News
🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥 🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥

கொஞ்சம் பொறுத்துக்கோ.. வெறியன் 18

by Layas Tamil Novel
588 views
A+A-
Reset

வெறியன் 18

“எனக்கு மாசம் மாசம் நீங்க ஒரு சம்பளம்னு ஒன்னு போட்டுக் கொடுங்க. அதுல இருந்து, நான் உங்களுக்குக் கொடுக்க வேண்டிய கடனுக்கு எவ்வளவு பிடிச்சுக்கணுமோ அதை நீங்களே பிடிச்சுக்கோங்க. எனக்குக் கடனை அடைக்கிறதுல எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனா… தயவுசெஞ்சு, மீதி இருக்கிற கொஞ்ச காசையாவது என் கையில கொடுங்க. அதை வச்சு தான் நான் என் அம்மா அப்பாவுக்குச் சாப்பாட்டுக்கும், மருந்துக்கும் பணம் அனுப்பணும். எனக்கு ஒரு தங்கச்சியும் இருக்கா… அவளோட படிப்புச் செலவும் இருக்கு. அவங்களை நடுத்தெருவுல நிக்க விட்றாதீங்க… ப்ளீஸ்… நீங்க தர்ற பணத்தை நான் வேற எதுக்கும் செலவு பண்ண மாட்டேன். அவங்களுக்கு மட்டும் அனுப்பிடுறேன். அதுக்காக நான் உங்களுக்குக் காலம் முழுக்க வேலைக்காரியா இருக்கேன்… உங்க கால்ல வேணாலும் விழுகுறேன்…” என்று சொல்லிவிட்டு அழுதுகொண்டே உண்மையிலேயே அவன் காலில் விழப் போனாள் பவளமல்லி.

அக்னி சட்டென்று ஒரு அடி பின்னால் நகர்ந்துகொண்டான். அவன் இதயத்தில் ஒரு பெரிய பாறை வந்து விழுந்தது போல் இருந்தது. அவள் திமிரை உடைக்க வேண்டும், அவளைத் தன் காலடியில் கொண்டு வர வேண்டும் என்றுதான் அவன் நினைத்தானே தவிர, பவளமல்லியின் குடும்பத்தின் இவ்வளவு பெரிய வறுமையைப் பற்றியோ, அவளது தவிப்பைப் பற்றியோ அவன் யோசிக்கவே இல்லை.

அவள் கண்ணீரும், தன் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக அவள் படும் அந்தப் போராட்டமும் அவன் கல் நெஞ்சை லேசாக அசைத்துப் பார்த்தது. அவனுக்குள் இருந்த மிருகம் சற்றே அடங்கி, அவளைப் பார்க்கவே மிகவும் பரிதாபமாக இருந்தது.தன் பலவீனத்தை அவள் பார்த்துவிடக் கூடாது என்பதற்காகத் தொண்டையைச் செருமிக்கொண்டு, தன் முகத்தைக் மீண்டும் கடுமையாக வைத்துக் கொண்டான்.

“சரி… நீ போய் முதல்ல சமைக்கிற வழியைப் பாரு. இதைப்பத்தி நான் அப்புறமா யோசிச்சு சொல்றேன்,” என்றான் சற்றே குரலைத் தாழ்த்தி, முந்தைய கோபம் இல்லாமல்.

ஆனாலும் பவளமல்லி அங்கிருந்து நகரவில்லை. ‘அவன் உறுதியாகத் தன் குடும்பத்திற்குப் பணம் தருவான்’ என்ற உத்தரவாதம் அவளுக்குத் தேவைப்பட்டது. தன் குடும்பம் பசியால் வாடக் கூடாது என்ற பயத்தில், அப்படியே கண்ணீரோடு கைகூப்பி அவனையே பார்த்துக் கொண்டு நின்றாள்.

அவள் அப்படி ஏக்கமாக நிற்பது அக்னிக்குத் தன் சுயக்கட்டுப்பாட்டை மீறி அவள் மீது ஒருவித ஈர்ப்பையும் மென்மையையும் கொண்டு வருவது போல் தோன்றியது. அவளது அந்தப் பார்வை அவனை என்னவோ செய்தது. அதை மறைக்க நினைத்தவன், மீண்டும் முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டு. சோபாவில் இருந்த டவலை எடுத்து தோளில் போட்டுக் கொண்டான்.

