News
🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥 🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥

அஸ்க.. லஸ்கா..காதல் 6

by Layas Tamil Novel
525 views
A+A-
Reset

EPISODE 6

விமான நிலையத்திலிருந்து தமிழரசு நேராக அலுவலகத்திற்குச் சென்றுவிட்டான். இலக்கியாவைத் தன்னுடைய வீட்டிற்கு அழைத்துச் சென்று விடச் சொல்லி வினித்திடம் கூறி இருந்தான். தான் வரும்வரை அவளிடம் யாரும் பேசக் கூடாது, அவள் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்லக் கூடாது, அவளுக்குத் தேவையானவற்றைச் செய்து கொடுத்துவிட்டு அவளைத் தொந்தரவு செய்யாமல் இருக்கச் சொல்லி வினித்திடமும் தன் வீட்டு வேலையாட்களிடமும் சொல்லி இருந்தான். தன்னைப் பற்றிய விவரங்களைக் கூட யாரும் எதுவும் சொல்லக் கூடாது என்று கட்டளையிட்டு இருந்தான் தமிழரசு.

தமிழரசு சொன்னது போலவே, வினித், இலக்கியாவை தமிழரசுவின் வீட்டில் விட்டுவிட்டு, எதுவும் பேசாமல் “நீ இங்கே வெயிட் பண்ணும்மா, அவன் வந்து உன்னைப் பார்ப்பான்” என்று சொல்லி, வாசலிலேயே இலக்கியாவை விட்டுவிட்டுச் சென்றான் வினித்.

வினித்தைப் பார்த்ததிலிருந்து, அவன், இவன் என்று யாரையோ பற்றித் தன்னிடம் சொல்வதைக் கேட்ட இலக்கியாவிற்கு அவன் யார்? அவன் பெயர் என்ன? அவனைப் பற்றிய விவரம் என்ன என்று எதுவுமே தெரியாமல் இருந்தது. இங்கே இவ்வளவு தூரம் தன்னை அழைத்து வந்தும் கூட, தன்னை ஏலத்தில் எடுத்தவனைப் பற்றிய விவரங்கள் எதுவும் சொல்லாமல் இப்படிப் பாதியிலேயே விட்டுச் செல்லும் வினித்திடம் எதுவும் கேட்க முடியாமல் தன்னிலையை எண்ணி நொந்து நின்றாள் இலக்கியா.

வினித் இங்கே தன்னைத் தனியாக விட்டுவிட்டுச் சென்றதும், தான் ஏதோ ஆதரவு இல்லாமல் நடுக்காட்டில் விடப்பட்டது போல உணர்ந்தாள் இலக்கியா.

வினித் வாசலைத் தாண்டிச் செல்லும் வரை அவனைப் பார்த்துக் கொண்டிருந்த இலக்கியாவின் காதுகளில், அந்த அதிகாலைப் பொழுதில் பறவைகளின் ஒலிகள் கேட்க… வாசலில் நின்று இருந்தவள் தன்னைச் சுற்றிலும் நோட்டம் விட்டாள். வீட்டிற்கு வெளியே இருந்த கார்டனை அப்போதுதான் பார்த்தாள். அங்கிருந்துதான் பறவைகளின் கீச்சொலி அவள் காதில் ரீங்காரம் விட்டிருக்க வேண்டும் என்று யோசித்தபடி, சத்தம் வந்த திசையை நோக்கி அவள் கால்கள் தானாகச் சென்றன.

