214
கதிரும் கீர்த்திகாவும் துர்காவை பார்ப்பதற்காக வீட்டிற்கு வந்திருந்தார்கள்.
அவர்களோடு சேர்ந்து வடிவும் முருகனும் இருவரும் வந்திருந்தனர்.
முன்பு இருந்தது போல துர்காவிடம் ஏனோ வடிவால் பழையபடி பேச முடியவில்லை.
ஒருவேளை தங்களை துர்கா இத்தனை வருடமாக அவளிடம் இருந்து உண்மையை மறைத்து விட்டோம் என்று தங்களை ஏதும் தவறாக நினைத்து இருப்பாளோ என்று நினைத்துக் கொண்டு, அவர்களாகவே துர்காவிடம் இருந்து சற்று விலகி இருக்க ஆரம்பித்திருந்தனர்.
துர்காவிற்கு வடிவும் முருகனும் தன்னிடம் முன்பு போல பேசுவதில்லை, தன்னைப் பற்றி நினைப்பதில்லை என்று வருத்தம் அவளுக்கு இருக்கத்தான் செய்தது.
என்னதான் கனகா தன்னை விழுந்து விழுந்து கவனித்துக் கொண்டாலும், பாசமாக கனகாவும் துரையும் தன்னை பார்த்துக் கொண்டாலும்…
அவளை இவ்வளவு வருடமாக வளர்த்த வடிவும் முருகனும் தன்னிடம் பாராமுகம் காட்டுவது துர்காவிற்கு ஏனோ மிகவும் வருத்தமாக இருந்தது.
அவளே நேரில் சென்று அவர்களைப் பார்த்துவிட்டு வரவேண்டும் என்று நினைத்து இருந்தால், அதற்குள் ஷிவுவிற்கு விருந்து நடக்க ஏற்பாடுகள் நடந்ததால் அதை கவனிப்பதில் பிஸியாக இருந்துவிட்டாள்.
கீர்த்திகாவுடன் அவர்கள் வந்திருக்க, துர்கா சந்தோஷமாக சென்று வடிவையும் முருகனையும் வரவேற்றாள்.
“அம்மா.. எப்படி இருக்கீங்க? நல்லா இருக்கீங்களா? ஏன் இப்போல்லாம் நீங்க எனக்கு முன்ன மாதிரி போன் பண்றது இல்ல… என்ன பாக்குறதுக்கும் இங்க வரதே இல்ல” என்று கேட்டாள் துர்கா.
முருகனிடம் திரும்பி, “ஏன் அப்பா, அம்மா தான் என் கூட பேசவே மறந்துட்டாங்க, நீங்களும் என்னை மறந்துட்டீங்களா?” என்று கவலையாக கேட்டாள்.
“நாங்க உன்னை மறக்கல துர்கா. நீதானே என்னோட மூத்த பொண்ணு, உன்னை அவ்வளவு சீக்கிரம் நானும் உங்க அம்மாவும் மறந்து விடுவோமா??? அதெல்லாம் எதுவும் கிடையாது, நீ எதுவும் வேலையில பிஸியா இருப்பேனு தான் நாங்க தொந்தரவு செய்யவில்லை” என்றார் முருகன்.
“உனக்கு என்னப்பா வேலை, நான் தான் வீட்டை விட்டு வெளியே போறதே இல்லையே, இங்கேதானே இருக்கிறேன்” என்றாள் துர்கா.
“அக்கா, அப்போ நீயாவது அம்மா அப்பா கிட்ட கூப்பிட்டு பேசி இருக்கலாம் இல்ல” என்றாள் கீர்த்திகா.
“நான் போன் பத்தி பேசினா நல்லா இருக்காது, நேரா போய் பேசணும்னு தான் நினைச்சுட்டு இருந்தேன் கீர்த்து. அதுக்குள்ள ஷிவுவிற்கு இங்கே விருந்து ஏற்பாடு எல்லாம் நடந்ததால அந்த வேலையை எல்லாம் முடிச்சுட்டு அம்மா அப்பாவை பார்க்க போலாம்னு தான் நான் கார்த்திக் கிட்ட சொல்லிக்கிட்டு இருந்தேன்” என்றாள் துர்கா.
