங்கே வா!” என்று அழைத்தார்.

வீல்சேரில் அமர்ந்திருந்தவரிடம் வந்தவர், “என்ன வேணும்? சொல்லுங்க!” என்றார்.

“உனக்கு ஓவியா, திகழ் ரெண்டு பேரையும் பத்தி நான் பத்திரிக்கைக்காரங்ககிட்ட சொல்றதுல எந்த ஆட்சேபனையும் இல்லையே? நீ சொல்லு, நீ என்ன சொல்றியோ அதுபடி நான் முடிவு எடுத்துக்கிறேன்” என்றார்

“ஏங்க, இதை என்கிட்ட கேக்கணுமா? நம்ம மூணு பிள்ளைகளையும் உரிமையா எல்லார் கிட்டயும் அறிமுகப்படுத்தணும்னு நான் எவ்வளவு வருஷமா அந்த ஆண்டவன் கிட்ட வேண்டிக்கிட்டு இருக்கேன் தெரியுமா? ஒருத்தி மட்டும் அம்மா, அப்பான்னு உரிமையா நம்ம கூட இருக்கிறப்ப, மத்தது ரெண்டும் ஏதோ மூணாவது மனுஷங்க மாதிரி நம்ம வீட்டுக்கு வர்றதும் போறதும், பேசறதுன்னு இருக்குறதைப் பார்க்குறப்ப எனக்கு எவ்வளவு கஷ்டமா இருக்கு தெரியுமா?” என்று மிகவும் மனம் வருந்தி கூறியவர், “எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. நீங்க இப்போ சொல்லப் போற விஷயம் உங்க அரசியல் வாழ்க்கையை கூட பாதிக்கலாம். அதை மட்டும் யோசிச்சு பண்ணிக்கோங்க” என்றார்.

“அதை பத்தி இனி எனக்கு எந்தக் கவலையும் இல்லை. நான் அரசியலில் இருந்து ஓய்வு எடுக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன். ஆனால், இந்த எலக்சன் முடியட்டும்” என்றார்.

“ஐயா, ஓய்வு எடுக்கறதுன்னு முடிவு பண்ணிட்டீங்க, எதுக்காக எலக்சன் வரைக்கும் காத்துட்டு இருக்கணும்? எப்படியும் பத்திரிக்கைக்காரங்களை மீட் பண்றதுன்னு முடிவு பண்ணிட்டீங்க, இப்பவே அந்த விஷயத்தைச் சொல்லிட வேண்டியதுதானே? ஏற்கனவே உங்களுக்கு உடம்பு ரொம்ப வீக் ஆகிடுச்சு. இந்த நிலைமையில மறுபடியும் நீங்க பிரசாரத்துக்குப் போய் அலைய வேண்டியதில்லை” என்றான் ராக்கி.

“பாதிக்கிணறு தாண்டியாச்சு. இந்த நேரத்துல நான் ஓய்வு எடுக்கிறேன்னு தெரிஞ்சா எதிர்க்கட்சிக்கு ரொம்ப வசதியாயிடும். அதனால எனக்கு அப்புறம் நம்ம கட்சியை வழிநடத்தக்கூடிய நல்ல ஆளை தேர்ந்தெடுத்து என்னோட பதவியில உட்கார வச்சிட்டுத்தான் நான் ஓய்வெடுப்பேன்” என்றார் சிவராஜன்.

“ஐயா, நீங்க சொல்றதும் சரிதான். மத்தவங்களுக்கு வேணா நீங்க வயசு காரணமா உடம்பு சரியில்லாம ஓய்வு எடுக்கப் போறீங்கன்னு நினைக்கலாம். ஆனால், உண்மையில காரணம் அது இல்லையே. அன்னைக்கு நீங்க சாப்பிட்ட உணவுல தான் ஏதோ பிரச்சினை. நான் அதை லேபுக்கு அனுப்பி டெஸ்ட் பண்ணச் சொல்லி இருக்கேன். இன்னும் ரெண்டு நாள்ல ரிசல்ட் வந்திடும். அதை பார்த்துட்டு மத்ததை முடிவு பண்ணிக்குவோம்” என்றான் ராகவ்.

