EPISODE 8
தங்கள் இருவருக்கும் சண்டை வரக் காரணம் என்ன என்று ராக்கியும் ரதியும் அவர் குடும்பத்தினரிடம் விளக்கினார்கள்.
உடனே ஷோபனா ரதியை முறைத்தவர், “இதெல்லாம் உனக்குத் தேவையாடி? இப்படித்தான் மாப்பிள்ளைக்கிட்ட சொல்லாம கொள்ளாம அவரைப் பத்தியே கதை எழுதுவியா நீ?” என்று அவளை அதட்டினார்.
“அத்த… அத்த… போதும் விடுங்க. நானே இப்ப அதைப் பத்தி பெருசா கண்டுக்கல” என்றவன் ரதியை தன் பக்கம் இழுத்து, அவள் தோளில் கை போட்டுத் தன்னோடு அணைத்துக் கொண்டான். “அதுவும் இல்லாம என் பொண்டாட்டி இப்போ கர்ப்பமா இருக்கா. அவளை யாரும் எதுவும் சொல்லக் கூடாது!” என்றான்.
“சரி மாப்ள, அவளை யாரும் எதுவும் சொல்லல” என்று சிரித்த மூர்த்தி, “ஏன் ரதி, இவ்வளவு சந்தோஷமான விஷயத்தை இங்கு யார்கிட்டயும் இவ்வளவு நாள் சொல்லாமல் மறைச்சிட்டியே?” என்றார்.
“உங்க யார்கிட்டயும் சொல்லக் கூடாதுன்னு எல்லாம் இல்லப்பா. நான் கர்ப்பமா இருக்குற விஷயத்தை முதன் முதலில் ராக்கிகிட்ட நான் சொல்லணும்னு இருந்தேன். அவன்கிட்ட சொன்ன பிறகு உங்க எல்லார்கிட்டயும் சொல்லலாம்னு நினைச்சேன்” என்றாள்.
“அது சரி, காரணமானவங்க கிட்டதானே முதல்ல சொல்லணும்?” என்று ராஜம் சிரிக்க,
“ஐயோ சித்தி, என்ன இப்படி பேசுறீங்க?” என்று வெட்கப்பட்டவள், ராக்கியின் மார்பில் முகம் புதைக்க,
“அவங்க சரியாத்தான் சொல்லி இருக்காங்க” என்று ராக்கியும் போதாததற்கு ராஜத்துடன் சேர்ந்து கிண்டல் செய்ய, அவளால் அங்கு இருந்தவர்கள் முகத்தில் விழிக்க முடியாமல் வீட்டிற்குள் ஓடிவிட்டாள்.
ரதி வீட்டுக்குள் வரவும், ஓவியாவின் அறைக்குள் இருந்து வெளியே வந்த ராகமின் முகம் சோகமாக இருப்பதை கண்டவள், “என்னடா? சமாதானம் ஆகலையா?” என்றாள் அவனிடம்.
“ஆமா ரதி, எவ்வளவு எடுத்துச் சொன்னாலும் கேட்க மாட்டேங்குறா. பிடிவாதம் பண்ணுறா” என்றான் அலுப்பாக.
“இருக்கும் இல்லடா? பாவம் அவ, எவ்வளவு அழுதா தெரியுமா? ஆனாலும் சும்மா சொல்லக் கூடாது, அவ சரியான அழுத்தக்காரிதான். நான் அவ்வளவு சொன்னேன், ஆனா எதுக்கும் முடியாதுன்னு சொல்லிட்டாளே. அப்படியே அவ அண்ணன் மாதிரி” என்று சிரித்தவள்,
“நீ இரு. நான் பேசி அவளை நம்ம வீட்டுக்கு கூப்பிட்டு வந்திருக்கேன்” என்றவள், ஓவியாவைக் காண அவள் அறைக்குச் சென்றாள்.
ரதியைப் பார்த்துக் கொண்டிருந்தவன், அங்கே ஹாலில் மாட்டி இருந்த கண்ணாடியில் தெரிந்த தன் பிம்பத்தைக் கண்டவன், “ம்ஹும்… இதெல்லாம் உனக்குத் தேவையாடா? இனிமேல் குடிச்சேன்னு வை, நானே உன் கையை வெட்டிப் போட்டுடுவேன்” என்று தன்னையே மிரட்டியவன் வெளியே சென்றான்.