“என்னடி இன்னும் இங்கேயே சிலையாட்டம் நின்னுட்டு இருக்க? சொன்னா புரியாதா உனக்கு? போ சொல்றேன்ல? ஒன்பது மணிக்கு எனக்கு டிபன் வேணும்!” என்று உருமாளாக அதிகாரத்தோரணையில் சொல்லிவிட்டு தன் அறைக்கு சென்றான்.

அந்த அதட்டலில் தூக்கிவாரிப் போட்ட பவளமல்லி, தன் காலில் இருந்த வலியையும் மறந்து, பயந்துபோய் அவசரமாகச் சமையலறையை நோக்கி ஓடினாள்.

அவளது ஒல்லியான முதுகு மறைந்து சமையலறைக்குள் செல்லும் வரை அவளையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த அக்னியின் நெஞ்சுக்குள், முதன்முறையாக அவளைப் பற்றிய ஒரு மெல்லிய சலனமும், இனம்புரியாத ஒரு தவிப்பும் உருவாகியிருந்தது.

“ஏய்… நில்லு!” என்று திடீரென அக்னி அந்த இடமே அதிர்வது போல கத்தினான்.

சமையலறை வாசற்படியில் கால் வைக்கப் போன பவளமல்லி, அந்த அதட்டலில் அப்படியே நடுங்கிப் போய் நிற்கிறாள். பயந்துபோய் மெதுவாகத் திரும்பி அவனைப் பார்த்தாள். ‘இன்னும் என்ன கோபம் வரப்போகுதோ, எதுக்காகக் கூப்பிடுறான்?’ என்ற பயம் அவள் கண்களில் அப்பட்டமாகத் தெரிகிறது.

அக்னி அவளை நோக்கி வேகவேகமாக சென்றவன். அவள் பயந்த முகத்தைப் பார்த்தபடியே, “இங்கே வா…” என்று அவளை சோபா இருக்கும் பக்கமாக கையைப் பிடித்து இழுத்து செல்கிறான். “வந்து இந்த சோபாவில் உட்காரு!” என்கிறான்.

பவளமல்லிக்கு ஒன்றும் புரியவில்லை. சமையல் செய்யச் சொல்லிவிட்டு இப்போது ஏன் சோபாவில் உட்காரச் சொல்கிறான் என்ற குழப்பத்தில், அவள் தயங்கித் தயங்கி அப்படியே நிற்கிறாள். நகராமல் நிற்கும் அவளைப் பார்த்ததும் அக்னிக்குக் பொறுமை பறிபோகிறது.

“சொன்னா புரியாதா உனக்கு?” என்று சற்றே அதட்டியவன், அவள் கையைத் பிடித்து, “வா இங்கே!” என இழுத்து வந்து சோபாவில் உட்கார வைத்தான். அவன் பிடித்து இழுத்த வேகத்திற்கு அவளால் ஈடு கொடுக்க முடியவில்லை. சோபாவில் அவன் தள்ளிய வேகத்தில் பொத்தென விழுந்தான்.

“இங்கேயே உட்கார்ந்திரு, நான் வர்ற வரைக்கும் அசையக் கூடாது!” என்று மிரட்டுவது போல் சொல்லிவிட்டு அவன் விறுவிறுவென்று உள்ளே என்றான்.

பவளமல்லி பயத்தோடும் குழப்பத்தோடும் அவன் போன வழியையே பார்த்துக் கொண்டிருக்கிறாள். உள்ளே சென்றவன் கொஞ்ச நேரத்தில் கையில் ஒரு ஃபர்ஸ்ட் எய்ட் பாக்ஸோடு திரும்பி வந்தான் அக்னி. அவன் கையில் இருந்த பெட்டியைப் பார்த்த பவளமல்லி, “என்ன செய்யப் போறான் இவன்” என்று புரியாமல் அவனை பார்த்தாள்.

