மூர்க்கன் 39
“எதுக்காக வந்தோமோ.. அதை மறந்துட்டு இங்க வந்த சந்தோஷத்துல எல்லாரும் ஜாலியா இந்த நாலு நாள் இருந்துட்டோம். இன்னிக்காச்சும் இதை பத்திப் பேசலாமா?” என்றார் வரதராஜன் சிரித்துக்கொண்டே.
“அதுக்கென்ன மச்சான், நீங்க யாரை சொல்றிங்களோ.. அந்த பையனுக்கு என் ரெண்டாவது பொண்ணை கல்யாணம் பண்ணிக் கொடுத்துட்றேன் . இதுல தனியா உக்காந்து பேச என்ன இருக்கு ” என்றார் ரத்னவேலு.
“ஏன் ரத்தனம் அப்போ மூத்தவளுக்கு கல்யாணம் பேசலையா ?” என்றார் வேதவள்ளி.
“இல்ல அத்தை , அவகிட்டே நீங்க இங்க வரிங்கனு சொன்ன அப்போ கல்யாணம் பத்தி பேசிட்டேன். அவ பாக்குற வேலையை முழுசா முடிக்காம கல்யாணத்தை பத்தி யோசிக்கிறதா இல்லேன்னு சொல்லிட்டா.. வேணும்னா சின்னவகிட்டே கேளுங்க. அவ சம்மதிச்சா பண்ணி வெச்சிருங்க. எனக்கு இப்போதைக்கு கல்யாணம் வேணாம். அதே போல என்னால கல்யாணத்துக்கும் வர முடியாது. நான் வந்த வேலை முடியாம நான் எங்கையும் வர முடியாதுன்னு வேற சொல்லிட்டா.. ” என்றார் ரத்தினவேலு.
“அப்படி என்ன வேலை தாண்டா மூத்தவ பாக்குறா.. “என்றார் வேதவள்ளி.
“அத்தை என்னை மன்னிச்சிருங்க .நீங்க மட்டும் இல்ல, எல்லார்கிட்டேயும் நான் மன்னிப்புக் கேக்குறேன். அவளா சொல்ற வரைக்கும் என் பொண்ணு என்ன வேலை பாக்குறா? எங்க வேலை பாக்குறான்னு அவளைப் பத்தி எந்த விஷயமும் வெளிய தெரியக்கூடாதுனு ஸ்ட்ரிக்ட்டா சொல்லிருக்கா. என் பொண்ணு சொன்னதை என்னால மீற முடியாது ” என்று அவர் சொல்லமுடியவில்லையே என்று வருத்தப்பட..
“சரி விடு.. நேரம் வர அப்போ எங்களுக்கு சொல்லு “என்ற வரதராஜன். “சரி அப்போ உன்னோட ரெண்டாவது பொண்ணுக்கு தான் நான் சொன்ன பையனை கல்யாணம் பண்ணி கொடுக்க உனக்கு சம்மதம் அப்படி தானே.. ” என்றார்.
“ஆமா மச்சான், நீங்க நல்ல நாள் பார்த்து பையன் வீட்ல சொல்லி பொண்ணு பார்க்க வர சொல்லுங்க ” என்றார் ரத்தினவேலு.
“ஏண்டா உன் சின்னபொண்ணுக்கிட்டே கல்யாணத்தைப் பத்தி பேசிட்டியா? நாங்க ஊருக்கு வந்து 4 நாள் ஆச்சு. ஒருத்தியைக் கூட நீ கண்ணுல காட்டலையே. அப்படி பொத்தி பொத்தி வளக்குறியா உன் பொண்ணுங்களை. ஏன் உன் பொண்ணுங்க ரெண்டு பேரும் அவ்ளோ அழகாவா இருப்பாங்க ” என்று கமலா தன் பங்கிற்கு பேச..
“அட என்ன அக்கா நீங்க .. அதெல்லாம் எதுவும் இல்ல. ரெண்டு பேரும் ஆளுக்கு ஒரு பக்கம் வேலை பாக்குறாங்க. இப்படி திடீர்னு நீங்க எல்லாம் கிளம்பி வந்ததுல அவங்களுக்கு லீவு கிடைக்கல.. அதான் ரெண்டு பேருக்கும் இங்க வர முடியல. ” என்றார்.
“அண்ணி சின்னவகிட்டே பேசிட்டேன். அவ நீங்க யாரை பார்த்து ஓகே பண்ணினாலும் கல்யாணம் பண்ணிக்கிறேன். ஆனா என்னோட வேலையை மட்டும் எக்காரணம் கொண்டும் விடமாட்டேன். அதற்கு யாரு சம்மதம் சொல்றங்களோ அவங்களை எனக்கு கல்யாணம் செய்து வைய்யுங்கன்னு சொல்லிட்டா “என்றார் கனகா.
