தப்பு 29
“இந்த பொண்ணு எங்க போனா என்ன ஆனானே தெரியல .. வளைக்கப்புக்கு அது செய்யணும் , இது செய்யணும்னு நினைச்சிருந்தேன் . இப்படி ஆகிடுச்சே.. ” என்று புலம்பியபடி ஹாலில் அமர்ந்து இருந்தார் பர்வதம்.
“எனக்கும் அது தான்மா சங்கடமா இருக்கு. வாயும்,வயிறுமா இருக்கா நம்ம பூவிழி. இந்த நேரத்துல எங்க போய் கஷ்டப்டுறாளோ தெரியல. ஏன் இப்படி சொல்லமக் கொள்ளாம கிளம்பி போனானும் புரியல ” என்று கையில் காபியுடன் வந்த கஸ்தூரி பர்வதம் புலம்புவதைக் கேட்டு அவளும் தன் பங்குக்கு புலம்பினாள்.
“என்ன டி பண்றது. யுகேனைக் கேட்டா இதுக்கு எல்லாம் காரணம் என் அண்ணன்னு சொல்லி அவர் மேல பழியைப் போடுறான். அவரு எனக்கும் இதுக்கும் எந்த சம்மந்தமும் இல்லேங்குற மாதிரி ரூமுக்குள்ளையே இருக்கார் . யார் சொல்றதை கேக்குறது. யாரை நம்புறதுனு எதுவுமே புரியல ” என்றார்.
“யுகேன் தம்பி எப்படியும் பூவிழியை தேடி கண்டு பிடிச்சிரும் ம்மா.. நீங்க கவலைப் படாதீங்க” என்ற கஸ்தூரி.
“சரிம்மா நீங்க காபி குடிங்க, நான் சமைக்குறேன் ” என்று கிச்சனுக்குள் போக எத்தனித்தவள் வாசலில் நிழல் ஆடுவதை உணர்ந்தவள் திரும்பி வாசல் பக்கம் பார்க்க,.. அப்படியே உறைந்து போனாள்.
“என்ன டி சமைக்கப் போறேன்னு சொன்ன..” என்ற பர்வதம் அவள் நின்ற திசையைத் திரும்பிப் பார்த்தவர் கையில் இருந்த காபி கப்பை அப்படியே கீழே போட்டுவிட்டார்.
“ஏய்! ஆரா! என்ன டி இது! என்ன பண்ணி வெச்சிருக்க?” என்று வாசலில் மாலையும் , கழுத்துமாக நின்றிருந்த ஆராவையும், அவள் அருகே இருந்த யுவனையும் பார்த்து அதிர்ந்து போனார்.
அவர் போட்ட சத்தத்தைக் கேட்டு அறைக்குள் இருந்தவர்கள் வெளியே வர.. வீட்டு வேலை ஆட்களும் வெளியே வந்தவர்கள் ஆரா திருமண கோலத்தில் இருப்பதைப் பார்த்து வாயில் கையை வைத்துக்கொண்டனர்.
ஹாலுக்கு வந்த கார்த்திகேயன் உறைந்து போய் இருவரையும் பார்க்க..
“ஏங்க இவளைப் பாருங்க என்ன காரியம் பண்ணிட்டு வந்திருக்கான்னு பாருங்க.. ‘ என்று அவர் கையைப் பற்றிக்கொண்டு கதறினார்.
கார்திகேயனோ இன்னமும் இது உண்மை தானா என்ற ரீதியில் இருவரையும் பார்த்துக்கொண்டிருக்க..
ஜோக்கிங் சென்றுவிட்டு அப்போது தான் வீட்டிற்குள் நுழைந்த ராஜேந்திரனோ வாசலில் நின்று இருந்த இருவரின் முதுகையும் வெறுத்தவர் “யார் இது இந்த நேரத்துல அதுவும் கல்யாணக் கோலத்துல வந்திருக்கிறது “என்று கழுத்தில் இருந்த மாலையை பார்த்து யூகித்தபடி படியேறி வந்தவர் முன்னாள் வந்து யுவனைப் பார்த்தவருக்கு பேரதிர்ச்சி,
அவனிடம் பேசவும் முடியாமல் , தவிர்க்கவும் முடியாமல் திணறி அவர் நிற்க..
