News
🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥 🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥

வெறியனின் வேட்கையில் வெண்பனி 36

by Layas Tamil Novel
206 views
A+A-
Reset

வெறியன் 36

காலை எழும்போதே அக்னியின் முகத்தில் ஒரு சந்தோஷ ரேகை பரவி இருந்தது. இன்று தானே பவளமல்லி அவனிடம் தன் மனதில் என்ன இருக்கிறது எனக்கூறுவதாகச் சொல்லியிருந்தாள்! எப்படியும் இன்று தனக்குச் சம்மதம் சொல்லிவிடுவாள் என்று அக்னிக்குத் தெரியும். இருந்தாலும், அவள் வாயாலேயே அதைக் கேட்க வேண்டும் என்று நினைத்தவன் அந்தத் தருணத்திற்காகக் காத்திருக்கிறான்.

நேராக எழுந்து, குளித்து, பிரெஷ் அப் ஆகி, அவளைக் காணும் ஆர்வத்தில் கீழே வந்தான். இங்கே ஹாலில் இருந்த சோபாவில் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருந்த சிவனாண்டியைப் பார்த்ததும், சந்தோஷமாகக் கீழே இறங்கி வந்தவன் முகம் சுருங்கியது. ‘இவரா? இவர் எதுக்கு இந்த நேரத்துல வந்திருக்கார்?’ என்ற யோசனை அவன் மனதிற்குள் ஓட, அதை எண்ணியவாறே அவரை நோக்கி நடந்து வந்தான்.

அக்னியின் காலடித் தடங்கள் கேட்கவும் அவன் இருந்த பக்கம் திரும்பிய சிவனாண்டி, “என்னடா இவ்ளோ காலையிலேயே கிளம்பி வந்திருக்க…” என்றவர், “பரவால்ல, நீ ரெடியாகி வந்தது நல்லதா தான் போச்சு” என்றார்.

“அப்படியா? என்ன விஷயம்ப்பா நீங்க என் வீடு தேடி வந்திருக்கீங்க, அதுவும் இவ்ளோ காலையில?” என்றான் அவரைக் கேள்வியாகப் பார்த்தபடி.

“ஏண்டா, நான் உன் வீட்டுக்கு வரக்கூடாதா? என்ன, எனக்குத் தெரியாம இங்க எதுவும் வேலை பண்றியா நீ?” என்று கிண்டலும் நக்கலுமாகக் கேட்க,

“எப்பவும் என்னை பார்க்கணும்னு நினைச்சா என்னை நீங்க உங்க ஆபீஸ்க்குத் தானே வரச் சொல்வீங்க. இன்னைக்கு நீங்களே வந்திருக்கீங்களே, அதான் கேட்டேன்” என்று அவர் முன் இருந்த சோபாவில் வந்து அமர்ந்தவன், “மல்லி, ரெண்டு காபி!” என்று குரல் கொடுத்துவிட்டு அவரைப் பார்த்தான்.

“உங்ககிட்ட மறைச்சு எந்த வேலையும் செய்யணும்னு எனக்கு எந்த அவசியமும் இல்லைப்பா. என்னோட முடிவுல நான் யாரையும் தலையிட அனுமதிக்க மாட்டேன். அது உங்களுக்கும் நல்லாவே தெரியுமே” என்றான்.

“தெரியும்தான். ஆனா, உன் அப்பாவா உன்னோட வாழ்க்கையை நிர்ணயிக்க எனக்கு உரிமை இருக்குதானே…” என்றார் சிவனாண்டி, புதிர் போட்டபடியே அவனைப் பார்த்தவாறு.

“என் வாழ்க்கையை வாழப்போறது நான். அதுல நீங்களும் ஒரு அங்கமா இருக்கீங்களே ஒழிய, நீங்க அதுல முடிவெடுக்க இல்லை. ஒரு பார்வையாளரா என்னோட முடிவுகளை ஏத்துக்கக் கூடியவரா தான் இருக்கீங்க அப்பா, அதை மறந்துடாதீங்க” என்றான் அழுத்தமாக, அதே சமயம் தெளிவாக.

அவனின் இந்த பதிலில் சிவனாண்டியின் முகம் இறுகிப்போனது. அவர் அப்படியே அமர்ந்திருக்க… “சார், காபி” என்று அவர் முன் வந்து ட்ரேயை நீட்டினாள் மல்லி.

அவளை நிமிர்ந்து பார்த்த சிவனாண்டி, ஒரு கணம் அப்படியே உறைந்து போனார். பின் காபியை எடுத்துப் பருக ஆரம்பித்தவர், பவளமல்லியின் மீதிருந்து பார்வையை விலக்கவே இல்லை.