தோட்டத்தில் நடுநாயகமாகப் போடப்பட்டு இருந்த அருவி போன்ற நீர்வீழ்ச்சியில் இருந்து தண்ணீர் வழிந்து கொண்டிருக்க… அது சுற்றிலும் சிறிய செடிகள் சூழ்ந்த தோட்டம் முழுவதும் பரவி இருந்தது. அதைத் தொடர்ந்து பெரிய பெரிய பழங்கள் நிறைந்த மரங்கள் இருக்க, அதை ஆச்சரியமாக அண்ணாந்து பார்த்தபடி இலக்கியா தோட்டத்தில் சுற்றிப் பார்த்தாள். மாப்பிளை, சீதாப்பழம், மாதுளை, கொய்யா, எலுமிச்சை, நெல்லி என இன்னும் பல பழங்கள் தரக்கூடிய மரங்களும், அதே அளவுக்குப் பூக்கள் பூத்துக் குலுங்கும் சோலையும் அந்த இடம் முழுக்க இருந்தது. அதை எல்லாம் அதிசயம் போலப் பார்த்தபடி தோட்டத்தில் உலா வந்தாள் இலக்கியா.

மரத்தில் இருந்த பழங்களை அணில்களும், காக்கை குருவிகளும் ரசித்துக்கொண்டு கீச் கீச் என்று ஒலி எழுப்பிக் கொண்டும் இருந்தன. சில பறவைகள் தோட்டத்தில் நடுவில் இருந்த அருவி போன்ற அந்த நீர்வீழ்ச்சியில் தண்ணீர் குடித்துக் கொண்டும், அதில் குளித்துக் கொண்டும், சில பறவைகள் தண்ணீரின் மேல் மரத்திலிருந்து பழுத்து உதிர்ந்த பழங்களை பறந்து வந்து அந்தப் பழங்களை ருசித்துக் கொண்டும் இருந்ததையும் பார்த்து, அதிசயம் போல நின்று இருந்தாள் இலக்கியா. மலேசியாவில் இருந்த வரையில் ஏதேனும் ஒன்றுதான் என்று பல மரங்களை அங்கங்கே பார்த்திருக்கிறாளே தவிர, இப்படி மொத்தப் பழங்கள், பூக்கள் நிறைந்த சோலைவனத்தை இன்றுதான் பார்த்தாள்.

இதை எல்லாம் பார்த்த இலக்கியாவிற்கு ஏனோ இந்தத் தோட்டம் மிகவும் பிடித்துப் போயிருந்தது. அதைச் சந்தோஷமாகச் சுற்றிப் பார்த்தவள், அங்கிருந்த மரங்களைத் தொட்டு அதைச் சுற்றி வந்து என, தான் இங்கே எப்படி வந்து எதற்காக வந்தோம் என்பதைக்கூட நினைவில் கொள்ளாமல் அந்தத் தோட்டத்திலேயே அதிசயம் போலச் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தாள் இலக்கியா.

அவள் தோட்டத்தை எல்லாம் ஆர்வமாகச் சுற்றிப் பார்த்துக் கொண்டிருக்க, அப்போது அவள் பின்னால் இருந்து “மேடம்” என்ற ஒரு குரல் கேட்டது.

“இது யார் தன்னை அழைக்கிறார்கள்” என்று இலக்கியா திரும்பிப் பார்க்க… தமிழரசுவின் வீட்டில் தலைமை வேலையாள் தான் அவளை “மேடம்” என்று அழைத்தபடி மிகவும் பவ்யமாக இலக்கியாவின் முன்பு கைகட்டி நின்று இருந்தார்.

தன் முன்பு அப்படி நிற்பதைப் பார்த்து சங்கடப்பட்ட இலக்கியா அவரைப் பார்த்து “நீங்க…” என்று கேட்க…

“இந்த வீட்ல வேலை செய்யுறேன் மேடம். சார் உங்களை வீட்டுக்குள்ள அழிச்சிட்டு போகச் சொன்னாரு” என்று சொல்ல…

“உங்க சார் இங்கே இருக்காரா?” என்று இலக்கியா ஆர்வமாகக் கேட்க…

“இல்ல மேடம். சார் நேத்து நீங்க எங்க வருவீங்க, நீங்க வந்ததும் அவங்களை அழிச்சிட்டு போய் உங்களுக்கு வேண்டியது எல்லாம் செய்து கொடுக்க ஏற்கனவே என்கிட்ட சொல்லி இருக்காரு மேடம்” என்றார் அவர் பவ்யமாக.

அந்த வேலையாள் சொன்னதைக் கேட்டு இலக்கியா “சரி” என்று தலையாட்ட…

“வாங்க மேடம், உள்ளே போகலாம்” என்று இலக்கியாவிடம் மிகவும் மரியாதையுடன் கூறியவர், இலக்கியாவை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றார்.

கார்டனைத் தாண்டி வீட்டு வாயிலே மிகவும் பிரம்மாண்டமாக இருந்தது. கோவிலின் வாசல் போல மிகவும் பெரியதாக இருந்தது அந்தக் கதவு. அதில் செய்யப்பட்டிருந்த வேலைப்பாடுகளை எல்லாம் ஆச்சரியமாகப் பார்த்தவாறு அவர் பின்னால் சென்றாள் இலக்கியா. வாசல் கதவில் இருந்த பிரம்மாண்டத்தை விட வீட்டிற்குள் இருந்த பிரம்மாண்டம் அவளை இன்னும் அதிகமாக வியக்க வைத்தது.

அவள் நடந்து சென்ற தரையில் அவள் முகம் தெரிய, அதை ஆச்சரியமாகப் பார்த்தவள், மேலே மாட்டப்பட்டிருந்த ஒளி விளக்கின் பிம்பமும் அந்தத் தரையில் தெரிந்தது. அவ்வளவு பளிச்சென ஒரு ஆள் நிற்பதை முழுவதுமாகக் காட்டியபடி தரையில் போடப்பட்டிருந்த மார்பிள் அவளை அப்படியே பிரதிபலித்தது. அதே ஆச்சரியமாகப் பார்த்தவாறு வீட்டை எங்கெங்கும் அங்கும் இங்கும் நோட்டமிட்டபடி அந்த வேலையாளுடன் சென்றாள் இலக்கியா.

உள்ளே அழைத்து வந்த வேலையாள் அவளிடம் திரும்பிப் பேச வர… இதுவரை இப்படிப்பட்ட இடத்திற்கு இலக்கியா வந்ததில்லை போல… இருந்த பொருட்களையும் வீட்டையும் ஆர்வமாகப் பார்த்தபடி வந்த இலக்கியா, வேலையாளைப் பார்த்து “உங்க சார் எங்கே இருக்காரு?” என்று கேட்டாள்.

அவள் கேட்டதும் பதில் கூறாமல் அமைதியாக வேலையாள் நிற்க…

“ஏன் எதுவுமே பேச மாட்டேங்கறீங்க? நான் உங்க சார் எங்கேன்னு தானே கேட்டேன்?” என்றாள் இலக்கியா.

“மேடம் நீங்க என்னைத் தப்பா நினைச்சுக்காதீங்க. சார் பத்தி அவரின் நேரில் வந்து உங்களிடம் முழு விவரமும் சொல்லுவாரு. நீங்க எங்க கிட்ட எதுவும் கேட்காதீங்க மேடம் ப்ளீஸ்” என்று அவளிடம் சொன்னவர் “நீங்க உள்ளே வாங்க” என்று இலக்கியாவைப் பார்த்து பவ்யமாக அழைத்துக் கொண்டு தமிழரசுவின் அறைக்கு முன் வந்து நின்றார்.

இலக்கியாவும் அதற்கு மேல் எதுவும் அவரிடம் கேட்டுக் கொள்ளாமல் அமைதியாக அவருடன் வந்து நிற்க…

“மேடம் இதுதான் சாருடைய ரூம். உங்களை இங்கேதான் தங்க வைக்கச் சொல்லி இருக்காரு. உள்ளே உங்களுக்குத் தேவையான எல்லாப் பொருளும் கொண்டு வந்து வைக்கச் சொல்லி நேற்றே சொல்லிட்டாரு.”

“நீங்க உள்ளே போனீங்கன்னா அங்க இருக்குற டிரெஸ்ஸிங் ரூம்ல உங்களுக்குத் தேவையான எல்லாப் பொருளும் இருக்கும்.”