“என்ன தம்பி சொல்றீங்க? அவர் சாப்பிட்ட சாப்பாட்டை டெஸ்டுக்கு கொடுத்து இருக்கீங்களா? ஏன்? அது நம்ம வேலையாட்கள் செஞ்சு கொடுத்ததுதானே, அதுல என்ன சந்தேகம்?” என்றார் செல்வி சற்று பதட்டமாக.

“ஆமாம்மா, நாங்க அமெரிக்காவில் இருந்து வந்த சமயத்தில தான் நீங்க பிரசாரத்துக்கு நாலு நாள் ஓய்வு விட்டுட்டு பார்ட்டி ஏற்பாடுகளைப் பண்ணி இருக்கீங்க. அந்த பார்ட்டி நடந்த அப்போதான் ஐயாவுக்கும் உடம்பு சரியில்லாமல் போயிருக்கு. யாரோ பிளான் பண்ணிதான் அவர் சாப்பிடுற சாப்பாட்டில் ஏதோ கலந்து இருக்காங்கன்னு நான் நினைக்கிறேன். இல்லைன்னா, சாப்பிட்டதும் உடனே ஐயாவுக்கு வாயில நுரை தள்ளி மயக்கம் போடுற அளவுக்கு வருமா? நீங்களே கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க” என்றான் ராகவ்.

“ஆமாம், மிஸ்டர் ராகவ், நீங்க சொன்னதும் சரிதான். நாங்க எல்லாரும் பார்ட்டியில் இருந்தோம். ஐயாவுக்கு வழக்கமா சாப்பாடு சமைச்சு கொடுக்கிற சமையல்காரர்தான் அன்னைக்கும் சமைச்சு கொடுத்தாங்க. எனக்கு அது நல்லா ஞாபகம் இருக்கு. ஆனால், எப்படி அவர் சாப்பிட்ட சாப்பாட்டில் எதுவும் கலந்திருக்குன்னு இவ்வளவு உறுதியாக சொல்றீங்க? அவங்க எல்லாருமே ரொம்ப விசுவாசமானவங்க” என்றான்.

“ஆமா தம்பி, அப்படி அவங்க சாப்பாட்டுல எதையும் கலந்து கொடுத்து இருந்தா, அவங்க கொடுத்தத நானும் தானே ஐயாவுடன் சேர்ந்து சாப்பிட்டேன்? ஆனால் எனக்கு எதுவும் ஆகலையே, அவருக்கு மட்டும் தானே உடம்பு சரியில்லாமல் போச்சு?” என்றார் செல்வி.

“அம்மா, நீங்க ரெண்டு பேரும் சாப்பிட்டது வேணா ஒரே மாதிரி செஞ்ச உணவா இருக்கலாம். ஆனால், உங்களுக்கும் ஐயாவுக்கும் தனித்தனியாக உணவு பரிமாறி இருக்காங்க. அவருக்காக வச்சிருந்த உணவை எடுத்து உங்களுக்கோ, உங்களுக்கு இருந்த உணவை எடுத்து ஐயாவுக்கோ கொடுக்கலை” என்றான்.

அவன் சொன்னதும் செல்வி, ஹோட்டலில் நடந்தவற்றை நினைவு கூர்ந்தவர், ராகவ் சொன்னது போல சிவராஜனுக்கும் செல்விக்கும் தனித்தனியே தட்டுகளில் உணவு பரிமாறப்பட்டு எடுத்து வந்திருந்தது. தங்களுக்கு கொடுத்த உணவை இருவரும் தனித்தனியே தான் சாப்பிட்டார்கள்.

“தம்பி, நீங்க சொன்னது சரிதான். எங்க ரெண்டு பேருக்கும் தனித்தனியா தான் சாப்பாடு பரிமாறினாங்க” என்றார் செல்வி.