அக்னியிடம் காபி கப்பை நீட்டியவள், “சார், உங்க ரெண்டு பேருக்கும் டிபன் எடுத்து வைக்கட்டுமா?” என்றாள்.

அவனோ தன் தந்தையைப் பார்க்க… “இல்ல, எனக்கு வேணாம். வரும்போது சாப்பிட்டுத்தான் வந்தேன்” என்றவர், காபியைக் குடித்துவிட்டு அதை மேஜையில் வைத்தார். “அப்போ நான் கிளம்பறேன்” என்று தன் முழங்காலில் கையை ஊன்றி மேலெழுந்தவாறே கூறினார்.

“இன்னும் நீங்க வந்த விஷயத்தைச் சொல்லவே இல்ல, அதுக்குள்ள கிளம்பினா என்ன அர்த்தம்?” என்றான் அக்னி.

“நான் வந்த விஷயம் நடக்காதுன்னு நீ பேசின விதத்துலேயே தெரிஞ்சுக்கிட்டேன்” என்றவர், திரும்பி வாசலை நோக்கி நடக்க… அவரையே ஒரு புன்னகையோடு பார்த்திருந்தவன், “எனக்கு பசிக்குது மல்லி, நீ டிபன் எடுத்து வை…” என்றான்.

அவளும் சிவனாண்டியைப் பார்த்ததில் இருந்து சற்றுப் பதற்றம் கொண்டவளாகக் கிச்சனுக்குள் நடந்தாள். ‘அப்பாடி! மாமா பார்வை என்ன இவ்ளோ பயமா இருக்கு. இப்பவே அவர் இப்படி இருக்காருன்னா, அப்போ அம்மா கல்யாணம் பண்ண இருந்த டைம்ல அவர் டெர்ரரா தான் இருந்திருக்கணும்’ என்று நினைத்துக்கொண்டே ஹாட்பாக்ஸை எடுத்துத் திரும்பினாள்.

அங்கே அவள் பின் உரசும் நெருக்கத்தில் நின்று இருந்தான் அக்னிவரதன்.

“ஆ! சார்!” என்று அதிர்ந்து அவள் பின்வாங்க… “முடிவெடுத்தாச்சா?” என்றான் அவள் உயரத்திற்குக்குக் குனிந்து.

“ம்ம்… ம்ம்…” என்று தயக்கத்தோடு ‘ஆம்’ என்று தலையை ஆட்டினாள்.

“அப்போ சொல்லு…” என்றான் ஆர்வமாக.

“இப்… இப்போவேவா?!” என்றாள் அதிர்ந்து அவனைப் பார்த்தபடி.

“ம்ம்… வேற எப்போ சொல்லப்போற?” என்றான் கேள்வியாக அவளைப் பார்த்து.

“அது… ஈவினிங் கோவில் போயிட்டு… அங்க வெச்சு…” என்று அவள் இழுக்க…

“அங்க வெச்சு உன் கழுத்துல தாலி கட்டணுமா? லவ்வைச் சொல்லாம டைரக்டா கல்யாணமே பண்ணிக்கலாம்னு சொல்றியா?” என்றான் ஆர்வமாக.

“ஆ! ஐயோ! அதெல்லாம் இல்ல சார். கோவில்ல போய் சாமி கும்பிட்டு அப்புறம் சொல்லலாம்னு…” என்றாள்.

“ஹேய்! ஏற்கனவே ஒன் வீக் என்னை காக்க வெச்சது போதலையா உனக்கு?” என்றான் சிணுங்களாக.

“ப்ளீஸ் சார்! இப்போதைக்கு இப்படியே இருக்கட்டும்” என்று அவளும் கெஞ்சுதலாகப் பார்க்க, அவள் கெஞ்சும் கண்களிலும், சுருங்கிய புருவங்களிலும் விழுந்தவன், அதில் இருந்து எழ முடியாமல் தவித்தான். தலையை வேகமாக உலுக்கிக்கொண்டே நிமிர்ந்தவன், “சரி, அப்போ ஈவினிங் காலேஜுக்கு வந்து நானே உன்னை பிக்கப் பண்ணிக்கிறேன்” என்று, கிச்சனில் இருந்தால் தன்னை மீறி அவள் இதழ்களோடு கவிபாடத் துவங்கிவிடுவோமோ என்ற நினைப்பில் வேகமாக வெளியேறியிருந்தான்.

அவளும் அவன் முதுகை வெறித்தபடி மென் புன்னகையுடன் நின்றிருக்க… “அப்புறம் என்னை பார்த்துக்கலாம், சாப்பாடு எடுத்துட்டு வா எனக்கு ரொம்ப பசிக்குது…” என்று அவன் குரல் மட்டும் அவளுக்குக் கேட்டது. அவன் அவளிடம் திரும்பவே இல்லை. அவள் தன்னை பார்க்கும்போது தன் முதுகில் உணர்ந்த குறுகுறுப்பைச் சரியாகக் கணித்துச் சொல்லிவிட்டான் அவளிடம்.

