EPISODE 11
“என்ன கிழவி, சமையல் வாசனை ஊரையே தூக்குது? என்ன ஸ்பெஷல் இன்னிக்கு?” என்றவாறு கிச்சன் பக்கம் வந்தார் ராஜன்.
“நம்ம சின்ன ராசாவுக்கு நாட்டுக்கோழி குழம்பும் சில்லியும் ரெடி ஆகுது ராசா,” என்று பணிப்பெண்ணிடம் வேலை வாங்கிக்கொண்டே பேசினார் பழனி.
“ஓஹோ, துறைக்கு என்னை குளியல் நடந்துச்சுன்னு கரி சோறு செய்யுறியோ?” என்றவர், “ஆமா, எங்க அவன்? ஆளையே காணோம். காலையில் ஏதோ பஞ்சாயத்துன்னு போனானே, இன்னும் வரல,” என்று வாசலில் அக்னியின் பைக் இருக்கிறதா, அவன் ஏற்கனவே வந்துவிட்டானா என்று பார்த்துக்கொண்டே கேட்டார்.
“அதுவா, பஞ்சாயத்து இன்னும் முடியலையாம். குட்டி ராசா வீட்டுக்கு வரமாட்டாராம். தம்பியை அனுப்பி வைக்கிறேன். அவன்கிட்டே, இரண்டு ஆள் சாப்பிடற அளவுக்கு சாப்பாடு செஞ்சு கொடுக்க சொல்லிச்சு,” என்றார் கிழவி.
அந்த நேரம் தம்பி வர,
“வாடா அவனே ஒரு வெட்டிப்பய. அவனுக்கு நீ ஒரு ஒத்து ஊது,” என்று சலித்துக்கொண்ட ராஜன், “நான் கூட இவ்ளோ பஞ்சாயத்து என் வயசுல பார்க்கலடா. இவன் என்னடா, எப்பப் பாரு ஏதாவது பஞ்சாயத்து, அடி, தடின்னு பிஸியாவே இருக்கானே,” என்றார் ராஜன்.
“என்ன செய்றது தல? மச்சி அப்படி பைசல் பண்ணி வைக்குது. அதான் எப்பவும் பிஸியாவே இருக்கு,” என்றவன், “பழனி, சமையல் ரெடியா? எனக்கு ரொம்ப பசிக்குது. நீ எனக்கு முதல்ல போடு. நான் சாப்பிட்டு மச்சிக்கு கொண்டு போறேன்,” என்றான்.
அதை கேட்ட ராஜன், “ஏன்டா, ரெண்டு ஆளுக்கு கொடுத்து விட சொல்லிட்டான். நீயும் எடுத்துட்டு போய் அவன் கூடவே சேர்ந்து சாப்பிட வேண்டியதுதானே?” என்றார்.
“இல்ல தல. மார்க்கெட் வீட்ல ஆளுங்க இருக்காங்க. அவங்க சாப்பிடத்தான் சாப்பாடு கொடுத்து விட சொல்லிருக்கு மச்சி. நான் சாப்பிட்டு அவங்க ரெண்டு பேருக்கும் எடுத்துட்டு போறேன்,” என்றவன் பழனி பரிமாற, சாப்பிட ஆரம்பித்தான் தம்பி.
“யாருடா அது? பஞ்சாயத்து பண்ண வந்த ஆளுக்கு சாப்பாடு எல்லாம் போட்டு அனுப்பறது? பொதுவா பஞ்சாயத்து பண்ணினா சாப்பாடு நமக்கு இல்ல, வாங்கி தருவாங்க. இது என்ன புதுசா இருக்கு?” என்றார் ராஜன்.
“அதுவா தல, இந்த பஞ்சாயத்து கொஞ்சம் புதுசு,” என்று தூரிகாவையும் ஆராதனாவையும் பற்றி சொன்ன தம்பி, “அவங்களுக்குத்தான் இந்த சாப்பாடு,” என்றான்.
“என்னடா சொல்ற? மார்க்கெட் வீட்ல ஒரு பொண்ணு இருக்குன்னு என்கிட்டே சொன்னான். இப்போ என்ன, கூட ஒரு குழந்தை வேற இருக்குன்னு நீ சொல்ற?” என்றார் அதிர்ச்சியாக.
‘அய்யய்யோ, அவசரப்பட்டு அப்பாகிட்டே விஷயத்தைச் சொல்லிட்டேனே. இவரு என்ன நினைப்பாரோ தெரியலையே,’ என்று நினைத்த தம்பி, அவசர அவசரமாக சாப்பிட்டுவிட்டு, அக்னிக்கும் தூரிகாவுக்கும் சாப்பாட்டை எடுத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பி இருந்தான்.
“என்ன பெருசு, போன வாரம் பணம் கொடுக்கல. இந்த வாரமும் வந்தாச்சு. நீயா கூப்பிடுவேன்னு பார்த்துட்டு இருந்தேன். என்ன, ஒரு போனைக்கூட காணோம்?” என்றான் அக்னி.
“இல்ல அக்னி, சாயங்காலம் வரை வியாபாரம் பார்த்துட்டு, உன்னை பார்க்க வரலாம்னு இருந்தேன். இப்போதான் எல்லாத்தையும் எடுத்து வெச்சிட்டு உன்னை பார்க்க வரலாம்னு இருந்தேன்,” என்றார்.
“சரி சரி, அப்போ ரெண்டு வார வட்டி பணத்தையும் கொடு பெருசு. நான் கிளம்பறேன்,” என்றான்.
“என்ன அக்னி, இன்னிக்கு இவ்ளோ சீக்கிரமா கிளம்பணும்னு சொல்ற? ஏதும் முக்கியமான வேலையா?” என்றார் பெருசு.
“அதெல்லாம் எதுவும் இல்ல பெருசு,” என்று அவன் பேசிக்கொண்டிருக்கும்போதே, மார்க்கெட்டில் இருந்தவனுக்கு போன் செய்திருந்தான் தம்பிரான்.
“சொல்லுடா,” என்றான் அக்னி.
“பழனி சாப்பாடு கொடுத்துவிட்டிருக்குடா. நான் மார்க்கெட் வீட்டுக்கு கிளம்பிட்டேன். அதான் உன்கிட்டே கூப்பிட்டு சொல்லிட்டு கிளம்பலாம்னு கால் பண்ணினேன்,” என்றான்.
“சரி, சீக்கிரம் வந்திரு. ஆரா குட்டி பசியோட இருப்பா,” என்று போனை வைத்தவன், வசூல் பணத்தை எடுத்துக்கொண்டு மார்க்கெட் வீட்டிற்கு செல்ல, தம்பி இவனுக்காக வாசலிலேயே காத்திருந்தான்.
“ஏன்டா, கதவை தட்டிட்டு உள்ள போயிருக்க வேண்டியதுதானே? ஏன் இங்கேயே இருக்க?” என்று வந்தான் அக்னி.
“இல்ல மச்சான், ஆராவும் அவ அம்மாவும் தனியா இருப்பாங்க. நீ வந்ததும் போலாம்னு வெய்ட் பண்ணினேன்,” என்று காம்பௌண்டிற்கு வெளியே நின்று இருந்த தம்பி, வண்டியை ஸ்டார்ட் செய்து உள்ளே செல்ல, அக்னியின் வீட்டு கதவு திறந்திருந்தது. உள்ளே இருட்டாக இருந்தது.
“என்ன மச்சான், கதவு திறந்திருக்கு? ஒரு லைட்கூட போடல?” என்றபடி பைக்கை இருவரும் வீட்டின் முன் நிறுத்திவிட்டு இறங்க, அந்த காட்சி என்னவோ அக்னிக்கு சரியாக படவில்லை. ‘ஏதோ சரி இல்ல,’ என்று அவனுக்கு தோன்றவே, வேகமாக வீட்டிற்குள் வந்தவன், “ஆரா! ஆரா குட்டி!” என்று அழைத்துக்கொண்டே வந்து விளக்கை போட்டான்.
இருவரும் ஹால் இருந்த நிலையை பார்த்து அதிர்ந்து போயினர். வீடே தலைகீழாக கிடந்தது. பொருட்கள் எல்லாம் தரையில் சிதறி இருக்க, அந்த இடமே அங்கு நடந்த கலவரத்தை புரியவைத்து இருந்தது.
“டேய் மச்சி, என்னடா இது? ஆராவையும் அவ அம்மாவையும் காணோமே. என்ன ஆச்சுன்னு தெரியலையே. அந்தப் பொண்ணோட புருஷன், நாம இல்லாத நேரம் வந்து இவங்களை மிரட்டி கூப்பிட்டு போய்ட்டாங்க போல இருக்கே,” என்று பதறினான்.
அக்னிக்கு தம்பி பேசியது எதுவும் காதில் விழவில்லை. தூரிகாவுக்கும் ஆராதனாவுக்கும் என்ன ஆனது என்ற கேள்விதான் அவன் மனதில் ஓடிக்கொண்டு இருந்தது. அவர்கள் எங்கே இருக்கிறார்கள்? இருவருக்கும் என்ன ஆனது? என்று புரியாமல் அவன் தலையே வெடித்துவிடும் போல இருந்தது.
அப்போது அக்னியின் போன் அலறியது. அதை எடுத்துப் பார்க்க அவன் நண்பன் தான் அழைத்து இருந்தான். அதை எடுத்து பேசும் மனநிலையில் தான் இப்போது இல்லை என்று நினைத்தவன், போனை கட் செய்தவன், “தம்பி, பக்கத்து வீட்டு அக்காகிட்ட ஆராவையும் தூரிகாவையும் யாராவது வந்து அழைச்சிட்டு போனாங்களான்னு கேட்டுட்டு வா,” என்று அவனை அனுப்பி வைத்தான்.
தம்பியும் அங்கிருந்து கிளம்ப, அப்போது அக்னியின் போனில் இருந்து நோட்டிபிகேஷன் சவுண்ட் வர, அதை எடுத்து ஓபன் செய்து பார்த்தவன், அவனுக்கு வாட்ஸப்பில் வந்திருந்த புகைப்படத்தைப் பார்த்து அதிர்ந்து போனான்.
உடனே தன் நண்பனுக்கு கால் செய்தவன், “டேய் அர்ஜுன், ஆரா எப்படிடா உன்கிட்டே வந்தா? அவளுக்கு என்ன ஆச்சு? ஏன் ஆரா முகம் எல்லாம் ரத்தமா இருக்கு? தூரிகா எங்க?” என்றான் பதற்றமாக.
“அக்னி, அக்னி, ரிலாக்ஸ் டா. நீ உடனே கிளம்பி ஸ்டேஷனுக்கு வா. நான் நேர்ல விஷயத்தைச் சொல்றேன்,” என்றான் அவன் நண்பனும் டிஎஸ்பியுமான ராகவ், அக்னியிடம் சொல்லிவிட்டு போனை வைத்தான்.
அதற்குள் வெளியே சென்றிருந்த தம்பி பதற்றமாக உள்ளே வந்தவன், “மச்சி, கொஞ்ச நேரத்துக்கு முன்ன போலீஸ் ஜீப் ஒண்ணு நம்ம காம்பௌண்டுக்குள்ள வந்திருக்கு. போலீஸ் ஆளுங்களோட ஆராதனாவோட அப்பா, அதான் அந்த சாமிநாதன் வந்திருக்கான். இவங்க வரமுடியாதுன்னு சொல்லியும் ஏதோ பெரிய பிரச்சனை பண்ணி, அவங்களை கூப்பிட்டு ஸ்டேஷன் போயிருக்காங்கடா,” என்றான்.
“இப்போதான் ராகவ் எனக்கு கால் பண்ணினான். நான் இப்போ ஸ்டேஷனுக்குத்தான் கிளம்பறேன். நீ வீட்டை பூட்டிட்டு வந்திரு,” என்று அங்கிருந்து கிளம்பி இருந்தான் அக்னி.
