EPISODE – 11
ஸ்டேஷனில் குமாரும், இன்ஸ்பெக்டரும் பேசிக் கொண்டிருந்தனர்.
“சார் என்னோட பிரெண்ட் டாக்டர் பவித்ரன். நானும் அவனும் லைஃப் லாங் ஹாஸ்பிடலுக்கு போனதுக்கப்புறம் நடந்த பிரச்சனை எல்லாம் உங்களுக்கு தெரியுமில்ல..”
“நீயும் கந்தசாமியும் தானே அங்கே போனீங்க… இப்ப என்னய்யா… நீயா புதுசா ஒரு கதை சொல்ற” என்றார் இன்ஸ்பெக்டர் .
“சார் என்னோட ஃப்ரெண்ட் டாக்டரா இருக்கறதுனால அவனும் கூட வந்தா ஏதாவது புதுசா விஷயம் கிடைக்கும்னு அவனையும் என் கூட அந்த ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போனேன்… இப்ப என்னன்னா அந்த ஹாஸ்பிடலுக்கு வந்த ஒரு பேஷண்டுக்கு கிட்னிய திருடி இருக்காங்க… அது இந்த சுரேந்திரன் ஹாஸ்பிடல்ல தான் நடந்திருக்கு…” என்றான்.
அப்போது கான்ஸ்டபிள் கந்தசாமி ஏப்பம் விட்டுக் கொண்டு உள்ளே வருகிறார்.
வந்தவர் விரைப்பாக நின்று சல்யூட் அடிக்க முயலும் போது…. வாயில் ஏப்பமும் பின்னாடி காற்றும் பிடுங்கிக் கொண்டு போனது…
“யோவ் கந்தசாமி… என்னய்யா இது…
டியூட்டி நேரத்துல எங்கே போயிட்டு வர, கண்டதை தின்னுட்டு வந்து என்ன இது” என்று இன்ஸ்பெக்டர் முகம் சுளித்தார்.
“சார் டீ சாப்பிடலாம்ன்னு தான் போனேன்.. பக்கத்துல கொத்து புரோட்டா போட்டுட்டு இருந்தான்… அதான் ஹி… ஹி….” என்று அவர் வழிய..
“எப்படியோ ஓசிலையே ஆபரேஷன் பண்ணிட்டு வந்துட்டே… இப்படியே தின்னுட்டு இருந்தினா… அடுத்த தடவை காசு கொடுத்து தான் ஆபரேஷன் பண்ற மாதிரி இருக்கும் பாத்துக்க ” என்றார் இன்ஸ்பெக்டர்.
“ஹி ஹி” என்று கந்தசாமி மீண்டும் பல்லைக் காட்டினார்.
“சரி போய்யா வாங்குற சம்பளத்துக்கு கொஞ்சமாவது வேலையை பாரு போ..” என்று அவரை அனுப்பினார்.
“சரிங்க ஐயா” என்று சல்யூட் அடிக்க கையை தூக்க முயல… அவரால் முழுதாக கையைக் கூடத் தூக்க முடியவில்லை.
இன்ஸ்பெக்டர் தலையில் அடித்துக்கொண்டு “போய்யா போ…” என்று அனுப்பிவிட்டார்.
“நீங்க சொல்லுங்க” என்றார் குமார் பக்கம் திரும்பி.
“அதான் சார் அந்த ஹாஸ்பிடலுக்கு வர்ற ஒரு பேஷன்ட் கிட்னிய திருடி இருக்காங்க… நம்ம இதை இப்படியே வச்சு… இது ஒரு கேசா பைல் பண்ணி… சுரேந்திரன அரஸ்ட் பண்ணா என்ன சார்” என்றான் குமார்.
“யோவ்… இப்போ அந்த சுரேந்திரனுக்கும் மினிஸ்டர் ரவிக்கும் லிங்க் இருக்கிறது தெரிஞ்சிருச்சு… அதே மாதிரி இன்னும் நிறைய பேருக்கு லிங்க் இருக்கலாம் . ஏதாவது தப்பா போச்சுன்னா நம்மள தொப்பியை கழட்டிடுவானுங்க…
அதனால இன்னும் எவிடன்ஸ் ஹெவியா வேணும் நமக்கு” என்றார் இன்ஸ்பெக்டர்.
“சார் அப்படின்னா… நமக்கு அந்த சுரேந்தரோட லேப்டாப் கண்டிப்பா வேணும்… அதுல உள்ள transaction என்னென்ன நம்ம பார்த்துட்டோம்னா அவன ஈஸியா அரஸ்ட் பண்ணிடலாம்” என்றான் குமார்.
“கரெக்டு தான், இப்போ சுரேந்திரன் அலர்ட் ஆயிருப்பான்… ஏன்னா நீ ஏற்கனவே அவனோட லேப்டாப்பை எடுக்க ட்ரை பண்ணி இருக்க…” என்றார்.
“ஆமா சார் ஆனா அவனுக்குன்னு ஏதாவது வீக்னஸ் இருக்கும்… அவன ஃபாலோ பண்ணுனா… கண்டிப்பா நமக்கு ஏதோ ஒரு வழி கிடைக்கும் ” என்றான்
“நீ சொல்றதும் சரிதான்… முதல்ல எவிடன்ஸ் ரெடி பண்ணிடலாம்… அப்புறம் எவிடன்ஸ எடுத்துக்கிட்டு போயி நம்ம மினிஸ்டர் மருதமலையை பார்த்திடலாம்” என்றார்.
“இது மட்டும் நடந்திருச்சுன்னா… இந்த திருட்டுப் பயலுகள புடிக்கிறது மட்டும் இல்லாம… பல அப்பாவிகளோட உயிரை காப்பாத்தின புண்ணியமும் நமக்கு கிடைக்கும்” என்றான் குமார்.
“சார்… நீங்க ஃப்ரீயா இருந்தா சொல்லுங்க… நீங்க, நான், டாக்டர் பவித்ரன் மூணு பேரும் வெளியில ஏதோ ஒரு இடத்தில சந்திக்கலாம்” என்றான்
“நமக்கு இது தானய்யா வேலை… நீ உன் பிரண்ட்கிட்ட கேளு… அவர் எப்போ ஃப்ரினு சொல்றாரோ அப்ப நாம வெளியில் மீட் பண்ணுவோம்”
“இப்பவே கேட்கிறேன் சார்” என்றவன் பவித்திரனுக்கு உடனே போன் செய்தான்
“ஹலோ பவித்ரன் …”
“சொல்லுடா எஸ்ஐ… என்ன திடீர்னு கூப்பிட்டு இருக்க…”
“இங்க நானும், இன்ஸ்பெக்டரும் இருக்கோம்…” என்ற சிக்னலை கொடுத்துவிட்டு…
“அந்த ஆர்கன்ஸ் திருட்டு விசயமா நானும், இன்ஸ்பெக்டரும் உன்ன மீட் பண்ணனும்… இன்னைக்கு ஈவினிங் ஃப்ரீயா இருப்பியா? மீட் பண்ணலாமா?”
“எட்டு மணிக்கு கிளினிக் க்ளோஸ் பண்ணிருவேன்…
நம்ம ஈவினிங் கஃபேல மீட் பண்ணலாம்” என்றான் பவித்ரன்.
“ஓகே…” என்று போனை வைத்தான் குமார்.
“சரி… நான் கொஞ்சம் வெளியில போயிட்டு வரேன் நீ ஸ்டேஷன பார்த்துக்க”.. என்று இன்ஸ்பெக்டர் கிளம்ப…
முன்னாடி இருந்த சேரில் கான்ஸ்டபிள் கந்தசாமி உக்காந்து
முட்டை புரோட்டா சாப்பிட்ட மயக்கத்துல அரை தூக்கத்தில் இருந்தார்.
“யோவ் கந்தசாமி எந்திரிய்யா… இன்ஸ்பெக்டர் வர்றது கூடத் கவனிக்காம நீ பாட்டுக்கு தூங்குற” என்றான் குமார்
“இல்ல தம்பி… சும்மா உக்காந்திருந்தேன்…” என்று அவர் தலையை சொரிய
“ஆமா நீ எப்ப தான் வேலை செஞ்சிருக்க. எப்பவுமே சும்மாதான் உட்கார்ந்துட்டு இருப்பே…. சரி இன்னைக்கு சாயங்காலம்… அந்த சுரேந்திரன் ஹாஸ்பிடலுக்கு எதுத்த மாதிரி இருக்கிற டீ கடையில இருந்து ஹாஸ்பிடல்ல கவனி… அங்க யார் யார் வர்றாங்க போறாங்கன்னு ரிப்போர்ட் கொடு…” என்றான்
“சார்… அந்த சுரேந்திரன் பயங்கரமான ஆளுன்னு பேசிகிட்டு இருந்தீங்க… என்ன இப்படி கோர்த்து விடுறீங்களே” என்றார் ஏட்டு
“யோவ் நான் உன்னைய ஹாஸ்பிடல் உள்ளயா பார்க்க சொன்னேன்… தள்ளி நின்னு ஒரு டீக்கடையில் இருந்து தானே பார்க்கச் சொன்னேன்… இந்த வேலையும் செய்யலன்னா… பேசாம வீட்டிலேயே இருந்துகறியா நீ ” என்றார் கடுப்பாக.
“சார்… நல்ல ஐடியாவாத்தான் இருக்கு… இப்ப கம்ப்யூட்டர்ல வேலை செய்றவங்க எல்லாம் ஒர்க் ப்ரம் ஹோம்னு வீட்டிலேயே உட்கார்ந்து வேலை செய்றாங்கள்ள… அது மாதிரி எனக்கும் வீட்டிலேயே இருந்து சம்பளம் வர மாதிரி ஏதாவது ஸ்கீம் இருக்கா சார்” என்றார் கந்தசாமி.
“யோவ்…. உனக்கு அர்ஜுன் படத்துல வர்ற ஏட்டு ஏகாம்பரம்
பரவால்ல போல இருக்கே” என்று கடுப்பான இன்ஸ்பெக்டர்.l
“சார்… நான் ஹாஸ்பிடல் வெளியில் இருந்து உளவு பாக்கும்போது எனக்கு பாதுகாப்புக்கு நம்மால் ஒருத்தரை அனுப்புறிங்களா ”
“அது எப்படிய்யா… கொஞ்சம் கூட சிரிக்காம கேக்குற… ஆமா இவரு பெரிய உளவுத்துறை ஐஜி.. அப்படியே இந்தியா பார்டர்ல போய் நின்னு உளவு பாக்க போறாரு… இவருக்கு பாதுகாப்புக்கு ஆள் போடணும்… ஒழுங்கா டீக்கடையில போய் உட்கார்ந்து ஹாஸ்பிடல்ல என்ன நடக்குதுன்னு பாத்து சொல்லு ” என்று சொல்லிவிட்டு அவர் கிளம்பிவிட…
“போறப்ப யூனிஃபார்ம் போட்டுட்டு போகாத… மப்ஃடில போ”என்று சொல்லிவிட்டு உள்ளே போய்விட்டான் குமார்.
இரவு 8 மணி… அளவான கூட்டத்துடன் கஃபே இயங்கிக் கொண்டிருந்தது.
அங்கே ஒரு கார்னரில் எஸ் ஐ குமார் அமர்ந்திருந்தான்.
“இதுதான் கரெக்டான வியூ பாயிண்ட்… நம்ம இங்க இருக்கிறது அதிகமா யாருக்கும் தெரியாது…” என்று யோசித்துக்கொண்டு இருக்க
கொஞ்ச நேரத்தில் இன்ஸ்பெக்டர் டீசர்ட் பேண்டில்… அங்கு வந்தார்.
“என்ன குமார் இன்னும் உன் பிரென்ட் பவித்ரன் வரலையா?”
“சார்… ஒரு வேளை ஹாஸ்பிடல்ல கூட்டமா இருந்தாலும் இருக்கும் இருங்க நான் போன் பண்றேன்”
“வேண்டாம் குமார்… அவர் வரட்டும்… அவர் நமக்கு ஹெல்ப் பண்ண தான் வரார்… வேலைய முடிச்சுட்டே வரட்டும்”
“சார் நாம ஏதாவது ஆர்டர் பண்ணலாமா…”
“எனக்கு டீ மட்டும் போதும் குமார்…”
வெயிட்டரை கூப்பிட்டு இரண்டு டீ சொல்லிவிட்டு காத்திருந்தனர்.
அடுத்த ஐந்து நிமிடத்தில்… டீ கொண்டு வரப்பட… கரெக்டா பவித்திரனும் அங்கு வந்து சேர்ந்தான்.
குமார் இருவரையும் அறிமுகப்படுத்தி வைக்க, சொல்லுங்க டாக்டர்… “நீங்க எப்படி இந்த ஆர்கன்ஸ் திருட்டுக்கு முடிவு கட்டணும்னு நினைக்கிறீங்க”
“சார்… என்னோட ஹாஸ்பிடலுக்கு ட்ரீட்மென்ட்க்கு ஒரு நடுத்தர வயது அம்மா வந்தாங்க… நான் செக் பண்ணப்போ எனக்கு இந்த டவுட்டு வந்துச்சு… அதுக்கப்புறம் அவங்கள டெஸ்ட் ரிப்போர்ட் எடுத்துட்டு வர சொன்னேன்… அத பாத்ததுக்கு அப்பறம் எனக்கு இன்னும் பெரிய அதிர்ச்சியாயிருச்சு.. அந்த அம்மாவோட கிட்னிய திருடி இருக்காங்க… கல்லீரல் வளர்ர தன்மையோடு இருக்கும்… அதனால அது வளந்துரும். ஆனா கிட்னி எடுத்துட்டா என்ன பண்ண முடியும்… இருக்கிற ஒரு கிட்னி பங்க்சனுமே அவங்களுக்கு லேக் ஆகும்போது கண்டிப்பா அவங்க உடம்பு அத சமாளிக்க முடியாது…”என்றவன்.
“அந்த சுரேந்திரன்… பெரிய தில்லாலங்கடி… அவனுக்கு எதிரா நம்ம மூவ் பண்ணனும்னா… ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கணும். யாரோ ஒருத்தர் இரண்டு பேர் வெளியே போய் ட்ரீட்மென்ட் பார்க்கும்போதுதான்… அவங்களோட உறுப்புகள் காணாம போனதே அவங்களுக்கு தெரியும்… இன்னும் சில டாக்டர்கள் இத கண்டுபிடிச்சாலும்…. அத வச்சு சுரேந்திரன் கிட்ட சொல்லி அவங்க பணம் வாங்கத்தான் பார்ப்பாங்க.” என்றான் பவித்ரன்
அவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போது குமாரின் செல்லுக்கு அழைப்பு வந்தது… கந்தசாமி தான் போன் பண்ணி இருந்தார்.
“சொல்லுங்க கந்தசாமி”
“சார் நான் இங்க இருந்து ஹாஸ்பிடல் வாசலை பார்த்துகிட்டு இருந்தேன்… அப்போ எதேச்சயா ஹாஸ்பிடல் பின்னாடி பாக்குறப்போ அங்க ஒரு கருப்பு கார் வந்து நின்னுச்சு. அதிலிருந்து மினிஸ்டர் ரவியோட பிஏ இறங்கினான் . அவன் கொஞ்ச நேரம் வெயிட் பண்ணினான்… அதுக்கப்புறம் டாக்டர் சுரேந்திரன் அங்க வந்தார் … அப்புறம் இவனுங்க ரெண்டு பேரும் கார்ல ஏறி கொஞ்சம் தூரம் போனப்ப கார்ல ஏதோ பிராப்ளம் ஆகி நின்றுச்சு.” என் என்றவர் சுற்றிலும் ஒரு முறை நோட்டமிட்டுவிட்டு
“நான் தைரியத்தை வரவழைச்சிட்டு அவங்களுக்கு தெரியாம மறைஞ்சு அந்த கார் பக்கத்துல போனேன். அப்போ பார்த்து… அந்தக் காரோட டிரைவர் கீழே இறங்கி… ஹாஸ்பிடலுக்கு வேக வேகமா நடந்து போனான்… அப்புறம் சுரேந்தரும், ரவியோட பிஏ ரெண்டு பேரும் காரை விட்டு கீழே இறங்கி… தம்மடிச்சிக்கிட்டு டென்ஷனா இருந்தாங்க. கார் கதவு சரியா சாத்தல… நான் மெல்ல கார் பக்கத்துல போனேன்… அந்தக் காருக்குள்ள ஒரு சூட்கேஸ் இருந்துச்சு… நீங்க எல்லாம் சுரேந்தரோட லேப்டாப் இருந்தா எல்லா விஷயத்தையும் கண்டுபிடிச்சிடலாம்னு பேசிக்கிட்டு இருந்தீங்க இல்ல… அதனால அந்த சூட்கேஸ்ல லேப்டாப் இருக்கும்னு நினைச்சு நான் அந்த சூட்கேஸை தூக்கிட்டு வந்துட்டேன். இப்போ நான் அந்த இடத்திலிருந்து ரொம்ப தூரம் தள்ளி வந்துட்டேன்…அங்கே இருந்து தான் போன் பண்றேன்” என்று மூச்சு விடாமல் சொன்னார்.
“சரி நீங்க எங்க நிக்கிறீர்களோ அதே இடத்தில் நில்லுங்க நாங்க இப்போ அங்கே வந்துடுறோம் ” என்ற குமார் அவசர அவசரமாக
இன்ஸ்பெக்டரிடம் நடந்த விஷயங்களை சுருக்கமாக சொல்லி… “சார் நாம ஒண்ணா போக வேண்டாம்… நீங்க உங்க வண்டியில வாங்க நான் பவித்ரனை கூட்டிட்டு போறேன்…” என்றான்.
“குமார் பவித்ரன் வேண்டாம் நம்ம பிரச்சனையில் அவரை சிக்க வைக்க வேண்டாம்… அவர் அனுப்பிடலாம்” என்றார்.
பவித்ரன் வம்படியாக “இல்ல சார் நான் வந்தா… அந்த லேப்டாப்பை ஓபன் பண்ணி அதில் இருக்கிற டீடெயில பார்த்து ஈசியா நாம ஒரு முடிவு எடுக்கலாம்….” என்றான்
சரி வாங்க என்று மூவரும் வேகமாக கிளம்பினர்.