அவளோ ஆச்சரியமாக அவன் முதுகை மீண்டும் வெறித்தவள், பின் அவனுக்கு உணவைக் கொண்டு வந்து டைனிங் டேபிளில் வைத்துவிட்டு, திரும்பிப் பார்க்காமல் கிச்சனுக்குள் புகுந்துவிட்டாள்.

அவளையே அமர்ந்து பார்த்துக்கொண்டிருந்த அக்னியின் முகத்தில், தன்னை பார்க்கக் கூச்சப்பட்டுக்கொண்டு சமையலறையில் தஞ்சம் புகுந்தவளைப் பார்த்து மெல்லிய சிரிப்பு மலர்ந்தது.

அவள் வைத்த உணவைச் சாப்பிட்டு முடித்தவன், “நான் ஆபீஸ் கிளம்பறேன்…” என்றான் கிச்சனை நோக்கி.

கிச்சனுக்குள் இருந்து முகத்தை மட்டும் வெளியே நீட்டியவள், ‘சரி’ என்று தலையை ஆட்டினாள்.

“சாயங்காலம் வரைக்கும் தான் நீ இப்படி என்கிட்ட ஓடி ஒளியுறது எல்லாம். அதுக்கு அப்புறம் நீயே நினைச்சாலும் அது நடக்காது கண்மணி!” என்றவன், தலையை கோதியபடி வெளியே கிளம்பிச் சென்றான்.

அக்னி கிளம்பியதும் அவசர அவசரமாகக் கிளம்பி வெளியே வந்தவள், அவர்கள் வசிக்கும் இடத்திற்குச் சற்றுத் தள்ளி இருந்த ஆட்டோ ஸ்டாண்டிற்கு வந்து ஒரு ஆட்டோ பிடித்து ஏறிக்கொண்டாள். தான் போக வேண்டிய இடத்தைச் சொல்லிவிட்டுப் பனிமதிக்குக் கால் செய்தாள்.

“அக்கா! எங்க இருக்க? கிளம்பிட்டியா?” என்றாள்.

“ம்ம்… வந்துட்டேண்டி, கோவில்ல தான் இருக்கேன். நீ கிளம்பியாச்சா?” என்றாள்.

“ஆச்சுக்கா, ஒரு பிஃப்டீன் மினிட்ஸ்ல வந்துடுவேன்” என்று போனை வைத்தவள், இவர்கள் இருவரும் வசிக்கும் ஊருக்குக் குடிபெயர்ந்துள்ள தன் குடும்பத்தைக் காண ஆசையாக இருந்தாள்.

சொன்னது போலச் சீக்கிரமே கோவிலுக்கு வந்துவிட… “அண்ணா! கொஞ்ச நேரம் வெயிட் பண்ணுங்க நான் வந்துடுறேன். அப்புறம் என் காலேஜ் போகணும்” என்று ஆட்டோ டிரைவரிடம் சொல்லிவிட்டு வேகமாகப் கோவிலுக்குள் நுழைந்தாள்.

அங்கே சாமி கும்பிட்டு முடித்துப் பிரகாரத்தில் மஞ்சுளா, சதாசிவம், தேனல்லி, பனிமதி என அனைவரும் அமர்ந்து சிரித்துப் பேசிக்கொண்டிருந்தனர். அவர்களைப் பார்த்ததும் சந்தோஷ முகமாக உள்ளே ஓடியவள், வேகமாக இறைவனைத் தரிசித்துவிட்டுப் பின் தன் குடும்பத்திடம் சென்றாள்.

“ஏண்டி இவ்ளோ நேரமா வர்றதுக்கு உனக்கு?” என்று தன்னை கழுத்தோடு கட்டிக்கொண்ட பவளமல்லியைச் செல்லமாகக் கடிந்து கொண்டாள் பனிமதி.

“என்னம்மா பண்றது! காலையில கிளம்புற நேரம் உன் பாசமலர் திடீர்னு அக்னி மாமா வீட்டுக்கு வந்துட்டார். அவர் கிளம்பியதும் மாமாவுக்குத் டிபன் ரெடி பண்ணி அனுப்பிட்டு நான் கிளம்பி வர வேணாமா?” என்றாள்.

அவளைக் கை பிடித்துத் தன் முன்பு வந்து அமர்த்திய மஞ்சுளா, சற்றுப் பதற்றமாக, “ஏன், அண்ணா வந்தாரா? உன்னை பார்த்து எதுவும் கேட்டாரா?” என்றார்.