“கேட்டுட்டீங்களா மாமா, அப்போ ருத்ராகிட்டே இவங்க பொண்ணு போட்ட கண்டிஷனை எல்லாம் சொல்லி பொண்ணு பாக்க வரனான்னு கேளுங்க ” என்றார் கமலா.
“சரி இரு.. முதல்ல ஐராவுக்கு போன் போடலாம். அவன்கிட்டே பேசிட்டு நம்ம மருமகள்ங்க ரெண்டு பேரு கிட்டேயும் சொல்லிட்டு அப்பறோம் மார்கண்டேயன்கிட்டே நான் பேசுறேன்” என்றார்.
“பெரியப்பா இருங்க நான் அண்ணாவுக்கு கால் பண்றேன் ” என்று ராஜ் ராவணுக்கு போன் அடித்தான்.
“நான் கயலுக்கு போன் பண்ணி அண்ணிகிட்டே பேசுறேன் ” என்று மித்ரா போனை எடுக்க.
“அது என்னடி என் மருமக மட்டும் கயல், உன் அண்ணன் பொண்டாட்டி மட்டும் அண்ணியா?” என்றார்.
“”ஐயோ! சித்தி நானும், கயலும் ஆரம்பத்துல இருந்து பிரெண்ட்ஸ் மாதிரி பேசி பழகிட்டோம். ஆனா அண்ணிகிட்டே இப்போதான் பேசவே ஆரம்பிச்சிருக்கேன். கொஞ்ச நாள்ல அவங்களையும் எங்க சர்க்கிள்குள்ள கொண்டு வந்த அப்பறோம் பாருங்க ” என்றவள் கயலுக்கு அழைத்தாள்.
“ஹெலோ ஐரா, என்னப்பா பண்ணிட்டு இருக்க.. ” என்றார் வரதராஜன்.
“அப்பா நான் ரக்ஷணா ஆபீஸ்ல இருக்கேன் ” என்றான் ராவண்.
“எதுவும் முக்கியமான வேலையா இருக்கியா? பேசலாமா?” என்றார்.
“இல்ல சொல்லுங்க ” என்றான்.
“நம்ம ருத்ரசேனாவுக்கு ரத்தினவேலோட ரெண்டாவது பொண்ணுக்கு கல்யாணம் பேசலாம்னு முடிவு பண்ணியாச்சு. அதான் உன்கிட்டே ஒரு வார்த்தை பேசிட்டு மார்கண்டேயனுக்கு போன் போடணும் ” என்றார்.
“ஏன் பெரியவ கல்யாணம் வேணாம்னு சொல்லிட்டாளா?” என்றான் சரியாக.
“ஆமாப்பா .. உனக்கு எப்படி தெரியும் சரியா சொல்லிட்ட.’ என்ற ஆச்சர்யமாக வரதராஜன்.
“நீங்க தான் அங்க உள்ளவங்க யார் கூடவும் பேசுறது இல்ல. ஆனா நான் பேசிட்டு தான் இருக்கேன். அவ வேலை முடிச்சிட்டு தான் கல்யாணம்னு அப்போவே சொல்லிட்டு இருந்தா. இப்போ நீங்க சின்னவளுக்கு தான் கல்யாணம் பேசுறதா சொன்னதும் எனக்கு இது தான் காரணம்னு தோணுச்சு “என்றவன். .”நானும் அவகிட்டே பேசியே ரெண்டு வருஷம் இருக்கும். பிரீயாகிட்டு பேசிக்கிறேன். நீங்க அங்கிள்கிட்டே பேசிட்டு எப்போ கல்யாணம்னு சொல்லுங்க நாங்க வந்துடறோம் ” என்றான்.
“சரிப்பா அப்போ பொண்ணு பாக்குறது இது எல்லாம் பேசிட்டு நான் உனக்கு சொல்றேன் ” என்று போனை வைக்க..
“சரிங்க அண்ணி, இங்க எல்லாம் முடிச்சிட்டு அண்ணாவுக்கு அப்டேட் பண்ணிடறோம் ” என்று மித்ராவும் போனை வைத்திருந்தாள்,
அடுத்து மார்கண்டேயனுக்கு அழைத்து விஷயத்தை சொன்னார் வரதராஜன் “பொண்ணு பாக்குறது வர வெள்ளிக்கிழமை வெச்சுட்டு , அந்த அன்னிக்கே நேரடியா கல்யாணத்தை பண்ணி வெச்சுடலாம் வரதா . ரொம்ப நாள் காக்க வெக்க வேணாம். எவ்ளோ சீக்கிரம் கல்யாணம் பண்ண முடியுமோ பண்ணிடலாம் ” என்றார்.
“சரி டா அப்போ பொண்ணு பாக்க வர அப்போவே கல்யாணத்துக்கும் நாள் குறிச்சிடலாம், நான் என் மச்சான்கிட்டே சொல்லி தேதி பார்க்க சொல்றேன்” என்றவர் “ருத்ராவுக்கு இதுல சம்மதம் தானே.. சீக்கிரமா கல்யாணம் வெக்க போறோம் அவன் என்ன சொல்றான்னு ஒரு வார்த்தை கேட்டுக்கோ ” என்றார் .
“பெரியப்பா , நீங்க பார்த்து எந்த பொண்ணு கழுத்துல தாலியைக் கட்ட சொல்றிங்களோ அவங்களுக்கு தாலி கட்ட நான் ரெடி தான். பொண்ணு பார்க்குறது எல்லாம் கூட வேணாம். நேரடியா கல்யாணம் முடிச்சிடலாம்னு நான் நினைக்கிறேன். என் அப்பா ரொம்ப ஆசைப்படறார் ” என்றான் ருத்ரசேனன்.
“டேய் உனக்கு கல்யாணத்துக்கு அவசரமா , அதான் இதுல மார்க் சித்தப்பாவை உள்ளே இழுக்குறியா?” என்று ராஜ் கிண்டல் செய்ய.
அவன் குரல் கேட்டு சிரித்த ருத்ரன் “அப்படியும் வெச்சுக்கலாம் ” என்று சிரித்தான் ருத்ரசேனன்.
“அப்போ நேரடியா கல்யாணம் பேசிடலாம் ” என்ற வரதராஜன் “ரத்னம் உனக்கு சம்மதமா?”என்றார்.
“சரி மச்சான். எதுக்கும் மாப்பிள்ளைக்கு பொண்ணு போட்டோவையாச்சும் அனுப்பி வெப்போம். ஒரு தரம் பார்த்துட்டு அப்பறோம் சம்மதத்தை சொல்ல சொல்லுங்க. அப்பறோம் அவளுக்கு கல்யாணத்துக்கு அப்புறமும் வேளைக்கு போகணும்னு ஆசைப்படுறா ” என்றார் ரத்தினம்.
“மாப்பிள்ளைன்னு வாய் நிறைய கூப்பிட்டாச்சு. உங்க பொண்ணு அழகு , குணத்து மேல உங்களுக்கே நம்பிக்கை இல்லையா மாமா. போட்டோவை பார்த்து தான் நான் சம்மதம் சொல்லனுமா? ஒரு வேலை போட்டோவை பார்த்து நான் பிடிக்கலையின்னு சொல்லிட்டா என்ன பண்ணுவீங்க ” என்றவன் “உங்க பொண்ணோட ஆசைக்கு எப்பவும் நான் தடையா இருக்க மாட்டேன் , அதை உறுதியா சொல்லிட்றேன்” என்று அவரிடம் நேரடியாகப் பேசினான் ருத்ரசேனன்,
அவர் இறுமாப்பை அவன் கேள்விகள் தூண்டி விட்டிருக்க..
“என் பொண்ணு குணத்துக்கும், அழகுக்கும் நீங்க தான் தகுதியா இருப்பீங்கன்னு எனக்கு உங்க பேச்சுளையே புரிஞ்சரிச்சு. அப்போ பொண்ணு பாக்க வரதா சொன்ன அந்த வெள்ளிக்கிழமையே பேசாம நம்ம ஊர் பெருமாள் கோவில்ல கல்யாணத்தை நடத்திடலாம் ” என்றார் ரத்தினவேல்.
“எனக்கு சம்மதம், என் மகன் கல்யாணம் இவ்ளோ சீக்கிரம் நடந்தா என்னையும், மீனாட்சியையும் விட சந்தோசப்படுற ஆள் வேற யாரும் இல்ல. நீங்க சொன்ன அன்னிக்கே கல்யாணத்தை வெச்சுக்கலாம் சம்மந்தி ” என்று மக்கண்டேயனும் நேரடியாக பேச.
“மாப்பிள்ளை வீடும்,பொண்ணு வீடும் நேரிடியா பேசியாச்சு . இனி சொல்ல வேண்டியவர்களுக்கு சொல்லி கல்யாண வேலையை பார்க்க வேண்டியது தான் அப்போ ரெண்டு நாள்ல கிளம்பி நீங்களும் இங்க வந்திருங்க கல்யாணத்தை முடிச்சு கொடுத்துட்டே நாங்க ஊருக்கு கிளம்பிடறோம் “என்றார் வேதவள்ளி.
மார்கண்டேயனும், மீனாட்சியும் இரண்டு நாளில் முக்கிய சொந்தங்களுக்கு மட்டும் திருமணம் பற்றி சொல்லி அழைப்பு விடுத்துவிட்டு கிளம்பி ரதனிவேலுவின் வீட்டிற்கு வருவதாகக் கூறிவிட்டனர்.
அனைவர்க்கும் சந்தோசம் தொற்றிக்கொண்டது.
“அடியே கனகா இப்பவாச்சும் உன் பொண்ணை ஒளிச்சு வெக்கமா சீக்கிரமா லீவை போட்டுட்டு வீட்டுக்கு வர சொல்லு கல்யாணத்துக்கு இன்னும் ஒரு வாரம் தானே இருக்கு ” என்றார் பரிமளா.
“சரிக்கா இப்பவே அவகிட்டே பேசறேன் ” என்று அவர்கள் முன்னிலையில் அவர் இரண்டாவது மகளுக்கு போன் செய்தார்.
சில ரிங்கிலேயே போன் அட்டென்ட் செய்யப்பட்டு இருக்க “சொல்லுங்க ம்மா.. ” என்றாள் வேலை செய்துகொண்டே .
“க்ரிஷி உன்னக்கு வர வெள்ளிக்கிழமை கல்யாணம் பேசி முடிவெடுத்துட்டோம். நீ இன்னைக்கே லீவ் சொல்லிட்டு ஊருக்கு கிளம்பி வாடா.. “என்றார்.
“அம்மா என்ன விளையாடுறிங்களா? இன்னும் அஞ்சு நாள் தானே இருக்கு .இவ்ளோ சீக்கிரம் கல்யாணம் பேசி முடிச்சிருக்கீங்க. என்கிட்டே ஒரு வார்த்தை கூட சொல்லல.. ” என்றாள் சற்று அதிர்ச்சியாக,
கனகாவிடம் இருந்து போனை வாங்கிய பரிமளா “க்ரிஷி.. நான் தான் உன் அத்தை பேசுறேன் டி ” என்றார்.
அவர் குரல் கேட்டதும் “அத்த.. ” என்றாள் பணிவாக.
“நீ தான் யாரை காட்டி கட்டிக்க சொன்னாலும் கல்யாணம் செய்துக்கறேன்னு சொன்னியாமே.. அது அடுத்த வாரம் நடந்தா என்ன .. அடுத்த மாசம் நடந்தா என்ன? ” என்றார்,
“ம்ம்.. ஆமாங்க அத்தை ” என்றாள்.
“சரி கல்யாணத்துக்கு நாள் கம்மியா தான் இருக்கு. உன் மாமாகிட்டே சொல்லி மாப்பிள்ளை வீட்டு ஆளுங்களை ரெண்டு நாள்ல வர சொல்லிருக்கோம் . அதுக்கு முன்ன நீ இங்க இருக்கனும். உன்னை பாக்காமையே நாங்க பாத்த பையன் உன்னை கல்யாணம் செய்த்துக்க சம்மதம் சொல்லிருக்கான். அதனால அவங்க வர அப்போ நீ தான் முன்ன நின்னு அவங்களை வர வேர்க்கணும் சரியா ” என்றார்.
“ம்ம்.. சரிங்க அத்தை நான் இன்னிக்கு நயிட் கிளம்பிடறேன் “என்றாள்.
அவர்களிடம் பேசிவிட்டு போனை வைத்த க்ரிஷி “இப்படி திடீர்னு கல்யாணம்னு சொன்னா நான் எப்படி லீவு கேப்பேன் “என்று புலம்பிக்கொண்டே திரும்பியவள் அவள் எதிரே கைகளைக் கட்டிக்கொண்டு நின்றிருந்த ரக்ஷணாவை பார்த்து உறைந்து போனாள் ரம்யா. வீட்டில் உள்ளவர்களால் க்ரிஷி என்று செல்லமாக அழைக்கப்படும் ரம்யாகிருஷ்ணன்.
“உன் கல்யாணத்துக்கு எங்களுக்கு எல்லாம் அழைப்பு இல்லையா?” என்று அவள் முன் கை கட்டி நின்று இருந்த ரக்ஷணா கேட்டாள் .
