வெறியன் – 16
ஹாஸ்டல் அறையின் மங்கிய வெளிச்சத்தில், சுவரில் சாய்ந்து முழங்கால்களுக்குள் முகத்தைப் புதைத்து அமர்ந்திருந்தாள் பவளமல்லி. அவளது தோள்கள் லேசாகக் குலுங்கிக் கொண்டிருந்தன. அக்னிவரதனின் குரூரமான பார்வையும், அவன் பேசிய வார்த்தைகளும் அவளுக்குள் ஈட்டியாய் இறங்கி ரணப்படுத்திக் கொண்டிருந்தன.
அப்போது அறைக்குள் நுழைந்த அவளது தோழி கவிதா, பவளமல்லியின் நிலையைக் கண்டு பதறிப்போய் அருகில் வந்தாள்.
“மல்லி… என்னாச்சுடி? ஏன் இப்படி உக்காந்துருக்க? நேத்து நைட்ல இருந்து நீ சரியில்லையே… என்னனு கேட்டாலும் சொல்ல மாட்டேங்குற.. அழுதுட்டே இருக்கியே” என்று அக்கறையாகக் கேட்டாள்.
பவளமல்லி மெல்ல நிமிர்ந்து தன் தோழியை பார்த்தாள். அவளது கண்கள் அழுது அழுது சிவந்திருந்தன. நடந்த அனைத்தையும், அந்த அஞ்சு லட்சம் கடனையும், அக்னிவரதன் விதித்த கொடூரமான நிபந்தனையையும் ஒன்றும் விடாமல் தன் தோழியிடம் கொட்டித் தீர்த்தாள்.
அதைக்கேட்ட கவிதா அதிர்ந்துவிட்டாள் . “என்னடி அவ்ளோ பெரிய சைக்கோவா இருக்கான்? ஒரு பொண்ணை பழிவாங்க இவ்வளவு கீழ்த்தரமா இறங்குவானா? இவனை மாதிரி ஆளுங்ககிட்ட போய் நீ வேலை செஞ்சா, அது உனக்கு சுத்தமா சேஃப் கிடையாது மல்லி. அவன் உன்னை நிம்மதியா இருக்க விட மாட்டான்.” என்றாள்.
“அப்போ நான் என்னடி பண்றது? அந்த அஞ்சு லட்சத்துக்கு நான் எங்க போவேன்?” என்று கண்ணீருடன் கேட்டாள் பவளமல்லி.
“அழாத மல்லி. எனக்கு தெரிஞ்ச கந்துவட்டிக்காரன் ஒருத்தன் இருக்கான். வட்டி கொஞ்சம் அதிகம் தான், ஆனா பணத்தை உடனே கொடுத்துடுவான். அவன்கிட்ட அஞ்சு லட்சத்தை வாங்கி, அந்த திமிரு பிடிச்சவன் மூஞ்சில விட்டெறிஞ்சிட்டு வா. வட்டியையும் அசலையும் நாம சிறுக சிறுக அடைச்சுக்கலாம். உன் கௌரவத்தை விட இது பெருசு இல்ல,” என்றாள் கவிதா உறுதியாக.
சிறிது நேரம் யோசித்த பவளமல்லிக்கு அதுவே சரி என்று பட்டது. அக்னிவரதனின் காலடியில் அடிமையாக வாழ்வதை விட, இது எத்தனையோ மேல் என்று முடிவெடுத்தாள்.
கவிதா சொன்னது போலவே கிளம்பி 5 லட்சம் பணத்தை அதிக வட்டிக்கு வாங்கி கொண்டு அக்னிவராதனை காண அவன் கொடுத்த அட்ரஸிற்கு சென்றாள்.
அன்று மாலை. அக்னிவரதனின் பிரம்மாண்டமான பங்களா.
வரவேற்பறையில் இருந்த விலைமதிப்பற்ற ஷோபாவில், ஒரு கையில் மதுக் கோப்பையுடன் கால் மேல் கால் போட்டு ராஜ தோரணையில் அமர்ந்திருந்தான் அக்னிவரதன். அவனது கண்கள் வாசலையே வெறித்துக் கொண்டிருந்தன. ‘அவள் வருவாள், தன் திமிர் அடங்கி தன்னிடம் மண்டியிடுவாள்’ என்ற அவனது ஈகோ அவளுக்காகக் காத்துக்கொண்டிருந்தது.
அவன் வீட்டு வாசலில் ஆட்டோவில் வந்திறங்கிய பவளமல்லி. சற்று தயக்கத்தோடு இறங்கி அந்த மாளிகை போன்ற வீட்டை பார்த்தாள். அதை பார்க்கும்போதே அக்னிவரதன் அந்தஸ்து என்ன என்று அவளுக்கு புரிந்தது.