“அண்ணா! இங்க பாருங்க.. இவ பண்ணிட்டு வந்திருக்க வேலையை ” என்று வாசலுக்கு ஓடி வந்து ராஜேந்திரனைக் கட்டிக்கொண்டு அழுதார்.
பர்வதம் அழுவதைப் பார்த்த ஆராவுக்கு சங்கடமாக இருந்தது. அவரையும், தன் குடும்பத்திலும் கஷ்டப்படுத்துவிட்டோமே என்ற குற்ற உணர்வு அவளை வாட்டிக் கொண்டிருக்க..
அவள் முகத்தை வைத்தே அவள் எண்ணத்தை புரிந்து கொண்ட யுவனோ ஆறுதலாக அவள் கையைப் பற்றி தன் உள்ளங்கையோடு சேர்த்துக் கொண்டவன் கவலைப்படாத எல்லாம் சரி யாகிடும் ” என்றான்.
“ஏய் யாரு நீ.. என் பொண்ணை ஏமாத்தி அவளைக் கல்யாணம் பண்ணிட்டு என் வீட்டுக்கே வந்திருப்ப.. “என்று கோபத்தோடு இருவரின் முன்பு வந்த பர்வதம் ஆராவின் கையோடு கோர்த்திருந்த யுவனின் கையைத் தட்டிவிட்டவர் .
“ஏய் இங்க வாடி..” என்று அவள் கை பற்றி தன் பக்கம் இழுத்தார்.
“ம்ஹும்.. நான் வர மாட்டேன் ” என்று அவர் கையை உதறிவிட்டு வேகமாக யுவனின் பின்னால் போய் நின்று கொண்டாள்.
“ஏய் எங்க டி போற.. இங்க வா.. ” என்று ஆராவை தன் பக்கம் இழுத்தவர் அவளை அடிக்க ஆரம்பித்தார்.
“ஐயோ! அத்தை அவளை அடிக்காதிங்க , என் ஆரா கர்ப்பமா இருக்கா. அவளுக்கு வலிக்கும்” என்று ஆராவைப் பற்றி இழுத்து தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டான்.
அவள் கர்ப்பமாக இருக்கிறாள் என்று கேட்டதுமே இதயமே நின்றுவிட்டது பர்வதத்திற்கு நெஞ்சைப் பிடித்துக்கொண்டு அவர் கீழே சரியப் போக..
“பர்வதம்.. “என்று ஓடி வந்து அவரைத் தாங்கிப் பிடித்துக்கொண்டனர் கார்த்திகேயனும், ராஜேந்திரனும்.
“அத்தை! என்ன ஆச்சு.. ” என்று யுவனும் அவரிடம் ஓடி வர..
நெஞ்சைப் பிடித்துக்கொண்டு அவரைப் பார்த்த பர்வதம் “யாரு நீ? எதுக்காக என் பொண்ணு வாழ்க்கையைக் கெடுத்த? நாங்க உனக்கு என்ன பண்ணினோம்..” என்று அழுத விழிகளோடு அவன் கையைப் பற்றிக்கொண்டு கேட்டார் பர்வதம்.
“நான் பண்ணினது தப்பு தான் அத்தை , ஆனா என்னை இப்படி பண்ண சொல்லி தூண்டினத்துக்குக் காரணமே உங்க அண்ணா தான் ” என்று நேரடியாக ராஜேந்திரன் மீது குற்றம் சுமத்தினான் யுவன்.
அதுவரை இங்கே என்ன நடக்கிறது என்று புரியாமல் அதிர்ச்சியில் இருந்த ராஜேந்திரன் கவனம் யுவன் பக்கம் சென்றது.
அவனைப் பார்வையாலேயே அதட்டி பேசவேண்டாம் என்று செய்கை காட்ட..
அவனோ அதை சட்டை செய்யாமல் பர்வதத்தை தூக்கிக் கொண்டு வந்து சோபாவில் அமர்த்தினான்.
வேலையாட்கள் எல்லாம் அங்கு நடப்பதை பார்த்துக்கொண்டிருக்க..
“அம்மா, என்னை மன்னிச்சிரு. எனக்கு யுவனை ரொம்ப பிடிச்சிருக்கு.,உங்ககிட்டே சொல்லி உங்க சம்மதத்தோட தான் கல்யாணம் செய்யணும்னு இருந்தேன். ஆனா அதுக்குள்ள.. “என்று அவள் பதில் சொல்ல தடுமாறியவள் தன் நிலையை நினைத்து வெட்கி தலை குனிந்து கொண்டாள்.
பர்வதமோ எழுந்து அமர்ந்தவர் ராஜேந்திரனின் கையைப் பற்றிக்கொண்டு “அண்ணா இவங்க சொல்றது எல்லாம் உண்மையா? என் பொண்ணு வாழ்க்கை இந்த நிலைக்கு வர நீங்களும் காரணமா?”என்றார் .
ராஜேந்திரனுக்கு பேச முடியவில்லை. என்ன சொல்வது, எதை சொல்வது என்று குழப்பம் அவருக்கு. உண்மையை சொன்னால் தன்னைப் பற்றி இத்தனை நாள் வளர்ந்து வைத்து இருந்த பிம்பம் முற்றிலும் மாறிவிடும் என்ற யோசனை ஒரு பக்கம். தான் சொல்லா விட்டாலும் யுவஜிஷ் நிச்சயம் உண்மையை அனைவரிடமும் சொல்லிவிடுவான் என்ற பயம் ஒரு பக்கம்.
இதை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் அவர் தவித்துக்கொண்டிருக்க..
இங்கே நடந்த இத்தனை களேபரங்களுக்கும் காரணகர்த்தாவான யுகேனோ எதுவும் தெரியாதவன் போல குளித்து முடித்து ட்ராக் பாண்ட் , ஸ்லீவ்லெஸ் டி ஷர்ட் ஒன்றை அணிந்து கொண்டு தலையை துவட்டிக்கொண்டே வந்தான்.
அவனைப் பார்த்ததும் வேகமாக கார்த்திகேயன் அவனிடம் சென்றவர் “யுகேன் இங்க பாரு , நம்ம ஆரா என்ன பண்ணிட்டு வந்திருக்கான்னு வந்து பாரு ” என்று அவன் கையைப் பற்றி ஹாலுக்கு அழைத்து சென்றார்.
ஆராவை அப்போது தான் பார்ப்பது போல பாவனை செய்தவன் “ஆரா என்ன இது? இப்படியா பண்ணிட்டு வந்து நம்ம வீட்டு மானத்தை வாங்குவ.. ” என்றான்.
அவள் அருகே நின்றிருந்த யுவனோ “ஏய் என் ப்ரோ எப்படி ஆக்ட் பண்றார் பாத்தியா.. நமக்கு கல்யாணம் செய்து வெச்சதே அவர் தான். ஆனா இங்க எதுவும் தெரியாது போல வந்து நம்மகிட்டேயே சீன் போடறாரே.. “என்றான்..
“யுவா சும்மா இருங்க.. ” என்று அவன் இடுப்பில் கிள்ளியவள் தலையை கவிழ்த்துக்கொண்டு நிற்க..
சோபாவில் அமர்ந்து இருந்த பர்வதத்திடம் வந்த யுஜென் “அத்தை என்ன நடக்குது இங்க ” என்றான்.
