News
🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥 🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥

EPISODE 2 மாறனின் அக்கறை..

by Layas Tamil Novel
383 views
A+A-
Reset

EPISODE 2 மாறனின் அக்கறை..

திருமணமான இந்த ஒரு வருட காலத்தில், அதர்வா அவளைத் தொட்டது கூட இல்லை. ஒரு கன்னிப் பெண்ணாக, அவனது வீட்டில் வெறும் கல் தூணாய் வாழ்ந்தபோது கூட அவளுக்கு இந்த அளவு வலித்ததில்லை. *”இவ மாறனோட பொண்டாட்டி”* என்று அதர்வா சொன்ன அந்த வார்த்தை, அவள் கற்பையே, அவர்கள் உறவையே.. அவளது பெண்மையையே கேள்விக்குறியாக்கியது போல இருந்தது.

*’உண்மை தெரிஞ்சும் நான் ஏன் அமைதியா இருந்தேன்? அதர்வாவின் சட்டையைப் பிடிச்சு , ‘நீதானே என் புருஷன்’னு நான் ஏன் கத்தல ?’* என்று நினைக்கையில் ரதிக்குத் தன் மீதே கோபம் வந்தது.

அதர்வாவின் கண்களில் தெரிந்த அந்த வஞ்சகமும், மாயாவின் கையைப் பிடித்துக்கொண்டு அவன் காட்டிய அந்தத் திமிரும் அவளைப் பேசவிடாமல் தடுத்துவிட்டன. தன்னை முழுமையாக வெறுக்கும் ஒருவனிடம், “நீதான் என் புருஷன்” என்று பிச்சை கேட்பதை விட, அவனது இந்தச் சூழ்ச்சிக்குள்ளேயே சென்று அவன் ஆட்டத்தைக் கலைக்க வேண்டும் என்ற பெண்மையின் வீம்பும், கோபமும் அவளுக்குள் மெல்லத் துளிர்விடத் தொடங்கியது.

இருந்தாலும், அவளுக்கு முன்னால் இடி விழுந்தது போல் நின்று இருக்கும் மாறனைப் பார்க்கும்போது அவளுக்குள் குற்ற உணர்ச்சி தலைதூக்கியது.

அவன் பக்கம் தன் பார்வையை திருப்பியவளுக்கு மாறன் நின்றிருக்கும் நிலையை பார்த்து இதயம் கனத்துப் போனது. அவனின் இந்த நிலைக்கு தான் தானே காரணம் என்று நினைக்கையில் இன்னும் அவள் இதயத்தில் வலி உண்டானது.

மாறனுக்கு ரதியின் மேல் எப்போதும் ஒரு தனி மரியாதை உண்டு. “அவளைப் பிடிக்கலைன்னா விவாகரத்து கொடுத்து அனுப்பிடு, இப்படி வாழாவெட்டியா உட்கார வைக்காதே” என்று நேருக்கு நேராக அதர்வாவிடம் நிறைய முறை சொல்லி இருக்கிறான்.

ஆனால் இப்போது, விதியின் கொடூரமான விளையாட்டால், அதே ரதிக்கு அவன் புருஷனாக நிற்க வேண்டிய நிலைமை!

*’அதர்வாவின் ஆடம்பர வாழ்க்கைக்காக, ஒரு பெண்ணின் வாழ்க்கையையும், தன் சொந்த வாழ்க்கையையும் பலிகொடுக்க வேண்டுமா?’* என்ற மாறனின் நியாயமான மனம் அவனை கேள்வி கேட்டு துளைத்து எடுத்து.

ஆனால், அதே சமயம் படுக்கையில் வெளிறிய முகத்தோடு, கண்ணீரோடு அமர்ந்திருக்கும் ரதியைப் பார்த்தபோது அவனுக்குள் ஒரு பயம் வந்தது. இப்போதே இவளிடம் “நான் உன் புருஷன் இல்லை, என் அண்ணன்தான் உன் புருஷன். அவன் உன்னை ஏமாற்றிவிட்டுப் போய்விட்டான்” என்று உண்மையைச் சொன்னால், ஏற்கனவே விபத்தில் அடிபட்டிருக்கும் இவளது மனமும் உடலும் அதைத் தாங்குமா? இவள் அதிர்ச்சியிலேயே ஏதேனும் செய்து கொண்டால் என்ன செய்வது?

அதர்வா மீதான வெறுப்பு ஒருபுறம், ரதியின் மீதான பரிதாபமும் அவளைக் காப்பாற்ற வேண்டும் என்ற பொறுப்பும் மறுபுறம் என மாறன் ஒரு பெரும் மனப்போராட்டத்திற்குள் தள்ளப்பட்டான்.

அறையில் நீடித்த அந்தப் பாரமான அமைதியை ரதியின் மெல்லிய குரல் உடைத்தது.

கண்ணீரைத் துடைத்துக் கொண்டு, தன் நெஞ்சில் எரியும் நெருப்பை மறைக்க முயன்று மாறனைப் பார்த்து “நீங்க… நீங்கதான் என் புருஷனா? நிஜமாவா சொல்லுங்க?” என்றாள்.

அதை அவள் கேட்கும் போதே ரதியின் குரலில் இருந்த அந்தத் தவிப்பு மாறனின் இதயத்தை என்னவோ செய்தது. அவளுக்கு உண்மை தெரியும் என்பதை மாறன் அறியவில்லை. அவளது பார்வையில் தெரிந்த ஏதோ ஒரு விஷயம் மாறனை யோசிக்க வைத்தது.

ஒரு நீண்ட பெருமூச்சை வெளிப்படுத்தி, தன் கோபத்தையெல்லாம் கட்டுப்படுத்திக் கொண்டு ரதியின் அருகில் வந்தான். அவள் படுக்கைக்கு அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்து, அவள் முகத்தை நேராகப் பார்த்தான்.

மாறன் அவள் அருகே சென்றதும் ரதியின் இதயம் வேகமாக துடிக்கத் துவங்கியது. அவனை பார்க்கவே அவளுக்கு பயமாக இருந்தது.

“ரதி… இப்போ உனக்கு உடம்பு சரியாகணும். அதுதான் முக்கியம். மத்த எதைப் பத்தியும் யோசிச்சு உன் உடம்பை நீயே கெடுத்துக்காத” என்றான்.

“என் கேள்விக்கு நீங்க இன்னும் பதில் சொல்லலையே… நீங்கதான் என் புருஷனா? உங்க அண்ணன் சொன்னது நிஜம்தானா? நீங்கதான் என் கழுத்துல தாலி கட்டுனீங்களா?” என்றாள் மீண்டும்.

கேள்வியை அவனிடம் கேட்டுவிட்டாள் ஆனால்  தான் ஏன் இப்படி ஒரு கேள்வியை அதுவும் மாறனிடம் கேட்க வேண்டும் என்று அவளுக்குள் கேள்வி எழாமல் இல்லை. அவள் அதையும் மீறி கேட்டும் விட்டாள் இரண்டாவது முறையாக.

மாறன் தன் கைகளைத் பிசைந்து கொண்டான். இப்போது பொய் சொன்னால், அது தன் அதர்வாவின் சூழ்ச்சிக்குத் துணை போவது போலாகும். ஆனால், உண்மை சொன்னால் அது இந்த நொடியில் ரதியைக் கொல்வதற்குச் சமம். அவன் ரதியின் நலத்திற்க்காகத் தற்காலிகமாக அந்தப் பழியைத் தன் மேல் ஏந்திக் கொள்ளத் துணிந்தான்.

“ஆமா ரதி… நான்தான் உன் புருஷன்.” என்றான்.

“அப்போ உங்க அண்ணாவும், அந்த பொண்ணும் உண்மையாவே லவ் பண்றங்களா? ஏதோ.. லிவ்… லிவ்..” என்று அவள் இழுக்க..

“அது லிவ் இன் ரிலேசென்ஷிப் . அவங்க ஒருத்தரை ஒருத்தர் விரும்புறாங்க ” என்றவன் என்ன நினைத்தானோ தெரியவில்லை. “அதர்வாவும், மாயாவும் இங்கிருந்து போயிட்டாங்க. இனி அவங்களைப் பற்றி நீ யோசிக்க வேண்டிய அவசியம் இல்லை. நான் உன்னோடு இருக்கேன். உன்னை நான் பார்த்துக்கிறேன். என் உயிரே போனாலும் உனக்கு ஒரு குறையும் வராம பாத்துக்குவேன்.” என்றான்.

மாறன் சொன்ன அந்த வார்த்தைகளில் அதர்வாவின் துரோகத்திற்குப் பழிவாங்கத் துடிக்கும் ஒரு வைராக்கியமும், அதே சமயம் ரதியைக் காக்க நினைக்கும் ஒரு கம்பீரமும் கலந்திருந்தது.

ரதி மனதிற்குள் கசப்பாகப் புன்னகைத்துக் கொண்டாள். *’என் புருஷன் என்னை நடுத்தெருவில் விட்டுவிட்டுப் போகிறான்… ஆனால், இந்த மாறன் தனக்குச் சம்பந்தமே இல்லாத ஒரு பழியைத் தன் தலை மேல் போட்டிருக்கானே! அதர்வா… உன்னை சும்மா விடமாட்டேன். உன் தம்பிக்கு மனைவியாகவே நான் உன் வீட்டிற்குள் நுழைவேன். அங்கேதான் உனக்கான ஆட்டம் ஆரம்பம்!’* என்று தனக்குள் சபதம் எடுத்துக் கொண்டாள்.

அவனை மென்மையாகப் பார்த்தாள் “என்னை மன்னிச்சிருங்க மாறன். என்னோட சுயநலத்துக்காக உங்க வாழ்க்கைக்குள்ள நான் இப்போ நுழைஞ்சுட்டேன். தெரிஞ்சோ தெரியாமையோ நீங்களும் என்னால இதுல பாதிக்கப்பட்டிருக்கிங்க. கொஞ்ச நாள் கொஞ்ச நாள் பொறுத்துக்கோங்க” என்று தனக்குள்ளேயே சொல்லிக்கொண்டாள்.

விபத்தில் இழந்தது நினைவுகளை மட்டுமல்ல… ரதிமல்லிகாவின் பழைய மென்மையான குணத்தையும்தான்!

மருத்துவமனை அறையின் கதவுகள் மீண்டும் மூடப்பட்டபோது, அந்தச் சுவர்களுக்குள் எஞ்சியிருந்தது வெறும் இரண்டு உயிர்களும், அவர்களுக்குள் விஸ்வரூபமெடுத்துக் கொண்டிருந்த மௌனமும் மட்டும்தான். குளுக்கோஸ் பாட்டிலில் இருந்து சொட்டுச் சொட்டாக விழும் திரவத்தின் சத்தம், அந்த அறையின் நிசப்தத்தைக் கிழித்துக் கொண்டிருந்தது.

படுக்கையில் அமர்ந்திருந்த ரதிமல்லிகாவும், அவளுக்குச் சற்றுத் தள்ளி அமர்ந்திருந்த மன்மதமாறனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளவில்லை. ஆனால், இருவருக்குள்ளும் எண்ண அலைகள் சுனாமி போல மோதிக் கொண்டிருந்தன.

மாறன் ஜன்னல் பக்கமாக எழுந்து சென்றவன் அங்கே நின்ற படி வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். அவனது கைகள் இன்னும் இறுக மூடியிருந்தன. அவன் நெஞ்சுக்குள் குற்ற உணர்ச்சி அனலாய்க் கொதித்துக் கொண்டிருந்தது.

‘நான் என்ன காரியம் பண்ணிருக்கேன்? அதர்வா செய்த அயோக்யத்தனத்த சமாளிக்க… ஒரு பெண்ணின் வாழ்க்கையோடு விளையாடிவிட்டேனே! இவகிட்டே எப்படி உண்மையைச் சொல்றது? ‘ரதி, உன் புருஷன் நான் இல்லை… உன்னை இந்த நிலைக்குத் தள்ளிவிட்டு, இன்னொரு பெண்ணோடு உல்லாசமாக இருக்கப் போனானே, அதர்வா அவன் தான் உன் புருஷன்னு எப்படி நான் அவகிட்டே சொல்றது.

விபத்து நடந்து உடலாலும், மனதாலும் வலியோடு இருக்கும் ரதியால் தன் கணவனின் இந்த அசிங்கமான துரோகத்தைத் தாங்க முடியுமா? உண்மை தெரிந்தால் இவள் நெஞ்சு வெடித்து இறந்துவிட மாட்டாளா?’ என்று அவன் மனம் எடுத்துரைக்க..

அவள்  உடல்நிலையைக் கருத்தில் கொண்டுதான் அவன் தற்காலிகமாகப் பொய் சொன்னான் என்றாலும், ஒரு பெண்ணுக்குத் தெரியாமல் அவளுக்குப் புருஷனாக நடிப்பது அவனது நேர்மையான குணத்திற்கு நரக வேதனையைத் தந்தது. அவளை ஏமாற்றுவது போல் அவனுக்கு ஒரு குற்ற உணர்ச்சி உலுக்கியது.

படுக்கையில் அமர்ந்திருந்த ரதியின் நிலை இன்னும் கொடுமையாக இருந்தது. அவளது நெஞ்சு அதர்வாவின் துரோகத்தை நினைத்து கதறி அழுதது.

‘ஏன் அதர்வா இப்படிப் பண்ணுணிங்க… உங்களை கல்யாணம் பண்ணி ஒரு வருஷம் ஆச்சு, என்னைத் தொடாமல், ஒரு கன்னிப் பெண்ணாகவே இந்த வீட்டில் வாழ வெச்சீங்களே…. அதுக்குக் காரணம் அந்த மாயா தானா? அவளோடு வாழணும்னு, நீங்க என் கழுத்துல கட்டின தாலியையே அசிங்கப்படுத்தி, மாறனோட மனைவினு பொய் சொல்லி  .. ச்சே எப்படி உங்களால இப்படி எல்லாம் பண்ண முடிஞ்சது. உங்களுக்கு என் மேல் ஒரு துளி கூடவா பாசம் இல்லை?’ என்று நினைக்கும்போதே

கண்ணீர் அவள்  கண்களை முட்டிக்கொண்டு வந்தது. அழுது தீர்த்துவிட வேண்டும் போல் இருந்தது. ஆனால், அவளால் அழ முடியாது! அவளது கைகள் பெட்ஷீட்டை இறுகப் பற்றிக் கொண்டன. ஏனென்றால், அவள் மாறன் முன்னால் ‘கடந்த காலத்தை மறந்தவள்’ போல் நடித்துக் கொண்டிருக்கிறாள். இப்போது அழுது தன் துக்கத்தைக் காட்டினால், மாறனுக்குத் சந்தேகம் வந்துவிடும்.

‘இல்லை… நான் அழக் கூடாது. என் கணவனின் துரோகத்திற்கு முன்னால் நான் இப்போதே உடைந்து விழுந்தால், அவன் நினைத்தது நடந்துவிடும். அவனுக்கு  நான் பொய் சொல்கிறேன்னு தெரிஞ்சிருடுச்சுன்னா அவன் இன்னும் எச்சரிக்கையாகிவிடுவான். இப்போ உண்மையைச் சொன்னால் எதுவும் சரியாகாது. யார் எப்படிப்பட்டவர்கள், இந்த நரக வீட்டில் இன்னும் என்னென்ன தவறுகள் நடக்கப் போகிறதுன்னு நான் மறந்தது போல நடிச்சு அங்க என்ன நடக்குதுன்னு பார்க்கனும். என் கணவனின் வஞ்சக முகமூடியை உலகிற்கு முன்னால் கிழிக்க வேண்டும். அதுவரை எனக்கு பழசு மறந்தது போல நாடகத்தை நான் தொடர்ந்தே தீர வேண்டும்!’

ரதி தன் துக்கத்தை விழுங்கிக் கொண்டு, கண்களில் தேங்கிய கண்ணீரை மாறனுக்குத் தெரியாமல் துடைத்துக் கொண்டாள். மனதிற்குள் வைராக்கிய நெருப்பை வளர்த்துக் கொண்டாள்.

இப்படி இரண்டு பேரும் தத்தமது சிந்தனைகளில் மூழ்கியிருந்த நேரத்தில், திடீரென ரதியின் தலை சுற்றியது. அவள் கண்ணில் இருந்த காட்சிகள் யாவும் தலைகீழாக ஆடுவது போல் இருந்தது. விபத்தின் பக்கவிளைவும், மனதில் ஏற்பட்ட கடுமையான அதிர்ச்சியும் சேர்ந்து அவளது உடலை வாட்டியது.

அவள் தொண்டையை என்னவோ செய்தது. நெஞ்சைக் கரிக்க, குமட்டிக்கொண்டு வாந்தி வருவது போல் இருந்தது. ரதி தன் வாயைப் பொத்திக்கொண்டு, படுக்கையில் இருந்து எழ முயன்றாள். ஆனால், அவளது பலவீனமான உடலால் அசையக் கூட முடியவில்லை. அவளது முகம் வெளிறி, கண்கள் செருகின.

ரதி எழும் சத்தம் கேட்டுத் திரும்பிய மாறன், ஒரு நொடி கூட யோசிக்கவில்லை. புயல் வேகத்தில் அவள் அருகில் வந்தான். கண்களை இருக்க மூடித் திறந்தவள் குமட்டிகொன்டே அப்படியே இருந்த இடத்தில் இருந்து வாந்தி எடுக்க.. அங்கே வாந்தி எடுப்பதற்கான பாத்திரம் எதுவுமே இல்லை. நர்ஸைக் கூப்பிடக் கூட அவனுக்கு நேரம் இருக்கவில்லை.

“ரதி… என்ன பண்ணுது? வாந்தி வருதா? இரு… இரு…” என்றவன் அடுத்த கணமே, எதைப் பற்றியும் யோசிக்காமல், தன் அண்ணி என்ற எல்லையையும் தாண்டி, ஒரு சக மனிதனாக, அவனைக் கணவனாக நினைத்துக் கொண்டிருக்கும் ஒரு பெண்ணின் தவிப்பைத் தாங்க முடியாமல், மாறன் தன் இரு கைகளையும் குவித்து ரதியின் வாய்க்கு நேராக நீட்டினான்!

அவள் வெளிறிய முகத்தை பார்த்து அக்கறையும் பதற்றமும் நிறைந்த குரலில் “ரதி… அடக்காதே… அப்படியே எடுத்துடு… என் கையிலேயே எடுத்துடு… பரவாயில்லை!”

ரதியால் கட்டுப்படுத்த முடியவில்லை. அவளது பலவீனமான உடல் உமிழ்ந்த வாந்தியை, மாறன் சற்றும் அருவருப்பின்றித் தன் கைகளிலேயே தாங்கிக் கொண்டான்.

விதியின் இந்தச் சதுரங்க ஆட்டத்தில், துரோகத்தின் நடுவே ஒரு தூய்மையான பாசம் ரதிக்கு மாறனின் வடிவில் கிடைக்கத் தொடங்கியிருந்தது. ஆனால், இந்த நாடகம் நீளும் போது இவர்களின் வாழ்க்கை எங்கே போய் முடியப் போகிறது?

அடுத்த அத்தியாயத்தில் தொடரும்…

You may also like

Leave a Comment

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.