EPISODE 2-11
“என்னடா, நான் சொன்னது சரிதான் என்று நினைத்து நீ திகழுடனே தப்பாக நடந்துகிட்டியா?” என்றாள் ஓவியா.
“இல்ல டி, அது…” என்று ராகவ் தயங்க,
“என்னடா தயங்குற? உங்க ரெண்டு பேருக்குள்ளேயும் எதுவும் தப்பா நடந்திருச்சா? அதனாலதான் அவளைக் கல்யாணம் செய்துக்க சம்மதம் சொன்னியா?” என்றாள் அதிர்ச்சியாக.
அவளைக் குற்றவுணர்வோடு பார்த்த ராகவ், “உனக்கு எப்படி டி இது எல்லாம் தெரியும்?” என்றான்.
“ஏன் தெரியாது? மாளவிகா ஜீவன் பேச்சிலர்ஸ் பார்ட்டி அன்னிக்கு நைட் அளவுக்கு அதிகமாகக் குடிச்சிட்டு என்கூட ஒன்றாக இருந்து என்னைக் கர்ப்பமாக்கினவன் தானே நீ?” என்றாள் ஓவியா.
அவள் சொல்வதைக் கேட்டு அதிர்ந்தவன், “என்னடி சொல்ற? நீயும் நானும் ஒன்றாக, எங்கே, எப்போது?” என்று குழம்பியவன், “நீ கர்ப்பமா இருக்கியா ஓவி?” என்று அவள் அருகில் வந்தான்.
“எங்கே, எப்போவா? நைட் மாங்கா மரத்துக்குப் பக்கத்துல யாரோ வராங்கன்னு ஒதுங்குனியா?” என்று நடந்ததைக் கூறி அவனுக்கு நினைவுபடுத்தினாள்.
அதையெல்லாம் கேட்டு மேலும் அதிர்ந்த ராகவ், “ஓவியா, நீ சொல்றது எல்லாம் உண்மைதானா? நான் இப்படி எல்லாம் பண்ணினேனா? அதனாலதான் நீ கர்ப்பமா இருக்கியா?” என்றவாறு இன்னமும் ஓவியா சொன்னதை நம்ப முடியாமல் அவளைப் பார்த்தான்.
ஏற்கெனவே கோபமாக இருந்த ஓவியா, ராகவ்வின் முகம் குழப்பத்தில் இருப்பதைப் பார்த்தவள், “என்னடா, நான் சொன்னதை நீ நம்பலையா?” என்றாள் ஓவியா கோபமாக.
அவளைப் பாவமாகப் பார்த்தான் ராகவ்.
அவனை முறைத்தவள், “உனக்கும் திகழுக்கும் இடையில் என்ன நடந்ததுன்னு இப்போ வரை உனக்கு ஞாபகம் இல்லையா?” என்றாள்.
அவளைத் தயக்கமாகப் பார்த்தவன், “ம்ஹும்” என்று தலையைச் சிறுபிள்ளை போல இடவலமாக ஆட்டினான்.
“இனிமேல் நீ தண்ணி அடிச்சேன்னு வை, அந்த அன்னைக்கும் உனக்கும் எனக்கும் டிவோர்ஸ் வாங்கிட்டு நான் போயிட்டே இருப்பேன், பார்த்துக்கோ!” என்றாள் அவன் முகத்திற்கு நேராக விரலை நீட்டி ராகவ்வை எச்சரிக்கும் விதமாக.
“ஐயோ போச்சா! எனக்கு இருந்த ஒரே ஒரு சுதந்திரம் அதுதான். அதுவும் பறிபோயிடுச்சா?” என்று ராகவ் உள்ளுக்குள் வருத்தப்பட்டான்.
“என்ன? நான் சொன்னது உன் காதுல விழுந்துச்சா இல்லையாடா?” என்று ஓவியா மீண்டும் அவனை அதட்ட,
பதறி, “ம்ம்ம், புரிஞ்சுது” என்று எழுந்து நின்றான்.
அவன் அப்படிச் செய்ததும் ஓவியாவுக்கு கோபம் மறைந்து சிரிப்பு வந்துவிட்டது.
அவள் சிரித்ததைப் பார்த்ததும் சற்று நிம்மதியானது ராகவ்வுக்கு.
தன் முன்னே நின்றிருந்தவள் கையைப் பிடித்து அருகே இழுத்தவன், “ஓவி, நிஜமாவே நீ கர்ப்பமா இருக்கியாடி?” என்று அவள் வயிற்றைத் தொட்டுப் பார்த்துக் கேட்டான்.
மீண்டும் அவனை முறைத்தவள், “நாளைக்கு ஹாஸ்பிடலுக்கு செக்கப்புக்கு போகணும். அங்கே வந்து இதே கேள்வியைத் டாக்டர்கிட்டேயே கேளு” என்றாள்.
“இந்த விஷயம் வீட்ல யாருக்கும் தெரியுமா?” என்றான்.
“நான் கர்ப்பமா இருக்குற விஷயத்தை முன்னமேயே என் அண்ணாகிட்டேதான் சொல்லலாம்னு இருந்தேன். ஆனா அப்போ எனக்கும் என் அண்ணாவுக்கும் சண்டை. அதனால அவர்கிட்டே சொல்லலை. சொல்லியிருந்தா என் அண்ணா அமெரிக்காவுக்கே வந்து உன் சட்டையைப் பிடிச்சிருப்பான்” என்றாள்.
“ம்… உன் அண்ணன் என் சட்டையைப் பிடிக்கிற வரைக்கும் நான் உட்கார்ந்து பூ பறிச்சிட்டு இருப்பேன் பாரு” என்று நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு பேசினான்.