“ராகவ், இவ்வளவு கண்டுபிடிச்ச நீ கண்டிப்பா இந்த வேலையை யார் செஞ்சிருப்பாங்கன்னு தெரிஞ்சு வச்சிருப்ப. முதல்ல அது யாருன்னு சொல்லு. அவனை நான் உண்டு இல்லைன்னு பண்ணிட்டுத்தான் மறுவேலை” என்று தன் காப்பை முட்டி வரை ஏற்றி விட்டபடி கேட்டான் ராக்கி.

“இப்படி அவசரப்பட்டு எடுத்தெறிந்து காய் நகர்த்தினா எதிராளிகள் உஷாராகிடுவாங்க. அவங்க கொடுத்த சாப்பாட்டினால் தான் ஐயாவுக்கு உடம்பு சரியில்லாமல் போயிடுச்சுன்னு நம்ம யாருக்கும் தெரியாதுன்னு எதிராளிகள் தைரியமா இருப்பாங்க. அவங்க அப்படி இருக்கிற சமயத்தில தான் நம்ம நம்மளோட அடுத்த மூவை இன்னும் அழகா கொண்டு போக முடியும். அதுவரை, இந்த விஷயம் நமக்குள்ளேயே இருக்கட்டும். வெளியே யாருக்கும் போக வேண்டாம்” என்ற ராகவ், “ஐயா, ராக்கி மச்சான் சொன்ன மாதிரி பிரஸ் மீட்டை ஒரு ரெண்டு நாளைக்கு தள்ளி வையுங்க. பொறுமையா யோசிச்சு, நிதானமா எல்லார் கிட்டயும் அப்புறம் பேசிக்கலாம்” என்றான்.

தன்னை ராக்கி மச்சான் என்று, திருமணமான அன்று உரிமையோடு அழைத்த ராகவை ஆச்சரியமாகப் பார்த்தான் ராக்கி. ஆனால், அதைக் காட்டிக்கொள்ளவில்லை. ரவிக்கும் அவன் அப்படிப் பேசியதில் மிகுந்த சந்தோஷமே. ஆனால், இங்கு ஒருத்தி மட்டும் உள்ளுக்குள் புகைச்சலோடு ராகவைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அது ஓவியா தான். அவளுக்கு இன்னமும் ராகவ் மீதிருந்த ஆத்திரம் குறையவில்லை. தான் மட்டும் ஆள்மாறாட்டம் செய்யாமல் இருந்திருந்தால் இந்நேரம் ராகவ், திகழினியின் கழுத்தில் அல்லவா தாலியைக் கட்டி இருப்பான். அந்த கோபம் அவளுக்கு.

ராகவ் சொன்னது போலவே, பிரஸ் மீட்டை ஒரு வாரம் கழித்து தள்ளி வைக்கச் சொல்லி தன் கட்சி நிர்வாகியிடம் சொல்லி அனுப்பினார் சிவராஜன்.

“இன்னும் எவ்வளவு நேரம் புதுசா கல்யாணம் ஆனவங்கள நிக்க வச்சு பஞ்சாயத்து பண்ணிட்டு இருப்பீங்க? அதான் அக்காவும் தங்கச்சியும் பேசி வச்சு நம்ம எல்லாரையும் ஏமாத்தி அவங்க காரியத்தைச் சாதிச்சிட்டாங்களே! இனி கேள்வி கேட்டு எந்தப் பிரயோஜனமும் இல்லை. அடுத்து ஆக வேண்டிய விஷயத்தைப் பார்க்க வேண்டியதுதானே!” என்றார்.

“அடுத்து பார்க்குறதுக்கு எல்லாம் ஒண்ணும் இல்லை ஐயா, நான் என் அண்ணன் கூட என் வீட்டுக்கு போறேன். எனக்கு இவன் கூட வாழப் பிடிக்கலை” என்று ராகவனை முறைத்தபடி கூறினாள் ஓவியா.