ஸ்டேஷனுக்குள் வந்ததும் வராததுமாக அக்னியின் விழிகள் ஆராவைத்தான் தேடியது. இவ்வளவு நேரம் அழுது, அந்த ஸ்டேஷனையே ஆர்ப்பாட்டம் பண்ணிக்கொண்டு இருந்த ஆராதனா, அக்னியைப் பார்த்ததும் “ரவுடி மாமா!” என்று ஓடிவந்து அவன் காலை கட்டிக்கொண்டு அழுதாள். அவளை கையில் எடுத்தவன், அவள் முகத்திலும் ஆடையிலும் திரித்திருந்த ரத்த துளிகளைப் பார்த்து அதிர்ந்து போனான்.
“வா அக்னி, உள்ள வா பேசிக்கலாம்,” என்று அதிர்ந்து நின்று இருந்தவனை தன் கேபினுக்கு அழைத்து சென்றான் ராகவ்.
“என்ன ஆச்சு ராகவ்? இது இவ என்ன ரத்தம்? ஆராவோட அம்மா எங்கடா? அவங்களுக்கு ஏதாவது ஆகிடுச்சா? நான் இல்லாத பொது என் வீட்டுக்கு போலீஸ் வந்திருக்கு. என்ன ஆச்சுடா?” என்று அழுது கொண்டு இருந்த ஆராவை தோளில் சாய்த்து தட்டிக்கொடுத்துக்கொண்டே கேட்டான் அக்னி.
“சொல்றேன்டா. வெயிட் பண்ணு,” என்ற ராகவ் தன் மேஜையில் இருந்த மணியை அழுத்தவும் உள்ளே ஒரு கான்ஸ்டாபிள் வந்தார். “நீங்க போய் இந்தக் குழந்தையோட அப்பாவையும் அப்படியே அர்ஜுனையும் அழைச்சிட்டு வாங்க,” என்றான்.
“அவனுங்களை இப்போ யாரு கேட்டது ராகவ்? ஆராவோட அம்மாவுக்கு என்ன ஆச்சு?” என்றான் பதற்றமாக.
அக்னி பதட்டப்படுவதை வினோதமாக பார்த்த ராகவ், “கொஞ்சம் பொறுடா,” என்றவன், உள்ளே வந்த சாமிநாதன் வர, அவனுடன் விறைப்பாக வந்து நின்றான் அர்ஜுன். DSP பதவியில் இருப்பவன் ராகவும் அர்ஜுன் நண்பர்கள் தான். ஆனால், டியூட்டி என்று வரும்போது இருவரும் எதிரும் புதிரும்தான்.
உள்ளே வந்த அர்ஜுனைப் பார்த்தவன், “அர்ஜுன், நீ ஏன் இவன் கூட வர? இவன் பண்ணின காரியத்துக்கு இவனை அரெஸ்ட் பண்ணி இங்க கூப்பிட்டு வந்திருக்கியா?” என்றான் அக்னி.
“அக்னி, வெய்ட்,” என்று அவனை அமைதிப்படுத்திய ராகவ், “யாரோட இன்ப்ளூயன்சுல நீங்க அக்னி வீட்டுக்கு போனீங்க மிஸ்டர் அர்ஜுன்?” என்றான் ராகவ் சற்று அதட்டும் தோரணையில்.
“சார், நான் யாரோட இன்ப்ளூயன்ஸுக்கும் வேலை பார்க்கிறவன் கிடையாது. எனக்கு கம்ப்ளைன்ட் வந்துச்சு. நான் நேர்ல விசாரிக்க போனேன்,” என்றான் விறைப்பாக.
“என்ன கம்ப்ளைன்ட்? யார் கொடுத்தா?” என்றான் ராகவ்.
“ஏன், நான் தான். என்னோட ஸ்டாஃப்க்கு சப்போர்ட் பண்ணணும். என் சைடுல இருந்து கம்ப்ளைன்ட் ரைஸ் பண்ணிருக்கேன்,” என்று பாக்கெட்டிற்குள் கை விட்டபடி உள்ளே நுழைந்தான் அபிமன்யு.
“சார், நீங்களா?” என்று ஆச்சர்யமாக பார்த்த ராகவ், “ப்ளீஸ் டேக் யுவர் சீட்,” என்று அக்னிக்கு பக்கத்தில் இருந்த இருக்கையை காண்பித்து கூறினான்.
அக்னியை திரும்பி பார்த்த அபிமன்யு, “சாமிநாதன், இவன்தான் உங்க மனைவியை வெச்சிருக்கானா?” என்றான்.
அதை கேட்டு அங்கிருந்தவர்கள் அதிர்ந்து அக்னியைப் பார்க்க,
“என்னடா சொன்ன?” என்று எழுந்து அபிமன்யுவின் சட்டையை கொத்தாக பிடித்திருந்தான் அக்னி.
“அக்னி!” என்று ராகவ், அர்ஜுன் இருவரும் பதற,
அபிமன்யுவோ, “ஆப்டெர் ஆல் மார்க்கெட் ரவுடி நீ என் சட்டையை பிடிக்கிறியா? நீ…” என்று அடுத்த நொடி அபிமன்யு அக்னியின் சட்டையை பிடித்திருந்தான்.
“டேய், வார்த்தையை அளந்து பேசு. நீ யார் டா புதுசா இங்க நடக்குற பிரச்சனைக்குள்ள வந்திருக்க? உனக்கும் இவனுக்கும் என்னடா சம்பந்தம்?” என்றான் அக்னி மேலும் அபிமன்யுவின் சட்டையை நெருக்கி.
“டேய், உனக்கு எவ்ளோ தைரியம் இருந்தா என் பாஸோட சட்டையை பிடிப்ப? விடுடா அவரை. என் பொண்டாட்டியை கூப்பிட்டு வந்து கூட வெச்சுக்கிட்டதும் இல்லாம, நியாயம் கேட்க வந்த என் பாஸையே சட்டையை பிடிச்சு கேள்வி கேட்கிறியா?” என்றான் சாமிநாதன்.
“நீயே ஒரு தெரு பொறுக்கி. உனக்கு பாஸா இருக்கிற இவன் எப்படி இருப்பான்? அவனும் உன்னை மாதிரிதானே இருப்பான்?” என்று அபிமன்யுவை எரித்துவிடுவது போல பார்த்தான் அக்னி.
EPISODE 12
டேய், அக்னி, அவர் மேல இருந்து கையை எடு. இவர் யாருன்னு தெரியாம… என்று அக்னியையும் அபிமன்யுவையும் விலக்கிவிட்டான் ராகவ்.
டேய், இவன் யாரா இருந்தா எனக்கென்னடா? ஒரு பொண்ணைப் பத்தி எப்படி இவன் இவ்வளவு கேவலமா, அதுவும் என்ன நடந்துச்சுன்னு தெரியாம பேசுறான்? இவனை சும்மா விடச் சொல்றியா?” என்று மீண்டும் அபிமன்யுவின் சட்டையை அக்னி பிடிக்கப் போக,
டேய், சும்மா இருடா!” என்று அர்ஜுன் குறுக்கே புகுந்து அக்னியை பிடித்துக்கொண்டான்.
டேய் அக்னி, இவர் லக்ஷ்மி கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் உடைய CEO, மிஸ்டர் அபிமன்யுடா. இவரைப் போய்…” என்று அவனை நிறுத்தினான்.
டேய், இவன் யாரா இருந்தா எனக்கென்னடா வந்தது? இவன் பேசின விதம் எனக்கு பிடிக்கல. நான் யாரு, என்னன்னு எதுவுமே தெரியாம, இவனோட ஸ்டாப் சொன்னான்னு ஒரே காரணத்துக்காக, என்னையும் இந்த கேவலமானவனோட பொண்டாட்டியையும் எப்படிடா இவன் சேர்த்து வெச்சு பேசலாம்?” என்று கொதித்து எழுந்தான் அக்னி.
ஹே, நீ பண்ணின காரியத்துக்கு நீ யாரு, என்ன, உன் குலம் என்ன, கோத்திரம் என்னன்னு பார்த்து பேசணுமா?” என்றான் அபிமன்யு.
அக்னி திமிறிக்கொண்டு நின்றான்.
அவர்கள் குறுக்கே வந்த ராகவ், ப்ளீஸ் மிஸ்டர் அபிமன்யு, கொஞ்சம் பொறுமையா உட்கார்ந்து பேசலாமே. ரெண்டு பேரும் இப்படி மாறி மாறி பேசிட்டு இருக்குறதுனால எந்த பிரச்சனையையும் சால்வ் பண்ண முடியாது” என்றான்.
ஓகே ராகவ். நீங்க சொன்னதுக்காக நான் அமைதியா இருக்கேன். என்னோட ஸ்டாப் என்கிட்டே ரெக்வெஸ்ட் பண்ணிக் கேட்டதுனாலதான் நான் இவ்வளவு தூரம் வந்தேன். நான் சொல்லித்தான் இவர் என் பிராஞ்சுக்கு வந்திருக்கார். இவர் இந்த ஊருக்கு என்னால் தான் வந்திருக்கார். அந்த காரணத்துக்காகத்தான் நானே நேர்ல வந்திருக்கேன்” என்று அங்கிருந்த சேரில் அமர்ந்துகொண்டே பேசினான் அபிமன்யு.
“ம்ஹும்… அவங்க ஸ்டாப் மேல இவ்வளவு அக்கறை காட்டுறவர், அவர் ஃபேமிலியில என்ன நடக்குதுன்னு தெரிஞ்சுக்க வேண்டாமா?” என்றான் அக்னி.
அவனை முறைத்த அபிமன்யு, “ஷண்முகம்!” என்று அழைத்தான்.
“சார்!” என்று அவன் முன் பவ்யமாக, பாவமாக வந்து நின்றான் சாமிநாதன்.
“நீங்களே என்ன நடந்துச்சுன்னு சொல்லுங்க. அதுதான் சரியா இருக்கும்” என்றான் அபிமன்யு.
“சரிங்க சார்” என்று பவ்யமாக பேசியவன் அக்னியைப் பார்த்தான்.
பின் ராகவிடம் திரும்பி, “சார், நாங்க இந்த ஊருக்கு வந்து கொஞ்ச நாள் ஆச்சு. என் பொண்டாட்டி காய்கறி வாங்க அடிக்கடி மார்க்கெட் போயிட்டு வர்றது வழக்கம். அவளோட என் பொண்ணு ஆராதனாவும் போவா” என்றவன், தன் உடலில் அக்னி அடித்து ஏற்பட்ட காயத்தைச் சுட்டிக்காட்டி,
“மார்க்கெட்ல இவனை அடிக்கடி பார்த்து எப்படியோ அவளுக்கும் இவனுக்கும் பழக்கம் ஆகிடுச்சு. இவனை அடிக்கடி பார்க்க மார்க்கெட் போறா. கொடுமை என்னன்னா, என் பெண்ணையும் கூப்பிட்டுப் போறா. நீங்களே சொல்லுங்க, இதையெல்லாம் பார்த்துட்டு நான் எப்படி சும்மா இருக்க முடியும்? ‘ஏன்டி மார்க்கெட் போற? இவனை ஏன் பார்க்கப் போற?’ன்னு கேட்டா வாயையே திறக்க மாட்டேங்குறா. நான் சொன்னதையும் மீறி மார்க்கெட் போயிடுறா. அதைத் தட்டிக் கேட்டா, இவனை வெச்சு என்னை அடிச்சுத் துரத்துறா. போதாததுக்கு, என் பொண்ணையும் சேர்த்து பிடிச்சு வெச்சிருக்கான். கூப்பிட போன என்னை அடிச்சு அனுப்பறான்” என்று இல்லாததை உள்ளதுபோல நடித்துப் பேசினான்.
