Home Uncategorizedஉன் ரகசிய ரசிகை நான் 40

உன் ரகசிய ரசிகை நான் 40

by Layas Tamil Novel
616 views

EPISODE 40

ஆதி தன்னுடைய குடும்பத்துடன் அருணாச்சலத்தை சந்தித்து தாங்களும் ஊருக்குச் செல்வதாகக் கூற, “ஏன் ஆதி இப்படி அவசரப்படுற? என் பொண்ணுங்க கல்யாணமான கையோட ஹனிமூன் போறா. நீங்க வந்ததும் தான் வந்தீங்க, இன்னும் ஒரு ரெண்டு நாள் இருந்துட்டுப் போலாமே,” என்று அவர் கூற, “இல்ல அங்கிள்! எனக்கு ஏற்கனவே ஆபீஸ்ல நிறைய வேலை பெண்டிங் இருக்கு. நான் கண்டிப்பா போயே ஆகணும். இன்னொரு நாள் நாங்க எல்லாரும் வந்து கண்டிப்பா உங்க வீட்ல தங்குகிறோம்,” என்று ஆதி கூற, “சரிப்பா, எனக்கு நீ சொல்றது புரியுது. பத்திரமா போயிட்டு வாங்க. கண்டிப்பா இடையில நீங்க எல்லாரும் எங்க வீட்டுக்கு வரணும்,” என்று கூற, “கண்டிப்பா வரோம் அங்கிள்,” என்று சொல்லிவிட்டு ஆதி, விக்ரமையும் மற்றவர்களையும் பார்க்கச் சென்றுவிட, வெங்கடாசலமும் அருணாச்சலத்திடம் சொல்லிவிட்டு விடைபெற்று, முதலில் கீர்த்திகாவின் பெற்றோருடன் கிளம்பினர்.

கீர்த்திகா, துர்காவுடன் வருவதாக அங்கேயே இருந்துவிட்டாள்.

ஆதி சென்று விக்ரமையும் மற்றவர்களையும் பார்த்துவிட்டு, அவர்களிடம் விடைபெறச் சென்றவன், அவர்களை எல்லாம் தன் வீட்டிற்கு அழைத்திருந்தான். அனைவரும் ஹனிமூன் சென்றுவிட்டு வந்த பிறகு, அவன் வீட்டிற்கு கொஞ்ச நாள் கழித்து வருவதாகச் சொல்லவும், “கண்டிப்பாக அனைவரும் வரவேண்டும்,” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பப் போக, அவனை வழியனுப்ப அவனுடன் வந்த விக்ரம், “நாங்க எல்லாரும் கல்யாணம் ஆகி இவ்வளவு நாள் கழித்துத்தான் ஹனிமூன் போறோம் ஆதி. நீ உன் மனைவியுடன் சீக்கிரமே ஹனிமூன் போக என்னுடைய வாழ்த்துக்கள்,” என்று விக்ரம் கூற. விக்ரம் இப்படிக் கூறியதும் ஆதி லேசாகச் சிரித்துத் தலையை ஆட்டியவன், “நாங்க ஹனிமூன் போகும் பொழுது கண்டிப்பாக உன்கிட்ட சொல்லிட்டுத்தான் போவோம் விக்ரம்,” என்று ஆதி கூற, “சீக்கிரமே எதிர் பார்க்கிறேன்,” என்றவன் ஆதியை வழியனுப்பி வைத்தான்.

ஆதி, “சரி துர்கா, நீ ரூமிற்குப் போ… எனக்குக் கொஞ்சம் ஃபோன் பேச வேண்டி இருக்கு. நான் பேசிட்டு வந்துறேன்,” என்று கூற, “சரி ஆதி,” என்று துர்கா ரூமிற்கு வர, வரும் வழியில் கீர்த்திகாவும் அவள் அம்மா அப்பாவை வழியனுப்பிவிட்டு, இவர்கள் ரூமிற்குத்தான் வந்து கொண்டு இருந்தாள்.

துர்கா வருவதைப் பார்த்ததும், “அக்கா…..” என்று சிரித்துக் கொண்டே வந்து துர்காவைக் கட்டிக் கொண்டாள். “என்ன கீர்த்து, ரொம்பச் சந்தோஷமா இருக்க இன்னைக்கு?” என்று கேட்க, “அப்படியா அக்கா? அதெல்லாம் ஒன்னுமில்லையே. நான் எப்பவும் போலத்தான் இருக்கேன்,” என்று கீர்த்திகா கூறினாள்.

“சரி, அம்மா அப்பா கிளம்பிட்டாங்களா?” என்று துர்கா கேட்டாள். “ம்ம்ம்…. அவங்களை அனுப்பிட்டுத்தான் அக்கா நான் வந்தேன். எப்படியும் உங்க கூட தானே வரணும். அதான் அக்கா. சரி, நீ ரூமுக்குத்தான் போறியா….” என்று கேட்டாள். “ஆமாம் கீர்த்து, திங்ஸ் எல்லாம் பேக் பண்ணனுமில்லையா? அதான் ரூமுக்குப் போறேன். நீ என்னைப் பார்க்கத்தான் வந்தியா?” என்று துர்கா கேட்க, “ஆமாம் அக்கா, நீ ரூமுக்கு வந்துட்டியானு உன்னைப் பார்த்துட்டு, அப்புறம் போய் என்னோட பேக் ரூமில் இருக்கு, எடுத்துட்டு வரலாம்னு வந்தேன் அக்கா.”

“சரி வா…. நானும் வரேன். நாம ரெண்டு பேரும் போய் உன்னோட திங்ஸ் எல்லாம் எடுத்துட்டு, அப்புறம் ரூமுக்குப் போகலாம்,” என்று துர்கா கீர்த்திகாவுடன் செல்லப் போக, “அக்கா, அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். நீ உன் ரூமிற்குப் போ… நான் போய் எல்லாம் எடுத்துட்டுச் சீக்கிரம் வந்துடுறேன்,” என்று கூற.

“சரி, நீ தனியா போய்க்குவியா?” என்று துர்கா கேட்க, “அக்கா, இது பூமிகா அக்காவுடைய ரிசார்ட் தானே? இங்க யாரு நம்ம என்ன செஞ்சிரப் போறாங்க? நான் பத்திரமா போயிட்டு வந்துடுவேன் அக்கா. நீ போய் உன்னிடம் திங்ஸை எல்லாம் பேக் பண்ணிட்டு இரு. நான் சீக்கிரமா போயிட்டு என் பேக்கை எடுத்துட்டு வரேன்,” என்று சொல்லிவிட்டு துர்காவை அவள் அறைக்கு அனுப்பி வைத்துவிட்டு கீர்த்திகா சென்றாள்.


கீர்த்திகா தன் அறைக்கு வர, அவள் அறை முன்பு விக்கி சோகமாக முகத்தைத் தொங்கப் போட்டுக்கொண்டு நின்றிருந்தான். அவனை அப்படிப் பார்க்கவும், கீர்த்திகா விக்கியிடம் சென்று, “விக்கி அண்ணா! ஏன் இப்படிச் சோகமா நின்னுட்டு இருக்கீங்க? என்ன ஆச்சு? அதுவும் என் ரூமுக்கு முன்னாடி நின்னுட்டு இருக்கீங்க?” என்று கேட்டாள்.

கீர்த்திகா “என்ன ஆச்சு?” என்று கேட்டதும் தான் தாமதம், “ஓ…..” என்று அழுவது போலச் சத்தமிட, “அண்ணா! என்ன ஆச்சு? எதுக்கு இப்படி அழுகிற மாதிரி இருக்கீங்க? சொல்லுங்க என்ன ஆச்சு?” என்று கீர்த்திகா கேட்க.

“அவன் ஏன் அழறான்னு நான் சொல்றேன்,” என்று கூறிக்கொண்டே கதிர் அங்கே வந்தான்.

“ஏன் அழறாரு?” என்று கீர்த்திகா கேட்க, “உன்கிட்ட காலையில் நேரமே வந்து நிலானியுடைய ஃபோன் நம்பர் வாங்கிட்டு வந்தானா…” என்று கதிர் கேட்டான்.

“ஆமாம் கதிர், காலையில் 3 மணியைப் போல வந்துட்டாரு. நான் நிலானி நம்பர் கொடுத்து ஒன்பது மணிக்கு மேல அவளுக்குக் கால் பண்ணிப் பேசச் சொல்லி இருந்தேன். ஏன் என்றால்…”

“அதே தான். உன்கிட்ட ஃபோன் நம்பர் வாங்கிட்டு வந்ததில் இருந்து, ‘எப்போ ஒன்பது மணி ஆகும்?’ என்று ஃபோனையே வெறித்துப் பார்த்துட்டு, சரியா மணி ஒன்பது ஆனதும் உடனே நிலானிக்கு ஃபோன் பண்ணி இருக்கான். அந்தப் பொண்ணும் காலை அட்டென்ட் பண்ணிப் பேசி இருக்கு. இவன் என்ன பேசினானோ தெரியலை, அதுக்கு பிறகு இவன் காலைக் கட் பண்ணிட்டு, இவன் நம்பரை பிளாக் பண்ணி வேற வெச்சுட்டா,” என்று சொல்ல.

“என்னது! அவ அண்ணா நம்பரை பிளாக் பண்ணிட்டாளா? அவ அப்படி எல்லாம் பண்ற ஆள் இல்லையே கதிர்!” என்றவள், விக்கியிடம் திரும்பி, “அண்ணா! அவ உங்க நம்பரை பிளாக் பண்ற அளவுக்கு அப்படி என்ன பேசுனீங்க?” என்று கேட்டாள்.

“நான் ஒண்ணுமே பேசலை கீர்த்து. கால் பண்ணினேன். ரெண்டு மூணு ரிங்கில் ஃபோனை அட்டென்ட் பண்ணினா. நான் ‘ஹலோ நிலா குட்டி…..'”

“‘ஹலோ, யாரு நீங்க? என்னை இப்படி எல்லாம் சொல்லி கூப்பிடறீங்க?’ என்றால் நிலானி.”

“‘என்னை யாருன்னு உனக்குத் தெரியலையா?’ என்றான் விக்கி.”

“‘தெரியலைன்னு தானே கேக்குறேன். சொல்லுங்க யாரு நீங்க?’ என்றால்.”

“‘ஒரு நாள் உன்னோட காலேஜ்ல உன் சீனியர் பொண்ணு உன்னை கலாட்டா பண்ண வந்த அப்போ, உங்க காலேஜுக்கு எதிரில் இருக்க காபி ஷாப்பில் வெச்சு உன்னை அந்தப் பொண்ணு கிட்ட இருந்து காப்பாத்தினேனே, உனக்கு ஞாபகம் இருக்கா….’ என்றான்.”

“‘ம்ம்… நல்லா ஞாபகம் இருக்கு,’ என்றவள், ‘உங்களை மறக்க முடியுமா என்னால? என்னோட சீனியர் கிட்ட இருந்து தப்பிச்சு உங்க கிட்ட மாட்டிகிட்டேனே, அதை எப்படி நான் மறப்பேன்? நல்லா ஞாபகம் இருக்கு!’ என்றால்.”

“‘சட்சாத் நானே தான் பேசுறேன்,’ என்றான்.”

“‘உங்களுக்கு எப்படி கீர்த்திகாவைத் தெரியும்? அவ எங்க அண்ணா ஃபோன் பண்ணுவாரு பேசிக்கோன்னு சொல்லி இந்த நம்பரைக் கொடுத்தா… ஆனா…. நீங்க எப்படி அவளுக்கு அண்ணாவா இருக்க முடியும்? அவளுக்கு ஒரே ஒரு அக்கா தான் இருக்காங்கன்னு சொல்லி இருக்காளே?’ என்று கேட்க.”

“‘அச்சோ…. என் நிலா குட்டி எவ்ளோ அறிவா பேசுற நீ…’ என்றவன், ‘நான் கீர்த்துவோட ஒண்ணு விட்ட அண்ணன்,’ என்றான்.”