“நீங்க இன்னைக்கு என்னை பார்க்க வரலைன்னா, நான் அம்மாவை பார்க்க இன்னைக்கு சாயங்காலம் வீட்டுக்கு போயிருப்பேன்” என்றாள் துர்கா.
தான் இவ்வளவு பெரிய குடும்பத்தை சேர்ந்தவள் என்று தெரிந்த பின்னும் கூட, துர்கா இன்னமும் அதே மனநிலையோடும் அதே பழைய துர்காவாக அவர்களுடன் பேசுவதை பார்த்த வடிவுக்கும் முருகனுக்கும் துர்காவை நினைத்து சந்தோஷமாகவும் அவள் குணத்தை நினைத்து பெருமையாகவும் இருந்தது.
தங்களிடம் இன்னமும் துர்கா அதே பழைய நிலையில் பேசுவதை நினைத்து இருவரும் சற்று நிம்மதி அடைந்தனர்.
“சரி என்ன சாப்பிடுறீங்க, காபியா? டீயா?” என்று கேட்டாள் துர்கா.
“உன் கையால எது கொடுத்தாலும் சாப்பிட நாங்க தயாராத்தான் இருக்கோம். நீ எது கொடுத்தாலும் சரிடா” என்றார் முருகன்.
“உங்க பொண்ணு கையால விஷத்தை கொடுத்தாலும் நீங்க அதை சாப்பிட ரெடியாகத்தான் இருக்கீங்களா?” என்று கேட்டுக் கொண்டே அங்கே வந்தாள் சங்கவி.
அவள் இப்படி பேசிக்கொண்டு வருவதை பார்த்த கதிர், சங்கவியை பார்த்து முறைத்தவன் கீர்த்திகாவிடம், “என்னடி இப்படி பேசிட்டு வரா…” என்று கடுப்பாக கேட்டான்.
“நான் என்னடா செய்யறது, அவ பேசினதுக்கு நீயே போய் அவகிட்ட கேளு, என்கிட்ட இவ்வளவு கடுப்பா பேசுற” என்ற கீர்த்திகா, “நீ உன் அண்ணனை பார்க்க தானே இங்கு வந்த, அவரை போய் பார்த்துட்டு வா.. இவளை பார்த்தா எனக்கும் கடுப்பா தான் இருக்கு” என்றாள்.
செண்பகத்தின் மகளாக இருந்தாலும், தனிப்பட்ட முறையில் இன்னமும் கதிருக்கும் கீர்த்திகாவிற்கும் அவளைக் கண்டால் பிடிப்பதில்லை, அவளிடம் பட்டும் படாமல் தான் இங்கு வந்ததிலிருந்து பேச்சு வைத்துக் கொள்கிறார்கள்.
மற்றவர்களைப் போல இவர்களால் சங்கவியை மனதோடு ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இதைப் பற்றி சங்கவி என்ன கவலைப்பட போகிறாளா என்ன? அவளுக்கு வேண்டியதை செய்துவிட்டு போகத்தானே இங்கே இருக்கிறாள்.
சங்கவி இப்படி கேட்டுக்கொண்டு துர்காவின் அம்மா அப்பாவிடம் வந்து அமர…
அவளை முறைத்த துர்கா, “நான் எதுக்கு என் அம்மா அப்பாவுக்கு விஷம் கொடுக்கப் போறேன்? நானே… விஷம் கொடுத்து கொல்ல வேண்டியவங்க தான் இங்கே இருக்காங்களே… அதையும் சீக்கிரமா செஞ்சுடலாம்னு நினைச்சுட்டு இருக்கேன்” என்று துர்கா சங்கவியை நினைத்து பேச…
விஷம் வைத்துக் கொல்ல வேண்டும் என்று துர்கா தன்னைத் தான் சொல்கிறாள் என சங்கவிக்கு நன்றாகவே புரிந்தது.