அதையெல்லாம் கேட்டு ஏற்கனவே கொதித்துக்கொண்டிருந்த அக்னி மேலும் கோபமானான். கோபமாக சாமிநாதனிடம் செல்லப் போனவனை, கையைப் பிடித்து தடுத்து நிறுத்தி இருந்தான் அர்ஜுன்.
“கொஞ்சம் பொறுமையா இருடா. உன்னை பத்தி எங்களுக்கு நல்லாவே தெரியும். இவன் என்னதான் சொல்ல வர்றான்னு பார்க்கலாம்” என்று அவனை அமைதிப்படுத்தினான்.
“கேட்டீங்களா மிஸ்டர் ராகவ்? இப்போ என்ன செய்யலாம்ன்னு நீங்களே சொல்லுங்க. அடுத்தவன் பொண்டாட்டியை அவங்க குழந்தையோட இவன் வீட்டுல வெச்சுட்டு அனுப்ப மாட்டேன்னு சொல்ற இவன் மேல கம்ப்ளைன்ட் கொடுத்துள்ள எந்தத் தப்பும் இல்லையே?” என்றான் அபிமன்யு.
“ஹே, தேவையில்லாம என்னைப் பத்தி பேசுற வேலை வேணாம். என்ன நடந்துச்சுன்னு தெரியாம நீ எதையும் பேசாத” என்றான்.
“எல்லாம் தெரிஞ்சுதான் நான் பேசுறேன்” என்ற அபிமன்யு ராகவிடம் திரும்பி, “சாமிநாதன் பேசினதையெல்லாம் நீங்க கேட்டுட்டுதானே இருந்தீங்க? இப்போ என்ன செய்றது நீங்களே சொல்லுங்க” என்றான்.
“சார், ஒரு பக்கம் மட்டும் நியாயத்தைக் கேக்குறது சரி இருக்காது. கொஞ்சம் பொறுங்க. நான் இவரோட மனைவியையும் கூப்பிட்டு வெச்சு விசாரிக்கிறேன். அக்னி, நீ என்ன சொல்ற?” என்றான் ராகவ்.
“ம்ம்ம்” என்று சம்மதமாக அக்னி தலையை ஆட்ட,
“ப்ரியா, அவங்களை கூப்பிட்டு வாங்க” என்றான் ராகவ்.
“ஓகே சார்” என்ற கான்ஸ்டபிள் ப்ரியா அவன் அறையை விட்டு வெளியே சென்றவர், தூரிகாவுடன் உள்ளே வந்தார்.
வந்ததிலிருந்து தூரிகாவைக் காணாமல் பதற்றத்தோடு இருந்த அக்னி அவளை எதிர்பார்த்து வாசலையே பார்த்துக்கொண்டிருக்க, கான்ஸ்டபிள் ப்ரியாவின் உதவியோடு தூரிகா ராகவ் கேபினுக்குள் தடுமாறியபடி நடந்து வந்தாள்.
அக்னியின் அம்மாவின் புடவையில் இருந்தவளைப் பார்த்தவனுக்கு அவள் மீது அவனையும் அறியாமல் ஒருவித மரியாதையும் ஈர்ப்பும் தோன்றியது. ஆனால், அவள் வேறு ஒருவரின் மனைவி என்று தன் எண்ணத்தைக் கட்டுப்படுத்தியவன் அவளை அப்போதுதான் கவனித்தான். அவன் அம்மாவின் சேலை அங்கங்கே கிழிந்து இருக்க, அதில் ரத்தத் துளிகள் வேறு இருந்தது. தூரிகாவின் தலையில் கட்டுப் போட்டு இருக்க, அதில் ரத்தம் வேறு தோய்ந்து இருந்தது. அதையெல்லாம் பார்த்து,
வேகமாக தூரிகாவிடம் வந்தவன்,
“என்னங்க இதெல்லாம்? என்ன ஆச்சு? ஏன் தலையில கட்டு போட்டிருக்கு?” என்றான்.
அவனைப் பார்த்ததும், தனக்கென்று யாரும் இல்லாமல் தவித்திருந்தவளுக்கு அக்னியைக் கண்டதுமே ஒரு பாதுகாப்பு கிடைத்தது போல உணர்வு. அவன் அக்கறையான விசாரிப்பு அவளையும் அறியாமல் கண்ணீர் வரத் துவங்கி இருந்தது. அவனை அழுகையோடு பார்த்தவனுக்கு அவளை இந்த நிலைமைக்கு கொண்டு வந்திருக்கும் சாமிநாதன் மீதுதான் கோபம் அதிகமானது. தூரிகாவின் இந்த நிலைக்கு காரணமான சாமிநாதனாகத்தான் இருக்க வேண்டும் என்று நினைத்தவன்,
அவன் திரும்பி சாமிநாதனை முறைத்தான்.
அவன் அக்னியின் பார்வையை கண்டுகொள்ளாமல் தவிர்த்தவன்,
“வாடி, வா. வந்து சொல்லு. என்னை வேணாம்னுட்டு இவன்கிட்டே போனதில்ல? உன்னை தெருவுல இழுத்து சந்தி சிரிக்க வெக்கலைன்னா நான் சாமிநாதன் இல்லடி. என் கையால தாலியைக் கட்டிட்டு அவன்கூட குடும்பம் நடத்தப் போறியா? அதுவும் என் பொண்ணை உன்கூட சேர்த்து வேற கூட்டிட்டுப் போற” என்றான்.
அவன் பேசியது தாங்க முடியாமல் அழுத தூரிகா, “மாமா, ஏன் இப்படி வாய்கூசாம பேசுறீங்க? நான்… நான் அப்படி எல்லாம் பண்ணல. என்னைப் பத்தி இப்படி எல்லாம் பேசாதீங்க” என்று அழுதாள்.
“ஏய் போதும், நிறுத்துடி உன் நடிப்பை. அப்படி நீ நல்லவளா இருந்திருந்தா, நான் வந்து உன்னை கூப்பிட்டதும் என்கூட கிளம்பி வந்திருக்கணும் இல்ல? அதை விட்டுட்டு இவனை விட்டு என்னை அடிக்க வெச்சு வேடிக்கை பார்த்த தானே நீ?” என்றான்.
“மாமா, அப்படி எல்லாம் இல்ல. நீங்கதான் ஆராதனாவை…” என்று அவள் பேச வர,
“ஏய், நிறுத்துடி. பேசாத! ஒன்னும் தெரியாத என் பொண்ணை, நீ அவன்கிட்டே போகும்போது எல்லாம் கூப்பிட்டுப் போய் அவன்கூட பேசி பழக விட்டுட்ட. அவ என்னடான்னா இவன் காலை கட்டிப்பிடிச்சிட்டு என்கூட வர மாட்டேங்குறா. என்னடி பண்ணின என் பொண்ணை? அவன்கூட போகும்போது என் பெண்ணையும் கூட வெச்சிருந்தியா? அவ சின்ன குழந்தைடி” என்று கேட்க முடியாத வார்த்தைகளைச் சொல்லி தூரிகாவின் மனதை நோகடித்தான் சாமிநாதன்.
அங்கிருந்த அனைவரும் தூரிகாவைப் பார்க்க, அவளோ அழுதுகொண்டே அவனைப் பார்த்தாள்.
அவள் அப்படி அழுவதைப் பார்த்து அபிமன்யுவுக்கே ஒரு மாதிரி ஆகிவிட்டது. அவளைப் பார்ப்பதற்கு சாமிநாதன் சொன்னதுபோல தவறு செய்பவள் போல தெரியவில்லை என்று அவனுக்கு தூரிகா உள்ளே வந்ததுமே தோன்றியது. ஆனால், பார்ப்பதை அப்படியே நம்புபவன் அல்ல அபிமன்யு. அதனால் இவ்வளவு நேரம் ஒரு சந்தேகத்தோடு அமர்ந்திருந்தவனுக்கு, அடுத்து அவள் பேசியதைக் கேட்டு அதிர்ச்சியாக இருந்தது.
“ஐயோ போதும் மாமா, போதும்! ஏன் இப்படி எல்லாம் பேசுறீங்க? இந்த மாதிரி எல்லாம் பேச உங்களுக்கு எப்படி மனசு வருது? நீங்க சொன்ன ஒரே காரணத்துக்காக என் அக்கா இறந்து போய் அம்மா இல்லாம தவிச்ச ஆராதனாவுக்காகதானே என் ஆசையெல்லாம் குழி தோண்டி புதைச்சிட்டு உங்களை கல்யாணம் பண்ணினேன்? கல்யாணம் ஆன நாளுல இருந்து நீங்க சொல்றதை மட்டும் தானே நான் கேட்டுட்டு இருக்கேன்? அப்படி இருக்க என்னை இந்த மாதிரி எல்லாம் கேவலப்படுத்த உங்களுக்கு எப்படி மனசு வந்தது?” என்று அவள் மனதில் இத்தனை நாள் அழுதிக்கொண்டிருந்ததையெல்லாம் மொத்தமாகக் கொட்டி இருந்தாள்.
தூரிகா சொன்னதைக் கேட்டதும், அவள் குழந்தைக்காகத்தான் சாமிநாதனைத் திருமணம் செய்திருக்கிறாள் என்று புரிந்தது அக்னிக்கு. “அப்போ ஆராதனா தூரிகாவோட பொண்ணு இல்லையா?” என்று அவளைப் பார்த்தான் அக்னி.
அவளோ அழுதுகொண்டே அருகில் ப்ரியாவின் கையில் உறங்கிக்கொண்டிருந்த ஆராதனாவை தூக்க முடியாமல் வாங்கித் தோளில் போட்டுக்கொண்டவள்,
“இவ மேல சத்தியமா சொல்றேன் மாமா, நீங்க சொன்ன மாதிரி எதுவும் நடக்கல. நான் அப்படிப்பட்ட பொண்ணு இல்ல. என்னை நம்புங்க” என்று கதறி அழுதாள்.
“அப்புறம் ஏன்டி என்னை கல்யாணம் பண்ணிட்டு, என்கூட குடும்பம் நடத்த முடியாதுன்னு பிடிவாதமா இருந்தவ, அவன் கூப்பிட்டதும் அவன் வீட்டுக்கு போன? அவன் வாங்கி கொடுத்த புடவையை கட்டிக்கிட்டு சீவி சிங்காரிச்சிட்டு இருந்த? இதுக்கு என்னடி அர்த்தம்? என்னை பிடிக்கலைன்னு தானே அவன்கூட போன?” என்று தூரிகாவை மேலும் வார்த்தைகளால் நோகடித்தான்.
“ஐயோ கடவுளே! என்னை ஏன் இன்னும் உயிரோட வெச்சிருக்க? அக்கா, நீ இருந்திருந்தா என் வாழ்க்கை இப்படி ஆகிருக்குமா? ஆராதனா இவ்வளவு கஷ்டப்படுவாளா? நான் என்ன பாவம் செஞ்சேன்?” என்று ஓவெனக் கதறி அவள் அழ,
தூரிகாவின் தோளில் உறங்கிக்கொண்டிருந்த ஆராதனா, அவள் அழுததில் எழுந்தவள்,
“அம்மா… அம்மா… ஏன் அழுகிற? அப்பா உன்னை மறுபடியும் அடிச்சிதா?” என்று அவள் கன்னத்தைப் பிடித்து அவளும் சேர்ந்து அழ ஆரம்பித்தாள்.
