தென்னை ஓலையில் பந்தல் போட்டு அதில் வாழை மரங்கள் இருபுறமும் கட்டப்பட்டு இருக்க… அதில் குலை குலையாகப் பழங்கள் தொங்கிக் கொண்டு இருக்க…
வாசலில் மாப்பிள்ளை, பெண் வீட்டாரின் பெற்றோர்கள் நின்று வருபவர்களை வரவேற்றுக் கொண்டு இருக்க…
கனகாவும் செண்பகமும் ஒரு புறம், துரை ஒரு புறமும் திருமணத்திற்கு வந்திருந்தவர்களை உபசரித்துக் கொண்டு இருக்க…
கார்த்திக் வந்திருந்த வியாபாரத்தில் முக்கியப் புள்ளிகளை வரவேற்று, அவர்களை அமர வைத்துக் கொண்டு இருக்க…
மணமேடையில் ஐயர் ஹோமம் வளர்த்துக் கொண்டு இருக்க… அவருக்கு வேண்டிய உதவிகளை ஷிவா செய்துகொண்டு இங்கும் அங்கும் ஓடிக்கொண்டு இருந்தாள்.
மணமகன் அறையில் கதிர் பட்டு வேட்டி, பட்டுச் சட்டை அணிந்து, கழுத்தில் பிளாட்டினத்தால் ஆன செயின் அணிந்து… கையில் பிராஸ்லெட், மோதிரம் அணிந்து திருமணத்திற்குத் தயாராகிக் கொண்டு இருக்க…
அவன் தயாராவதற்கு விக்கி கதிருக்கு உதவிக் கொண்டு இருந்தான்.
தலையைச் சீவுவதும் பின் கலைப்பதும் எனக் கதிர் மாற்றி மாற்றித் தன் தலையை வாரி, “நன்றாக இருக்கிறதா?” என்று பார்த்துக் கொண்டு இருக்க…
“டேய் கதிர்! உன் அலப்பறை தாங்க முடியலடா… எப்பவும் லேட்டா தயாராகும் பொண்ணுங்களே அங்க ரெடியாகி உட்கார்ந்து இருக்காங்க… கல்யாணப் பொண்ணு ரெடியாகிட்டா… ஆனா நீ இந்த கொஞ்சூண்டு முடியை வெச்சிக்கிட்டு இவ்வளவு லேட் பண்ற…”
“நீ இங்கே லேட் பண்ணப் பண்ண ஐயர் டென்ஷன் ஆகப் போறாரு பாரு,” என்று விக்கி கதிரிடம் கத்திக் கொண்டு இருக்க…
அவன் சொல்வதைக் காதிலேயே போட்டுக் கொள்ளாமல் கதிர் தன் வேலையைப் பார்த்துக் கொண்டு இருந்தான்.
விக்கி சொல்வதைக் கவனிக்காமல் கதிர் தலை சீவிக் கொண்டு இருக்க… அவனைப் பார்த்து டென்ஷனான விக்கி, “இங்க ஒருத்தன் தொண்டை தண்ணி வத்தக் கத்திட்டு இருக்கேன். ஆனா இவன் என்னடான்னா தன் வேலையைப் பார்த்துட்டு இருக்கான் பாரு,” என்று கதிரை முறைக்க…
அவனைக் கண்ணாடியில் பார்த்தவாரே, “இப்ப எதுக்குடா முறைக்கிற? முஹூர்த்ததிற்கு இன்னும் ஒரு மணி நேரம் இருக்கு. இப்பவே ரெடியாகி போய் அந்தப் புகையில் நான் அங்க உட்கார்ந்து என்ன பண்ணப் போறேன்.”
“‘மாப்பிள்ளை அழைச்சிட்டு வாங்கோ…'” அப்படின்னு ஐயர் கூப்பிடுறப்போ நான் போய்க்கிறேன். நீ டென்ஷனாகாத. பேசாம இரு,” என்றான் கதிர்.
“எனக்கு என்னப்பா வந்துச்சு? உன் கல்யாணம், நீ என்னமோ பண்ணு. நான் எதுவும் சொல்லல,” என்றவன், “நான் போய் என் நிலா குட்டி ரெடியாகி விட்டாளான்னு பார்த்துட்டு வரேன்,” என்று சொல்லிவிட்டுக் கதிரின் அறையை விட்டுக் நிலானியைப் பார்க்க மணமகள் அறைக்குச் சென்றான்.
_____________________________
ராதா கீர்த்திகாவைத் தயார் செய்து கொண்டு இருக்க… அவர்கள் அருகில் வெறுமனே தயாராகி வீல் சேரில் அமர்ந்து இருவரையும் பார்த்துக் கொண்டிருந்தாள் நிலானி.
அப்போது மணமகள் அறைக்கு வந்த விக்கி அவர்கள் அறைக் கதவைத் தட்ட… ராதா யார் என்று பார்க்கப் போக, அவளை நிறுத்திய நிலானி, “நீ கீர்த்திகாவை ரெடி பண்ணு. நான் போய் யாருன்னு பார்க்கிறேன்,” என்று சொல்லிவிட்டுக் கதவைத் திறக்க…
கதவு திறந்ததும் வீல்சேரில் அழகாக மணப்பெண்ணுக்கு இணையாக மேக்கப் செய்து, பட்டுச் சேலை அணிந்து அமர்ந்திருந்த நிலானியைப் பார்த்த விக்கி, “நிலா குட்டி!! நீயா!! இது? இப்படி உன்னைப் பார்க்கிறப்ப எவ்வளவு அழகா இருக்கு தெரியுமா?” என்றான் விக்கி.
கதவைத் திறந்ததும் விக்கி தன்னைப் பார்த்து இப்படிச் சொல்லும் விக்கியைப் பார்த்து நிலானிக்கு வெட்கம் வர… வெட்கத்தோடு விக்கியை ஒருமுறை பார்த்தவள், “நீங்களும் தான் இந்தப் பட்டு வேட்டி பட்டுச் சட்டையில் அழகா இருக்கீங்க,” என்றால் நிலானி.
“அப்போ கதிர்-கீர்த்திகா கல்யாணம் நடப்பதற்கு முன்னாடி நீயும் நானும் மணமேடையில் உட்கார்ந்து மறுபடியும் ஒரு முறை தாலி கட்டிக்கலாமா?” என்று கேட்டான் விக்கி.
“அதுதான் ஏற்கனவே தாலி கட்டிவிட்டீர்களே? மறுபடியும் எதற்கு?” என்று கேட்டாள்.
“நம்ம கல்யாணம்தான் யாருக்கும் தெரியாமல் நடந்துடுச்சு. ஏன் சொல்லப் போனால், உனக்கே தெரியாமல் தான் நான் உன் கழுத்துல தாலி கட்டினேன்.”
“நம்ம சொந்த பந்தங்களை கூட்டி வச்சு, நிறையச் செலவு பண்ணி ஆடம்பரமா கல்யாணம் பண்ணலைன்னாலும், என்னோட சொந்தங்களுக்கும் உன்னோட சொந்தங்களுக்கும் முன்னே வைத்து உனக்குத் தாலி கட்டணும்னு எனக்கு ஆசையா இருக்கு,” என்றான் விக்கி.
“சரிங்க, உங்க ஆசை என்னவோ அப்படியே செய்யுங்க. எனக்கு எந்த ஆக்ஷேபனையும்** இல்லை,”** என்றால் நிலானி.
“ஐ!!!! நிஜமாத்தான் சொல்றியா? நிலா குட்டி… அப்போ நம்ம மறுபடியும் ஒரு முறை நம்ம சொந்தங்களை மட்டும் கூப்பிட்டு வச்சு கல்யாணம் பண்ணிக்கலாமா?” என்று விக்கி கேட்க… அவளும் “சரி,” என்று தலையாட்டினாள்.