துர்காவை முறைத்த சங்கவி, “பாருங்க ஆண்ட்டி, நான் சும்மா ஒரு கிண்டலுக்காக இப்படி கேட்டா துர்கா என்ன வம்பு இழுக்கற மாதிரியே பேசுறா” என்று வடிவிடம் துர்காவை குறை கூற…
உன்னைப் பார்த்து வெறுமனே சிரித்து வைத்த வடிவு துர்காவிடம், “எனக்கு டீ கொண்டு வா… துர்கா” என்று சொல்ல…
“சரிம்மா” என்று விட்டு கிச்சனுக்கு எழுந்து செல்ல, கீர்த்திகாவும் துர்காவுடன் உள்ளே சென்றாள்.
துர்காவும் கீர்த்திகாவும் சிரித்தபடி கிச்சனுக்குள் பேசிக்கொண்டு டீ போட்டுக் கொண்டு இருக்க…
அப்போது அங்கே வந்த விசாலாட்சி வடிவும் முருகனும் வந்திருப்பதை பார்த்துவிட்டு அவர்களிடம் வந்தவர், “வடிவு நல்லா இருக்கியா? ஏன் இந்த பக்கம் வரதே இல்ல… வந்து ரொம்ப நாள் ஆச்சு, நானே உனக்கு போன் பண்ணி கேட்கலாம்னு இருந்தேன்” என்ற படி வந்து அமர்ந்தார்.
“அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல அண்ணி” என்ற வடிவு, “நீங்க எப்படி இருக்கீங்க? உடம்பெல்லாம் பரவாயில்லையா அண்ணி?” என்று அக்கறையாக கேட்டார்.
“எனக்கு என்ன குறை, நான் நிம்மதியா சந்தோசமா இருக்கேன். என் மருமக என்ன தாங்கு தாங்கு என்று தாங்குறா, என்னை கிச்சன் பக்கமே விடுறது இல்ல, அவளே எல்லா வேலையும் எடுத்து போட்டுட்டு செய்துட்டு இருக்கா” என்று துர்காவை பற்றி பெருமை கூற…
“நீங்க எந்த மருமகளை சொல்றீங்க அத்தை, உங்களுக்கு ரொம்ப பிடிச்ச மூத்த மருமகள் துர்காவை சொல்றீங்களா? இல்ல உங்க இளைய மருமக கீர்த்திகாவ சொல்றீங்களா?” என்று கேட்டாள் சங்கவி.
“இதுல என்ன சந்தேகம், இங்கே என் கூட என் வீட்ல இருக்கிற எனக்கு ரொம்ப பிடிச்ச என் மூத்த மருமகள் துர்காவை தான் சொல்றேன்” என்றார் விசாலாட்சி.
“ஓஹோ அப்போ உங்களுக்கு என்னை பிடிக்காதா?” என்று கேட்டுக் கொண்டே கையில் டீ கிளாஸ் உடன் விசாலாட்சியிடம் வம்பு இழுத்துக் கொண்டே வந்தாள் கீர்த்திகா.
“உன்னை பிடிக்காதுன்னு யார் சொன்னது என் வாயாடி மருமகளே… என்ன இருந்தாலும் துர்கா தான் என்னோட மூத்த மருமக, அவ வந்த பிறகுதான் என் வீட்டில நிறைய மாறி இருக்கு. அதுவும் என் மூத்த மகன் கார்த்திக் அவ்வளவு சீக்கிரம் யார் கூடயும் பேசாம… வெளியே எங்கேயும் போகாமல் ஆபீஸ் வீடுன்னு இருந்தவனை இன்னைக்கு எவ்வளவு தூரம் என் மகன் மாத்தி வச்சிருக்கார் தெரியுமா” என்றார் விசாலாட்சி.
“ஓஹோ என் அக்கா மட்டும்தான் அப்படி எல்லாம் செய்வாளா, நானும் தான் என் புருஷனை மாத்தி வச்சிருக்கேன்” என்றாள் கீர்த்திகா.
“அப்படியா, என்ன அப்படி என் மகனை நீ மாற்றி வச்சிருக்க?” என்று கேட்டார் விசாலாட்சி.
“முன்ன எல்லாம் எதற்கெடுத்தாலும் அம்மா அம்மா என்று மூச்சுக்கு 300 தடவை கூப்பிட்டு இருந்தவரை இன்னைக்கு என் பேரை சொல்லி கீர்த்து… கீர்த்துன்னு… கூப்பிடுற மாதிரி மாற்றி வச்சிருக்கேன், போதாதா?” என்று சிரித்தாள் கீர்த்திகா.
“வாயாடி, உன் பேரை சொல்லி கூப்பிடாம போனா நீ என் மகனை அப்படியே விட்டுடுவியா என்ன?” என்றவர், “நீதான் என் மகனை என்கிட்ட இருந்து பிரிச்சு வேற வீட்டுக்கு கூட்டிட்டு போயிட்டியே… அவனும் என் கூட இருந்திருந்தால் இந்த நேரத்துக்கு என்னை தான் அம்மா அம்மானு கூப்பிட்டு இருப்பான். உன்னை எதுக்கும் கூப்பிட மாட்டான்” என்று விசாலாட்சி விடாமல் கீர்த்திகாவிடம் வம்பு இழுக்க…
“ஓஹோ நான் தான் உங்க மகனை உங்க வீட்ல இருந்து பிரிச்சு உங்ககிட்ட இருந்து பிரிச்சு கூட்டிட்டு போனேனா… நீங்களும் மாமாவும் தான் கல்யாணமான கையோட எங்களுக்கு ஒரு வீட்டை கிப்ட்டா கொடுத்து அந்த வீட்டிலேயே போய் இருங்கன்னு அனுப்பி வச்சிட்டு, உங்க ஆசை மருமகளை மட்டும் கூடவே வச்சுக்கிட்டீங்க…. நீங்க தான் என்னையும் என் புருஷனையும் உங்ககிட்ட இருந்து பிரிச்சு அனுப்பி வச்சீங்க… இந்த வீட்டில நீங்க எல்லாரும் ஒண்ணா சந்தோசமா இருக்கீங்க… என்னையும் என் புருஷனையும் மட்டும் தனியா அந்த வீட்ல விட்டுட்டீங்களே” என்று வருத்தமாக கேட்டாள் கீர்த்திகா.
“உன்னை யாரு அங்கேயே இருக்க சொன்னது, பேசாம நீயும் கிளம்பி இங்கே வந்திருக்க வேண்டியதுதானே” என்றார் விசாலாட்சி.
“அது எப்படி வருது, நீங்க தான் என்னை துரத்தி விட்டுட்டீங்களே, நீங்களா கூப்பிடாம நான் இங்கு வரமாட்டேன்” என்று வேண்டுமென்றே விசாலாட்சியிடம் கீர்த்திகா வம்பிழுக்க..
இவர்கள் இருவரும் பேசுவதை பார்த்த துர்கா சிரித்துக் கொண்டே, “ஏய்… கீர்த்து கொஞ்சம் நேரம் வாய மூடுடி… எப்ப பாரு அத்தைகிட்ட வம்பு பேசிக்கிட்டே இருக்க” என்றாள் துர்கா.
“ஆமாம், உன் அத்தையை சொன்னா உனக்கு கோபம் வந்திடுமே” என்ற கீர்த்திகா, “ம்ஹும்… நான் எதுவும் சொல்லல அம்மா… நீயே வச்சுக்கோ அத்தையை, எனக்கு அவங்க அத்தையே இல்லை” என்று கீர்த்திகா துர்காவிடம் இப்போது கோபப்பட…
தன் தங்கை தன் மீது நிஜமாகவே கோபப்படுகிறாள் என்று அவள் அருகில் வந்த துர்கா, “ஏய் நான் சும்மா சொன்னேன்டி, இது இவங்க உனக்கும் தானே அத்தை. நீ அவங்க கிட்ட சண்டை போடாம வேற யார் சண்டை போட போறாங்க” என்று துர்கா கீர்த்திகாவை சமாதானம் செய்ய முயல..
“போ அக்கா, நீ ஒன்னும் எனக்கு சப்போர்ட் பண்ணிட்டு வர வேண்டாம், நீயும் அத்தையும் தான் எப்பவுமே ஒண்ணா சேர்ந்துக்கறீங்க, என்னை மட்டும் ஒதுக்கி வச்சுட்டீங்க, என் கூட பேசாதீங்க ரெண்டு பேரும் நான் உங்க கூட டூ” என்று போய் கோபம் கொண்டவள் போல இருவரிடமும் சண்டையிட்டு அங்கிருந்து எழுந்து வெளியே தோட்டத்திற்கு கீர்த்திகா செல்ல…
கீர்த்திகா உண்மையாகவே சண்டையிட்டு செல்கிறாள் என்று நினைத்த துர்கா அவள் பின்னால் எழுந்து செல்ல… விசாலாட்சியும் கீர்த்திகாவை சமாதானம் செய்ய அவர்களோடு பின்னால் சென்றார்.
இவ்வளவு நேரம் இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த சங்கவிக்கு, “ஆகா நம்மளுக்கு அடுத்த மூவ்க்கு இவர்களே லீட் எடுத்து கொடுத்துட்டாங்க. இதை வச்சு நாம இங்கே ஒரு நினைத்ததை சாதிக்கலாம்” என்று நினைத்த சங்கவி, கீர்த்திகாவும் துர்காவும் சண்டையிட்டு செல்வதை சிரித்தபடி பார்த்துக் கொண்டிருந்த வடிவை பார்த்தவள், “இவர்கிட்ட இருந்து ஆரம்பிச்சா தான் சரியா இருக்கும்” என்று யோசித்த படி…
“என்ன ஆன்ட்டி, கீர்த்திகாவும் துர்காவும் அவ்வளவு சீரியஸா சண்டை போட்டுட்டு போறாங்க, நீங்களும் அங்கிளும் அவங்க ரெண்டு பேரையும் பார்த்து சிரிச்சிட்டு இருக்கீங்க” என்று எதுவும் தெரியாதவள் போல கேட்டாள் சங்கவி.
“இவங்க ரெண்டு பேரும் இன்னைக்கு நேத்தா சண்டை போடுறாங்க சங்கவி, நான் எத்தனை வருஷமா இவங்க ரெண்டு பேரையும் பார்த்துக்கிட்டு இருக்கேன். இப்போ இவ்ளோ சண்டை போடுறவங்க கொஞ்ச நேரத்துல சமாதானம் ஆயிடுவாங்க” என்றார் வடிவு.
“ஐயோ ஆண்ட்டி… இத்தனை வருஷமா சண்டை போட்டதுக்கும்… இப்போ சண்டை போடுறதுக்கும் இருக்கிற வித்தியாசத்தை உங்களால புரிஞ்சுக்க முடியலையா?” என்று கேட்டாள் சங்கவி.
“நீ என்னம்மா சொல்ல வர, எனக்கு எதுவும் புரியல” என்று வடிவு சங்கவியை பார்த்து கேட்க…
“டேய் இத்தனை வருஷமா துர்கா அக்கா பாவம் கீர்த்திகா தங்கச்சியாவும் இருந்து ஒரே குடும்பம் ஒரே உறவுன்னு சண்டை போட்டுட்டு இருந்தாங்க, அதனால அவங்க சீக்கிரமாவே சமாதானமும் ஆகிட்டாங்க. ஆனா இப்போ அவங்க ரெண்டு பேரும் சண்டை போடறது எதுக்காக? இந்த வீட்டோட மருமகள் என்கிற அந்தஸ்துக்காக. விசாலாட்சி அத்தைக்கு யாரை ரொம்ப பிடிக்கும்ங்கிறதுக்காக… அண்ணனோட மனைவியாக துர்காவும், தம்பியோட மனைவியாக கீர்த்திகாவும் இப்போ சண்டை போட்டுக்குறாங்க. கீர்த்திகா பேசியது எல்லாம் நல்லா கவனிச்சிருந்தீங்கன்னா உங்களுக்கு அவங்க ஏன் சண்டை போடுகிறார்கள் என்கிற வித்தியாசத்தை கண்டுபிடித்து இருக்க முடியும்” என்றாள் சங்கவி.
“சும்மா சொல்ற, என் பொண்ணுங்க ரெண்டு பேரும் உண்மையாவே சண்டை போட்டு இருக்காங்கன்னு சொல்ல வரியா?” என்று கேட்டார் வடிவு.
“உங்க ரெண்டு பொண்ணு இல்ல ஆண்ட்டி, உங்களோட ஒரே ஒரு பொண்ணு கீர்த்திகா மட்டும்தான். துர்கா தான் யாரோட பொண்ணுன்னு ஆயிட்டாலே, அவ தான் கனகா அம்மாவோட பொண்ணு ஆயிடுச்சு” என்று சங்கவி சொல்ல…
“துர்காவுக்கு கனகா அம்மாவின் மகளான பிறகு உங்க மேல கொஞ்சமும் அக்கறை இல்ல.. ஒரு ரெண்டு நாள் முன்ன கார்த்திக்கும் துர்காவும் பேசிக் கொண்டிருந்ததை அந்த வழியே போன நான் கேட்டேன். துர்கா கிட்ட ‘ஏன் துர்கா நீ உன் அம்மாவ பாக்க போகவே இல்ல’ அப்படின்னு கார்த்திக் கேட்டான். துர்கா என்ன பதில் சொன்னா தெரியுமா?” என்று சங்கவி பேசுவதை நிறுத்திவிட்டு வடிவை பார்க்க..
“துர்கா என்ன சொன்னா சங்கவி?” என்று ஆர்வமாக கேட்டார் வடிவு.
“அம்மா தான் என் கூடவே இருக்காங்களே நான் ஏன் அவங்கள பார்க்க போகணும் என்ன கார்த்திக் பேசுற நீ என்று கேட்டாள் துர்கா. உடனே கார்த்திக் ‘ஏய் துர்கா நான் நம்ம கூடவே இருக்க கனகா அத்தையே சொல்லல.. உன்ன விட்டு இப்போ தள்ளி இருக்கிற…. உன்னோட இத்தனை வருஷமா உன்ன கண்ணும் கருத்துமா வளர்த்த வந்த உன்னோட வடிவ அம்மாவை தான் சொல்றேன்’ என்றான் கார்த்திக். அதைக் கேட்டு துர்கா ‘ஓ… அவங்களா’ என்று அலட்சியமாக பேசியவள் ‘அவங்களை எதுக்கு நான் போய் பார்க்கணும்’ என்றால். ‘ஏய் துர்கா எப்படி கேட்டுட்ட, உன்ன இத்தனை வருஷமா வளர்த்திருக்காங்க அந்த நன்றிக்காகவாவது நீ அவங்கள போய் அப்பப்போ பார்த்து எப்படி இருக்காங்க எதுவும் வேண்டுமானு அக்கறையா பேசிட்டு கேட்டு வர வேண்டாமா’ என்றான் கார்த்திக். இத்தனை வருஷமா என்னை வளர்த்ததுக்கு தான் நான் அவங்களுக்கு என்னால முடிஞ்ச அளவுக்கு எல்லாமே செய்து கொடுத்துட்டேனே. இனியும் அவங்களயே நான் கவனிச்சிட்டு இருந்தா… என்னோட அம்மா அப்பாவ எப்போ தான் நான் கவனிக்கிறது என்றால் துர்கா. என்ன துர்கா நீ இப்படி பேசுற… கனகா அத்தையும் துரை மாமாவும் இங்கே எந்த குறையும் இல்லாமல் சந்தோஷமாத்தான் இருக்காங்க. நாங்க அவங்களை அந்த அளவுக்கு பாத்துக்குறோம். ஆனா உன்னோட அம்மா அப்பாவை பார்த்துக்க வேற யாரு இருக்கா? நீயும் கீர்த்திகாவும் மட்டும் தான் இருக்கீங்க…. கீர்த்திகா அவளால முடிஞ்ச அப்போ எல்லாம் போய் உன்னோட அம்மா அப்பாவை பார்த்துட்டு தான் வரான்னு கதிர் என்கிட்டே சொல்லி இருக்கான் என்றான் கார்த்திக். ‘ஓ கீர்த்திகா எனக்கு தெரியாம அவங்கள போய் பாத்துட்டு வந்துட்டு தான் இருக்காளா? பிறகு என்ன கார்த்திக் அவதான் இருக்காலே அவங்கள பாத்துக்க நானும் வேற அவங்கள தனியா கவனிச்சுக்கணுமா’ என்றால் துர்கா. என்ன துர்கா இப்படி கொஞ்சமும் பொறுப்பு இல்லாம பேசுற உன்கிட்ட இருந்து இப்படி ஒரு பதிலை எதிர்பார்க்கவே இல்லை. உன்னோட கஷ்டம் நஷ்டத்துல நீ கவலைப்பட்ட போது உனக்கு முடியாது அப்போ எல்லாம் வடிவு அத்தையும் முருகன் மாமாவும் தான் உன்ன கூட இருந்து கண்ணும் கருத்துமா பாத்துக்கிட்டாங்க. அப்படிப் பட்டவங்களையே நீ இன்னைக்கு உதாசீனப்படுத்தி பேசுவதை பார்த்தால் மத்தவங்களை எல்லாம் நீ எப்படி நடத்துவ என்று கார்த்திக் துர்காவிடம் கேட்டான். பாரு கார்த்திக் எல்லாருக்கும் எப்பவும் என்னால நன்றி கடன் பட்டுட்டே இருக்க முடியாது. அவங்க அவங்களோட வாழ்க்கையை அடுத்தடுத்த கட்டத்துக்கு போயித்தான் ஆகணும். அவங்க இத்தனை வருஷமா என்ன பாத்ததுக்கு அதைவிட பல மடங்கு நான் இவங்களுக்கு செஞ்சிருக்கேன். நான் வேலை பார்த்த மொத்த பணத்தையும் என் அம்மா அப்பாவுக்குத் தான் கொடுத்தேன். அவங்கள அவங்க கூட இருந்த வரைக்கும் நான் நல்லாத்தான் பாத்துட்டு இருக்கேன் அதுக்காக என்னால சாகுற வரைக்கும் அவங்கள பாத்துக்க முடியாது.. இனிமேல் இத பத்தி பேசுறது விட்டுடு அவங்கள பாத்துக்க தான் கீர்த்திகா இருக்காலே நானும் தனியா பார்த்துக்கணும்னு எந்த அவசியமும் இல்லை என்று சொல்லி கோபமாக எழுந்து உள்ளே சென்று விட்டாள்” என்று சங்கவி கதையை முடித்தாள்.
துர்காவின் உண்மையான குணம் இதுதான் என்று யோசிக்கும் அளவிற்கு கார்த்திக் அவளையே பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான் என்று கூறி, வடிவிடம் துர்காவும் கார்த்திக்கும் பேசாததை எல்லாம் அவர்கள் அருகில் நின்று கேட்டது போல… இவளாகவே தனியாக ஒரு கதையை ஜோடித்து அதை வடிவும், முருகனும் நம்பும் படியாக கதை கட்டி விட்டாள்.
அவர்களும் சங்கவி தங்கள் மகளை தங்களிடம் பிரிப்பதற்காகத்தான் இப்படி பொய்யின் கதை சொல்கிறாள் என்று தெரியாமல் சங்கவி சொல்வது அனைத்தும் உண்மை என்று நம்பி துர்கா பற்றிய தங்கள் மனதில் இத்தனை நாள் இருந்த எண்ணத்தை மாற்றி… அவள் மீது வெறுப்பு தோன்ற ஆரம்பித்தது.