“அதான் உங்க அப்பா தான் இவர்ன்னு எல்லாருக்கும் தெரிஞ்சு போச்சு. இன்னும் எதுக்கு ஓவியா, ஐயான்னு கூப்பிட்டு இருக்க? நான் ராக்கி, நீயும் தான் அவர் அப்பான்னு வாய் நிறைய கூப்பிடுங்களேன். இனியாவது நீங்க என்னையும் அவரையும் அம்மா, அப்பா என்று கூப்பிட்டுத்தான் நாங்க மனசார கேட்டு சந்தோஷப்படுறோமே!” என்றார் செல்வி.

“ஏய் செல்வி, அவ என்ன சொல்லிட்டு இருக்கா, நீ என்ன பண்ணிட்டு இருக்க? ஒரு நிமிஷம் இரு!” என்றவர், “ஓவியா, இங்க வாம்மா!” என்று அவளை அழைத்தார்.

ஓவியா அங்கிருந்தவர்களைத் தாண்டி சிவராஜனின் அருகில் வந்தவள், அங்கே ராகவ் இருப்பதைப் பார்த்து, அவனை விட்டுத் தள்ளி மறுபக்கம் சென்று நின்று, “சொல்லுங்கப்பா!” என்றாள்.

“இப்ப எதுக்கு நீ ராகவ் தம்பி கூட அவர் வீட்டுக்குப் போக மாட்டேன்னு சொல்ற? எதுவா இருந்தாலும் ரெண்டு பேரும் பேசி தீர்த்துக்கலாம். அதை விட்டுட்டு, இப்படி கோவப்பட்டுட்டு, கல்யாணமான அன்னைக்கே புருஷன் கூட சேர்ந்து வாழ மாட்டேன்னு பொறந்த வீட்டுக்குப் போறேன்னு சொல்றது நல்லா இல்லை ஓவியா. என் பொண்ணுங்க ரெண்டு பேரோட வாழ்க்கையும் நல்லா இருக்கணும்னு இந்த அப்பா நினைக்கிறேன். அதை தயவுசெய்து கெடுத்துடாதீங்க” என்றார்.

அவர் சொன்னது கேட்டு ஓவியா அமைதியாக நின்று இருக்க, “ஐயா…” என்று அங்கு தயங்கி படி முன்பு வந்து நின்றான் வேலு.

“மாமான்னு கூப்பிடுப்பா!” என்றார் செல்வி.

“அந்த உரிமையை நீங்க வேணா எனக்கு கொடுக்கலாம். ஆனால், இவ்வளவு பெரிய உரிமையை எடுத்துக்க எனக்கு மனசு வரலை. உங்க பொண்ணு, அவங்க தங்கச்சி வாழ்க்கை கெடக்கூடாது என்பதற்காக என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க. அவங்க எப்போ விவாகரத்து கேட்டாலும் நான் கொடுக்கத் தயாரா இருக்கேன். அவங்களுக்குப் பிடிச்சவங்கள கல்யாணம் பண்ணிக்கிட்டு உங்க பொண்ணு சந்தோஷமா இருக்கட்டும். நான் யார் வழியிலும் குறுக்க வரலை” என்று ஒதுங்கி நிற்க முற்பட்டான் வேலு.

“என்ன வேலு, விளையாடுறியா? என் தங்கச்சி கழுத்துல தாலி கட்டிட்டு இப்ப அவ கூட வாழ மாட்டேன், அவளை விவாகரத்து பண்ணவும் சம்மதிக்கிறேன்னு சொல்ற? இது உனக்கு நல்லா இருக்கா?” என்றான் ராக்கி.

