துர்காவை வெளியே அழைத்து வர இன்னும் ஒரு மணி நேரம் இருப்பதால் அனைவரும் ஆபரேஷன் தியேட்டர் முன்பு அமர்ந்திருக்க விக்கி ஆதியிடம் ஸ்டீபனைப் பற்றி, “இவரை எப்படி உனக்குத் தெரியும்?” என்று கேட்டான்.
“நான் ஜெர்மனியில் ஒரு வேலை விஷயமாகப் போயிருந்தேன் இல்லையா… இவருடைய, அதாவது மிஸ்டர் ஸ்டீபனின் நிறுவனத்தில் தான் வேலை விஷயமாக அவரையே நான் சந்திக்கப் போயிருந்தேன். அப்போது தான் நீ எனக்குப் போன் பண்ணி துர்காவிற்கு ஆக்சிடென்ட் ஆன விஷயத்தைச் சொன்ன. உன்கிட்டப் போன்ல பேசியதைக் கேட்ட ஸ்டீபன் தன்னுடைய பிளட் குரூப்பும் ஏபி நெகட்டிவ் தான் என்று சொல்லிவிட்டுத் தானே முன்வந்து ரத்தம் கொடுக்க வந்தார்,” என்று சொன்னான் ஆதி.
“ரொம்பச் சந்தோஷம் ஆதி. ஆனா எனக்கு ஒன்னு மட்டும் புரியவே இல்லை. இவ்வளவு பெரிய டென்மார்க்ல ஒரு யூனிட் கூடவா பிளட் நம்மளுக்குக் கிடைக்காமல் போயிருக்கும். எந்த பிளட் பேங்க்கு போன் பண்ணிக் கேட்டாலும் அவங்க அந்தப் பிளட் குரூப் இல்லைன்னு சொல்லிட்டாங்க. நானும் விவேக்கும் எவ்வளவோ முயற்சி செய்தோம். இந்தக் காரணத்துக்காக இப்படி நடந்துச்சுன்னு எனக்கு இப்போ வரைக்கும் புரியல,” என்று சொன்னான் விக்கி.
விக்கி சொல்வதைத் தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்த ஆதி, “ஆமா. இந்த விபத்து எப்படி நடந்தது என்று உனக்குத் தெரியும் தானே? நீ விபத்து நடக்கும்போது கூடத் தானே இருந்த? என்ன நடந்தது என்று எனக்கு ஒரு விஷயம் விடாமல் முழுசாச் சொல்லு,” என்று கேட்டான் ஆதி.
“துர்கா அந்தரத்தில் இருந்து தரையை நோக்கி வேகமாகக் கீழே விழ வரும்போது நானும் துர்காவைப் பார்த்துட்டுத் தான் இருந்தேன். அப்பா!! அத நினைச்சாலும் இன்னுமும் என் மனசு பதறுது. இதை நேரில் பார்த்த எனக்கு எப்படி இருந்திருக்கும்? அப்போ துர்காவிற்கு எவ்வளவு பயமா இருந்திருக்கும் நினைத்தாலே ரொம்பக் கஷ்டமா இருக்கு,” என்று சொன்னான் விக்கி. “பின் அந்தச் ஷூட்டிங் ஸ்டார்ட் பண்றதுக்கு முன்னாடி இதற்கான பாதுகாப்பு எல்லாம் சரியா இருக்கான்னு நானே முன்ன நின்னு செக் பண்ணிட்டுத் தான் வந்தேன் ஆதி. ஆனா அவளுக்கு எப்படி இப்படி ஆச்சுன்னு என்னால இன்னுமும் நம்பவே முடியல,” என்று சொன்னான் விக்கி.
“ஷூட்டிங் ஸ்பாட்ல ஏதாவது வித்தியாசமா நடந்ததா? நீ எதுவும் நோட் பண்ணியா?” என்று கேட்டான் ஆதி விக்கி இடம். “இல்ல ஆதி. அப்படி எதுவும் வித்தியாசமா எனக்குத் தோணல. இப்போவும் ஷூட்டிங் ஸ்பாட்ல இருந்து யாரையும் வெளியே போகக்கூடாது. எல்லாரையும் உள்ள வச்சு லாக் பண்ணச் சொல்லி லதா கிட்ட சொல்லிட்டு வந்திருக்கேன்,” என்று சொன்னான் விக்கி.
“தட்ஸ் குட் விக்கி,” என்று சொன்ன ஆதி. “சரி நீ உடனே கிளம்பி ஷூட்டிங் நடந்த இடத்துக்குப் போ…. அங்க போய் தரவா செக் பண்ணி விசாரிச்சுப் பாரு… நான் இங்க இருந்து துர்காவைப் பார்த்துக்கிறேன். நீ நல்லாக் கவனிச்சுக்க. எந்த ஒரு சின்ன விஷயத்தையும் நாம கோட்டை விட்டுறக் கூடாது. கவனமாக இருக்கணும். இந்த விஷயம் ரொம்ப ரொம்ப முக்கியமான விஷயம். துர்கா உயிருக்கு ஆபத்து ஆகுற அளவுக்கு நடந்திருக்குன்னா எனக்கு அந்தச் சங்கவி மேல் தான் ரொம்ப டவுட்டா இருக்கு,” என்று ஆதி சொன்னான்.
“ஆமா ஆதி. எனக்கும் அப்படித்தான் தோணுது,” என்று விக்கியும் சொன்னான். “அவ எங்க இருந்தாலும் நம்மளுக்குக் குடைச்சல் கொடுக்குறதையே முக்கிய வேலையாக வச்சிருக்கா,” என்றான் கடுப்பாக விக்கி. “அவளை நான் கண்காணிச்சுட்டுத் தான் இருக்கேன். ஆனா எனக்குத் தெரியாமல் எப்படி இந்த வேலை நடந்தது என்று தான் எனக்கு டவுட்டா இருக்கு. சரி நான் அதையெல்லாம் பார்த்துக்கிறேன். நீ முதல்ல கிளம்பு,” என்று விக்கியை அனுப்பிவிட்டு விவேக்கை தன்னுடனே இருக்கச் சொல்லி விட்டான் ஆதி.
எதுவும் தனக்குத் தேவை என்றால் உதவிக்கு விவேக் தன்னுடன் இருக்கச் சொன்னவன். “உனக்கு ஒன்னும் பிரச்சினை இல்லையே விவேக்?” என்று கேட்க… “என்ன சார் இப்படி கேக்குறீங்க? அதெல்லாம் எந்தப் பிரச்சினையும் இல்லை. நான் உங்க கூடவே இருக்கேன்,” என்று சொன்னவன். “விக்கி சார், நீங்க வேணா கிளம்புங்க. அங்க லதா தனியா இருப்பா… அவளுக்கு என்னப் பண்றதுன்னு தெரியாது பாவம்,” என்று விக்கியிடம் சொல்ல… “சரி அப்போ நான் கிளம்புறேன். இதுவும் வேணும்னா எனக்குக் கால் பண்ணுங்க,” என்று சொல்லிவிட்டு விக்கி கிளம்பினான்.
விக்கி கிளம்பிச் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வர… லதா பதட்டமாக வாசலையே பார்த்துக் கொண்டு இருந்தால். அவள் விக்கி வருவதைப் பார்த்ததும் வேகமாக அவனிடம் ஓடியவள், “விக்கி சார் துர்கா எப்படி இருக்கா? அவள் நல்லா இருக்காளா? அவளுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லையே? அவளுக்கு எந்த ஆபத்தும் இல்லையே?” என்று பதட்டமாக விக்கியிடம் கேட்டால் லதா.
“**துர்காவிற்கு ஆபரேஷன் நல்லபடியா முடிஞ்சிருச்சு. அவள் கண் விழிக்க எப்படியும் 12 மணி நேரத்துக்கு மேல ஆகும்னு டாக்டர் சொல்லிட்டாரு. ஆதியும் விவேக்கும் ஹாஸ்பிடல்ல இருக்காங்க லதா. நீ இங்க எதுவும் விசாரிச்சியா? எப்படி அவளுக்கு இப்படி ஆக்சிடென்ட் ஆச்சு… எதுவும் உனக்கு க்ளூ கிடைச்சுதா?” என்று கேட்டால் விக்கி.
“இல்ல விக்கி சார். எனக்குத் தெரிஞ்ச வரைக்கும் நான் விசாரித்துப் பார்த்துவிட்டேன். ஆனா யாருக்குமே இதைப் பற்றி எதுவும் தெரியலைன்னு சொல்லிட்டாங்க,” என்று சொன்னால் லதா.
“அப்படியா!!” என்று தீவிரமாக யோசித்த விக்கி. “சரி துர்கா மேலே நின்னு கீழே குதிக்கறதுக்காக அவளுக்குப் பாதுகாப்பாக அந்தப் பெல்ட் எல்லாம் போட்டு விட்டானே அந்தப் பையன் எங்கே?” என்று கேட்டான். “ஒரு நிமிஷம் இருங்க விக்கி. சரவணனை வரச் சொல்றேன்,” என்று சொல்லிவிட்டு உள்ளே ஓடிய லதா அந்தப் பையனை அழைத்துக் கொண்டு விக்கியின் முன் கொண்டு வந்து நிறுத்தினாள்.
அவன் விக்கியைப் பார்த்ததும் நடுங்கிக் கொண்டு விக்கியின் முன் வந்தவன், “சார் நீங்க சந்தேகப்படும் அளவுக்கு நான் எதுவுமே பண்ணல சார். நீங்க செக் பண்ணிட்டுப் போன வரைக்கும் எப்படி இருந்ததோ அதே தான் நானும் கடைசியாச் செக் பண்ணினேன். அதுக்கப்புறம் என்ன நடந்ததுன்னு எனக்குத் தெரியாது,” என்று சொன்னான்.
அவன் சொன்னதைக் கேட்ட… விக்கி, “என்ன!!!! துர்கா மேலிருந்து கீழே குதிக்கும் போது நீ அவள் பக்கத்துல இல்லையா? அப்புறம் என்ன நடந்தது உனக்குத் தெரியாதுன்னு சொல்ற? அப்போ நீ அந்த நேரத்தில் துர்கா பக்கத்துல இல்லையா?” என்று கேட்டான் விக்கி.
“ஆமா சார். நான் துர்கா மேடம் பக்கத்துல தான் நின்னுட்டு இருந்தேன். ஆனா கடைசி நிமிஷத்துல திடீர்னு என்னைக் கீழே கூப்பிடுறாங்கன்னு சொல்லி என்னைக் கீழே அனுப்பி வச்சிட்டு துர்கா மேடமை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லிட்டு என்னைக் கீழே அனுப்பி வச்சுட்டாங்க,” என்று சொன்னான் அந்தப் பையன்.
“என்ன சொல்ற நீ!!! உன்னை யாரு துர்கா கிட்ட நிக்க விடாமல் கீழே அனுப்பினது?” என்று கேட்க…. அந்தப் பையன் தன்னைக் கீழே அனுப்பியவரின் பெயரைக் சொன்னதும் விக்கியும் லதாவும் அதிர்ந்து போய் அவனைப் பார்த்தனர்.
“என்ன சொல்ற!! நீ… நீ… சொல்றது எல்லாம் உண்மையா?” என்று நம்ப முடியாமல் மறுபடியும் விக்கி கேட்டான். “ஆமா சார் நான் பொய் சொல்லல. உண்மைதான்,” என்று சொன்னான் அந்தப் பையன்.
விக்கியும் லதாவும் உறைந்து போய் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
துர்காவிற்குக் காணாமல் போன ஃபைல் கிடைத்ததா?
பவனுக்கு ஃபைலை எடுக்க மது அவனுடன் சேர்ந்து ஃபைல் ரூமில் உதவி செய்து கொண்டு இருக்க, அப்போது ஸ்டூலில் இருந்து கீழ விழப்போன மதுவைக் கீழே விழாமல் ஓடிச்சென்று தன் இரு கைகளிலும் தாங்கிப் பிடித்திருந்தான் பவன். இருவரும் தங்கள் மூக்கோடு மூக்கு உரசி ஒருவர் கண்களை ஒருவர் பார்த்துக் கொண்டிருக்க … அப்போது கதவைத் திறந்து யாரோ உள்ளே வரும் சத்தம் கேட்டதும்…. மதுவிற்குத் தான் இப்போது எந்த நிலையில் இருக்கிறோம் என்று நினைவு வர… சட்டென்று பவன் கையில் இருந்து துள்ளிக் குதித்துக் கீழே இறங்கினால் மது.
பவன் கையில் இருந்து கீழே இறங்கிய மது தன் சேலையைச் சரி செய்து கொள்ள… அவர்கள் இருவரையும் பார்த்துக் கொண்டே அவர்கள் அருகில் வந்த ரியா இருவரையும் பார்க்க…. அப்போது தான் ரியா அங்கு வந்ததைப் பார்த்த பவன் திருதிருவென்று முழிக்க… மதுவும் அவனைப் போலவே விழித்துக் கொண்டு நின்றிருந்தாள்.
அவர்கள் இருவரையும் மாறி மாறிப் பார்த்த ரியா…. “என்ன உங்க ரெண்டு பேரு முழியுமே சரி இல்லையே,” என்று சொன்னவள் பவன் அருகில் வந்து, “என்னடா நடக்குது இங்க….” என்று வடிவேலு ஸ்டைலில் கேட்டால். இதற்குப் பவன், “சும்மாப் பேசிகிட்டு இருந்தேன் ரியா….” என்று அவனும் வடிவேலுவை போலவே ரியாவிடம் சொன்னான்.
“சும்மாப் பேசிகிட்டு தானே இருந்தே… அதுக்கு எதுக்கு மதுவைக் கையில தூக்கி வச்சுக்கிட்டுப் பேசிட்டு இருந்த?” என்று கேட்டால் ரியா. “அதுவா? நான் பேசுறது மதுவுக்குக் காதில் சரியா விழலன்னு சொன்னாங்களா? அதனால தான் அவங்கள என் கையில் தூக்கி அவங்க காதுல சொல்லிட்டு இருந்தேன்,” என்று உளறினான் பவன்.
அவன் பேசியதைக் கேட்டு அதிர்ச்சியான மது, “ஏய்… ரியா அவர் ஏதோ உளறிட்டு இருக்காருடி…. அதெல்லாம் ஒன்னும் இல்ல. நான் மேலே ஏறி ஃபைல் எடுக்கப் போனேனா? கால் தவறி கீழே விழ இருந்தேன். நான் கீழே விழாம இருக்கத் தான் என்னைப் பிடிச்சுகிட்டாரு. வேற ஒன்னும் இல்ல நீ எதுவும் தப்பா எடுத்துக்காத,” என்று மது ரியாவிடம் சொல்ல.
“சரி நீ கீழ விழாமல் பிடிச்சுகிட்டாருன்னு சொன்னே பரவாயில்லை… அதுக்கு ரெண்டு பேரும் மூக்கு உரசிட்டு இருக்குற மாதிரி அவ்ளோ பக்கத்துல முகத்தை வச்சுட்டு இருந்தீங்க?” என்று ரியா கேட்டால்.
“அது… அதெல்லாம் ஒன்னும் இல்லையே. அப்படி எல்லாம் எதுவும் இல்ல. நீ ஏதோ தப்பாப் பார்த்திருக்க. நான் வெளியே போறேன்,” என்று சொல்லிவிட்டு. பவனிடம் திரும்பி, “பவன், நான் நீங்க கேட்ட ஃபைல் வெளியில இருக்கான்னு செக் பண்ணப் போறேன்,” என்று சொல்லிவிட்டு வேகமாக ரியாவைத் தாண்டி வெளியே ஓடி விட்டால் மது.
மது வெளியே செல்வதைப் பார்த்த ரியா கையை கட்டிக்கொண்டு பவனைப் பார்த்தவள், “ம்ம்ம்….. என்னவோ உங்க ரெண்டு பேருக்குள்ள நடக்குது… நான் வந்து கேட்டா மட்டும் ஒன்னும் இல்லைன்னு சொல்லி ரெண்டு பேரும் சமாளிக்கிறீங்க. ம்ஹும்….. பார்க்கிறேன் எவ்வளவு நாளைக்கு இப்படி என்கிட்ட சொல்லாமே ரெண்டு பேரும் ஏதோ செஞ்சுட்டு இருக்கீங்கன்னு. சீக்கிரமா உங்க ரெண்டு பேரையும் கையும் களவுமாகப் பிடிக்கல என் பேரு ரியா கிடையாது,” என்றால்.
“ஏய் ரியா. நீ பாட்டுக்கு எதுவும் நெனச்சிட்டு இருக்காத… நீ நினைக்கிற மாதிரி எல்லாம் எங்க ரெண்டு பேருக்கும் உள்ள எதுவும் கிடையாது. மது எனக்கு ஹெல்ப் பண்ணத் தான் வந்தாங்க வேற எதுவுமே இல்லடி… ப்ளீஸ் நீ பாட்டுக்கு அதையும் இதையும் நினைச்சுக் கற்பனை பண்ணிட்டு இருக்காத,” என்று சொன்னவன் ஃபைல் ரூமை விட்டு பவனும் ரியாவிடம் இருந்து தப்பித்தால் சரி என்று வெளியே ஓடிவிட்டான்.
“உங்க ரெண்டு பேருக்கும் இடையில் என்ன இருக்குன்னு எனக்குத் தெரியாதுன்னு நெனச்சிட்டு இருக்கீங்களா…. அத உங்க வாயாலயே சொல்ல வைக்கல என் பேரு ரியா கிடையாது,” என்று சொல்லிவிட்டு ரியாவும் ஃபைல் ரூமில் இருந்து சென்றாள்.
ஒரு வழியாக அங்கும் இங்கும் ஃபைலைத் தேடிப் பார்க்க …. கடைசியில் பவன் தேடியே ஃபைல் கதிரின் கேபினின் உள்ளே தான் இருந்தது என்று மது அவன் கேட்ட அந்த ஃபைலை எடுத்துக் கொண்டு வந்து பவனிடம் கொடுத்தாள். மதுவிடமிருந்து அந்த ஃபைலை வாங்கியவாறே, “ரொம்ப தேங்க்ஸ் மது…,” என்று சொல்லி மதுவைப் பார்க்க.. இருவரும் ஆளுக்கு ஒரு புறம் ஃபைலைப் பிடித்துக் கொண்டு ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டிருக்க ….
“ம்ஹுக்கும்…. டைகர்கா குக்கும்…” என்று சொல்லிக்கொண்டே அவர்கள் இருவருக்கும் இடையில் வந்த ரியா அவர்கள் கையில் இருந்த ஃபைலைப் பிடுங்கிவிட்டு, “எவ்வளவு நேரம் தான் ஃபைலப் பிடிச்சுக்கிட்டு நிப்பிங்க…. ஃபைலை யார் வெச்சிக்கறதுன்னு ரெண்டு பேரும் யாரோ ஒருத்தரு ஒரு முடிவுக்கு வாங்கப்பா,” என்று சொல்லிவிட்டு அவர்களிடம் இருந்து பிடுங்கி ஃபைலைத் தன் இடது கையில் வைத்து அவர்கள் முன் ஆட்டி காட்டி சொன்னால் ரியா.
“ஹேய். அதெல்லாம் ஒன்னும் இல்ல. ஃபைல் கிடைச்சிருச்சுன்னு கொண்டு வந்து நான் பவன் கிட்ட தான் கொடுக்க வந்தேன். அதுக்குள்ள நீ வந்துப் பிடுங்கிக்கிட்ட,” என்று சொன்னால் மது. “ஓஹோ ஃபைலை கொடுக்க வந்தா கொடுத்துட்டு அப்பவே போக வேண்டியது தானே? அது என்ன ரெண்டு பேரும் ஆளுக்கு ஒரு பக்கம் ஃபைலைப் பிடிச்சு நின்னுட்டு லுக்கு விட்டுட்டு இருக்கீங்க…” என்று கேட்டால் ரியா.
“ஹேய்… ரியா சும்மா எதுவும் பேசிட்டு இருக்காத… முதல்ல அந்தப் ஃபைலைக் கொடு,” என்றான் பவன்.
“ஹேய்!!! இங்க நான் தான் கிங்கு. நான் வெச்சதுதான் ரூல்ஸ். அந்த ரூல்ஸ்ஸ என் இஷ்டத்துக்கு அப்போ அப்போ மாத்திட்டா இருப்பேன். அதக் காபிச்சிப்புனு கேட்டுட்டு போலோவ் பண்ணனும். அத விட்டுட்டு எதாவது அடாவடிய்தேனோ பண்ணனும்னு நெனச்சா… உங்க ரெண்டு பேரு மேட்டறையும் ஆஃபீஸ் புல்லா பரப்பி விட்டுடுவேன் ஜாக்கிரதை…,” என்று ரஜினி ஸ்டைலில் அவர்கள் இருவரிடமும் மிரட்டுவது போலப் பேசிவிட்டு அந்த ஃபைலை எடுத்துக் கொண்டுத் தன் கேபினுக்குச் சென்றால் ரியா.
“இவ என்ன லூசா? சம்பந்தமே இல்லாமப் பேசிட்டுப் போறா…,” என்று சொன்ன பவன். “என்ன சொல்லிட்டுப் போறா? நம்ம ரெண்டு பேரு மேட்டரையும் ஆஃபீஸ் புல்லா பரப்பிடுவேன்னு சொல்லிட்டுப் போறா,” என்று மதுவிடம் பேசியவன். “சரி மது. நான் போய் அவகிட்ட ஃபைலை வாங்கிக்கிறேன். நீங்க போங்க,” என்று அவளிடம் பேசிவிட்டு ரியாவை காண அவள் கேபிளுக்குச் சென்றான்.
ரியா சொன்னது அவனுக்குப் புரிந்ததோ இல்லையோ மதுவிற்கு நன்றாகப் புரிந்தது. ரியா வேண்டுமென்றே தங்கள் இருவரையும் இணைத்துப் பேசிக் கிண்டல் செய்துவிட்டுப் போவதை நினைத்துச் சிரித்த மது அவள் கேபினுக்குச் சென்று விட்டாள்.
ரியாவின் கேபினுக்கு வந்த பவன், “ஏய்… ரியா. உனக்கு என்ன ஆச்சு? நானும் மதுவும் எங்க போனாலும் எங்க பின்னாடியே வந்து உங்க ரெண்டு பேரையும் பார்த்து ஏதாவது ஒன்னு உளறிக்கிட்டு இருக்க,” என்று கேட்டான் பவன். “என்னது? உங்க ரெண்டு பேரை பார்த்து நான் உளறிட்டு இருக்கேனா!!! டேய் லூசு. உங்க ரெண்டு பேரையும் என்னைத் தவிர வேற யாராவது அப்படி ஃபைல் ரூமில் வைத்துப் பார்த்திருந்தாங்கன்னா…. இந்நேரம் இந்த ஆஃபீஸ் முழுக்க உன்னையும் மதுவையும் சேர்த்து கதை கட்டி விட்ருப்பாங்க. அது உனக்குத் தெரியுதா? இல்லையா?” என்று கேட்டால் ரியா.
“என்னடி சொல்ற!!! நாங்க அப்படி ஒன்னும் தப்பா எல்லாம் எதுவும் செய்யலையே. நீ என்ன இப்படி எல்லாம் பேசுற?” என்றால் நான் பவன் அதிர்ந்து. “நீங்க ஒன்னும் தப்பா நடந்துக்கல…. ஆனா பாக்குறவங்க கண்ணுக்குத் தப்பாத் தான் தெரியும். பின்ன ஆஃபீஸ் உள்ள வச்சு ரொமான்ஸ் இல்ல மது கிட்டப் பண்ணிட்டு இருந்தே… பாக்குறவங்களுக்குத் தப்பாதானே தோணும்,” என்று சொன்னால் ரியா.
“ஏய் லூசு ரியா…. மெதுவாப் பேசுடி. சத்தமாப் பேசி யாரு காதிலாவது விழப் போகுது,” என்று வேகமாக வந்து அவள் வாயைப் பொத்தியவன். “சும்மா வாய்க்கு வந்து எல்லாம் சொல்லாதடி… நீ நினைக்கிற மாதிரி எனக்கும் மதுவுக்கும் எதுவுமே கிடையாது. நீ பாட்டுக்கு ஏதாவது சொல்லிவிட்டு நாளைக்கு மதுவுக்கு அதனால எதுவும் பிரச்சினை ஆயிடப் போகுது. அவளுக்கு ஏற்கனவே நிறையப் பிரச்சினைகள் இருக்கா. என்னோட சேர்த்து இன்னொரு பிரச்சினையை நீ கோர்த்து விட்டுடாத தாயே!!” என்று அவள் கையெடுத்துக் கும்பிட்டு நின்றான். “பவன். மது கீழே விழ வந்தா அவளைக் கீழே விழாம நான் புடிச்சிட்டு இருந்தேன் அவ்வளவுதான். நீ நினைக்கிற மாதிரி ரொமான்ஸ் எல்லாம் எதுவுமே கிடையாது,” என்றான் பவன்.
“அப்போ நிஜமாவே உனக்கு மது மேல எந்த ஃபீலிங் இல்லையா?” என்று கேட்டால் ரியா. “என்னடி இப்படி எல்லாம் கேள்வி கேக்குற…,” என்று சொன்னான் பவன். “நான் கேக்குறதுக்குத் தெளிவாப் பதில் சொல்லு சரியா… மழுப்பிப் பேசாத… உனக்கு மதுவைப் பிடிச்சிருக்கு தானே?” என்றால் ரியா.
ரியா இப்படி திடீரென்று கேட்கவும் பவனுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. அவன் எதுவும் பேசாமல் அமைதியாக நிற்க…. “பாத்தியா பாத்தியா… உனக்கே என்னப் பதில் சொல்லணும்னு தெரியல.. நீ மதுவை லவ் பண்ணலைன்னா … நான் இந்தக் கேள்வி கேட்டதும் உடனே நீ இல்லைன்னு மறுத்துச் சொல்லி இருப்பதான… அத விட்டுட்டு இப்ப ஏன் அமைதியா நிக்கிற?” என்று கேட்டால் ரியா.
“அது ..அது… வந்து,” என்று அவன் தடுமாற… “உனக்கு ஒரு நாள் டைம் கொடுக்கிறேன். நீ நல்லா யோசிச்சுப் பாரு. உனக்கே உன் மனசுல மதுவைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய் என்று புரியும். அதுவரைக்கும் நீ இன்னைக்குப் பூரா மதுவைப் பார்க்கவே கூடாது. இது என்னோட ஆர்டர்,” என்று சொன்னால் ரியா.
“ஏய்… என்ன மதுவைப் பார்க்க வேண்டாம் என்று ஆர்டர் போடுவதற்கு நீ யாருடி..” என்று அவள் தலையில் கொட்டிக் கேட்டான் பவன். அவள் கேட்டதும் தன் சுழலும் நாற்காலியில் இருந்து அவனைப் பார்த்து நாற்காலியில் சுழற்றித் தன் கால் மேல் கால் போட்டு அமர்ந்தவள். “என்னப் பார்த்து யாருன்னு கேக்குறியா நீ ? நான் தான்,” என்று ரஜினி ஸ்டைலில் ரியா பேச வர…..
அவள் முன் கையெடுத்துக் கும்பிட்ட பவன், “அம்மா தாயே…. நீ சொன்ன மாதிரி இன்னிக்கு முழுக்க நான் மதுவைப் பார்க்கவே இல்லை சரியா… நீ தயவு செய்து ரஜினி மாதிரி பேசுறேன்னு சொல்லி என்னைச் சாவடிக்காத.. முதல்ல அந்தப் ஃபைலைக் கொடு,” என்று அவள் டேபிளில் இருந்து ஃபைலை எடுத்துக் கொண்டு அங்கிருந்து சென்றான்.
பவன் அவள் கேபினை விட்டுச் சென்றதும் அவன் சென்ற திசையைப் பார்த்துக் கொண்டிருந்த… ரியா, “நீங்க ரெண்டு பேரும் மனசுக்குள்ள ஒருத்தர ஒருத்தர விரும்புறீங்க. அது உங்களுக்கே தெரிய மாட்டேங்குது. ஆனா கூட இருந்து பாக்குற எனக்கு நல்லாப் புரியுது. உங்க இரண்டு பேர்ல யாரோ ஒருத்தர் கண்டிப்பா மனசத் திறந்து காதலிக்கிறேன்னு சொல்லணும். அதை இன்னொருத்தர் சரின்னு ஏத்துக்கணும். இத நான் செய்யாமல் விடமாட்டேன். அப்படி இல்லைன்னா நான் ரியா கிடையாது,” என்று தன் மனதிற்குள்ளேயே அவர்கள் இருவரையும் எப்படியாவது சேர்த்து வைக்க வேண்டும் என்று உறுதி எடுத்துக் கொண்டால் ரியா.