______________________
கதவைத் தட்டியது யார் என்று பார்க்கப்போன நிலானி இன்னும் அறைக்குள் வராமல் போகவே, கீர்த்திகாவிடம், “கீர்த்து, ஒரு நிமிஷம் இருடி…. அவள் யார் கூட இவ்வளவு நேரம் பேசிட்டு இருக்கான்னு நான் பார்த்துட்டு வரேன்,” என்று சொல்லிவிட்டு ராதா வெளியே வர…
அங்கே வாசலில் நின்று கொண்டு நிலானி வெட்கப்பட்டுக் கொண்டிருக்க… விக்கி அவளிடம் வழிந்து கொண்டு நின்றிருப்பதையும் பார்த்த ராதா. அவர்கள் இருவரின் அருகில் வந்தவள், “இங்கே கல்யாணம் கீர்த்திகாவுக்கும் கதிர் மாமாவுக்கும் தான். உங்க ரெண்டு பேருக்கும் இல்லை.”
“உங்க ரெண்டு பேருக்கும் தான் ஏற்கனவே கல்யாணம் ஆயிடுச்சே. இப்போ எதுக்கு இப்படி ரெண்டு பேரும் வாசலில் நின்று கொண்டு அசடு வழிஞ்சிட்டு இருக்கீங்க… பார்க்கச் சகிக்கலை,” என்று சொல்லி ராதா அவர்களிடம் வர.
“உனக்கு எங்க ரெண்டு பேரையும் பார்த்துப் பொறாமை. உனக்கு ஃபிக்ஸ் பண்ணி வைத்திருந்த கதிரை உன் ஃப்ரெண்ட் கல்யாணம் பண்ணப் போறாளேன்னு ஒரு புறம். உனக்கு வயிற்றெரிச்சலா இருக்கும்.”
“உன் கூடச் சுத்திட்டு இருந்த என் நிலாக்குட்டிக்கும் கல்யாணம் ஆகிருச்சு. அப்படியே உன்னைச் சுத்தி இருக்கிறவங்க எல்லாருக்கும் கல்யாணம் ஆகி இருக்க…
இப்போ நீ மட்டும் தான் சிங்கிளா இருக்க. இவங்க ரெண்டு பேரும் கமிட்டட். ஆனா உனக்கு நானும் என் நிலா குட்டியும் பேசிட்டு இருக்கிறதப் பார்த்து கடுப்பா இருக்கு. நீயும் சீக்கிரமா யாரையோ ஒருத்தன லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்க. அப்பத்தான் உனக்கு எங்களையெல்லாம் பார்த்தா வயிற்றெரிச்சல் வராது,” என்று விக்கி சொல்ல.
“ஆமாமா, இவங்க ரெண்டு பேரும் பெரிய அஜித்-ஷாலினி நினைப்பு. இவங்களைப் பார்த்து நாங்க பொறாமை படுறோம். பேசாம போங்க. எங்களுக்கு நிறைய வேலை இருக்கு. இங்க வந்து நின்னு எங்க வேலையை கெடுக்காதீங்க,” என்று சொல்லி விக்கியைத் தள்ளிவிட்டு, நிலானியை அழைத்துக்கொண்டு அறைக் கதவைச் சாத்திவிட்டு உள்ளே சென்றாள் ராதா.
“என் பொண்டாட்டி கூட நான் பேசிட்டு இருந்தா இவளுக்கு என்ன வந்துச்சு? வர வர இந்த குட்டிப் பிசாசுக்கு வாய் ரொம்ப அதிகமாயிடுச்சு. துரை அங்கிள் கிட்டச் சொல்லி இவளைக் கொஞ்சம் அடக்கி வைக்கணும்,” என்று நினைத்த விக்கி கதிரின் அறைக்குச் சென்றான்.
____________
ஒரு வழியாக ரெடியாகி சோபாவில் அமர்ந்திருந்த கதிர் தன் மொபைலை எடுத்து கீர்த்திகாவிற்கு வீடியோ கால் செய்தான். அப்போது சரியாக விக்கி உள்ளே வந்துவிட, “யாருக்குடா? கால் பண்ணிட்டு இருக்க?” என்று கேட்க, “வேறு யாருக்கு?” என்று சொல்லித் தன் மொபைலைத் திருப்பிக் காட்ட, அதில் ‘கீர்த்து மை டார்லிங்’ என்று எழுதி இருந்தது.
“ஏண்டா, இன்னும் கொஞ்ச நேரத்துல ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கப் போறீங்க… அதுக்குள்ள அவ்ளோ என்ன அவசரம்.”
“இன்னும் கொஞ்ச நேரத்துல கீர்த்திகா கழுத்துல நீ தாலி கட்டப் போற… அதுக்குள்ள வீடியோ கால் பண்ணிக் கீர்த்தியைப் பார்க்காமல் இருக்க முடியலையா உன்னால?” என்று கேட்டான் விக்கி.
“நான் ரெடி ஆயிட்டேன்னு எப்படி இருக்குன்னு கீர்த்தி கிட்டே காட்டுவதற்காகத்தான் வீடியோ கால் பண்ணினேன்,” என்று கதிர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே கீர்த்திகாவிற்கு அழைத்த வீடியோ கால் ‘அட்டெண்ட்’ ஆனது.
காலை ‘அட்டெண்ட்’ செய்த கீர்த்திகாவின் முகத்தைப் பார்க்கக் கதிர் ஆவலாக இருக்க… அவனோடு சேர்ந்து விக்கியும் அவன் முகத்திற்கு அருகில் தன் முகத்தை வைத்து ஒட்டிக் கொண்டு, வீடியோ காலில் யார் பேசுகிறார்கள் என்று பார்ப்பதற்காக ஆர்வமாக நின்றிருந்தான்.
கதிர் அழைத்தது என்னவோ கீர்த்திகாவின் போனுக்குத் தான். ஆனால் அதை ‘அட்டெண்ட்’ செய்தது ராதா.
அவளைப் பார்த்ததும், “ம்ஹுக்கும்! இனி நீ கீர்த்திகாவைப் பார்க்கக்கூட முடியாது போ,” என்று விக்கி சொல்ல…
கதிரிடம் சொன்னதைக் கேட்ட ராதா, “ஆமா! பார்க்க விடமாட்டேன். என்ன பண்ணப் போறீங்க இப்போ?” என்றால் விக்கியிடம்.
“நான் எதுவும் சொல்லலைமா. எல்லாம் உன் கதிர் மாமா தான் கீர்த்திகாவைப் பார்க்கணும், அவன் மேக்கப் பண்ணதெல்லாம் நல்லா இருக்கான்னு கீர்த்திகா கிட்டக் காட்டத்தான் கால் பண்ணினான்.”
“நீ போனை கீர்த்திகா கிட்டக் கொடுத்தால் கொடு, இல்லாட்டி போ. எனக்கு என்ன வந்தது? நான் என் பொண்டாட்டியை வந்து பார்த்துக்கிறேன்,” என்றவன், “டேய் கதிர்! நீ போய்க் கீர்த்திகா முகத்தைக் காட்டச் சொல்லிப் பாரு. நான் போறேன்,” என்று சொல்லிவிட்டு அந்த ரூமை விட்டு வெளியே சென்றான்.
விக்கி சென்றதும் ராதாவைப் பார்த்து, “ராதா, கீர்த்தி என்ன பண்ணிட்டு இருக்கா?” என்று கேட்க… “அவ இங்க என்ன பண்ணுவா? முகூர்த்தத்திற்கு ரெடி ஆயிட்டு இருக்கா… அதுக்கு இப்போ என்ன மாமா?” என்று கேட்டாள்.
“போனை கொஞ்சம் கீர்த்திகா கிட்டக் கொடு. நான் அவ கிட்டப் பேசணும்,” என்றான் கதிர்.
“இன்னும் கொஞ்ச நேரத்துல தான் உங்களுக்குக் கல்யாணம் ஆகப் போகுது. அதுக்குள்ள அவளைப் பார்த்தே ஆகணுமா மாமா?” என்றால் ராதா.
“ஆமா! நான் கண்டிப்பா பாக்கணும். ப்ளீஸ் ராதா, கீர்த்திகா கிட்டப் போனை குடு,” என்றான்.
ராதாவின் அருகில் சேரில் அமர்ந்திருந்த கீர்த்திகா, “போனை குடுடி என்கிட்ட,” என்று அவளிடம் போனைப் பிடுங்க வர… ராதா போனை கீர்த்திகாவின் கையில் கொடுக்காமல், கீர்த்திகாவிடம் சிக்காமல் அங்கிருந்து ஓட… கீர்த்திகாவிடம் இருந்து ஓடியவள் அருகில் வர, நிலானி ராதாவின் கையைப் பிடித்து அவள் கையில் இருந்து போனைப் பிடுங்கிக் கீர்த்திகாவிடம் கொடுத்தவள், “நீ போய் பேசுடி. இவ இப்படித்தான் எப்பப் பாரு வம்பு பண்ணிக்கிட்டு இருப்பா. கொஞ்சம் சொல்லி,” போனை கீர்த்திகாவிடம் நீட்ட… சிரித்துக் கொண்டே நிலானியின் கையில் இருந்து போனை வாங்கியவள் கதிரிடம் பேசப் போக…
__________________________
அப்போது அவர்கள் அறைக் கதவு தட்டும் சத்தம் கேட்கவும். விக்கிதான் கதவைத் தட்டுகிறான் என்று நினைத்த நிலானி, “அவராத்தான் இருக்கும். நான் போய் பார்க்கிறேன்,” என்று சொல்லி கதவைத் திறக்கப் போக…
“என் கையில் இருந்து போனைப் பிடுங்கி இவளிடம் கொடுத்த இல்ல…. நீ எப்படி இருக்க விக்கி அண்ணா கூட பேசுறேன்னு நான் பார்க்கிறேன்,” என்று சொன்ன ராதா, “நீ இங்கேயே இரு. நானே போய்க் கதவைத் திறக்கிறேன். நீ வர வேண்டாம்,” என்று சொல்லி அவளை முந்திக்கொண்டு கதவைத் திறக்க ஓடினாள் ராதா.
கீர்த்திகாவிடம் திரும்பிய நிலானி, “அவளைப் பாருடி! எவ்வளவு சேட்டை பண்றா. வர வர இவளுக்கு ரொம்பக் குறும்பு ஜாஸ்தி ஆயிடுச்சு,” என்று சொல்லிச் சிரிக்க…
“ஆமாம் நிலானி, அவ எப்பவுமே அப்படித்தானே,” என்றவள், “சரி, நீ யாருன்னு பாரு. நான் போய் கதிர் கூடப் பேசிட்டு வரேன்,” என்று சொல்லிவிட்டுப் போனை எடுத்துக் கொண்டு உள்ளே சென்றாள் கீர்த்தி.
“ஆமாமா, நீ போயி இப்ப இருந்தே உன்னோட ரொமான்ஸை ஸ்டார்ட் பண்ணு,” என்று ராதா கீர்த்திகாவைக் கிண்டல் செய்து கொண்டே, அவர்கள் இருவரையும் பார்த்துவிட்டு கதவைத் திறக்க…
கதவைத் திறந்ததும் வாசலில் நின்று இருந்தவர்களைப் பார்த்து நிலானி அதிர்ச்சியாக அப்படியே நிற்க…
நிலானியின் முகம் அதிர்ச்சியாவதைப் பார்த்த ராதா, “ஏன் நிலா, ஏன் உன் முகம் இப்படி இருக்கு…. உன்னைப் பார்க்க விக்கி அண்ணா தானே வந்திருக்காரு? அவரைப் பார்த்தால் இப்படி ஷாக் ஆகிற?” என்று சொல்லிக் கொண்டு வாசல் பக்கம் திரும்பிய ராதா, வாசலில் நின்றிருந்தவர்களைப் பார்த்ததும் ராதாவும் அப்படியே அதிர்ந்து போய் நின்றாள்.