“என்னடா ராகவா? போன காரியம் சக்ஸஸா?” என்றார் ராஜம்.
“இல்ல சித்தி” என்று தோல்வியைத் தழுவியதை ஒப்புக்கொண்டான்.
“அவ யாரு, தங்கச்சி?” என்று ராக்கி மீசையை முறுக்க,
அவனைத் திரும்பி அனைவரும் குறைக்கவும், “அ… அது…” என்று தலையைச் சொறிந்தவன், “சரி சரி, எல்லாரும் எவ்வளவு நேரம் தான் இங்கேயே இருப்பீங்க? அதான் ராகவ்வே வீட்டுக்குள்ள வந்தாச்சு. வாங்க போலாம்” என்று அனைவரையும் உள்ளே அழைத்துச் சென்றான்.
இங்கே ஓவியாவிடம், “ஓவி, என்னடி இது? ராகவ்வைக் கல்யாணம் செய்துக்க முடியலையின்னு அவ்வளவு வருத்தப்பட்ட? இப்போ நீ நினைச்சது நடந்துருச்சு. இதுக்கு மேல என்னடி வேணும்?” என்றாள்.
“அண்ணி, நீங்க சொல்றது கரெக்ட்தான். ராகவ்வைக் கல்யாணம் செய்துக்க நான் நினைச்சது உண்மைதான். ஆனா நான் மட்டும் அந்த நினைப்போட இருந்தா போதுமா? அது ராகவுக்கும் இருக்கணுமே? கடைசி நிமிஷம் வரை நான் எவ்வளவு நம்பிக்கையோட இருந்தேன் தெரியுமா, அவன் இந்தக் கல்யாணத்தை நிறுத்திடுவான்னு. அது நடக்கலையே?” என்று அழுதவள், “அந்த இடத்துல நான் இல்லாம திகழினி இருந்திருந்தா, இந்த நேரம் அவ ராகவ் பொண்டாட்டி ஆகிருப்பா இல்ல?” என்றாள்.
“ஓவி…” என்று அவளை அழைத்த ரதி, அடுத்து என்ன பேசி அவளைச் சமாதானம் செய்வது என்று தெரியாமல் நின்று இருந்தாள்.
“என்ன, இன்னமும் பேசிட்டுதான் இருக்கீங்களா? என்ன முடிவெடுத்திருக்க ஓவியா?” என்று உள்ளே வந்தான் ராக்கி.
அவன் குரல் கேட்டதும், கண்ணீரைத் துடைத்தவள் அவனைப் பார்த்துச் சிரிக்க,
“ஓவி, நான் ஒண்ணே ஒண்ணுதான் சொல்லுவேன். அதை கேட்டுட்டு நீ முடிவெடுத்துக்கோ. அதுக்கு பிறகு உன் முடிவுக்கு நான் கட்டுப்படறேன்” என்றவன், “நீ ராகவ் கடைசி நிமிஷம் வரை கல்யாணத்தை நிறுத்தலேன்னு சொல்லி அவன்மேல கோபமா இருக்க. ஆனா அவன் நிலைமையில் இருந்து கொஞ்சம் யோசிச்சுப் பாரு. என்ன காரணத்துக்காக அவன் இவ்வளவு பெரிய முடிவை எடுத்தான்னு நீ யோசிச்சுப் பார்த்தியா?” என்றான்.
ஓவியா “இல்லை” என்று தலையை ஆட்ட,
“அவன்கிட்ட என்ன காரணம்னு கேட்டியா?” என்றான்.
அதற்கும் அவள் “இல்லை” என்று தலையை ஆட்ட,
“இப்படி எதுமே கேட்டுத் தெரிஞ்சுக்காம அவன் மேல கோபப்பட நியாயமே இல்லை” என்றான்.
“அண்ணா…” என்று அவள் திணற,
“கல்யாணம் ஆனதும் நியாயமா நீ ராகவ் வீட்டுக்குத்தான் முதல்ல போயிருக்கணும். எந்தப் பிரச்சனையா இருந்தாலும் நீ அவன்கிட்ட தெளிவா பேசி முடிவு பண்ணிருக்கணும்” என்றவன், “நான் சொல்றதை சொல்லிட்டேன். இனி உன் இஷ்டம், இங்கு இருக்குறதும் உன் வீட்டுக்குப் போறதும்” என்றான்.