“சார் உங்களை அங்கே இருக்கிற பொருட்களை எல்லாம் உபயோகப்படுத்திக்கங்கன்னு உங்ககிட்ட சொல்லச் சொல்லி இருக்காரு” என்றார் அந்த வேலையாள்.

“நீங்க போய்க் குளிச்சிட்டு பிரஷ் ஆகிட்டு வாங்க மேடம். உங்களுக்காக பிரேக்ஃபாஸ்ட் ரெடியா இருக்கு. நீங்க வந்ததும் சாப்பிடலாம்” என்றவர் அவளை உள்ளே போகச் சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றார்.

அவளுடன் வந்த வேலையாள் விவரங்களைச் சொல்லிவிட்டு அங்கிருந்து செல்ல, அவர் சென்ற பிறகு தமிழரசுவின் அறை கதவைத் திரும்பிப் பார்த்தாள் இலக்கியா. இந்த அறை கதவு 10 அடி உயரம் போல இருந்தது. பெரிய கதவைத் தன் சிறு கைகளால் தள்ளியபடி உள்ளே செல்கையில், ஏதோ அரண்மனை வாயிலைத் திறந்து கொண்டு செல்வது போல பிரம்மாண்டமாக இருந்தது அந்த அறையின் கதவும் அதற்கு உள்ளேயும்.

உள்ளே வந்த இலக்கியா அந்த அறையைப் பார்த்தவள், வீட்டிற்கு வெளியே இருந்த பிரம்மாண்டத்தை விட தமிழரசுவின் அறையில் இருப்பதைப் பார்த்தால் மிகவும் சிம்பிளாகத் தான் இருந்தது. அறைக்குள் வந்தவள் அனைத்தையும் கண்ணோட்டம் இட்டபடி, பெட்ரூமைத் தாண்டி அதன் அருகில் இருந்த மற்றொரு அறையைப் பார்த்தவள் அதைத் திறந்து கொண்டு உள்ளே செல்ல, அங்கே அறை முழுவதும் பெண்கள் அணியும் ஆடைகள் நிறையத் தொங்கவிடப்பட்டு இருந்தது. அதைப் பார்த்ததும் வேலையாள் சொன்னது நினைவிற்கு வந்தது இலக்கியாவுக்கு.

“இதுதான் டிரெஸ்ஸிங் ரூம்” என்று யோசித்தபடி அவள் உள்ளே சென்றாள். அங்கு இருந்த ஆடைகளை எல்லாம் பார்த்துக் கொண்டே வந்தவள், அதன் மீது எல்லாம் நாட்டம் இல்லாமல் சும்மா வெறுமனே பார்த்துக் கொண்டு வந்தாள். அப்போது அங்கிருந்த சோபாவில் ஒரு பிரவுன் நிற கவர் இருக்க, அதில் என்ன இருக்கிறது என்று அந்த கவரின் அருகில் வந்தவள், அந்த பிரவுன் கவரை ஆர்வமாக எடுத்துப் பிரித்துப் பார்த்தாள்.

அதில் காயத்திற்குத் தடவும் ஆயின்மென்ட், சில மாத்திரைகளும் இருந்தது. “இது எதற்காக இருக்கும்?” என்று யோசித்தவள், அதற்குள் ஒரு பேப்பர் இருப்பதைப் பார்த்து அதை எடுத்துப் பிரித்துப் பார்த்தாள். அதில் “உன் இடுப்பில் ஏற்பட்ட காயத்திற்கு ஆயின்மென்ட், மாத்திரையும் இருக்கிறது. மறக்காமல் போட்டுக்கொள்” என்று எழுதி இருந்தது.