“என்கிட்ட எதுவும் பேசல. ஆனா, நான் காபி கொடுக்கப் போன அப்போ என்னையே குறுகுறுன்னு பார்த்துட்டே இருந்தார்மா…” என்றவள், “ஏன்மா, உன் அண்ணா ஒருவேளை என்னை சைட் அடிச்சிருப்பாரோ? அவர் அந்த காலத்துல ரோமியோவா இருந்திருப்பாரா ம்மா? அதான் இந்த வயசுலயும் சைட் அடிக்குறாரோ…” என்றாள்.

“ஏய்! என் அண்ணனைப் பத்தி அப்படியெல்லாம் தப்பா பேசாதடி. அவர் அப்போவே சொக்கத்தங்கம். என்ன, கொஞ்சம் கோபம் மட்டும் வந்துடும், பிடிவாதம் அதிகம்” என்று தன் அண்ணனைப் புகழ்ந்தார்.

“அப்புறம் ஏன் என்னையே அவர் குறுகுறுன்னு பார்த்தாரு? அன்னைக்குத் தாத்தா வந்த அப்போ கூட என்னை இப்படித்தான் பார்த்தார். அவர் ஒரு படி மேல போய் நான் செஞ்ச இட்லியையும், குடல் குழம்பையும் பார்த்து, ‘இதுக்கு முன்ன இதே டேஸ்ட்ல நான் சாப்பிட்டிருக்கேனே’ன்னு சொன்னாரே…” என்றாள்.

“அதுவா… அது நீ உன் அம்மா சின்ன வயசுல எப்படி இருந்தாளோ, அதே போல அச்சு அசலா இருக்கியேன்னு அவங்க உன்னை பார்த்திருப்பாங்க” என்றார் சதாசிவம்.

“அம்மா என்னை மாதிரியே இவ்ளோ அழகா இருந்தாங்களா அப்பா?” என்றாள்.

“ஏய்! நான் உன்னை விட அழகா இருப்பேன் டி. என்கிட்ட இருந்து தான் உங்க மூணு பேருக்கும் இந்த அழகெல்லாம் வந்திருக்கு, சரியா?” என்று மஞ்சுளாவும் சளைக்காமல் அவளுடன் பேச, அவருடன் சேர்ந்து கலாய்த்துச் சிரித்துப் பேசினர்.

“சரி சரி, எனக்கு நேரம் ஆச்சு. நான் காலேஜ் கிளம்பறேன்” என்று எழுந்த பவளமல்லி, “ரகு ஏன்மா வரல?” என்றாள்.

“அவனுக்கு நீங்க ரெண்டு பேரும் நேரா அவனை வந்து பார்க்கணுமாம், அதுவரை உங்களைப் பார்க்க மாட்டேன்னு சொல்லிட்டான் டி…” என்றார் மஞ்சுளா.

“ம்ம்… அவனுக்கு ரொம்ப கொழுப்பாகிடுச்சு” என்றவள், “சீக்கிரமே வரோம் மா” என்று அங்கிருந்து கிளம்பினாள்.

அவளைத் தொடர்ந்து தேனல்லியும், “அம்மா, எனக்கும் காலேஜுக்கு லேட் ஆச்சு. முதல் நாளே லேட்டா போனா நல்லா இருக்காது. அக்கா கிளம்பறேன்” என்று பனிமதியைக் கட்டிப்பிடித்து அவள் கன்னத்தில் முத்தம் வைத்துவிட்டு அங்கிருந்து கிளம்பினாள்.

அவர்களும் கிளம்பியதும் பனிமதி, “அப்பா, நாளையே நீங்க ஹாஸ்பிட்டல்ல அட்மிட் ஆகிடுங்க. நான் கிடைக்கிற நேரத்துல வந்து உங்களைப் பார்க்கிறேன்” என்று அவர் கையில் பணத்தைத் திணித்தாள்.

“அம்மா பனி, எதுக்கும்மா பணம்? அதெல்லாம் எதுவும் வேணாம்” என்றார் அவர் அவசரமாக.

“அப்பா, சொன்னா கேளுங்க, இதை வெச்சுக்கோங்க” என்றாள்.

“உனக்கு ஏதும்மா இவ்ளோ பணம்?” என்றார்.

“என்னப்பா இப்படிக் கேட்டுட்டீங்க? உங்க பொண்ணு சும்மா இல்லப்பா” என்றாள்.

சதாசிவம் பதற்றத்தோடு அவளைப் பார்த்தார். இங்கே இவர்கள் மூவரும் பேசிக்கொண்டிருந்ததைத் தூரத்தில் இருந்த கொடிமரத்துக்குப் பின்னால் இருந்து பார்த்துக்கொண்டிருந்த ஐராவதனின் கண்கள் சிவக்க நின்று இருந்தான்.

You may also like

Leave a Comment

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.