பேசிவிட்டு ஓவியாவைப் பார்த்தவன், “ரதி, அவளைக் கொஞ்ச நேரம் தனியா விடு. அவளே யோசிச்சு முடிவெடுக்கட்டும்” என்றவன், “நீ வா. எல்லாரும் வெளியே இருக்காங்க. அவங்களுக்கு என்ன வேணும்னு கேட்டு கொடு” என்று அவளை அழைத்தவன் வெளியே செல்லப்போக,
“அண்ணா, ஒரு நிமிஷம்” என்று அழைத்த ஓவியாவை நம்பிக்கையோடு பார்த்தவன்,
“மதியம் நம்ம வீட்ல விருந்து முடிச்சதும் உன் புருஷன் வீட்டுக்கு போகலாம்” என்று சிரித்தவன், “வா ரதி” என்று அவளை இழுத்து அணைத்தபடி வெளியே கிளம்பினான்.
தன் ஒற்றை வார்த்தையில் இருந்த மாற்றத்திலேயே அனைத்தையும் உணரும் அண்ணன் கிடைக்க தான் கொடுத்து வைத்திருக்கிறேன் என்று நினைத்தவள், அவர்கள் பின்னே அவளும் சென்றாள்.
அனைவரும் ஆர்வத்தோடு ஓவியா அறையில் இருந்து வந்த மூவரையும் பார்க்க,
“மாமா, சாயங்காலம் நல்ல நேரம் என்னன்னு பார்த்துச் சொல்லுங்க. அந்த நேரத்துல ஓவியாவையும், ராகவ்வையும் வீட்டுக்கு அழைச்சிட்டு போலாம்” என்றான்.
அதை கேட்டதும் அனைவரும் சந்தோஷப்பட, ராகவ்வும் சந்தோஷமாக ஓவியாவைப் பார்த்தான்.
அவளோ அவனை கண்டதும் தன் உதட்டைச் சுளித்து அவனை முறைத்தவள் வேறு பக்கம் திரும்பிக்கொள்ள… “ம்ஹும், என்மேல இருக்க கோபம் இன்னும் போகலையா?” என்று பெருமூச்சு விட்டவன், “டேய் ராகவா, உனக்கு இன்னைக்கு முதல் இரவு நடந்த மாதிரிதான்” என்று நொந்து கொண்டான்.
“என்னடா ராகவா, உன் பொண்டாட்டி வீட்டுக்கு வர சம்மதிச்சுட்டா. சரி, ஆனா உன்மேல இருக்க கோபம் அவளுக்கு இன்னும் குறையல போலையே?” என்றார் ராஜம் அவனுக்கு மட்டும் கேட்கும்படி.
“ஆமா சித்தி. அவளைப் பாரேன், என்னை எப்படி முறைக்கிறான்னு. என்னைக் கண்டா ஊரே நடுங்கும். ஆனா இவளைப் பார்த்தா எனக்கே பயமாத்தான் இருக்கு. எப்படி இவளைச் சமாளிக்கப் போறேன்னு நினைச்சா எனக்கு இப்பவே தலையைச் சுத்துது” என்றான்.
“அப்போ உனக்கு இன்னைக்கு ஃபிஸ்ட் நைட் கேன்சலா?” என்று வாய்க்குள் சிரித்துக் கொள்ள,
“என் நிலைமை உனக்குக் கிண்டலா இருக்கா?” என்று அவரை முறைத்தான்.
மதிய விருந்தை முடித்துவிட்டு ராகவ்வையும், ஓவியாவையும் முறையாக அழைத்து வந்தவன் அவளுக்கு வேண்டிய சீர்வரிசையையும் ராகவ் குடும்பம் வேண்டாம் என்று மறுக்க மறுக்க கொடுத்துவிட்டு தான் திருப்தி ஆனான் ராக்கி
இங்கே இரவு இவர்கள் இருவருக்கும் முதல் இரவு ஏற்பாடுகள் நடக்க அங்கே திகழுக்கும் ,வேலுவுக்கும் முதல் இரவு ஏற்பாடுகள் நடந்து கொண்டு இருந்தது
ம்ஹும் இதெல்லாம் நல்லா தான் நடக்குது இந்த ரெண்டு ஜோடிகளும் என்னதான் பண்ண போறாங்கன்னு நாளைக்கு பார்க்கலாமா