அவனை மீண்டும் முறைத்தவள், “அது எப்படி? நீங்க குடிபோதையில் என்கூட ஒன்றாக இருந்து என் வயித்துல புள்ளையைக் கொடுப்பீங்க. என் அண்ணா விஷயம் தெரிஞ்சு நேரா வந்து ‘மாப்பிள்ளை’ன்னு உன்னைக் கட்டிப்பிடித்துக் கொஞ்சுவாரா?” என்றவள், “நாளைக்கு காலையில் எல்லார்கிட்டயும் நான் கர்ப்பமா இருக்கிற விஷயத்தைச் சொல்லப் போறேன். அப்போ எல்லாரும் உங்களை ஒரு ‘லுக்’ விடுவாங்க பாரு, அப்போ என்ன பண்றீங்கன்னு நான் பார்க்கிறேன்” என்றவள் கட்டிலில் சென்று படுத்துவிட,
“ஐயோ! வீட்ல இருக்கவங்ககிட்டே ஏண்டி இப்பவே சொல்ற? ஒரு மாசம் போகட்டுமே” என்றான்.
“அதுக்கு, அப்போதான் ‘நமக்குக் கல்யாணம் ஆகி ஒரு மாசத்துலேயே என்னைக் கர்ப்பமாக்கிட்டீங்க’ன்னு எல்லாரையும் நம்ப வைக்கலாம்னு பார்க்கிறீங்களா?” என்று திரும்பி அவனைக் கேட்டாள்.
‘சரியாகச் சொல்லிட்டாளே!’ என்று நினைத்தான் ராகவ்.
“இங்க பாருங்க, ஏற்கனவே 2 மாசம் ஆகிடுச்சு. இனி எல்லாம் விஷயத்தைச் சொல்லாம மறைக்க முடியாது” என்றாள்.
அவள் சொல்வதும் சரிதான் என்று தோன்றியது ராகவ்வுக்கு.
“சரி டி, சொல்லிக்க. எப்படியும் இந்த விஷயத்தைச் சொல்லிதானே ஆகணும். அதை இப்போ சொன்னா என்ன? ஒரு மாசம் கழிச்சு சொன்னா என்ன?” என்றவன், ஓவியா அருகில் வந்து படுத்துக்கொண்டு அவள் மீது கையைப் போட்டான்.
அவனை மீண்டும் ஓவியா முறைக்க,
“சும்மா சும்மா முறைக்காத டி. அதான் நான் முழுசா உன்கிட்டே சரண்டர் ஆகிட்டேனே. அப்புறம் என்ன?” என்றான்.
“இன்னும் கொஞ்ச நாளைக்கு நமக்குள்ள எதுவும் கிடையாது. அதை முதல்ல ஞாபகம் வெச்சுக்கோங்க” என்றவள், “என் அண்ணா சொன்னாருன்னதுக்காக நான் ஒன்னும் மனசு மாறி இங்க வரலை. திகழினி இத்தனை நடந்தும் உங்களைப் பத்தி சொன்னதுனால, அமெரிக்காவுல அவகூட நீங்க ஒன்றாக இருந்த அப்போ நடந்ததைச் சொன்னதுனாலதான் நான் உங்களை மன்னிச்சே விட்டேன்” என்றாள்.
“என்ன டி சொன்னா அந்த அரை லூசு?” என்றான் ஓவியாவை அணைத்துக்கொண்டு.
“இப்போதானே இதெல்லாம் வேணாம்னு சொன்னேன். சும்மா படுங்க” என்றவள், “அவ என்ன சொன்னான்னு அவகிட்டேயே கேட்டுத் தெரிஞ்சுக்கோங்க” என்றவள், “எனக்குத் தூக்கம் வருது” என்று ராகவ்வின் கையைத் தட்டிவிட்டுத் திரும்பிப் படுத்து உறங்க ஆரம்பித்திருந்தாள்.
“ம்ஹும்! ராகவா, உன் பாடு பெரும் பாடா இருக்குமே போலயே! வெளியிலதான்டா நீ ஐ.பி.எஸ் (IPS). ஆனா, வீட்டுக்குள்ள நீ ‘டம்மி பீஸ்’. அதை நல்லா உணர்ந்து மனசுல ஏத்திக்கோ. ஆசைப்பட்டு குடிச்சு இப்போ எப்படி வந்து மாட்டி இருக்கேன்னு பார்த்துக்கோ. இனியாச்சும் விவரமா இருக்கப் பழகிக்க” என்று தனக்குத் தானே அறிவுரை கூறியவன்,
அவனுக்கு முதுகு காட்டிப் படுத்திருந்த ஓவியாவைப் பார்த்தவன், “ம்ஹும், இன்னிக்கு சும்மாதான் படுக்கணும் போலயே!” என்று புலம்ப,
“இன்னிக்கு மட்டும் இல்லை, இன்னும் கொஞ்ச நாளைக்கு இப்படித்தான்” என்ற ஓவியா, தலையணை ஒன்றை அவனிடம் வீசி, “சும்மா தூங்க முடியலைன்னா, இந்தத் தலையணையை கட்டிட்டுத் தூங்குங்க” என்றாள்.
“ஏய்! நீ இருக்க, அப்போ எதுக்கு டி எனக்கு இதெல்லாம்?” பில்லோவை தூக்கிக் தூரப் போட்டவன், அவளைப் பின்னால் இருந்து அணைத்துப் படுத்துக்கொண்டான்.
“உன்னைத் திருத்தவே முடியாதுடா” என்று தலையில் அடித்துக்கொண்டு உறங்க ஆரம்பித்தாள்.