“‘ஹலோ! இந்த குட்டி….. கிட்டின்னு…. எல்லாம் பேசுற வேலை எல்லாம் வெச்சுக்காதீங்க! எதுக்கு இப்போ எனக்குக் கால் பண்ணி இருக்கீங்க? அதை முதல்ல சொல்லுங்க!’ என்றால் காட்டமாக.”

“‘என்ன நிலானி இப்படிப் பேசுற? உன்கிட்ட ஆசையா பேசணும்னு கால் பண்ணினா நீ இப்படி என்கிட்ட கோவமா பேசினா எப்படி?’ என்று விக்கி கேட்க.”

“‘ஹலோ! இங்க பாருங்க சார்…’ என்று நிலானி கோபத்துடன் பேச வர… அவளைப் பேசுவதை இடைமறித்த விக்கி, ‘என்ன நிலா குட்டி…. சார்ன்னு சொல்றே? என்னை அழகா விக்கின்னு என் பேரைச் சொல்லி கூப்பிடு. இல்லைனா என்னை ஆசையா மாமான்னு…. கூப்பிடு பார்க்கலாம்,’ என்று விக்கி சொல்ல.”

“அவன் சொன்னதைக் கேட்ட நிலானி, ‘ஹலோ! என்ன விட்டா உங்க வாய்க்கு வந்ததெல்லாம் சொல்லிப் பேசுறீங்கா? இப்படி எல்லாம் பேசுற வேலை வெச்சுக்காதீங்க என்கிட்ட. கீர்த்திகா சொன்னானு ஒரே காரணத்துக்காகத் தான் உங்க கிட்ட இவ்ளோ பொறுமையாப் பேசிட்டு இருந்தேன். இப்படி எல்லாம் பேசுற உங்கா கிட்ட பேச எனக்கு எதுவுமில்லை. பேசாம போனை வைங்க,’ என்று சொல்லிவிட்டுப் போனை கட் செய்துவிட்டாள்.”

“என்ன, நிலா குட்டி போனை கட் செஞ்சுட்டா?” என்று நினைத்தவன், திரும்பவும் நிலானிக்குக் கால் செய்ய, அவன் கால் போகவே இல்லை நிலானிக்கு,” என்று நடந்தது அனைத்தையும் விக்கி சோகமாகக் கீர்த்திகாவிடம் சொல்லி முடித்தான்.

விக்கி கூறியதை எல்லாம் அதுவரைப் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்த கீர்த்திகா, “ஏன் அண்ணா….? முதல் முதலா இன்னைக்குத் தான் அவகிட்ட ஃபோன் பண்ணிப் பேசறீங்க. இப்படியா ‘மாமான்னு கூப்பிடு….. நிலா குட்டி…..’ அப்படி இப்படி என்று சொல்லி அவகிட்டப் பேசுவீங்க? உங்களை அவளுக்கு யார், என்ன என்றே தெரியாது. அவளுக்கு உங்களைப் பத்தி எதுவுமே தெரியாம நீங்க கூப்பிட்டதும் எல்லாத்துக்கும் சரி சரின்னு பேசுவாங்கன்னு கொஞ்சமாவது நீங்க யோசிச்சுப் பேச மாட்டீங்களா?” என்று கீர்த்திகா விக்கியைக் கடிந்து கொள்ள.

“சாரி…. கீர்த்து. என் ஆள் கிட்டப் பேசுற ஒரு ஆர்வத்தில் என்ன பேசுறதுன்னு தெரியாம பேசிட்டேன்,” என்று விக்கி சொல்ல. “ஆமாமா. நம்ம கூட பேசுறவங்க மனநிலை தெரியாமப் பேச வேண்டியது. இல்லைன்னா ஏதாவது செஞ்சிற வேண்டியது. பிறகு அதுக்கு வருத்தப்பட வேண்டியது. இல்லை என்றால் கோவப்பட வேண்டியது. இந்த ஆம்பளைங்களுக்கு இதே வேலையாப் போச்சு! எதையுமே யோசிச்சுச் செய்றதிள்ள. எல்லாருக்கும் அவசர புத்தி,” என்று கூறிக்கொண்டு கதிரைப் பார்க்க.

