News
🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥 🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥

மன்மத மாறன் மல்லிகையின் நாயகன் 5

by Layas Tamil Novel
178 views
A+A-
Reset

மாறன் 5

“என்ன பண்றீங்க மாறன்” என்றாள் ரதி பதற்றமாக.

“ரதி.. அது.. வந்து .. நீ அழறதை என்னால பார்க்க முடியல.. அதான் நான் உன்னை சமாதானம் செய்ய நினைச்சேன்.. ” என்றான் மாறன் ஒருவித தயக்கத்தோடு. தன்னையும் அறியாமல் அவள் மேல் இருந்த அக்கரையில் அணைத்து அவள் உச்சந்தலையில் முத்தத்தை வேறு தந்திருக்கிறான்.  ரதி தன்னை பற்றி என்ன நினைப்பாள். கணவன் என்ற உரிமையில் செய்துவிட்டான் என்று நினைத்திருப்பாளா? என்று நினைத்தவனுக்கு. “இல்லையே அப்படி அவ நினைச்சிருந்தா என்னை விட்டு அவசரமா விலகி இருக்க மாட்டாளே!” என்றும் தோன்றியது.

மாறனையே பார்த்தவள் “மாறன் ஏன் என்கிட்டே இப்படி நடந்துகிறார். அவரோட அண்ணன் மனைவி நான்னு தெரியும் தானே அவருக்கு,.. அப்படி இருக்க அப்போ என்னை எப்படி இவரால கட்டிப்பிடிச்சு , முத்தம் கொடுக்க முடிஞ்சுது. அப்போ இவர் என்னை தப்பான கண்ணோட்டத்துல நெருங்கி வாறாரா.. அப்படி இவர் நினைச்சா என் நிலைமை என்ன ஆகுறது ” என்று நினைக்கும்போதே ரதியின் உள்ளம் பதறியது.

“இல்ல அப்படி இருக்காது, நான் அழுததை பார்த்து அவர் எனக்கு சமாதானம் செய்ய நினைச்சிருக்கலாம்”

“ஓஹோ.. அப்போ அந்த முத்தம் . அதுவும் சமாதானம் செய்ய கொடுத்ததா” என்று இன்னோரு மனம் அவளை கேள்வி கேட்டது.

“இல்ல.. அவர் அந்த மாதிரி எண்ணத்துல கண்டிப்பா என்னை நெருங்கி இருக்க மாட்டார். அவருக்கு என் மேல மரியாதை இருக்கு. கல்யாணம் ஆகி வந்த இந்த 1 வருசத்துல என்கிட்டே ஒரு முறை கூட தப்பான நினைப்போடு மாறன் நெருங்கினது இல்ல.. ” என்று தன்னையே தேற்றிக்கொண்டாள்.

இதற்கு மேல் இங்கு நின்றாள் சமாளிப்பது கடினம் என்று நினைத்த மாறன் “ரதி நான் உன்னோட திங்க்ஸ் எல்லாம் கார்ல வெச்சிட்டு வரேன் ” என்று அவள் உடைமைகளை கையில் எடுத்துக்கொண்டு வேகமாக வெளியேறி இருந்தான்.

அவளுக்கு தான் சங்கடமாகிப் போனது. தன் நிலைமை இப்படி ஆகிவிட்டதே தான் இப்பொது என்ன செய்வது என்று அறியாமல் தவித்துக்கொண்டிருந்தாள் .

பொருட்களை வைத்துவிட்டு வந்தவன் அவளுக்கு மெடிக்களில் மருந்துகளையும் வாங்கிவிட்டு அவள் அறைக்கு வந்து “போலாமா?” என்றான்.

“ம்ம்.. ” என்றவள் கட்டிலை விட்டு மெல்ல இறங்கி இரண்டு எட்டுக்கள் எடுத்து வைத்திருப்பாள். தலை கிர்ரென்று சுத்திவிட.. கீழே விழாமல் இருக்க.. அப்படியே மெத்தையை பிடித்துக்கொண்டு நின்றுவிட்டாள்.

“ரதி என்ன ஆச்சு?” என்று அவளிடம் வேகமாக வந்தான் மாறன்.

அப்போது அங்கு வந்த செவிலி ரதியை பார்த்தவர். “மேடம் இப்படி எப்பவும் போல சட்டுனு இறங்கி நடக்கக்கூடாது நீங்க. உங்களுக்கு தலையில் அடிபட்டு உயிர் பிழைச்சு வந்திருக்கீங்க. ரொம்ப நாள் படுத்தே இருந்ததுனால இப்படி நடக்க முடியாம கஷ்டமா இருக்கும் ” என்றவர் வெளியே சென்று வீல் சேர் ஒன்றை எடுத்து வந்தார்.

“இதில் உக்காருங்க..” என்று அவள் கை பிடித்து மெல்ல அமர வைத்தவர். “சார், நான் கார் வரை மேடமை கூடி வரேன் . வீட்டுக்கு போனதும் அவங்களை கொஞ்சம் கவனமா பாத்துக்கோங்க. தனியா எங்கையும் விடவேணாம். ரத்தம் நிறைய போயிருக்கு.. உடம்பு பழைய படி மாற கொஞ்சம் நேரம் எடுத்துக்கும். அதுவரை இவங்களை கவனமா பாத்துக்கோங்க” என்றார்.

“ஓகே சிஸ்டர்” என்றவன் ரதியை பார்த்து “ஆர் யூ ஓகே?” என்றான்.

அவளும் “ம்ம்..” என்றாள்.

பின் இருவரும் ஹோச்பிடலில் இருந்து கிளம்பி நேராக அவர்கள் வீட்டிற்கு சென்றனர்.

வாசலில் கார் வந்த சத்தம் கேட்டதும் வேகமாக ஆரத்தி தட்டுடன் வாசலுக்கு விரைந்தார் அவர்கள் வீட்டில் பல ஆண்டுகளாக வேலை செய்துகொண்டிருக்கும் பாப்பாத்தி.

ரதி காரை விட்டு கீழ் இறங்க அவளை கைத்தாங்கலாக பிடித்தபடி வீட்டிற்குள் நுழையப்போனான்.

“தம்பி! தம்பி! நில்லுங்க.. பாப்பாவுக்கு சுத்தி போட்டுறேன். உயிர் பிழைச்சு வந்திருக்கு பாப்பா. அது மேல இருக்க கண்ணு எல்லாம் போகணுமில்ல.. ” என்று வாசலிலேயே மறித்தார் பாப்பாத்தி.

“சரி ” என்றவன் ரதியை நிற்க சொல்லிவிட்டு அவளை விட்டு சற்று தள்ளி நிற்க..

“என்ன மாறன் உங்க பொண்டாட்டி கூட ஜோடியா நிக்காம இப்படி அவங்களை தனியா நிக்க வெச்சு ஆரத்தி சுத்துறீங்க.. ஏன் உங்களுக்கும் உங்க பொண்டாட்டியை பிடிக்காதா?” என்று நக்கலாக கேட்டபடி வாசலுக்கு வந்தாள் மாயா.

“அது என்ன உங்களுக்கும்.. எனக்கு உன்னை பிடிக்கும் மாயா ரொம்ப பிடிக்கும். அவனுக்கு தான் அவன் பொண்டாட்டியை கண்டாலே ஆகாதே.. ‘ என்று வேண்டுமென்றே அவர்கள் இருவரையும் சீண்டியபடி மாயாவின் இடையில் கைபோட்டு தன்னோடு சேர்த்து அணைத்த படி நின்று இருந்தான் அதர்வா.

அவனை அப்படி பார்க்கையில் ரதிக்கு உள்ளுக்குள் பற்றிக்கொண்டு வந்தது, அப்படியே இருவரையும் வெளுத்து வாங்கவேண்டும் போல அவளுக்கு தோன்ற அதை அடக்கிக்கொண்டு நின்றவள் “வாங்க மாறன் அவங்க சரியா தானே சொல்ராங்க. என் மேல உங்களுக்கு அக்கறை இல்லேன்னு நினைச்சுக்கப் போறாங்க. இந்த ஒரு வாரமும் தூங்காம நீங்க தானே என்னை பத்திரமா பாத்துக்கிட்டீங்க” என்று அவர்களுக்கு ஈடு கொடுத்துப் பேசினாள்.

“அதான் சொல்ராங்க இல்ல.. போய் உங்க பொண்டாட்டி பக்கத்துல நில்லுங்க மாறன்” என்றாள் மாயா நக்கலாக.

மாறன் தயக்கமாக ரதியை பார்க்க.. அவளோ “வாங்க..” என்றவள் மாறனின் கையை பற்றி அருகே இழுக்க.. அவள் இழுத்த வேகத்தில் அவள் மீதி மோதி நின்றான் மாறன்.

கையில் ஆரத்தி தட்டை வைத்திருந்த பாப்பாத்தியோ இங்கு என்ன நடக்கிறது என்ற ரீதியில் பார்த்துக்கொண்டிருந்தார்.

“என்ன இது இந்த மாயா மாறன் தம்பிகிட்டே பாப்பாவை காட்டி பொண்டாட்டின்னு சொல்லுது, அதை கேட்டுட்டு அதர்வா தம்பியும் சேர்ந்து பேசுதே… என்ன ஆச்சு இவங்களுக்கு எல்லாம். அவங்க பேசுறதை பார்த்து பாப்பா கோபப்படும்னு நினைச்சா அந்த புல்லையும் மாறன் தம்பியை கூப்டு பக்கத்தில நிக்க சொல்லுதே..” என்று யோசித்தவரின் தலையே வெடித்து விழும் அளவிற்கு போய்விட்டது.

அவர் குழப்பமான முகத்தை கண்டுகொண்ட மாறன் “பாப்பா! என்ன யோசிச்சிட்டு இருக்க.. சீக்கிரம் ஆரத்தி எடு..” என்றான்.

அவரும் முன்னே வந்தவர் குழப்பத்தோடு ரதியின் அருகே தோள்கள் உரச நின்று இருந்த மாறனையும் பார்த்தவர் அமைதியாக ஆரத்தியை சுற்றிவிட்டு அதை ஊற்ற வெளியே சென்றுவிட..

அடுத்த நொடி ரதியை விட்டுப் பிரிந்து நின்ற மாறன் அதர்வாவை முறைத்துக்கொண்டே அவள் கையை பற்றி வீட்டிற்குள் அழைத்துச் சென்றான்.

அவர்கள் செல்வதை கை கட்டி வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த மாயாவும், அதர்வாவும் ஒருவரை ஒருவர் பார்த்து திருப்தியாக புன்னகைத்துக்கொண்டனர்.

பின் அவர்களும் உள்ளே செல்ல..

தன் வீட்டு வேலையாளிடம் சொல்லி ரதியின் லக்கேஜுகளை எடுத்துவர அனுப்பிவைத்த மாறன் ரதியை ஹாலில் இருந்த சோபாவில் அமர சொன்னான்.

அவளும் அமைதியாக சோபாவில் அமர.. அவள் அருகே சென்று மாயா அமர்ந்தாள்.

அவளை பார்த்ததுமே ரதிக்கு எரிச்சல் ஆனது. “இவ எதுக்கு என் பக்கத்துல வந்து உக்காருறா. எப்பவும் என் புருஷனை.. இல்ல இல்ல.. எனக்கு உடம்பு சரியில்லாததை அவருக்கு சாதகமா யூஸ் பண்ணி என்னையே இன்னோருத்தனோட பொண்டாட்டின்னு சொன்னவனுக்கு புருஷன்னு மரியாதை வேணுமா ” என்று நினைத்தவள் “அதர்வா பின்னாடி தான் எப்பவும் இந்த கிறுக்கச்சி சுத்துவா., இப்போ சும்மா எதுக்கு இங்க வந்து இருக்கா” என்று யோசித்தவாறு அவளை பார்த்தாள் .

“அப்பறோம் ரதி, உடம்பு எல்லாம் உனக்கு இப்போ ஓகேவா” என்றாள் மாயா.

“ம்ம்.. நல்லா இருக்கேன்” என்றாள் ரதி.

“ஆமா உனக்கு எப்படி அச்சிடேன்ட் ஆச்சுன்னு நினைவு இருக்கா” என்றாள் மாயா.

“தெரியல.. ” என்றாள் ரதி. உண்மையாகவே அவளுக்கு எப்படி அந்த விபத்து நடந்தது என்று தெரியவில்லை.

“இல்ல.. நீயே இப்போதான் காரை ஓட்ட காத்துட்டு இருக்க.. அப்படி இருக்க அப்போ ஏன் காரை எடுத்துட்டு வெளியே போன.. எதுக்கு போன.. ” என்று விசாரித்தாள் .

அவள் அப்படிக் கேட்கவும் புருவம் சுருக்கிய மாறன் ரதியின் எதிரே இருந்த சோபாவில் அமர்ந்துகொண்டு. “ஆமா ரதி நானும் தான் இதை கேக்க நினைச்சேன். நீ ஏன் காரை எடுத்துட்டு போன.. அதுவும் அந்த ராத்திரியில” என்றான் மாறன் சந்தேகமாக.

ரதியின் அந்த இரவை பற்றி யோசித்தவள் அப்போது தான் அந்த அர்த்த ராத்திரியில் தான் ஏன் கிளம்பி அதுவும் காரை எடுத்துக்கொண்டு தனியாக கிளம்பி இருந்தேன் என்று யோசித்தாள். அவள் முகம் குழப்பத்தில் இருப்பதை பார்த்த மாயா “சரி விடு ரதி, உனக்கு தான் பழசெல்லாம் மறந்திருச்சே.. அதை ரொம்ப யோசிச்சு கஷ்டப்படுத்திக்காத உன்ன.. ” என்றாள்.

“ம்ம்..” என்றாள் ரதி.

அப்போது அவள் லக்கேஜ்களை தூக்கிக்கொண்டு வீட்டிற்குள் நுழைந்த வேலையாள் நேராக அதை அதர்வாவின் அறையில் வைக்கப் போனான்.

“சாமி , ரதியோட ட்ரெஸ்ஸை எல்லாம் எதுக்கு எங்க ரூமுக்கு எடுத்துட்டு போறீங்க. அவ புருஷன் ரூம் அங்க இருக்கு. அங்க கொண்டு போய் வையுங்க” என்றாள் .

அதை கேட்டதுமே ரதிக்கு இதயம் படபடத்தது. தான் இனி மாறனின் அறையில் தான் தங்க வேண்டுமா, இதை ஏன் நான் யோசிக்காமல் போனேன் என்று அவள் உள்ளம் அடித்துக்கொண்டது.

மாறன் அறையில் வைக்க வேண்டாம் என்று சொல்ல முடியாதே… அப்படி சொன்னால் உன் புருஷன் கூட ஒண்ணா இருக்குறதுல என்ன பிரச்சனை உனக்குன்னு கேட்டாலும் கேட்பா .வேற வழியே இல்ல.. ராதா வர வரைக்கும் நான் மாறன் ரூம்ல தான் தங்கி ஆகணும். ஆனா மாறன் தான் பாவம்”என்று நினைத்தவள் அமைதியாக இருந்துவிட..

அவளையே பார்த்துக்கொண்டிருந்த மாறனோ “சாமி, நீங்க என் ரூம்ல திங்ஸ் வெச்சிருங்க” என்றான்.

சற்று நேரத்தில் பாப்பாத்தி அங்கே வந்தவர் “மாறன் தம்பி பாப்பாவுக்கு சாப்பிட என்ன கொடுத்தானும்னு சொன்னிங்கன்னா நான் செய்திருவேன்” என்றார்.

தன் கை கடிகாரத்தை பார்த்தவன் “ரதி உனக்கு காரம் இல்லாம, சீக்கிரமா ஜீரணம் ஆகுற போல சாப்பாடு தான் கொடுக்க சொல்லிருக்கார் கொஞ்ச நாளைக்கு பத்திய சாப்பாடே சாப்பிடு நீ.. ” என்றவன் அவளுக்கு என்ன மாதிரி உணவு கொடுக்க வேண்டும் என்று டாக்டர் பரிந்துரையின் பேரில் டயடீசியானிடம் கேட்டு வாங்கி வந்த விபரங்களை சொன்னவன் “சரியா 1 மணிக்கு ரதிக்கு சாப்பாடு ரூமுக்கு கொண்டு வந்திரு பாப்பா ” என்றான் .

“சரிங்க தம்பி ” என்று அவர் உள்ளே சென்றுவிட..

சாமியும் அங்கு வந்தவர் “தம்பி பாப்பா ட்ரெஸ்ஸை எல்லாம் உள்ள வெச்சுட்டேன். பெட் ஸ்பிரேட் எல்லாம் புதுசு மாத்திருக்கேன்” என்றார்.

“ம்ம்..” என்றவன் “ரதி வா உள்ள போலாம் ” என்று எழுந்தவன் அவள் முன் கையை நீட்ட..

அதை அதர்வாவும் பார்த்துக்கொண்டு தான் இருந்தான்.

“புருசனாக நடிக்க சொன்னா இவன் உண்மையான புருஷன் மாதிரி அவளை இவ்ளோ அக்கறையா பாத்துகிறான். அவளை விழுந்து விழுந்து கவனிக்குறதை பார்த்தா நான் சொன்னது போல அவளை அவனே கல்யாணம் செய்துக்கலாம்னு நினைக்குறானோ.. கூடாது கூடவே கூடாது..” என்று அதர்வாவின் மனம் கொதித்தது.

“அந்த பட்டிக்காட்டச்சி இந்த வீட்லையே இருக்கக் கூடாது. இவளை பார்க்க பார்க்க எனக்கு ஆத்திரமா தான் வருது ” என்று நினைத்தவன் “இந்த பட்டிகாட்டாட்சிக்கு பழசு எல்லாம் நினைவு வரதுக்குள்ள அவகிட்டே இருந்து நான் டிவேர்ஸ் வாங்கிடணும். இல்லேன்னா பின்னாடி எனக்கு தான் பெரிய பிரச்சனை ஆகிடும்” என்று  அதற்கான வேளைகளில் இறங்க வேண்டும் என்று எண்ணிக்கொண்டான்.

You may also like

Leave a Comment

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.