“வேலு, ஏன்பா இப்படி பேசுற? நாங்க ஜாதி, அந்தஸ்து, குலம், கோத்திரம் எதுவும் பார்க்கிறதில்லைனு உனக்கு நல்லா தெரியும். மத்தவங்ககிட்டயே நாங்க அப்படி நடந்துக்கிறப்போ, நீ என் பொண்ணைக் கல்யாணம் பண்ணி இருக்க, உன்னை நாங்க அப்படி பார்ப்போமாப்பா?” என்றார் செல்வி

“அம்மா, அது உங்க பெருந்தன்மை. ஆனால், உங்களோட வசதிக்கும், அந்தஸ்துக்கும், உங்க பொண்ணு இருக்கிற தகுதிக்கும் நான் அவங்களுக்கு சத்தியமா பொருத்தமானவனே கிடையாது. அதனால்தான் சொல்றேன்” என்றவன் அங்கு நின்றிருந்த அவன் குடும்பத்தை பார்த்து “கிளம்புங்க நம்ம வீட்டுக்கு போகலாம் ” என்றவன் செல்வியையும் சிவராஜனையும் பார்த்து கையெடுத்துக் கும்பிட்டு.

“வேலு, என்ன இது?” என்று ராகவ், சிவராஜன் என அவன் கையெடுத்துக் கும்பிட்டுப் பேசியதைப் பார்த்து கேட்க, “அதான், உனக்கு இந்த கல்யாணம் பிடிக்கலைன்னு சொல்றானே? அப்புறம் எதுக்கு எல்லாரும் சேர்ந்து அவனை வற்புறுத்திட்டு இருக்கீங்க? விவாகரத்து தானே? நான் இப்பவே கொடுக்கிறேன். நீ டைவர்ஸ் நோட்டீஸ் மட்டும் வாங்கிட்டு வா. நம்ம ரெண்டு பேரும் முயற்சி செய்யலாம்” என்ற திகழ், விறுவிறுவென மண்டபத்தை விட்டு வெளியே செல்ல அவள் பின்னால் செல்வி ஓடினார்.

இங்கே ராகவை முறைத்துக்கொண்டு இருந்த ஓவியா, “நானும் வீட்டுக்கு போறேன்” என்றவள், “அண்ணி, நீங்க என் கூட வர்றீங்களா?” என்று ரதியை அழைக்க, “ஓவியா, ராகவ் பண்ணினது தப்புதான். அதுக்கான ஏதாவது ஒரு காரணம் இருக்குமே? அது என்னன்னு கேட்டுட்டு அப்புறம் நீ முடிவெடுக்கலாமே? இப்படி அவசரப்படாதம்மா” என்று அவள் கையைப் பிடித்துக்கொண்டு கேட்டார் ஷோபனா.

“அத்தமா, அது எப்படிப்பட்ட காரணமா வேணா இருக்கட்டும். ஆனால், இவரையே நம்பி இருந்த என்ன மறந்துட்டு எப்படி திகழினி கழுத்துல தாலி கட்ட இவருக்கு மனசு வந்துச்சு? அப்போ இவரு மனசுல உண்மையாவே என் மேல காதல் இல்லைனு தானே அர்த்தம்?” என்று அவள் எதிரே அவளையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்த ராகவைப் பார்த்தவள், “இவ்வளவு நாளும் என் மேல காதல் இல்லாம என் கூட வெறுமனே பழகுனவரு எனக்கு புருஷனா வேண்டாம்!” என்றவள் விறுவிறுவென மண்டபத்தை விட்டு வெளியேறினாள்.

தன் மகள்கள் இருவரும் ஒன்றுபோல இருப்பதை கண்டு சிவராஜனுக்கும் செல்விக்கும் என்ன செய்வதென்று தெரியவில்லை. இருவரும் திரும்பி அங்கே இப்போது சிவதாரியாக நின்றிருந்த ராகவ், வேலு இருவரையும் பார்த்து பரிதாபப்பட்டனர்.

வழக்கமா கல்யாணம் பண்ணிக்கிட்ட பொண்ணுங்க மேல ஏதாவது குறை சொல்லியும் அல்லது பிடிக்கலனு சொல்லித்தான் மாப்பிள்ளை மண்டபத்தை விட்டு வெளியே போய்டுவாங்க.

ஆனா இங்க கல்யாணம் பொண்ணுங்க ரெண்டு பேருமே அவங்க புருஷங்களை வேண்டாம்னு சொல்லிட்டு போயிட்டாங்க பாக்கலாமா அடுத்து என்ன நடக்குதுன்னு 

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured