Episode – 27
ஆனா சொல்லாமலும் இருக்க முடியாதே… இப்ப சொல்லலைன்னா
அப்பா கல்யாண வேலைகள்ல அடுத்தடுத்த கட்டத்துக்கு போயிட்டா இன்னும் சிரமம் ஆச்சே… என்று மஞ்சரி யோசித்துக் கொண்டே இருக்க…
“ஏம்மா ஒரு மாதிரி இருக்க… தலைவலின்னு சொன்னியே… ஹாஸ்பிடலுக்கு போயிட்டு வரலாமா… என்று கேட்டவர் வா நானே கார் எடுக்கிறேன் போயிட்டு வந்துடலாம்” என்று மஞ்சரியை அழைத்தார்.
“இல்லப்பா… அந்த அளவுக்கு எல்லாம் ஒன்னும் இல்ல…” என்று சொன்னவளை… உற்றுப் பார்த்தவர்
மெல்ல எழுந்து வந்து அவளது அருகில் அமர்ந்தார்.
அவளது தலையை தன் தோளில் சாய்த்து கொண்டு தலையை தடவிக் கொடுத்தவர்… “மஞ்சரி… என் உலகமே நீ தானம்மா… உனக்கு சின்ன தலைவலி வந்தாலும் அப்பாவுக்கு நெஞ்சுவலியே வந்துடும்மா…” என்று சொன்னவர்…
“ஏன் என் செல்லத்துக்கு அப்படி என்னடா பிரஷர்” என்று கேட்க..
மஞ்சரிக்கு அப்படியே வாய்விட்டு ஓஓ… என்று அழுது கொண்டே அவரிடம் சொல்லி விட வேண்டும் என்று தோன்றியது.
ஆனால்…
“நமக்காகவே வாழ்கிற ஒரு ஜீவன்… அந்த ஜீவன் என்னோட வாழ்க்கையே பத்தி நான் யோசிச்சதை விட அதிகமா யோசிச்சு அதை பத்தி ஒரு கோட்டையை கட்டி வச்சிருக்கு… அந்தக் கோட்டை அத்தனையுமே தன் மகளுக்கு சந்தோசம் மட்டுமே வேணும் அப்படிங்கற ஆசையால் நிறைந்தது”…
ஏற்கனவே நாம் தப்பான ஒருத்தனை லவ் பண்ணுனது தெரிஞ்சப்ப கூட…
தன் பொண்ணு தப்பான ஆள் கிட்ட சிக்கி கஷ்டப்பட்டுடக்கூடாது அப்படிங்கறது மட்டும் தான் அவரோட எண்ணமா இருந்துச்சே ஒழிய… தன் மேல வேற எந்த கோபமும் படல…
“ஆனா அவரோட அந்த குணத்தையே நம்மளோட பலமா எடுத்துக்கிட்டு இன்னொருத்தர லவ் பண்றேன் அப்படின்னு சொல்றது எப்படி…”
“ஐயோ தலையே வெடிச்சிடும் போல இருக்கே” என்று இருந்தது மஞ்சரிக்கு…
“அப்பா…” என்று அவரது முகத்தை உற்றுப் பார்த்தவள்…
இப்போதைக்கு எதையும் வெளிக்காட்டாமல்… “அப்பா எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியலப்பா…” என்றவாறு அவர் மடியில் புதைந்து கொண்டாள் மஞ்சரி.
“தன் குழந்தைக்கு ஏதோ சரியில்லை என்று புரிந்து கொண்ட அந்த தகப்பன்… உள்ளே உடைந்து போனாலும்… வெளியே எதையும் காட்டிக் கொள்ளாமல் அவளை ஆறுதலாக தட்டிக் கொடுக்க….
அதே சமயம் மஞ்சரிக்கு… தன் மேல் உயிரையே வைத்திருக்கும் இந்த ஜீவனுக்கு எந்த கஷ்டத்தையும் கொடுத்திடக்கூடாது…நம்மனால முடிஞ்சது அவரோட விருப்பத்துக்கு நடக்கிறது தான்” என்று மனது கொஞ்சம் திடமாக ஏதோ முடிவு எடுத்தது போல் இருந்தது.
மெதுவாக எழுந்தவள்… “சரிப்பா ஃபேக்டரிக்கு போயிட்டு வரலாமா டைம் ஆகுதுல்ல” என்று கேட்டாள்.
“ஆமம்மா… நம்ம ரெண்டு பேர் தான் போயிட்டு வரணும்… பாவம் கிருஷ்ஷுக்கு இப்போ வண்டி ஓட்ட முடியாது… அவன் ரெஸ்ட் எடுக்கட்டும்…” இரும்மா நான் ரூம்ல போய் ரெடியாகிட்டு வந்துடறேன் என்று மகேஸ்வர் எழுந்து சென்றார்.
அங்கே தனக்காகவும் தன் குடும்பத்திற்காகவும்… அத்தனை சிரமங்களையும் தாங்கிக்கொண்டு… படுத்திருக்கும் கிருஷ்…
இங்கு தன் மேல் உயிரையே வைத்திருக்கும் அப்பா…
இரண்டையும் நினைக்கும்போது.. மஞ்சரி விரக்தி நிலைக்கே சென்று விட்டாள்.
அந்த நாள் அப்படியே மெதுவாக கரைந்தது.
அடுத்த நாள் காலை எட்டு மணிக்கு கிருஷ் மகேஸ்வரின் வீட்டுக்கு வந்தான். “சார் கார் கீ எங்க இருக்கு…”
என்று கேட்டவாறே…
அவனைப் பார்த்த மகேஸ்வர்… “வா வா கிருஷ்… நேத்து நானும் மஞ்சளையும் ஃபேக்டரிக்கு போயிட்டு வந்தோம்ல்ல… கீ என்னோட ரூம்ல இருக்கும்னு நினைக்கிறேன்…” என்று சொன்னவர் மஞ்சரியை அழைத்து “மஞ்சரி அந்த கார் கீ எடுத்து கிருஷ் கிட்ட கொடும்மா” என்று சொல்ல
மஞ்சரி தலையை குனிந்து கொண்டே… கிருஷ்ஷை நேருக்கு நேர் பார்க்க முடியாமல்… காரின் கீயை எடுத்து வந்து அவனிடம் தந்தாள்.
கிருஷ் அவளது முகத்தை பார்க்க… அவளது முகம் தூங்காமல் சிவந்து கிடந்தது… மனம் ரொம்ப அழுத்தமாக இருந்தது அவனுக்கு.
இப்போது மகேஸ்வர் அவனிடம் “கிருஷ்… வண்டியை ரெடி பண்ணு நம்ம ஜோசியரை பார்த்துட்டு வந்துடலாம்” என்று சொன்னார்.
மகேஸ்வரின் முகத்தில் இப்பொழுது மகிழ்ச்சி தெரிந்தது. இந்த சந்தோஷத்தை தான் கெடுத்து விடக்கூடாது என்று கிருஷ் நினைத்தான்.
நினைத்தவாறே மஞ்சரியை திரும்பி பார்க்க… அவளும் அதே அழுத்தத்தோடு கிருஷ்ஷை பார்த்துக் கொண்டிருந்தாள்.
அடுத்த அரை மணி நேரத்தில் மகேஸ்வர் அவரது மனைவி, மஞ்சரி மூவர் கிளம்பி வந்தனர்.
கிருஷ் காரை எடுக்க நால்வரும் எப்பொழுது ஜோதிடரை பார்க்க கிளம்பிவிட்டனர்.
காரில் செல்லும்போது மகேஸ்வரர் தனது மனைவியிடம்…. “உஷா நம்ம ஜோதிடர் எல்லாத்தையும் கரெக்டா சொல்லுவர்… நான் இந்த ஃபேக்டரி ஆரம்பிச்சப்போ… நம்மளோட
கல்யாணத்துக்கு ஜாதக பொருத்தம் எல்லாமே இவர்தான் சொன்னார்”.
“நம்ம மஞ்சரியோட ஜாதகத்தை ரொம்ப நாளைக்கு முன்னாடி இவர்கிட்ட காட்டினேன்… நல்ல வரன் அமைவார்னு சொன்னார்…”
“நான் கூட அவர்கிட்ட காதல் கல்யாணம் ஏதும் பண்ணிக்குவாளா”… ன்னு கேட்டேன்.
“அதுக்கு அவர் வயசுக்கு உண்டான தடுமாற்றம் இருக்கும்… ஆனா கண்டிப்பா உங்க பொண்ணு உங்க விருப்பத்துக்கு மாறா நடக்க மாட்டா அப்படின்னு சொன்னார்” என்று தன் மகளைப் பற்றி பெருமையாக பேசிக்கொண்டு வந்தார் மகேஸ்வர்.
“ஆண்டவா… ஏன் கிருஷ்ஷ பார்க்க வெச்ச… அவன் மேல எனக்கு ஏன் ஆசைய வர வச்ச… நான் இப்போ கஷ்டப்படுவதை பார்க்க உனக்கு அவ்வளவு சந்தோஷமா” என்று மனதுக்குள் கடவுளைத் திட்டிக் கொண்டே வந்தாள் மஞ்சரி.
இவர்கள் பேசிக் கொண்டே வர கொஞ்ச நேரத்தில் ஜோதிடர் அலுவலகம் வந்தது.
ஜோதிடர் சரவணன் பெயர் பலகை
‘அனுமானிப்பவன் ஜோதிடன், நிர்மாணிப்பவன் இறைவன்’ என்ற வாசகத்தை கொண்டிருந்தது.
அதைப் பார்த்த மஞ்சரி… இதுதான் எதார்த்தம்… எல்லாமே எழுதி வைக்கப்பட்டது… எது நடக்குமோ அது நடக்கட்டும் என்று மனதில் நினைத்துக் கொண்டு…. அப்படியே கொஞ்சம் தள்ளிப் பார்க்க அங்கேயே சிவபெருமான் கோவில் கோபுரம் தெரிந்தது… இதுக்கு மேல எதையும் யோசிச்சு என்னால கஷ்டப்பட முடியாது… நான் நடைபிணமா வாழணுமா… இல்ல சந்தோஷமா வாழனுமா அப்படின்னு நீயே முடிவு பண்ணு என்று மனதில் வலியுடன் வேண்டிக்கொள்ள அவள் கண்களில் இருந்து கண்ணீர் கசிந்தது.
இவர்கள் காரை நிறுத்திவிட்டு… கீழே இறங்க…
க்ரிஷ் மகேஸ்வரிடம் “சார் நீங்க போயிட்டு வாங்க நான் காரிலேயே இருக்கிறேன்” என்றான்.
அட என்னப்பா நீ…. மூணாவது ஆள் மாதிரி பேசிட்டு இருக்க… நீயும் வா…
நால்வரும் ஜோதிடர் அலுவலகத்தில் நுழைய… அங்கே ஏற்கனவே இரண்டு மூன்று பேர் அமர்ந்திருந்தனர். இவர்களும் அங்கே இருந்த இருக்கையில் அமர்ந்தனர்.
மகேஸ்வருக்கு மனதில் ஒரு விதமான சந்தோசமான படபடப்பு இருந்தது… பொதுவாக பெற்றவர்களின் எதிர்பார்ப்பே… திருமண விஷயத்தைப் பற்றி பார்க்க வரும்போது…ஜோதிடர் கண்டிப்பாக நல்ல விஷயமாக சொல்லுவார்… அது எந்த மாதிரியான விஷயம்…
கல்யாணம் நல்லபடியா நடக்கும், போற இடத்துல உங்க பொண்ணு மகாராணி மாதிரி இருப்பா, இத்தனை குழந்தைகள் பிறக்கும், முதல்ல மகாலட்சுமி பிறப்பா… என்று ஜோதிடர் என்னென்ன சொல்வாரோ என்பது போல மகேஸ்வரின் மனம் ஓரிடத்தில் இருக்காமல் அலை பாய்ந்து கொண்டிருந்தது.
அதே சமயம் கிருஷ்ஷுக்கும், மஞ்சரிக்கும் அங்கே அமர்ந்திருப்பது நெருப்பில் அமர்ந்திருப்பது போல் இருந்தது… ஒவ்வொரு நொடியும் ஆண்டுகளை கடப்பது போல் இருந்தது….
அப்படியே கொஞ்ச நேரம் கடந்ததும்…
ஜோதிடர் சரவணன் இவர்களை உள்ளே அழைத்தார்…
“வாங்க மகேஷ்வர் சார் எப்படி இருக்கீங்க…”
“நல்லா இருக்கும் ஜோதிடரே… நீங்க நல்லா இருக்கீங்களா…” என்றார் மகேஸ்வர் பதிலுக்கு.
“பரம்பொருளின் அருளால்… எல்லாமே நல்லா போயிட்டு இருக்கு மகேஸ்வர் சார்… அப்புறம் சொல்லுங்க பொண்ண கூட்டிட்டு வந்து இருக்கீங்க என்ன விசேஷம்…” என்று ஜோதிடர் கேட்க…
“பொண்ணுக்கு கல்யாணம் பண்ணிட்டோம்னா நம்மளோட கடமை முடியும் இல்லைங்களா… அதான் உங்கள ஒரு வார்த்தை கேட்டுட்டு போயிடலாம்னு வந்தோம்… அப்படியே பொண்ணும் எல்லாத்தையும் தெரிஞ்சுகிட்டும்னு அவளையும் கூட்டிட்டு வந்துட்டோம்… இதுல மறைக்கிறதுக்கு என்ன இருக்கு, இல்லைங்களா ஜோதிடரே” என்றவாறே மகேஸ்வர் ஜாதகத்தை எடுத்து ஜோதிடரிடம் கொடுத்தார்.
“உண்மைதான் சார்… இப்ப இருக்கிற குழந்தைங்க நம்மள விட ரொம்ப புத்திசாலிங்க… அவங்க எல்லாத்தையும் தெரிந்து கொள்வது நல்லது தான்” என்றவாறே ஜாதகத்தை திறந்து பார்த்த ஜோதிடர்… மஞ்சரியை நிமிர்ந்து பார்த்தார். அப்படியே திரும்பி கிருஷ்ஷைப் பார்த்தார்..
“தம்பி யாரு” என்று மகேஸ்வரிடம் கேட்க…
“நம்ம குடும்பத்துக்கு ரொம்ப வேண்டிய பையன்” என்று சொன்னார் மகேஷ்வர்.
இப்போது ஜோதிடர் மகேஸ்வரைப் பார்த்து… “சார் உங்க பொண்ணு உங்க வார்த்தையை மீற மாட்டா…. ஆனா”… என்று புள்ளி வைத்து நிறுத்த,
மகேஸ்வர் உன்னிப்பாக ஜோதிடரை கவனித்தார்…
உங்க பொண்ணு உங்க வார்த்தையை மீறமாட்டா… ஆனா விதி அவளுக்கு வேற மாதிரியான முடிவை எடுத்து வச்சிருக்கு… நான் உறுதியாக சொல்வேன், உங்களுக்கு உங்க பொண்ணால எந்த கெட்ட பெயரும் வராது… என்றவரே திரும்பி மஞ்சரியைப் பார்த்தவர்…
ஏம்மா மஞ்சரி, மனசுல ஏம்மா இவ்வளவு அழுத்தத்தை போட்டு வச்சிருக்க…. என்று சிரித்தவாறே கேட்டவர்… நீ ஒன்னும் கவலைப்படாத… நீ எதை மறைச்சு உன்னை கஷ்டப்படுத்திகிட்டு, அப்பா அம்மாவ சந்தோசமா வச்சுக்கலாம்னு நினைக்கிறியோ… அதுவே உனக்கு கண்டிப்பா சந்தோஷத்தை தரும்.
மகேஷ்வருக்கு ஒன்றும் புரியவில்லை “ஜோதிடரே என்ன சொல்றீங்க… கொஞ்சம் தெளிவாக சொல்றீங்களா” என்று கேட்டார்.
“
மகேஸ்வர் சார்… இந்த பேச்சு வார்த்தைய ஒரு மாசத்துக்கு தள்ளி வையுங்க… அதுக்காக பயப்பட வேண்டாம்…. இந்த ஒரு மாசத்துல நல்ல மாற்றங்கள் நடக்கும்… அதுக்கப்புறம் உங்களுக்கு தெரியும் என்ன பண்ணலாம்னு அதுவரைக்கும் அவசரப்பட வேண்டாம்…” என்று சொல்லி அவர்களை அனுப்பி விட்டார்.
காரில் வந்து அமர்ந்த மகேஸ்வர் உஷாவுக்கு பெரிய குழப்பமாக இருந்தது… “என்ன ஜோதிடர் இப்படி ஒண்ணுமே புரியாமல் சொல்றாரே…” என்று நினைத்தவர்,
“கிருஷ்… உனக்கு ஜோதிடத்தில் எல்லாம் நம்பிக்கை இருக்கா…” என்று கேட்டார்.
“சார்… நம்ம கையில என்ன இருக்கு ஆண்டவன் என்ன நினைக்கிறானோ அதுதான் நடக்கும்” என்றான் தட்டு தடுமாறி.
மஞ்சரி ஜன்னல் வழியாக வெளியே பார்த்தவள்…. “சிவபெருமானே… இது நீ எனக்கு கொடுக்கும் அறிகுறியா?… இல்லை அப்பாவை தயார் செய்ய நீ செய்யும் விளையாட்டா?” என்று மனதிற்குள் அழுதாள்.
மஞ்சரியின் அழுகைக்கு இறைவன்
செவி சாய்ப்பாரா?