கதிர், அவள் தன்னையும் சேர்த்துதான் பேசுகிறார்கள் என்று புரிந்தவன், “இருடி…. உன்ன நான் அப்புறம் கவனிச்சுக்கிறேன்,” என்று அவளை மிரட்டுவது போலச் சைகை செய்ய, அவனைப் போலவே சைகை செய்து, கதிரைப் பார்த்து, “போடா…..” என்று சொன்னவள்.

விக்கியிடம் திரும்பி, “இப்போ என்ன உங்களுக்கு? நிலானி உங்களை பிளாக் லிஸ்டில் இருந்து எடுக்கணும். அதானே? சரி, அத நான் பாத்துக்கிறேன். இன்னைக்கு ஒரு நாளைக்கு அவளை ஃப்ரீயா விட்டுருங்க. நாம இன்னைக்கு ஊருக்கு போயிடுவோமா? நாளைக்கு நான் காலேஜ் போனதும் முதல் வேலையா அவகிட்டப் பேசி உங்களை அன்பிளாக் பண்ணச் சொல்றேன். சரியா அண்ணா? அதுவரைக்கும் கொஞ்சம் பொறுமையா இருங்க,” என்றால் கீர்த்திகா.

கீர்த்திகா நிலானியிடம் தன்னை அன்பிளாக் பண்ணச் சொல்லச் சொல்கிறேன் என்று சொன்னதும், அவ்வளவு நேரம் சோகமாக இருந்த விக்கியின் முகம் பிரகாசமானதும், கீர்த்திகாவின் கையைப் பிடித்துக் கொண்டு, “கண்டிப்பா சொல்லிருவ தானே கீர்த்துமா?” என்று கேட்க, “கண்டிப்பா நாளைக்கு அவங்க அன்பிளாக் பண்ணிடுவா. சரியா அண்ணா….? இப்ப வருத்தப்படாம இருங்க,” என்றவள். “சரி, நான் போய் திங்ஸ் எல்லாம் பேக் பண்ணிட்டு வரேன். நம்ம கிளம்பலாம். அக்கா ரெடி ஆயிட்டுச் சீக்கிரம் வரச் சொன்னா,” என்று சொல்லிவிட்டு அறைக்குள் செல்ல.

“என்னடா மச்சான், ஓகேவா இப்ப? ஹேப்பியா நீ?” என்று கதிர் சொல்ல, “ஹாப்பி தாண்டா! நாளைக்கு என் தேவதை என்ன அன்பிளாக் பண்ற வரைக்கும் கொஞ்சம் சோகமாத்தான் இருக்கும். அதுக்கப்புறம் செம்ம ஹாப்பி நான்,” என்றால் விக்கி. “சரி வா நாம போய்க் கிளம்பலாம்,” என்று விக்கி கதிரைக் கூப்பிட.

“இல்லை டா… நீ முன்னாள் போ…. நான் இப்போ வந்துறேன்,” என்று கதிர் கூற. “நீ ஏன் என்னை முன்னாடி போ சொல்றேன்னு எனக்கு நல்லாவே தெரியும். இப்போ கீர்த்திகா மட்டும்தான் ரூம்ல இருக்கா. நானும் போயிட்டேன்னா, நீ போய் அவகிட்ட ரொமான்ஸ் பண்ணலாம்னு பார்க்கிற அப்படித்தானே? அது மட்டும் நடக்காதுடா மவனே. அவள நம்மள நம்பி விட்டுட்டுப் போயிருக்காங்க. நீ பாட்டுக்கும் போய் கல்யாணத்துக்கு முன்னாடி ஏதாவது எசகு பிசகா…. நடந்துச்சுன்னு வச்சுக்கோ. அப்புறம் எல்லாருக்கும் தான் சங்கடமாயிடும். இந்த ரொமான்ஸ் எல்லாம் கொஞ்ச நாளைக்கு மூட்டைக் கட்டி வை. அதெல்லாம் அப்புறம் பாத்துக்கலாம். இப்ப வா என் கூட முதல்ல,” என்று கதிரின் கையைப் பிடித்து, வரமாட்டேன் என்று நின்றிருந்தவனை வலுக்கட்டாயமாக ரூமுக்கு இழுத்துச் சென்றான்.

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured