Home Uncategorizedஅவருக்கு விவரம் பத்தலை அத்தை, மூர்க்கன் 33

அவருக்கு விவரம் பத்தலை அத்தை, மூர்க்கன் 33

by Sinamika Writes
79 views

மூர்க்கன் 33

“என்னடா சொல்ற! நீ லவ் பண்றியா? இவள கல்யாணம் பண்ணிக்க போறியா? என்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லவே இல்ல. அம்மாகிட்ட இருந்து இதை மறைச்சுட்ட.. இல்ல” என்று கமலா முகத்தை சோகமாக வைத்துக்கொள்ள, அங்கிருந்த அரங்கம் அப்படியே நிசப்தமானது.

“ஐயோ! இவங்கதான் இவரோட அம்மாவா! அவ்ளோதான் நான்… ஆரம்பமே அமர்க்களமா இல்லாம, அதிரடியா இருக்கே!” என்று நெஞ்சில் கை வைத்துக்கொண்டு கமலாவை பீதியோடு பார்த்தாள் கயல்.

அவள் பயந்தது போலவே, கமலாவும் கயலை ஒரு தீர்க்கமான பார்வையோடு ஏறிட்டுக் கொண்டே இருந்தார். அந்தப் பார்வையில் இருந்த தீவிரம் கயலின் தொண்டையைக் வறளச் செய்தது.

ராஜ் மெல்ல அடிமேல் அடி வைத்து கயலின் அருகே வந்து நின்றான். அவனுக்கும் கமலாவின் இந்தத் திடீர் சோக முகம் பெரிய அதிர்ச்சியைத் தந்திருந்தது. 

“அம்மா… அது வந்து… நான் உன்கிட்ட சொல்லணும்னு தான் இருந்தேன். அதுக்குள்ள…” என்று ராஜ் இழுக்க, கமலா கைகளைக் கட்டிக்கொண்டு கோபத்தோடு முகத்தைத் திருப்பிக் கொண்டார்.

“என்னடா அதுக்குள்ள? பெத்த அம்மாகிட்ட ஒரு வார்த்தை சொல்லணும்னு உனக்குத் தோணல பாரு . என் பையன் ஒரு பொண்ணைக் கூட்டிட்டு ஊரை சுத்துறான், அதை இந்த அம்மா ஊர்ல இருக்கிறவங்க சொல்லித்தான் தெரிஞ்சுக்கணுமா?” என்று கமலா குரலை உயர்த்திப் பேச, கயலுக்குள் பயம் இன்னும் பல மடங்காகப் பெருகியது.

கயல் மெல்ல ராஜ்ஜின் சட்டையைப் பின்னால் இருந்து இழுத்து, “ராஜ்… உங்க அம்மா ரொம்ப கோவமா இருக்காங்க போல. நான் பேசாம உள்ள போயிடுறேனே… ப்ளீஸ்” என்று கிசுகிசுத்தாள்.

“ஏய், இருடி… நீ வேற ஏன் பயமுறுத்துற. நானே இங்கே என்ன பண்றதுன்னு தெரியாம நிக்கிறேன்” என்று ராஜ் அவளிடம் ரகசியமாகக் கூறிவிட்டு, கமலாவைச் சமாதானப்படுத்த முயன்றான். 

“அம்மா, ப்ளீஸ் மா… கோவிச்சுக்காத. நான் உன்னை ஏமாத்தணும்னு நினைக்கல. இந்த கயல்…”

“என்ன கயல்? முயல், வயல்னு சொன்னா முறைக்குது இந்தப்பொண்ணு! இவ்வளவு திமிரு புடிச்ச பொண்ணையா நீ கட்டிக்கப் போற? எனக்கு உங்க காதல்ல துளியும் இஷ்டம் இல்லை!” என்று கமலா கறாராகச் சொல்ல, கயலின் கண்கள் கலங்கத் தொடங்கின.

‘சே… வந்த உடனே இப்படி ஒரு பெரிய பிரச்சனை ஆயிடுச்சே. வாய் பேசாம அமைதியா இருந்திருக்கலாம். தேவையில்லாம எதிர்த்துப் பேசி இப்போ எல்லார் முன்னாடியும் அவமானப்பட்டு நிக்கிறேனே. அது கூட பரவால்ல இவங்க அம்மாவுக்கு என்னை சுத்தமா பிடிக்காத மாதிரி வேற பேசிவெச்சுட்டேன். இப்போ என்ன பண்றது’ என்று கயல் தனக்குள் நினைத்து வருந்தினாள்.

ராஜ்ஜுக்கும் கமலாவின் பேச்சு கோபத்தை வரவழைத்தது. “அம்மா! இப்போ எதுக்கு தேவையில்லாம கயலைத் திட்டுற? அவளுக்கு உன்னை யாருன்னே தெரியாது. நீ அவ பேரை கிண்டல் பண்ணினதால தான் அவ பதில் பேசினா. இதுல அவ மேல என்ன தப்பு இருக்கு?” என்று கயலுக்கு ஆதரவாகப் பேசினான்.

“பாத்தியா அக்கா! இப்போவே அவளுக்கு வரிஞ்சுக்கட்டிட்டு வரான்.  என் மேலேயே பாயுறான் இவன். இவளை கல்யாணம் பண்ணித்துக்கு அப்புறம் என்னை இந்த வீட்டுப் பக்கமே சேர்க்க மாட்டான் போல!” என்று பரிமளாவைத் துணைக்கு அழைத்தார் கமலா.

கமலாவின் கோபம் கண்டு சிரிப்பு தான் வந்தது அவர்களுக்கு. பரிமளாவும் வேதாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு புன்னகைத்தவர்கள் பின் யாரும் பார்த்துவிடக்கூடாது என்று சமாளிக்க முயன்றனர்.

“ஏய் கமலா இப்போ எதுக்கு நீ இவ்ளோ கோவப்படுற..”எனும்போதே பரிமளா சிரித்துவிட்டார்.

அக்காஆ.. என்று அவரை அதட்டிய கமலா “ டேய் எனக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்லை.. அவ்ளோதான்” என்றார்.

பரிமளாவும், வேதாவும் சிரிப்பதை பார்த்த ராஜிற்கு எதுவோ சரி இல்லை என்று தோன்றியது.

அங்கே ஏதோ ஒரு சூட்சுமம் இருப்பதை அவனால் உணர முடிந்தது, ஆனால் என்னவென்று தான் புரியவில்லை.

“அம்மா, சும்மா கோபம் வர மாதிரி நடிக்காத உனக்கு இது செட்டே ஆகல.. விஷயம் என்னன்னு நேடியா சொல்லு” என்றான் ராஜ் கைகளைக் கட்டிக்கொண்டு.

கமலா இன்னும் சில நொடிகள் தன் முக பாவத்தைத் தீவிரமாகவே வைத்திருந்தார். 

கயலோ பயத்தில் தன்  சேலையின் முந்தானையை விரல்களால் சுருட்டிப் பிசைந்து கொண்டிருந்தாள். அவள் இதயம் ‘படபட’வென அடித்துக் கொண்டது.

திடீரென்று கமலா, தன் முகத்திலிருந்த  பாவனையைக் கலைத்துவிட்டு ‘கலகல’வென சத்தமாக சிரிக்கத் தொடங்கினார். 

அவரைத் தொடர்ந்து பரிமளாவும், வேதாவும் அவரோடு சேர்ந்து  சிரிக்க, ராஜும் கயலும் ஒருவரையொருவர் குழப்பத்துடன் பார்த்துக் கொண்டனர்.

“என்னமா இது? எதுக்கு இப்போ எல்லாரும் சிரிக்கிறீங்க? அங்கே ஒருத்தி பயத்துல செத்துட்டு இருக்கா!” என்றான் ராஜ் கயலைக் காட்டி.

கமலா சிரிப்பை அடக்கிக் கொண்டு கயலின் அருகே வந்தார். கயல் பயத்தில் ஓரடிப் பின்வாங்க, அவள் கைகளைப் பற்றிக் கொண்ட கமலா. 

“என்ன மருமகளே… ரொம்ப பயந்துட்டியா? என் பையன் உன்னை எப்படி வச்சிருக்கான்னு தெரியல, ஆனா நீ பேசுற பேச்சைப் பார்த்தா அவனை நல்லா வச்சு செய்வன்னு மட்டும் எனக்கு நல்லாத் தெரியுது!” என்றார் குறும்புடன்.

கயல் புரியாமல் விழிக்க, ராஜ் தான் முதலில் சுதாரித்தான். “அம்மா! அப்போ உனக்கு…?”

“எனக்கு எல்லாமே தெரியும்டா முட்டாப் பயலே!” என்று ராஜின் தலையில் லேசாகக் கொட்டியவர் . “என் மூத்த புள்ள ராவண் என்கிட்ட எல்லா விஷயத்தையும் முன்னாடியே சொல்லிட்டான். என் சின்னப் பையன் ஒரு பொண்ணை  காதலிச்சிட்டு இருக்கான், அவ பேரு கயல்விழி, இப்போ நம்ம வீட்ல தான் இருக்கான்னு ராவண் எனக்கு போன் பண்ணி எப்பவோ சொல்லிட்டான். அப்போ இருந்து பார்க்க வரணும்னு நினைச்சேன். ஆனா இன்னிக்கு தான் நேரம் கிடைச்சிருக்கு என் மருமகளை பார்க்க..” என்றார் 

இதைக் கேட்டதும் ராஜின்  ஆச்சரியத்தில் அவரைப் பார்த்தான். “என்னது! அண்ணா உன்கிட்ட சொல்லிட்டாரா? என்கிட்ட சொல்லவே இல்லையே!” என்றான் நம்பமுடியாமல்.

“அவன் ஏன் உன்கிட்ட சொல்லணும்? நீதான் பெத்த அம்மாகிட்ட சொல்லாம ஒளிச்சு ஒளிச்சு லவ் பண்ணிட்டு இருக்க. என் பெரிய மருமகள் இளங்கிளிக்கு அப்புறம் இந்த வீட்டுக்கு வர்ற பொண்ணு கொஞ்சம் தைரியமான பொண்ணா இருக்கணும்னு நினைச்சேன். அதான் வந்த உடனே கயலை வம்பு இழுத்து, அவ குணத்தைத் தெரிஞ்சுக்கலாம்னு ஒரு சின்ன நாடகம் ஆடினேன்” என்றார் கமலா பெருமிதத்துடன்.

பரிமளா குறுக்கிட்டு, “ஆமா கயல்,  வர்றப்பவே காரில் ஒரே புலம்பல் தான். என் பையன் லவ் பண்ற பொண்ணு எப்படி இருப்பாளோ, சாதுவா இருந்து என் பையன் கிட்ட ஏமாந்துடுவாளோன்னு கவலைப்பட்டா. ஆனா நீ இவளுக்கே டஃப் கொடுப்பன்னு இப்போதான் அவளுக்கு நிம்மதி வந்திருக்கு” என்று சொல்லிச் சிரித்தார்.

 வேதாவோ கயலின் முகத்தைத் தாங்கி, “ரொம்ப லட்சணமான பொண்ணுப்பா. என் பேரன் ராஜ்ஜுக்கு ஏத்த ஜோடி தான். கமலா தான் தேவையில்லாம உன்னை வம்பு இழுத்து பயமுறுத்திட்டா” என்றார் அன்போடு.

அப்போதுதான் கயலுக்குத் தன் உயிரே திரும்ப வந்தது போல இருந்தது. நெஞ்சில் கை வைத்து ஒரு நீண்ட பெருமூச்சை விட்டவள், “அப்பாடி! நிஜமாவே நீங்க என்னை வீட்டை விட்டு துரத்தப் போறீங்கன்னு நினைச்சு என் உசுரே போயிடுச்சு மா” என்றாள் கமலாவைப் பார்த்து.

“ஏன் மருமகளே, நான் உன்னைத் துரத்தினா நீ போயிடுவியா என்ன? வந்த உடனே என் பேரை வச்சு காமெடி பண்ணாதீங்கன்னு கறாரா பேசுனவ தானே நீ. அந்தத் தைரியம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு” என்று கமலாவும் அவளைப் பாராட்டினார்.

ராஜ்ஜோ தன் தாயைப் பார்த்துப் போலி கோபத்துடன், “என்னம்மா நீ!  எனக்கு பிரஷரே வர வச்சுட்ட. நான் கூட நிஜமாவே உனக்கு கயலைப் பிடிக்கலையோன்னு பயந்துட்டேன். அண்ணன் எனக்கு முன்னாடியே உன்கிட்ட ஸ்கோர் பண்ணிட்டார் பாரு” என்றான் சலிப்புடன்.

“அவன் உன்னை விட விவரம்டா ராஜ். தம்பி காதலைச் சேர்த்து வைக்க அண்ணன் எவ்வளவு பொறுப்பா நடந்துக்கிறான் பாரு. நீயும் இருக்கியே, அம்மாகிட்ட சொல்லாம பயந்துட்டு திரியுற” என்று கமலா கிண்டல் செய்ய, கயல் இப்போது கமலாவின் பக்கமாகச் சேர்ந்து கொண்டு ராஜ்ஜைப் பார்த்து நக்கல் புன்னகை செய்தாள்.

“பார்த்தீங்களா அத்தை, இவருக்கு எப்பவுமே பயம் தான். என்னைக் கல்யாணம் பண்ணிக்கப் போறேன்னு சும்மா கெத்தா சொல்லிட்டு, இப்போ உங்களைப் பார்த்த உடனே அவரே நடுங்கிட்டாரு” என்றாள் கயல்.

“ஆமாடி கயல், என் பையனைப் பற்றி எனக்குத் தெரியாதா? இனிமே இவனை நீதான் நல்லா மிரட்டி வச்சுக்கணும்” என்றார் கமலா ,

“என்ன நடக்குது இங்க.. அதுக்குள்ள ரெண்டு பேரும் ஒன்னு சேர்ந்துட்டு என்னையே கிண்டல் பண்றிங்களா?” என்றவன். “அம்மா, என்கிட்டே இவ மாடிக்கிட்டு கஷ்டப்படுவாளோன்னு கவலை பட்டீங்கன்னு பெரியம்மா சொல்றாங்க. நான் என்ன அவ்ளோ கெட்டவனா?  நீயே என்னை இப்படி காலை வாருறியே” என்றான் பாவமாக.

“அது இல்லை டா.. உனக்கு அவ்ளோ விவரம் பத்தாது இல்ல.. அதான் உன்னை எப்படி என் மருமக சமாளிப்பாலோன்னு ஒரு பயம் அவ்ளோதான் வேற ஒன்னுமில்ல.” என்றார்.

“அம்மாஆ!” என்றான் தன்னை இன்னமும் கிண்டல் செய்பவரை தடுக்க முடியாமல் கோபமாக கத்தினான்.

“ஏன் ராஜ் இப்படி கோபப்படறீங்க. அத்தை சொன்னதுல என்ன தப்பு இருக்கு. உங்களுக்கு எந்த விபரமும் இல்ல. அவங்க சரியா தான் சொன்னாங்க.. “ என்று கயல் கமலாவுக்கு பரிந்து பேச..

“அடியே! நீ தான் பேசுறியா?” என்றவாறு கயலை ஏற இறங்க பார்த்தவன் “ நீயாடி இப்படி பேசுற  கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தானடி என் அம்மா பேசினதை கேட்டுட்டு அப்படி பயந்த அப்படியே உள்ள ஓடிறேன் என்ன காப்பாத்துனு என்கிட்டே கெஞ்சல… இப்ப என்னடானா அப்படியே அந்தர் பல்டி அடிச்சு என் அம்மா பக்கம் மொத்தமா சாஞ்சிட்ட இது சரியில்லடி எப்படியும் நீ என்கிட்டே வந்து தான் ஆகணும்  அதை ஞாபகம் வச்சுக்கோ” என்றான்.

“ சும்மா இப்படி எல்லாம் பேசினா நான் பயந்துருவேன்னு நினைக்காதீங்க ராஜ் அத்தை சொன்னது நூற்றுக்கு நூறு சரிதான. உங்களுக்கு விவரமே பத்தாது” என்றாள்.

 தன் அம்மா சொன்னதை கூட ராஜ் இப்போது விட்டுவிட்டான் கயல் தன்னை விவரம் தெரியாதவன் என்று சொல்லவும் அவனுக்கு கோபம் தலைக்கேறியது.

 அவளை ஏகத்துக்கும் முறைத்தவன் “வேண்டாம் கயல், இதுக்கு நீ கண்டிப்பா எனக்கு பதில் சொல்லியே ஆகணும்” என்றான்.

“ பதில் தானே நான் சொல்றதுக்கு ரெடியா தான் இருக்கேன்” என்றவள். “அத்தை நீங்க வாங்க. இவர் சும்மா இப்படித்தான் தேவையில்லாம விவரம் பத்தாமல் பேசிக்கிட்டே இருப்பாரு.  நான் உங்களுக்கு என் கையால சமைச்சு தரேன் சாப்பிடுங்க” என்றவள்.

“ பெரிய அத்தை நீங்களும் வாங்க பாட்டி வாங்க” என்று மூவரையும்  அழைத்துக் கொண்டு உள்ளே சென்றாள்.. 

இவ்வளவு நேரம் இருந்த பதற்றமும் பயமும் மறைந்து, கயலுக்கும்  புதிய சொந்தங்கள் கிடைத்த சந்தோஷத்தில் ராஜ்ஜை வெறுப்பேற்றியதை மறந்தே விட்டாள். 

ஆனா அவனோ இதை மனதிற்குள் வைத்துக் கொண்டு பின்னாலில் செய்யும் காரியம் அவள் எதிர்பாராதது. 

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured