Home Uncategorizedஎன் புருஷன்.. அவரை பார்க்கத்தான் போறேன்,மூர்க்கன் 28

என் புருஷன்.. அவரை பார்க்கத்தான் போறேன்,மூர்க்கன் 28

by Sinamika Writes
12 views

மூர்க்கன் 28

 “என்ன பாக்குற போ.. போய் அந்த ரூம் கதவை திற..” என்றான் ராவண் அழுத்தமாக.

அவன் அழைத்து வந்திருந்த இடம் ஒரு பாழடைந்த கட்டிடம் வெளியே பார்ப்பதற்கு அப்படித்தான் இருந்தது.  ஆனால் அந்த கட்டடத்திற்கு உள்ளே சென்று பார்க்கில் அது ஒரு முறையாக பராமரிக்கப்பட்ட இடம் போலவே தோன்றியது அவளுக்கு.

“ ஏங்க இது எந்த இடம், எதுக்காக என்ன இங்க கூட்டிட்டு வந்தீங்க. முக்கியமான இடத்துக்கு போகணும்னு சொன்னீங்களே அது இதுதானா? “ என்றாள் இளங்கிளி. 

“ம்ம்ம்… ஆமாம்” என்று தலையாட்டியவன் “இந்த இடத்தை  பொறுமையா சுத்தி பாரு. வெளியே நம்ம டிரைவர் வெயிட் பண்ணுவான். நீ எப்ப நினைக்கிறியோ அப்போ கிளம்பி நம்ம வீட்டுக்கு போ. எனக்கு இப்போ ஆபீஸ்ல ஒர்க் இருக்கு நான் கிளம்புறேன்” என்றான்.

“என்ன ஆபீஸ் கிளம்புறீங்களா! ஏங்க  இது யாரு இடம் , என்னை எதுக்கு இது கூட்டிட்டு வந்தீங்க. அப்புறம் நான் எதுக்கு இங்க இருக்கணும் அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். நானும் உங்க கூடவே இப்ப கிளம்புறேன். எனக்கு இந்த இடத்த பார்த்தாலே ஒரு மாதிரி இருக்கு, இங்க இருக்கிறவங்களை எல்லாம் பார்த்தா அடியாளுங்க மாதிரி தோணுது நானும் கிளம்பறேன்” என்றாள்.

“ஹேய் இரு எதுக்கு இப்படி அவசரம் உனக்கு. இவங்க எல்லாரும் நம்மகிட்டே வேலை பாக்குறவங்க தான். அதனால உனக்கு எந்த பிரச்சனையும் இங்க வராது சரியா” என்றவன் “நீ முதல்ல இந்த வீட்டை முக்கியமா அந்த ரூமை போய் பாரு அப்பறோம் எல்லாமே உனக்கு புரியும் ” என்றவன் அங்கிருந்து கிளம்பி இருக்க..

தன்னை இங்கே தனியாக விட்டு செல்பவனை தடுக்க முடியாமல் அந்த மாளிகையின் முகப்பில் நின்று இருந்தாள் இளங்கிளி.

அதுவரை அவளிடம் வராமல் விலகி நின்று இருந்த அவர்களுடைய வேலை ஆட்கள் ராவண் சென்றதும் அவரவர் வேலையை பார்க்க சென்றுவிட்டனர்.

மெல்ல திரும்பி அவன் சொன்ன அறையை பார்த்தாள். “அந்த ரூம்ல அப்படி என்ன தான் இருக்கு ..” என்று யோசித்தவள் மெல்ல அந்த அறை நோக்கி நடக்கத்  துவங்கினாள்.

அந்த அறையின் முன்பு வந்து நின்றவள் அதை திறக்கலாமா? வேண்டாமா? என்று யோசித்துக்கொண்டு இருக்க..

“அப்படி என்ன இந்த ரூம்ல இருக்க போகுது , பேயா? இல்ல பூதமா இருக்க போகுது ” என்று நினைத்தவள் மெல்ல அந்த அறையை திறந்து கொண்டு உள்ளே சென்றாள்.

அந்த அறையில் ஒரு சிறிய லாம்ப் மட்டுமே ஒளிர்ந்து கொண்டு இருந்தது. அந்த மங்கலான ஒளியில் அவளால் அங்கே அந்த அறையில் என்ன இருக்கிறது என்று பார்க்க முடியவில்லை. தன் கையில் இருந்த மொபைல் டார்ச்சை அடித்து தேடிப்பிடித்து அறை விளக்கை ஒளிர விட்டிருந்தாள்.

சட்டென்று வெளிச்சம் வரவும் கண்கள் கூசியது. ஒரு நிமிடம் சட்டென்று மூடியவள் கண்களை குறுக்கி திறந்து அந்த அறையை பார்த்தாள்.

அந்த அறை ஒரு பெட் ரூம் என்று பார்த்ததுமே அவளுக்கு புரிந்து போனது.  ஒரு பெரிய டிவியும் , அதை சுற்றி நிறைய புத்தகங்களும் இருந்தது. அதை பார்த்துக்கொண்டிருந்தவள் அந்த அறையில் இருந்த மற்றொரு அறைக் கதவு  திறக்கும் சத்தம் கேட்டு திரும்பியவள் அங்கே பாத்ரூமில் இருந்து வெளியே வந்த நபரை பார்த்து அப்படியே விக்கித்துப் போய் இருந்தாள்.

அவள் கண்களை அவளால் நம்பவே முடியவில்லை. அவள் எதிரே நின்று இருந்தவருக்கு இளங்கிளி போல பேரதிர்ச்சி தான் .

“கிளி! ” என்ற அவரின் குரலை கேட்ட அடுத்த நொடி .

“அப்பா! ” என்று கண்கள் கலங்க அவரை நோக்கி நடந்தாள் இளங்கிளி .

தன் மகளிடம் இருந்த மாற்றத்தையும், அவளையும் கண்டு தன் கண்ணையே நம்பமுடியாமல் அதிர்ந்து போய் நின்று இருந்தார் மணிகண்டன்.

“அப்பா! அப்பா! நீங்க எப்படிப்பா இங்க?” என்று அவரை நெருங்கி அவர் கையை பற்றிக்கொண்டாள்.

“கிளி! நான்.. நான்.. ” என்று குரல் தழுதழுக்க பேசியவர் “மாப்பிள்ளை தான்ம்மா என்னை இங்க தங்க வெச்சிருக்கார் ” என்றார்.

“அவரா!?” என்று ஆச்சர்யமும், கேள்வியாக அவரை பார்த்தவள் “அவரு உங்களை .. நீங்க அவருக்கு கொடுக்க வேண்டிய பணத்துக்கு கடத்தி வெச்சிருந்தாரே ப்பா.. ” என்றாள் புரியாமல்.

“நானும் அப்படி தான்ம்மா நினைச்சிருந்தேன் ” என்றவர் அவள் கையை பற்றிக்கொண்டு “மாப்பிள்ளை உன்னை எவ்ளோ நல்லா பாத்துக்கறாருனு உன்னை பார்க்கும்போதே தெரியுதும்மா. எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு உன்னை இப்படி பாக்குறதில.. ஆளையே மொத்தமா மாத்திடறேம்மா அவரு” என்றார் மகளை பார்த்தவாறு .

“ஆமா அவருக்கு ஒருத்தரை புடிச்சிருச்சுன்னா அவங்களுக்காக எவ்ளோ வேணா செய்வாருப்பா. நான் விளையாட்டா அவர்கிட்டே இப்படி இருக்கணும்னு கேட்டதுக்காக என்னை எல்லா விதத்துலையும் தேர்ந்தவளா மாத்தி இருக்கார் .இந்த உலகம், அதோட பழக்க வழக்கம் எதுவுமே தெரியாம இருந்த என்னை இன்னிக்கு நிரைய மாத்திருக்கார் உங்க மாப்பிள்ளை ” என்று ராவண் தனக்காக செய்யும் ஒவ்வொரு செயலையும் மனதில் நினைத்து பெருமைப்பட்டவளாக நினைத்தபடி சொன்னாள்.