அவள் அருகில் வந்தவன், சோபாவிற்குத் கீழே தரையில் முழங்கால் போட்டு அமர்ந்தவன். அவள் பாதத்தைத் தன் கைகளில் மெதுவாக ஏந்தி, “உன் காலைக் காட்டு… மருந்து போடணும்,” என்றான். அவன் குரலில் இப்போது அந்தப் பழைய கோபமோ மிரட்டலோ இல்லை.

அப்போதுதான் பவளமல்லி தன் காலையே குனிந்து பார்த்தாள். கண்ணாடிச் சில்லு குத்திய இடத்திலிருந்து இரத்தம் கசிந்து, அவள் வெள்ளைப் பாதத்தில் உறைந்து போய்க் கிடப்பது அவளுக்கு அப்பொழுதுதான் தெரிகிறது. குடும்ப பாரத்தைப் பற்றிய கவலையில், தனக்குக் காயம் பட்டதே அவளுக்குத் தெரியாமல் போயிருக்கிறது.

“அது… அது பரவாயில்ல சார்… சும்மா லேசான காயம் தான். நான் போய் சமையல் பண்றேன்,” என்று தன் காலைப் பின்னாடி இழுத்தவள் எழுந்து செல்ல முயன்றாள்.

அவள் கையைப் பிடித்து மீண்டும் சோபாவில் அமர வைத்தவன் “அறிவிருக்கா உனக்கு? காயம் பட்டு இவ்வளவு இரத்தம் போயிருக்கு, வலிக்கவே இல்லையா உனக்கு? பேசாம இரு!” என்று அவளை அதட்டி, அவள் காலைத் தன் மடியில் வைத்து அழுத்தி வைத்தான்.

முதலில் பஞ்சை எடுத்து, காயத்தில் இருந்த இரத்தத்தை மெதுவாகத் துடைத்தான். அக்னியின் கை விரல்கள் அவள் பாதத்தில் பட்டதும் பவளமல்லிக்கு உடம்பெல்லாம் சிலிர்த்துவிட்டது. அவன் காட்டுமிராண்டி மாதிரி நடந்து கொள்வான் என்று நினைத்தவளுக்கு, இப்போது தன் காயத்திற்கு மருந்து போட்டு, மருந்து எரியும் போது, “ஷ்… கொஞ்சம் பொறுத்துக்கோ, இப்போ சரியாயிடும்,” என்று மென்மையாகச் சொல்வதைப் பார்க்கும்போது அவளால் தன் கண்களையே நம்ப முடியவில்லை.

அக்னிக்குள்ளும் அவனையறியாமல் ஒரு பெரிய மாற்றம் நடந்து கொண்டிருக்கிறது. அவள் மென்மையான பாதத்தைத் தொடும்போது அதை உணர்கையில் அவனுக்குள் புதுவித உணர்வு எழுந்தது, வலியால் அவள் முகம் சுருங்கும் போதும் அவனுக்குள் பவளமல்லி மேல் ஒரு இனம் புரியாத மென்மையும், ஈர்ப்பும் வருவதை அவனால் தடுக்க முடியவில்லை. அவள் இந்த எளிய, கள்ளமில்லாத குணம் அவனது கல் நெஞ்சை முழுமையாகக் கரைத்துக் கொண்டிருக்கிறது.

பவளமல்லியோ அக்னியின் இந்த விசித்திரமான, அன்பான செயலை எதுவுமே புரியாமல், இமைக்கக் கூட மறந்து அப்படியே பார்த்துக் கொண்டிருக்கிறாள். நேற்றிலிருந்து தன்னை மிரட்டி, அடிமை மாதிரி நடத்திய அக்னியா இவன்? அவளது கண்ணில் இருந்த பயம் மறைந்து, ஒரு புதிய ஆச்சரியமும் குழப்பமும் வந்து ஒட்டிக்கொள்கிறது.

அவன் இறுக்கமான உலகிற்குள் பவளமல்லி தன் கண்ணீரால் ஒரு மாற்றத்தைக் கொண்டு வரத் தொடங்கியிருந்தாள்.

You may also like

Leave a Comment

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.