“அவன் எவ்ளோ பெரியா ஆளா இருந்தா எனக்கு என்ன.. முதல்ல அவன் காசை அவன்கிட்டே கொடுத்துட்டு அவன் சங்காத்தமே வேணாம்னு கிளம்பி போய்டணும்” என்று நினைத்தவள் . அந்த மாளிகைக்குள் நுழைந்தாள்.
அவளது கண்களில் நேற்றிருந்த அந்தத் தயக்கமோ, பயமோ இன்று துளியும் இல்லை. மாறாக, அக்னியை சமாளித்துவிடலாம் என்ற தைரியத்தோடு.. உள்ளே சென்றாள்.
வாசலில் வந்த பவளமல்லியை பார்த்ததுமே தான் நினைத்தது நடந்து விட்டது என்ற ரீதியில் திமிராக அமர்ந்து இருந்தான் அக்னி.
சோபாவில் கம்பீரமாக அமர்ந்து இருந்தவனை பார்க்கையில் அவளுக்கு உள்ளுக்குள் சற்று கலக்கம் இருக்கத் தான் செய்தது. இருந்தும் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அந்த வீட்டை சுற்றிலும் ஒருமுறை நோட்டமிட்டவள் நேராக அவனருகில் சென்றவள், தன் கையில் வைத்திருந்த பையைத் திறந்து, அதிலிருந்த அஞ்சு லட்சம் பணத்தை எடுத்து, அவன் அமர்ந்திருந்த சென்டர் டேபிளின் மீது வீசினாள்.
அக்னிவரதனின் புருவங்கள் சுருக்க, அவளைக் கூர்மையாகப் பார்த்தான்.
“என்ன பார்க்குற? நீ கேட்ட பணம். அஞ்சு லட்சம் இருக்கு, சரியா இருக்கானு எண்ணிப் பார்த்துக்கோ! இனிமே உனக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை,” என்று கம்பீரமாகக் கூறினாள்.
அக்னிவரதனின் முகத்தில் ஒரு குரூரமான அமைதி குடிகொண்டது. கையில் இருந்த மதுக்கோப்பையை மெதுவாக மேஜை மீது வைத்துவிட்டு நிமிர்ந்தான்.
அவன் அமைதியைக் கண்டு பவளமல்லியின் ஆவேசம் இன்னும் அதிகமானது.
“உன்னை மாதிரி ஆளுங்க பணத்தை வச்சு எதை வேணாலும் சாதிச்சுடலாம்னு நினைப்பீங்க. ஒரு பொண்ணோட வறுமையைப் பயன்படுத்தி, அவளை மிரட்டி உன் காலுக்கு கீழே கொண்டு வர நினைக்குற.. என்னை அடிமையாக்கிப் பார்க்குறதுல உனக்கு என்ன அவ்ளோ ஆனந்தம்? இதுக்கு பேரு தான் ஆண்மையா? இல்ல ஒரு பொண்ணை மிரட்டிப் பணிய வைக்கிறது தான் உன் ஆம்பளைத்தனமா?” அன்று அவள் வார்த்தைகள் கூர்மையாக வந்து விழுந்தது அவளிடமிருந்து.
அதில் கோபத்தில் அக்னியின் கண்கள் சிவக்கத் தொடங்கின. அவனது தாடை இறுகியது.
ஆனால் பவளமல்லி அதோடு நிறுத்தவில்லை. “உண்மையான ஆம்பளை ஒரு பொண்ணோட பலவீனத்துல குளிர் காய மாட்டான். பணத்தை வீசி ஒருத்தியோட கௌரவத்தை வாங்க நினைக்கிற நீயெல்லாம் ஒரு ஆம்பளையா? உன் ஆண்மை, அந்தப் பணம்… அதிகாரத்துல தான் இருக்கு, உன் கேரக்டர்ல இல்ல. எந்தக் காலத்துலயும் இந்த பவளமல்லி உன் முன்னாடி தலை வணங்க மாட்டா!” என்று அவனது ஆண்மையையும், அகங்காரத்தையும் சல்லி சல்லியாய் உடைத்துவிட்டுத் திரும்பி அங்கிருந்து நடந்தாள்.
அவள் திரும்பி இரண்டு அடி கூட எடுத்து வைத்திருக்க மாட்டாள். சட்டென்று ஒரு சிறுத்தையைப் போல சீறிப் பாய்ந்த அக்னிவரதன், சட்டென்று எழுந்து அவள் கையை பற்றி இழுத்து, அருகில் இருந்த சுவரோடு வைத்து அவளை அழுத்தி நிறுத்தினான்.
“ஆஆ…” என்று வலியால் முனகிய பவளமல்லி, அவள் முகத்திற்கு மிக அருகில் இருந்த அக்னியின் கண்களைப் பார்த்ததும் ஒரு நொடி உறைந்து போனாள். அந்த கண்களில் தெரிந்த கோபத்தை அவள் இதற்கு முன் பார்த்ததே இல்லை. ஒரு எரிமலையே வெடித்துச் சிதறுவது போல இருந்தது அவன் பார்வை.
பவளமல்லியின் இரண்டு கைகளையும் தலைக்கு மேல் ஒற்றைக் கையால் வளைத்துப் பிடித்தவன், அவள் முகத்திற்கு மிக அருகில், அவனது மூச்சுக்காற்று அவள் முகத்தில் படும் அளவிற்கு நெருங்கினான். அவனது பிடியில் அவள் துளி கூட நகர முடியவில்லை.
“என்னை ஆம்பளையானு கேட்டியா?” eன்று கெட்டவனின் குரல் அவள் உள்ளுக்குள் அடி ஆழம் வரை சென்று அவள் தேக்கி வைத்து இருந்த தைரியத்தை அசைத்து பார்த்தது. அவனிடம் இருந்து அவ்வளவு பயங்கரமானதாகவும் வெளிவந்தது. “என் ஆண்மையைப் பத்திப் பேச உனக்கு என்னடி தகுதி இருக்கு?” என்றபடி அவளது கழுத்தின் ஓரத்தில் தன் முகத்தைப் புதைத்து ஆழமாகச் சுவாசித்தான். அவன் மூச்சுக்காற்றின் சூட்டில் பவளமல்லியின் உடல் அனிச்சையாக நடுங்கியது.
“பணத்தை மூஞ்சில வீசிட்டா தப்பிச்சிடலாம்னு நினைச்சியா? ஒரு ஆம்பளையோட ஈகோல கை வைக்கிறத விட, அவனைச் சீண்டிப் பாக்குறது எவ்வளவு பெரிய தப்புனு இப்போ உனக்கு புரிய வைக்கிறேன்.” என்றவன் நிமிர்ந்து அவளைப் பார்த்தான்.
அவள் கண்களை நேருக்கு நேர் வெறித்தவன் இதழ்களில் ஒரு வஞ்சகச் சிரிப்பு அரும்பியது. “அந்தக் கந்துவட்டிக்காரன்கிட்ட போய் கடனை வாங்கிட்டு வந்து என் மூஞ்சில வீசுற அளவுக்கு உனக்குத் திமிரா? நீ அவன்கிட்ட பணம் கேட்ட அடுத்த நிமிஷமே அந்தத் தகவல் எனக்கு வந்துருச்சு. அந்தப் பணத்தை உனக்குக் கொடுக்கச் சொன்னதே நான் தான்டி!” என்றான் திமிராக.
அவன் சொன்னதைக் கேட்டு பவளமல்லியின் கண்கள் அதிர்ச்சியில் விரிந்தன. அவளால் நம்பவே முடியவில்லை.
“நீ என் முன்னாடி அடிமையா வந்து நின்னுருந்தா கூட உன்னை சும்மா வேலைக்காரி மாதிரி தான் நடத்தியிருப்பேன். ஆனா… நீ என் ஆம்பளைத்தனத்தையே கேள்வி கேட்டுட்ட… என் ஈகோவை தொட்டுட்ட. இனிமே நீ என் அடிமை என் கௌரவத்த அசிங்கப் படுத்தின நீ நிம்மதியாவே இனி இருக்க முடியாது. உன்னை எந்த அளவுக்கு அடிமை படுத்தணுமோ.. அந்த அளவுக்கு உன்னை, உன் கௌரவத்தை, உன் திமிரை, உன் அகங்காரத்தை கீழ இறக்குவேன். உன் வாயாலயே என்னை ஆம்பளைனு கெஞ்சி ஒத்துக்குற வரைக்கும் உனக்கான நரகத்தை நான் தான் டிசைன் பண்ணுவேன்!” என்று அவளது காதருகே கர்ஜித்தான் அக்னிவரதன்.
அவன் குரலில் இருந்த உறுதி கண்டு பவளமல்லியின் இதயம் ஒரு கணம் நின்று துடித்தது. அவளை அப்படியே சுவரோடு அழுத்திப் பிடித்தபடியே, தன் தலையை மட்டும் சற்றுத் திருப்பி, பல வருடங்களாகத் தன் வீட்டில் வேலை செய்யும் வாசுவை அழைத்தான்.
அவனது குரலைக் கேட்டு, அவர் பதறியடித்துக் கொண்டு ஓடி வந்தவர் . அவன் கைப் பிடிக்குள் நின்று இருந்த பவளமல்லியை பார்த்தார், ஒரு கணம் திகைத்துப்போனார்.
“யார் இந்த பொண்ணு? தம்பி ஏன் இப்படி கோபமா இருக்கு…” என்று அக்னியின் முகம் கண்டு யோசித்தார்.
“தம்பி..” என்று அக்னி முன்னே வந்தார்,
“உங்க பெட்டிப் படுக்கை எடுத்துக்கிட்டு இப்போவே கிளம்புங்க. இனிமே நீங்க இங்க வேலை செய்ய வேண்டாம். நேரா எங்க அம்மா வீட்டுக்குப் போய் அவங்களைப் பார்த்துக்கோங்க. அவங்களுக்குத் தேவையானதை மட்டும் இனி நீங்க செஞ்சா போதும்,” என்றான் அதிகாரமாக.
அவருக்கு ஒன்றும் புரியவில்லை. “தம்பி… நான் போயிட்டா இவ்வளவு பெரிய வீட்டை யாரு பாத்துக்குவா? உங்களுக்கு நேரம் தவறாம சாப்பாடு கொடுத்து, உங்க வேலைகளை யாரு செய்வா?” என்று தயக்கத்தோடு கேட்டார்.
அக்னியின் இதழ்களில் ஒரு கொடூரமான புன்னகை விரிந்தது. சுவரோடு ஒட்டித் தவிக்கும் பவளமல்லியின் சிவந்த கண்களை நேருக்கு நேர் பார்த்தபடியே, “அதுக்குத் தான் புதுசா ஒருத்தியை ஏற்பாடு பண்ணிட்டேனே…” என்றான் வஞ்சகமாக.
“இவ வெறும் வேலைக்காரி மட்டும் கிடையாது… என்னோட முழு நேர ‘பர்சனல் ஸ்லேவ்’! எனக்குக் காலைல காபி கலக்குறதுல இருந்து, என் ஷூவை துடைக்கிற வரைக்கும் அத்தனை வேலைகளையும் இனி இவ தான் இழுத்துப் போட்டு செய்யப் போறா. என் சம்மதம் இல்லாம இவ இந்த வீட்ல மூச்சு கூட விடக் கூடாது. இவளோட இந்தத் திமிரை உடைச்சு, இவளை எப்படி என் காலுக்குக் கீழே வேலை வாங்கணும்னு எனக்கு நல்லாவே தெரியும். நீங்க கிளம்புங்க!” என்றான் தன் ஆதிக்கக் குரலில்.
அவர் பவளமல்லியை ஒரு கணம் பரிதாபமாகப் பார்த்துவிட்டு, அக்னியை மீறி எதுவும் பேச முடியாமல் தலையாட்டிவிட்டு அங்கிருந்து நகர்ந்தார்.
பவளமல்லி அதிர்ச்சியிலும் அவமானத்திலும் உறைந்து போனாள். “நான்… நான் ஒன்னும் உன் வேலைக்காரி கிடையாது! என்னை விடு!” என்று மூச்சு முட்ட அவனிடமிருந்து மீண்டும் திமிறினாள்.
அவள் திமிறத் திமிற அவளது கைகளை இன்னும் இறுக்கமாக வளைத்துப் பிடித்த அக்னி, “இனிமே நீ என்னோட அடிமைடி! உன் திமிர், கௌரவம், படிப்பு எல்லாத்தையும் அந்த வாசல் படியோட தூக்கிப் போட்டுட்டு, எனக்குக் கீழ ஒரு வேலைக்காரியா நீ எப்படி வேலை பார்க்க போறனு நான் பார்க்குறேன். என்னை ஆம்பளையானு கேட்டவளை, என் அதிகாரத்தால முழுசா அடக்கி ஆளுறது தான் இந்த அக்னியோட ஸ்டைல்!” என்று சொல்லி அவளைத் தரையை நோக்கி தள்ளிவிட்டான்.
தரையில் விழுந்த பவளமல்லி, தன் கௌரவம் முழுமையாக அவனது காலடியில் மிதிபடுவதை உணர்ந்து கண்ணீரோடு அவனை நிமிர்ந்து பார்த்தாள். அக்னியின் கண்களில் ஒரு குரூரமான வெற்றி தெரிந்தது. பவளமல்லியை தனக்கு கீழே கொண்டு வர எந்த எல்லைக்கும் செல்வேன் என்ற அழுத்தம் அந்த பார்வையில் அவளுக்கு உணர்த்தி இருந்தது.
