News
🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥 🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥

என்னடி வேணும் உனக்கு? வெறியன் 17

by Layas Tamil Novel
518 views
A+A-
Reset

வெறியன் 17

அந்தச் சிறிய சர்வண்ட் அறையின் ஜன்னல் வழியே நிலவின் மங்கிய வெளிச்சம் தரையில் விழுந்து கிடந்தது. பவளமல்லிக்குத் தூக்கம் கண்களைத் தழுவவே இல்லை. முழங்கால்களுக்குள் முகத்தைப் புதைத்தபடி, சுவரோடு சுருண்டு கிடக்க, அவளது இதயம் இன்னும் ஒரு பயங்கரமான மரண ஓட்டத்தில்தான் இருந்தது.

‘எப்படி இவ்வளவு பெரிய முட்டாள்தனம் பண்ணேன்? அவன்கிட்ட இருந்து தப்பிக்க நினைச்சு, கடைசியில அவனோட காலடியிலயே வந்து நிரந்தரமா விழுந்துட்டேனே…’ அவளது மனசாட்சி அவளைக் குத்திக் கிழித்தது.

அக்னிவரதனின் அந்த வெறி பிடித்த கண்கள், அவன் சுவரோடு வைத்து அழுத்திய அந்த மூர்க்கமான ஸ்பரிசம், அவளது கழுத்து நரம்பில் ஏறிய அவனது சூடான மூச்சுக்காற்று என ஒவ்வொன்றும் அவளை நிம்மதியாக மூச்சு விடக் கூட அனுமதிக்கவில்லை.

பயம், சோகம், விரக்தி என எல்லாமும் சேர்ந்து அவளை வதைக்க, எப்போது கண்ணயர்ந்தாள் என்று அவளுக்கே தெரியாமல் அதிகாலையில் அப்படியே குளிர்ந்த தரையில் உறங்கிப் போனாள்.

திடீரென்று… டப்… டப்… டப்… என்று கதவு மிக வேகமாக உடைவது போலத் தட்டப்படும் சத்தம் கேட்டு அலறியடித்துக் கொண்டு எழுந்தாள் பவளமல்லி. தூக்கக் கலக்கம், புதிய இடம், எங்கே இருக்கிறோம் என்ற குழப்பம் எல்லாம் சேர்ந்து அவளைத் தள்ளாட வைக்க, நெஞ்சு படபடவென அடிக்க அவசரமாகச் சென்று கதவைத் திறந்தாள்.

அறை வாசலில் ஒரு வேங்கை போல நின்றிருந்தான் அக்னிவரதன். அதிகாலை ஜாகிங் சென்று வந்ததன் அறிகுறியாக, அவனது கருப்பு நிற பனியன் வியர்வையில் முழுவதுமாக நனைந்து, அவனது கட்டுமஸ்தான உடலோடு ஒட்டியிருந்தது. அகன்ற மார்பும், முறுக்கேறிய தோள்களும் அவனது ஆதிக்கத் தோரணையை இன்னும் அதிகமாக்கிக் காட்டின. கழுத்தில் கிடந்த சிறிய டவலால் தன் முகத்து வியர்வையைத் துடைத்தபடியே அவளை ஏற இறங்கப் பார்த்தான். அவனது கூர்மையான பார்வையின் தாக்கத்தில் பவளமல்லிக்கு பாதி உயிர் போனது.

“என்ன தூக்கம் உனக்கு? மணி என்ன ஆகுதுனு தெரியுமா?” அவன் குரல் அந்த அதிகாலை நிசப்தத்தைக் கிழித்துக் கொண்டு இடியென முழங்கியது.

பவளமல்லி பயந்து போய் பின்னால் நகர்ந்தாள். “அது… அது வந்து… நான்…” என்ற வார்த்தைகள் வராமல் அவளது உதடுகள் நடுங்கின.

“நான், நீனு உளறிக்கிட்டு இருக்காம நான் சொல்றதைக் கேளு. இந்த வீட்ல இனிமே எந்த வேலைக்காரங்களும் கிடையாது. பெருக்கறதுல இருந்து, சமைக்கறது வரைக்கும் அத்தனை வேலைகளையும் நீ ஒருத்தி தான் செய்யணும்னு உனக்குத் தெரியாதா? மகாராணி மாதிரி விடிய விடியத் தூங்குவியா? போ… போய் மூஞ்சியைக் கழுவிட்டு உடனே எனக்கு ஸ்ட்ராங்கா ஒரு காபி போட்டுக் கொண்டு வா!” என்று சொல்லிவிட்டு, அவள் பதிலைக்கூட எதிர்பார்க்காமல் நீண்ட எட்டுக்களுடன் ஹாலை நோக்கி நடந்தான்.

அவள் அதிர்ச்சியில் அப்படியே நிற்க, ஹாலில் இருந்த பெரிய லெதர் சோபாவில் அமர்ந்து டிவியை ஆன் செய்தவன், சாய்ந்து உட்கார்ந்தபடியே பவளமல்லியை பார்த்தான், அவள் ஒவ்வொரு அசைவையும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணம் அவனுக்குள் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்தது.

பவளமல்லிக்குத் தலையும் புரியவில்லை, வாலும் புரியவில்லை. தூக்கக் கலக்கம் இன்னும் குறையாத நிலையில், தட்டுத்தடுமாறி குளியலறைக்குள் சென்று முகத்தில் குளிர்ந்த நீரை அள்ளி அடித்துக் கழுவினாள். கண்ணாடியில் தெரிந்த தன் வெளிறிய முகத்தைப் பார்த்தவளுக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது. ‘கடவுளே, இனி ஒவ்வொரு நாளும் இவன் மூஞ்சில தான் முழிக்கணுமா? இவனோட இந்த கொடுமைக்கு நடுவுல நான் எப்படி வாழப் போறேன்?’ என்று மனதுக்குள் அழுதபடியே நேராக சமையலறைக்குள் நுழைந்தாள்.

அது ஒரு பிரம்மாண்டமான, நவீன மாடுலர் கிச்சன். எந்தப் பொருள் எங்கே இருக்கிறது என்றே அவளுக்குத் தெரியவில்லை. சர்க்கரை டப்பாவைத் தேடி ஒவ்வொரு கப்போர்டாக , அடுக்கடுக்காக இருந்த கேபினெட்டுகளை இழுக்க, அவளது கை நடுக்கத்தில் சில பாத்திரங்கள் ஒன்றோடு ஒன்று மோதி கீழே விழுந்து உருளும் சத்தம் ஹால் வரை பலமாகக் கேட்டது.

டிவியைப் பார்த்துக் கொண்டிருந்த அக்னியின் புருவங்கள் சுருக்கமடைந்தன. ‘சமைக்கத் தெரியாதோ? இத்தனை நாளா ஹாஸ்டல்ல இருந்தவளுக்கு இதெல்லாம் புதுசா இருக்குமோ?’ என்று அவனது உள்மனம் ஒரு நிமிடம் கேள்வி கேட்டாலும், அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் முகத்தைக் கல்லாக மாற்றி அமைதியாக இருந்தான்.

சில நிமிடப் போராட்டத்திற்குப் பிறகு, கைகள் நடுங்க ஒரு கப் காபியுடன் ஹாலுக்கு வந்தாள் பவளமல்லி. அவளது முகம் பயத்தில் முற்றிலும் வெளிறிப் போயிருந்தது.

அக்னியின் அருகே செல்லவே அவள் கால்கள் நடுங்கின. மெதுவாக அவனது அருகே சென்று, அங்கிருந்த கண்ணாடி டீபாயின் மீது காபியை வைக்கப் போனாள்.

“கையில கொடுடி!” என்றான் கண்களை டிவியிலிருந்து விலக்காமலேயே, அந்த அதிகாரக் குரலில்.

பவளமல்லி பயந்துபோய், நடுங்கும் கரங்களுடன் அந்தக் கப்பை அவனிடம் நீட்ட, அதை வெடுக்கெனப் பிடுங்குவது போல வாங்கியவன், அவளை ஒரு முறை பார்த்துவிட்டு காபியை வாயில் வைத்தான்.

அடுத்த நொடி… பளார்!

கையில் இருந்த காபி கப்பை அப்படியே தரையில் வீசியடித்தான் அக்னி. சூடான காபி தரையெங்கும் சிதறித் தெறிக்க, விலை உயர்ந்த அந்தப் பீங்கான் கப் சுக்குநூறாக உடைந்து சிதறியது. அதில் ஒரு சிறிய சில்லு பவளமல்லியின் காலில் பட்டு லேசான காயத்தை ஏற்படுத்தியது. அவள் அலறிப் போய் இரண்டு அடி பின்னால் பாய்ந்து தன் நெஞ்சில் கை வைத்துக் கொண்டாள்.

“என்னடி காபி வச்சிருக்க? சர்க்கரைக்குப் பதிலா உப்பைக் கொட்டி வச்சிருக்க? உனக்கெல்லாம் அறிவு இருக்கா இல்லையா? சமைக்கத் தெரியுமா தெரியாதா? இல்ல, வேணும்னே என் காபில உப்பைக் கொட்டி என்னைக் கொல்லப் பாக்குறியா?” என்று கோபத்தில் கத்தினான், சோபாவிலிருந்து வேகமாக எழுந்து நின்றான் அக்னி. அவனது கண்கள் கோபத்தில் சிவந்திருந்தன.

பவளமல்லியின் கண்களில் இருந்து அணை உடைந்த வெள்ளமாய் தாரை தாரையாகக் கண்ணீர் வழியத் தொடங்கியது. அவள் உடலே நடுங்கியது. “எனக்கு… எனக்கு நிஜமாவே தெரியாது. நான் சின்ன வயசுல இருந்தே ஹாஸ்டல்லயே தங்கிப் படிச்சு அங்கேயே சாப்பிட்டுப் பழகிட்டேன். இந்த கிச்சன்ல எந்தப் பொருள் எங்க இருக்குன்னும் எனக்குத் தெரியல… அந்த டப்பால வெள்ளையா இருந்ததால சர்க்கரைனு நினைச்சுப் போட்டுட்டேன்… நான் வேணும்னு பண்ணல… நிஜமா வேணும்னு பண்ணல…” என்று உதடுகள் நடுங்க, கைகளைக் கூப்பி மிகக் பரிதாபமாக விம்மினாள்.

அவளது அந்தப் பாவமான முகத்தையும், அழுது வீங்கிய கண்களையும், பயத்தில் ஒடுங்கிப் போய் நிற்கும் அந்த ஒல்லியான தோற்றத்தையும் பார்த்த அக்னிக்கு உள்ளுக்குள் எங்கோ ஒரு சிறு வலி சுருக்கெனத் தைத்தது.

‘ரொம்பத் தான் பயந்துட்டா போல… காலிலும் காயம் ஆகிருச்ச..’ என்று அவனது மனதின் ஒரு ஓரம் அவளுக்காக முதன்முறையாகப் பரிதாபப்பட்டான். அவள்  அழுகை அவனது கோபத்தை சற்றே குறைத்தது. ஆனால், அந்தப் பரிதாபத்தையோ, மென்மையையோ தன் கண்களில் துளியும் காட்டக் கூடாது என்பதில் அவன் உறுதியாக இருந்தான். தன் ஆதிக்கத் தோரணையை மீண்டும் பலமாக அணிந்துகொண்டான்.

“சமைக்கத் தெரியாதுனு என் முன்னாடி வந்து கெத்தா நிப்பியா? முதல்ல ஒழுங்கா சமைக்கக் கத்துக்க! போன்ல சமைக்கச் சொல்லிக் கொடுக்க எத்தனை ஆப் இருக்கு, யூடியூப் இருக்கு… அதுல எதையாச்சும் பார்த்துத் தொலை! எனக்கு கரெக்ட்டா ஒன்பது மணிக்கு பிரேக்ஃபாஸ்ட் டைனிங் டேபிள்ல ரெடியா இருக்கணும். ஒன்பது மணிக்கு நான் வீட்டை விட்டு ஆபிஸ்க்குப் கிளம்பிடுவேன். அதுக்குள்ள நான் கேட்குறது டேபிள்ல இருக்கணும். அதுக்கப்புறம் நீதான் இந்த நாலாயிரம் சதுர அடி வீடு முழுசையும் பெருக்கி, துடைச்சு, பாத்திரம் கழுவி எல்லா வேலையையும் பார்க்கணும். புரியுதா?” என்று அதிகாரமாக உத்தரவிட்டான்.

அவள் தரையையே பார்த்தபடி, தன் காலில் கசிந்த ரத்தத்தையும் பொருட்படுத்தாமல் கண்ணீர் சிந்திக் கொண்டு எந்தப் பதிலும் பேசாமல் மௌனமாக நின்றாள்.

அவள் அந்த மௌனம் அவனைக் கோபப்படுத்தியது. அவளை இன்னும் அதிகமாகத் தன் வசப்படுத்த நினைத்தான். “என்னடி நான் பாட்டுக்குக் கேட்டுக்கிட்டே இருக்கேன், ஊமை மாதிரி எந்தப் பதிலும் பேசாம மரக்கட்டை மாதிரி நின்னுட்டு இருக்க? வாய்ல என்ன கொழுக்கட்டையா வச்சிருக்க? நான் பேசுறது உன் காதுல விழுதுதா இல்லையா?” என்று அதட்டினான்.

