EPISODE 87
விக்கியிடம் சங்கவியின் விஷயத்தைச் சொல்லி அவனைத் துர்காவைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளும்படிச் சொல்லிவிட்டு அவனை கீழே அனுப்பி வைத்த ஆதி துர்காவைப் பார்க்க.
விக்கி சென்றதும் ஆதி திரும்பித் துர்காவைப் பார்க்க…. இவ்வளவு நேரம் விக்கியுடன் ஆதியின் அருகில் இருந்ததால் துர்காவிற்குப் பெரிதாக எதுவும் தெரியவில்லை.
இப்போதுத் தனியாக ஆதியுடன் அங்கு அறையில் இருக்கவும் துர்காவிற்குப் பதட்டம் தொற்றிக் கொண்டது…
அவள் பதட்டத்தை மேலும் அதிகம் ஆக்க…. அவளிடம் வந்தவன் “என்ன துர்கா ரெடியா…” என்றான்.
அவனைப் புரியாமல் பார்த்த துர்கா… “எ.. என்ன… ஆதி புரியலை,” என்றாள் துர்கா.
“புரியலையா…” என்று ஆதி கேட்க…
“ம்ஹும்…” என்றுத் தலையை இடவலமாக ஆட்டி ஆதியையேப் பார்த்துக் கொண்டு இருந்தவளை….
அவள் அருகில் நெருங்கித் துர்காவின் இடுப்பில் கைக் கொடுத்துத் தன் நெஞ்சோடுச் சேர்த்துச் சட்டென்று இழுத்து அணைத்துக் கொண்டு….. “உன் காதலை…. நம் காதலைச் சொல்ல நீ ரெடியா?” என்று அவள் நெற்றி முட்டி கேட்டான் ஆதி.
ஆதி இப்படி வந்துத் தன்னிடம் பேசவும் சற்று குழம்பித்தான் போனாள் துர்கா.
தன்னிடம் பேசுவது நிஜமாகவே ஆதி தானா… என்று அதிர்ச்சியாக அவனைப் பார்க்க.
“என்ன துர்கா அப்படிப் பாக்குற…” என்றான் ஆதி.
“இல்ல ஆதி அது… அது… நீ தான் இப்படி எல்லாம் பேசுறியா? என்னால் நம்ப முடியலை ஆதி,” என்றாள் திக்கித் திணறி.
“ஏன் துர்கா நான் சொல்றதை நம்பலையா… நீ ஊரில் இருக்கும்போது நான் என்ன சொன்னேன்? நான் கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் நீ இங்கே வந்துப் பதில் சொல்லணும்னு சொன்னேன் இல்லையா…”
“நான் உன்னை விட்டுட்டு இங்கே வந்துட்டேன்னு என்கிட்டேச் சண்டை போட்டியே…”
“அப்போ நான் உன்கிட்டேக் கேட்டேன் உனக்கு என்னை விட்டு இருக்க முடியாதான்னு கேட்டேனே…”
“சொல்லு துர்கா… உன்னால் என்னை விட்டு இருக்க முடியாமல் தான் நீ என்கிட்டே அப்படி கேட்டே… ஏன் ஆதி என்னை உன் கூட அழைச்சுட்டுப் போகலைன்னு கேட்டியே…”
“அப்போ என் மேல உனக்கு லவ் இருக்குத் தானே? சொல்லு துர்கா…” என்றான் ஆதி.
இப்படி நேரடியாக இவ்வளவு நெருக்கத்தில் தன்னை நிற்க வைத்து கேட்கும் ஆதியை இமைக்க மறந்துப் பார்த்தாள் துர்கா.
அவள் இடுப்பில் இருந்தத் தன் கையை லேசாக இறுக்கிய ஆதி துர்காவை நினைவிற்கு கொண்டு வர… அவன் செயலில் உறைந்துப் போன துர்கா.
அவன் கையைத் தன் மேல் இருந்து எடுத்துவிட்டவள் அவனிடம் இருந்து விலகிச் சென்று நிற்க…
“துர்கா… ஏன் துர்கா… எதுவும் சொல்லாமல் அங்கே போய்ப் நின்னுட்டே… என்கிட்டேப் பேச உனக்கு எதுவும் இல்லையா… இல்லை என் கிட்டே உனக்குப் பேசவே பிடிக்கலையா…” என்றான் ஆதி.
அவன் ‘என்கூடப் பேசவே பிடிக்கலையா’ என்று சொன்னதும் சட்டென்றுக் கண்களில் கண்ணீரோடு “ஆதி” என்று அழைத்தாள்.
அவள் கண்களில் கண்ணீரைக் கண்டதும் வேகமாக அவள் அருகில் சென்று அவள் முகத்தைத் தன் கைகளில் ஏந்தித் தன் விரலால் அவள் கண்ணீரைத் துடைத்தி விட்டவன்.
“துர்கா அழாதே ப்ளீஸ் எனக்குக் கஷ்டமா இருக்கு… அழாதே,” என்றவன் அவளை விட்டு விலகி நிற்க… அப்போது அறைக்கதவுத் தட்டும் சத்தம் கேட்டது.
அவளை ஒரு முறைப் பார்த்துவிட்டுச் சென்று கதவைத் திறக்க….
அறைக்கு வெளியே சங்கவி நின்று கொண்டு இருந்தாள். ஆதி கதவைத் திறந்ததும் உள்ளே வந்தவள் “ஆதி ப்ளைட்க்கு டைம் ஆச்சு… ஏற்கனவே எல்லாத் திங்சும் பேக் பண்ணி உன்னோடதும் என்னோடதும் காரில் வைக்கச் சொல்லிட்டேன். நாம இப்போக் கிளம்பினால் தான் ஏர்போர்ட் போய்ச் சேரச் சரியாக இருக்கும்,” என்றாள் சங்கவி.
அவள் உள்ளே வந்ததும் பட பட வெனப் பேச… அவள் சொல்வதை எல்லாம் கேட்டவன் “சரி சங்கவி நீ கீழே போ…. டூ மினிட்ஸ் நான் இப்போ வரேன்,” என்றுச் சொன்னவன் திரும்பித் துர்காவைப் பார்க்க…
ஆதியைப் பார்ப்பதற்காக அவனின் டென்மார்க் வந்தவளுக்கு இப்போதுத் தன்னை இங்கேத் தனியாக விட்டுவிட்டுச் ஸ்விட்சர்லாந்துச் செல்வதை நினைத்து அதுவும் சங்கவியுடன் செல்வதை நினைத்துத் துர்காவிற்கு வருத்தமாக இருந்தது.
அவள் வருத்தம் அப்படியே துர்காவின் முகத்தில் அப்பட்டமாகத் தெரிய… அதை உணர்ந்து கொண்ட ஆதி ‘அவசரப் பட்டு இன்றேக் கிளம்ப ஏற்பாடு செய்துவிட்டோமோ?’ என்று வருந்தினான்.
இவர்கள் இருவரையும் பார்த்த சங்கவி எதுவும் புரியாமல் நின்று இருந்தால். துர்காவின் முகம் அழுது வடிந்து இருப்பதைப் பார்த்த சங்கவிக்கு
‘ஆதி துர்காவை பயங்கரமாகத் திட்டி இருப்பான். நேற்று அவன் பார்த்த போட்டோவைக் காட்டி துர்காவிடம் சண்டை போட்டு இருப்பான். அதுதான் அவள் முகம் இப்படி இருக்கிறது.’
‘இவன் அறையை விட்டு வெளியே வந்த விக்கியின் முகம் கூட அடிவாங்கி கன்னம் எல்லாம் வீங்கிப் போய் இருந்ததே….’ என்று யோசித்தவள்.
உள்ளுக்குள் சந்தோசப்பட்டாள். ‘எப்படியோ நான் நினைத்த காரியம் சரியாக நடந்தால் சரி’ என்று நினைத்தவள்.
ஆதியைப் பார்த்துச் சிரித்த முகமாக “சீக்கிரம் வந்திடு ஆதி நான் உனக்காகக் காத்துட்டு இருக்கேன்,” என்று துர்காவைப் பார்த்துச் சொல்லிவிட்டு வெளியேச் சென்றால்.
அவர்கள் இருவரையும் மாறி மாறிப் பார்த்த துர்கா என்னச் செய்வது என்று தெரியாமல் அமைதியாக அப்படியே நின்றாள்.
கதவைச் சாற்றி விட்டுத் துர்காவின் அருகில் வந்த ஆதி.
“துர்கா உனக்கு என்னைப் பிடிக்குமா.. பிடிக்கலையா… என்று எதுவாக இருந்தாலும் நீ என்னிடம் வெளிப்படையாகச் சொல் துர்கா.”
“என்னை உனக்குப் பிடிக்கும் என்று நான் உணரணும் துர்கா… இனி நீயா வந்து என்கிட்டே உன் காதலை… உன்கிட்டே இருக்க நம் காதலை நீ என்னிடம் சொல்ற வரைக்கும் நான் உன்கிட்டே எதுவும் கேட்கப் போறது இல்லை.”
“என்னடா… இவன் நம் காதலை என்று சொல்றனானேன்னு பாக்குறியா… உன் காதல் என்மேல இருக்குன்னா அந்தக் காதலுக்குள்ள நானும் இருக்கேன். அப்போ அது நம் காதல் தானே துர்கா…” என்றவன்.
“நான் கிளம்பறேன் துர்கா ப்ளைட்க்கு டைம் ஆச்சு. நான் வருவதற்குள் நீ என்ன என்கிட்டேச் சொல்லணும்னு நினைக்கிறியோ அதை வெளிப்படையா என்கிட்டே எதையும் மறைக்காமச் சொல்லணும்,” என்றுச் சொன்னவன்.
அவள் அருகில் வந்தவன் அவள் கைகளைப் பிடித்து “நான் போய்ட்டு வரேன்,” என்றவன்.
அவள் கண்களைப் பார்த்து “துர்கா…. ஐ மிஸ் யூ டி….” என்று சொல்லிவிட்டு அவளைத் திரும்பியும் பார்க்காமல்ச் சென்று விட்டான்.
எதுவுமே பேசாமல் ஆதி சொன்னதை எல்லாம் கேட்டுவிட்டு அப்படியே சிலை என்று நின்றாள் துர்கா.
துர்காவிடம் சொல்லிவிட்டு கீழே வந்த ஆதி ஹாலில் சங்கவி அமர்ந்து இருக்க அவள் எதிரே… அவளை முறைத்துக் கொண்டே அமர்ந்து இருந்த விக்கியைப் பார்த்துவிட்டு கீழே இறங்கி வந்த ஆதி நேராகச் சங்கவியின் அருகில் வந்தவன் “போலாமா சங்கவி?” என்று அவளைத் தாண்டி வெளியேச் சென்றான்.
அவளை மட்டும் அழைத்துவிட்டு விக்கியிடம் சொல்லாமல்ச் சென்றதைப் பார்த்த சங்கவி…. விக்கியைப் பார்த்து ஏளனமாகச் சிரித்துவிட்டு ஆதியுடன் கிளம்பிச் சென்றால்.
காரில் ஏறி கிளம்பிய ஆதி விக்கியின் மொபைலிற்கு மெசேஜ் அனுப்பிவிட்டுத் தன் மொபைலை வைத்து விட்டான்.
ஹாலில் அமர்ந்து இருந்த விக்கியின் மொபைலிற்கு மெசேஜ் வரவும் அதை ஓபன் செய்துப் பார்த்தவன் அதில் ஆதி விக்கியிடம் “துர்கா பத்திரம்” என்று அனுப்பி இருந்ததைப் பார்த்துவிட்டு.
‘இனிமேல் துர்காவை பத்திரமாகப் பார்த்துக் கொள்வது தான் என்னோட வேலையே’ என்று நினைத்துக் கொண்டான் விக்கி.
ராதா, கீர்த்தி, சந்தோஷ், நிலானி மற்றும் கதிர்
ராதாவிற்கு டான்ஸ் ப்ராக்டிஸ் செய்வதற்கு உதவியாகக் கீர்த்தியும் ராதாவுடன்ச் சென்று இருந்தாள்.
அவர்களுக்கு என்று காலியாக இருந்த ஒரு அறையைக் கேட்டு வாங்கி இருந்தால் ராதா…
காலையில் இருந்து மிகவும் கடினப்பட்டு டான்ஸ் பிராக்டிஸ் செய்து கொண்டு இருந்த ராதா… அன்று முழுவதும் கிளாசிற்கு வரவே இல்லை.
பாடம் நடத்த வந்த சந்தோஷ் என்னதான் ராதாவைத் தொந்தரவு செய்ய மாட்டேன் என்றுச் சொன்னாலும் அவன் கண்கள் கிளாசிற்குள் வந்ததும் அவளைத் தான் தேடியது.
அவள் இல்லாததுக் கண்டு ஏமாற்றம் அடைந்தாலும் அவள் இல்லாமல் அவளைப் பார்க்காமல் அந்த நாளே அவனுக்கு யுகம் என இருந்தது.
அவன் கிளாஸ் முடித்து விட்டு கிளாசை விட்டுச் சந்தோஷ் வெளியே வரவும் கீர்த்திகாவும் ராதாவும் அப்போது தான் கிளாசிற்குள் வந்தனர்.
சந்தோஷும் ராதாவும் ஒருவரை ஒருவர் நேருக்கு நேர் பார்த்துக் கொள்ள…. அவளைப் பார்த்ததும் அப்படியே நின்றான் சந்தோஷ்.
ராதாவும் சந்தோஷைப் பார்த்ததும் அப்படியே நிற்க… கீர்த்தி அவளைத் தாண்டி உள்ளேச் சென்று விட.
காலையில் இருந்து ஆடிக்களைத்துப் போய்த் உடலெல்லாம் வியர்வையோடுத் தன் முன்னே நிற்பவளைப் பார்த்துத் தன் மனதிற்குள் எழுந்த எண்ணத்தைக் கடினப் பட்டு கட்டுப்படுத்திக் கொண்டவன். அவளை ஒரு பார்வைப் பார்த்துத் தன் கண்களுக்குள் அவளை நிறைத்து விட்டுச் சென்றான்…
“சார்… எங்கப் போறீங்க… ஒரு நிமிஷம் நில்லுங்க,” என்று ஓடிச்சென்று அவன் முன்னே நிற்க.
“என்ன?” என்பது போல அவளைப் பார்க்க…. அவள் அவன் முன்னே வந்து மூச்சு வாங்க நின்றாள் ராதா.
“என்ன சார் என்னைப் பார்த்துட்டுப் பார்க்காமல் பேசாமல் அப்படியேப் போரீங்களே,” என்றாள் ராதா.
“உன்கிட்டேப் பேச எனக்கு என்ன இருக்கு?” என்றான் சந்தோஷ்.
இப்படி முகத்தில் அடித்தாற்போலப் பேசும் அவனைப் பார்த்தவளின் கண்களில் கண்ணீர் வந்துவிட அவனைப் பார்க்க….
சந்தோஷும் அவள் கண்களில் இருந்தக் கண்ணீரைக் கவனித்தவன் தன்னைப் பற்றி அவள் பேசியப் பேச்சுக்கள் எல்லாம் அவன் நினைவில் வர… அவளைப் பார்த்து “இப்போ எதுக்கு இப்படி வழியை மறைச்சுட்டு நிக்குறே… ஒழுங்காக் வழியை விடு,” என்று அவளைத் தாண்டிச் செல்லப் போக.
கண்ணில் இருந்தக் கண்ணீரைத் துடைத்துக் கொண்டே… “ஏன் சார் இப்படி என்கிட்டேச் சிடு சிடுன்னுப் பேசுறீங்க… நேத்துவரை நல்லாத் தானேப் பேசுனீங்க,” என்றாள் ராதா.
“நான் ஆள் தெரியாமல் உரிமை எடுத்துட்டு உங்க கிட்டேப் பேசிட்டேன். நீங்க என்னைக் கேட்ட வார்த்தைகளிலேயே எனக்குப் புரிந்தது நான் இருக்க வேண்டிய இடமாய் எது என்று.”
“இனியும் நான் அப்படி இருப்பேன்னு நீங்க எதிர் பார்க்காதீங்க,” என்று அவளிடம் காராராகப் பேச… அவனிடம் எப்படிச் சொல்லிப் புரிய வைப்பது என்றுப் புரியாமல் நிற்க…
“இப்போ நீ எதுக்கு என்னை நிறுத்தி வெச்சிருக்கே சொல்லு?” என்றான் சந்தோஷ்.
அவள் எதுக்கு அவனை நிறுத்தினோம் என்பதையே அவன் பேசியப் பேச்சில் மறந்து போனவள் “அது… அது…” என்றுத் திணறியவள் பின்.
“நான் இன்னைக்கு டியூஷன் வரதுக்குக் கொஞ்சம் லேட் ஆகும் சார்,” என்றாள்.
அவன் சரி என்றுத் தலையை ஆட்டிவிட்டு அவளைக் கடந்து செல்ல…
மறுபடியும் ஓடி வந்து அவன் முன் நின்றவள் “என்ன சார் சொன்னதும் சரின்னு சொல்லிட்டீங்க… ஏன் லேட்டாகும் என்ன ஏதுன்னு கேட்க மாட்டிங்களா…” என்றாள்.
“அது எல்லாம் உங்க பெர்சனல் விஷயம் எனக்கு எதுக்கு அது எல்லாம் தெரிஞ்சுக்கணும்,” என்றான்.
“நீங்க தெரிஞ்சுக்கலை என்றாலும் நான் சொல்லுவேன்,” என்றாள்.
“எனக்குக் கேட்க வேண்டிய அவசியம் இல்லை,” என்றான் சந்தோஷ்.
“நான் சொல்லியே ஆகணும். எனக்கு வேண்டியவங்க கிட்டேச் சொல்லாமல் நான் எதுவும் செய்ய மாட்டேன்,” என்றவள் “என்னோட நிலானி ஃபிரெண்ட் உடம்புச் சரி இல்லாமப் படுத்திருக்கா…. அவளை நானும் என் ஃபிரெண்ட் கீர்த்தியும் போய்ப் பார்த்துட்டு வரோம்,” என்றாள் ராதா.
அவனும் இதற்கு மேல் இவளிடம் நின்றால் ஏதாவதுப் பேசி அவளைக் கஷ்டப் படுத்தி விடுவோம் என்று எதுவும் பேசாமல் சரி என்றுத் தலையை ஆட்டிவிட்டு அவளைக் கடந்துச் சென்றான்.
அவளும் இவனை எப்படி வழிக்குக் கொண்டு வரது என்று யோசித்துக் கொண்டே கிளாசிற்குச் சென்றாள்.
மதுவும் பவனும் பத்மாவும்
மாலை ஆஃபீஸ் முடிந்து வீட்டிற்கு கிளம்பிக் கொண்டு இருந்தாள் மது. அவளிடம் என்ன என்ன வேலை என்று அவளுக்குச் சொல்லி விட்டதோடுச் சரி பவன் அவள் இருக்கும் பக்கம் மறந்தும் கூட வரவில்லை.
மதுவும் அவனைப் பற்றி அதன் பிறகு மறந்து போனாள். அவள் கிளம்பிக் கொண்டு இருக்க… மதுவின் இன்டெர்காமிற்கு அழைப்பு வந்தது. அதை அட்டென்ட் செய்ய… “மிஸ் மது ஒரு நிமிஷம் என் கேபினுக்கு வாங்க,” என்று சொல்லிவிட்டு கதிர் போனை வைத்தான்.
அனைத்தையும் எடுத்து வைத்துவிட்டு மது ரியாவிடம் “கதிர் சார் வரச் சொன்னார் நான் போய்ப் பார்த்துவிட்டு வருகிறேன்…. நீ கிளம்பு நாளைப் பார்க்கலாம்,” என்று சொல்லிவிட்டுக் கதிரைப் பார்க்கக் கிளம்பினாள்.
அவன் கேபின் கதவைத் தட்டி விட்டு உள்ளேச் சென்ற மது “சொல்லுங்க சார்,” என்றாள்.
“நீங்க வீட்டுக்குக் கிளம்பிட்டீங்களா? மது,” என்றான் கதிர்.
“ஆமா சார் கிளம்பிட்டேன். சொல்லுங்க சார் எதுவும் ஒர்க் இருக்கா?” என்று கேட்டாள் மது.
“என்னை ஆஃபீஸ் டைமில் மட்டும் நீங்க சார் போட்டுக் கூப்பிட்டாப் போதும் மற்ற நேரத்தில் என்னைப் பேர் சொல்லியேக் கூப்பிடுங்க,” என்றான் அவளும் சரி என்றுச் சொன்னவள் “நீங்களும் என்னை மிஸ் மதுன்னு சொல்லாமல் மதுன்னே கூப்பிடுங்க கதிர்,” என்றாள்.
“ஓகே மது… நீங்க கிளம்பிட்டீங்கன்னா ஒரு டென் மினிட்ஸ் வெயிட் பண்ணுங்க நானும் வந்துடறேன். உங்களை நான் வீட்டில் டிராப் பண்றேன்,” என்றான் கதிர்.
“இல்லை கதிர் நான் வரும்போது இங்கே பஸ் ஸ்டாப் எல்லாம் எங்கே இருக்கிறது என்றுப் பார்த்துவிட்டுத் தான் வந்தேன். எனக்கு வழித் தெரியும் நான் போயிக்குவேன்,” என்றாள் மது.
“அது ஒன்னும் ப்ரோப்லேம் இல்லை மது நான் இன்னிக்கு ஒரு நாள் மட்டும் உங்களைத் டிராப் பண்றேன். விக்கி எப்படியும் இன்று என்னிடம் போன் பண்ணிக் கேட்பான் உங்களுக்கு எல்லாமேச் சௌகரியமாக இருக்கிறதா இல்லையா…. நான் வந்துப் பார்த்தேனா இல்லையா என்று கேட்பான். அதனால நான் இன்னிக்கு ஒருநாள் மட்டும் வந்து டிராப் பண்ணிட்டு வரேன் வாங்க,” என்றான்.
மதுவும் கதிர் சொன்னதற்கு மறுப்புத் தெரிவிக்காமல் “சரி நான் வெளியே வெயிட் பண்றேன் நீங்க ஒர்க் முடிச்சுட்டு வாங்க,” என்றுச் சொல்லிவிட்டு வெளியில் சென்றாள்.
கால் மணி நேரம் கழித்து வெளியே வந்த கதிர் மதுவின் கேபின் வந்தவன் “போலாமா மது,” என்றான். அவளும் தன் ஹேண்ட் பேக்கை எடுத்துக்கொண்டு அவனுடன்ச் சென்றால்.
அவர்கள் இருவரும் கீழே கார் பார்க்கிங் செய்த இடத்திற்கு வர… அங்கே பவன் நின்று கொண்டு இருந்தான். ‘இவன் ஏன் இங்கே நிற்கிறான்’ என்று யோசித்துக் கொண்டே மது கதிருடன் அவன் காருக்கு அருகில் வர…
கதிர் தன் கார் சாவியைப் பவனிடம் தூக்கிப் போட்டுவிட்டு “இந்தா டிரைவ் பண்ணு,” என்றுச் சொல்லி மதுவைப் பின் சீட்டில் அமரச் சொல்லிவிட்டு… கதிர் முன் சீட்டில் அமர்ந்து கொள்ள…
மது பவனைப் பார்த்து முறைத்துக் கொண்டே… காரின் பின் சீட்டில் ஏறி அமர்ந்து கொள்ள….
மது தன்னை முறைப்பதுத் தெரிந்தும் அதைக் கண்டுகொள்ளாமல் கதிரின் காரை எடுத்துக் கொண்டு விக்கியின் அப்பார்ட்மென்டிற்குச் சென்றான் பவன்.
வழி எதுவுமேக் கேட்டுக் கொள்ளாமல் எப்படிச் சரியாகத் தன் வீட்டிற்கு இவன் போகிறான் என்று யோசித்துக் கொண்டே வந்தாள் மது.
மதுவின் வீடு வந்திட… காரைவிட்டு மூவரும் இறங்கி விட்டு கார் சாவியை கதிரிடம் கொடுத்தான் பவன்.
பிறகு மூவரும் மது இருக்கும் ஒன்றாம் தளத்திற்கு லிஃப்ட்டில் வர… மது பவனைப் பார்த்து ‘இவனையும் எதுக்குக் கூடக் கூட்டிட்டு வராரு இந்தக் கதிர்.’
‘இவனைப் பார்த்தாலே ஏதோச் சரி இல்லாதது போலவே மனசுலத் தோணுதே… இவனைப் பேசாமல் எங்க கூட வர வேண்டாம் வெளியேவே இருக்கட்டும்னு சொல்லிடலாமா?’ என்று யோசித்துக் கொண்டு இருக்க…
லிஃப்ட் முதல் தளத்தில் வந்து நின்றதும் மூவரும் லிஃப்ட்டை விட்டு வெளியே வர… மது “உங்க அப்பார்ட்மென்ட் எங்க இருக்கு?” என்று கேட்க… “அதோ அதுதான் கதிர்,” என்றுத் தங்கள் வீட்டை காட்ட.
“சரி வாங்க போகலாம்,” என்று திரும்பி நடக்கப் போகக் கதிரிடம் சொல்லிவிடலாம் என்று நினைத்த மது “கதிர் ஒரு நிமிஷம்,” என்றுச் சொல்ல… அதே போல பவனும் “ஒரு நிமிஷம்” என்றுக் கதிரை அழைத்தான்.
கையில் இருந்தப் போனைப் பார்த்துக்கொண்டே நடந்த கதிர் “என்ன?” என்று நிமிர்ந்து இருவரையும் பார்க்க.
அவள் எதுவும் பேசாமல் நிற்கவும். பவன் “சார் நீங்கப் பாருங்க நான் என் அப்பார்ட்மென்டிற்குப் போறேன் சார் அம்மாவும் தங்கச்சியும் வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க,” என்றுச் சொல்ல…
அவனை அதிர்ச்சியாகப் பார்த்த மது ‘அப்போ இவனும் இங்கேத் தான் தங்கி இருப்பான் போல’ என்று நினைத்துக் கொண்டே அவனைப் பார்க்க… “சரி பவன் நாளைப் பார்க்கலாம்,” என்றுச் சொல்லிவிட்டு நிலானியைப் பார்க்க… அவள் வீடு நோக்கி நடந்தான்.
மது பவனைப் பார்க்க… அவன் அவளை ஒரு பார்வைப் பார்த்துவிட்டு அவன் வீட்டிற்குச் செல்ல… அவன் எங்கேச் செல்கிறான் என்று மது அவன் செல்லும் வரைப் பார்க்க… பவன் நேராக மதுவின் பிளாட்டிற்கு நேர் எதிரே உள்ள பிளாட்டிற்குச் சென்றான்.
அதைப் பார்த்ததும் மது ஆச்சரியமாக ‘இவன் இங்கேத் தான் இருக்கானா? நான் இவனைப் பார்க்கவே இல்லையே’ என்று நினைத்துக் கொண்டு அவள் பிளாட்டிற்குப் போக…
உள்ளே ஹாலில் நிலானி அமர்ந்து இருக்க… அவள் அருகில் கீர்த்திகா அமர்ந்து இருக்க… அவள் அருகில் இன்னோருப் பெண் அமர்ந்து இருந்தாள்.
கதிர் இவர்களுக்கு எதிரில் இருந்த சோபாவில் அமர்ந்தான்.
நிலானியைப் பார்த்ததும் மது அவள் அருகில் வந்து “உனக்கு எல்லாம் சௌகரியமாக இருந்ததா?” என்று கேட்டாள்.
“நான் இங்கே ஒருத்தி இருக்குற அப்போ உங்கத் தங்கச்சி நல்ல ஜாலியாத் தான் இருப்பாங்க… நீ எதுக்கு மா உன் தங்கச்சி நல்லா இருக்குமா இருக்காதான்னு எல்லாம் கவலைப் படறே,” என்று சொல்லிக் கொண்டே கையில் ஸ்நாக்ஸ் டீயுடன் வந்தாள் பத்மா.
மதுவும் பத்மாவைப் பார்த்து “அதுவும் சரிதான் நான் உன்னை மறந்தேப் போய்ட்டேன்,” என்றுச் சொல்ல.. “என்னை மறந்துட்டியா…. அது எப்படி இந்தப் பத்மாவை ஞாபகம் இல்லாமல் போகும்?” என்று மதுவிடம் உரிமையோடுக் கேட்க.
“மது உன்னை மறக்க முடியுமா? நான் தெரியாமச் சொல்லிட்டேன்,” என்றவள் “இப்படியே நீ பேசிட்டு இருந்தா டீ ஆறிடும் எல்லோருக்கும் கொடு,” என்றாள் மது.
“அட ஆமாப் பாரேன் நான் மறந்து போய்ட்டேன்,” என்று சொல்லி அனைவருக்கும் டீயும் ஸ்நாக்ஸும் கொடுத்துவிட்டு உள்ளேச் சென்றால்.
ராதாவை மதுவிற்கு அறிமுகம் செய்துவைத்தால் நிலானி. கீர்த்தியும் ராதாவும் வந்து ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆனதால் ராதாவிற்கும் டியூஷன் செல்ல நேரம் ஆகிவிட்டதால் நிலானியிடமும், மதுவிடமும் சொல்லிவிட்டு இருவரும் கிளம்ப…
கதிரும் அவர்கள் இருவரிடமும் சொல்லிவிட்டு ராதாவைப் பார்த்து “போலாமா?” என்று கேட்டான். “ஓகே மாமா என்னை போற வழியில் டியூசனில் விட்ருங்க. அப்பறோம் அப்படியேக் கீர்த்திகாவையும் அவங்க வீட்ல விட்டுரிங்களா?” என்று கேட்டாள்.
அவள் கதிரை மாமா என்று அழைக்கவும் மதுப் புரியாமல் நிலானியைப் பார்க்க… அவர்கள் மூவருக்குமான உறவு முறையை நிலானி சொல்லவும் ஆச்சரியமாக அவர்களைப் பார்த்தாள் மது.
“சரி போலாமா நேரம் ஆகிருச்சு,” என்றுக் கதிர் சொல்ல… “ஏய் ராதா… நீ போய்ட்டு வா டி… நான் தனியாப் போயிக்குறேன். உன் மாமாவுக்கு எதுக்கு வீண் சிரமம்,” என்றாள் கீர்த்தி.
உடனே கதிர் “ராதா நான் ஒன்னும் அவளைச் சுமந்துட்டுப் போகலை. கார் தான்ச் சுமக்குது. எனக்கு ஒருச் சிரமமும் இல்லைன்னு நீ உன் ஃபிரெண்ட் கிட்டச் சொல்லு,” என்றான்.
ராதா திரும்பி கீர்த்திகாவிடம் “ஏய்… சும்மாப் பிகுப் பண்ணாமல் வா டி…” என்று கீர்த்தியின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டுக் கதிருடன்ச் சென்றால்.
அவர்கள் சென்றதும் மதுவும் நிலானியும் பேசிக் கொண்டு ஹாலில் அமர்ந்து இருக்க… வேலை எல்லாம் முடித்துவிட்டு வந்த பத்மா “சரிமா நான் கிளம்புறேன்,” என்றுச் சொல்ல… “எதுக்குள்ளக் கிளம்பிட்டியா? நீக் கொஞ்ச நேரம் இருந்துட்டுப் போ,” என்று மது சொல்ல…
“இல்ல மா… அந்த எதிர்த்த வீட்டுல இருக்க அம்மாவுக்கு ஏதோ உடம்புச் சரி இல்லையாம். அவங்களுக்குக் கூட மாட ஒத்தாசையா இருக்கச் சொல்லி விக்கி அய்யா என்னை இங்கே வேலைக்குச் சேர்த்தும் போதே அவங்களுக்கும் சேர்த்துத் தான் பேசினாரு.”
“அவங்க வீட்லத் தான் நான் தங்கி இருக்கேன் அம்மா.. இப்போப் போனா நைட் சாப்பிட எதுவும் செஞ்சு கொடுத்துட்டு வீட்டு வேலையைக் கொஞ்சம்ப் பார்த்துட்டு அங்கேயேத் தூங்கிருவேன்.”
“காலையில நேரமே எழுந்து அங்க இருக்க அவங்கப் பையனுக்கும் பொண்ணுக்கும் வெளியக் கிளம்பச் சாப்பாடு செஞ்சு கொடுத்துட்டு வேலை முடிச்சுட்டு இங்க வந்திருவேன்.”
“இதை காலையிலேயேச் சொல்லலாம்னு இருந்தேன் ஆனா நான் வராதுக்கேக் கொஞ்சம் நேரம் ஆகிருச்சு. நான் இங்க ஏழு மணிக்கு வரதுக்குள்ள அவங்களுக்குச் செய்யணுமே அதன்,” என்றாள் பத்மா.
“அப்போ அப்போ நான் இடையில போய்ப் பார்த்துட்டு வந்துறேன் மா. உங்களுக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே?” என்றாள் பத்மா.
மதுவிற்கு எதிர் வீட்டில் இருப்பதுப் பவன் அவனுடன் அவன் அம்மாவும் தங்கையும் இருப்பதுத் தெரிய… பத்மா சொன்னதை எல்லாம் கேட்டவள் “ஒன்னும் பிரச்னை இல்லை பத்மா. நீ காலையில் இனிமேல் ஏழு மணிக்கு வர வேணாம். எப்படியும் நான் காலையில் சமையல் எல்லாம் முடிச்சிருவேன். நீ பொறுமையா வா,” என்று மது சொல்ல.
அதை கேட்ட பத்மா “அப்பாடா…. இனி நான் காலையில் கொஞ்ச நேரம் தூங்குவேன்,” என்று சொல்லிவிட்டு இருவரிடமும்ச் சொல்லிக் கொண்டுப் பவன் வீட்டிற்குச் சென்றாள்.