அவனை நிமிர்த்து பார்த்தவர். “யுகேன் வாப்பா.. நீயே வந்து இந்த நியாயத்தைக் கேளு. ஆராவை ஏமாத்தி அவ வயித்துல புள்ளையைக் கொடுத்ததும் இல்லாம, நம்மகிட்டே ஒரு வார்த்தைகூட சொல்லாம அவங்களே முடிவெடுத்து இந்த கல்யாணத்தைப் பண்ணிருக்காங்க. ஏன் இப்படிப் பண்ணினேன்னு இவன்கிட்டே கேட்டா , இவன் சம்மந்தமே இல்லாம உன் அப்பாவை கையைக் காட்டி இவர் தான் இதுக்கு காரணம்னு சொல்றான் . எனக்கு எதுவுமே புரியல. என் அண்ணாவே நம்ம ஆரா வாழ்க்கை கெட காரணமா இருப்பாரா? நீயே சொல்லு ” என்று அவன் இடுப்பைக் கட்டிக்கொண்டு ஓவென அழுதார்,.
யுகேனோ அவர் அழுவதை தாங்கிக்கொள்ள முடியாமல் உள்ளுக்குள் தவித்தான். ஆராவின் திருமணத்தை எப்படி எல்லாம் நடத்த வேண்டும் என்று அவர் கற்பனை செய்து வைத்திருந்தார் என்று அவனுக்கும் தெரியும் தானே.. இருந்தும் இப்பொது மனதை கல்லாக்கிக்கொண்டு நின்று இருந்தவன் திரும்பி யுவனைப் பார்த்து.
“என் அப்பாவுக்கும், நீ ஆராவை கல்யாணம் செய்துக்கிட்டதுக்கும் என்ன சம்மந்தம் இருக்கு. எதுக்கு தேவை இல்லாம அவர் மேல நீ பழி போடுற.. “என்றான் .
ராஜேந்திரனுக்கு இதயம் வேகமாக துடித்தது . யுவன் உண்மையை சொல்லிவிடுவானோ என்று பயத்தில் முகத்தில் வேர்வை அரும்பியது. அதை யுகேனும் கவனிக்கத் தவறவில்லை.
யுவன் ராஜேந்திரனிடம் வந்தவன் “சொல்லட்டுமா?” என்று சிரித்தான்.
ராஜேந்திரனோ கண்கள் அதிர்ச்சியில் விரிந்த நிலையில் வேண்டாம் என்று தலையை ஆட்டினார்.
அதை பார்த்து நக்கலாக சிரித்தவன் “என் அம்மாவையும், என்னையும் பிரிச்சு என்னை இவ்ளோ வருஷம் அனாதையா வாழ வெச்ச தெய்வம் இவரு ” என்றான்.
“உன் அம்மாவையா! ” என்ற பர்வதம் கேட்க..
“ஆமா அத்தை ” என்றான்.
“வார்த்தைக்கு வார்த்தை அத்தையின்னு சொல்லாத. என்னால கேக்க முடியல ” என்று அவர் காதைப் பொத்திக் கொள்ள..
“உன் அம்மா யாருப்பா?”என்று கார்திகேயனிடம் இருந்து கேள்வி வந்தது.
அவரைப் பார்த்தவன் “உங்க எல்லாருக்கும் தெரிஞ்சவங்க தான் “என்றான்.
“எங்களுக்குத் தெரியுமா?” என்று பர்வதம் கேட்க.
“ம்ம்.. ஆமா இந்த வீட்ல கிட்டத்தட்ட பதினெட்டு வருசத்துக்கும் மேல வேலை பார்த்த காவேரி தான் என் அம்மா ” என்றான்.
“காவேரியா! ” என்று அங்கிருந்த அனைவரும் அதிர்ந்து அவனைப் பார்க்க..
ராஜேந்திரனோ தான் சேர்த்து வைத்த பெயர் எல்லாம் இன்று காற்றோடு கறையப்போகிறது என்ற ரீதியில் அவனையே பார்த்திருந்தார்.
அவர் தவிப்பை ரசித்தபடி யுகேன் நின்றிருந்தான்.