“அதுவும் உண்மை தான் . என்னையே அவர் இந்த நிலைக்கு மாத்தி இருக்கார், அவருக்கு ரொம்ப புடிச்ச உன்னை அப்போ எப்படி பத்துப்பாருனு புரியுதும்மா எனக்கு ” என்றவர் “அம்மா எப்படி இருக்கா? அவளை பார்த்து எவ்ளோ மாசம் ஆச்சும்மா”என்றார்.

“அம்மா நல்லா இருக்காங்க , உங்களை நினைச்சு தான் ரொம்ப கவலைப் பட்டாங்க . உங்களுக்கு என்ன ஆச்சு ? இவர் ஏன் உங்களை பிடிச்சு வெச்சிருந்தாருன்னு நானும், அம்மாவும் நிரைய முறை யோசிச்சிருக்கோம் ” என்றவள் “என்னப்பா ஆச்சு? அவர்கிட்டே எப்படி எவ்ளோ காசு வாங்குனீங்க.. ” என்றாள் சற்று சங்கடத்தோடு.

தன் தகப்பனை நல்ல முடியில் ராவண் நடத்தி இருக்கிறான் என்று மணிகண்டனை பார்த்ததுமே தெரிந்து கொண்ட இளங்கிளி. தன் தந்தையின் செயலால் தன் கணவனின் மனநிலை எந்த மாதிரி இருக்குமோ என்று ஒரு பக்கம் கவலையும் இருந்தது அவளுக்கு.

அப்போது அவர்கள் அறைக்கதவை திறந்து கொண்டு வந்த ஒரு வேலையாள் “ஐயா உங்களை பார்க்க ஒருத்தவங்க வந்திருக்காங்க” என்றார் .

“என்னையா?” என்று கேள்வியாக பார்த்தவர் “சரி நீ போ.. “என்றவர் “இரு கிளி, யாருன்னு பார்த்துட்டு வரேன் ”  வெளியே வர.. அவர் பின்னால் இளங்கிளியும் சென்றாள்.

அங்கே இவர்கள் இருவரையும் பார்த்த அதிர்ச்சியில் விசாலாட்சி நின்றிருக்க..

 மணிகண்டனும்,இளங்கிளியும் அதே அதிர்ச்சியில் தான் இருந்தனர்.

 மணிகண்டனை பார்த்ததில் விசாலாட்சிக்கு அவ்வளவு சந்தோஷம் அவரைப் பார்த்து கிட்டத்தட்ட நான்கு, ஐந்து மாதங்கள் ஆகிவிட்டதே.. 

ராவண் அவரை அடைத்து வைத்திருக்கிறான் என்று அவருக்கும் தெரியும் தானே. தன் கணவனை கொடுமைப்படுத்தி கட்டி வைத்திருப்பான் என்று நினைத்திருந்தவர்க்கு இன்று மணிகண்டன் இருந்த கோபம் கண்டு ஆச்சரியமாக இருந்தது.

 எப்போதும் போதையிலும் பொலிவிழந்த முகமாக.. முகத்தில் ஒருவித சோகம், ஏமாற்றம் என இருந்தவர் இப்போது பார்த்ததற்கு மிகவும் வித்தியாசமாக இருந்தார்.

முகத்தில் ஒரு அமைதி தெளிவு இருந்தது அவரிடம். கசங்கிய ஆடையும் தளர்ந்த நடையுமாக இருந்தவர். இன்று சுத்தமான ஆடை உடுத்தி, தீர்க்கமான பார்வையோடு ஒரு முழு மனிதனைப் போல அவருக்கு காட்சியளித்தார் மணிகண்டன்  

வேகமாக மணிகண்டனின் முன் வந்த விசாலாட்சி “என்னங்க,எப்படி இருக்கீங்க? இன்னைக்கு  நான் உங்களை பார்ப்பேன்னு நினைக்கவே இல்ல. ரொம்ப சந்தோஷமா இருக்கு” என்று கண்ணீர் வழிய அவர் கையை பற்றி கொண்டு பேசினார்.

 மணிகண்டனை எப்படி ஆச்சரியமாக விசாலாட்சி பார்த்தாரோ.அதேபோல தான்  விசாலாட்சியை மணிகண்டன் பார்த்தார்.

தன் மகளும், மனைவியும் மிகவும் நிம்மதியாக சந்தோசமாக கவலை இல்லாமல் கஷ்டம் இல்லாமல் வாழ்கிறார்கள் என்று அவர்களின் நிலை கண்டு உணர்ந்தவர். ராவண் தனக்கும், தன் குடும்பத்திற்கும் செய்திருந்த உதவியை  நினைத்து சந்தோஷப்பட்டார்.

 என் தன் மனைவியை தோளோடு அனைத்து   அழுது கொண்டிருந்தது விசாலாட்சியை சமாதானம் செய்த முயன்றார். அவர் முதுகை  தட்டிக் கொடுத்து.. “அழாத விசாலம் உங்களையெல்லாம் சூழ்நிலையில நான் விட்டுட்டு போயிட்டேன். மாப்பிள்ளை மட்டும் இல்லைனா இந்த நேரம் நம்ம மூணு பேருமே இப்படி ஒரு நல்ல நிலைமையில் மறுபடியும் பார்த்திருப்போமான்னு தெரியல.. “ என்றார்.

 என்னப்பா சொல்றீங்க எனக்கு புரியல நீங்க அவருக்கு கொடுக்க வேண்டிய பணத்துக்குத் தானே  அவர் உங்களை பிடிச்சு வச்சிருந்தார் என்றாள் குழப்பமாக.

“இல்லம்மா மாப்ள என்ன கடத்தி வரவே இல்லை. என்ன கடத்தினவங்ககிட்ட இருந்து காப்பாற்றி அவர் என்ன கொண்டு வந்து இங்க பத்திரமா வச்சிருக்கார்.” என்றார்.

 விசாலாட்சியும்,  இளங்கிளியும்  ஒருவரை ஒருவர் மாறி மாறி பார்த்துக் கொண்டனர் அவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை.

“அப்பா என்ன சொல்றீங்க?.. கடத்தினவங்ககிட்ட இருந்து அவர் உங்களை காப்பாத்தினாரா?” என்றாள் குழப்பமாக.

“ ஆமா கிளி மாப்பிள்ளைகிட்ட மட்டும் இல்ல நிறைய பேர்கிட்ட நான் பணம் வாங்கி இருந்தேன். அதுல ஒருத்தன் என் கூட பிசினஸ் பார்ட்னரா இருந்தவன். அவனாலதான் இவ்வளவு பெரிய பிரச்சனையும் நமக்கு வந்துச்சு” என்றவர் “வாங்க நான் உக்காந்துட்டே பேசுவோம்” என்று இருவரையும் தன் அறைக்குள் அழைத்து சென்றார்.

 அவர்கள் இருவரையும் கட்டிலில் அமரச் சொல்லிவிட்டு எதிரே இருந்த நாற்காலியை இழுத்துப் போட்டு அவர்கள் அருகில் அமர்ந்தவர். விட்டதில் இருந்து பேச தொடங்கினார்.

“ஏதாவது ஒரு வழியில் சம்பாரிச்சு நம்ம கஷ்டத்தை எல்லாம் போகிற மாட்டேனா.. உன்னையும் உன் அம்மாவையும் நல்லபடியாக வாழவைக்க முடியாதான்னு தவிச்சிட்டு இருந்தேன். அப்போதான் அந்த பாண்டியன் எனக்கு அறிமுகமானான். முதல்ல அவன்கிட்ட கடனா பணம் வாங்கிட்டு இருந்தேன். கொஞ்ச நாள்ல அவன் கூட  பழக்கம் ஆச்சு . அவன் தான் நம்ம ரெண்டு பேரும் ஏன் பிசினஸ் ஆரம்பிக்கக் கூடாதுன்னு எனக்கு ஒரு ஐடியா கொடுத்தான். அவன் சொன்னது அப்போ நல்லதா தோணுதும் நானும் யோசிக்காமல் உன் அம்மாகிட்ட கூட கலந்து பேசாமல் அவனுக்கு பணம் தரேன்னு வாக்கு கொடுத்துட்டேன்” என்றவர் விசாலாட்சியின் கையை பற்றி கொண்டு “என்ன மன்னிச்சிடு விசாலம்.  பொண்டாட்டி பேச்சை கேட்காம  தோன்றித்தனமா, உன் மனச புரிஞ்சுக்காம, உன்ன மதிக்காம நான் நடந்துகிட்டதுக்கு அந்த கடவுள் எனக்கு ஒரு பெரிய பாடம் புகட்டிட்டார்” என்றவர். கண்கள் மூடி  தன்னை நிலை படுத்த முயன்றார்.

அவர் கையை பற்றிக்கொண்ட இளங்கிளி அமைதியாக அவரையே பார்த்தாள்.

 தனிநிலைப்படுத்திக் கொண்டு கண்களைத் திறந்த மணிகண்டன் “பிசினஸ் பண்றேன்னு பணத்தை வாங்கி என்னை ஏமாத்திட்டான். அந்த பாண்டியன் ஒன்னு இல்ல.. ரெண்டு இல்ல.. மூணு கோடிக்கு மேல  பணத்தை கொடுத்து நான் ஏமாந்துட்டேன்” என்றார்.

அவர் சொன்ன தொகையை கேட்டு இருவருமே அதிர்ந்து போயினர். அவர்கள் சக்திக்கு அவ்வளவு பணத்தை கடனாக மணிகண்டன் வாங்கி வைத்திருக்கிறார் என்று நினைக்கையிலேயே தலை சுற்றி விட்டது.

என்னங்க சொல்றீங்க இவ்வளவு பணம் கடன் வாங்கி வச்சிருக்கீங்களா? எத்தனை பேர்கிட்ட கடன் வாங்கி வச்சிருக்கீங்க. மாப்பிள்ளைகிட்ட வாங்கின பணத்துக்கு இன்னும் திருப்பி கொடுக்க முடியாம கடனாளியா இருக்கோம். அதுக்காக தான் அவர் நம்ம பொண்ண கல்யாணம் பண்ணிக்கிட்டாரு” என்றார்  விசாலாட்சி.

“இல்ல விசாலாட்சி ஆரம்பத்துல நானும் அப்படித்தான் நினைச்சுட்டு இருந்தேன். நான் வெளியே வாங்கின மொத்த கடனையும் மாப்பிள தான் அடச்சாரு அவர்கிட்ட வாங்குன பணத்தை பத்தி இப்ப வர அவர் ஒரு வார்த்தை கூட என்கிட்ட பேசினதில்லை. தினமும் இங்கு வந்து என்ன பார்த்துட்டு போவாரு எனக்கு ஆறுதல் சொல்வார், எனக்கு வாழ நம்பிக்கை கொடுத்தார்” என்றவர் இலங்கிளியைப் பார்த்து. “நம்ம பொண்ண எப்போ கல்யாணம் பண்ணினாரோ அதுக்கப்புறம் ஒரு வார்த்தை கூட இப்போ வரைக்கும் பேசுனது இல்ல. அவரு நம்ம பொண்ண கல்யாணம் பண்ணதுக்கு முக்கிய காரணமே அந்த பாண்டியன் தான்” என்றார்.

“ அவன்னாலையா?  என்னங்க? அவன் என்ன அப்படி பண்ணினான்” என்றார்.

 “நான் அவன்கிட்ட காசு கொடுத்து ஏமாந்தது பத்தலைன்னு நம்ம நம்ம பொண்ண கடத்திட்டு போய் வேற ஒருத்தனுக்கு பெரிய தொகைக்கு வித்துடன் திட்டம் போட்டு வச்சிருந்திருக்கான்.  எனக்கு அது தெரியல. எப்போ நான் மாப்பிள்ளைகிட்ட கடனா பணம் வாங்கினேனோ அப்பவே அவருக்கு நம்ம குடும்பத்தை பற்றி எல்லா விஷயமும் தெரியும். பாண்டியன்கிட்ட இருந்து நம்ம பொண்ணையும், என்னையும் காப்பாத்த தான் இவ்வளவு நாடகமும் அவர் பண்ணியிருக்கிறார்” என்றார்.

“அப்போ நெஜமாவே மாப்பிள்ளை உங்களை அடித்து வைக்கலையா? “ என்றார் விசாலாட்சி.

இல்லை என்ற ரீதியில் அவர் தலையாட்ட.. 

“நம்ம குடும்ப மானத்தையும், நம்ம பொண்ணு மானத்தையும் அவர் காப்பாற்றி இருக்கார் விசாலாட்சி. நாமதான் அவரை தப்பா நினைச்சுட்டு இருந்திருக்கோம் நான் யார்கிட்ட எல்லாம் கடன் வாங்கினேனோ அவர்களுக்கு எல்லாம் பைசா பாக்கி இல்லாம திருப்பு பணத்தை கொடுத்து அடச்சிருக்கார். இது அத்தனைக்கும் என்ன காரணம்னு நீ நினைக்கிற நம்ம பொண்ணு மேல அவர் வச்சிருக்கிற அன்பு தான்” என்று இளங்கிளியை பார்த்தார்.

திருமணமான புதிதில் தன்னிடம் ராவண் நடந்து கொண்டதை எல்லாம் இளங்கிளியின்  மனக்கண்ணில் ஓடியது.

“அப்போ அவர் என்கிட்ட நடிச்சிருக்காரு, வேணும்னு அவரை கெட்டவனா என்கிட்ட காட்டி இருக்கார். நான் தான் முதல்ல அவரை தப்பா நினைச்சு இருக்கேன். நடந்தது எதுவுமே தெரியாம நான் இருந்திருக்கேன்” என்று யோசித்தவள். 

“நீங்க ரெண்டு பேரும் பேசிக்கிட்டு இருங்க.நான் திரும்ப வந்துடுறேன்”  என்று எழுந்தாள்.

“ கிளி என்னம்மா, என்ன ஆச்சு? எங்க போற? “என்றார் மணிகண்டன்.

“எனக்காக இத்தனையும் நம்ம குடும்பத்துக்கு பண்ணிட்டு அத எங்கேயும் எப்பவும் என்கிட்ட காட்டிக்காம நடந்துக்கிட்டாரே உங்க மாப்பிள்ளை.. என் புருஷன்.. அவரை பார்க்கத்தான் போறேன்” என்று கிளம்பி வெளியே வந்தாள்.

ராவண் சொன்னது போல வாசலில் அவர்கள் டிரைவர் காத்திருக்க.. 

அவரிடம் நேராக வந்தவள் அண்ணா “அவர் இப்போ ஆபீஸ்ல தானே இருப்பார்” என்றாள்.

“ஆமாம் மேடம்” என்றார்.

காரில் ஏறியவள் “அவர் ஆபீஸ்க்கு போலாம்” என்றாள்.

தன் முதலாளி கட்டளையிட்டதும் வேகமாக வந்து காரை ட்ராவல்ஸ் இருக்கு கிளம்பி இருந்தார்.

“ அண்ணா, கொஞ்சம் சீக்கிரமா போங்க.. “ என்று ராவணை உடனே பார்க்க வேண்டும் என்ற  தவிப்போடும், காதலோடும் காரில் நிலைக்கொள்ள முடியாமல் அமர்ந்திருந்தாள் இளங்கிளி.

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured