Episode – 26.
காரில் கிளம்பி கொஞ்ச தூரம் சென்றவுடன்… “கிருஷ்… எனக்கு இப்ப இருக்கிற ஒரே கவலை… மஞ்சரிக்கு ஒரு நல்ல இடத்துல மாப்பிள்ளை பார்க்கணும்… எனக்கே தெரியுது என் உடம்பு சரி இல்லைன்னு… அதனால எனக்கு ஏதாவது ஆகறதுக்கு முன்னாடி அவளுக்கு ஒரு கல்யாணத்தை பண்ணி பாத்திரனும்” என்று மகேஸ்வர் சொன்னார்.
“சார் ஏன் அப்படி எல்லாம் பேசுறீங்க… உங்க மனசுக்கு எல்லாமே நல்லபடியா நடக்கும்…” என்ற கிருஷ்ஷுக்கு தான் இப்போது மஞ்சரியை லவ் பண்ணும் விஷயத்தை சொன்னால் மகேஸ்வர் சாருக்கு ஏதாவது ஆகிவிட்டால் என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டே எதுவும் சொல்லாமல் இருந்து விட்டான்.
“கிருஷ்… சொந்தத்திலேயே நிறைய பேர் இருக்காங்க… மஞ்சரி கிட்ட நான் இத பத்தி இன்னும் பேசவே இல்லை… சொந்தத்திலேயே ஒரு நல்ல பையன் இருக்கான்… மஞ்சரி கிட்ட முதல்ல இத பத்தி சொல்லிட்டு
அவ என்ன நினைக்கிறான்னு தெரிஞ்சுக்கிட்டா… அடுத்த இரண்டு மூன்று மாசத்துல அவரோட கல்யாணத்த முடிச்சிடலாம்… எனக்கும் ஒரு பெரிய கடமை முடியும்” என்று பெருமூச்சு விட்டார்.
கிருஷுக்கு இப்போது என்ன பேசுவது என்று தெரியவில்லை…
காருக்குள் ஏசி அமைதியாக ஓடிக் கொண்டிருக்க…. கிருஷ்ஷின் மண்டைக்குள் பழைய மிக்சி ஓடுவது போல் இருந்தது…
இப்போது கிருஷ்… “சார் மஞ்சரி இந்த காலத்து பொண்ணு… நல்ல விவரமான பொண்ணு… அதனால செலக்சன அவங்க கிட்டயே கொடுத்துடலாம் இல்ல” என்றான்.
“கரெக்டு தான் கிருஷ்… அனுபவம்னு ஒன்னு இருக்குல்ல கிருஷ்… நீங்க எல்லாம் சின்ன பசங்க…. கண்ணுக்கு முன்னாடி என்ன தெரியுதோ அதை வெச்சு முடிவு எடுப்பீங்க… ஆனா எங்கள மாதிரி பெரியவங்க… பின்னாடி என்னவெல்லாம் நடக்க வாய்ப்பிருக்கு அப்படிங்கிறதெல்லாம் யோசிச்சு பார்த்து முடிவு எடுப்போம்… ஆனா ஒன்னு… கண்டிப்பா அவளோட விருப்பம் முக்கியம்” என்று சொன்னார் மகேஸ்வர்.
“அவளோட விருப்பம் நான் தான் அப்படின்னு சொல்லிடலாமா” என்று யோசித்தான் கிருஷ்.
“அப்படி சொன்னா… இவருக்கு இப்பவே ஹார்ட் அட்டாக் வந்து உடனே வண்டியை ஹாஸ்பிடலுக்கு விடுன்னு சொல்லுவாரா… இல்ல… என்னை டிரைவர் வேலைக்கு வேண்டாம்னு சொல்லி காரை விட்டு இறங்கி போடான்னு சொல்வாரா” மண்டைக்குள் மிக்ஸி ஹெவியாக ஓடியது கிருஷ்ஷுக்கு.
அதற்குள் பேங்கை அடைந்துவிட…. ஒரு செக்கை எடுத்துக் கொடுத்து… “இதை மட்டும் டெபாசிட் பண்ணிட்டு வா” என்று கிருஷ்ஷிடம் கொடுத்துவிட்டார் மகேஸ்வர்.
“அடக்கொடுமையே…. இந்த ஒரு செக்கை டெபாசிட் பண்றதுக்கா கார் எடுத்துக்கொண்டு இரண்டு பேரும் இவ்வளவு தூரம் வந்தோம்…” என்று யோசித்தவாறே…
செக்கை வாங்கிக்கொண்டு உள்ளே சென்று ஐந்து நிமிடத்தில் டெபாசிட் பண்ணி விட்டு திரும்பி வந்தான்.
“ஒரு நல்ல ஹோட்டலுக்கு விடுப்பா காப்பி சாப்பிட்டு போலாம்” என்று சொன்னார் மகேஸ்வர்.
“நல்லவேளை எனக்கும் சரியான தலைவலியா தான் இருக்கு ஒரு காபி சாப்பிடலாம்” என்று நினைத்துக் கொண்டு ஒரு நல்ல ஹோட்டலில் காரை நிறுத்தினான்.
ஹோட்டலில் இருவரும் ஒரு ஒதுக்கமான இடத்தில் அமர்ந்தனர்.
“இரண்டு ஸ்பெஷல் காப்பியும் இரண்டு செட் வடையும் கொண்டு வாப்பா…” என்று மகேஸ்வர் சொல்ல ஐந்து நிமிடத்தில் அவர்கள் கேட்டது வந்தது.
“காபி தனியா குடிச்சா நல்லாத்தான் இருக்கும். ஆனா வடையும் சேர்த்து சாப்பிடும்போது காரசாரமா இனிப்போடு சேர்ந்து ஒரு டேஸ்ட் கிடைக்கும்… இதில் கூட காம்பினேஷன் கரெக்டா தான் வச்சிருக்காங்க…. என் லவ் மட்டும் ஏன் இப்படி ஜோடி சேருமான்னே தெரியாம இருக்கு…” என்று என்னென்னமோ மனதில் தோன்ற…
“அச்சச்சோ இப்படியே யோசிச்சிட்டு இருந்தா… நான் சேதுபட விக்ரம் மாதிரி பைத்தியமாயிடுவேன்…” என்று கண்டதெல்லாம் யோசிக்க தலைக்குள் இப்பொழுது மிக்சிக்கு பதிலாக கிரைண்டர் ஓட ஆரம்பித்திருந்தது.
“இந்த காப்பிய குடிச்சா பத்தாது அப்படியே தலையில ஊத்திக்கிட்டா கூட நல்லா இருக்கும்…” என்று தலைவலியில் கிருஷ் அமர்ந்திருக்க…
“என்னப்பா கிருஷ்… ஏன் ஒரு மாதிரியா இருக்க… என்ன பிரச்சனை என்றாலும் என்கிட்ட சொல்லு… பாத்துக்கலாம்” என்ற மகேஸ்வர்.
“ஒன்னும் இல்ல சார்… கொஞ்சம் தலைவலியா இருக்கு அதான்” என்றான் கிருஷ்.
“அப்ப ஒன்னு பண்ணலாம்… நீ காப்பி சாப்பிட்டு கார்ல பின்னாடி உட்கார்ந்து ரெஸ்ட் எடு… நான் ட்ரைவ் பண்றேன்” என்றார் மகேஸ்வர்.
“சார்… அந்த அளவுக்கு எல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்லை நானே கார் ஓட்டுறேன்…” என்று சொல்லிவிட்டு காபி குடித்து முடித்துவிட்டு வெளியே வந்தனர்.
காரில் ஏறி கிளம்பினர்…
“கிருஷ்… நம்ம பேசின விஷயத்தை நீ மஞ்சரி கிட்ட சொல்ல வேண்டாம்… டைம் பார்த்து நானே சொல்லிக்கிறேன்” என்றார் மகேஸ்வர்.
“இதுல இது வேறயா” என்று நினைத்துக் கொண்டே வண்டியை வேகமாக ஓட்டினான் கிருஷ்.
கொஞ்ச நேரத்தில்… ஃபேக்டரிக்கு வந்து சேர்ந்தனர்.
மகேஸ்வர் கிருஷ்ஷிடம்… “நீ வேணா மதியத்துக்கு மேல வீட்ல இருந்து ரெஸ்ட் எடுத்துக்க… நாளைக்கு வா பாத்துக்கலாம்” என்று சொன்னார்.
அவனுக்கும் அந்த ஓய்வு தேவைப்பட்டது… உடல் உழைப்பால் ஏற்படும் அலுப்பு கூட அரை மணி நேரம் தூங்கி எழுந்தால் சரியாகிவிடும். ஆனா இந்த மண்டை இந்தக் குடை குடையுதே இது எப்படி சரி பண்றது… என்றவாறே யோசித்துக் கொண்டே நிற்க…
அப்போது அங்கே வந்த மஞ்சரி… இவனது முகம் மாற்றத்தை வைத்தே… சம்திங் ராங் என்று புரிந்து கொண்டாள்.
“ஏப்பா… என்னாச்சு” என்று மகேஸ்வரிடம் கேட்டுக் கொண்டே வந்தாள் மஞ்சரி.
“கிருஷ்ஷுக்கு தலைவலியாம்… அதான் மதியத்துக்கு மேல் அவனை வீட்டில் ரெஸ்ட் எடுக்க சொல்லிட்டேன்” என்று மகேஸ்வர் சொல்ல…
ஓரளவு என்ன நடந்திருக்கும் என்பதை மஞ்சரி புரிந்து கொண்டாள்.
“சரி வாங்க அப்ப வீட்டுக்கு போய் கிருஷ்ஷ விட்டுட்டு… ஈவினிங் நம்ம ரெண்டு பேரும் ஃபேக்டரிக்கு வந்துவிடலாம்” என்றாள் மஞ்சரி.
எல்லோரும் கிளம்பி வீட்டுக்கு போனார்கள். கிருஷ் காரின் நிறுத்திய உடன் வேகமாக தனது ரூமுக்கு சென்று படுத்துக் கொண்டான்.
இங்கே மகேஸ்வரும், மஞ்சரியும் வீட்டுக்குள் நுழைந்தனர்.
இப்போது மகேஸ்வர் மஞ்சரியிடம்…
“நீ சாப்பிட்டு நல்லா ரெஸ்ட் எடுத்துட்டு வாம்மா கொஞ்சம் பேசணும்” என்று சொல்ல
மஞ்சரிக்கு அவர் என்ன பேசப் போகிறார் என்பது தெரிந்து விட்டது.
ஆனால் அது எப்படி சமாளிப்பது என்று தான் புரியவில்லை.
சாப்பிட்டுவிட்டு தனது அறைக்கு சென்ற மஞ்சரிக்கு கையும் ஓடவில்லை காலம் ஓடவில்லை… அப்பாவிடம் என்ன சொல்வது… சொன்னால் அவரால் தாங்கிக் கொள்ள முடியுமா… என்ற எண்ண ஓட்டங்கள் மனதில் ஓட… அப்படியே படுக்கையில் விழுந்தாள்.
மண்டைக்குள் கரையான் அரிப்பது போன்ற உணர்வு…. எப்படி இதற்கு முடிவு காணப் போகிறோம்… கிருஷ் போன்ற ஒரு நல்லவனை இழந்து விடக்கூடாது. அதே நேரம் தன்னை இவ்வளவு பாசமாகவும் அன்பாகவும் இவ்வளவு நாள் வளர்த்த அப்பாவுக்கு…. தனது செயலால் ஏதாவது ஆகிவிட்டால் என்ன செய்வது… என்று யோசித்த அவளுக்கு அப்படியே பைத்தியம் பிடிப்பது போல் ஆகிவிட்டது.
உண்மையாக காதலித்து விட்டால் ஒவ்வொருவருக்கும் இதுதான் நிலைமை.
நேரம் மிகக் கடினமாக மெதுவாக போய்க் கொண்டிருந்தது.
புரண்டு புரண்டு படுத்தவள்… மிகவும் ஒரு மாதிரியாக இருக்க… பாத்ரூமில் நுழைந்து ஷவரைத் திருகி விட்டு அப்படியே அதன் கீழ் நின்று விட்டாள்… குளிர்ந்த நீர் படப்பட… மனதின் அழுத்தம் கொஞ்சம் குறைவது போல் தெரிந்தது…. எவ்வளவு நேரம் தான் அப்படியே நின்று இருந்தாள் என்று தெரியவில்லை.
“மஞ்சரி…. என்னடி பண்ற…. அப்பா கூப்பிடுறாரு வா” என்று அழைத்தார் மஞ்சரிங் அம்மா.
உஷாவின் சத்தம் கேட்டதும் சுய நினைவிற்கு வந்தவர்களாக… “இந்தா… வந்துடுறேன் அம்மா” என்று சொன்னவள்… “நீங்க வெயிட் பண்ணுங்க நான் பத்து நிமிஷத்துல வந்துடுறேன்” .
சொன்னது போலவே பத்து நிமிடத்தில் ஹாலுக்கு மஞ்சரி வர…
அங்கே மகேஸ்வரும் அவரது மனைவியும் மஞ்சரிக்காக காத்திருந்தனர்.
மகேஸ்வர் மஞ்சரி பார்த்து சந்தோசமாக சிரித்தவாறே… “என்னம்மா… ஏன் எதுவும் டென்ஷனாவே இருக்கிற…” என்று கேட்டார்.
“ஒன்னும் இல்லப்பா… லைட்டா தலைவலி அதுதான்” என்றாள் மஞ்சரி.
“என்னாச்சு…. உனக்கு கிருஷ்ஷுக்கு எல்லாருக்கும் ஒரே நேரத்துல தலைவலி வருது” என்று சிரித்துக் கொண்டே கேட்டவர்…
“சரி வா… இங்க வந்து உட்காரு…
என்று சொன்னவர்… மஞ்சரியிடம் திரும்பி… ‘நான் என் பொண்ணுக்கு கல்யாணம் பண்ணலாம்னு நினைக்கிறேன்’ என்று சொல்லி சிரிக்க…
மஞ்சரி ஆச்சரியமோ, அதிர்ச்சியோ காட்டுவாள் என்று நினைத்த மகேஸ்வர்… அவள் எந்த உணர்வையும் வெளிப்படுத்தாமல் மெல்லிய புன்னகை ஒன்றை மட்டும் காட்டினாள்.
“என்னடா… அப்பா எவ்வளவு பெரிய விஷயம் சொல்றேன் நீ அமைதியா இருக்க…” என்று மகேஸ்வர் கேட்க…
தான் கிருஷ்ஷை விரும்பும் விஷயத்தை சொல்லி விடலாமா என்று… அவள் மனம் யோசித்துக் கொண்டிருக்கும் போதே…
மகேஸ்வர் தொடர்ந்தார். “மஞ்சரி எனக்கும் உடம்பு முடியல… நான் நல்லா இருக்கிறப்பவே உனக்கு நல்லபடியா கல்யாணம் பண்ணி வச்சிடனும்னு நினைக்கிறேன்…
என்னோட ஒரே பொண்ணு நீ… இந்த ஊரே மூக்குல கை வைக்கிற மாதிரி உனக்கு நல்ல படியா கல்யாணம் பண்ணனும்… என் பேத்தி வந்து என் நெஞ்சில் உதைக்கணும்…” என்று கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டு சொல்ல…
“அப்பா…” என்று மென்மையாக அழைத்தாள் மஞ்சரி…
“என்னம்மா…” என்றார் மகேஸ்வர்.
“அப்பா… நான் ஒன்னு சொல்லட்டுமா..” என்று பீடிகை போட
“நீ என்ன சொல்ல வரேன்னு எனக்கு தெரியும்மா… அம்மா அப்பாவை விட்டுட்டு கல்யாணம் பண்ணிப் போக உனக்கு விருப்பம் இல்லை… சரிதானே…” என்று மகேஸ்வர் கேட்க…
தான் சொல்ல வந்த விஷயம் அதுவல்ல… என்றாலும் மஞ்சரி பதில் ஏதும் பேசாமல் அவரை பார்க்க…
மகேஸ்வரே தொடர்ந்தார்…. “மஞ்சரிம்மா… நான் மட்டும் உன்னை தூரமா கட்டிக் கொடுத்துட்டு இங்க இருந்துருவேனா… அதுக்குத்தான் நல்ல ஐடியா ஒன்று பண்ணி இருக்கேன்… என் பிரண்டோட பையன் இருக்கான்… நல்ல பையன், பார்க்க லட்சணமா அழகா இருப்பான், நல்லா படிச்சிருக்கான்…
உனக்கு ரொம்ப பொருத்தமா இருப்பான்.
அவங்க வீடும் ரொம்ப தூரமெல்லாம் இல்லடா… இங்கே இருந்து அரை 2மணி நேரத்துல அவங்க வீட்டுக்கு போயிடலாம்…”
“போன்ல அவன் கிட்ட நான் பேசினேன்… போட்டோ அனுப்பி விட சொன்னேன்….. எனக்கு அனுப்பி இருக்காங்க… நான் உனக்கு அனுப்புறேன்…. நீ போன்ல பார்த்துட்டு சொல்லு… அப்புறம் மேல பேசிக்கலாம்” என்று அவரே பேசி முடித்தவர்… கொஞ்சம் மூச்சு வாங்க அவரே பேசுவதை நிறுத்தினார்.
“பாரும்மா… கொஞ்ச நேரம் பேசினதுக்கே எனக்கு மூச்சு வாங்குது” என்று சொல்லிவிட்டு மெலிதாக சிரிக்க…
அவரைப் பார்க்க மஞ்சரிக்கு பாவமாகவும் பயமாகவும் இருந்தது…
சாதாரணமா ஒரு விஷயத்தை சொல்றப்பவே இப்படி இவருக்கு மூச்சு வாங்குதே… நான் எப்படி கிருஷ்ஷைப் பற்றி இவர்கிட்ட சொல்றது.