வடிவு தன் அருகில் இருந்த முருகனைப் பார்க்க அவரும் வடிவு இருந்த மனநிலையில் தான் அமர்ந்திருந்தார். அவரும் வடிவை பார்த்தவர் என்ன சொல்வது என்று தெரியாமல் அமைதியாக அமர்ந்திருக்க….
அவர்கள் இருவரின் முகத்திலும் இருந்த குழப்பத்தை கண்ட சங்கவி, “அப்பாடா… இப்பதான் எனக்கு நிம்மதியா இருக்கு. இப்பத்தான் ஒரு குட்டையை குழப்பி விட்டிருக்கேன் சீக்கிரமா அதிலிருந்து மீனை பிடிக்கணும்” என்று நினைத்தபடி வந்த வேலை முடிந்துவிட்டது என்று மீண்டும் தன் ரூமிற்கு சென்று விட்டாள் சங்கவி .
கீர்த்திகாவை சமாதானம் செய்யச் சென்ற துர்காவும் விசாலாட்சியும் கீர்த்திகாவை சமாதானம் செய்து உள்ளே அழைத்து வர…
ஹாலில் வடிவும் முருகனும் அமைதியாக அமர்ந்திருப்பதை பார்த்த விசாலாட்சி அவர்களிடம் வந்தவர், “என்ன இன்னும் ரெண்டு பேரும் டீ குடிக்காம இருக்கீங்க… டீ ஆறிட போகுது இந்தாங்க குடிங்க..” என்று அவர்களிடம் டீ டம்ளரை எடுத்து நீட்ட…
“டீ ஆறினா என்ன சம்மந்தி அதை திரும்பவும் சூடுபடுத்தி குடிச்சுக்கலாம். ஆனா இங்கே எங்க மனசுல இருக்கிறது ஆற முடியாமல் நானும் என் புருஷனும் தான் கஷ்டப்படுறோம்” என்றவர், “ஏங்க வாங்க போகலாம்” என்று சொல்லி முருகனை அழைத்துவிட்டு எழுந்து வெளியே செல்ல…
முருகனும் துர்காவை பார்த்துவிட்டு அவளிடம் எதுவும் சொல்லிக் கொள்ளாமல் விசாலாட்சி இடமும் கீர்த்திகாவிடமும் மட்டும் சொல்லிவிட்டு “எங்களுக்கு கொஞ்சம் வேலை இருக்கு நாங்க இன்னொரு நாள் வாரோம்” என்று அங்கிருந்து கிளம்ப…
இருவரும் தன்னிடம் முகம் கொடுத்து பேசாமல் செல்வதை பார்த்த துர்காவிற்கு மிகவும் மனது கவலையாக இருந்தது. தாங்கள் வெளியே செல்லும் வரை நன்றாக தானே இருந்தார்கள். அதற்குள் ஏன் அவர்கள் இப்படி மாறிவிட்டார்கள் என்று அவர்களை நினைத்து வருத்தப்பட்டாள் துர்கா.
துர்காவின் முகம் வடிவும் முருகனும் சென்று விட்டதை பார்த்து சோகமாகிவிட… அதை கவனித்த விசாலாட்சியும் கீர்த்திகாவும் அவளிடம் வந்தவர்கள் அவளை சமாதானம் செய்ய முயல… ஆனால் துர்காவோ தன் தாய் தந்தை தன்னிடம் இப்படி முகம் கொடுத்து பேசாமல் செல்வதை ஏற்றுக் கொள்ள முடியாமல் மிகவும் மன வருத்தத்தோடு அமர்ந்திருந்தாள்.
கீர்த்திகாவிற்கு தன் அம்மா அப்பாவிடம் கோபம் தான் வந்தது. அவர்கள் ஏன் இப்படி நடந்து கொண்டார்கள் என்று அவர்கள் மீது கோபம் வர… “அக்கா நீ கொஞ்சம் இங்கேயே இரு நான் இப்போ வரேன்” என்று வாசலை தாண்டி சென்று கொண்டிருந்த வடிவையும் முருகனையும் நோக்கி விரைந்தாள் கீர்த்திகா.