பவளமல்லி மெல்லத் தலையை நிமிர்த்தினாள். அவளது கண்களில் எப்போதும் இருக்கும் அந்தத் திமிரோ, எதிர்த்துப் பேசும் வேகமோ இப்போது இல்லை; மாறாக, ஒரு நிர்க்கதியான ஏக்கமும், தவிப்பும் மட்டுமே இருந்தது. தன் கைகளை ஒன்றோடொன்று பிசைந்தபடி, எச்சிலைக் கூட்டி விழுங்கியபடி மெல்லிய, உடைந்த குரலில் பேச ஆரம்பித்தாள்.

“நீங்க சொல்ற எல்லா வேலையையும் நான் செய்றேன். நீங்க கொடுத்த அந்த அஞ்சு லட்சம் ரூபாய் பணத்தை, நான் வேலை செஞ்சு முழுசா அடைக்கிற வரைக்கும்… உங்களுக்கு அடங்கி, ஒரு அடிமையாவே இந்த வீட்ல இருக்கேன். நீங்க என்ன சொன்னாலும் கேட்டுக்கிறேன்… உங்களை எதிர்த்து இனி ஒரு வார்த்தை கூடப் பேச மாட்டேன்… ஆனா.. ” என்று கூறி நிறுத்திக் கொண்டாள்.

அக்னியின் கண்களில் ஒரு ஆச்சரியம் மின்னியது. ‘நேத்து வரைக்கும் என் முன்னாடி சீரியவள் சிலிர்த்துக்கிட்டு நின்னவ, இவ்வளவு சீக்கிரம் என்கிட்ட இறங்கி வர்றாளே? இவளோட இந்த அடிபணிதலுக்குப் பின்னாடி என்ன இருக்கு?’ என்று நினைத்தவன்,

“ஆனா…?” என்று தன் ஒற்றைப் புருவத்தை உயர்த்தி, கைகளைக் கட்டிக்கொண்டு கேட்டான்.

“ஆனா… எனக்கு ஒரே ஒரு விஷயம் மட்டும் நீங்க செஞ்சு கொடுக்கணும். ப்ளீஸ்…” என்று தன் வாழ்நாளில் யாரிடமும் கேட்காத கெஞ்சும் தொனியில் அவனிடம் கேட்டாள்.

அவள் அப்படித் தன் முன்னால் மண்டியிடாத குறையாக மன்றாடியதைக் கண்ட அக்னிக்கு உள்ளுக்குள் ஒருவிதமான ஆண் வர்க்கத்திற்கே உரிய கர்வம் கலந்த சந்தோஷம் உருவானது. தன் அதிகாரத்தின் முன்னும், தன் பலத்தின் முன்னும் இவள் மண்டியிடுகிறாள் என்பதை ரசித்தபடியே, “என்னடி வேணும் உனக்கு? சொல்லு… உன் தகுதிக்கு ஏத்த மாதிரி இருந்தா செய்யுறேன்…” என்றான் மிடுக்காக.

“நான் இவ்வளவு கடனும் கஷ்டமும் பட்டதே என் படிப்புக்காகத் தான். இப்போ எனக்குக் கிடைக்கிற அந்தச் சம்பளத்தை வச்சு தான் என் குடும்பமே ஊர்ல உயிரோட வாழுறாங்க. அப்பாக்கு உடம்பு சரியில்லை… அம்மாவால வேலைக்குப் போக முடியாது. என்னோட ஒத்த சம்பளம் தான் அவங்களுக்கு மாசம் மாசம் வாழவே ஆதாரமே. இப்போ நான் வேலைக்கும் போக முடியாம இங்கேயே உங்ககிட்ட மாட்டிட்டேன்… அவங்களுக்கு நான் இங்க இருக்கிறதே தெரியாது. நான் ஏதோ கம்பெனி வேலையா வெளியூர் வந்திருக்கேன்னு நினைச்சுட்டு இருக்காங்க… அதனால…” என்று தயங்கியவள், தன் அழுகையைக் கட்டுப்படுத்த ஒரு நீண்ட மூச்சை இழுத்துவிட்டுத் தொடர்ந்தாள்.

You may also like

Leave a Comment

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.