தன்னைத் தேற்றவே தெம்பில்லாத தூரிகாவால் ஆராதனாவை சமாதானம் செய்ய முடியவில்லை. அவள் ஆராதனாவை கட்டிக்கொண்டு மேலும் அழ,
அந்தக் காட்சியைக் பார்த்துக்கொண்டிருந்த அனைவருக்குமே ஒரு மாதிரி ஆகிவிட்டது. தன் அக்காளின் பிள்ளைக்காக தன் வாழ்க்கையையே பறிகொடுத்துவிட்டு அல்லவா அழுகிறாள் இவள்?
அவளை என்ன சொல்லி தேற்றுவது என்று தெரியாமல் அனைவரும் தவித்துப்போய் இருக்க,
அழுது அழுது ஓய்ந்துபோன தூரிகா அப்படியே சோர்வில் மயங்கி ஆராதனாவோடு மயங்கி தரையில் சரிய, அதைப் பார்த்து பதறிய கான்ஸ்டபிள் ப்ரியா அவளிடம் ஓடி வந்தாள். அதற்குள் தூரிகாவைத் தரையில் விழாமல் ஒரு கை அவளையும் அவளோடு சேர்ந்து ஆராதனாவையும் தாங்கிப் பிடித்திருந்தது.
EPISODE 13
“டேய், என்ன காரியம்டா பண்ணி வெச்சிருக்க? இவளைக் கல்யாணம் செய்ய நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன்னு தெரியுமாடா உனக்கு?” என்று தூரிகாவையும் அக்னிமித்திரனையும் மாறி மாறி பார்த்துக்கொண்டிருந்தான் சாமிநாதன்.
“அப்படி என்னடா கஷ்டப்பட்டிருப்ப? ஆராதனாவோட அம்மா இறந்து போனதும், ‘ஆராதனா தனியா அம்மா இல்லாம கஷ்டப்படுறா. உன்னால தனியா இவளைப் பார்த்துக்க முடியல. வேற யாரையோ கல்யாணம் பண்ணி ஆராதனாவை பார்த்துக்க கூப்பிட்டு வந்தா, அவங்க உன்னை மாதிரி ஆராதனாவை கண்ணும் கருத்துமா பாத்துப்பாங்களான்னு தெரியாது. அதனால’ன்னு சாய்ஸை தூரிகாகிட்டயே விட்டுட்டு, நீ தனியா குழந்தையை வெச்சு கஷ்டப்படுற மாதிரி சீனைப் போட்டிருப்ப, அதானே?” என்றான் அக்னி.
“ஐயோ! என்ன? அப்படியே நேர்ல பார்த்த மாதிரி நடந்ததை சொல்லிட்டேன்” என்று அவனைப் பார்த்தான் சாமிநாதன்.
அவன் கையில் துவண்டு கிடந்த தூரிகா தன்னை நிலைப்படுத்திக்கொண்டு நின்றவள், அக்னியைப் பார்த்துவிட்டு அவன் கையைப் பார்த்தவளுக்குப் பேரதிர்ச்சியாக இருந்தது. உடனே தன் கழுத்தைத் தடவிப் பார்த்தவள், சாமிநாதன் அதிர்ந்ததைப் போல அதிர்ந்து நின்றவள்,
தன் கையில் இருந்த ஆராதனாவை இறுக்கி அணைத்தபடி அக்னியைப் பார்த்து, “என்ன பண்ணி வெச்சிருக்கீங்க நீங்க? உங்க… உங்க கையில…” என்று ஒருவித நடுக்கத்தோடு அவன் கையில் இருந்த தாலியைப் பார்த்து நடுங்கியபடி கேட்டாள்.
“இவன் பேசினதையெல்லாம் நீ கேட்டுட்டுத்தானே இருந்த? இப்படிப்பட்டவன் கட்டின தாலி உனக்கு எதுக்கு? அதான், அதை கழட்டிட்டேன்” என்றான்.
“அதை நீ எப்படி முடிவு பண்ணலாம்? பிடிக்குதோ பிடிக்கலையோ, அது அவங்க ரெண்டு பேரோட வாழ்க்கை. அதுவும் இல்லாம, இதுல ஒரு குழந்தையும் சம்பந்தப்பட்டிருக்கு. நீ செஞ்சது சரி இல்லை” என்று எழுந்து அக்னியிடம் வந்தான் அபிமன்யு.
“நான் செய்தது சரி, தப்புன்னு பேச உனக்கு எந்த ரைட்ஸும் இல்ல. நீ இவனோட முதலாளியா இருக்கலாம். அந்த அதிகாரத்தை அவனோட வெச்சுக்க. என்கிட்டே உன் அறிவுரையைத் தூக்கிட்டு வராதே!” என்றவன், “இவனுக்கு வக்காலத்து வாங்கிட்டு கேஸ் கொடுத்தவன் தானே நீ? என்ன நடந்துச்சுன்னு முழுசா தெரிஞ்சுக்காம என் மேல கேஸ் கொடுத்துட்ட இல்ல? இதுக்கு நீ அனுபவிப்ப” என்றான்.
“இப்போ ஒரு அளவுக்கு புரிஞ்சிருக்குமே? உன்னோட ஸ்டாப், அதான் இந்த நாய் எப்படிப்பட்டவனு தெரிஞ்சிருக்குமே? இவனை நம்பி நீ இங்க வந்து வீணா அவமானப்பட்டதுதான் மிச்சம்” என்றான் அக்னி, அபிமன்யுவை நக்கலாகப் பார்த்து.
அபிமன்யுவுக்கு அவமானமாகப் போய்விட்டது. சாமிநாதன் சொன்னதை நம்பி அவனுக்கு ஆதரவாக இங்கே வந்தவனுக்கு, அவன் தூரிகாவை குழந்தையைக் காரணம் காட்டி அவளைத் திருமணம் செய்திருக்கிறான் என்று தெரிந்து சாமிநாதன் மீது வெறுப்புதான் உண்டானது.
அபிமன்யு பதில் பேச முடியாமல் நின்றிருக்க,
“என்ன, ஏதும் பேச முடியலையா?” என்று நக்கலாக சிரித்த அக்னி, “வந்ததே வந்த. இவங்க ரெண்டு பேருக்கும் மியூச்சுவலா டைவர்ஸ் வாங்கிக் கொடுத்துட்டுப் போயிட்டு இரு” என்றான்.
“எனக்கு இது எல்லாம் வேலை கிடையாது. இந்த மாதிரி ஒரு காரியத்தை நான் கனவுல கூட செய்ய மாட்டேன்” என்றவன், “சாமிநாதன், நாளைக்கு வந்து என்னை ஆபீஸ்ல பாருங்க” என்று அங்கிருந்து வெளியேறியிருந்தான் அபிமன்யு.
“ம்ஹும்… தோல்வியை ஒத்துக்கவும் ஒரு தைரியம் வேணும்” என்று அபிமன்யு சென்ற திசையைப் பார்த்துச் சொன்ன அக்னி, “ராகவ், இவங்க ரெண்டு பேருக்கும் இங்கேயே பைசல் பேசி விவாகரத்து வாங்க ஏற்பாடு பண்ணிக் கொடு” என்றான்.
“அக்னி, பொறு. அவசரப்படாத” என்றான் அர்ஜுன்.
“இவ்வளவு நடந்த பிறகும் பொறுமையா என்னால இருக்க முடியாது” என்றவன், “டேய், ஒழுங்கா தூரிகாவை வேணாம்னு சொல்லி கையெழுத்து போட்டுட்டு ஓடிப்போயிடு” என்றான்.
அதை கேட்டதும் சாமிநாதன் பதறியவன், “ஏய்… ஏய்… நீ யாரு எங்களுக்கு டைவர்ஸ் வாங்க? உன்கிட்டே இருந்து இவளைக் கூப்பிட்டுப் போகதான் நான் இங்க கேஸே கொடுத்தேன். எனக்கு விவாகரத்து எல்லாம் தர முடியாது. தூரிகாவும் விவாகரத்து தர மாட்டா” என்றான்.
“அதை நீ ஏன் சொல்ற?” என்றவன் தூரிகாவைப் பார்த்து, “நீ சொல்லு, இவன் உனக்கு வேணாம்னு” என்றான்.
கையில் இருந்த குழந்தையை இறுக்கி அணைத்துக்கொண்டு நின்று இருந்த தூரிகா, சாமிநாதனையும் அக்னியையும் மாறி மாறி பார்த்தாள்.
அவள் அக்னிக்கு பதில் சொல்லாமல் நிற்பதைப் பார்த்ததும் சத்தமாக சிரித்த சாமிநாதன், “என்னடா, அவ எதுவும் பேசாம நிக்குறாளேன்னு பார்க்கிறியா?” என்று தூரிகாவிடம் வந்தவன், அவள் கையில் இருந்த ஆராதனாவை வலுக்கட்டாயமாகப் பிடுங்கித் தன் கைக்குள் வைத்தவன்,
“இவளை நானே வேணாம் போடி’ன்னு சொன்னாலும் என்னை விட்டுப் போக மாட்டா தெரியுமா?” என்றான் சாமிநாதன் திமிராக.
அதை கேட்டு மேலும் போன அக்னி தூரிகாவிடம் வந்தவன், “நீ ஏன் இந்தக் கல்யாணம் பிடிக்கல, வேணாம்னு சொல்ல மாட்டேங்குற? அவன் தினம் தினம் உன்னையும் ஆராதனாவையும் படுத்துற கொடுமையை அனுபவிச்சுமா நீ அவனை வேணாம்னு சொல்ல மாட்டேங்குற? எதுவா இருந்தாலும் தூக்கி போட்டுட்டு வா. உனக்கும் ஆராதனாவுக்கும் நீ கேட்ட மாதிரி இவன் உன்னை கண்டுபிடிக்காத இடத்துக்கு நான் உன்னை அனுப்பி வைக்கிறேன்” என்றான்.
தூரிகா அவன் இவ்வளவு பேசியும் சிறிதும் அசையாமல் நின்று இருக்க,
அதைப் பார்க்கப் பார்க்க மேலும் கோபம்தான் அவனுக்கு அதிகமாகியது. வேகமாக அர்ஜுனிடம் வந்து, “டேய், இவங்க ரெண்டு பேரையும் பிரிச்சு விட ஏதாவது வழி இருக்கா?” என்றான்.
“ம்ஹும்… இவங்க ரெண்டு பேருல யாராவது ஒருத்தராவது இந்தக் கல்யாணத்துல விருப்பம் இல்லைன்னு உறுதியா இருந்தா, இந்த கேஸை நடத்தி இவங்க பிரிய வாய்ப்பு இருக்கு. ஆனா இங்க அப்படி எதுவும் நடக்கிற மாதிரியே தெரியலையே அக்னி” என்றான் அர்ஜுன்.
அவன் சொன்னது கேட்டு திரும்பி ராகவ்வைப் பார்த்தான் அக்னிமித்ரன்.
அவனும் அர்ஜுன் சொல்வது சரிதான் என்பது போல தலையை ஆட்ட,
“பார்த்தியா? நீ தலைகீழா நின்னு தண்ணி குடிச்சாலும், நீ நினைச்சது எதுவுமே நடக்காது” என்றான் சாமிநாதன்.
அக்னி திரும்பி தூரிகாவிடம் வந்தவன், “அவன் உன்னை எதுவும் பண்ணிடுவேன்னு மிரட்டுறானா?” என்றான்.
அவள் ‘இல்லை’ என்று தலையாட்டினாள்.
“உன் அம்மா அப்பாவை எதுவும் செய்திடுவேன்னு பிளாக்மெயில் பண்ணினானா?” என்றான்.
“என் அம்மாவும் அப்பாவும் இறந்து ஒரு வருஷம் ஆச்சு” என்றாள்.
“அப்புறம் ஏன் இவனை வேணாம்னு சொல்ல மாட்டேங்குற? வேற என்ன காரணம்னு சொல்லு” என்றான் புரியாமல் அக்னி.
அவன் தனக்காக இவ்வளவு வருத்தப்படுவதையும், பதறுவதையும், மெனக்கெடுவதையும் பார்த்தவளுக்கு அவன் மீது வருத்தம்தான் வந்தது. தனக்காக வந்து நின்ற ஒரே ஜீவன் அவன் மட்டும்தான். ஆனால், அவனையே இப்படி தலை குனியும் நிலைக்குத்தான் ஆளாக்கி விட்டோமே என்று தூரிகாவுக்கு உள்ளுக்குள் சுருக்கென்று வலித்தது.
அந்த வலியோடு அவன் கையில் இருந்த தாலியை வாங்கியவள், நடக்க முடியாமல் மெல்ல மெல்ல அடி எடுத்து வைத்து அக்னியைத் தாண்டிச் சென்று சாமிநாதன் முன் வந்து நின்றாள்.
அவளை என்ன செய்வது என்ற ரீதியில் பார்த்துக்கொண்டு அக்னியால் நிற்க மட்டுமே முடிந்தது.
சாமிநாதன் கையில் இருந்த ஆராதனாவை வாங்கியவள், தன் கையில் இருந்த தாலியை அவனிடம் நீட்டி, “மாமா, இந்த தாலியை கட்டுங்க. நீங்க என்ன சொன்னாலும் நான் கேட்குறேன். என்னால இனிமேல் உங்களுக்கு எந்தப் பிரச்சனையும் வராது” என்றாள்.
அவள் அப்படிச் சொன்னதும் அக்னிக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. வேகமாக தூரிகாவிடம் வந்தவன், அவள் கையைப் பிடித்துத் தன் பக்கம் திரும்பியவன்,
“தூரிகா, என்ன காரியம் செய்ற? அவனைப் பத்தி எல்லாம் தெரிஞ்சும் நீ அவனையே கல்யாணம் பண்ணிக்க தயாரா இருக்க. உனக்குப் புத்தி எதுவும் கெட்டுப் போய்டுச்சா? ஏன் இப்படி செய்ற?” என்றான் அவள் செயலைத் தாங்க முடியாமல்.
அவன் மனநிலையில்தான் ராகவ், அர்ஜுன், ப்ரியா என மூவரும் நின்று இங்கு நடப்பதை பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
சாமிநாதன் கொடுத்த கம்ப்ளைன்டுக்காக அவளை இங்கு அழைத்து வந்த அர்ஜுனே, இங்கு நடப்பதைப் பொறுக்க முடியாமல் தூரிகாவிடம் வந்தவன், “நீங்க எதைப் பத்தியும் கவலைப்படாதீங்க. உங்களுக்கு இந்தக் கல்யாணத்துல விருப்பம் இல்லைன்னு மட்டும் சொல்லுங்க. மற்றதை நாங்க பார்த்துக்கிறோம்” என்றான்.
“தயவு செய்து இங்க இருக்க எங்க குடும்ப விஷயத்துக்குள்ள நீங்க வராதீங்க. எங்களை விட்டு விலகியே இருங்க. அதுதான் எல்லாருக்கும் நல்லது” என்றவள், பரிதவிப்போடு நின்று இருந்த அக்னியைப் பார்த்துவிட்டு திரும்பி சாமிநாதனைப் பார்த்தாள்.
அவள் கையில் இருந்த தாலியை வாங்கிய சாமிநாதன் நக்கலாக சிரித்தவன், “அவளை மிரட்டுனேனா, அவ அம்மா அப்பாவை வெச்சு பிளாக்மெயில் பண்ணினேன்னானு கேட்டியே? அப்படி எல்லாம் பண்ண வேண்டிய எந்த அவசியமும் எனக்கு இல்லடா. என்னோட துருப்புச்சீட்டு ஆராதனா” என்று அவனைப் பார்த்தான்.
“நீ இவளை என்கிட்டே இருந்து எங்க பிரிச்சு கூப்பிட்டுப் போய் எனக்கு தெரியாம ஒளிச்சு வெச்சாலும், என் பொண்ணை தேடி நான் வருவேன். ‘என் பொண்ணை இவ என்கிட்டே இருந்து பிரிச்சு கூப்பிட்டுப் போயிட்டா’ன்னு கேஸ் கொடுப்பேன். நியாயப்படி எனக்கு ஆராதனா மேல உரிமை இருக்கு. அந்த உரிமையை வெச்சு நான் என் பொண்ணை கூப்பிட்டு வந்திட்டா, இந்த நாய் வேற வழியே இல்லாம என் பின்னாடி வந்துதான் ஆகணும். அவ அக்கா பெண்ணுக்காக நான் என்ன சொன்னாலும் பொறுத்துப் போவாடா இவ” என்று திமிராகப் பேசினான்.
அவன் பேசியது கேட்டு அக்னியின் உள்ளம் குமுறியது. தூரிகாவை ‘நாய்’ என்று அவன் அழைத்து அவன் மனதைக் கிழித்தது. ஆனால், அவனை எதிர்த்துக் கேள்வி கேட்கும் நிலையில் அவன் இல்லையே! தூரிகாதான் அந்தக் கேவலமான அற்பப் பதரிடம் தன் வாழ்க்கையை மீண்டும் பலி கொடுக்க தயாராகி, தனக்குத் தாலி கட்டச் சொல்லி நின்று இருக்கிறாளே!
“இனியும் என் குடும்ப விஷயத்துக்குள்ள நீ தேவையில்லாம மூக்கை நுழைச்சேன்னு வை, உன் மேல கம்ப்ளைன்ட் கொடுத்து உள்ளே பிடிச்சு போட சொல்லுவேன், ஜாக்கிரதை” என்றவன்,
தூரிகாவைப் பார்த்து, “உன் கழுத்துல நான் முதல் தடவை தாலி கட்டும்போது யாருமே இல்லாம நாம மூணு பேரு மட்டும்தான் இருந்தோம். ஒரு சாட்சி இல்லை, சம்பிரதாயம் இல்லை. அப்படித்தான் உன் அக்கா படத்து முன்னாடி நான் உனக்கு தாலி கட்டினேன். ஆனா பாரு, இப்போ இங்க எவ்வளவு பேர் இருக்காங்கன்னு! நமக்கு சம்பிரதாயப்படி கல்யாணம் மறுபடியும் நடக்கலைன்னாலும், சாட்சியோடா இந்தக் கல்யாணம் நடக்குது. இனி உன்னை என்கிட்டே இருந்து எந்தக் கொம்பனாலயும் பிரிக்க முடியாது” என்று சிரித்தவன்,
அவர்களை எதுவும் செய்ய முடியாமல் நின்று இருந்த ராகவ், அர்ஜுன் இருவரையும் பார்த்தவன், “சார், உங்க ஸ்டேஷன்ல கல்யாணம் நடந்தா ஃபோட்டோ எல்லாம் எடுக்க மாட்டீங்களா? மாலை எல்லாம் போட மாட்டீங்களா?” என்றான்.
அவர்கள் இருவரும் சாமிநாதன் பேசியது கேட்டு பல்லைக் கடித்துக்கொண்டு அவனையே பார்த்துக்கொண்டிருக்க, “சரி பரவால்ல. மாலை வேணாம். அட்லீஸ்ட் எங்களுக்குக் கல்யாணம் ஆனதை ஃபோட்டோ எடுத்து சாட்சிக்காக வெச்சுக்கோங்க” என்றான்.
அவன் பேசுவதைத் தாங்க முடியாமல் ப்ரியா, “ம்ம்ம்… ஃபோட்டோ எடுங்க” என்றான்.
அவளும் ‘சரி’ என்று தலையாட்டியவர், வேண்டா வெறுப்பாக வந்து சாமிநாதன், தூரிகாவின் முன் வந்து நின்றார்.
“என்னடி? தாலியை கட்டட்டுமா? இனியாச்சும் எனக்குப் பொண்டாட்டியா என்கூட குடும்பம் நடத்த தயாராகிடுவியா? இல்லை, எப்போ நான் கிட்டே வந்தாலும் ‘இப்போ வேணாம் மாமா, இன்னும் கொஞ்ச நாள் போகட்டும். அக்காவுக்கு வருஷம் ஆகி சாமி கும்பிடலாம். அப்புறம் வெச்சுக்கலாம்’னு சொல்லுவியா?” என்று அவளை அத்தனை பேர் முன்னிலும் மிரட்டினான்.
அவள் அக்னியையும் மற்றவர்களையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு, “இல்ல மாமா. இனி அப்படி எதுவும் சொல்ல மாட்டேன். நீங்க என்ன சொன்னாலும் நான் கேட்குறேன்” என்று அவள் வாயிலிருந்து வந்த பதிலைக் கண்டு எரிச்சலடைந்த அக்னி, சாமிநாதனைக் கொன்றுவிடும் ஆத்திரத்தோடு அவனைப் பார்த்தவன்,
“ச்ச!” என்று அவனை முறைத்துவிட்டு, அங்கிருந்து இந்தக் காட்சியைக் காணப் பிடிக்காமல் வெளியேறியிருந்தான்.
“ம்ஹும்” என்று நக்கல் சிரிப்போடு, “சார், தாலி கட்டும்போது மேல தாளம்தான் இல்லை. கைதட்ட ஆள்மா இல்லை? ப்ளீஸ்” என்று ஏற்கனவே வெறுப்பில் இருந்த ராகவ்வையும், அர்ஜுனையும் பார்த்தான்.
அவர்கள் அறைக்குள் நின்று இருந்த மற்ற கான்ஸ்டபிள்கள் இருவரை ராகவ் பார்க்க,
அவர்களுக்குப் புரிந்துபோனது. அனைவரும் சாமிநாதன் தாலி கட்டுவதற்காகக் காத்துக்கொண்டிருக்க,
சாமிநாதனும் சிரித்தபடி தாலியை தூரிகாவின் முகத்திற்கு நேராகக் கொண்டு வந்தவன் அவளைப் பார்க்க,
தூரிகாவோ எந்த மறுப்பும் சொல்லாமல், அழுத விழிகளோடு ஆராதனாவை இறுக்கி அணைத்துக்கொண்டே கண்களை மூடி அவன் முன் தலையைக் கவிழ்த்து நின்றாள்.
“இந்த ஒரு சந்தர்ப்பத்துக்காகத்தான்டி நான் ஒரு வருஷமா பொறுமையா இருந்தேன். இன்னைக்கு நீ என்கையில மாட்டிக்கிட்ட. இனி தினம் தினம் எனக்கு இல்ல, நமக்கு ஃபர்ஸ்ட் நைட் தான். நான் உன்னை அணுவணுவா ரசிக்கப் போறேன்” என்று குனிந்து அவள் காதில் சொன்னவன் நிமிர்ந்து அவளைப் பார்த்தான்.
அவன் சொன்னதையெல்லாம் கேட்டும் எந்தப் பதிலும் சொல்ல முடியாமல், கண்ணீர் சொட்டிக்கொண்டு வந்து சாமிநாதனின் காலில் விழ,
“சார், தாலி கட்டுறேன். நல்லா பலமா கையைத் தட்டுங்க” என்று திரும்பி தூரிகாவின் கழுத்தில் தாலியை கட்டினான்.
EPISODE14
தயவு செஞ்சு என்னை விடுங்க, ஏன் இப்படி சித்ரவதை பண்றீங்க?” என்று அக்னியிடம் கெஞ்சினாள் தூரிகா.
“ஏன்? சொல்ல மாட்டேன்! பாவமேன்னு அவன்கிட்ட இருந்து உன்னை காப்பாத்தி கூப்பிட்டு வந்தா, நீ என்ன இப்படி பேசுற! உன்னையெல்லாம்…” என்று தன் கோபத்தை தூரிகாவிடம் காட்ட முடியாமல், ஸ்டியரிங்கை அழுத்திப் பிடித்து காரை புயல் வேகத்தில் சாலையில் செலுத்தி கொண்டிருந்தான் அக்னிமித்திரன்.