அப்போதுதான் இலக்கியாவுக்கு மலேசியாவில் அவள் மாமாவிடமிருந்து தப்பித்துப் போகும் போது ஒரு காரில் மோதியது நினைவில் வர, அதில் காயமானதும் நினைவில் வந்தது. “அங்கே தனக்கு காயமானது எப்படித் தெரியும்? இதை யார் எழுதி வைத்திருப்பார்கள்?” என்று யோசித்தவள், “இந்த அறைக்குச் சொந்தக்காரன் தான் இதை இங்கு வைத்திருக்க வேண்டும். அப்படி என்றால் அவனுக்கு எப்படி எனக்கு காயமானது தெரிந்திருக்கும்? அவன் என்னை ஏலத்தில் எடுக்கும் போது தானே பார்த்திருக்க வேண்டும்” என்று யோசனையில் இருந்தவள்.

அந்தக் கவரை அங்கே வைத்துவிட்டு அந்த ட்ரெஸ்ஸிங் ரூம்மை ஒட்டி இருந்த பாத்ரூமிற்குள் சென்று தன் ஆடைகளைக் களைந்து குளிக்க ஆரம்பித்தாள். குளித்துவிட்டு உள்ளே இருந்த டவலைக் கட்டிக்கொண்டு வெளியே வந்தவள், அவளுக்காக வாங்கி வைக்கப்பட்டிருந்த மிகவும் விலை உயர்ந்த ஆடைகளை எல்லாம் பார்த்தவள், அதில் நாட்டம் இல்லாமல் அதில் இருப்பதிலேயே மிகவும் எளிமையாக இருந்த ஒரு ஆடையை எடுத்து அணிந்து கொண்டாள்.

அந்த ஆடையை அணிந்து கொண்டு தன்னை ஒரு முறை கண்ணாடியில் பார்த்தவள் பின்பு அந்த ட்ரெஸ்ஸிங் ரூமை விட்டு வெளியே வர… அப்போது அவள் இருந்த அறை கதவு தட்டப்பட்டது.

அறைக்கதவு தட்டவும், “இந்த அறைக்குச் சொந்தக்காரன் தான் வந்திருக்கிறானோ” என்று யோசனையில் வேகமாகச் சென்று இலக்கியா கதவைத் திறக்க… இலக்கியா சென்று அந்த அறை கதவைத் திறந்ததும் அவளை வீட்டிற்குள் அழைத்து வந்த வேலையாள் நின்று இருந்தார்.

அவரைப் பார்த்ததும் ஏமாந்தவள், அதை அவரிடம் காட்டிக் கொள்ளாமல் அவரைப் பார்த்து “என்ன?” என்று கேட்க…

“மேடம் சார் வந்துட்டாரு…உங்களைச் சாப்பிட அழைச்சிட்டு வரச் சொல்லி என்னை இங்கே அனுப்பினாரு” என்றான் பவ்யமாக.

தன்னை ஏலத்தில் எடுத்தவன் வந்து விட்டான் என்று சொல்லும் போதே அவளுக்கு ஏதோ ஒரு புதுவித உணர்வு தோன்றியது. சற்று முன்பு கூட அவனை எதிர்பார்க்க நினைத்தவளுக்கு இப்படி ஒரு உணர்வு தோன்றவில்லை. அவனை காணும் ஆவல் ஒரு பக்கம் இருந்தாலும், மறுபக்கம் தன்னைக் காசு கொடுத்து வாங்கியவன் எப்படிப்பட்டவனாக இருக்கப் போகிறான் என்று பயந்தாள். தன்னிடம் எப்படி நடந்து கொள்வான், தன்னை எப்படி அவன் நடத்துவான் என்று யோசனை வந்ததும் அவனைப் பார்க்க சற்றுப் பயமாக இருந்தது இலக்கியாவுக்கு. இந்த வீட்டின் உரிமையாளன் பற்றிய பயம் தொற்றிக்கொள்ள… தன்னை விலைக்கு வாங்கியவன் எப்படி இருப்பான்? கருப்பா? சிவப்பா? நெட்டையா? குட்டியா? வயதானவனா? அல்லது வாலிபனா? என்று பலவித யோசனைகளோடும் கேள்விகளோடும் வேலையாளின் பின்னால் டைனிங் டேபிள் நோக்கிச் சென்றாள் இலக்கியா.

You may also like

Leave a Comment

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.