“நான் கேட்டேனா என்னை வந்து காப்பாத்துங்கன்னு? உங்ககிட்ட கேட்டேனா?” என்றாள் கன்னத்தில் வழிந்த கண்ணீரை துடைத்துக்கொண்டே.
“ஆராதனா கேட்டாளே… ‘என் அம்மாவை காப்பாத்தி கொடு’ன்னு” என்றான் பார்வையை சாலையில் பதித்து.
“அப்போ என்னோட சேர்த்து அவளையும் இல்ல நீங்க காப்பாத்தி இருக்கணும்? அதை விட்டுட்டு என்னை மட்டும் இப்படி வலுக்கட்டாயமா தூக்கிட்டு வந்திருக்கீங்களே? காரை முதல்ல நிறுத்துங்க! எனக்கு ஆராதனா வேணும்! அவ இல்லாம என்னால இருக்க முடியாது! ப்ளீஸ்… தயவு செய்து காரை நிறுத்துங்க!” என்றாள்.
“இங்க பாரு, ஆராதனா தானே? அவ வருவா. நீ பேசாம உட்காரு” என்று தூரிகாவை அதட்டினான் அக்னி.
அவன் அதட்டல் அவளுக்கு ஒரு பொருட்டாகவே தெரியவில்லை. அவளுக்கு இப்போது மனதில் இருக்கும் ஒரே நினைப்பு ஆராதனா, ஆராதனா மட்டும்தான்.
அக்னி சொல்லிக்கொண்டிருக்கும்போதே, கார் கதவைத் திறந்து கீழே குதிக்கப் போனாள் தூரிகா.
“ஹே! ஹே! ஹே! அறிவு இருக்கா உனக்கு?” என்று அவசரமாக அவள் கையைப் பிடித்து இழுத்து சீட்டில் அமர வைத்தவன், தன் சீட் பெல்ட்டைக் கழட்டிவிட்டு எட்டி, தூரிகா அமர்ந்திருந்த கதவைச் சுற்றிவிட்டு, “உனக்கு கொஞ்சமாச்சும் அறிவு இருக்கா? இப்படித்தான் ஓடுற கார்ல இருந்து குதிப்பியா? எங்காவது விழுந்து தொலைஞ்சு காயம் ஏதாவது ஆகிடுச்சுன்னா என்ன செய்றது? அப்பறம் நான் கூப்பிட்டு வந்து உன்னை தள்ளிவிட்டேன்னு சொல்ல மாட்டாங்க?” என்று அவளை சத்தமிட்டான்.
“உங்களை யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்க. எனக்கு என் ஆராதனா வேணும்! அவ இல்லாம நான் எங்கும் வரல” என்றாள் தூரிகா அழுதுகொண்டே.
அவளை என்ன சொல்லி புரியவைப்பது என்று புரியாமல் தலையை அழுந்த கோதியவன், சீட்டில் அமர்ந்திருந்தவள் அருகில் தன் இறுகிய முகத்தைக் கொண்டு வந்து, அவளைக் கோபக்கனலோடு பார்த்தவன், “இங்க பாருடி! நீ ஏன் ஆராதனாவுக்காக இவ்வளவு பதட்டப்படறேன்னு எனக்கு புரியுது. நாம வீட்டுக்குப் போறதுக்குள்ள ஆராதனா வந்திருவா. அதுக்கான எல்லா ஏற்பாடும் நான் செய்து வெச்சிட்டேன். நீ இப்படி கவலைப்பட்டு, போற வண்டியில இருந்து குதிக்கிறதுனால எதுவும் பண்ண முடியாது. புரியுதாடி?” என்றான் கோபத்தைத் தணிக்க முடியாமல் தூரிகாவை முறைத்து.
துடித்துக்கொண்டிருந்த அக்னியின் முக உணர்வுகளை மிக அருகில் பார்த்து பயந்த தூரிகா, தன் முகத்தைப் பின்னால் இழுத்துக்கொண்டு, கார் கதவோடு ஒன்றி அமர்ந்தாள்.
“என்ன அப்படி பார்க்குற? நான் சொன்னது எல்லாம் உன் காதுல விழுந்ததா? ஆராதனா வருவா! அவ்வளவுதான்! புரிஞ்சுதா?” என்றான்.
தூரிகா தயங்கிக்கொண்டே, “இல்லை” என்று தலையை ஆட்டினாள்.
“என்னடி புரியல? என்ன புரியல?” என்றான் மேலும் அவளை நெருங்கி.
“இ… இப்போ ஏன் நீங்க… நீங்க என்னை ‘டி’ போட்டு கூப்பிடறீங்க?” என்றாள் தன் கைகளை முகத்திற்கு அருகில் குறுக்கிக்கொண்டு.
“ஏன்? கூப்பிடக்கூடாதா? இப்போ நான் உன் புருஷன். உன் கழுத்துல நான் தாலி கட்டியிருக்கேன். உன்னை எப்படி வேணா கூப்பிட எனக்கு உரிமை இருக்கு” என்றவன் படபடவென சிமிட்டிக்கொண்டிருந்த அவள் விழிகளைப் பார்த்தவன், என்ன நினைத்தானோ, “உரிமை இருக்குதானே?” என்றான்.
தூரிகாவும் மேலும் கார் கதவோடு ஒன்றிக்கொண்டு அவனை அரண்டு போய் பார்க்க, அவள் பயப்படுவதைக் கண்டு தன் கோபத்தை கொஞ்சம் தணிக்க முயன்றவன், கண்கள் மூடி மூச்சை உள்ளிழுத்து தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டவன், “இங்க பாரு, நான் ஒன்னும் அந்த கேடு கெட்ட சாமிநாதன் மாதிரி கிடையாது. அவனை மாதிரி உன்னை அதட்டி, மிரட்டி, உருட்டி, பயமுறுத்தி, உன்னை என் சொல் பேச்சு கேட்க வைக்க நான் சொல்லல. சொல்ல சொல்ல கேட்காம ஓடுற கார்ல இருந்து இறங்கப் போனியே, உனக்கு எதுவும் ஆகிடுமோன்னு ஒரு டென்ஷன்ல அப்படி பேசிட்டேன். அவ்வளவுதான். சரியா?” என்று அவளை விட்டு விலகி தன் சீட்டில் அமர்ந்தவன், “நீ கீழ விழுந்து உனக்கு ஏதாவது அடிபட்டிருச்சுன்னா, அப்புறம் ஆராதனாவை எப்படி பார்த்துக்குவ? அந்த டென்ஷன்ல தான் உன்கிட்ட கத்திட்டேன். சரியா?” என்று அவளைப் பார்த்தான்.
கார் சீட்டில் கால்களைக் குறுக்கிக்கொண்டு, கதவோடு ஒன்றி அமர்ந்திருந்தவளை, அவள் விழிகளையே சில நிமிடம் பார்த்துக்கொண்டிருந்தவன், தலைமுடியை அழுந்த கோதி தன்னை நிலைப்படுத்த முயன்றவன், அவளிடமிருந்து தன் பார்வையை வேறு பக்கம் திருப்பிக்கொண்டான்.
காருக்குள் சிறிது நேரம் அமைதி நிலவியது. அக்னி இன்னமும் கோபத்தில் இருக்கிறானோ என்று அவளுக்கு பயம். மெல்ல தைரியத்தை வரவழைத்துக்கொண்டு நிமிர்ந்து, கால்களைக் கீழே போட்டு அமர்ந்தாள். அவள் அசைவது தெரிந்ததும் அக்னி திரும்பி அவளைப் பார்த்தான்.
இன்னமும் பயத்தோடு படபடத்துக்கொண்டிருந்தது அவளது விழிகள். கண்ணீர் அவள் ரோஸ் நிற கன்னங்களில் கரைந்து கொண்டிருந்தது. அவள் அழுவதைப் பார்த்தாலே அக்னிக்கு உள்ளுக்குள் எரிமலையே வெடிக்கிறது. முன்பு கூட காரணம் என்னவென்று அவனுக்குத் தெரியவில்லை. ஆனால் இப்போது அவன் மனைவி என்ற உரிமை வந்துவிட்டதோ என்னவோ, அவள் கழுத்தில் தொங்கிய பழைய அழுக்கடைந்த மஞ்சள் கயிற்றைப் பார்த்தான்.
ஸ்டேஷனில் நடந்தது நினைவில் வந்தது.
தூரிகாவின் கழுத்தில் சாமிநாதன் தாலி கட்டுவதைப் பார்க்கப் பிடிக்காமல், ராகவின் அறையை விட்டு வெளியே வந்திருந்தவன், அறைக்கு வெளியே குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டிருந்தான். உள்ளுக்குள் சாமிநாதன் பேசியது அவன் காதுகளிலும் விழாமல் இல்லை. அதைக் கேட்கப் பிடிக்காமல் அங்கிருந்து வெளியே செல்லப் போனவன் என்ன நினைத்தானோ…
“என்ன எல்லாரும் பார்த்துட்டு இருக்கீங்க? நான் இவ கழுத்துல தாலி கட்டப் போறேன். கையைத் தட்டுங்க” என்று சாமிநாதனின் குரல் கேட்டதும், புயல் வேகத்தில் உள்ளே வந்த அக்னி, தூரிகாவின் பின்னால் இருந்து சாமிநாதன் கையில் இருந்த தாலியை லாவகமாக உருவி, அப்படியே அவள் கழுத்தில் மூன்று முடிச்சு இட்டிருந்தான்.
அதை கவனிக்காத சாமிநாதன், அங்கிருந்தவர்கள் முகம் அதிர்ச்சியாவதைக் கண்டு, “என்ன ஆச்சு இவங்களுக்கு?” என்று வெறும் கையை முடிச்சு போடுவது போல காற்றில் தாலியைக் கட்டிக்கொண்டிருந்தவன், அப்போதுதான் தன் கையில் தாலி இல்லாததையும், அந்தத் தாலியை தூரிகாவின் பின்னால் இருந்து அக்னி அவள் கழுத்தில் கட்டிக்கொண்டிருப்பதையும் பார்த்து அதிர்ந்தான்.
“டேய்! என்னடா பண்ணிட்டு இருக்க? தாலியை நீ ஏன்டா கட்டிட்டு இருக்க?” என்று பேசியவனைப் பின்னால் இருந்து, தாலி கட்டி முடித்த கையோடு, சாமிநாதனின் மூக்கில் குத்தியிருந்தான் அக்னி.
தலையைக் கவிழ்த்து, தன் வாழ்க்கை அவ்வளவுதான் என்று அழுதுகொண்டிருந்தவள், தன் கழுத்தில் தவழ்ந்த தாலி சாமிநாதன் கட்டியது என்று நினைத்து நொறுங்கி இருக்க, அவள் காதில் சாமிநாதன் கூறிய வார்த்தைகள் விழவும் அதிர்ந்து தலையை நிமிர்த்தியவளுக்கு, தன் பின்னால் இருந்து இறுகிய கை வருவது பார்த்துவிட்டு அவசரமாகத் திரும்பி பார்க்க, அங்கே அக்னி நின்று இருந்தான்.
தூரிகாவுக்கு ஒன்றும் புரியவில்லை. அவளை வீடியோ எடுத்துக்கொண்டிருந்த பிரியாவுக்கும் அந்தக் காட்சி அதிர்ச்சியாகத்தான் இருந்தது. இருந்தாலும் அவள் கழுத்தில் அக்னி தாலி கட்டியதும் ஒருவித நிம்மதி அவளுக்கு தோன்றியது. அவளுக்கு மட்டும் இல்லை, இந்தக் காட்சியை பார்த்துக்கொண்டிருந்த சாமிநாதனைத் தவிர மற்றவர்களுக்கும் அப்படித்தான் தோன்றியது.
“டேய் அக்னி” என்று ராகவும் அர்ஜுனும் ஒருசேர அவன் செய்த செயலைக் கண்டு அழைக்க, “என்னடா?” என்று இருவரையும் சாதாரணமாக திரும்பிப் பார்த்தவன், “இப்போ இவ என் பொண்டாட்டி. என் பொண்டாட்டியை பிளாக்மெயில் பண்ணி, அவளை அடிச்சு, துன்புறுத்தின காரணத்துக்காக நான் இவன் மேல கம்ப்ளெய்ன்ட் ரைஸ் பண்றேன்” என்றவன், தூரிகாவின் கையில் இருந்த ஆராதனாவைத் தன் கையில் வாங்கிக்கொண்டு, “போலாமா?” என்று தூரிகாவின் கை பிடித்து அழைத்தான்.
அவளோ இங்கே என்ன நடந்தது, என்ன நடக்கிறது என்று ஒன்றும் புரியாமல் அக்னியையே பார்க்க, அதற்குள் சாமிநாதன் அக்னி கையில் இருந்த ஆராதனாவை பாய்ந்து பிடுங்கிக்கொண்டவன், “இவ என்னோட பொண்ணு. நான் யார்கிட்டேயும் இவளை கொடுக்க மாட்டேன்” என்று அவளை பிடித்துவைத்துக்கொள்ள, “தம்பி” என்று அழைத்தான் அக்னி. அவன் இவ்வளவு நேரம் அங்கு நடப்பதைப் கண்டு பேச்சற்று நின்று இருக்க, அக்னியின் குரலில் தெளிந்தவன், “சொல்லு மச்சு” என்று அக்னியிடம் வந்தான்.
“நாங்க ரெண்டு பேரும் வீட்டுக்குப் போறோம். நாங்க அங்க போறதுக்குள்ள நீ ஆராதனாவோட நம்ம வீட்டுக்கு வந்திருக்கணும். புரிஞ்சுதா?” என்றவன், “நீ வா” என்று ஆராதனா இல்லாமல் வரமுடியாது என்றவளை வம்படியாகத் தூக்கி காரில் ஏற்றியவன், போலீஸ் ஸ்டேஷனில் இருந்து கிளம்பியிருந்தான்.
இப்பவும் எதுக்கு இன்னும் மூக்கைச் சிந்திக்கிட்டு இருக்க? உனக்கு ஆரா வேணும், அவ்வளவுதானே?” என்றான் அக்னி.
தூரிகாவும் “ஆமாம்” என்று தலையை மெல்ல மேலும் கீழும் ஆட்டினாள்.
பெருமூச்சொன்றை விட்டவன், “உனக்கு எப்படி ஆரா மேல பாசமும் அக்கறையும் இருக்கோ, அதே மாதிரி அவ மேல எனக்கும் இருக்கு. நீயே வேண்டாம்னு விட்டாலும், நான் அந்தக் ‘நாதாரி நாய்கிட்டே’ குழந்தையை தனியா விடமாட்டேன்” என்றான்.
அவனைப் புரியாமல் தூரிகா பார்த்தாள்.
“என்ன பார்க்கிற? நீ வெச்சிருக்க பாசத்துக்கும் நான் பாசம் வெச்சிருக்கேன்னு சொன்னதுக்கும் என்ன சம்பந்தம்ன்னு யோசிக்கிறியா?” என்றான்.
அவள் மறுபடியும் தலையை ஆட்டினாள்.
“வாயில என்ன லாலிபப்பா வெச்சிருக்க? வாயைத் திறந்து பேசினா உன் தங்கப் பல் கீழ விழுந்துருமா?” என்று அதட்டினான்.
அதில் விறுக்கென்று பயந்தவள், “அ… ஆ… ஆமா” என்றாள் அவசரமாக.
“என் அம்மாவை காப்பாத்திக் கொடுங்கன்னு ஆரா என் காலை கட்டிப்பிடிச்சிட்டு கேட்கும்போது, அவ மேல எனக்கு இந்த அக்கறை வந்துச்சு. சொல்லப்போனா, அவளுக்காகத்தான் நான் உன்னை அந்தக் ‘நாதாரி நாய்கிட்டே’ காப்பாத்தி இருக்கேன்” என்றான்.
“அவன்கிட்ட இருந்து காப்பாத்தறேன்னு சொல்றான், சரி. ஆனா, இப்போ நான் இவன்கிட்ட, அதுவும் ஒரு ரவுடிகிட்ட மாட்டிக்கிட்டேன்” என்று பயந்துகொண்டு அவனைப் பார்த்தாள்.
“என்கிட்ட மாட்டிக்கிட்டோம்னு நினைக்கிறியா?” என்றான், அவள் பார்வையிலேயே புரிந்துகொண்டவனாக.
தூரிகா அவன் சொன்னதில் அதிர்ந்து விழிக்க, அவளிடம் நெருங்கி வந்தவனைக் கண்டு பின்னால் சென்றவளை முறைத்தவன், “எங்க போற?” என்று தூரிகாவின் கையைப் பிடித்துத் தன் பக்கம் இழுத்து அவள் முகத்தருகே குனிந்தான்.
பதறிய விழிகளைப் பார்த்து, “ஆமா, என்கிட்ட வந்து நீ வசமா மாட்டிக்கிட்ட. நீ மட்டும் இல்ல, ஆராவும் உன்னோட சேர்ந்து என்கிட்ட வசமா மாட்டிக்கிட்டா. இனி யார் நினைச்சாலும் உங்க ரெண்டு பேரையும் என்கிட்ட இருந்து பிரிக்க முடியாது” என்று அவன் குரல் கம்பீரமாக ஒலிக்க, அதைக் கேட்டவளுக்கு தான் அக்னியிடம் வந்து வசமாக மாட்டிக்கொண்டோமோ என்று பயந்து வந்தது.
EPISODE 15
பாப்பா, அடியே பாப்பா! என்ன டி பண்ணிட்டு இருக்க? சீக்கிரம் வா, நேரம் ஆகுது இல்ல?
அவசரப்படுத்திக்கொண்டு இருந்தார் ராஜன்.
இரு யுவா, ரெடியாகி வர வேணாமா? என்று சேலையை சரி செய்துகொண்டே அறைக்குள் இருந்து வெளியே வந்த இதழ்யாவைப் பார்த்து மெய்மறந்து போனார் ராஜன்.
அவர் முன் வந்து நின்ற இதழ்யா, “சேலை எப்படி இருக்கு?” என்றார்.
“ஏன் டி, உன் பொண்ணுக்குத் தான் மாப்பிள்ளை வீட்ல சம்பந்தம் பேசப் போறோம். என்னவோ உனக்கு மாப்பிள்ளை பாக்குற மாதிரி இப்படி வந்து நிக்குற?” என்றார் பொறாமையில்.
“ஏன் ராசா, என் தங்கத்துக்கு என்ன குறை? நம்ம பாப்பாவுக்கு இப்போ விட்டாலும் கல்யாணம் பண்ணிக்கத் தயாரா இருக்காங்க” என்றார்.
“ஏய் கிழவி, பேசமா போய்ட்டு! நீ தான் அவளை இப்படி எல்லாம் பேசி உசுப்பேத்தி விட்டுட்டு இருக்க” என்று பழனியை அதட்டியவர், “என் பாப்பா எனக்கு மட்டும் தான். எவனாவது என்னைத் தாண்டி என் பாப்பாகிட்டே வர முடியுமா?” என்று இதழ்யாவை இழுத்துத் தன் தோளோடு அணைத்துக்கொள்ள…
“ஐயோ யுவா, என்ன டா இது? கையை எடு!” என்று கூச்சத்தில் இதழ்யா நெளிய…
“மாமா, எங்க அத்தையை இன்னமும், அதுவும் இந்த வயசுலயும் ரொமான்ஸ் பண்ணிட்டு இருக்கீங்க? ம்ம்ம்… வாழுற மாமா நீ!” என்று அங்கு வந்தார் தர்மன். அவனோடு அஞ்சனாவும் அங்கு வந்திருக்க…
அவர்கள் பின்னால் வந்த நந்தினி, “இவங்க ரொமான்ஸ் இன்னிக்கு நேத்தா இருக்கு? நான் பிறந்ததுல இருந்து பாத்துட்டு தானே இருக்கேன்” என்றாள்.
“ஆமா தர்மா, இதெல்லாம் சும்மா டா. நான் சின்ன குழந்தையா இருக்கும்போது இவங்க ரெண்டு பேரும் என்னை வெச்சுட்டே ரொமான்ஸ் பண்ணுவாங்க, தெரியுமா?” என்றாள் அஞ்சனா.
அவள் தோளில் அடித்து, “சும்மா இரு டி. எந்த நேரத்துல என்ன பேசிட்டு இருக்கீங்க எல்லாரும்?” என்று இதழ்யா அதட்ட…
“டேய் மாப்பிள்ளை, நான் பாக்கத் தான் டா வயசானவன் மாதிரி இருக்கேன். ஆனா உள்ளுக்குள்ள இன்னமும் நான் இளவட்டம் தான். இப்போ விட்டாலும் உனக்கு இன்னும் நாலு முறைப்பொண்ணுங்களை பெத்துப்போட என்கிட்டே தெம்பு இருக்கு” என்று மீசையை முறுக்கினார்.
“அப்பா, எனக்குக் கல்யாணம் பேசப் போறீங்க. ஞாபகம் இருக்கா?” என்று சிரித்தாள் நந்தினி.
“ஐயோ யுவா, ஏன் டா நீ வேற? நம்ம இப்போ நந்துவுக்குக் கல்யாணம் பேசக் கிளம்பிட்டு இருக்கோம். நீ என்ன குழந்தை, அது, இதுன்னு பேசிட்டு இருக்க?” என்று ராஜனை அதட்டியவர், பழனி கையில் இருந்த ஜாதிமல்லிப் பூவை வாங்கி, “இதை வெச்சு விடு, கிளம்பலாம். நேரம் ஆச்சு” என்றவள், அங்கே வந்த செல்வம், சகுந்தலாவைப் பார்த்து, “போலாமா?” என்றாள்.
“ம்ம்ம்… போலாம்” என்றார் சகுந்தலா.
“சரி, திரும்பி நில்லு பாப்பா. பூவை வெக்கலாம்” என்று இதழ்யா தோளைத் தொட்டுத் திருப்பப் போன ராஜன், அவர்கள் வீட்டு வாசலில் வரிசையாக கார்கள் வந்து நின்ற சத்தம் கேட்க, அனைவர் பார்வையும் வாசல் பக்கம் சென்றது.
முதலில் வந்த காருக்குள் இருந்து அக்னி இறங்கி வந்தவன், அனைவரும் எங்கோ செல்வதற்காகக் கிளம்பி நிற்பதைப் பார்த்துவிட்டு, “என்ன எல்லாரும் கிளம்பி இருக்கீங்க? ஃபங்ஷன் எதுவும் இருக்கா? என்கிட்டே சொல்லவே இல்ல” என்றான்.
அப்போது அவன் பின்னால் வந்த காரில் இருந்து வரிசையாக அர்ஜுன், ராகவ் இறங்க, அர்ஜுன் ஜீப்பில் இருந்து இறங்கினான்.
“ம்ம்ம்… அது, வீட்ல தங்குறவனுக்குத் தான் தகவல் சொல்லணும். நீ தான் வீட்டுக்கே வரதில்லையே, அப்பறம் எப்படி உனக்குச் சொல்லுவோம்?” என்ற ராஜன், “அடடே வாங்கப்பா வாங்க! இவன்கூட ஃப்ரண்டா இருந்து உருப்பட்ட ஆளுங்க நீங்க ரெண்டு பேரும் தான். என்ன இந்தப்பக்கம், அதுவும் யூனிஃபார்மோட வந்திருக்கீங்க?” என்றார்.
“இல்ல அங்கிள், அது சும்மா…” என்று அர்ஜுன் என்ன சொல்வது என்று பதில் சொல்லத் தயங்கினான்.
“டேய், நீ இரு. நானே சொல்லிக்கிறேன்” என்ற அக்னி காரைச் சுற்றி வந்து தூரிகா இருந்த கதவைத் திறக்கப் போனான்.
“யுவா சும்மா இரு. அவனே இப்போதான் வந்திருக்கான்” என்ற இதழ்யா, “நம்ம நந்துவுக்குச் சம்பந்தம் பேச மாப்பிள்ளை வீட்டுக்குப் போய்ட்டு இருக்கோம் டா. உனக்கு காலையிலிருந்து நிறைய வாட்டி கால் பண்ணினேன். நீ கட் பண்ணிட்டே இருந்த. சரி, நீ வந்ததும் சொல்லிக்கலாம்னு நாங்க கிளம்பிட்டோம்” என்றார்.
“சம்பந்தமா?” என்று அவரைப் பார்த்தவன், “யாருக்கோ சம்பந்தம் பேசப்போறது எல்லாம் என்கிட்டே சொல்லணும்னு எந்த அவசியமும் இல்லை” என்றவன், கதவைத் திறந்து, “கீழ இறங்கு” என்றான்.
யாரை அழைத்து வந்திருக்கிறான் என்று அனைவரும் காரில் இருந்து இறங்கும் அந்த நபரைப் பார்க்க… திறந்த காரில் இருந்து காலணிகள் இல்லாத மென்மையான பாதங்கள் இரண்டும் தயங்கியபடி அவர்கள் வீட்டு வாசலில் கால் வைத்தது. அந்தப் பாதங்களைப் பார்த்ததுமே அது ஒரு பெண்ணுடையது என்று அனைவர்க்கும் புரிய, அதிர்ந்து அவர்கள் பார்வை அப்படியே நிலைத்திருக்க…
காரைவிட்டு இறங்கி முன்னே வந்த தூரிகாவைப் பார்த்ததும் அனைவரும் உறைந்து போயினர். காரணம், அவள் கையைப் பிடித்து அவளை முன்னே அழைத்து வந்தது அக்னி ஆயிற்றே!
“என்ன டா, ஒரு பொண்ணோட வந்திருக்க? அதுவும் கழுத்துல தாலி வேற கட்டி இருக்கு. இந்தப் பொண்ணு கூட தான் மார்க்கெட் வீட்ல இருந்தியோ?” என்றார் ராஜன் அதிர்ச்சி மாறாமல்.
அவர் சொன்னதும் விழக்கென்று இதழ்யா திரும்பி ராஜனைப் பார்த்து, “யுவா, என்ன சொல்ற? அக்னி ஒரு பொண்ணு கூட மார்க்கெட் வீட்ல இருந்தானா? இது உனக்கு எப்படி தெரியும்? ஏன் என்கிட்டே இதை சொல்லல நீ?” என்றார் நம்பமுடியாமல்.
“அம்மா, அது நான் அவரை கலாய்க்குறதுக்காகச் சொன்னது” என்றவன், “வா” என்று தூரிகாவின் கையைப் பிடித்து முன்னே அழைத்து வந்தவன், “அம்மா, இது தூரிகா. நாங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிட்டோம்” என்றான்.
அதைக்கேட்டதும் அனைவர்க்கும் தூக்கி வாரிப்போட்டது. நந்தினிக்குச் சம்பந்தம் பேசப்போகும் வேளையில் அக்னி திருமணம் செய்து கொண்டு வந்து நிற்கிறானே என்று இருந்தது.
“டேய் அக்னி, என்ன டா சொல்ற? உண்மையாவே இவளுக்கும் உனக்கும் கல்யாணம் ஆகிருச்சா?” என்று அதிர்ச்சியாக ராஜன் கேட்டுக்கொண்டிருக்கும்போதே…
“அம்மா… அம்மா…” என்று அழுது கொண்டிருந்த ஆராதனாவைத் தூக்கிக்கொண்டு காரில் இருந்து ப்ரியா இறங்கி வந்தாள்.
குழந்தையைப் புரியாமல் அனைவரும் பார்த்துக்கொண்டு இருக்க, ப்ரியா கையில் இருந்து இறங்கிய ஆரா நேராக ஓடிவந்து தூரிகாவைக் கட்டிக்கொண்டு, “அம்மா, எங்க போன நீ? உன்னைக் காணோம்னு நான் அழுதேன்” என்று சொல்லிக்கொண்டே அவளை நோக்கி கையை நீட்டினாள்.
“அம்மா, இங்க தான் டா இருந்தேன். நீ அழாத” என்று ஆராவின் முகத்தில் வழிந்த கண்ணீரைத் தன் புடவை முந்தியில் துடைத்துவிட்டாள் தூரிகா.
“அம்மாவா?” என்று ஆச்சர்யத்தில் வாயை பிளந்த ராஜன், “டேய், அப்போ குடும்பம் நடத்தி ஒரு புள்ளையைப் பெத்துட்டியா?” என்றார்.
“அப்பா, லூசு மாதிரி பேசாத. எங்களுக்கு இன்னைக்குத் தான் கல்யாணம் ஆச்சு” என்றான் அக்னி.
“அப்பறம் எப்படி டா இவ்ளோ பெரிய குழந்தை?” என்று அக்னியைச் சந்தேகமாகப் பார்த்தவர், “ஏய் பாப்பா, பாத்தியா டி, உன் பையன் பண்ணிட்டு வந்த காரியத்தை. கல்யாணம் பண்றதுக்கு முன்னாடியே குடும்பம் நடத்தி இருக்கான். ஒரு புள்ளையையும் பெத்திருக்கான். இதெல்லாம் நமக்குத் தெரியவே இல்ல பாரு! நான் எவ்வளவு தடவை சொல்லிருக்கேன், இவன் சரியான ஆளு டி” என்று அக்னியை முறைத்தார்.
“அப்பா, நீயா கற்பனை பண்ணிப் பேசாத. முதல்ல நான் சொல்றதைக் கேளு” என்று அக்னி பேச வர…
“என்ன டா கேக்கணும்? இல்ல, என்ன கேக்கணும்னு சொல்ற? உனக்கு இந்தப் பொண்ணை தான் பிடிச்சிருக்குன்னு சொல்லியிருந்தா நாங்க என்ன வேணாம்னு சொல்லியிருப்போமா? இல்லையே? அதை எல்லாம் விடு. உனக்கு மூத்தவ ஒருத்தி நம்ம வீட்ல இருக்காளே. அவளுக்குக் கல்யாணம் இன்னும் ஆகலைன்னு உனக்குக் கொஞ்சமாச்சும் நினைப்பு இருந்திருந்தா, இப்படியொரு காரியத்தை பண்ணிட்டு வந்திருப்பியா நீ?” என்று ராஜன் கோபத்தோடு அக்னியிடம் கேள்வி கேட்டுக்கொண்டிருக்க…
ராஜனோடு சேர்ந்து செல்வாவும் சகுந்தலாவும், அவர்களுடன் சேர்ந்து பழனியும், “என்ன ராசா இது? ஒரு வார்த்தை சொல்லியிருக்கக்கூடாதா? சொல்லியிருந்தா தடபுடலா கல்யாணத்தை நடத்திருக்கலாமே ராசா!” என்றார் கனிவாக.
“ஏய் கிழவி, அவன் செய்துட்டு வந்திருக்க காரியத்துக்கு நீ அவனை இன்னும் ராசான்னு கொண்டிக்கிட்டு இருக்கியா? இப்படி ஒரு காரியத்தை இவன்கிட்டே இருந்து நான் எதிர்பார்க்கவே இல்ல” என்று ராஜன் மேலும் புலம்பிக்கொண்டு இருக்க…
ராஜன் பேசுவதை எல்லாம் கேட்டும் இன்னமும் எந்த ஒரு எதிர்வினையும் காட்டாமல் நின்று இருந்த இதழ்யா, அவன் அருகில் மருண்ட விழிகளோடு குழந்தையைக் கட்டி அணைத்தபடி ஒருவித தயக்கத்தோடு நின்று இருந்த தூரிகாவை பார்வையாலேயே அளக்க ஆரம்பித்தார். தன் புடவையை அணிந்திருக்கும் தூரிகாவை இதழ் ஏறெடுத்துப் பார்த்தார். சேலை தன்னுடையதாக இருந்தாலும், அது கிழிந்துபோய் இருந்தது. தூரிகாவின் தலையில் கட்டுப்போட்டிருக்க, கைகளில் அங்கங்கே லேசான காயங்கள் இருந்தது. முகம் ஒருவித பயத்தோடு இருந்தது.
ராஜன் பாட்டுக்கு பேசிக்கொண்டு இருக்க, தூரிகாவை ஆராய்ந்த இதழ்யா, “யுவா” என்று கம்பீரமாக அழைத்தார்.
அவர் குரலில் ராஜன் பேசுவதை நிறுத்தி இருக்க, அக்னியை ஒரு பார்வை பார்த்துவிட்டு, “அம்மகிட்டே ஒரு வார்த்தை சொல்லணும்னு தோணலையா உனக்கு?” என்று படிகளில் இறங்கி வந்தார்.
“அம்மா, இது நான் கடைசி நேரத்துல எடுத்த முடிவு. என்னால அந்த நேரத்துல வேற எதைப் பத்தியும் யோசிக்க முடியல” என்றான்.
“குடும்பம் நடத்தி புள்ளை பெத்துக்கிற அப்போ வராத யோசனை எங்ககிட்ட சொல்ல மட்டும் எப்படி வரும்?” என்றார் குறுக்கே வந்த ராஜன்.
“ம்ப்… யுவா!” என்று கைகளை கட்டிக்கொண்டு அவரை அதட்ட…
“என்னையே அதட்டுற? உன் புள்ளை பண்ணிட்டு வந்த காரியத்துக்கு இன்னேரம் நீதான் தைய தக்கான்னு குதிச்சிருக்கணும்!” என்று புலம்பிவிட்டு அமைதியானார் ராஜன்.
நேராக தூரிகாவிடம் வந்தவர், தரையைப் பார்த்துக்கொண்டு இருந்த அவள் முகத்தை நிமிர்த்தி, அவள் முகத்தை ஆராய்ந்துவிட்டு, பின் எதுவும் பேசாமல் வீட்டிற்க்குள் சென்றுவிட்டார்.
அக்னிக்கோ தன் அம்மாவின் கோபம் கண்டு உள்ளம் நெருடலானது. எல்லோரும் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் நின்று இருக்க…
அவன் அருகில் வந்த நந்தினி, “இருந்து இருந்து இன்னைக்குத் தான் இப்படி ஒரு காரியத்தை நீ பண்ணிட்டு வரணுமா?” என்று வேகமாக வீட்டிற்குள் சென்றுவிட்டாள்.
அவள் திருமணம் குறித்துப் பேசப்போகப் போக இருந்த நேரம் தானே அக்னி தூரிகாவை அழைத்து வந்தான்.
அடுத்து என்ன நடக்கும்? அக்னியிடம் எதுவும் பேசாமல் சென்ற இதழ்யா என்ன செய்யப்போகிறார்? நந்தினி திருமணம் என்ன ஆகும்? அபிமன்யுவை நந்தினி காதலிப்பது தெரிந்தால் அக்னி என்ன செய்வான்? திருமணம் செய்து அழைத்து வந்து இப்படி வாசலிலேயே நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் தூரிகாவின் நிலை என்ன?
